குலசேகராழ்வாரர் பெருமாள் திருமொழி
தரு துயரம் தடாயேல் உன் சரண்
அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே. 688
நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த சோலைகளாலே சூழப்பட்ட திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! நீ எனக்குத் தந்த இத்துன்பத்தை நீயே போக்காவிட்டாலும் உன் திருவடிகளை அன்றி வேறு புகலிடம் எனக்கு கிடையாது. பெற்ற தாய் கோபத்துடன் தன் குழுந்தையை வெறத்து தள்ளினாலும், மறுபடியும் தன் தாயின் இரக்கத்தையே வேண்டி அழுகின்ற குழ்ந்தையின் நிலையில் நான் இருக்கிறேன் என்கிறார் ஆழ்வார்.
பெருமானே! எனக்கு வந்த துயரத்தைத் தடுக்கக்கூடிய ஆற்றல் உனக்கே உரியது. அதனைத் தடுக்கவில்லை என்றாலும் அதனால் வேறு ஒருவரை சரண்டைய மாட்டேன். தாய் அடித்தாலும் மீண்டும் அவள் அன்பையே எதிர்பார்க்கும் குழ்ந்தையைப் போல் உன்னை சரணடைவேன்.
அவனையே தான் என்று இருக்கும் தன்மையான அனன்யார்ஹ சேஷத்வத்தை பெருமானிடம் வேண்டுகிறார். முன்வினைப் பயனால் இன்பம் துன்பம் விளைகிறது சாத்திரங்கள் சொன்னாலும் நாம் செய்யும் செயல்கள் உகப்பாக இருப்பதால் அதுவே புண்ணியமாகவும் பாவமாகவும் மாறுகிறது என்ற பொருளில் அமைகிறது.
கண்டார் இகழ்வனவே காதலன்தான்
செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ
கொண்டாளாயாகிலும் உன் குரைகழலே கூறுவனே. 689
ஆகாயத்தை அளவளாவிய மதில்கள்
நாற்புறமும் சூழப்பெற்ற திருவித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும்
பெருமானே! கணவன் மற்றவர் கேலி செய்யும்படி
தன்னை நடத்தினாலும் உயர்குலத்தில் பிறந்த கற்புடைய மங்கை கணவனையன்றி வேறு ஒருவரிடம் சரண் அடைய
மாட்டாள். அதுபோல் பக்தனான என் குறையை நீ
களையாமல் போனாலும் வீரக்கழல் ஒலிக்கின்ற உன் திருவடிகளே எனக்கு அடைக்கலம் என்று
கூறுகிறார்.
கணவன் ஒருவன் தான் தீயில் வலம்
வந்து கைபிடித்தவனை கண்டவர் இகழும் வண்ணம் நடத்துகின்றனர். இருப்பினும் அவள்
கணவனைத் தவிர வேறு எவரிடமும் புகலிடம் கொள்வதில்லை. அவள் வேறு ஒருவரிடம் சரண்
அடைந்தாலும் அது பெண்மைக்கே வரும் இழுக்கு என்று கருதுவாள். அது போல் என்னிடம்
குறைகள் எவ்வளவு இருப்பினும், வினைப்பயனால் துன்பம் அனுபவிக்க நேரிட்டாலும் நின்
திருவடியையே சரணடைவேனேயொழிய வேறு யாரிடமும் சரண் எனக்கிலை என்கிறார்.
மீன் நோக்கும் நீள் வயல் சூழ்
வித்துவக்கோட்டு அம்மா என்
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே. 690
மீன்களெல்லாம் தாம் வாழ்வதற்குத்
தகுதியான இடமென்று பார்க்கின்ற நீர் வளம் மிகுந்த, பரந்த கழனிகள் சூழ்ந்த திருவித்துவக்
கோட்டில் அருள் புரியும் எம்பெருமானே! அடியேனிடம் நீ அருள் கொண்டு தோற்காவிடினும்
உன் திருவடியைப் பிடித்த கைகளை நான் விடமாட்டேன். குடி மக்களைக் காக்கவென்று
முடிசூடிய அரசன் கொடுமைகளைச் செய்தாலும் அவனது செங்கோல் ஆட்சியை எதிர் நோக்கி
வாழ்கின்ற குடிமக்களைப் போல் நான் ஆகிவிட்டேன் என்கிறார் ஆழ்வார்.
இவ்வுலகில் நாம் பெறும்
வெற்றிக்கு பகவானின் அருளே காரணமென்பார். அது போன்று நாம் பெறும் தோல்விகளுக்கு
நாமே பொறுப்பேற்க வேண்டும். அறியாமை மயக்கத்தில் நாம் செய்யும் செயல்களே தோல்வியாக
முடிகின்றது. பெரும்பாலும் இவை நமது அலட்சித்தாலும், அணுகுமுறைகளில் ஏற்படும் தவறுகளாலும்
இத்தகைய தோல்விகள் நம்மை வந்து சேருகின்றன. இதனை ஏற்றுக் கொள்ளாமல் தெய்வத்தின்
மீது பழி போடுவது என்பது பாவத்தை மேலும் கூட்டிக் கொள்வது போன்றாகும். இதனைக் களைய
நாம் அறியாமையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
வாளால் அறுத்துச் சுடினும்
மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே. 691
மருத்துவர் புண்ணைக் கத்தி
கொண்டு அறுத்தாலும், வலிப்பு
நோய்க்காக மஞ்சளால் மூட்டுக்களில் கட்டினாலும் அவரிடம் நோயாளி கோபப்படாமல்
அன்போடுதான் பழகுவான். நன்றியும்
சொல்வான். அதேபோல் என் மாயையால் நீங்காத துயரத்தைத் தந்தாலும் வித்துவக்
கோட்டம்மானே! உன் பக்தனான நான் உன் கருணையினையே எதிர்பார்த்து வாழ்கிறேன் என்று
மனருமுருகி வேண்டுகிறார்.
பெருமானே! நீயே எனக்கு
சர்வவிதாஷகன் என்று நான் துணிந்து உன்னை அண்டி வரும்போது, இவ்விபூதியில்
நீ என்க்கு எவ்வளவு துன்பங்கள் கொடுத்தாலும் அவற்றையெல்லாம் நான் நன்மையாகக் கருதி
மிக்க நன்றியறிவு பாராட்டி அன்பு செய்து வருவேனேயன்றி உன்னை சிறிதும் குறை கூற
மாட்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார். தமக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் பகவானால்
நமக்கு அளிக்கப்பட்டவையே என்றும் முன்வினைப் பயனால் இவைகளை இப்பிறவியில்
அனுபவித்து பாவங்கள் தீர்ந்து போய் நாம் பரமபதம் அடையும் பேற்றினை பகவான் நமக்கு
அளிக்கிறான் என்பதை உணர வேண்டும்.
வெங்கண் திண்களிறு அடர்த்தாய்
வித்துவக்கோட்டு அம்மானே
எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல்
அல்லால்
எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே. 692
பயங்கரமான கண்களையுடைய பலம்
நிறைந்த குவலயாபீடம் என்கிற யானையை கொன்ற வித்துவக்கோட்டம்மானே! உன் திருவடியின்றி
வேறு புகலிடம் உண்டா? அலை வீசும் நடுச் சமுத்திரத்திலே நான்கு
திசைகளிலும் சென்று பார்த்தும் கரையை காணாது திரும்பி வந்து தான் முன்பு
தங்கியிருந்த கப்பலின் பாய் மரத்தின் மீது ஏறி நிற்கும் பெரிய பறவையைப் போல் நான்
ஆகிவிட்டேன் என்கிறார்.
சமுத்திரத்தின் நடுவில்
தத்தளிக்கும் பறவையைப் போன்று ஆகிவிட்ட தன் நிலையை எண்ணி வருந்துகிறார் ஆழ்வார்.
இவ்வுலகில் நிலையான துணை என்று யாருமில்லை. மாயை காரணமாக நமக்கு உறவுகள்
ஏற்படுகின்றன. ஆனால் மரணம் நெருங்கும்போது மாயையினால் ஏற்பட்ட எந்த உறவுகளும்
நம்மைக் காக்க இயாலாமல் போகின்றது. மரண தருவாயில் இத்தகைய தெளிவு நமக்கு வரும்போது
நம் நினைவுகள் மெல்ல நம்மை செயல்படாமல் இருக்கும். நாம் இதனை உணரும் நிலையில் நம்
நினைவுகள் மறைந்து போகும். இந்நிலையில் பகவான்தான் நமக்கு இறுதிப் புகலிடம் என்ற
எண்ணத்தை நம் நினைவு உள்ளபோதே உருவாக்கிக் கொண்டால் அந்திமக்காலத்தில் நாம்
அல்லலுறத் தேவையில்லை என்பதனை ஆழ்வார் இப்பாசுரம் மூலம் நம்மைத் தெளிவிக்கிறார்.
செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே. 693
வித்துவக்கோட்டில்
எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! செந்நிறமுடைய தீ தானாக அருகில் வந்து
வெப்பத்தைத் தந்தாலும் செந்தாமரை ஆகாயத்தில் தோன்றும் சூரியனுடைய ஒளிக் கற்றைக்கே
மலரும். அதேபோல் அனுபவித்தே தீர வேண்டிய என் கொடிய பாவங்களை நீ நீக்காமல்
இருந்தாலும் உனது எல்லையற்ற கல்யாண குணங்களுக்கு அல்லாமல் வேறு எதற்கும் நான் மனம்
உருக மாட்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
தாமரையானது ஆதவனின் கிரணங்களைக்
கண்டு தான் மலர்கிறதே தவிர அருகிலுள்ள நெருப்பினைக் கண்டு மலர்வதில்லை. தாமரை மலர
சூரியனின் அருள் தேவைப்படுகிறது. அது போன்று நமக்கு வருகின்ற துன்பங்கள் அனைத்தும்
நாம் செய்த கர்மவினைகள் காணமாக வருகின்றன. அதன் பலனை நாம் அனுபவித்தாக வேண்டும்.
பகவான் அதனை நீக்காமல் போனாலும் பக்தனானவன் பகவானைச் சார்ந்தே இருக்கிறான்.
இத்தகைய மனநிலைகூட அவனது பூர்வஜென்ம புண்ணியத்தின் காரணமாக வருகிறது. மழையை
எதிர்நோக்கி மக்கள் காத்திருப்பது போன்று பகவானின் அருள் மழைக்காக நாம்
காத்திருக்க வேண்டும் என்பதை இப்பாசுரம் அறிவுறுத்துகிறது.
எத்தனையும் வான் மறந்த காலத்தும்
பைங்கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல்
மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என்
சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே. 694
வித்துவக்கோட்டில்
எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! மேகம்
எவ்வளவு காலம் மழை பெய்யாவிட்டாலும் பசுமையான தாவரங்கள் கருநிறம் கொண்ட ஆகாயத்தில்
தோன்றும் மேகங்களையே எதிர்நோக்கிக் காத்திருக்கும். அதுபோல் என்னை வருத்தும் கஷ்டங்களை
நீ நீக்கா விட்டாலும் என் மனதை உன்னிடத்திலேயே வைத்து உன் அருளுக்காக
காத்திருப்பேன் என்கிறார்.
மழையின்று வாடும் பயிர்கள்
அனைத்து உரிய நேர்த்தில் மழை பொழிவில்லை என்ற காரணத்தினால் வேறு உபாயங்களைத்
தேடுவதில்லை. நாட்கள் பல சென்றாலும் மழை மேகங்களை எதிர்பார்த்துப் பயிர்கள்
காத்துக் கிடக்கின்றன. நமது துன்பங்களைப் போக்க முடியாது என்று மனிதன் பல
காரணங்கள் சொன்ன போதும் இறுதியில் அவன் பகவானையே நாடுகிறான். அந்நிலையிலும் பகவான்
நம்மைக் காப்பார் என்ற நம்பிக்கையை மனிதன் விதைத்துக் கொள்கிறான். மருத்துவன்
கைவிட்ட நிலையில் பகவானை நாடும் மனிதனை நாம் காண்கிறோம். எத்தகைய துன்பம்
நேரிடினும் அவனை விட்டுப் பிரியேன் என்று ஆழ்வார் கூறுவது நமக்கும் சேர்த்துத்தான்
என்பதை நாம் உணர வேண்டும்.
தொக்கு இலங்கி யாறெல்லாம் பரந்து
ஓடி தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்று அவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே! 695
மூச்சுத் திணறும் அளவுக்கு நீரை
உண்ட கார்மேகம் போன்ற கரிய நிறம் படைத்த வித்துவக்கோட்டம்மானே! புண்ணிய
ஸ்வரூபியானவனே! நதிகளெல்லாம் எவ்வளவு
நீளமாக விசாலமாக ஓடியபோதும் கடைசியில் கடலில் கலக்கும். அவை வேறு இடம் போகாது. அதுபோல்
என் மனத்துள் நீக்கமற நிறைந்திருக்கின்ற உன் பெருமைகளைத் தவிர்த்து வேறொன்றிலும்
என் மனம் செல்லாது என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் பகவானைத்
தவிர வேறு ஒன்றிலும் என் மனம் நாட்டம் கொள்ளவில்லை என்கிறார். மனிதன் எங்கு
நோக்கிச் சென்றாலும் இறுதியில் பகவானின்
பக்கம் சென்றாக வேண்டும். வாழ்வின் உண்மையினை அவன் புரிந்துகொள்ளும் காலம்
இறுதியில் வரும். பகவானின் சந்நிதியே தனது இறுதி காலத்து இடம் என்பதை உணர்வான்.
அதனால்தான் பகவான் மனிதனுக்கு வயோதிக காலத்தினை வைத்துள்ளான். இளமையிலேயே இதனை
முழுவதும் அறிந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள். ஆனால் மனிதனின் மனம் அந்திமக்
காலத்தில்தான் அனைத்தும் புரிந்து கொள்ளும் நிலை வரும் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம்
வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே 696
மிகுந்த ஒளியுடைய
சக்கராயுதத்தைக் கொண்ட வித்துவக் கோட்டம்மானே! உன்னையே விரும்பி உன் சேவையையே
பெரிதாக நினைத்து செல்வத்தை விரும்பாதவனிடம் தானாக வந்த சேர்கின்ற ஐஸ்வர்யம் போல
உன் மாயையால் நீ என்னிடம் பரிவு காட்டாமல் போனாலும் உன் தொண்டனான நான் உன்னையே
அடைய விரும்பி நிற்கிறேன் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
எவனொருவன் எம்பெருமானிடத்தில்
அன்பை செலுத்தி அதனால் ஐஸ்வரியம் பெற்று வாழ்கிறானோ அவனது நல்வினைப் பயனால்
அச்செல்வமானது அவனிடத்திலேயே தங்கி இருக்கும்.
அது போலவே நீ உன் உடமையாகிய என்னை காத்தருளும் நிலையில் நான் உன்னையே விடாது
நிற்பேன் என்கிறார். நீ எனக்கு பரிவு காட்டி என் துன்பங்களை நீக்காமல் போனாலும்
நான் அவனை விட்டு விலகியிருக்க மாட்டேன் என்று கூறுகிறார். அடியார்களுக்கு
ஏற்படும் துன்பங்களையெல்லாம் போக்கி எங்களைக் காப்பதற்காகவே கையில்
திருச்சக்கரமும் திருவாழியும் ஏந்தி வந்துள்ளாய். எனவே நீ என்னையும் காப்பாய் என்று
உறுதியாகக் கூறுகிறேன் என்கிறார்.
வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே
ஆயிடினும்
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனைத் தாள் நயந்து
கொற்ற வேல் தானைக் குலசேகரன் சொன்ன
நற்றமிழ் பத்தும் வல்லார்
நண்ணார் நரகமே. 697
வித்துவக்கோட்டம்மானே! நீ என்னை
விரும்பாவிட்டாலும் வேறு எவரிடத்திலும் நான் போய் சரண் அடையமாட்டேன் என்று தன்
அளவில்லாத பக்தியை வெளியிடுகிறார் குலசேகராழ்வார். வெற்றியைத் தரும் வேலினையும், படைகளையும்
உடைய அவர் இயற்றிய நல்ல தமிழ் பாசுரங்களான இந்தப் பத்தையும் பக்தி சிரத்தையுடன்
பாடுபவர்கள் பாவங்கள் செய்திருந்தாலும் நரக வேதனைப்பட மாட்டார்கள் என்று
கூறுகிறார்.
பாவ வினைகளை அனைவரும்
அனுபவித்தாக வேண்டும். ஆனால் பகவானை சரணடைந்தவர்களுக்கு பாவ வினைகள் அனுபவிக்கும்
துன்பம் தெரியாமல் போகும். பாரதப் போரில் கர்ணன் அம்பு செலுத்தியபோது பகவான்
தேர்காலை அழுத்தியதால் தேர் சற்று கீழிறங்கி அர்ச்சுணனின் தலையைக் காத்தது.
கர்ணனின் வலிமையையும் பகவானின் கருணையால் அர்ச்சுணன் காப்பாற்ப்பட்டான். எனவே
ஆழ்வார் பாடிய பாசுரங்களை பக்தியுடன் பாடி வரும் நிலையில் வினைப் பயனால் பெறப்பட்ட
பாவங்கள் அனைத்தும் மறைந்து போகும் என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக