உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம்
இல் மருவி
உன்னொடு தங்கள் கருத்து
ஆயின செய்து வரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிரக்
கற்றவர் தெற்றிவர பெற்ற
எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள்சூழ்
சோலைமலைக்கு அரசே
கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
ஏழ் உலகும் உடையாய் ஆடுக
ஆடுகவே
71
உன்னை தனது இடுப்பில் அன்புடன்
சுமந்து செல்லும் கோபியர்கள், உன்னை விரும்பியவாறு ஆட்டுவித்து மகிழ்கிறார்கள். அவர்கள்
மனம் மகிழுமாறும், அதனைக்
கண்ணாரக் கண்டு கண்கள் குளிரவும், பாசுரங்கள் எழுதும் கவித்துவம் பெற்ற பண்டிதர்கள் கவிதையாக
பொழியவும், என்
ஞானக்கண்ணால் கண்டு மகிழவும், நீ செங்கீரை ஆட வேண்டும். திருக்குறுங்குடியில் உறைபவனே!
திருவெள்ளறையில் அருள் புரிபவனே! திருக்கண்ணபுரத்து அமுதமே! ஏழு உலகங்களையும்
ஆட்கொள்பவனே! என் அவலத்தைப் போக்க செங்கீரை ஆடுக...’’ என்கிறார் ஆழ்வார்.
பகவானின் செங்கீரை ஆடல் என்பது
உலகத்தவரின் அவல நிலைகளையெல்லாம் மாற்றக்கூடியது. உலகத்தில் அழியக்கூடிய
பொருட்களின் மீது பற்று கொள்வது அவலநிலையாகும். பகவான் ஒருவனே நமக்கு நிலையான துணை
என்று கொள்வது அவலநிலையைப் போக்குவதாகும். இத்தகைய நிலையை மக்கள் பெறவேண்டும்
என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.
திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம்
நீர்க்காக்கைகள் நிறைந்துலவும்
பொய்கையிலே கரிய பெரிய பனம்பழங்கள் நீரிலே விழுந்து புரள வாளை மீன்கள் பனம் பழத்தை
நீர்க் காக்கையென்று எண்ணிப் பாயும் திருக்குறுங்குடியில் எழுந்தருளியுள்ள
திருவிக்ரமனே! வலிமையான திரண்ட புஜங்களைக்
கொண்ட இரண்ய கசிபுவின் கோபம் கொள்ளும் தேகத்தை இரு கூறுகளாக்கி மகிழ்ந்த நரசிம்மம்
என்பது உன்னைத்தானே என்று கேட்கிறார் ஆழ்வார்.
பனம்பழம் விழுவதை
நீர்க்காக்கைகள் என்று நினைத்து வாளை மீன்கள் பாய்ந்தோடி வருகிறது. இத்தகைய
சிறப்புமிக்க திருக்குறுங்குடிப் பெருமானே! நாம் திருவிக்ரம அவதாரத்தைக் நினைவில்
கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும். வாமன அவதாரத்தில் யாசகனாயும்
வருவான். விக்ரம அவதாரத்தில் உலகினையே அளப்பான். அதுபோன்று இரணியனை அழிக்க நரசிம்ம
அவதாரம் எடுக்கும் பராக்கிரமத்தையும் கூறுகிறார். அடியார்களுக்குத்
தீங்கிழைப்பவர்கள் இழிநிலையை அடையுமாறு செய்து விடுவான் என்பதை இப்பாடல் மூலம்
அறியலாம்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருக்குறுங்குடியில்
எழுந்தருளியுள்ள கடல்வண்ண பகவானே! நைமிசாரண்யத்தில் உறையும் பெருமானே! கலிபுருஷன்
என்னைத் துன்புறுத்தும்படி ஐம்புலன்களையும் தூண்டிவிடுகிறான். அவற்றை என்னால் கட்டுப்படுத்த இயலாத நிலையில்
நான் எவ்விதம் வாழ்வது. அந்த ஐவர் செய்த
கொடுமைகளை இனியும் செய்ய இயலாதவாறு என் நாவில்
நயமிக்க நற்சொற்களால் பல்வேறு மலர்களைக் கொண்டு உன் பாதங்களை வணங்கி
அவற்றையே தஞ்சமாக எண்ணி வந்து சேர்ந்தேன்.
திருக்குறுங்குடியிலும், நைமிசாரண்யத்திலும்
உறையும் எம்பெருமானே! தளர்ச்சியடைந்துள்ள என் மீது கலிபுருஷனாகப்பட்டவர்
ஐம்புலன்களை ஏவி விட்டார். அதனால் இவை ஐந்தும் என்னை மிகவும் பாடுபடுத்தி
வருகின்றன. நான் என் செய்வேன். இனி அவர் எங்கே வாழப்போகிறார் என்று இந்த ஐந்தும்
நினைத்துவிட்டன. எனவே உன் திருப்பாதங்களில் நான் சரணடைந்து விட்டேன். அதனால் என்னை
ஆட்கொண்ட கொடுமையை நான் அழித்துவிட்டேன். குறுங்குடியில் வசிக்கும் கடல்வண்ணா! என்
வாயினால் இனிமையான சொல்லெடுத்துப் பாடி, வாசமலரிட்டு உன்திருவடித் தொழுதேன் என்கிறார் ஆழ்வார்.
அழகிய நெடிய திருப்பேர் நகரில்
அப்பக்குடத்தானாக உறைபவன்,
திருக்குறுங்குடியில் அழகிய நம்பியாக அருள் பாவிப்பவன், திருத்தண்காலில்
தண்காலப்பனாக வாசம் செய்பவன், திருகரம்பனூரில் புருஷோத்தமனாகத் திகழ்பவன், முத்துக்களைக்
கொண்ட கரிய நிறமான ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும், ஏழு உலகங்களையும், ஊழிக்காலத்தில் உண்டு உமிழ்ந்தவனை நான் தென்னரங்கத்தில்
தரிசித்தேன்.
உலகமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள
பரம் பொருள் நம் மீது வைத்துள்ள கருணையால் பல திருத்தலங்களில் அர்ச்சையாக இருந்து
அருள் பாலிக்கின்றார். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நமது மனம்
திருத்தலங்களில்தான் இறைவனுடன் சங்கமித்து ஒருமுகப்படுவதற்கான நிலை ஏற்படுகின்றது.
அவ்விதம் ஒருமுகப்படும் போது இறைவனே நம் மனதில் கோயிலாகக் குடிகொள்வான். அத்தகைய
ஒரு நிலை வரும்வரை நாம் திருக்கோயில்களுக்கு செல்வது அவசியம் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
நீர்வளம் கொண்ட திருவிண்ணகரில்
குடி கொண்டிருக்கும் பெருமானே! திருநறையூரில் தேன் போன்று இனிப்பபவனே!
திருக்குறுங்குடியில் வந்து கலந்து பழகும் எளியவனே. சந்திரன் போன்ற முகத்தில்
மானைப் போன்ற கண்கள் என்னை அம்பெனத் தாக்குவதால் பயந்து நடுங்கி ஓடி வந்து தலைவா!
என்று உன்னை சரணடைந்தேன். என்னைக் காப்பாயாக என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
நங்கையரின் கண் பார்வை அம்பு
போல் தாக்குவதால் உன்னை சரண் அடைகிறேன். பெண்களின் மோகத்தினால் பல மன்னர்கள்
நாடுகளை இழந்துள்ளார்கள். முனிவர்கள் நிலை குலைந்துள்ளார்கள். நமது மக்களும்
இதனால் தங்களது இலட்சியங்களை மறந்து தவறான பாதையில் சென்று துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
பெண் மோகம் என்பது ஒருவரை செயலிழக்கச் செய்யும். எனவே சிற்றின்பத்தை விட்டு
ஆன்மிகத்தில் ஈடுபடுமாறு ஆழ்வார் தெளிவிக்கிறார்.
நான் நீண்ட நாட்களாகவே உறங்காமல்
உள்ளேன். இவளும் பெண் ஆயிற்றே என்று எந்தவிதமான இரக்கமும் காட்டாமல், என் ஐம்புல
உணர்ச்சிகளையும் முன்பு கவர்ந்து சென்ற, ஒரு நெய்தலைப் போல் நிறம் கொண்ட பகவான் கோயில்
கொண்டிருக்கும் திருக்குறுங்குடியில் என்னை கொண்டு போய் சேர்த்து விடுங்கள் என்று
தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இத்தலத்துப் பாசுரங்களிலும்
தலைவியின் அவஸ்தை தொடர்கின்றது. திருப்புல்லாணியில் தலைவி பெருமானைக் காணாது
தவித்துபோய் அவன் திருக்குறுங்குடியில் காட்சி தருவான் என்று நம்பிக்கை
கொள்கிறாள். தனது நெஞ்சை திருக்குறுங்குடியில் செலுத்தினாள். குளிர்ந்த நிலவு
எனக்கு நெருப்பு போன்று தகிக்கின்றது. தென்றல் காற்று எனக்கு தீக்கதிராகத்
திகழ்கின்றது. பனி படர்ந்துள்ள காலத்தில் துயில் வராமல் தவிக்கிறேன் என்று
பெருமானைக் காணாமல் தான் படும் துன்பங்களை இங்கு விவரிக்கின்றாள் தலைவி.
மகரந்தங்கள் நிறைந்த மல்லிகையை
அணைந்து குளிர்ச்சியான நிலவுடன் வந்து வீசும் மந்தமாருதம் எனப்படும் ஊதக்காற்று
எங்கும் வீசி என் ஜீவனை உண்டு வருகின்றது. இதனால் இரவு முழுவதும் உறக்கமில்லை.
உறங்கும் பெண்கள் விரகத்தால் கைவளை கழலாதவர், அறியாமையால் என்ன வேண்டுமானாலும் பழித்துப் பேசிக்
கொள்ளட்டும். கூந்தலில் நறுமண மலர்கள்
சூடியுள்ள திருமகளை திருமார்பில் கொண்ட
பரந்தாமன் நித்யவாசம் செய்யும் குறுங்குடிக்கு கொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்
என்று கூறுகிறாள்.
மலர்கின்ற மல்லிகைப் பூவிலே
தோய்ந்து அங்குள்ள மணம் முதலியவற்றை வாரிக்கொண்டு இங்கே வந்து வீசித் திரிகின்ற
குளிர் காற்றானது என்னுயிரை முடிக்கப் பார்க்கின்றது. அதற்காக நான் வருந்தி
உறங்காமல் இருக்கிறேன். நாயகனைப் பிரிந்த வருத்தம் இப்படி இருக்குமென்று அறியாத பேதைப்
பெண்கள் நம்மைப் பற்றி இழிந்து பேசுகிறார்கள். இத்தகைய செயலைக் குற்றமாகக்
கொள்ளாமல் நற்றமாகக் கொள்பவன் வாழ்கின்ற திருக்குறுங்குடி பெருமானிடம் என்னை
சேர்ப்பித்து விடுங்கள் என்று கூறுகிறாள்.
நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும்
பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம்
மற்றும் உள அவை வந்திடாமுன்
கோல மயில் பயிலும் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 1790
மாலை நேரத்தில் வருந்துவது போல்
காலையும் வேதனைப்படுகிறதே. இரவானது பிரளயகாலம் போன்று நீண்டு வருகின்றது. வாடைக்
காற்று எரியும் நெருப்பைப் போலுள்ளது. நீலமணி நிறத்தவனான திருமாலின் படைப்பில்
இவ்வாறு துன்பம் தருவன பல உண்டு. அது போன்ற மாயங்கள் வாட்டுவதற்கு முன்பு அழகிய
மயில்கள் நடைபயிலும் குறுங்குடிக்கே என்னைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்
என்று கூறுகிறாள்.
விரகதாபத்தால் வருந்தும் தலைவியை
நோக்கி தோழிகள் கூறுகிறார்கள். சற்று பொருத்திருந்தால் காலைப் பொழுது
விடிந்துவிடும் என்று தோழிகள் கூற, எனக்கு காலையும் மாலையும் ஒன்றுதான். இருவேளைகளிலும்
துன்பம் என்னை வாட்டுகின்றது. எனக்கு உறக்கம் வந்தால் அதில் வரும் கனவில்
எம்பெருமானோடு நான் சேர்ந்திருப்பேன். அதற்கும் நான் கொடுத்து வைக்கவில்லை. காலை
முடிந்து இரவு வருவது ஒரு யுகமாக இருக்கின்றதே! அப்படியே இரவு வந்தாலும்
உறக்கமின்றி அதுவும் யுகமாகச் செல்கின்றதே! மாயவன், மணிவண்ணன் நம்மை மாய்ப்பதற்கு பலப்பல
மாயங்கள் செய்து வருகின்றான். அவனது லீலைகள் என்னை முடிப்பதற்குள் அவனிடம் என்னை
சேர்த்து விடுங்கள் என்று கூறுகிறாள்.
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து
கார் இமில் ஏற்று அணர்
தாழ்ந்து உலாவும்
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள
ஓர் இரவும்
உறங்காதிருப்பேன்
பெரு மணி வானவர் உச்சி வைத்த
பேர் அருளாளன் பெருமை
பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவின்
குறுங்குடிக்கே என்னை
உய்த்திடுமின். 1791
கறுத்த திமிலுடைய காளைகளின்
கழுத்தில் கருமணிகள் கோர்த்துத் தொங்கியிருக்க, மணியோசை என் மனத்தை வருத்துகிறது. எல்லா இரவும்
உறக்கமின்றித் தவிக்கிறேன். தேவர்கள் தங்கள் தலைமீது சிறந்த இரத்தினமாக வைத்துப்
போற்றுகின்ற பேரருளாளனின் பெருமைகளைப்
பேசிக் கொண்டு பெருகிவரும் நீர் நிறைந்த நவமணிகளைக் கொண்டு வந்து தள்ளுகின்ற
தோட்டங்களையுடைய திருக்குறுங்குடியில் என்னைச் சேர்த்துவிடுங்கள் என்று
கூறுகிறாள்.
மாட்டின் கழுத்துமணியோசை
செவிப்பட்டு ஆற்றாத தலைவி உரைக்கும் பாடலாக அமைகிறது. வயல்களில் மேய்ந்து மீண்டும்
ஊர் திரும்பும் மாடுகளின் கழுத்தில் உள்ள மணியோசை கண்டு பகல் பொழுது முடிந்து
விட்டதே என்று வருந்துகிறாள் தலைவி. இராப்பொழுது நெருங்கும் நிலையில் தலைவன்
வருவானோ என்று வருந்துகிறாள். பேரருளாளன் பெருமை பேசி நல்ல நீர் நிறைந்து நவமணிகளைக்
கொண்டு வந்து சேர்க்கின்ற அழகிய மலர்வனங்களைக் கொண்ட திருக்குறுங்குடியில் என்னைச்
சேர்த்து விடுங்கள் என்று வேண்டுகிறாள்.
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன்
தீம் குழல் ஒசையும்
தென்றலோடு
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற
கோல இளம்பிறையோடு கூடி
பண்டைய அல்ல இவை நமக்கு
பாவியேன் ஆவியை வாட்டம்
செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு
குறுங்குடிக்கே என்னை
உய்த்திடுமின். 1792
திடமான திமிலைக் கொண்ட எருதின்
கழுத்து மணியும் ஆயர்களின் இனிய புல்லாங்குழல் ஓசையும், தென்றல் காற்று
வீசும் மாலைப் பொழுதும்,
அந்திப் பொழுதில் தோன்றும் பிறைநிலவோடு சேர்த்துப் பாவியான என் உயிரை
வருத்துகின்றன. இவையெல்லாம் முன் போன்று எனக்கு சுகமளிக்கவில்லை. கார்மேகம் நீலமணி போன்ற நிறமுடைய பகவான் கோயில்
கொண்டிருக்கும் திருக்குறுங்குடியில் என்னைச் சேர்த்துவிடுங்கள் என்று தோழியிடம்
வேண்டுகிறாள்.
மாட்டின் மணியோசை, தென்றல் காற்று, மாலைப் பொழுது, இளம்பிறை ஆகிய
இவைகள் அனைத்தும் எம்மை வாட்டியிருக்கலாம். இத்தகைய துன்பம் இதுநாள் வரை நான்
அனுபவித்ததில்லை. இவை ஒவ்வொன்றும் தனித்தனியே என்னை அழிக்கவல்லவை. எனவே இத்துன்பம்
நீங்க என்னைத் திருக்குறுங்குடியில் உடனே சேர்த்து விடுங்கள். அங்கே எழுந்தருளியுள்ள
மணிவண்ணனைக் கண்டவாறே என் வாட்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்கிறாள் தலைவி.
ஒளிமிக்க ஆபரணங்களை ஆணிந்துள்ள ஊர் மங்கையர்கள் இரவும், பகலும் பொழுது போக்கற்று வம்புகள் பேசி பழிசுமத்தினாலும் பரவாயில்லை. அவர்கள் நன்மை புரிபவரா தீயவரா என்பதை யாமறியேன். நானோ விரகதாபத்தால் உடல் இளைத்து நம்மை விட்டு அச்சம், மடம், நாணம் பயிற்பு என்கின்ற பெண்களுக்கான இலக்கணங்கள் அனைத்தும் அகன்ற நிலையில் உள்ளேன். இதனால் என் உடல் மெலிந்து கைவளை கழன்று விழுந்தது. அவன் என் மனதைக் கொள்ளை கொண்டு போய்விட்டான். ஆனால் அவர்களோ ஆபரணங்களை அணிந்த வண்ணம் வாய் கூசாமல் என்னை இகழ்ச்சியாகப் பேசி மகிழ்கிறார்கள். இருப்பினும் நீலமணி போன்ற எம்பெருமானை என்னால் மறப்பதற்கில்லை. மறக்கவொண்ணாத வடிவழகில் உள்ள அவனை என்னால் சிறிதும் மறக்க இயலாது. அதனால் சோலைகளில் இளமுல்லைக் கொடிகள் படர்ந்துள்ள திருக்குறுங்குடிக்கே என்னை கொண்டு சென்று சேர்த்துவிடுங்கள் என்று கூறுகிறாள்.
செங் கண் நெடிய கரிய மேனித்
தேவர் ஒருவர் இங்கே
புகுந்து என்
அங்கம் மெலிய வளை கழல
ஆதுகொலோ? என்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு
ஆடும் அதனை
அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின்
குறுங்குடிக்கே என்னை
உய்த்திடுமின். 1794.
சிவந்த கண்களையும் உயர்ந்த
கருத்த திருமேனியையும் கொண்ட பெருமான் என் நெஞ்சத்துள் புகுந்து கொண்டு என் உடல்
இளைக்கவும், அதனால்
வளையல்கள் நழுவி விழவும் செய்து, இதுதானே வேண்டும் என்று கூறிய பின்னர் தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பவம்
போன்ற ஐந்து வகை மலர் அம்புகள் கொண்ட வில்லேந்திய பெண்ணான என்னிடம் வீரம் காட்டும்
இந்த மன்தமனின் குணத்தை நான் முன்னர் அறிந்ததில்லை. தேன் கசியும் குளிர்ந்த
மரக்கிளைகளினால் சூழப்பட்ட மலர் வனங்களையுடைய குறுங்குடியில் என்னைச் சேர்த்து
விடுங்கள் என்று வருந்திக் கூறுகிறாள் தலைவி.
அவருடைய கண்ணழகையும் கண்களின்
பரப்பையும் நான் எவ்வாறு சொல்வேன். கண்ணழகிலிருந்து தப்பினாலும், வடிவழகிலிருந்து
என்னால் தப்ப இயலவில்லை. இத்தகைய பெருமான் தன்னிடமிருக்கும் எளிமை குணத்தினால்
என்னுள்ளில் புகுந்தார். அதன் பின் பிரிந்து சென்றார். உலகில் பிரிவு என்னும்
ஒன்றை உணர்த்துவதற்காக நம்மில் புகுந்து பின் நம்மை விட்டு அகல்கிறார். மன்மதன்
தமது அம்புகளினால் நம்மை வருத்துகிறான். அம்பாகிய புஷ்பங்கள் தாமே அவனுள்ளவிடத்தே
நாம் சென்று சேர்ந்த பின் நமக்குப் பாதகமாகாதே. எனவே அவனிடத்தில் கொண்டு போய்
சேர்த்து விடுங்கள்.
கண்ணனின் கையில் உள்ள
புல்லாங்குழலின் இசை காற்றில் வந்த என் உயிரைத் துன்புறுத்துகின்றது.
சமுத்திரத்தின் இரைச்சல் மட்டுமென்ன சாமான்யப்பட்டதா? இன்னும்
கேளுங்கள். இவை போதாதென்று ஐந்து அம்புகளைத் தேர்ந்தெடுத்து எறியும் திறமையுள்ள
காமதேவன் என் பலவீனம் அறிந்து என்னைக் குறிவைத்துத் தாக்குகிறான். அதற்கு முன்
குடக்கூத்தாடிய கோபாலன் திருவுள்ளமறிந்து என்னைக் குறுங்குடியில்
சேர்த்துவிடுங்கள் என்று கூறுகிறாள் தலைவி.
கடலோசை தனக்கு பாதகமாக உள்ளதை
தலைவி கூறுகிறாள். அது உங்கள் காதில் விழவில்லையா? அது போன்று
கோபாலனின் குழலோசை என்னை துன்புறுத்துகிறது. அதுவும் உங்களுக்குக் கேட்கவில்லையா
என்று கேட்கிறாள். மன்மதன் இவளை மேலும் துன்புறுத்த தனது கரும்பு வில்லில் மலர்
கோர்த்து தலைவி மேல் எய்கிறான். எனவே குடக்கூத்தாடும் பெருமானிடம் என்னை சேர்ப்பியுங்கள்
என்கிறாள். தான் ஆடும் கூத்தினால் முரட்டு ஆண்களையும் தன்வசம் ஈர்த்துக் கொள்வான்.
அதனால் அவன் பெயர் கோவலர் கூத்தன் என்றாயிற்று. தன்னோடொத்த இளைஞர்களேயே இப்பாடு
படுத்துபவன் என் போன்ற அபலைகளை என்னவெல்லாம் செய்வான் என்பது இதன் கருத்தாகும்.
துதிபாடி வணங்கிய போதிலும் அவன்
இரங்கமாட்டான். இன்று வரை எனது பெண்மை நலத்தைக் கொள்ளை கொண்டு இன்றளவும் பசலை
நிறத்தை என் உடல் போர்த்திக் கொள்ளவிட்டுச் சென்றான். அவன் போன ஊரும் தெரியவில்லை.
அவனது அழகிய மார்பைச் சேராமலேயே என் தனங்கள் வீணாக முற்றிக் கொண்டே வருகின்றன.
ஆகையால் தேவர்களின் தலைவனான இராசக்கிரீடை நடத்திய வடிவான எம்பெருமான் கோயில்
கொண்டிருக்கும் திருக்குறுங்குடியில் என்னைச் சேர்த்து விடுங்கள் என்று
வேண்டுகிறாள் தலைவி.
என் பெண்மைக்குரிய அச்சம், நாணம், மடம் என்கின்ற
தனக்கே உரிய குணங்களைக் கவர்ந்து கொண்டுபோய் எனக்கு பசலை என்ற நோயினை பீதாம்பரம்
போன்ற போர்வையை என் மேல் போர்த்தி விட்டு போவது போல் சென்றுவிட்டான். போகும்போது ஊரின் பேரையும் சொல்லிப் போகவில்லை.
நான் அவனுடன் சேர்ந்த காலத்தில் குறுங்குடி பற்றி அதிகம் சொன்னதால் அவன் அங்குதான்
சென்றிருப்பான். அவனின்றி என் தனங்கள் படுத்தும் பாடு சொல்லி மாளவில்லை. எனவே உடன்
என்னை அவனிடம் சேர்த்து விடுங்கள் என்று நாயகி கூறுகிறாள்.
தெற்குத் திசையிலுள்ள இலங்கை
கலங்கும்படி அழித்த தேவர்களின் தலைவனானவன், மகாலட்சுமியைத் தன் மார்பில் கொண்டிருக்கும், என்
நெஞ்சத்திலும் குடிகொண்ட பெருந்தன்மையுடையவனின் பெருமைகளைத் திறம்படச் சொல்லும்
விரும்பத்தக்க குணங்களைக் கொண்ட திருமங்கை ஆழ்வாரின் கண்ணிலும், மனத்திலும்
நீங்காமல் கொலுவிருக்கும் உலகங்கள் யாவையும் ஆளுகின்ற பகவான் அருள் புரியும்
குறுங்குடியிலேயே என்னைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாள் தலைவி.
இலங்கை சென்று அதன் தலைவனான
இராவணனை அழித்த, தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கிய எம்பெருமான், ஸ்ரீதேவியைத்
தன் திருமார்பில் தரித்துக் கொண்டவனுமான திருக்குறுங்குடித் தெய்வமான அழகிய
நம்பியைப் பற்றி கலியன் பாடியுள்ள இப்பத்துப் பாசுரங்களை பக்தியுடன் ஓதுபவர்கள்
உலகினையே ஆள்வார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
எலும்பும், புலித்தோலும்
தரித்திருக்கும் சிவபெருமானுக்கு வலப்பக்கம் தந்த நற்குணங்களையுடைய பகவான்
உறையுமிடம் திருக்குறுங்குடியாகும். கொக்கின் குட்டியானது தான் ஏறக்கூடிய மரத்தின்
தாழ்ந்த கிளையில் ஏறித் தாய்க்கொக்கின் வாயிலுள்ள வெண்மையான இறால் மீனை உண்ணுகின்ற
காட்சியினைக் கொண்ட திருக்குறுங்குடியாகும் என்பது இதன் பொருளாகும்.
சிவபெருமான் செய்த பெரும்
தவத்தால் அகமகிழ்ந்து தனது திருமேனியில் ஒரு பக்கத்தை கொடுத்த குணவானாக பெருமான்
திகழ்கிறார். எம்பெருமான் சௌசீல்யகுணத்தினைக் கொண்டுள்ளது போன்று அங்குள்ள மரமும்
சிறார்கள் ஏறி விளையாடுவதற்காகத் தன்னை தாழ்த்திக் கொண்டுள்ளது. எனவே இது
‘தக்கமரம்’ எனப்பட்டது. எம்பெருமானுடைய குணாதிசயம் கொண்ட மரம். அம்மரத்தில் அமரும்
கொக்கும் பெருமானின் குணம் கொண்டதாக அறியப்படுகிறது. நீர் நிலைகளிருந்து மீனை
எடுத்து வரும் கொக்கானது தனது குட்டிப்பறவைக்கு இரை ஊட்டிவிடுகிறது. இத்தகைய இடமாக
திருக்குறுங்குடி என்னும் இத்தலம் அமையப்பெற்றுள்ளது.
ஆர்பரிக்கும் ஓசையுடைய அலைகள்
வீசும் திருப்பாற் கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் பவித்திரமான மகாவிஷ்ணு
எழுந்தருளியிருக்கும் தலம்,
சிவந்த கால்களையுடைய அன்னப்பறவை, அழகிய குளிர்ந்த நீர் நிலைகளில் வாசனை நிறைந்த தாமரை
மலரில் தன் இணையோடு சேர்ந்து வாழும் திருக்குறுங்குடியாகும்.
திருப்பாற்கடலில் திருக்கண்
வளர்ந்தருளும் அழகு எளியவர்க்கு கிட்டவொண்ணாதிருமென்பது மட்டுமல்லாமல் பிரமன்
முதலியோர்க்கும் கூட இக்கரையிலே நின்று கூப்பிட வேண்டுமென்று இருக்கும்படியால்
அவ்வருமையைப் போக்கி எல்லோருக்கு மிக எளியவனாக இருக்கும் இருப்பானது
திருக்குறுங்குடியாம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் எம்பெருமானானவன்
இடைவிடாது தன் மேல் சாய்ந்தருளப் பெறுவதுண்டாகிய மகிழ்ச்சியை கொண்டவன் என்பதாகும்.
தொண்டர்களே! பிழைக்கும் வகை
தெரிந்துவிட்டது. வராகமாய்த் தோன்றிய சிவந்த கண்களையுடைய கார்மேகம் போன்ற நிறம்
கொண்ட பகவான் குடியிருக்கும் தலமான, மெல்லிய சிவந்த கால்களையுடைய இனிய துணையான நாரைக்கு
இரைதேடி, கள்ளப் பார்வையுடன் பெண்நாரை அலையும் கார் நெற்பயிர்கள் நிறைந்த
திருக்குறுங்குடியை வந்து பாருங்கள் என்கிறாள்.
முன் பாசுரங்களிளெல்லாம் ஆழ்வார்
அனுபவித்த துன்பங்களை எல்லாம் பெருமான் ஆழ்வாருக்கு பகலவனைக் கண்ட பனி போன்று
அகன்றொழித்திட்டார். அதனால் வாழக்கண்டோம் என்று களித்துப் பாடுகிறார். பெருமானின்
தயவை பெறுவதற்கு ஒரு நல்வழி கண்டோம். திருக்குறுங்குடி சென்று சேவிப்போம்
வாருங்கள் என்றார். பிரளயத்தில் பூமியை மீட்டெடுத்த வராகமூர்த்தியாய் அவதரித்தார்
பெருமான். சம்சாரத்தில் உழன்ற நம்மை மீட்டெடுக்க முகில் போன்ற வண்ணம் கொண்டவர்
திருக்குறுங்குடியில் சேவை சாதிக்கின்றார்.
இராவணனது பத்துத் தலைகளும், மார்பும், இருபது கைகளும்
சிதறும்படி இலங்கை சென்று அவன் வலிமையை துணித்தொழித்து வலிமையான தேஜஸையுடைய
இராமபிரான் எழுந்தருளியிருக்கும் ஊர், எப்பொழுதும் வண்டுகள் இனிமையாக ஓசை எழுப்பும், நாற்சந்திகளிலும்
குரவைப் பூக்களின் மணம் வீசும் திருக்குறுங்குடியாகும் என்கிறாள்.
இலங்கை வேந்தனான இராவணன்
சீதையைக் கவர்ந்து சென்றதால் அவளை மீட்க இலங்கை சென்று இராவணனை போரில் வென்று
சீதையை மீட்டான். பெண் மோகத்தில் திளைப்பவர்களின் நிலையும் இத்தகைய முடிவுகளை
சந்திக்க நேரிடும். மாற்றான் மனைவியை கவரும் நிலையால் ஏற்படும் துன்பங்கள் பற்றி
இராமாயணம் நமக்கு நன்கு எடுத்துரைக்கின்றது. இவை மக்களுக்கு ஒரு பாடமாக அமையும்
நிலையினை ஆழ்வார் நமக்கு எடுத்துரைத்துள்ளார்.
முன்பு பாரதப்போரில் பயங்கரமாய்
பிளிறும் யானைகளையுடைய அரசர்கள் இறக்கும்படி பாண்டவர்களுக்காக வலிமை பொருந்திய
இரதத்தை நடத்தி வெற்றி தேடித்தந்த ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்தருளியிருக்கும் இடம், மை தீட்டிய
கண்களைக் கொண்ட நங்கையரின் இனிய மொழி போல, கோவைப்பழம் போல் செந்நிறமான வாயையுடைய கிளிகள்
பேசிப்பழகும் திருக்குறுங்குடியாகும்.
பாரதப்போரில் வலிமைமிக்க
பயங்கரமாகப் பிளிறும் யானைகள் உள்ள அரசர்கள் இறக்குமாறு பாண்டவர்களுக்காக வலிமை
பொருந்திய இரதத்தை இயக்கினான். அத்தகையவன் சேவை சாதிக்கும் இடம்
திருக்குறுங்கடியாகும். இத்தலத்துப் பெண்கள் பேசும் மொழியானது சிவந்த வாயையுடைய
கிளிகள் பேசும் பேச்சைப் போன்று இருக்கும். எனவே இத்தகையப் பெருமானைச் சரண்
புகுந்து வாழ்வில் பல வெற்றிகளைப் பெறுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
அன்பர்களே! தூயவரான நீங்கள் தூப
தீபங்களுக்காக நெருப்பையும், அபிஷேகத்திற்காகத் தீர்த்தத்தையும், பல நிறமுள்ள
சிறந்த மலர்களையும், வாசனைத்
திரவியங்களையும் கொண்டு பகவானை ஆராதனை செய்து வணங்கி ஜென்மத்தைக் கடையேற்றுங்கள்.
சமுத்திர நிறம் கொண்ட கண்ணன் மனமுவந்து வாசம் செய்யும் ஸ்தலம் ஆகாயத்தில்
வளைந்திருக்கும் பிறைநிலாவைத் தொடும்படியான மாட மாளிகைகள் அமைந்துள்ள
திருக்குறுங்குடியாகும்.
தூய்மையான மனத்தினைக்
கொண்டவர்களாகிய நீங்கள் தூப தீபங்களுக்காக நெருப்பையும், அபிஷேகத்திற்காக
தீர்த்தங்களையும், பல
நிறமுள்ள மலர்களையும், வாசனைத்
திரவியங்களையும் கொண்டு பகவானை ஆராதனை செய்து இந்த ஜென்மத்தைக் கடைத்தேற்றுங்கள்
என்று கூறுகிறார். இனி பிறவாமல் இருப்பதுதான் நமது உயரிய குறிக்கோளாக இருத்தல்
வேண்டும். அதனை உறுதியாக மனதில் பதிய வைத்து அவனுக்கு ஆராதனை செய்யுங்கள் என்று கூறுகிறார்.
அடியார்களே! நீங்கள் கொடி போன்று
நுண்ணிய இடையைக் கொண்ட பெண்ணிடம் காமுற்று அதனால் ஏற்படுகிற வேதனைகளைத் தரும்
சிந்தனைகளை விலக்குங்கள். பேச்சில் திருமகளை ஒத்திருக்கும் பெண்களின் கோவைக்கனி
போன்ற சிவந்த இதழ்களுக்குள் உள்ள அரும்பு போன்ற அவர்களின் பற்களுக்கு ஈடாகச்
சோலையில் முல்லை அரும்புகள் மலரும் குறுங்குடிக்குச் செல்லுங்கள். அங்கு குடி
கொண்டிருப்பவனைப் பணியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
எம்பெருமானுக்கே
அடிமைபட்டிருக்கும் பாகவதர்களே! தங்கள் மனதில் எழும் துக்ககரமான நினைவினைத்
தவிர்த்து திருக்குறுங்குடி பெருமானை ஆராதனை செய்யுங்கள். லௌகீக விஷயங்களுக்கு
தீவிரம் காட்டாமல் பகவத் விஷயங்களைப் பற்றுங்கள் என்று ஆழ்வார் நம்மைக் கேட்டுக்
கொள்கிறார். கொடி போன்ற இடையையுடைய மங்கையர்களிடம் ஆவல் கொண்டு அதனால் ஏற்படும்
துன்பங்களைத் தரும் சிந்தனையை விலக்குங்கள் என்று கூறுகிறார். தீவினைகள் வளரும்
இத்தகைய காரியங்களைக் கைவிடுங்கள் என்று கூறுகிறார்.
நம்முடன் இருக்கும்
தொண்டர்களே! நாரால் கட்டப்பட்ட
பூமாலைகளையும், அப்போது
மலர்ந்த மலர்களையும் தாங்கி நீங்காத பக்தியுடன் பகவான் கோயில் கொண்டிருக்கும் ஊரை
அடையுங்கள். ‘தாரா’ என்னும் நீர் வாழ் பறவைகள் கரையோர நிலங்களில் இரை மேய
வயல்களில் கூரிய வாயலகுகளைக் கொண்ட நாரைகள் பேடையோடு மகிழ்ச்சியடன் வாழும்
திருக்குறுங்கடி என்னும் ஊராகும் அது என்கிறார் ஆழ்வார்.
நல்ல மலர்களைக் கொண்டு
தொடுக்கப்பட்ட அழகு மாலைகளை கையில் கொண்டு மிகுந்த பக்தியுடன்
திருக்குறுங்குடியைச் சேருங்கள். அத்தலத்திலுள்ள அஃறினணப் பொருட்களும் தம் தம்
அபிமதம் பெற்றுக் களித்து வாழுமாகையால் நீங்களும் அங்கு சென்று வேண்டினவற்றைப்
பெற்றுக் களிப்படையுங்கள் என்கிறார். அரிதான மானிடப் பிறவியை பல இடர்பாடுகளைக்
கடந்து பெற்றுள்ளோம். எத்தகைய ஈனப் பிறவிகள் பெற்றுள்ளோம் என்பதை பகவான் அறிவார். நாம்
உய்வதற்கான மானிடப் பிறவியை பயனுள்ளதாக்கிக் கொள்வோம்.
தொண்டர்களே! நம்மைத் துயரப்படும்படி காத்திருக்கும்
பாவங்களும், தற்போது
அனுபவிக்கும் வேதனைகளும் அழிய, சிறந்த மலர்களை எடுத்துக் கொண்டு இரவும், பகலுமான
எக்காலத்திலும் வண்டுகள் ரீங்கரிக்க குன்றுகளிலுள்ள முல்லை மலர்கள்
நாலாபுறத்திலும் வாசனை வீசும் திருக்குறுங்குடியை அடைந்து வணங்கிப் பணிந்து
சேவியுங்கள். அதன் பின் எழுந்து தொழுங்கள் என்கிறார்.
பாகவதர்களே! நம்முடைய சஞ்சித
கர்மங்களும், பிராரப்த
கர்மங்களும் நீங்கும்படியாக திருக்குறுங்குடிப் பெருமானைச் சேவியுங்கள். இத்தலத்தில் கரிய வண்டுகள் இசைபாடித் திரிந்து
கொண்டு வருகின்றன. குன்றில் மலரும் முல்லைப் பூக்கள் விளைநிலங்களில் மலர்ந்து
மணம்கமழப் பெற்றதான இத்தலத்தை அடைந்து சேவியுங்கள் என்கிறார் ஆழ்வார். நமக்குத்
துன்பம் விளைவிக்கும் பாவங்கள் நாம் அறியோம். தற்போதைய வேதனைகளுக்கும் காரணம் அறியாமல்
நாம் உலகியலில் மோகம் கொண்டுள்ளோம். எனவே நிலையான இன்பத்தை தரும் பரம் பொருளை நோக்கி
நாம் செல்வோமாக என்கிறார்.
சிலையால் இலங்கை செற்றான் மற்று
ஓர் சின வேழம்
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலை ஆர் பாடல் பாடப் பாவம்
நில்லாவே. 1807
கோதண்டத்தால் இலங்கையை அழித்தவன், கொலை வெறி
கொண்ட குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தைப் பறித்தவன் எழுந்தருளியிருக்கும்
திருக்குறுங்குடியைக் குறித்து இலக்கணம் தவறாத கவிதைகளைப் பாடக்கூடிய கலியன் பாடிய
நிரந்தரமான இப்பாசுரங்களைப் பக்தியுடன் பாடுபவர்களின் பாவங்கள் நில்லாமல் மறைந்து
போகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இராமனாகவும் கிருஷ்ணராகவும்
அவதாரம் செய்து விரோதிகளை நிர்மூலம் செய்துள்ள பெருமான் இன்னும் நம்மில் கொண்டுள்ள
விரோதிகளை நிர்மூலம் செய்யக் காத்துக்கிடக்கிறார். அத்தகைய பெருமான்
திருக்குறுங்குடியில் நமக்காக சேவை சாதிக்கிறார். ஆனால் நாமோ அவரை விட்டு
அகன்றுள்ளோம். எனவே கலியன் பாடிய இப்பாமலைகளைப் பக்தியுடன் பாடி அவனை அடைந்து
உய்வோம் என்பது இப்பாசுரத்தின் உயரியப் பொருளாகும்.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
மலையிலிருந்து உதிக்கும்
இளங்கதிரவனைப் போன்றவனை, திருக்குறுங்குடியில் கார்மேகம் போன்று காட்சி தருபவனை, நித்யமான
மூவுலகத்திற்கும் அப்பாற்பட்டவனை, வைகுண்டத்து முதல்வனை, அளவிட முடியாத ஆராவமுதனை, திருவரங்கத்து அரங்கனை, வேதியர்கள்
என்றும் சிந்தனை செய்பவனை,
விளக்கின் ஒளி போன்று திகழ்பவனை, மரகதமணி போன்று கண்ணிற்கு பசுமையானவனை, தண்காவிலும், வெஃகாவிலும்
உள்ள பிராட்டி மணாளனை, கிளிப்பாட்டு
கேட்டு வளர்த்ததனால் உண்டான பயனை நான் அடைந்தேன் வா! என்று அழைத்து கிளியைக்
கைகூப்பி வணங்கினாள்.
பரக்கால நாயகி தன் கிளியை
பெருமானின் பல லீலைகளைச் சொல்லி சொல்லி வளர்க்கிறாள். நாயகியோ பெருமான் மீது பக்தி
கொண்டும் பெருமான் அவளை ஏற்காதது குறித்தும் வருந்தினாள். தான் சொன்னதனால் அவள்
மோகித்து வருந்துகிறாள் என்று கிளி கவலை கொண்டது. அவள் மனம் குளிர மீண்டும்
பெருமானின் நாமங்களைக் கூறியது. அதனால் மகிழ்வுற்று ‘உன்னை வளர்த்ததனால் பயன்
பெற்றேன் வா’ என்று அழைக்கிறாள்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
நம்பியை தென்
குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம் பிரானை என் சொல்லி மறப்பேனோ 2782
தென்பகுதியிலுள்ள திருக்குறுங்குடி
என்னும் தலத்தில் அருள்புரியும் நற்குணங்களுக்கு அதிபதியான அழகிய நம்பியை, செம்பொன்னைப்
போல் விளங்கும் அழகிய திருமேனி கொண்டவனை, நித்திய சூரிகளுடைய ஆதியான பரஞ்சோதியை
என் தலைவனை, நான் என்ன காரணம் சொல்லி மறப்பேன்? என்ற வகையில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
ஆழ்வார் பெருமானைப் போற்றும் போது
பொன்னை ஒப்பிடுகிறார். வெறும் பொன் அத்தனை ஒளி கொடுப்பதில்லை. செம்பு கலந்த
பொன்னால்தான் ஆபரணமாக உருகொண்டு ஒளி தருகின்றது. அது போன்று திருமகளை மார்பில்
தரித்த புருஷோத்தமனாக ஸ்ரீமந்நாராயணன் ஒளியுடன் திகழ்ந்து தமது அடியார்களை
அரவணைத்துக் கொள்கிறான். பரமபதம் கிட்ட
பிராட்டியின் புருஷகாரம் அவசியம் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இத்தலத்துப்
பெருமானுக்கு ‘நம்பி’ என்பது திருநாமம். பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும்
நம்பிக்கை அளிப்பவன். தன்னை நம்பி வந்தவர்களை பரமன் ஒரு போதும் கைவிடுவதில்லை என்ற
கருத்துப் புலப்படுகிறது.
எனது
தந்தையான பகவான் திருக்குறுங்குடியில் வீற்றிருக்க, அவனை விட்டுவிட்டு தன்னை
எல்லாம் உள்ளவனாக எண்ணி ஆணவம் கொண்ட மானிடரை கவி பாடுவதால் என்ன பயன்? அதனால் குளங்கள் நிறைந்திருக்கும் வயல்கள்
சூழ்ந்துள்ள குறுங்குடியில் நித்யவாசம் செய்யும் கண்ணனையே பாடுங்கள் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
உங்களது செல்வம் அனைத்தும்
நிலைத்து நிற்கின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை வளமானதென்று
மதித்துக் கொண்டிருக்கிறீர்கள். தானும் நிலையானதல்ல. செல்வமும் நிலையானதல்ல என்று
நினைக்கத் தவறுகிறான். இத்தகைய அற்பப் பதர்களை கவிபாடுவதில் என்ன பயன் உள்ளது.
கழனிகள் நிறைந்த திருக்குறுங்குடியில் சேவை சாதிக்கும் எம்பெருமானை போற்றிப்
பாடுவதை விட்டு தன்னலச் சேற்றில் புதையுண்டு வாழும் மனிதர்களை கவிபாடுவது என்ன
பயன் என்று கேட்கிறார் ஆழ்வார்.
அன்னையர்களே! நீங்கள் எல்லோரும்
என்னைக் கோபித்துக் கொண்டு செல்வது எந்த விதத்தில் நியாயம்? நமது அடிகள்
குறுங்குடி நம்பியை நான் தரிசித்தபின் என் வசமிழந்து விட்டேன். பாஞ்ச
சன்னியத்தோடும், சுதர்சனச்
சக்கரத்தோடும், தாமரைப்பூ
போன்று அழகிய கண்களோடும்,
சிவந்த கொவ்வை வாயோடும் என் நெஞ்சம் கலந்து போய்விட்டது என்று கூறுகிறார்
ஆழ்வார்.
தாய்மார்களே! என்னை கோபித்துக்
கொண்டு என் மீது சீறுவது எதற்கு? திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகை எண்ணிச் சீறுங்கள்.
எதற்கு இத்தகையை வடிவழகினைப் பெற்றாய் என்று கேளுங்கள். நான் திருக்குறுங்குடி
நம்பியை சேவிக்கச் சென்றது தவிர வேறு என்ன செய்தேன். அவ்விதம் சேவித்தும் அந்த அழகிய நம்பி சங்கு
சக்கரத்துடன், அவனது தாமரைக் கண்கள், செங்கனிவாய்
இவற்றின் பின்னேதான் என் நெஞ்சம் செல்கின்றது. நான் என்ன செய்வது. இவ்வகையில்
நானும் தோற்றேன். எனவே அவனைக் கேளுங்கள் என்கிறாள்.
என்னிடம் கோபம் கொள்ளாமல் என்
மனதின் வழியாகத் தரிசித்துப் பாருங்கள். தென் திசையிலுள்ள அழகிய மலர்வனங்கள்
நிறைந்த திருக்குறுங்குடி நம்பியை நான் வணங்கியபின் மிளிரும் பூணூலும், காதிலுள்ள
குண்டலங்களும், மார்பிலுள்ள
திருமகளும், ஸ்ரீவத்சம்
என்ற மறுவும் நிலைபெற்ற ஆபரணங்ளும், நான்கு திருத்தோள்களும் நான் காணுமிடந்தோறும் வந்து
நிற்கின்றன என்று கூறுகிறார் ஆழ்வார்.
பெண்ணே! திருக்குறுங்குடி
நம்பியை நீ மாத்திரையோ கண்டது? நாங்கள் கண்டதில்லையோ? நாங்களும் சேவித்துள்ளோம்.
ஆனாலும் உனக்கு இத்தகைய முறைகேடு ஆகாது என்று தாய்மார்கள் சொல்ல, அதற்குத்
தலைவியானவள் என் நெஞ்சை இரவலாக வாங்கி வைத்துக் கொண்டு நீங்கள் நம்பியை
சேவித்தீர்களாயின் இவ்வாறு பேச மாட்டீர்கள். அவனைக் கண்ட பிறகு வேறு எதிலும்
நாட்டம் கொள்ளவில்லை. எங்கு நோக்கினும் அவனது மின்னும் புரிநூலும், காதில்
அணிந்துள்ள குண்டலமும்,
திருமார்பில் உள்ள ஸ்ரீவத்சம் என்ற மறுவும், அணிந்துள்ள ஆபரணமும், அவனது
திருத்தோள்களும் மட்டும் என் கண்ணில் படுகின்றன என்று கூறுகிறாள்.
அன்னையரே! இவள் திக்பிரமை
பிடித்து நின்ற வண்ணம் உள்ளாள். நினைத்து நினைத்து நைந்து போகிறாள் என்று என் மேல்
சினம் கொள்ள வேண்டாம். மலை போன்ற மாட மாளிகைகளைக் கொண்ட திருக்குறுங்குடியிலுள்ள
நம்பியை நான் தரிசித்தபின் அவனது வெற்றி தரும் சாரங்க வில்லும், கௌமோதகி என்ற
கதாயுதமும், நாந்தகம்
என்ற வாளும், சுதர்சனச்
சக்கரமும், பாஞ்சசனியமும்
என் கண்ணிலேயே நிலைத்துவிட்டன. அவை என் நெஞ்சிலும் நீங்காமல் குடி கொண்டுவிட்டன
என்று கூறுகிறார் ஆழ்வார்.
நம்பியின் அழகைக் கண்டு
ஸ்தம்பித்துப் போவது, பிறகு
அறிவு கெட்டு அசேதனமாக நிற்பது, உருகி நிற்பது போன்று இத்தகைய நிலைமைகளை அடைந்து வருகிறேன்.
ஆனாலும் தாயானவள் இதைச் சொல்லிச் சொல்லி பழி தூற்றுகிறார்கள். அதற்கு நான்
அறிவிழந்து, நைந்துபோய்
நிற்பது வாஸ்தவம். அதற்கு நீங்கள் ஏன்
சீறுகிறீர்கள். அழகிய நம்பியின் பஞ்சாயுதங்களின் வடிவினைக் கண்டு என் மனதானது அதை
மறக்கவொட்டாமல் செய்கிறது. கண்ணை மூடிக்கொண்டாலும் அவனது நினைவு என்னை வாட்டி
வதைக்கின்றது என்று கூறுகிறாள்.
அன்னையர்களே! நீங்காமல் கண்ணீர்
விடுகிறேன் என்று என்னைக் கோபிக்க வேண்டாம்.
தேன் நிறைந்த மலர்களைக் கொண்ட தோட்டங்களால் சூழப்பட்ட திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின் குளிர்ச்சியான மலர் மாலைகளும், திருத்துழாயும், பொன்னாலான
திருமுடியும், வழவழப்புப்
பொருந்தியிருக்கும் பீதாம்பரமும், அரைஞாணும், பாவியாகிய எனது பக்கங்களிலேயே இருந்து வருத்துகின்றன
என்கிறார் ஆழ்வார்.
எம்பெருமானை சேவித்தவர்கள்
தொடர்ந்து கண்ணீரில் நனைந்த வண்ணம் உள்ளார்கள். அதுபோன்று திருக்குறுங்குடி
பெருமானின் திவ்யமங்கள விக்ரகத்தைக் கண்டவுடன் எனக்கும் கண்ணீர் ததும்பி
வழிகின்றது. நான் என் செய்வேன்? அதுவும் திருத்துழாய் மாலை அணியப் பெற்றவனைக்
கண்டால் அவனது அழகு சொல்லி மாளாது. அவனது பொன் முடியும், பொருந்தியவாறு
உடுத்தியுள்ள பட்டு வஸ்திரமும் என்னை வருத்துகின்றன. இதனால் வரும் கண்ணீரைத் தான் நீங்கள் நிறுத்த
முடியுமோ? என்று தாயாரைக் கேட்கிறாள் பராங்குச நாயகி.
பக்கம் நோக்கி நிற்கும் நையும்
என்று
அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும்
நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன்
ஆவியின் மேலனவே. 3389
தாய்மார்களே! காலன் வரும்
திசையையே பார்த்த வண்ணம் இந்தப் பெண் நிற்கிறாள். அதனாலேயே நலிந்து போகிறாள் என்று
என் மீது கோபம் கொள்ள வேண்டாம். மிக்க புகழுடைய திருக்குறுங்குடி நம்பியை நான்
வணங்கிய பின் அவனது கோவைப்பழம் போன்ற வாயும், நீண்ட புருவங்களும், அழகான தாமரைப்
போன்ற கண்களும் பாவியான அடியேனின் உயிருக்கு மேலாக ஆகிவிட்டனவே! என்று தலைவி
புலம்புகிறாள்.
அக்கம் பக்கமெல்லாம் பார்த்தவாறு உள்ள மகளைத்
திருத்தாயார் பார்த்துக் கண்டிக்கிறாள். இவ்வாறு நீ நடக்கலாகாது என்று அறிவுரை
கூறுகிறாள். பெருமான் வரவில்லை என்ற காரணத்தினால் அவள் நைந்து போகிறாள். பெரும்
புகழ் கொண்ட நம்பியை நான் கண்டேன். ஒளி மிக்க அவனது வடிவழகு, கோவைக்கனி
போன்ற அதரம், அழகான
புருவங்கள், அதன் கீழே அழகிய தாமரைக்கண்கள்
இவையெல்லாம் பாவியாகிய என்னை வசீகரித்துவிட்டன. இதனைக் கண்டும் நீ என்னை ஏசுவதில்
என்ன பயன் உள்ளது என்று கூறுகிறாள்.
என் மகளானவள் எம் குலத்துக்கு
மேலும் கொடிய பழியை உண்டாக்குவாள் என்று நான் பகவானை காணவும் இடம் தரவில்லை.
மலர்வனங்கள் சூழ்ந்த குளிர்ச்சியான திருக்குறுங்குடி நம்பியை நான் தரிசித்த பின், அழகும்
கூர்மையும் நிறைந்த கொடி போன்ற நாசியும், தாமரை போன்ற கண்களும், கோவைப் பழம் போல் சிவந்த வாயும், நீல மேனியும், அவனது
திருத்தோள்களும் என் நெஞ்சில் நிறைந்து விட்டன என்று கூறுகிறாள்.
தாயாரானவள் தனது மகளின் நிலை
கண்டு வருந்தி இனி அந்த அழகிய நம்பியைக்
காண நான் அனுமதிக்க மாட்டேன். அவனது அழகில் மயங்கி மேலும் நீ பிதற்ற
ஆரம்பித்துவிடுவாய் என்று கூறுகிறாள். ஆனால் நானோ தாயார் பேச்சுக் கேட்காமல்
நம்பியை நான் சேவித்துவிட்டேன். என்ன அழகு, என்ன அழகு. அவனது மூக்கின் அழகும், தாமரைக்
கண்களும், நீல
மேனியும் என் நெஞ்சம் நிறைந்தனவே. அதனை அகற்றிவிட என்னால் இயலாது என்று
நாயகியானவள் வருந்திக் கூறுகிறாள்.
ஒருவராலும் அழிக்க முடியாத பழியை
இவள் நம் குடும்பத்திற்குச் செய்கிறாள் என்று கருதி தாயானவள் எம்பெருமானை நான்
வணங்கவிட மாட்டாள். சிறப்பான புகழையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் தரிசித்த
பிறகு ஒளி வெள்ளமான அவனது நீண்ட திருமேனியின் எழில் என் உள்ளத்தில் நிறைந்து வேறு
எதற்கும் அங்கு இடமில்லாமல் செய்துவிட்டது. அப்போதும அவனது அழகு கைகளில் ஒளிமயமான
சுதர்சனமும் இருந்தது என்று கூறுகிறாள்.
அடக்கத்தைக் கடந்த அவள்
செய்துவரும் காரியமானது எம் குலத்திற்குத் தீராத பெரும் பழியைத் தந்து
கொண்டிருக்கின்றது என்று தாயார் கூற, சிறந்த கீர்த்தியுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் ஒரு
முறை சேவித்துவிட்டேன். எம்பெருமானின் மேனி ஒளி பொருந்திய பொன் போன்று ஜோதி
வெள்ளமாக ஜொலிக்கின்றது. இத்தகைய அவனது உருவமானது என் நெஞ்செல்லாம்
நிறைந்துவிட்டது. மேலும் அவன் சுதர்சனச் சக்கரத்தை கையில் ஏந்தியுள்ளதால் அதன்
ஒளியும் சேர்ந்து மேலும் ஒளி கொடுக்கின்றது. அத்தகைய தேஜஸை என்னால் சிறிதும் மறக்க
இயலாது என்று பராங்குச நாயகி தெரிவிக்கின்றாள்.
கையுள் நன் முகம் வைக்கும் நையும்
என்று
அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன் நிற்குமே 3392
பெருமான் மீது கொண்ட காதலால் தன்
அழகிய கைகொண்டு முகத்தைப் பொத்தி வருந்துகிறாள் என்று தாய்மாரே என்னைக்
கோபிக்காதீர்கள். கார்மேகங்கள்
தொடும்படியான மாட மாளிகைகளைக் கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் பார்த்தபின்
அவனது செந்தாமரை போன்ற கண்களும், கீழ் இடுப்பும், சிறிய இடையின் வடிவழகும், கரிய கூந்தல் தவழும் தோள்களும் பாவியான
அடியேன் முன் வந்து எப்போதும் நிற்கின்றனவே என்று கூறுகிறாள்.
பெருமான் வரவில்லையென்று
தலைவியானவள் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்த தாயார், உன்னுடைய அழகிய
முகத்தை கை வைத்து மறைக்கிறாயே! உன்னுடைய கையில் உன் முகம் இருக்கலாமோ!
எம்பெருமான் கையிலே உன் முகம் இருத்தல் வேண்டும். அவனது இடையழகும், மொய்க்குழலும், அழகிய
தோள்களும் என் நெஞ்சில் வந்து நிலைநிறுத்தி என்னை வாட்டி வதைக்கின்றதே! என்று
துன்புற்றுக் கூறுகிறாள்.
பெண்மைக்கு இலக்கணமாய்த்
திகழாமலும் அடக்கத்தை விட்டு விட்டதாலும் நீ வாசலில் வந்து நிற்கின்றாய் என்று
தாயாரும் தோழியரும் கோபித்துக் கொள்கிறார்கள். உறுதிமிக்க மாடமாளிகைகள் நிறைந்த
திருக்குறுங்குடியில் உறைகின்ற அழகிய நம்பியை
நான் தரிசித்த பின் என் மனம் அலைபாய்கின்றது.
திருமுடி முதல் திருப்பாதங்கள் வரை பல்வேறு ஆபரணங்கள் அணிந்த எம்பிரான்
கரும்பாய், பாலாய், அமுதமாய், என் மனதில்
குடிகொண்டு அகலாதவனாக உள்ளான் என்று கூறுகிறாள்.
அனைத்துலகத்திற்கும் இவனே காரணன், இவனே தலைவனாக
விளங்கும் எம்பெருமான் உயர்ந்த கிரீடத்தை அணிந்துள்ளான். எல்லையில்லா ஆபரணங்களை
அணிந்தவன். அபரிமிதமான திவ்யபூஷணங்களை உடையவனாகத் திகழ்கின்றான். கருப்பஞ்சாறு, பாலமுது
இவையெல்லாம் ஆகிவந்து என் நெஞ்சத்திலே குடிகொண்டு என்னைவிட்டு அகலாமல் உள்ளானே!
நான் என் செய்வேன்! தாயாரோ,
இத்தகைய அன்பினை நான் இதுவரைக் கண்டதில்லை. இவள் அங்கு சென்றால் அங்கையே
தங்கி விடுவாள் என்று அஞ்சினாள்.
கழீய மிக்கது ஓர் காதலள் இவள்
என்று
அன்னை காண கொடாள்
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச்
சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
ஆர்க்கும் அறிவு அரிதே. 3394
இவள் பெருமான் மீது கொண்ட
காதலானது மறக்கக்கூடிய காதலன்று என்று நினைத்து தாயார் தன் மகளை பகவானைத் தரிசிக்க
அனுமதிப்பதில்லை. குற்றமற்ற பெருமைபெற்ற திருக்குறுங்குடி நம்பியை நான் தரிசித்த பின் அவன் திருமேனி வடிவழகு என்
உள்ளத்துள் நிறைந்துள்ளதை யாராலும் அறிய முடியாது. தேவர்கள் அனைவரும் அவனைக்
கைகூப்பித் தொழும்படி ஒளி வெள்ளமாக வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவன் என்று
கூறுகிறாள்.
கையைவிட்டு மீறிப் போன தன்
மகளின் காதலை எண்ணி வருந்துகிறாள் தாயார். எம்பெருமான் மீது கொண்ட அதீத பக்தியை
அவளிடமிருந்து பிரிக்க முடியாது என்று எண்ணினாள். எனவே இவளை திருக்குறுங்குடிக்கு அழைத்துச் செல்லக்கூடாது
என்று நினைத்தாள். ஆனால் மகளோ கீர்த்திமிக்க எம்பெருமானைக் கண்டபின் என்னால் மறக்க
முடியவில்லை. தேவர்கள் அனைவரும் கூடியிருந்து வந்து சேவிப்பார்கள். அப்போது
ஒளிப்பிழம்பாக காட்சி தரும் பெருமானின் நினைவுகள் என் நெஞ்சில் வந்து அமர்ந்து
விட்டன. இந்த உணர்வினை யாரும் அறிய இயாலாது என்று வருந்திக் கூறுகிறாள் தலைவி.
அறிவதற்கு மிகவும் அருமையான
எம்பிரானை, தன் அழகிய கையில் சுதர்சனத்தைத் தரித்திருப்பவனை நினைத்து, மணம் மிகுந்த
மலர் போன்ற பாமாலைகளால் குருகூர் சடகோபன் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுள்
திருக்குறுங்குடி பெருமான் மேல் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பொருள் தெரிந்து
படிக்கக் கூடியவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் விஷ்ணுவுக்குப்
பிரியமானவர்களாகத் திகழ்வார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருக்குறுங்குடி
பெருமான் ஆழ்வாருக்கு ருச்சிஜனக விபவ இலாவண்யத்தைக் காட்டினான். இலாவண்யம் என்றால்
திருமுடி தொடங்கி திருவடிவரை உள்ள திருமேனி முழுவதும் உள்ள சமுதாய சோபை
என்பதாகும். பெருமானுக்கு சௌந்தர்யமும் அழகுதான். நம்மைத் திருத்துவதற்காக
சிருஷ்டித்தார், சரீரம் கொடுத்தார். கரணகளையபரங்களைக் கொடுத்தார். வேதங்களைத்
தந்தார். சாத்திரங்களைத் தந்தார். நல்லது தீயது அறிய ஞானத்தைக் கொடுத்தார். தானே
அவதரித்துப் பார்த்தும் நாம் திருந்துவதாக இல்லை. எனவே இறுதியாக லாவண்யம் என்ற
திருமேனி அழகினைக் காட்டி நம்மைத் திருத்த முயற்சி மேற்கொண்டார். அத்தகைய பெருமான்
என் மனதில் வந்து குடிபுகுந்தான் என்கிறார் ஆழ்வார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக