புதன், 19 நவம்பர், 2025

79. திருவரமங்கை - வானமாமலை

 


நம்மாழ்வார்                                                                                                                 திருவாய்மொழி 

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே .    3407 

      அனந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டுள்ள பெருமானே! சேற்று நிலங்களில் செந்நெற் பயிர்களின் இடையே தாமரை மலர்கள் மலரும் அழகிய தலமான சிரீவரமங்கை என்னும் வானமாமலையில் வீற்றிருக்கும் பகவானே! அடியேன் பெரிய விரதமெல்லாம் கடைபிடிக்கவில்லை. நுணுக்கமான அறிவும் எனக்கில்லை. ஆனாலும் உன்னைவிட்டு நான் ஒரு காரியமும் செய்யும் ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறேன். சர்வரக்ஷகன் என்ற பெயர் கொண்ட உன்னால் காப்பாற்றப்பட வேண்டிய நான் உனக்கு ஒருபொழுதும் வேண்டாதவன் அல்லன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      கர்மயோகம், பக்தியோகம் மற்றும் ஞானயோகம் போன்றவற்றை நான் கற்றதுமில்லை. அதனைப் பற்றி நான் ஓரளவும் தெரிந்து கொள்ள இயலாதவனாகி உள்ளேன். பெருமானே! உன்னைத் தவிர நான் ஒருவரையும் சார்ந்திருக்கவில்லை. உன்னையே நம்பியுள்ள என்னைக் காக்க மறவாதே. மேலும் என்னை அன்னியனாக நினைத்திடாதே. நான் பரமபதத்தில் உள்ள நித்யசூரிகள் இல்லை. உன்னை தரிசிக்கும் ஆவலில் உன்னைத் தேடி அலைந்தேன். ஆனால் நீ எனக்கு இன்னும் தென்படுவதாக இல்லையே என்று வருந்திக் கேட்கிறார் ஆழ்வார்.     

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில்                                                                                                                                                                           வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கலநகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே.   3408 

   இலங்கையை நிர்மூலம் செய்த பெருமானே! நிலவினை எட்டும் அளவிற்கு மணிமாடங்களைக் கொண்ட சிரீவரமங்கை நகரில் உறையும் சங்கு சக்கரம் தரித்த தோத்தாத்ரி நாதனே! பூஜை, விரதம், தவம் செய்து பரமபதத்தை அடையும் தகுதியும் எனக்கில்லை. சம்சாரிகள் போன்று பொருளீட்டி சம்பாதித்து போகவாழ்க்கை அனுபவிக்கும் பெரிய ஆற்றலும் எனக்கிலை. உன்னை தரிசிக்கும் ஆவலில் மூழ்கி நான் நித்தமும் பாடிக் கொண்டிருப்பதால் எவ்விடத்தில் பொருந்தி நிற்கும் தகுதி இல்லாதவனானேன். அடியேனுக்கு அருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
      பரமபதத்திலுள்ள நித்யசூரிகளில் ஒருவனாக நான் இல்லை. அது போன்று நிலவுலகிலும் தம் தலையாலே பணிந்து சேவித்து சேவை பண்ணிக் கிடக்கின்ற நிலத்திலுள்ளோர் வகுப்பிலும் நான் பிறக்கவில்லை. இதுவரை எந்த கைங்கர்யமும் செய்யவில்லை. இனியும் உனக்கு சேவை புரிவதற்கான தகுதிகள் என்னிடம் உள்ளதா என்று தெரியவில்லை. உன் வடிவழகைக் காண வேண்டும் என்ற வேட்கையால் உடல் தளர்ந்து கிடக்கின்றேன். உன்னை ஒரு பொருட்டாக மதியாத சம்சாரிகளிடமிருந்தும் நான் விலகி உள்ளேன் என்னைக் காப்பாயாக என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

கருளப் புள் கொடி சக்கரப் படை வான நாட என் கார்முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கலநகர்க்கு
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே.     3409 

      கருடப் பறவை பதித்த கொடியையும், சக்கரப் படையையும் கொண்டவனே!  பரமபதத்தை இருப்பிடமாகக் கொண்ட நாதா! என் கார்முகில் நிறத்தானே! எதற்கும் பயன்படாத என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி அடியவனாக்கிக் கொண்டாய். நான்கு வேதங்களிலும் சிறந்த ஞானத்தையுடைய வல்லவர்களான பலர் கூடி வாழும் சிரீவரமங்கை நகரத்திற்கு அருள அங்கே குடியிருப்பவனே! உனக்கு ஒரு பிரதி உபகாரம் செய்ய அறியாமல் இருக்கிறேனே என்று வருந்திக் கேட்கிறார் ஆழ்வார்.
      மேல் பாடலில் ஆழ்வார் அருள் வேண்ட பெருமான் நான் உனக்கு அருள் தருகிறேன்.  அதில் எந்தளவும் சந்தேகம் இல்லை. ஆயினும் உம்மிடத்தில் ஏதேனும் ஒரு கைம்முதல் இருக்க வேணுமே! அவ்விதம் ஏதேனம் உண்டோ என்று வினவ, அதற்கு ஆழ்வார், பிரானே இனிமேல் எனக்கு அருள்வது இருக்கட்டும், இதற்கு முன் எனக்கு அருளியது என்னவெனில் எதற்கும் உதவாத வஸ்துவாக இருந்த என்னை மேம்படச் செய்தருளினாயே! அந்த அருளில் ஒரு கைம்முதல் இருந்ததாக அறிகிறேன் என்றார் ஆழ்வார்.     

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கலநகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்தக் கூவுவனே?    3410 

      பகைவர்களாக வந்த கௌரவர்கள் நூறு பேரின் ஆற்றலையும் பாண்டவர்களுக்காக அன்று மாயங்கள் பல செய்து போர் புரிந்து துரியோதனன் முதலியோர்களை அழித்த என் தந்தையே! பூமியைப் பெயர்த்தெடுத்து வந்த வராக சுவாமியே! தெளிவுமிக்க ஞானமுடைய வேதங்களில் கூறியுள்ள விரதங்களை இடைவிடாமல் செய்த வேதியர்கள் வாழும் சிரீவரமங்கை நகரில் வீற்றிருப்பவனே! உன்னை அடைய என்ன செய்யப் போகிறேன்? என்று கேட்கிறார் ஆழ்வார்.
      பஞ்ச பாண்டவர்களுக்கு பக்கலாக இருந்து அவர்களைக் காத்த பெருமானே, என்னைக் காக்கத் தயங்குவதேன் என்று கேட்கிறார். ஆச்ரித விரோதிகளை தன் விரோதியாக நினைப்பதால் அவர் மீது கொண்ட குறை அகன்றுவிடுகிறது. வஞ்சக வழியில் வென்றான் என்ற பழிச்சொல்லுக்கு வஞ்சகர்களை வஞ்சகத்தனத்தைப் பிரயோகித்துதான் வெல்ல வேண்டும் என்று பகவான் கூறியுள்ளார். வைதீக சமாராதனங்களை இடைவிடாது சொல்லும் வேதியர்கள் நிறைந்த திருசிரீவர மங்கைத் தலத்தை நாடுவோம் என்கிறார் ஆழ்வார். 

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீவரமங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே.     3411 

      கரிய மேனியையுடைய என் பெருமானே! எனக்குத் தகுதி என்பது இல்லாவிட்டாலும் உன்னை அடைய கூவுகிறேன். பகைவர் கூட்டங்களில் தனி ஒருவனாகச் சென்று மாயங்கள் செய்வதில் மிகவும் வல்லவனாயிற்றே! யாகங்கள் நடத்தியவர்களும், பூலோக தேவர்களுமாகிய வேதியர்கள் நிரந்தரமாகக் குடியிருக்கும் சிரீவரமங்கல நகரில் எல்லோரும் கை கூப்பித் தொழும்படி எழுந்தருளியிருப்பதை அடியேன் கண்குளிரக் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.
      உன்னை யெங்கெய்தக் கூவுவனே’ என்ற ஆழ்வார் பாட்டைக் கேட்டுப் பெருமான், ஆழ்வீர், ஒன்றும் பெறாதது போல் கூறுகிறீரே என்று கேட்க, நீர் தந்ததில் நான் திருப்தி கொள்ளவில்லை. என்னைப் பெற நீர் முயன்றவாறு உம்மைப்பெற நான் முயற்சிக்கக் கூடாதா? என்கிறார். ஒரு சொத்து தவறும் பட்சத்தில் அதை மீட்க கொண்டவன் முயற்சித்தல் வேண்டும். அதை விடுத்து சொத்தானது கொண்டவனை மீட்க முயற்சிக்காது. அது போன்று உன்னுடையவனான எனக்கு ஞானத்தை வழங்கி அதன் பயனான பரமபதத்தை வழங்காமல் இருப்பது தகுமோ? இதிலிருந்து நீர் என்னை மீட்க முயற்சித்தல் வேண்டும். அடியேனும் அதனையே விரும்புகிறேன் என்கிறார். 

ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச்சுடரே
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே.      3412 

      வராக மூர்த்தியாகி பூமியைப் பெயர்த்தெடுத்து வந்த என் தந்தையே!  நீல மாணிக்கம் போன்ற ஒளியுடையவனே!  தேன் நிறைந்த மாந்தோப்பு சூழ்ந்த குளிர்ச்சியான சிரீவரமங்கலத்தில் வாழ்பவர்கள் கைக்கூப்பித் தொழும்படி உறைந்திருக்கும் வானமாமலைப் பெருமானே! அடியேன் வணங்கும்படி வந்தருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.     
      நான் ஆசைபட்டவாறு உனக்கு அடிமை செய்ய நீ இங்கு வந்தருள வேண்டும். பிரளயத்தில் வராகமாக வந்து பூமியை மீட்டெடுத்தது போன்று பிறவிக் கடலில் துளங்கியிருந்து அலைந்து கொண்டுள்ள என்னை தாழ வந்து உயரத் தூக்க வேண்டாமோ? நீ வானநாயகனாய் இருக்கும்போது என்னை ஆட்கொள்வது பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும். தேன்மிக்க மாம்பொழில் சூழ்ந்த சிரீவரமங்கல நகரிலுள்ளவர்கள் ஸ்வரூபமானவர்கள் கைங்கர்யத்தைப் பண்ணுமாறு வானமாமலையாக எழுந்தருளிய எம்பெருமானே, நானும் தங்களுக்கு அடிமை செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே  உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கலநகர்
அந்தம் இல் புகழாய் அடியேனை அகற்றேலே.       3413 

      வைகுண்டத்திலிருந்து வந்தருளி என் நெஞ்சில் குடிகொண்டவனே! தேவர்களின் கொழுந்தனானவனே! இவ்வுலகங்களுக்கு ஒப்பற்ற பழமையான தாய் தந்தையே!  ஏழுலகங்களையும் முழுமையாக உடையவனே! பயன் கருதாமல் பணி செய்யும் வேதியர்களின் வேத முழக்கமும், யாகமும் தொடர்ந்து நடக்கும் சிரீவரமங்கல நகரில் வாழும் நிகரில்லாத புகழ் உடையவனே!  அடியேனை ஒதுக்கிவிடாதே என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஆழ்வாருடைய கோரிக்கையை ஏற்று பெருமான் அர்ச்சாவதாரஸாமதியை குலைத்துக் கொண்டு சிரீவரமங்கலத்திலும், ஆழ்வார் திருநகரியிலும், திருப்புளிங்குடியிலும் காட்சிதரும் நிலை ஏற்பட்டது. பரமபதம் போன்ற இடத்தையெல்லாம் விட்டு விட்டு எனது இதயக்கமலத்தில் வந்து குடிகொள்ளும் நிலை ஏற்பட்டது. நமது மாதாபிதாக்கள் ஒரு காலத்தில் நம்மை விட்டு பிரிந்து விடுவார்கள். ஆனால் எம்பெருமானோ அவர்களையும் விட மேல் சென்று எந்நாளும் என்னைவிட்டுப் பிரியாமல் இருப்பான் என்ற கருத்து நிலவுகிறது. செவ்விய தொழிலானது பெருமானுக்கு கைங்கர்யம் புரிவதாகும். அவ்வாறு தொண்டு செய்யும் வைஷ்ணவர்கள் நிறைந்துள்ள சிரீவரமங்கல நகரில் எல்லையில்லாப் புகழோடு சேவை சாதிக்கிறான் என்பதாக அமைகிறது.       

அகற்ற நீ வைத்த மாய வல்லை ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகல் கதிர் மணி மாட நீடு சிரீவரமங்கை வாணனே என்றும்
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே    3414 

      கொக்கு வடிவில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவனே! எந்நாளும் புகழ்வதற்கு அருமையான என் தந்தையே! ஆதவனைப் போன்ற ஒளி வீசும் உயர்ந்த மணிகள் பதித்த மாட மாளிகைகள் நிறைந்த சிரீவரமங்கையில் வாழ்பவனே! பக்தி இல்லாதவர்களை உன்னிடமிருந்து அகற்றி வைக்க மாயை நிறைந்த ஐம்புலன்களை உருவாக்கினாய். அதையும் நான் நன்கறிவேன். என்னையும் நீ அகற்றி சம்சாரியாக்கி, மீள்வதற்கு அரிதான உலையில் தள்ளிவிடுவாயோ என்று அஞ்சுகிறேன் என்கிறார் ஆழ்வார்.
      பெருமானே! எம்மை உம்மிடமிருந்து அகற்றிவிடாதீர் என்று வேண்ட அதற்கு பெருமான் உம்மை அகற்றுவதற்கு என்ன காரணமுள்ளது என்று கேட்க, ஐம்புலன்கள் உன்னைச் சேரவொட்டாமல் நான் சம்சாரத்தில் உழன்று வருவதிலிருந்தே எம்மை நீர் அகற்றினீர் என்று தெரிகிறது. நீ அருளிய ஞானத்தின் மூலமாக இவையெல்லாம் உன்னை அடைவதைத் தடுக்கும் ஐந்து இந்திரியங்களையும், அவற்றிற்கு உணவான ஐந்து விஷயங்களையும் பிணைத்து வைத்து இவற்றின் நடுவே என்னை இருத்தி வைத்தாயே. என்னை அதிலிருந்து விடுவித்து உன்னிடம் சேர்த்துக் கொள்ள மாட்டாயா? என்றும் அடையக்கூடிய உன்னிடம் நான் வந்து சேரவேண்டும் என்கிறார். 

புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கை
உள் இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே.      3415 

      கொக்காக உருமாறி வந்த அசுரனின் வாயைப் பிளந்து, மருத மரங்களிடையே போனவனே! கரிய மாணிக்க ஜோதியே! தெளிந்த ஞானமுடைய, நான்கு வேதங்களையும் கற்றோர் நிறைந்திருக்கும் குளிர்ந்த சிரீவரமங்கையில் குடிகொண்டிருக்கும் என் தந்தையே! அடியேன் உய்யுமாறு அருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
      ஆழ்வாரே! உமக்கு நிறைய விரோதிகள் இருக்கிறார்களே என்ன செய்வீர் என்று வினவ, பெருமானே! எல்லா விரோதிகளையும் தனியாக அழித்தவன் என்ற பெருமை கொண்டவர். ஆனால் எமக்கோ அகங்காரம் மமகாரம் என்ற இரட்டை விரோதிகள் உள்ளனர். மேலும் அது தவிர காமம், கோபம், லோபம், மதம் போன்று பல விரோதிகள் உள்ளனர். நான்கு மறைகளையும் தெள்ளியவாறு உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் மலிந்துள்ள சிரீவரமங்கையில் சேவை சாதிக்கும் பெருமானே நான் உய்யுமாறு செய்வாயாக என்று வேண்டுகிறார் ஆழ்வார். 

ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய் உனக்கு ஓர் கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே!     3416 

      சேற்றையுடைய வயலில் பெரும்பகுதி சம்பாப் பயிர்களும், கரும்பும் மிகுந்திருக்கும் குளிர்ச்சியான சிரீவரமங்கையில் அருள் புரியும் தெய்வ நாயகனே! நறுமணம் வீசும் குளிர்ந்த திருத்துழாய் அணிந்த திருமுடியைக் கொண்டவனே! எனக்கு உபாயமாக உன் பாதங்களைச் சரண் அடைவதையே காட்டியருளினாய். இதற்காக உனக்கு கைம்மாறு செய்ய என்னிடம் ஒன்றுமில்லையே. என் உயிரும் உனக்கு சொந்தமானதன்றோ என்று கூறுகிறார் ஆழ்வார்.
      எனக்கு உபாயம் தருமிடத்தில் உன் திருவடிகளையே எனக்குக் கொடுத்தாய். எனக்கு உபாயமாகவும், உபேயமாகவும் அருளினாய் என்று பிள்ளான் தமது வியாக்யானத்தில் கூறுகிறார். மேலும் சரண் என்ற சொல் சரணத்தைக் குறிக்கின்றது. எனவே உன் சரணத்தையே எனக்கு உபயாமாகக் கொடுத்தாய் என்று பராசர பட்டர் தெரிவிக்கின்றார். திருவழுந்தூர் அரையர் என்பவர் உன் திருவடிகளின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்னைக் கைவிடக்கூடாது என்று ஆழ்வார் குறிப்பிடுவதாகக் கூறுகிறார். மேலும் நீயே வந்து எனக்கு ‘மயர்வற மதிநலம் அருளி’ உனது திருவடிகளையே எனக்கு உபாயமாக கொடுத்துள்ளாயே என்று மனமுருகி வேண்டுகிறார். 

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணைமிசை
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா அமுதே.     3417 

      தெய்வநாயகன், ஸ்ரீமந் நாராயணன், திருவிக்ரமினின் திருப்பாதங்களின் மேல், மலர் வனங்கள் சூழ்ந்த திருக்குருகூர் சடகோபன் இயற்றிய ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களையும் தினமும் பக்தியுடன் பாடக்கூடியவர்கள் தேவர்களுக்குத் தெவிட்டாத அமுதம் போன்றவர் ஆவார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      சிரீவரமங்கையில் உள்ள எம்பெருமானின் மூன்று திருநாமங்களையும், அதில் ஆழ்வார் பாடிய பத்துப் பாசுரங்களையும் நாள்தோறும் பக்தியுடன் ஓதுபவர்களுக்கு பரமபதத்திலுள்ள நித்ய சூரிகள் இவர்களை ஆராஅமுதமாகக் கொண்டு பெறாப்பேறாக வரவேற்பார்கள்.  என்னிடம் வேறு உபாயமில்லை. எம்பெருமானுடைய உபாயத்தை நான் அனுக்கிரகமாகச் சாற்றுகின்றேன். இதுதான் என்னுடைய நிலை என்று ஆழ்வார் கூறுவதாகக் மணவாள மாமுனிகள் கூறுகிறார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...