திங்கள், 24 நவம்பர், 2025

72. திருப்புலியூர் - குட்டநாடு

 


நம்மாழ்வார்                                                                                                         திருவாய்மொழி 

கரு மாணிக்க மலைமேல் மணித் தடம்
     தாமரைக் காடுகள் போல்
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை
     ஆடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட
     நாட்டுத் திருப்புலியூர்
அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் அன்னைமீர்!
     இதற்கு என் செய்கேனோ?      3535 

      தாயே! பெருமானது தோற்றமானது கருப்பு மாணிக்க மலை மேல் தாமரை மலர்கள் காடு போல் மலர்ந்துள்ளது போலுள்ளது. திருவாயும், திருமார்பும், திருவிழிகளும், திருக்கரங்களும், திருவுந்தியும், திருவடிகளும், பீதாம்பரமும் மற்ற ஆடைகளும் ஒவ்வொரு தாமரை மலர்கள் போல் உள்ளது.  தலைவியானவள் பிரானைக் கண்டு அவள் சேவிக்கும்கால் திருமார்பில் குடிகொண்டுள்ள பெரிய பிராட்டியின் சிவந்த அழகினால் பெருமானுக்கு அங்கங்கு சிவந்த அவையங்கள் தோன்றின. இத்தகைய பெரியபிரான் குட்டநாட்டு திருப்புலியூரில் சேவை சாதிக்கிறார். பெருமான் மீது கொண்ட மோகத்தினால் மாயப்பிரானின் பெயரைத் தவிர இப்பெண் வேறு எதுவும் பேசுவதாயில்லை. இதற்கு நான் என் செய்வேன் என்று தலைவியானவள் பெருமானை அடைந்துவிட்ட நிலையினைத் தோழி தாயாரிடம் கூறுகிறாள்.  

அன்னைமீர் இதற்கு என் செய்கேன்? அணி
     மேருவின் மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும்
     பல் சுடர்களும் போல்
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான்
     உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர்
     புகழும் இவளே.     3536 

      தாயார் தன் மனதில் ஐயம் ஏற்பட்டு தோழியினை சந்தேகம் கொண்டபோது, தோழியானவள், அன்னையே! தலைவி புரிந்த செயலுக்கு நான் என் செய்வேன்? சிறந்த கரிய மேருமலையின் மேல் உலாவும் ஒளிமிக்க சூரியனும் அதைச்சுற்றி பலவகையான விண்மீன்கள் சுழல்வது போன்று மின்னும் நீண்ட திருமுடியும், ஹாரமும், பல்வேறு ஆபரணங்களும் தன் மேனியில் அணிந்துள்ள எம்பெருமான்தான் இதற்குக் காரணம். இப்பெருமான் சேவை சாதிக்கும் அழகு மிக்க பசுமையான வயல்கள் சூழ்ந்த குட்டநாட்டுத் திருப்புலியூரைப் பற்றி உங்கள் பெண் நேரகாலமின்றி எப்போதும் வாயாரப் பாடிக்கொண்டிருக்கிறாள். இவள் கற்பனை கலந்து பாடவில்லை. இருக்கும் வைபவத்தையே வாயாரப் பாடுகிறாள். அவள் செயலுக்கு நான் எவ்விதம் பொறுப்பாவேன் என்று தோழி தாயாரிடம் கூறுகிறாள்.  

 புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
     கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்பச்
     செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
     அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
     திருப்புலியூர் வளமே.     3537 

       அன்னையே! தங்கள் பெண்ணானவள் இரவு பகல் என்று பாராமால் எப்போதும் பெருமானைப் பற்றி பாடி வருகிறாள். இப்பெருமானது திருமேனியானது பெரிய அலைகடல் ஒன்று தீப்பற்றி எழுவது போன்ற தோற்றம் கொண்டுள்ளது. கையில் வெண்ணிற திருவாழியும், செழுமைமிக்க ஒளிக்கதிர்களைக் கொண்ட சுதர்சனமென்னும் திருச்சக்கரத்தை அணிந்து பஞ்சாயுதத்தையும் கையிலேந்தி படைதாங்கி போர்க்களத்தில் எங்கும் பரவியுள்ள அசுரர்களை கொன்று குவித்து வெற்றிகொண்டான். இத்தகையவன் உறையும் இடம் நெடிய மணிமாடங்களைக் கொண்ட குட்டநாட்டுத் திருப்புலியூராகும். எதிரிகள்கூட அவரைப் புகழக்கூடிய வைபவம் படைத்தவனான எம்பெருமானைப் பற்றி வாயாராப் புகழ்ந்தவண்ணம் உள்ளாள் என்கிறாள் தோழி. 

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
     பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
     நாட்டுத் திருப்புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
     தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள்
     இன்று இப் புனை இழையே     3538 

      ஆழ்வார் இப்பாசுரம் மூலம் திருப்புலியூர் பற்றி ஏற்றத்துடன் பாடுகிறார். சோலைகளின் வளத்தையும், வயல்களின் அழகையும், சுற்றிலும் நீர்நிலைகள் சூழ்ந்திருக்கும் அழகையும் சொல்லும் இப்பெண்பிள்ளை பேசும் அழகினை என் சொல்வேன்? என்று தோழி தாயாரிடம் வியந்து கூறுகிறாள். இத்தலத்துச் சோலைகளில் கரும்பும், செந்நிறப் பயிர்களும், மருத நிலங்களாலே சூழப்பட்டுள்ளன திருப்புலியூர் தலம் அமைந்துள்ளது. தாயார் தோழியிடம், இப்பெருமான் ஆபத்பாந்தவனாக இருப்பாரா என்றும், தன் பெண்ணை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வாரா என்று கேட்கவும், தோழியானவள் மூவுலகையும் தன் வயிற்றில் உண்டுமிழ்ந்து பின் இயக்கத்தைத் தொடர வெளியிட்டார். அந்தக் கருணைதான் எல்லா உயிரையும் வாழ வைத்துக் கொண்டுள்ளது. பெருமானே கதியென வந்த பெண்ணை காக்காமல் போவாரா? என்கிறாள். மேலும், இத்தேவபிரான் மீது காதல் கொண்டு ஆபரணங்களை அணிந்த இவள் இன்றிலிருந்து அவனது திருநாமங்களைச் சொல்லியவண்ணம் உள்ளாள். 

புனை இழைகள் அணிவும் ஆடை உடையும்
     புதுக்கணிப்பும்
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று
     நினைக்கப்புக்கால்
சுனையினுள் தடம் தாமரை மலரும்
     தண் திருப்புலியூர்
முனைவன் மூவுலகு ஆளி அப்பன்
     திரு அருள் மூழ்கினளே.     3539 

      புதல்வியின் தோற்றத்தினைக் கண்ட தாயானவள், இவளுக்கு ஆடையும், அணிகலன்களும் அணியத்தெரியாத நிலையில் இன்று என் புதல்வியானவள் நேர்த்தியாக ஆடைகளும், அணிகலன்களையும் அணிந்துள்ளாள். எவரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் உள்ளது. இவள் மேனியானது பெருமானின் திருப்பார்வைபட்டு புதுக்கணிப்பாக மாறியுள்ளது. வறண்ட நிலத்தில் நீர்பாய்ச்சினால் வரும் புதுப்பொலிவினை என் மகளிடம் நான் காண்கிறேன். இவளது நிலையினை எங்களால் நின்று நினைக்க இயலவில்லை. பெருமான் பல நாட்களாக முயற்சித்து நம்மைச் சேர்த்துள்ளார் என்பதை என்னால் கண்டு அறிய முடியவில்லை. தாமரை மலர்ந்த தடாகங்களாலே சூழப்பட்ட திருப்புலியூர் தலைவன் மூவரையும் இரட்சிப்பவனாக உள்ளான். அப்பன் என்ற சொல்லால் இப்பெருமான் ஐஸ்வர்யம் உடையவன் என்று கொள்ளலாகிறது என்று தோழி கூறுகிறாள்.   

திரு அருள் மூழ்கி வைகலும் செழு நீர்
     நிறக் கண்ண பிரான்
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடை
     யாளம் திருந்த உள
திரு அருள் அருளால் அவன் சென்று
     சேர் தண் திருப்புலியூர்
திரு அருள் கமுகு ஒண் பழத்தது
     மெல்லியல் செவ்விதழே.     3540 

      பெருமானின் நிலை கண்டு தாயானவள் தோழியிடம், இப்பெருமான் ஐஸ்வர்யம் பல பெற்றுள்ள நிலையில் அடுத்தவருக்கு கொடுக்கும் மனம் உள்ளதா என்று வினவு, அழகிய கடல் போன்ற நிறத்தையுடைய பெருமானின் திருவருள் என் தலைவியிடம் வந்து சேர்ந்தமைக்கான அடையாளங்கள் தென்படுகின்றன என்கிறாள். தன்னுடைய உயர்ந்த திருவாயால் அருளப்பட்ட திருவருளை இப்பெண் பேரில் செலுத்துவதற்கு ஆவல் கொண்ட எம்பெருமான், மகளுக்கு சௌந்தர்ய சௌலப்பியத்தைக் காட்டி அருள வேண்டும் என்பதால் குட்டநாட்டுத் திருப்புலியூர் தலத்தை நாடி வந்தார். தன்னுடைய கிருபையாலே இத்தலத்திற்கு வந்தபின் இவளுடன் கலந்தார். மேலும் இவளது அதரமானது முன்பு போலில்லாமல் பழுப்படைந்துள்ளது. அது திருப்புலியூர் தலத்தைச் சுற்றி வளர்ந்துள்ள நெடிய பாக்குமரங்களின் கனியைப் போன்றுள்ளது. இத்தகைய மாறுபாடுகளைக் கண்டாவது அவள் பெருமானிடம் சேர்ந்தாள் என்பது தெரியவில்லையா? என்று தோழி தாயாரிடம் கேட்கிறாள். 

மெல் இலைச் செல்வ வண் கொடிப் புல்க
     வீங்கு இளம் தாள் கமுகின்
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து
     மணம் கமழ்ந்து
புல் இலைத் தெங்கினூடு கால் உலவும்
     தண் திருப்புலியூர்
மல்லல் அம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
    இம் மடவரலே .    3541 

      தாயார் தோழியிடம், தலைவியானவள் என்னை விட்டகன்று நீண்ட நாளாகியது. உன்னிடமாவது நெருங்கியுள்ளாளா என்று மகளின் நிலையைப் பற்றிக் கேட்க, அவள் கட்டுப்பாட்டை விட்டு என்றோ சென்று விட்டாள். உள்ளிருக்கும் பெருமானே அதற்குக் காரணம் என்கிறாள். வெற்றிலைக்கொடியானது பாக்கு மரத்தைத் தழுவியிருப்பது போன்று இவள் பகவானைத் தழுவியுள்ளாள். இங்கு கமுகு, குலை தள்ளிய வாழை, இனிப்பான பலா என்று பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளன. மெல்லிய தென்றல் மரங்களில் பட்டு பல்வேறு நறுமணத்துடன் வீசுகிறது. இத்தகைய நிலையில் இந்தத் தலத்துப் பெருமான் நிறவதிகமான சொத்தினைக் கொண்டுள்ளார். அத்தகைய கண்ணனின் தாளை அடைந்தாள். தன் வசம் தோற்று பெருமானைச் சேர்ந்தாள். இனியும் அவள் பவ்யமாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்கிறாள். 

மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்?
     மல்லைச் செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல்
     வான் புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
     தண் திருப்புலியூர்
பட அரவு அணையான் தன் நாமம் அல்லால்
     பரவாள் இவளே.      3542 

      தாயார் தோழியிடம், என் புதல்வியை உன்னை நம்பி விட்டுச்செல்ல நீ அவளை விட்டுவிட்டாயே என்று கேட்க அதற்குத் தோழி இவள் என் பேச்சை கேட்காத விவரத்தைக் கூறுவதா? அல்லது என்னை மீறி கடந்து சென்ற நிலையைக் கூறுவதா என்று தெரியவில்லை. அவள் நான் சொல்வதைக் கேட்கும் நிலையிலில்லை. இவ்வூரில் வடமொழியை நன்கு கற்றுணர்ந்த வேதியர்கள் சொல்லும் வேதஒலியும், நெய்யினால் ஹோமத்திலிருந்து வரும் புகையானது வானத்தை எட்டுகின்றது.  விமானத்தில் உலாவும் வானவர்களை மறைப்பது போல் புகை சென்று அங்கு சேருகின்றது. இத்தலத்துப் பெருமான் அவளுக்கு ஆதிசேஷனாக சேவை சாதித்துள்ளார். அத்தகைய பெருமானைத் தவிர வேறு வார்த்தைகள்  பேச மறுக்கிறாள். இத்தகைய பெண் பெருமானைத் தவிர வேறு எதையும் நினைக்கும் நிலையில் இல்லை என்று தாயாரிடம் கூறுகிறாள். 

பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர்
     நிறக் கண்ண பிரான்
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின்
     நின்று ஒலிப்ப
கரவு ஆர் தடம்தொறும் தாமரைக் கயம்
    தீவிகை நின்று அலரும்
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர்ப்
    புகழ் அன்றி மற்றே      3543 

      முன்பாசுரங்களில் பெருமானின் குணங்களைப் பற்றி கேட்டு சற்று சாந்தம் கொண்டவளான தாயார் பெருமானின் ஞானம் பற்றி தோழியிடம் கேட்கிறாள். பனிநீர் போன்ற கண்ணபிரான், வேதஒலி என்றும் நிலைத்திருக்கும் இவ்வூரில் வந்து தங்கியுள்ளார். இங்குள்ள வேதியர்கள் இசையுன் வேதம் சொல்வதைத் தவிர அதன் பொருளையும் இவர்கள் நன்கு சொல்லும் ஆற்றல் உள்ளவர்கள். மேலும் இத்தலத்துத் தடாகத்தில் உள்ள தாமரை மலர்கள் நல்ல திருவிளக்குகள் ஏற்றி வைத்தது போன்று உள்ளது. இத்தகைய பெருமை மிக்க திருப்புலியூரைப் பற்றி இராப்பகலாகப் பேசியவண்ணம் உள்ளாள். இங்குள்ள வேதியர்களே வேதம் பயின்று இத்தகைய கல்வி பயின்ற இவர்களின் தேவனான பெருமான வேதங்களில் தலைசிறந்து விளங்குகிறான் என்று கூறுகிறாள் தோழி. 

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்
     தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக்
     குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட
      நாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
     இவள் நேர்பட்டதே?   3544 

      பெருமானுடைய திருத்துழாய் மணம் அவளது மேனியில் வீசுகின்றது. எனவே நிச்சயம் பெருமானுக்கு ஆட்பட்டாள் என்பதைத் தீர்மானமாகக் கூறுகிறாள். இதைத் தவிர அவள் பெருமானிடம் ஆட்பட்டதற்கு வேறு என்ன உரைக்க வேண்டியுள்ளது? என்கிறாள் தோழி. இவ்வூர் முழுவதும் மாமணி  மாட மாளிகையுள்ள, தென் திசைக்கே ஒரு திலகத்தைப் போன்று குட்டநாட்டுத் திருப்புலியூரில் வாசம் செய்யும் மாயப்பிரானின் திருவருளாள் அவள் அற்றுத்தீர்ந்தாள். இதைவிட அடையாளம் நான் என்ன சொல்ல முடியும். என்று அவள் அநந்யார்த்வ சேஷத்வம் ஆகி விட்டாளோ அப்போதே அவனுக்குத்தான் இவள் என்றாகிவிட்டது. இனியும் எவ்வித உபாயங்களையும் கேட்க வேண்டாம் என்று பெருமானின் பெருமைகளைக் கூறி தாயாரை சமாதானம் செய்கிறாள் தோழி. 

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே.        3545
 

      நிறைந்த மூவுலகுக்கும் தலைவனாக உள்ளான் பெருமான். அவனுக்கு நேர்பட்ட கைங்கர்யத்துக்குத் மிகவும் தகுதியுடைய தொண்டர்களுக்குத் தொண்டர். அந்த தொண்டர்களுக்குத் தொண்டரான சடகோபர் தமிழில் பாடிய சொல்வாய்ப்பு மிக்க ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்துப் பாமாலைகளையும் தினசரி பக்தியுடன் பாடக்கூடியவர்கள் நெடியதாக வளர்ந்த திருமாலுக்கு அடிமை செய்ய வாய்ப்பு பெற்றவர்களாவர். மேலும் இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்கு புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை புரிபவராவர் என்று ஆழ்வாரின் ஏற்றத்தை இப்பாசுரத்தின் கருத்தாக அமையப் பெறுகின்றது.  எம்பெருமானின் வடிவழகையும், திருவதரத்தையும் அவரது திருக்குணங்களையும் கூறப்படுகின்றது. இதில் பாகவத கைங்கர்யமே பகவத்புருஷார்த்தமாக கருதப்பெறுவதால் இப்பாசுரங்கள் பெருவெள்ளமாகப் பொழிகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...