திங்கள், 24 நவம்பர், 2025

68. திருமூழிக்களம்

 

திருமங்கையாழ்வார்                                                                                     பெரிய திருமொழி 

பனி ஏய் பரங் குன்றின் பவளத் திரளே
முனியே திருமூழிக்களத்து விளக்கே
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய
கனியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.     1553 

      பனி நிறைந்த இமயத்தில் திருப்பிரிதியில் எழுந்தருளியிருக்கும் பவழங்கள் திரண்டாற் போன்ற அழகியவனே! தொண்டர்களுடைய நன்மையை என்றும் நினைப்பவனே! திருமூழிக்களம் என்னும் திவ்ய தேசத்தில் சேவை சாதிக்கும் தீபமே! இனிமையானவனே! தொண்டர்களாகிய நாங்கள் அனுபவிக்கும்படி இனிய அமுதமானவனே! கனி போன்றவனே! உன்னை வணங்கியதால் பிறவிப் பேற்றினை அடைந்தேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
      இமயத்திலுள்ள திருப்பிரிதியில் எல்லோரும் விரும்பும் வகையில் சேவை சாதிப்பவன், திருமூழிக்களத்தில் ஸ்வரூபரூப குணங்களைக் கொண்டவனே! என்று போற்றிப் பாடுகிறார். நமது சரீரம் அழியக்கூடியது. அழியும் இந்த சரீரத்தில் அழியாத தீபம் நம்முள்ளில் இருக்கிறது. அந்த தீப தரிசனத்தைக் கண்டு விட்டால் பிணிகள் இல்லை, பிறவிகள் இல்லை, துன்பங்கள் இல்லை. ஆத்ம தீபமாக இருப்பவர் நம் பெருமான். எனவே அத்தகைய பெருமானை தரிசிக்கும் உபாயத்தை நாம் நாட வேண்டும். அதுவே நாம் பிறவி பெற்றதற்கான பயன் என்பதை நாம் அறிய வேண்டும்.       

திருமங்கையாழ்வார்                                                                                  திருநெடுந்தாண்டகம் 

பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
     புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால்
     என் அறிவன் ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய்
     குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி!
     திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!    2061 

      உலகம் அனைத்தும் விரும்பும் பொன் போன்றவனே! இகழப்படும் தொண்டனான அடியேனை ஆட்கொண்டவனே! உலகம் போற்றும்படி திருமாலிருஞ்சோலையில் அருள்பவனே!  வடக்கிலிருக்கும் நெடிய வேங்கடமலை வாசனே! மேற்கே திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவனே!  கிழக்கில் திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டிருப்பவனே! தேவர்களுக்கு என்றும் காட்சி தரும்படி முன்நிற்பவனே!  உன் அவதாரங்களுக்குப் பின்னர் பிறந்தவர்கள் வணங்கும்படியான ஜோதியான திருமூழிக்களத்தில் குடிகொண்டிருப்பவனே! பிரளய காலத்தில் ஆலிலையில் வாசம் செய்பவனே!  ஏழுலகங்களையும் காக்கும் புகழ் உடையவனே! இவ்விதம் உன்னைப் போற்றுவதைத் தவிர வேறொன்றும் அறிந்திராத ஒரு பரிதாபத்திற்குரியவனாக நான் இருக்கிறேன். நீ என்னை ஆள்வாயாக. எங்கு சென்றாய்?  பல படிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதொழிய பிறிதொன்றும் அறியேன் என்கிறார் ஆழ்வார். 

நம்மாழ்வார்                                                                                                                  திருவாய்மொழி 

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய்! திருமூழிக்களத்து உறையும்
கொங்கு ஆர் பூந் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே   3623 

      சிவந்த கால்களையுடைய நாரையே! எங்களது கடற்கரைச் சோலையிலேயுள்ள உப்பங்கழியிலே இரை தேடி இனிதாக அமர்ந்திருக்கும் நீ, எனக்காகத் திருமூழிக்களம் சென்று அங்கு உறையும், தேன் நிறைந்த அழகிய திருத்துழாயைத் திருமுடியிலே தரித்துள்ள என் குடக்கூத்தாடிய கண்ணனிடம், என் தூதாய் சென்று என் நிலையை அவனுக்குத் தெரிவிப்பாயாக! இந்த உதவியை நீ செய்தால் உன் கால்களை என் தலைமேல் வைத்துப் போற்றுவேன்! அதுவும் உன் உறவினரோடு என்கிறார் தலைவி.
      வெண்நாரையே! நாமிருவரும் தோழிகளாகிவிட்ட நிலையில், உம் பெடையுடன் என்றும் சேர்ந்தே இருக்கும் நீ, என்னையும் பெருமானுடன் சேர்க்க வேண்டாமா? சேர்ந்திருப்பவருக்கு பிரிந்து துயறுற்றிருப்பவரைப் பார்த்து அவர்களை சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உணவு உண்டு நின் குடும்பத்துடன் சேர்ந்திருக்கும் உனது சிவந்த திருவடியைக் கண்டால் பெருமானின் திருவடியே என் நினைவுக்கு வருகிறது. பரிமள வாசத்துடன் திருத்துழாயை தன் தலையில் சூடிக்கொண்டுள்ள திருமூழிக்களத்து எம்குடக்கூத்தரிடம் போய்ச் சொல்வாயாக. உம் சிவந்த கால்களை என் தலையால் தரித்துக் கேட்கிறேன் என்கிறாள்.    

 நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகு இனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு?
தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே.     3624 

      காதல் பறவைகளான குருகுக் கூட்டங்களே! உங்கள் சேவலுடன் பிரியாமல் ஒன்றுபட்டிருக்கிறீர்கள். அழகிய மூழிக்களத்தில் உறையும் எம் பெருமானாலேயே நான் கைவிடப்பட்டால் என்ன செய்ய முடியும்? உறவினர்களின் பழிப்பால் இழிவடைந்துள்ளேன். தன் பரிவாரங்களோடு மூழிக்களத்தில் குடியிருப்பவருக்கு நான் தகுதியற்றவனாய் போனேனா? என்னை ஏன் கைவிட்டுச் சென்றார் என்று கேளுங்கள் என்கிறாள்.
      இத்தலத்துப் பெருமான் தன் அடியார்களுக்குச் சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார். இதில் ஆழ்வாரை அறவே மறந்து போனார். எனவே  நாரையே, பெருமானிடம் அவரது அழகினை நினைவு கூர்ந்தால் அவர் நின் பேச்சினை செவிமடுப்பாரோ என்று ஆர்வமாகக் கூறுகிறாள். மேலும் என் பந்தங்கள் என்னை பழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பெண்ணிற்கு நாணம் என்பதே இல்லை, குடும்ப மானத்தை வாங்கிடுவாள் என்று பழிக்கிறார்கள். இந்நிலையில் பெருமானும் என்னை நினையாமல் ஒதுக்கி விடுகிறாரே. இது தகுமோ? முறையோ?  அடியார்கள் கூட்டத்தில் என்னையும் ஒருவராக நினைத்து இருக்கக்கூடாதா? என்று மிகவும் வருந்திப் பாடுகிறார். 

தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும்
கொக்கு இனங்காள்! குருகு இனங்காள்! குளிர்மூழிக்களத்து உறையும்
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக் கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே.      3625 

      அகலமான நீர் நிலைகளில் உணவு தேடும் கொக்குக் கூட்டங்களே! குருகினங்களே! குளிர்ச்சியான திருமூழிக்களத்திலே குடியிருக்கும் கண்ணனின் செந்தாமரை மலர் போன்ற இருகண்களும், திருக்கரங்களும், திருவடிகளும், கொவ்வைக்கனி போல் சிவந்த வாயழகும், தாமரை இலை போன்ற திருமேனி நிறமும் அவனிடம் என் நெஞ்சை இழக்கச் செய்துவிட்டன. இப்படிப்பட்ட எங்களுக்கு அவனை அடையத் தகுதியில்லையா என்று கேளுங்கள் என்கிறாள் நாயகி.
      இப்பாடலில் ஆழ்வாருக்காக தூது போக கொக்கும், குருகும் சேர்ந்து வந்து விட்டன. நாயகியானவள் சற்றே தீர்மானித்தவளாக, அவரிடம் பேசும்போது பெருமானின் சௌந்தர்யத்தினை நினைவுபடுத்தக் கூறுகிறாள்.  அலர்ந்த தாமரை போன்று கண், கை, கால், செங்கனி வாய் ஆகியவை சிவந்தும், மேனி பச்சைமா மலைபோல் தாமரை இலையாகக் காட்சி தருகிறது. அவர் என்னைக் காண வந்தாலும் வருவார். அவ்விதமும் அவர் மறந்தது போலிருந்தால் இத்தகைய பச்சையும் சிவந்த வர்ணங்களும் தாங்கள் ஆழ்வாரிடமிருந்து பெற்றீர். இது தங்களுக்குண்டானதல்ல என்பதை அவரிடம் மெலிதாக கூறுங்கால் என்னைத் தேடி வந்துவிடுவார் என்று நாரையிடம் மெல்லிய குரலில் கூறுகிறாள். 

திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள்
திருமேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே?      3626 

      அழகிய மேகங்களே! பாவியான அடியேனுக்காகச் செழுமையான திருமூழிக்களம் என்னும் நகரத்துக்குத் தூதாகச் செல்ல வேண்டும். அழகிய திருமேனி கொண்ட ஸ்ரீகிருஷ்ணனின் திருவடிகளில் வணங்கி, உங்கள் திருமேனியழகினை அவளுக்குச் சேவை சாதிக்க வேண்டும் என்று கூறுங்கள்.  அவ்விதமாகக் கூறுவதால் கண்ணனைப் போல் ஒளியுடைய மேகங்களாகிய உங்கள் ஒளியை உடம்பிலிருந்து அகற்றி, உங்களைத் தெளிந்த வானத்திலிருந்து நீக்கி உங்களைத் தண்டித்து விடுவானென்று எண்ணுகிறீர்களா? என்று கேட்கிறாள்.
      மேகங்களே! பெருமானிடம் பேசுங்கால் அழகினைப் பற்றி பேசும் போது, தேவரீரின் இவ்வழகு, தரித்திருக்கும் ஆயுதங்கள், ஆபரணங்கள், திருமேனி இவையனைத்தும் உமக்கானதல்ல. அனைத்தும் பக்தர்களது என்று சொல்லிவந்த நீர் இவை உம்முடையது என்று கூறுவது எவ்விதம் நியாயம் என்று பெருமானைக் கேட்குமாறு கூறுகிறாள். பக்தர்கள் அனைவருக்கும் சேவையாற்றி விட்டு ஆழ்வாருக்கு இச்சேவை கிடைக்கவில்லையே என்று வருந்துகிறாள். பரமபதம் போன்று அமைந்துள்ள திருமூழிக்களத்தில் அமைந்துள்ள பிரானே! நின் திருமேனியை அவளுக்குத் தந்தருள்வாயாக என்று முகில்கள் கூறுகிறது. அவள் பேரில் காதல் இல்லையெனில் கருணை கூட இல்லாமல் போய்விட்டதா என்று வெண்மேகங்க்ள் பெருமானிடம் கேட்கிறது. 

 தெளி விசும்பு கடிது ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள்! திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்து உறையும்
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே     3627 

      தீயிலே சுற்றி வளைப்பது போலத் தெளிவான ஆகாயத்திலே மின்னல் விரைந்து ஓடி ஒளிவீசச் செய்யும் மேகங்களே! திருமூழிக்களத்தில் உறையும் அழகிய ஜோதி இந்தப் பாவியின் நெஞ்சிலும் பரமபதம் போல் வீற்றிருந்து அருளுகின்றான். தேன் துளிர்க்கும் மலர் சூடிய சூழலையுடைய அப்பெருமானிடம் எனக்காக தூது செல்ல வேண்டும். என் நிலையை அவரிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
      பகவான் பரமபத்தில் கொண்ட அன்பு போல் என்னிடமும் வைத்துள்ளார். இப்பாவியின் நெஞ்சிலும் வீற்றிருந்து அருள்கிறான். ஆனால் அவரது திருமேனியை தரிசிக்கவோ, தொடவோ முடிவதில்லையே. மனத்திலே உறைபவனை வெளியே பார்த்து அணைக்க இயலவில்லையே.  பெருமான் திருக்குழலில் சூடியுள்ள மலர்மாலையில் தேன் சொட்டுகிறது. மலருக்கும் தன் மார்பினில் இடம் தந்துள்ளார். மலருக்கு இருக்கும் பாக்கியம் கூட எனக்கில்லாமல் போனதே. எனவே நான் படும் துன்பத்தினை அவரிடம் கூறுவாயாக என்று மேகங்களிடம் தூது விடுகிறார் ஆழ்வார். 

தூது உரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள்
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும்
மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூது உரைத்தல் செப்புதிரேல்! சுடர் வளையும் கலையுமே    3628 

      இனிய சொற்களைப் பேசும் வண்டினங்களே! மலர்களில் அமர்ந்து தேனருந்தக்கூடிய மலர்வனங்கள் நிறைந்த திருமூழிக்களத்தில் உறையும் திருமகளைத் தன் மார்பில் வைத்திருக்கும் அப்பனிடம் கூவிக்கூவி என் வாய் உலர்ந்து போனதைச் சொல்லுங்கள். விரக வேதனையில் என் தேகம் மெலிந்து போக என் ஒளி வீசும் வளையல்களும் மேகலையும் கழன்று விழுவதைத் தூதாகச் சென்று எடுத்துரைப்பீர்களாக! என்று கூறுகிறார் ஆழ்வார்.
      வண்டினங்களே! என் பொருட்டு பெருமானிடம் தூதுரைக்க வேண்டுகிறேன். மலர்களிலிருந்து வரும் தேனைக் குடித்துக் கொண்டு வரும் திருமூழிக்களத்து வண்டினங்களே! பெரிய பிராட்டியை தன் மார்பினிலே வைத்துள்ளார். எனவே நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு பெருமான் சற்றே கோபித்தாலும் பிராட்டி உள்ளாள் கவலை கொள்ளாதே என்று கூறுகிறார். பெருமானிடம் நீங்கள் என் பொருட்டு சொல்லுவதெல்லாம் எனக்கு சுடர் வளையாகுமே. எனக்கென்று வேறு ஆபரணம் தேவையில்லை. நீ சொல்லும் வார்த்தைகளே எனக்கு ஆபரணங்கள் என்று கூறுகிறார். 

சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒருநாள் ஓர் தூய் மாற்றம்
படர் பொழில்வாய்க் குருகு இனங்காள்! எனக்கு ஒன்று பணியீரே.        3629 

      படர்ந்த தோட்டங்களிலே உள்ள குருகுக் கூட்டங்களே! படரும் புகழைக் கொண்ட தாமரை போன்று கண்களும், ஒளிவீசும் பவள வாயினையுடைய பகவான் திருமூழிக்களத்தில் எழுந்தருளியிருக்கிறான். அவன் கொடிய பாவியான என் தோள்களைச் சேராமல் பிரிந்திருக்கிறான். அதனால் நான் உடல் இளைத்தேன். என் மேகலையும் ஒளிவீசும் கைவளையலும் தேகத்தில் பொருந்தாமல் நழுவி விழுகின்றன. அவனைக் கண்டு ஒரு நாள் எனக்காக தூய நல்ல தூதுரையைச் சொல்லி உதவுங்கள் என்று கூறுகிறார்.
      பெருமான் எனது சுடர் வளையையும், மேகலை என்னும் ஆபரணத்தையும் பறித்துக் கொண்டார்.  என் தோளோடு என்னை அணைத்துக் கொண்ட போது நான் என்னிலை மறந்திருந்தேன். அப்போது இவைகளை நான் இழந்துள்ளேன். உலகமெங்கும் புகழ் கொண்டுள்ள  பெருமான் தன்னை நம்பினாரை ஏமாற்றுவதில் வல்லவரே என்ற புகழைத் தாங்கியுள்ளார். திருக்கண்களைக் கொண்டவரும், சுடர்பவள வாயையும் கொண்டவருமான பெருமான் என்னைப் படைக்க எப்பாடு பட்டிருப்பார். இத்தகைய அழகு படைத்த பெருமானை நான் எவ்விதம் மறப்பது. இங்கு ஆழ்வார் அழகு என்று குறிப்பிடுவது பாஞ்ச பௌதிகத்தில் உள்ள அழகாகும். பிராப்தமான திருமேனி அழகு என்னை வதைக்கின்றது என்கிறார். இத்தகைய அழகு கொண்ட பெருமானை முதலில் நீ தரிசிக்கிறாயே. இக்காட்சியே உனக்கு நான் பரிசாகத் தருகிறேன் என்று கூறுகிறார். 

எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும்
புனக்கொள் காயா மேனிப் பூந் துழாய் முடியார்க்கே     3630 

      விசாலமான மலர் வனங்களெங்கும் இரையைத் தேடிகொண்டு மனத்திலே கொண்ட இன்பம் வெளிப்பட சஞ்சரிக்கும் வண்டுக் கூட்டங்களே! தும்பிகளே! கனமாகவும், திட்பமாகவும் உள்ள மதில்கள் சூழ்ந்த திருமூழிக்களத்தில் உறையும், கொல்லையில் பூக்கும் காயாம்பூ போன்ற திருமேனியையும், திருத்துழாய் மாலை தரித்த திருமுடியையும் கொண்ட எம்பெருமானிடம் எனக்காகத் தூது சென்று என் வேதனையை எடுத்துச் சொல்லுங்கள் என்கிறார் ஆழ்வார்.
      தும்பிகளே! எனக்கொரு உபாயம் செய்வீர்களா என்று மிகவும் பணிந்து கேட்கிறாள். என் விஷயமாக பகவானிடம் பேசுவீர்களா? ஒரு சிரமுமின்றி தங்களுக்கு இரை கிடைக்கிறது. ஆனால் என் கவலையானது அழகு மிக்க பெருமானுக்கு எவ்வித சிரமமும் வரக்கூடாது. திண் என்ற மதில் உள்ளதால் பெருமானின் அழகு காப்பாற்றப்பட்டுவிட்டது. இத்தகைய அழகை நான் அனுபவிக்க வேண்டுமே என்ற கவலையும் வாட்டுகின்றது. எனவே நீ தூது சென்றால் அவரது அழகை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வடிவழகையும், ஒப்பனை அழகையும் என்னை பாடாய் படுத்துகிறதே என்கிறார் ஆழ்வார். 

பூந் துழாய் முடியார்க்குப் பொன் ஆழிக் கையாருக்கு
ஏந்து நீர் இளம் குருகே! திருமூழிக் களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே.     3631 

      நிறைந்த நீர்பரப்பில் வாழும் இளங்குருகே! திருமூழிக்களத்தில் உறையும் பகவானிடம் சென்று ஆபரணங்கள் பூண்ட என் தனங்கள் நிறம் மாறிப் பிரிவுத் துயரால் பசலை நோய் படர்ந்திருப்பதையும், என் மலர்கண்கள் நீரைச் சொரிவதையும் எடுத்துரையுங்கள்! பூவுடன் கூடிய திருத்துழாய் அணிந்த திருமுடியையும், பொன் போல் மின்னும் ஒளிமிக்க சுதர்சனச் சக்கரத்தைத் தரித்த கைகளையும் கொண்டவரிடம் என் நெஞ்சம் பறிபோனதை விளக்கிச் சொல்லுங்கள்! என் இதயத்தை எடுத்துச் சென்றவர் பதிலுக்குத் தன் இதயத்தை இங்கு விடாமல் அகன்றது தகுதியற்ற செயல் என்று கூறுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      அழகிய திருமுடி, பொன்னாலான சக்கரம் ஆகியவற்றில் காட்சி தருகிறார். வடிவழகை முதலில் சொன்னார். பண்பு, குணத்தைப் பற்றி சொன்னார். என் தனங்கள் வெளுத்துப்போய் எனது இரு கண்களிலும் கண்ணீர் அருவியாக ஓடுகிறது. என் இணை மலர்க்கண்கள் நீர் ததும்ப என்று தமது கண்களை தாமே உயர்த்திக் கூறியது எதனாலென்றால் பெருமான் தன்னை அணைத்த போது என் கண்கள் வெட்கத்தில் மூடிக்கொள்ள, பெண்ணே! இணை மலர்க்கண்களைத் திறவாயாக என்று அவர் கூறினார் என்பது நம்பிள்ளையின் வியாக்யானம். கண்ணழகை வர்ணித்தது பிற்காலத்தில் அக்கண்களில் வரும் கண்ணீரை நினைத்தோ என்று கேட்கிறாள். என்னைக்கொண்டு அகல்வார் என்று நினைத்தால் தம்மைக் கொண்டு அகன்றாரே, மேலும் அவர் செல்லும்போது என் மனதையும் எடுத்துச் சென்று விட்டாரே. இது தகுமோ என்று வினவுகிறாள். 

தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து
மிக இன்பம் பட மேவும் மென் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே.      3632 

      அகன்ற நீர்ப்பரப்பிலே இரையைத் தேடி உண்டு இன்பம் கரை புரள மென்மையாக நீந்தும் அன்னங்களே! திருமூழிக்களத்து பகவானிடம் கொண்ட காதலால் என் மேனி மிகவும் இளைத்துவிட்டது. இடுப்பில் அணியும் ஒட்டியாணம் கழன்று விழுகின்றது. ஆகையால் என் ஜீவன் அவன் நினைவால் வருந்தி முடிந்து போய்விடக்கூடும்,  இப்படி என்னைத் தவிக்க விடுவது நியாயமல்ல என்று அவரிடம் போய் எடுத்துச் சொல்லுங்கள் என்கிறாள் தலைவி.
      தலைவியானவள் தீர்மானமாக குருகிற்கு சொன்னாள். பகவான் என்று ஆக்கப்பட்டது தயா, க்ருபா, கருணா, அனுகம்பா, அனுபக்ரோஷம், அனுசத்யம் போன்றவற்றால்தான். இக்குணங்கள் இல்லையென்றால் பெருமானே இல்லை. ஏனெனில் பகவானும் தயையும் ஒன்றே என்பதை இங்கு சாதிக்கிறார். குருகானது, திருத்தாயார் பெருமானைப் பற்றி குறை கூறியபோது அதனை மறுத்துப்பேசி இப்போது இவ்விதம் பேசுவது தகுமோ என்று கேட்க, பெருமானை நான் குறைகூறுவேனே தவிர மற்றவர் கூறக்கூடாது என்கிறாள்.  பக்தன் ஆச்சாரியன் வழி தமது கோரிக்கையை சொல்வது போன்று உம்மிடம் சொல்கிறேன் என்கிறாள்.  இப்பறவையினை ஆச்சாரியன் ஸ்தானத்திற்கு உயர்த்தி பேசி பெருமானின் தயையை எவ்விதமாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாள் தலைவி. 

ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடரை
ஒழிவு இல்லா அணி மழலைக் கிளிமொழியாள் அலற்றிய சொல்
வழு இல்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே      3633 

      நீங்காமல் திருமூழிக்களத்தில் உறையும் பேரொளியைப் பிரிய மனமில்லாமல், இனிய மழலை ததும்பும் கிளியின் பேச்சுப் போலே அரற்றும் நாயகியின் புலம்பலாக உள்ள குற்றமில்லாத இப்பத்துப் பாசுரங்களும் வளமான திருக்குருகூரில் தோன்றிய சடகோபர் இயற்றியவை. அவரது அழிவற்ற ஆயிரக் கணக்கான பாமாலைகளில் இந்தப் பத்தும் பிறவி என்னும் நோயைத் தீர்க்கக் கூடியவையாகும் என்ற பொருளில் அமைந்துள்ளது. 
      பகவானை விட்டுப் பிரிந்து நான் துன்பப்படுவது போதும். இத்தகைய நோய் என்றும் உங்களுக்கு வரக்கூடாது. நான் பாடிய இப்பத்துப் பாசுரங்களை நீங்கள் பாடினால் நீங்கள் எத்தகைய துன்பங்களையும் படாமலேயே எம்பெருமானை அடைந்து விடலாம். இத்தகைய பரந்த மனது ஆழ்வாரிடம் தோன்றிது. பெருமான் நாளும் திருமூழிக்களத்தில் நமக்காக உள்ளார். நாம் அவரை ஒழிவின்றி நெருங்கி அவருடன் இணைய வேண்டும். கிளி மொழி போன்று பேசிய இச்சொல் சடகோபன் சொன்னவை. உங்கள் நாவை விட்டு அகலாத அழிவில்லாத ஆயிரம் பாக்களில் இப்பத்துப் பாசுரங்களாவது உங்களது நாவை விட்டு அகலாது இருக்கட்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...