புதன், 26 நவம்பர், 2025

62. திருவிடந்தை

 


பெரிய திருமொழி                                                                                      திருமங்கையாழ்வார் 

பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே!      1021 

      பாரதப் போரில் அர்ச்சுனக்காக தனது திருக்கரங்களால் தேரோட்டி வெற்றி பெற்றுத்தந்த பேரொளியாக் திகழ்ந்த கண்ணபிரான் பிருந்தாவனத்தில் இராசகிரீடை செய்தவனாவான். இவனை பக்தியோடு வணங்குபவர் உள்ளத்தில் உறைபவனாகத் திகழ்கின்றான். திருவிடவெந்தையில் அழகாக எழுந்தருளியுள்ளான் எம்பிரான். புனித நீர் நிலைகளாலும், அழகு மிக்க சோலைகளாலும் சூழப்பட்ட உயரிய திருவேங்கடத்தில் கோயில் கொண்டு நம்மையெல்லாம் ஆட்சி செய்து வருகிறான். நெஞ்சமே நீ அவனிடம் செல்வாயாக என்று தலைவி கூறுகிறாள்.
      அண்டசராசரங்களுக்கு அதிபதியாகத் திகழ்ந்த திருமால் கிருஷ்ணராக அவதாரம் செய்து பாரதப் போரில் விஜயனுக்கு சாரதியாக விளங்கினான். இதனை துரியோதனன் சரிவர புரிந்து கொள்ளாததால் போரில் தோல்வியைத் தழுவினான். பிதாமகரைக் குறை கூறினான். பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணர் இருப்பதால் வெற்றி நிச்சயம் என்பதை அறிந்திராமல் தோற்றான். அத்தகையவன் திருவிடவெந்தையிலும், திருவேங்கடத்திலும் கோயில் கொண்டுள்ளான். மனமே! அவனைத் தேடிச் செல்வாயாக என்பது இதன் பொருளாகும். 

திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை செழுங் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே  1108 

      திருவிடவெந்தையில் அருள் புரியும் பெருமானே! நிலவினையொத்த அழகு வதனம் கொண்ட திருப்பாற்கடலில் உதித்த, அமிர்தத்தோடு பிறந்த மகாலட்சுமி உனது திருமார்பில் எழுந்தருளி இருப்பதை அறிந்த போதும் என் மகள் உன் மேல் கொண்ட காதலை விட மறுக்கிறாள். உன் திருப்பாதக் கமலங்களில் ஆசை கொண்ட இவர், கொல்லிப்பாவை போன்று  இலாவண்யமான உடலமைப்பை கொண்டவன். குவளைமலர் போன்ற விழிகளை உடையவள். இவள் விஷயத்தில் என்ன செய்ய நினைக்கிறாள் என்று திருத்தாயார் கேட்பது போல் இப்பாசுரம் அமைந்துள்ளது.
      தனது காதல் கைகூடாத நிலையில் மகள் பலவாறு துன்பத்தை அனுபவித்து வருகிறாள். உலகில் ஒருவன்   ஒரு பெண்ணிடம் ஆசை கொண்டால் மற்றவர் அவளிடம் ஆசை வைத்தல் கூடாது. ஏனெனில் அவனது ஆசை அனைத்தும் அப்பெண் மீது ஒருவழிப் பாதையாக சென்று அடைந்துள்ளது. அது போன்று பெருமானே! திருமகள் மீது அதீத அன்பு வைத்துள்ள நீ என் மகள் மீது ஆசை கொள்வது முரணானதாகும்.  இருப்பினும் அவளது ஆழ்ந்த பக்தியானது திருமகளைக் காட்டிலும் இவள் அதிக பக்தி கொண்டுள்ளாள். யார் உன் மேல் பக்தி கொண்டாலும் நீ உடனே ஏற்றுக் கொள்வாய். அது போல் என் மகள் விஷயத்தில் என்ன செய்யப் போகிறாய் என்று தாயாராகப் பாவித்து ஆழ்வார் கேட்கிறார். 

துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம் படு குவளைக் கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு  அணியாள்
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள்
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே!   1109 

      என் மகளானவள் இளமையானவள். மாதுளை முத்துக்கள் தோற்கும் விதமான பற்கள் இருந்தும் தன் அழகு மிக்க தோழியர்களுக்கு முத்துச் சிரிப்பைத் தருவதில்லை. சேர்த்தியழகுடைய தனங்களில் சந்தனம் பூசும் வழக்கத்தை விட்டுவிட்டாள். தடாகத்துக் குவளை மலர் விழிகளில் மை தீட்டுவதில்லை. அழகு மிக்க மலர்களை தலையில் சூடுவதில்லை. கடல் சூழ்ந்த இவ்வுலகை அளந்த திருவிக்கிரமனின் புகழினை காதல் மயக்கத்தில் பிதற்றுகிறாள்.  இவள் விஷயத்தில் இடவெந்தைப் பெருமானே என்ன செய்யப் போகிறாய் என்று வினவுகிறாள் திருத்தாயார்.
      தன் மகளானவள் லௌகீக விஷயத்தில் ஈடுபடாமல் எப்போதும் பெருமானையே நினைத்து வருகிறாள். தோழிகளுடன் சிரித்து மகிழ்வுடன் இருக்க வேண்டியவள் மை இடாமல், மலர் சூடாமல், தன்  பகவதக்காமம் நிரம்பியதால் தன் நகைப்பை மறந்து திரிகிறாள். ‘அன்றிவ்வுலகளந்தாய், மாலே மணி வண்ணா’ என்று பிதற்றுகிறாள். இத்தகைய அநந்ய பக்தையான இவளை நீ என்ன செய்யப் போகிறாய்? என்று திருத்தாயார் கவலையுடன் பெருமாளைக் கேட்கிறாள்.      

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கு அணியிலும் தழல் ஆம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறைநில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே!    1110 

      கலவை சந்தனத்தையும், குளிர்ந்த முத்து மாலையையும், சந்தனக் குழம்பையும் தனங்களில் பூசிய போதும் அவை குளிர்ச்சி தராமல் தீயாய்ச் சுடுகின்றன. நிலவின் கதிர்கள் சுடுவதால் இளைத்துப் போகிறாள்.  சமுத்திர ஓசையும் அடங்கும்படி புலம்புகிறாள்.  மாந்தளிர் போன்ற இவளது மேனி நிறம் பசலை நோயால் பொன் போல் உள்ளது. வளையல்கள் நழுவி விழுகின்றன. இவ்விதம் விரக வேதனையால் வருந்தும் என் மகளுக்ககு இடவெந்தை பிரானே! என்ன செய்ய எண்ணியுள்ளாய் என்று கேட்கிறாள் திருத்தாயார்.
      மகளின் நிலைகண்ட தாயார் இவளுக்கு சில குளிர்ச்சியான உபசாரங்களை செய்விப்போம் என்று திருமார்பிலே சந்தனத்தை பூசி, முத்து மாலை அணிவித்து நல்ல நிலவில் நிறுத்துகிறாள். ஆனால் நாயகிக்கோ தனச்சேறும், முத்துமாலையும் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் இருந்த்து. தரிக்கப்பட்ட ஆபரணங்கள் கை நழுவி விழுகின்றன. பகவத் குணங்களை அநுசந்தித்து என்றும் கண்ணும் கண்ணீருமாக இருத்தலும், மயிர்க்கூச்செறிந்திருத்தலுமே பக்தர்களுக்கு ஆபரணம் என்பதால் அவளைப் பாராமுகமாக இருக்கிறாயா என்று வினவுகிறாள் திருத்தாயார்.  

ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம்
தோழி! ஓ! என்னும் துணை முலை அரக்கும் * சொல்லுமின் என் செய்கேன்?  என்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே     1111 

      இடவெந்தைப் பிரானே! என் பெண் ஒரு நாழிகைப் பொழுது ஒரு பிரளய காலத்தைக் காட்டிலும் நீண்டிருக்கிறது என்கிறாள்.  கதிரவன் மறைந்தானே என்று கவலை கொள்கிறாள். கடல் ஆர்ப்பரிக்கின்றது. பறைவகள் உறங்கவில்லை. தென்றல் தீயைவிட கொடியதாகச் சுடுகின்றது.  அடி தோழி என் செய்வேன்? என்கிறாள். தன் இரு தனங்களையும் சரி செய்து கொள்கிறாள். விரகதாபம் தீர என்ன செய்யப் போகிறாய் என தாய் புலம்புவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
      நாயகி நாயகனைப் பிரிந்த ஆற்றாமையால் அவனில்லாமல் இரவுப் பொழுதைக் கழிக்க அவதியுறுகிறாள். நோயாளிகளுக்கும், காதலரைப் பிரிந்த மங்கையர்க்கும் பொழுது கழிவது நீண்ட நேரமாகும். உறக்கமின்றித் தவித்து சூரிய உதயத்தை எதிர்பார்த்திருப்பாள். முப்பது நாழிகை விரக காலத்தில் முப்பது யுகமாக மாறும். பாழும் சூரியன் அழிந்தானா அல்லது இருக்கிறானா என்று இவ்விதம் இறக்கமின்றி உள்ளானே என்று வருந்துகிறாள். எல்லோருக்கும் குளிர்ச்சி தரும் தென்றல் எனக்கு தீயாய் தகிக்கின்றதே என்று புலம்புகிறாள் என்று திருத்தாயார் தன் மகளை நினைத்து வருந்துகிறாள்.       

ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திரு உரு நினைந்து
காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடுங் கண் துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே!    1112 

      இடவெந்தைப் பிரானே! பேசினாலும் உன் பெயரன்றி வேறு ஒன்றையும் சொல்வதில்லை.  உன் திருமேனியையே நினைத்து உருகுவாள். உன்னிடம் இவள் கொண்டுள்ள ஆசை அதிகம். அதனாலேயே எதுவும் செய்ய இயலாத துன்பநிலை அடைந்தாள். உறக்கத்தை இவளின் கயல் விழிகள் மறந்தன. புத்தியற்ற இவளது அறியாமை பெரியதாகும். உன்னைப் பொறுத்தவரை தெளிவுடையவளாய் இருக்கிறாள்.  நுண்ணிய இடையை உடைய இவளைப்பற்றி கேலி செய்பவர் முன் என்ன செய்ய எண்ணியிருக்கிறாய் என்று திருத்தாயார் வினவுகிறார்.
      பரக்கால நாயகியானவள் வேறு எந்த வார்த்தையும் பேசுவதில்லை. கோவிந்தா! கோபாலா! என்று புலம்பிக் கொண்டிருக்கிறாள். பகவானின் திருநாமங்களைச் சொல்லும்போதே பெருமானுடைய ஸ்வரூபங்கள், அவரது குணங்கள் நினைவுக்கு வந்த வண்ணம் உள்ளது. ரூபத்தில் ஏற்றம் அதிமாகையால் ரூபத்தையே சிந்தித்தவாறு உருகுகிறாள். கடல் போலும், கார்முகில் போலும், அவரது திருமேனி என்னே என்று அதிசயிக்கிறாள். அவரது திருமேனியை விட எனது ஆசையே பெரிது என்கிறாள். அவனை எண்ணி ஒன்றும் செய்ய இயலாத செயலற்றவளாகி உள்ளாளே  என்று வருந்துகிறாள். 

தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும்  மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே!   1113 

      இடவெந்தைப் பிரானே! தன் குலப் பெருமைக்குத் தகுந்த வழி ஒன்றையும் இவள் ஆராய மாட்டாள். கடலும், மதிலும், சூழ்ந்த இலங்கையிலிருந்து வலிய அரக்கர் குலம் யுத்த களத்திலே கொல்லப் படுவதைக் கேட்டு மகிழ்வாள். பின்பு வீரம் கேட்டு மயங்குவாள். இடை சுருங்க தனங்கள் பசலை பூத்துக் கிடக்க என் குலக் கொடியான இவளுக்கு என்ன சொல்வதாக நினைத்திருக்கின்றாய் என்று கேட்கிறாள் திருத்தாயார்.
      இராமன் சீதையைப் பிரிந்து பத்து மாதங்கள் மிகவும் துயருற்றான். அணை கட்டி உண்ணாது உறங்காது கடல் கடந்து இலங்கை சென்று அரக்கர்ளை அழித்து  சீதையை மீட்டான். இவ்விதம் பிராட்டியை மீட்டு வருவதற்கு இத்தகைய பிரயத்தனம் செய்த பெருமான் நம் விஷயத்தில் பாரா முகமாக உள்ளானே என்று வருந்துகிறாள். உன் மகள் மூர்ச்சித்து விழுந்தால் எனக்கென்ன என்று நினைக்கிறானோ அல்லது வடிவழகியான இவளை இழக்காலாகாது என்று நினைக்கிறானோ என்று கேட்கிறாள் திருத்தாயார். 

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு                                                                                                                                                           ஒன்று இலளால்
வளங் கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே என்று வாய்வெருவும்
களங் கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை  பிரானே!    1114 

      இடவெந்தைப் பிரானே! இவள் எக்காலத்திலும் உன்னையே நினைத்திருப்பதால் மனம் கனிந்திருக்கிறாள். உன்னைப் பற்றியே பிதற்றுகிறாள். உன்னைத் தவிர என்னிடம் சிறிதும் அன்பின்றி இருக்கிறாள். சோலைகளால் சூழப்பட்ட  திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் பிரானே! என்று புலம்புகிறாள்.  புன்சிரிப்பையும் அழகையும் மன வருத்தத்தையும், இளைப்பையும் கொண்டிருக்கும் இக்கன்னிப் பெண்ணின் விஷயத்தில் நீ என்ன செய்வதாக உத்தேசிக்கிறாய் என்று கேட்கிறாள் திருத்தாயார்.
      இளம்பிள்ளையான இவள் பக்குவமின்றி இருக்கிறாள். நெஞ்சு கனிந்திருப்பது தெரிகிறது. எப்போதும் உன்னைப் பற்றியே பேசிப் பிதற்றுகிறாள். மற்ற சிறுமியர்கள் போல் தாய் தந்தையரிடம் அன்பு வைப்பதில்லை. தன் அன்பு முழுவதும் உன்னிடத்திலேயே கொட்டுகிறாள்.  உன் பெயரைச் சொல்லுவதும் நீ உகந்தருளிய திருப்பதிகளைப் பற்றியும் பேசிய வண்ணம் உள்ளாள். இவள் மீது இரக்கம் காட்டாமல் இவளை இழக்கலாகுமோ என்று பலவாறாக பெருமானைக் கேட்கிறாள். 

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என்உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லி கோமள வல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே.  1115

      திருவிடந்தைப் பெருமானே! இப் பெண்ணானவள் ‘கலப்பையைக் கையில் தரித்த கண்ணபிரானின் குழலோசைக் கேட்டு என் உள்ளம் உருகுகின்றது’ என்று கூறுகிறாள்.  நீர்வளம் பொருந்திய அழகிய திருப்புட்குழி என்னும் தலத்தில் விஜயராகவனாக சேவை சாதிக்கும் பெருமானைக் குறித்துப் பாடுகிறாள்.  ‘திருநீர்மலைக்குச் செல்வோமா’ என்கிறாள். கொல்லிப்பாவை போன்ற கொடி இடையைக் கொண்ட அழகிய தோள்களையுடையவள், இடைவிடாமல் மழை போன்று கண்ணீரைச் சொரிகின்ற என் மகள் விஷயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தாய் கேட்பது போன்று இப்பாசுரம் அமைந்துள்ளது.
      திருத்தாயாரானவள் தன் மகள் பற்றி வருந்திப் பாடுகிறாள். ‘கண்ணனின் மதுரமான குழலோசை என் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது. திருப்புட்குழியின் நீர்வளத்தைப் பாடுகிறாள். திருநீர்மலை செல்ல வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறகிறாள். தனது விருப்பம் எதுவும் நிறைவேறாததைக் கண்டு துன்புறுகிறாள். ஜடாயுவுக்கு மோட்சம் அளித்ததை எண்ணிப் பாடுகிறாள். கொல்லிமலை கொடியிடைப் பாவையான என் மகள் படும் துன்பம் கண்டு மனம் இறங்கவில்லைய’ என்ற கூறுகிறாள். 

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில்  மறந்தாள்
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது இவ் அணங்கினுக்கு உற்ற நோய்  அறியேன்
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என்கொல் ஆம்? குறிப்பில் என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே 1116 

      இடவெந்தைப் பிரானே! மென்மையான இவளது தோள்கள் பொன் போன்ற பசலை நிறத்தை அடைந்தன.  மீன் போன்ற விழிகள் உறங்க மறுத்தன. உன்னிடம் கொண்ட அன்பினால் இவளுக்கு ஏற்பட்ட காதல் பெரிதாகிவிட்டது  இந்தப் பெண்ணிற்கு வந்த நோய் இன்னதென்று அறிய முடியவில்லை. மெல்லிய இடையையும், பருத்த தனங்களையுடைய என் மகளின் நிலை என்னவாகுமோ? இவளைப் பற்றி உன் உள்ளத்தில் என்ன நினைக்கிறாய்? என்று கேட்கிறாள் தாயார்.
      நாயகனை அணைத்துக் கொள்வதற்கான தோள்கள் என் மகளுக்கு பயன்படாமல் உள்ளது.  இவள் கண்களில் உறக்கம் என்பது அடியோடு நீங்கி வெகு நாட்களாகி விட்டது. அதனால் இவளுக்கு பசலை நோய் கண்டுள்ளது. பொதுக் கிணற்றில் மக்கள் நீரெடுக்கா நிலையில் பச்சை பாசி சேரும்.  நீர் எடுக்கும் போது பாசி விலகும். அது போன்று பெண்ணின் உடலில் ஏற்பட்ட பசலைக்கு கணவனின் கை பட்டால் பசலை விலகும். அணைத்த கை விலகினால் பசலை படரும் என்பது குறுந்தொகையில் வரும் காட்சியாகும். நாயகியின் நிலையும் இதுவே. பரமபதத்தை விட்டு இடவெந்தையில் வந்திருப்பதில் எந்தவித பயனும் இல்லையே என்கிறாள். 

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார்  நாளும் பழவினை பற்று அறுப்பாரே .    1117 

      அன்னப்பட்சியாக, மீனாக, ஆமையாக, நரசிங்கமாக அவதரித்த என் மாயனே! கருணை காட்ட வேண்டும் என்று பிரார்த்திப்பவர்க்கு மேலான அருள் புரியும் திருவிடவெந்தை பகவானைக் குறித்து திருமங்கையாழ்வார் இயற்றிய இப்பாமாலையைப் பாடுகிறவர்கள் என்றும் தங்கள் பழைய வினைகளை முழுவதுமாக நீக்கிக் கொள்வார்கள் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
      ஹம்சரூபியாகவும், மத்ஸரூபியாகவும் நின்று வேதங்களை அளித்தவனே! கூர்ம அவதாரமெடுத்து தேவர்களுக்கு அமுதத்தினை அளித்த உபகாரனே! ஆச்சரியமான குணங்களைக் கொண்டவனே! அவர்களுக்கெல்லாம் அருளியது போன்று எமக்கும் அருள்வாயாக என்று ஆழ்வார் வேண்டுகிறார். இத்தகைய பாசுரங்களைப் பக்தியுடன் படிப்பதனால் முன்வினைகள் அனைத்தும் களைந்து பெருமானின் திருவடி சேர்வார்கள் என்பது இதன் கருத்தாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...