திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கண்ணனாக அவதரித்த காலத்தில்
நப்பின்னையுடனும், மலர்
மகளோடும் அன்புடன் கலந்திருப்பவன். அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவன், என்றும்
உறையும் ஊர் திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர்
முறையே நின்றவனும், அமர்ந்தவனும், இருந்தவனும், நடந்தவனும்
உள்ள எம்பெருமான் இந்நான்கு நிலைகளில் நீர்மலையில் காட்சி தருகிறான் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
இப்பாசுரத்தில் ‘ஆயர் குலக்கொடி’
என்பது நப்பின்னையைக் குறிப்பதாகும். ‘அணிமாமலர் மங்கை’ என்பது மகாலட்சுமியைக்
குறிக்கும். அவளின் அம்சமானவளே ருக்மிணி பிராட்டியாகும். மூன்று பிராட்டிகளை அடைய
அசுரர்களை அழித்தவனாவான். அரக்க குணம் கொண்ட துரியோதனனை குருட்க்ஷேத்திரத்தில்
பகவான் அழித்தார். இராவணனை இலங்கை போரில்
அழித்தார். இரண்ய சிசுபாலர்களை அழித்து மக்களைக் காத்தார். பலரை துன்புறுத்தி வந்த
கம்சனையும் அழித்தார். எனவே அசுர குணம் கொண்டவர்களுக்கு பகவான் இரக்கமே
காட்டமாட்டார் என்பது இப்பாசுரவழி அறியப்படுகிறது.
தேவர்களின் தலைவனான இந்திரனின்
காண்டவ வனம் என்கின்ற காட்டை அவன் காண அக்னியின் பசி தீர உண்ண உத்தரவு தந்தவன்.
பாரதப் போரில் பூமி பாரங்களை நீக்கி உலகைக் காத்தவன். இரணியனின் அகன்ற மார்பைப்
தன் நகங்களால் பிளந்து நரசிங்கமாய் உருவெடுத்தவன், வாமனனாய் மூன்றடி மண் பெற்று
திரிவிக்ரமனாய் ஓங்கி வளர்ந்த எம்பெருமான் அருளும் இடம் திருநீர் மலையாகும்
என்கிறார் ஆழ்வார். காண்டவ வனம் என்பது
தேவேந்திரனுக்கு உரியதான பூலோகத்திலுள்ள காடு. அக்னிதேவன் அந்தண வேடம் பூண்டு தன்
உணவுக்கு காண்டவ வனம் வேண்டும் என்று கேட்டான். அக்காட்டில் துஷ்டர்களும், அரக்கர்களும்
நிரம்பி இருந்ததால் கண்ணனும் அதனை அக்னி பகவானுக்கு அளித்தான். அக்காடும்
முழுமையாக எரிந்து அக்னி தன் பசியைத் தீர்த்துக் கொண்டான். இவையனைத்தும் பூபாரம்
நீக்க பகவான் செய்த திருவிளையாடலாகும். இத்தகைய பெருமான் திருநீர் மலையில் சேவை
சாதிக்கின்றான்.
அழகுள்ள திருமேனியில் தீக்ஷ்ணமான
திருவாழியோடு, கலப்பையும், பாஞ்சஜன்யம்
என்ற சங்கையும் தரித்தவனாயும், மனோகரமான முத்துவடங்களணிந்த பூமிபிராட்டியின் பாரத்தை
நீக்கியவன். விரோதம் கொண்ட துரியோதனாதியரை அழித்துப் பாரதப் போரில் கூட்டம் கூட்டமாக வீரர்கள் மடிய
ஜயத்ரதனைக் கொல்ல சக்கரத்தால் சூரியனை மறைத்து சாரதியாய் நின்று பகை முடித்த
துவாரகாதீசன் ஸ்ரீராமன் வீற்றிருக்கும் இடம் திருநீர்மலையாகும்.
திருவாழி, திருச்சங்கு, கலப்பை
ஆகியவற்றுடன் காட்சி அளிக்கும் இப்பெருமான் துஷ்டர்களும் அரக்கர்களும் நிறைந்த
இப்பூமியின் பாரத்தை அறவே நீக்கியவன். எம்பெருமான் பலராமனாகத் திகழ்ந்த போது
கலப்பையுடன் காட்சி தந்தான். ‘ஹலம்’ என்ற சொல் கலப்பையைக் குறிக்கும்.
இப்பெருமானுக்கு ‘ஹலாயுதன்’ என்ற திருநாமமும் உண்டு. திருமடந்தையும், மண்மடந்தையும்
ஒருசேர இத்தலத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பாகும். அத்தகையவன் நம்
துன்பங்களையெல்லாம் எப்படியாவது அழிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறான்.
பகைவர்களால் தாங்க முடியாத
ஒப்பற்ற நரசிம்மமாய் அவதரித்து இரணியனை அழித்து அவன் மனைவியைத் தீக்குளிக்குமாறு
செய்தவன். மேலும் போர்க்களத்தில்
பாண்டவர்களோடு சேர்ந்து நூற்றுவரான
துரியோதனாதியர் அழிய உரிய நேரத்ததில் திரௌபதியின் நலத்தைக் காத்த எம்பெருமான்
வீற்றிருக்கும் இடம் திருநீர்மலையாகும் என்கிறார் ஆழ்வார்.
எவ்வகையாலும் எதிரிகளால் வரும்
துன்பங்களைப் பொறுக்க மாட்டாமல் நரசிம்மராய் அவதரித்து நம்மைக் காப்பவன். கௌரவர்
சபையில் திரௌபதிக்கு நேர்ந்த பெருத்த அவமானத்தைப் பொறுக்க மாட்டாமல் அவளது
மானத்தைக் காத்தவன். ஆழ்வார் திருநறையூரில் பாடிய பாசுரத்திலும் ‘பந்தார் விரலாள்
பாஞ்சாலி கூந்தல் முடிக்க’ என்று இதே கருத்தினைக் கூறியுள்ளார். மக்கள் மீது
வைக்கும் அன்பானது மாறுதலுக்குட்பட்டதாகும். ஆனால் பகவான் மீது நாம் கொண்டுள்ள
அன்பானது என்றும் மாறாது என்பதை ஆழ்வார் வலியுறுத்திக் கூறுகிறார்.
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு
அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெடப் படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள்முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே. 1082
முன்னொரு காலத்தில் கடல்
நிறையுமாறு மலைக் கொடுமுடிகளைக் கொண்டு அக்கரையில் சேர்க்குமாறு சேதுவினைக் கட்டி, நிலவினைத்
தொடுமாறு வாணளாவிய மதில்களைக் கொண்ட இலங்கை அழியுமாறு ஆயுதங்களைச் செலுத்தி இலங்கை
வேந்தனை போர்க்களத்தில் அழிப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று எண்ணி தனது
பிரம்மாஸ்திரத்தினால் ஒளிமிக்க அவனது
பத்து தலைகளையும் அறுந்து விழுமாறு செய்து பின்பு பிராட்டியுடன் அயோத்தி
மாநகருக்கு வந்து சேர்ந்தான். இத்தகைய பெருமை மிக்கவன் இன்று திருநீர்மலையில்
வாசம் செய்கின்றான்.
பெருமான் ஸ்ரீராமனாக
அவதாரமெடுத்து பஞ்சவடியில் பிராட்டியை பறிகொடுத்த பிறகு அனுமனின் உதவியுடன் இலங்கை
அடைந்து இராவணனை முதலில் கண்ட போது ஸ்ரீராமனுக்கு சினம் வரவில்லை. இவன் நல்ல
புத்தி கொண்டு திருந்துவான் என்று பல சந்தர்ப்பங்களை அளித்தார். ஆனால் அவனோ
திருந்துவதாக இல்லை. மேலும் மேலும் செருக்குடன் பல குற்றங்கள் செய்தவண்ணம்
இருந்தான். இனி அவனை அழித்துதான் தீரவேண்டும் என்றெண்ணி அதற்கான சரியான
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தக் கொண்டு தக்க தருணத்தில் அவன் பத்து தலைகளைக்
கொய்தான்.
விசாலமான பூமியும், குளிர்ந்த
மலைகளும், ஆர்ப்பரிக்கும்
சமுத்திரங்களும், சந்திர
சூரியர்களும், இவற்றையெல்லாம்
உண்ட பிறகும், ‘எனக்கு
வயிறு நிரம்பவில்லையே’ என்று கூறியவனும், எம்போன்றவர்க்கு ஸ்வாமியானவனும், கடல் சூழ்ந்த
உலகத்துக்கெல்லாம்
நான் அரசன் என்று கூறிக்கொண்டிருந்தவர்களையும், அக்குலத்தை
சீறிக் களைய பரசுராமன் வடிவம் கொண்டு, உனக்கு மேற்பட்டவர் எவருமில்லை என்ற பெருமையின் எல்லையில்
நிற்பவனும், நீர்வண்ணன்
என்ற திருநாமத்தைக் கொண்டவனுமான பெருமான் திருநீர்மலையில் குடிகொண்டுள்ளான் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
உலகில் உள்ளவர்கள் எவரும் தம்மை
வெல்ல முடியாது என்று இறுமாப்புடன் மக்களைத் துன்புறுத்தி வந்த அரசர்களையெல்லாம்
தனது கூரிய கோடாரி கொண்டு வீழ்த்திய பரசுராமன் என்ற அவதாரத்தில் தோற்றம் தந்தார்
பெருமான். இவன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன். இவனது வலிமையும், பெருமையும்
அற்புதமானது. இராணவனைவிட பரசுரமான் வலிமை
மிக்கவர் என்பர். ஸ்ரீமந் நாராயணன் விபவ அவதாரத்தில் பரசுராம-பலராம அவதாரங்களில்
மட்டும் ஆவேசித்து நிற்பது போன்றுள்ளது. இத்தகைய பெருமான் திருநீர்மலையில் சேவை
சாதிக்கின்றார்.
கண்ணபிரான் போலவே தன்னை
உருமாற்றிக் கொண்டவன் பௌண்டரீக வாசன் என்பவன். இவன் கண்ணனைப் போன்று சங்கு சக்கரம்
தரித்துக் கொண்டு யானே கண்ணன் என்று மக்களை ஏமாற்றி வந்தான். அத்தகையவனை தன்
சினத்தைக் காட்டி அவனது புகழ் மங்கும்படி மாய்த்தான். அத்தகையவனின் உயிரை
அபகரித்தவனும், யாருக்கும்
அடிபணியாத இரணியாசுரனை இரண்டாகப் பிளந்தவனான எம்பெருமான் நீர்வண்ணனாக
திருநீர்மலையில் சேவை சாதிக்கின்றான்.
பௌண்டரீகவாசன் என்பவன் கண்ணனைப்
போன்று உருமாறி மக்களை ஏமாற்றி தானே கண்ணன் என்று சொல்லி வந்தான். மேலும் அவன்
கண்ணனை போருக்கு அழைத்து அவனது செருக்கினைப் பறைசாற்றிக் கொண்டான். இதனையறிந்த
கண்ணன் மக்களிடம் தன் சொரூபத்தைக் காட்டி உண்மையை விளக்கினான். பௌண்டரீகவாசனின்
அகம்பாவத்தை அழிப்பதற்கு அவனை போருக்கு அழைத்து போரில் அவன் புறமுதுகிட்டு ஓடுமாறு
செய்வித்தான். அத்தகையவன் திருநீர்மலையில்
வாசம் செய்கின்றான் என்பது இதன் பொருளாகும்.
இவ்வுலகில் மயிற்தோகையினைக்
கையில் ஏந்திக் கொண்டு நடமாடும் திகம்பரர்கள் எவ்வித அச்சமுமின்றி நாணமுமின்றித்
திரிபவர்கள். இத்தகையவர்கள் தரையில் புழு பூச்சி நடமாடுவதால் அதனை அழிப்பதற்கான சாத்தியங்கள்
இருப்பதால் தங்களது மயிலிறகிறால் அவற்றினை ஒதுக்கி ஒதுக்கி பின் நடந்து
செல்வார்கள். தங்களை வருத்திக் கொள்ளும்
இவர்கள் தங்கள் செயல்களில் உள்ள
வேறுபாட்டினை மறந்து அழகுமிக்க மலர்களை பெருமானுக்குச் சமர்ப்பித்து பக்தி
மேலோங்க மனங்குழைந்து வேண்டி நிற்பவர்களுக்கு நீர்வண்ணப் பெருமான் சேவை சாதிப்பான்
என்பது பொருளாகும்.
ஜைன மதத்தைப் பின்பற்றுபவர்கள்
ஜீவகாருண்யக் கொள்கைகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். எனவே தரையிலிருக்கும்
புழு பூச்சிகளைக் கூட இம்சிக்கக் கூடாதென்று தங்களது மயிலிறகினால் அவற்றை ஒதுக்கி
நடப்பார்கள். ஆனால் இவர்கள் ஒரு இடத்தில் தங்காமல் திரிந்த வண்ணம் இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொண்டு இறைவனை அடையும் கொள்கையினை
மேற்கொள்வார்கள். இத்தகைய பழக்கத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வேறுபடுத்தி நீர்வண்ணப்
பெருமானை வந்தடையுங்கள் என்று கூறுகிறார்.
நம்மவர்களே! இத்தலமானது தன்னை
வணங்கியவர்களின் பாபங்களை அழிக்கும் தன்மையால் நீர்மலையே நாம் உய்வதற்கு தகுந்த
இடமாகும். ஐம்புலன் வழியாக இன்பம்
அனுபவிக்க மனம் தூண்டுகிறது. நாம் அதன்படி
நடக்கிறோம். அதனால் துன்பம் கொண்டு
வேதனையுற்று கரையேறவும் முடியாமல் அதிலேயே
உழலும் அறிவற்றோர் செல்ல முடியாத எம்பெருமான் அருளும் இடம் நீர்மலையாகும். அன்றலர்ந்த மலரில் படிந்து மணக்கின்ற அழகிய
வண்டுகள் ரீங்கரிக்கும் பசுமையான சூழலுக்கு இடையிலுள்ளது இத்திருநீர்மலையாகும்.
நாம் அடைந்து உய்வதற்கு ஏற்ற
இடமாக நீர்மலைத் திகழ்கின்றது.
இப்பெருமானிடம் பணிந்தால் நம் தீவினைகள் உடனே நாசமாகிவிடும். சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்ற
ஐந்து விஷயாந்தரங்களிலே செல்லப்பெற்று
மிகவும் வருந்துகிறவர் புத்திகெட்ட அற்ப மனிதர்களாவார்கள். அப்படிப்பட்டவர்களால்
அடைய முடியாதவன் எம்பெருமான். அப்போது மலர்ந்த மலரின் மேல் படிந்துள்ள பரிமளத்தை
ஏற்றுள்ள வண்டுகள் பாடி பரவசித்து உலாவும் இடமானது பெருமானின் உறைவிடமான
நீர்மலையாகும்.
சர்வேஸ்வரன்
நித்யவாசம் செய்யம் திருநீர்மலை பற்றி போரில் யானையை நடத்தும் திறன் படைத்த
திருமங்கை மன்னராகிய கலியன் இயற்றிய இத்தமிழ்ப் பாமாலையை பக்தியுடன் படிப்போருக்கு
அப்போதே தீவினைகள் அகன்றொழியும்.
விரும்பினால் சுவர்க்க வாசமும் கிடைக்கும். மேலும் பெரிய சமுத்திரங்களால்
சூழப்பட்ட இவ்வுலகத்தை சந்திரனையொத்த வெண்கொற்றக்குடைக் கீழ் மன்னர்களாய் ஆட்சி
செய்து திருமாலின் திருவடியைச் சென்றடைவர்.
இடைவிடாமல் பெருமானை நினைத்து
இப்பாசுரங்களைப் பாராயணம் செய்பவர்கள் பெரும் புகழ் பெற்ற ராஜனாக இருப்பார்கள்.
மேலும் மதக் களிற்றை அடக்கியாளும் வல்லவரான திருமங்கையாழ்வார் இயற்றிய இப்பாசுரங்களை
ஓதவல்லவர்கள் எத்தனை பாவங்கள் அடைந்தாலும் அப்போதே அவர்களை விட்டொழியும். அதனால்
மோட்சத்தைப் பெறுவார்கள். மேலும் இவ்வுலகத்தை சிறப்புற நெடுநாள் ஆட்சிபுரிந்து
பரமபதம் அடைவர். எனவே இப்பாசுரங்களைப்
பாராயணம் செய்யும் நிலையில் இருவேறு நன்மைகள் பெறுவர் என்பது இதன் கருத்தாகும்.
அலங்கெழு தடக்கை ஆயன் வாயாம்பற்கு
ஆழியுமால் என்னுள்ளம் என்னும்
புலங்கெழு பொரு ந¦ர்ப்புட்குழிபாடும் போதுமோ ந¦ர்மலைக்கு? என்னும்
குலங்கெழு கொல்லிக் கோமளவல்லி
கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்திருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே. 1115
திருவிடந்தைப் பெருமானே! இப் பெண்ணானவள் ‘கலப்பையைக் கையில் தரித்த கண்ணபிரானின் குழலோசைக் கேட்டு என் உள்ளம் உருகுகின்றது’ என்று கூறுகிறாள். நீர்வளம் பொருந்திய அழகிய திருப்புட்குழி என்னும் தலத்தில் விஜயராகவனாக சேவை சாதிக்கும் பெருமானைக் குறித்துப் பாடுகிறாள். ‘திருநீர்மலைக்குச் செல்வோமா’ என்கிறாள். கொல்லிப் பாவை போன்ற கொடி இடையைக் கொண்ட அழகிய தோள்களையுடையவள், இடைவிடாமல் மழை போன்று கண்ணீரைச் சொரிகின்ற என் மகள் விஷயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தாய் கேட்பது போன்று இப்பாசுரம் அமைந்துள்ளது.
நாட்டில் நடமாடாத அபூர்வமான
வடிவத்தில் தோன்றிய நரசிம்மரை, இரணியனின் உடலைக் கிழித்து அழித்தவரை, இளமை பொருந்திய
தருக்களைக் கொண்ட தோட்டங்கள் சூழ்ந்த திருநீர் மலையில் அருள் புரிபவரை, வாடாத அழகிய
மலர்களையும், திருத்துழாய்
மாலையையும் திருமுடியில் அணிந்தவரை நாள்தோறும் தேடியலைந்து பின் திருநறையூரில்
கண்டு தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பரம பக்தனான பிரகல்லாதனுக்கு
நேர்ந்த தொடர் துன்பங்களைக் கண்டு மனம் கொதித்து அதனை பொறுக்க மாட்டாமல்
நரசிம்மமாய் அவதரித்து இரணியனின் உடலைப் பிளந்து அவனை அழித்தார். பகவான் அபூர்வமான வடிவில் அவதாரமெடுத்தார்.
மேலும் அபூர்வமான செயல்களையும் செய்தவண்ணம் உள்ளார். அசுர சக்திகள் வீழ்ந்து
கொண்டே இருப்பதால்தான் இவ்வுலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றது. இத்தகைய
பகவான் திருநறையூரில் உள்ளார். அவரை தரிசித்து பெறற்கரிய பேறுகளைப் பெறுங்கள்
என்று ஆழ்வார் கூறுகிறார்.
எனது ஐஸ்வர்யமே! திருநீர்
மலையில் பள்ளி கொண்ட முத்துமாலை போன்றவனே! அடியேனுக்குப் பாதுகாப்பு தந்தவனே!
எனக்கு உன் அருளின்றிப் புகலிடம் இல்லை. திருத்தலங்களைப் போற்றி வணங்கும்
அன்பர்களுக்கு கதியாக இருப்பவனே! உன்னைத் தரிசனம் செய்து உள்ளத்தில் பதிக்கும்
பேறு பெற்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
நமக்குப் பாதுகாப்புத் தருவது
பணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மரணம் நம்மைத் தழுவும்போது கோடான
கோடி பணத்தை விட்டுத்தான் நாம் செல்ல வேண்டியுள்ளது. அதுபோல் பட்டம், பதவி, புகழ் இவை அனைத்தும் நம்முடன்
வரப்போவதில்லை. பகவான் ஒருவரே நமக்கு நிரந்தரப் பாதுகாப்பு. இந்த ஞானம் நமக்கு
வந்துவிட்டால் சுயநலம்,
துரோகம், தீய
குணங்கள் இவை அனைத்தும் நம்மை விட்டு அகன்று ஓடிவிடும். எவருக்கும் தீமை செய்ய
வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. நம் உடலே திருக்கோயிலாக மாறிவிடும். அக்கோயிலில்
பகவான் நிரந்தரமாக குடியேறிவிடுவார்.
அருவிகள் நிறைந்த திருவேங்கடம்
அவன் இடம், இல்லை
இல்லை திருநீர்மலை என்றும் பிதற்றுகிறாள். திருமெய்யப் பெருமானைப் பற்றி
விசாரித்து வருகின்றாள். பெருமை பெற்ற
கண்ணபுர சௌரிராஜனைப் பற்றி பேசும்போது உருகிப் போகிறாள். சரீரம் மட்டுமின்றி அவளது உள்ளமும் பலவீனமாயின.
இப்படி ஒரு நிலையும் ஏற்படுமா? என்று புலம்பித்
தவிக்கிறாள் தாயார்.
பகவானிடம் அன்பு தோன்றிவிட்டால்
சரீரம், மனம், புத்தி இவை
எல்லாமே வேறுபட்டதாகிவிடும். ஏனெனில் ஆன்மா என்பது சரீரமோ, மனமோ, புத்தியோ
இல்லை. அது ஆண்டவனின் ஒளிக்கூறு.
ஆண்டவனுடன் ஐக்கியமாகும் போது அழியக்கூடிய சரீரத்தைப் பற்றியோ, நிலையில்லாத
மனதைப் பற்றியோ அது கவலை கொள்வதில்லை. பகவானிடம் அன்பு மேலோங்கும்போது மற்ற
எவையும் சிந்தனையில் வராது என்பது இப்பாசுரக் கருத்தாகும். மகள் பற்றி தாயார் வருந்திப் பாடுகிறாள்.
‘கண்ணனின் மதுரமான குழலோசை என் நெஞ்சைக் கொள்ளைக் கொள்கிறது. திருப்புட்குழியின்
நீர்வளத்தைப் பாடுகிறாள். திருநீர்மலை செல்ல வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறுகிறாள்.
தனது விருப்பம் எதுவும் நிறைவேறாததைக் கண்டு துன்புறுகிறாள். ஜடாயுவுக்கு மோட்சம்
அளித்தை எண்ணிப் பாடுகிறாள். கொல்லிமலை கொடியிடைப் பாவையான என் மகள் படும் துன்பம்
கண்டு மனம் இறங்கவில்லைய’ என்ற கூறுகிறாள்.
மேக மண்டலத்தை எட்டி நிலவினைத்
தொடுமளவு உயர்ந்த திருமாலிருஞ்சோலையில் அருள்புரியும் மணவாளார்! அங்கிருந்து
புறப்பட்டு என் உள்ளத்திலும், கண்களிலும் நிலையாக நின்று நீங்காமல் இருக்கிறார்.
திருநீர்மலைப் பெருமானாய் இருக்குமோ! இன்னாரென்று நான் அறிய முடியவில்லையே! அழகிய இறக்கைகளைக் கொண்ட கருடன் மீதேறி வந்த
இவர் மேக மண்டலத்தை விட உயரமான ஒரு பொன்மலை படிந்த காளமேகம் போல் இருக்கிறார்.
எல்லோரும் வந்து பாருங்கள். அச்சோ! இவர் அழகினை ஒருவரால் சொல்ல இயலுமோ என்று
கூறுகிறார் ஆழ்வார்.
மாலிருஞ்சோலையில் அருள் புரிபவன்
என் கண்களிலும் நிலையாக நின்றுவிட்டார். இவர் அழகை ஒருவராலும் சொல்ல இயலுமோ? இவர் யார்
என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லையே என்று பரக்கால நாயகியானவள் புலம்புகிறாள்.
ஆத்ம ஐக்கியத்திற்கு இப்பெண் தகுதி பெற்றுள்ளாள் என்பது இதன் மூலம் அறிய
முடிகின்றது. பரம்பொருளை புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவனுள் இணையும் நிலையில்
அவனே நம்மிடம் நெருங்கி வருவான் என்பது இதன் பொருளாகும்.
ஈடில்லாத நல்லுறவாய், எனக்கு
உயிரினும் மேலான ஆத்மாவாய்,
ஒப்பற்ற பொருளாய்,
இனிமேல் வரப்போகும் பரமபதமாய் இருக்கும் கோசலை மைந்தனை நேற்று வணங்கியது
திருநீர்மலையில். இன்று கருக்கொண்ட
பயிர்களால் சூழப்பட்ட திருக்கண்ணமங்கையில் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
பெண்கள் திருமணம் முடித்து
புக்ககம் செல்லும் தருவாயில் தன் பிறந்த இடத்தில் நெடுநாள் பழகிய தோழிகளின்
ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று சொல்லிக் கொண்டு செல்வது என்பது நமது மரபு. அது போன்று ஆழ்வாரும் தன் புக்ககமான பரமபத பயணத்திற்கு
செல்வதற்கு முன் தனது ஈடுபாட்டிற்குகந்த திருப்பதிகளான திருநீர்மலை சென்று
நீர்வண்ணப் பெருமாள் முன்னிலையிலும், திருக்கண்ணமங்கை சென்று பத்தராவிப் பெருமான்
முன்னிலையிலும் தான் பரமபதம் செல்வதாகப் பிரிவாற்றாமையுடன் கண்ணீர் மல்கத்
தெரிவித்துவிட்டு செல்கின்றார். ஆழ்வாரின் இத்தகைய பண்பு இப்பாசுரவழி அறிந்து
நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது எனலாம்.
எனது பெருமானின் திருமேனி கருத்த
மேகத்தின் நிறமாகும். திருக்கண்களும், திருவாயும், திருக்கைகளும், திருப்பாதங்களும் தாமரை மலர் போன்றவை. அவன் பூமிபிராட்டியின் பக்தன். தாமரை மலரில்
பிறந்த திருமகளிடம் மயக்கம் கொண்டவன் என்றெல்லாம் மகள் பிதற்றுகிறாள் என்று தாயார்
புலம்புகிறாள். நான் பாவி அதனால்தான் என்னை விட்டு போகாதே என்று கூறியும்
என்னிடமிருந்து விலகினாள். பகவான் பள்ளிகொண்ட திருவரங்கம் போவேன் என்றும்
பரந்தாமன் உறையும் திருநீர்மலைக்கு போவேன் என்றும் அடம் பிடிக்கிறாள். அடக்கம்
விட்டவர்கள் இப்படித்தான் செய்வார்கள்.
தன் மகள் பகவான் பேரில் கொண்ட
பெருமைகளில் மூழ்கி விட்டதால் அடக்கம் விட்டவர்கள் என்று தாய் புலம்புகிறாள்.
அடக்கம் என்று உலகியல் வாழ்வில் மூழ்குவது அன்று. காம இச்சைகளில் உழல்வதன்று.
வாழ்நாளை வீணடித்து தேவையற்ற காரியங்களில் இருப்பது அடக்கமன்று. இவைகள் அனைத்தும்
மனிதனின் அறியாமைகள். தனது மகள் பகவான் மீது கொண்ட பக்தியை புரிந்து கொள்ள
இயாலதவளாக தாய் இருக்கிறாள் என்றே கருத வேண்டும்.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
நீலமணி போல் அழகுடன்
விளங்குபவனும், வள்ளலானதால்
நீண்ட திருக்கைகளை உடையவனுமான எம்பெருமான் பள்ளிகொண்ட இடம் திருவரங்கம்.
குடியிருக்கும் தலம் திருக்கோஷ்டியூர்.
மேலும் பல நாட்களாக நித்திய வாசம்
செய்யும் இடம் திருமலை. பலநாள் பயின்றது அழகு மிக்க சோலைகள் சூழ்ந்த
திருநீர்மலையாகும். பாகவதர்கள் இதர போகங்களில் லாப
நஷ்டங்களில் மனம் செலுத்துகிறார்கள்.
இவ்வுலகச் செல்வங்களைப் பெறுவதாலும், இழப்பதாலும் பல துன்பங்களை அடைந்து வருகிறபடியால்
எம்பெருமான் பல திவ்ய தேசங்களில் கோயில் கொண்டு அருள்புரிகிறார். இத்தலங்களில்
பெருமான் பிரசாதமாகவும்,
தீர்த்தமாகவும் தன்னை ஆட்படுத்திக் கொண்டுள்ளார். தன்னைக் கொள்வாருண்டோ
என்று நெடுங்காலம் படுத்துக் காத்துக் கிடப்பது திருவரங்கத்தில், விபவம் போல்
வாழ்ந்து மறைந்தது திருக்கோட்டியூரில், சேதனனை வசீகரிக்க நெடுங்காலமாய் தன் அழகை காட்டுது
திருமலையில், அதனிலும்
திருப்தி கொள்ளாமல் தனது நிலையழகையும், இடையழகையும், இருப்பழகையும், நடையழகையும் ஒருமித்தே காட்டுவது திருநீர்மலையிலாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக