திங்கள், 24 நவம்பர், 2025

69. திருவல்லவாழ்

 


திருமங்கையாழ்வார்                                                                                       பெரிய திருமொழி 

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தம் ஆய் ஆதி ஆய் ஆதிக்கும் ஆதி ஆய் ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே    1808 

      மனமே! தந்தை, தாய், பிள்ளைகள், சுற்றத்தினர், நண்பர்கள் என்று நம்மிடமுள்ள சம்சார பந்தமென்னும் இவ்வாழ்வை வெறுத்து, இந்த வாழ்க்கை இறையடிமைக்கு இழுக்கானதென்று நீ எண்ணினால், பிரளயமாய், உற்பத்திக்கு மூலமாய், எல்லா உயிர்களுக்கும் அந்தராத்மாவாய், எதுவுமே அறியாதவன் போல் பசுக்களை மேய்த்த வாசுதேவ புத்திரனாய் அவதரித்தவன் கோயில் கொண்டுள்ள திருவல்லவாழ் தலத்தை வாயால் துதிக்கும்படி வல்லமையுடன் விளங்குக என்கிறார். 
      திருவல்லவாழ் என்னும் திவ்யத் தலத்தில் சேவை சாதிக்கும் பெருமானே! நமது தாய், தந்தை, உற்றார், நண்பர்கள் அனைவரும் சுற்றி வந்து நமக்குத் துன்பத்தைத் தந்துள்ளார்கள். இதுவரை நல்வழிப் படுத்தியதில்லை.  இத்தகைய உறவினர்கள் அனைவரும் இப்பறவியில் வந்த பந்துக்கள்தானே. இவர்கள் நம்மை சம்சாரத்தில் கட்டிப்போடவே வந்துள்ளார்கள் என்கிறார். பந்தத்தைக் கட்டிப் போட்டவர்கள் பந்துக்கள். ஆழ்வார் இவர்களை ‘ஆபாச பந்துக்கள்’ என்கிறார். மனமே இதனை நன்கு புரிந்து கொண்டு உனக்கு வல்லமை இருந்தால் இப்பெருமானைப் பற்றலாம் என்கிறார். 

மின்னும் ஆ வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும்
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே!     1809 

      மனமே!  மின்னலையும் அழகிய கொடியையும் வஞ்சிக் கொப்பையும் ஜெயித்த நுண்ணிய இடை துவளும்படி அன்னம் போல் மெதுவாக நடக்கும் பெண்களின் கூடலை வெறுத்துப் பயப்படுவாயானால், முன்பு மணிமுடி தரித்த பாண்டவர்களுக்காக தூது சென்ற துவாரகாதீசன் கோயில் கொண்டிருக்கும் திருவல்லவாழ் என்கிற தலத்தை வாயால் துதித்து நெஞ்சில் பதித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆழ்வார்.       
      ஆழ்வார் இப்பாசுரத்தில் மனிதனை காமசுகத்தை பெரிதென எண்ண வேண்டாம் என்கிறார். அன்னமும் வியக்கும் வண்ணம் நடை கொண்டு செல்லும் பெண்களின் நடையுடையும், அவளது அவயங்களும் காலமாற்றத்தில் வீணாகி விடும். எனவே இவ்வழகினை விடுத்து பெருமானின் திவ்யமங்கள அழகினைக் கண்டு மனதில் இருத்தி வைக்குமாறு தெரிவிக்கிறார். அவ்வழகில் ஒரு தொடர்பினை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். சரீரத்தின் அழகை விடுத்து ஆத்மாவின் அழகை ரசித்து அதனுடன் ஒன்றிவிடுதல் வேண்டும் என்கிறார். 

பூண் உலாம் மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய் இது என்று
பேணுவார் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீள் நிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே!    1810 

      ஆபரணங்கள் அணிந்த தனங்களையுடைய பெண்களின் சூதுகளை உண்மையென்று ஆதரிப்பவர்களின் சொல்லைத் தவறானது என்று நீ நினைப்பாயேயானால், பரந்த நிலவு போன்ற வெண் கொற்றக்குடையின் கீழ் அரசு செய்த மகாபலியின் யாகத்தில் மூன்றடி மண் யாசித்த வாமனன் வீற்றிருக்கும் திருவல்லவாழ் என்ற தலத்தை வாயாரத் துதித்து மனதில் பதித்து வைத்துக் கொள்வாயாக என்கிறார்.   
      நல்ல ஆபரணங்களை அணிந்துள்ள பெண்ணின் அன்பை வேண்டி பல்வேறு பொய்கள் நாம் கூறி வருகிறோம். பெண் உறவுக்காகப் பல நல்ல உறவுகளையும் ஒதுக்கிச் சென்றுள்ளோம். இத்தகைய சரீரத்திற்காகவும், பொருளுக்காகவும் துன்பம் தரக்கூடிய நிலையினை நாம் ஏற்படுத்தி வருகிறோம். இத்தகைய சுகத்திற்கு ஆசைப்படுவதை விடுத்து மூன்றடி மண் வேண்டிய மகாபலிக்கு வாமனனாக அவதரித்து அவனை மண்ணுக்குள் அழித்தவனை திருவல்லவாழில் சேவை சாதிப்பவனை நாடு மனமே! என்கிறார். 

பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல்
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே!     1811 

      இனிய இசை போல் பேசும் பெண்களின் தனங்களை நாம் மார்போடு அணைத்துக் கொள்வோம் என்று நினைப்பவர்களின் எண்ணத்தை நீ பின்பற்றாமல் அழித்து, பேறுபெறக் கருதினால் வானவர்களுக்காக வைகுண்டத்தில் நித்ய தரிசனம் தந்து கொண்டிருக்கும் திருவேங்கடமலையில் அருள்புரியும் கடல் போன்ற நீல நிறம் கொண்டவர் வாழும் செழிப்புள்ள வல்லவாழ் என்ற தலத்தை வாயாரத் துதித்து மனதில் நன்கு பதித்துக் கொள்வாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
      அழகிய இசை போன்று பேசும் பெண்களை அணைக்கும் எண்ணத்தினைக் கொண்டோரின் மனமே! அவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து அழித்து விடு. அதை விடுத்து திருவல்லவாழ் மார்பனின் திருவடியைப் பற்றினால் மற்றவை கற்கவே வேண்டாம். அவை உன்னை விட்டு அகன்று விடும். அவன் திருவடியைச் சரணம் என்று பற்றினால் வேறு எதுவும் தேவையில்லை என்ற நல்ல மனம் உருவாகிவிடும். மனமே! நீ கலங்காமல் உறுதிகொண்டு நின்றால் மற்றவர் உன்னை பின் தொடர்வர்.     

மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கைமேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே!      1812 

      மேகமண்டலம் அளவு உயர்ந்த வெண்கொற்றக்குடையைக் கொண்ட அரசர்களாய், யானைத்திரள் சூழ வாழ்ந்தவர்களும் மாண்டு போனார்கள் என்ற பேச்சை நீ வருந்திச் சிந்திப்பாயானால் பூதனையின் விஷப்பாலை அருந்திய தேவகி மகனான கண்ணபிரான் எழுந்தருளியுள்ள திருவல்லவாழ் என்ற திருத்தலத்தை வாயால் போற்றி உள்ளத்தில் பதிய வைக்குமாறு வேண்டுகிறார் ஆழ்வார்.
       உனது பொருள் பெரிதென்று நினைத்து வாழும் மனமே! வெண்கொற்றக் குடையின் கீழ் வாழ்ந்த மன்னாதி மன்னர்கள் அனைவரும் காலப் போக்கில் வீழ்ந்து மடிந்தனர். எவையும் சாஸ்வதமல்ல. காலத்தின் போக்கில் அவை மாறிக்கொண்டே பின் அழிந்து போகும். இவை நிலையானதல்ல என்ற எண்ணத்தை வளர்ப்பாயாக.  எனவே பூதனையை அழித்த கண்ணன் வாழும் ஊர் திருவல்லவாழ் பெருமானின் திருவடியைப் பற்றுவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார். 

உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே    1813 

      சூட்சும தேகமாயிருந்து பிறந்து வளர்ந்து மாமிசத்தில் பொதிந்து கிடக்கிற நரம்பும் தோலுமாகின்ற வீட்டினுள் ஐம்புலன்களால் புகுந்து துன்பறுத்தி நோய் தந்து வாழ்வதற்கு நீ பயப்பட்டால் சிறந்த நான்கு மறைகளையும், ஆறு வேதாகமங்களையும் மேற்கொண்டு வாழ்கிறவர்கள் குடியிருக்கும் வல்லவாழ் என்னும் திவ்யத் தலத்தை வாயாரத் துதித்து நெஞ்சத்தில் இருத்திக் கொள்வோமாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
       நம் சரீரம் என்பது ஒரு மாயத்தின் தோற்றமாகும். அதில் பஞ்சேந்திரியம் என்னும் ஐந்து வகை இந்திரியங்கள் நம்மை துன்பக் கடலில் இழுத்துச் செல்கின்றது. இத்தகைய கொடிய இந்திரியங்களைக் கண்டு நீ அச்சம் கொள்ள வேண்டாம். கூர்வேல் கொண்ட பரக்காலன் சொல் மாலைக் கொண்டு பரமன் தாழ்ந்து போனான். ஆனால் ஆழ்வாரோ இத்தகைய இந்திரியங்களைக் கண்டு அஞ்சினார்.  என்றும் விழாக்கோலமும்  வேள்விப் புகைமூட்டமும் பூண்டுள்ள இத்தலத்துப் பெருமானை வந்து அடைந்தால் இந்திரியங்களை வெல்லலாம் என்கிறார் ஆழ்வார். 

நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் எனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீ உலாம் வெம் கதிர் திங்கள் ஆய் மங்குல் வான் ஆகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே       1814 

      எல்லா நோய்களையும் உருவாக்குகின்ற உடல் நிரந்தரமானது, எப்போதும் நினைத்து அறிவற்றவர்கள் வெட்டியாகப் பேசும் வார்த்தைகள் தவறானது என்று நீ நினைத்தால் வெப்பமுள்ள கதிரவனாக, சந்திரனாக மேகங்கள் உலவும் வானமாக இருக்கும் மாயவன் அருள் புரியும் திருவல்லவாழினை மனமாரத் துதித்து நெஞ்சினுள் பதித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.   
      மனிதன் தனது சரீரத்தைக் காக்க பல்வேறு உபாயங்களை நாடுகிறான்.  சரீரத்தை ஓரளவுதான் கட்டிக்காக்கலாம் என்ற உண்மையை அவன் புரிந்து கொள்ளவில்லை. சரீரப் பாதுகாப்பே இறுதி என்று கொள்ளக் கூடாது.  சரீர சுகத்திற்கு பல கண்டுபிடிப்புகள் வந்தாலும் மனிதனுக்கு தற்காலிகமாகத்தான் பயன்படுகிறது. இதுவே மனிதனுக்கு இறுதிவரை பயன்படும் என்று சொல்லவும் இயலாது. எனவே சரீரத்திற்கு நாம் எவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டுமோ அவ்வளவிற்கே தரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.      

மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உயக் கருதினாயேல்
சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே       1815     

      மேகங்கள் சேர்ந்த ஆகாயம், நெருப்பு, நீர், நிலம், காற்று முதலிய பஞ்ச பூதங்களும் கூடிய சரீரத்தை உயிருக்குக் காப்பானது இல்லை என்று நீ புரிந்து கொண்டு உய்வு பெற விரும்பினால் சந்தனம் பூசிய இளமையான தனங்களைக் கொண்ட திருமகளும் தானுமாக எப்போதும் சேர்ந்து வாழும் திருவல்லவாழ் என்கிற தலத்தை வாயாரத் துதித்து நெஞ்சில் பதித்துக் கொள்வாயாக மனமே! என்று கூறுகிறார் ஆழ்வார். 
      இத்தலத்துப் பெருமான் தினமும் வரும் மக்களுக்காக புதிதாக சேவை சாதிக்கிறார் என்று கூறுகிறார்.  பெருமான் பாஞ்சபௌதீகம் என்ற ஐம்பூதங்களைக் கொண்டு இச்சீரத்தை உருவாகியுள்ளார். இவை ஒருசேரக் கோர்வையாக இருப்பதால் சரீரம் உருவாகியுள்ளது. இறுதியில் இது அழியக் கூடியதாகவும் உள்ளது. அஞ்சுசேர் யாக்கை என்ற இச்சரீரத்தை அறன் என்று புரிந்துள்ளாயே. பிராட்டியுடன் கூடியவனாக சேவை சாதிக்கும் ஸ்ரீவல்லபனைத் தொழுவாய் மனமே!என்கிறார்.   

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ளநூல் தன்னையும் கருமம் அன்று என்று உயக் கருதினாயேல்
தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே        1816 

      வெள்ளி மலையில் வாழும் சிவபெருமானை வழிபடும் பாசுபதர்களை நீ ஏற்காமலும், சமண, பௌத்தர்கள் ஓதுகின்ற பொய்யான சாத்திரங்களைப் பொருந்தாதவை என்று எண்ணியும் உய்வு பெற நினைத்தால், தெளிந்த சிந்தனையுடையோர் கைகூப்பித்தொழும் சுவாமியான பாற்கடலிலிருந்து அமிர்தத்தை எடுத்துத் தந்த வள்ளலான பகவான் அருள் புரியும் திருவல்லவாழினை வாயாரத் துதித்து உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.         
      சாத்திரத்தில் கூறப்பட்ட அனைத்தையம் நாம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதனை நன்குணர்ந்து பூர்வாச்சாரியார்களும், பரம ஸ்ரீவைஷ்ணவர்களும் உபதேசித்தவற்றை நாம் முழுமனதாக ஏற்று செயல்பட்டால் நன்மை பயக்கும் என்கிறார். பல சமயங்கள் கூறும் கூற்றை செவிசாய்த்து, அதனால் நம் மனம் குழம்பிக்போகும் நிலை ஏற்படலாம். எனவே நமக்கு வேதங்களே பிரமாணம். அதனைக் கற்றுணர்ந்து எம்பெருமான் அருளிய வேதத்தினை வாக்காக ஏற்போம் என்கிறார். எனவே வள்ளலாரான ஸ்ரீவல்லபன் திருவடி தொழுது அவன் அருளிய வேதங்களைக் கற்று வாழ்வோம் என்கிறார். 

மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள் தம்மை
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன்
கறை உலாம் வேல்வல்ல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார்
இறைவர் ஆய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே        1817 

      வேதம் கற்றவர்கள் குறையில்லாமல் வாழும் திருவல்லவாழில் குடியிருக்கும் பரந்தாமனைக் குறித்துச் சிறகுடைய வண்டுகள் ரீங்கரிக்கும் மலர் வனங்கள் சூழ்ந்த அழகிய திருவாலி நாட்டின் தலைவரும், இரத்தக்கறை படிந்த வேலாயுதத்தை உடையவருமான கலியன் இயற்றிய இப்பாசுரங்களைப் பாடக் கூடியவர்கள் அரசர்களாய் இவ்வுலகை ஆண்டு பின்பு விண்ணை ஆண்டு ஆனந்தம் அடைவார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      வேதங்களை நன்கு கற்றுணர்ந்து அதனை தினசரி ஓதும் வைதீகர்கள் நிறைந்த திருவல்லவாழ் என்னும் தலத்தில் காட்சி தரும் பெருமான், சோலைகள் சூழ்ந்த, வண்டினங்கள் ரீங்கரிக்கும் இத்தலம் பற்றி ஆலிநாடான் எப்போதும் வேல் முனையில் குருதிக்கரை படிந்துள்ள வேலினைக் கொண்ட திருமங்கையாழ்வார் பாடிய இப்பத்துப் பாசுரங்களை பக்தியுடன் பாட வல்லவர் இன்பமயமான வைகுந்தத்தை அடைவார்கள் என்று கூறுகிறார்.          

நம்மாழ்வார்                                                                                                                 திருவாய்மொழி 

மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?       3205 

      மான் போன்ற பார்வையையுடைய பெண்களே! பெருமானின் பிரிவினால் பாவியான நான் நாள்தோறும் இளைத்துப் போகிறேன்!  வானளாவிய பாக்கு மரங்களும், தேன் நிறைந்த மல்லிகையும், மணம் வீசும் தேன் பொருந்திய தோட்டங்கள் சூழ்ந்த திருவல்லவாழ் என்ற தலத்தில் உறையும் பகவானுடைய திருப்பாதங்களில் நான் சேர்வது எந்நாளோ? என்று கூறுகிறார் ஆழ்வார்.
      மானின் விழிகளைக் கொண்டவளே! தினசரி இப்பெருமானை எண்ணி எண்ணி அவனைப் பிரிந்து மெலிந்து வருகிறேன். புறச்சோலையில் இருந்தவனை எண்ணி வாடுகிறேன். இதன் காரணத்தை எண்ணுங்கால் விருப்பத்தால், அன்பால் காதல் ஈடேறாததால் மெலிந்து வருகிறேன். ஆத்ம ஐக்கியத்தை விரும்பும் எனக்கு என் உடலைப் பற்றிய அக்கறையில்லை. மலர்ச்சோலைகள் சூழ்ந்து மல்லிகை மணம் வீசும் திருவல்லவாழ் கோனாரின் திருவடிகளை தாசனான அடியேன் கூடுவது எந்நாளோ? என்று கேட்கிறார் ஆழ்வார். 

என்று கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?.     3206 

      தோழியர்களே! என்னை நீங்கள் வருத்துவதால் உங்களுக்கு என்ன பயன்? பொன் போல் ஒளி வீசும் புன்னை, மகிழ மரம் போன்ற அன்றலர்ந்த மலர்களையுடைய குருக்கத்திச் செடி ஆகியவை மீது பட்டு மணம் கமழும் தென்றல் வீசும் திருவல்லவாழ் நகரில் நின்றருளும் கோலப்பிரான் திருவடிப் பொடியை அடியேன் சிரமேற்சூடும் நாள் என்று வருமோ? என்று கேட்கிறார் ஆழ்வார்.
      தோழியர்களே! பெருமானின் தரிசனம் என்று கிட்டும் என்று ஒரு நாளிட்டு கூறக்கூடாதோ? மற்றவர்களுக்கு தரிசனம் அளிக்க நாள் கூறும் பகவான் என்னை மறந்ததேனோ. இப்பெருமானிடம் நான் அனைத்தையும் இழந்த நிலையில் நீவீர் எல்லோரும் நான் போவதையே கேட்கின்றீர்களே, என்னை முழுமையாக அறிந்தும் இவ்வாறு கேட்கிறீர்களே என்று வினவுகிறாள் தலைவி. மேலும், இத்தலத்து மரங்கள், செடிகொடிகள் அனைத்தும் பெருமாள் பிராட்டியின் பார்வை பட்டு வளர்ந்தது. ஆனால் அவரது பார்வை என்மீது பட்டு அவரது திருவடியை என்று தாங்குவேனோ.  அவ்விதம் இல்லையெனில் பெருமானைத் தழுவிய காற்றாவது புறச்சோலையில் உள்ள என் மீது பட்டுச் செல்லாதா என்று ஏங்கித் தவிக்கிறாள். 

சூடு மலர்க்குழலீர்! துயராட்டியேன் மெலிய
பாடும் நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே?.      3207 

      பூச்சூடிய கூந்தலையுடைய கோதையரே! பிரிவுத் துயரால் வருந்தும் அடியேனை மேலும் மெலிய வைக்க வேத ஒலி, கடல் அலை போல் முழக்கமிடுகிறது. ஹோமப்புகை மாடங்கள் வரை உயர்ந்து கமழ்கிறது. அந்தக் குளிர்ச்சியான திருவல்லவாழிலே நித்திய வாசம் செய்யும் கோலப்பிரான் திருப்பாதங்களை தினந்தோறும் வணங்கும் நாள் என்றுதான் வருமோ? என்று கேட்கிறார் ஆழ்வார்.
      பெண்மணிகளே! நீங்கள் எப்போதும் மலர் சூடாதிருக்க என்ன காரணம் என்று வினவ, பெருமான்    தலைவியை ஏற்றுக்கொண்டால் நாங்கள் மலர் சூடுவோம் என்கிறார்கள். நான் புரிந்துள்ள கர்மங்களே என்னை பெருமானிடம் சேரவொட்டாமல் தடுக்கிறது. இத்தலத்து அடியார்கள் கூடி முழங்கும் வேத ஒலியானது கடல் போன்று ஆர்ப்பரிக்கின்றது. இதனை நானும் பெருமானும் சேர்ந்து கேட்கும் காலம் என்று வருமோ? என்கிறாள். நித்யசூரிகள் நாளும் பெருமானைத் தரிசிக்கும் பாக்கியத்தைக் கொடுத்த போது நான் புறச்சோலையில் ஒதுங்கி நின்று அவரது வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறேனே! என்று வெதும்பிக் கூறுகிறாள்.
.

நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே.     3208 

      தோழியர்களே!  என்னை நித்தமும் வருத்தி என்ன பலன் கண்டீர்கள்? பச்சை இலைகளையுடைய நீண்ட பாக்கு மரங்களும் தென்னையும், வாழையும், அழகிய மாட மாளிகைகளும் சூழ்ந்த குளிர்ச்சியான திருவல்லவாழ் தலத்திலே ஆதிசேஷன் மீது நம் கோலப்பிரான் பள்ளி கொண்டிருப்பது நம் நன்மை கருதியே என்று கூறுகிறார் ஆழ்வார்.
      நாயகி சொல்லைக் கேட்ட தோழியர்கள், உயர்ந்த நிலையில் உள்ள பெருமான் உன்னைக் காண வருவது சாத்தியமில்லை. அவரை நீ நாடுதல் எந்தவிதமான நன்மையும் இல்லை என்று அறிவுறுத்துகிறார்கள். சற்றே கோபமடைந்த நாயகி எம்மை நலிந்து நலிந்து துன்பம் தந்து தாங்கள் சாதிப்பது என்னவோ?  குளிர்ந்த நல்ல நறுமணம் கொண்ட திருவல்லவாழ் திருத்தலத்தில் கொடிய நஞ்சினைக் கொண்ட ஆதிசேடன் மீது அரிதுயில் கொண்டுள்ள பெருமானிடம் என் ஜீவன் உள்ளது. தோழிகளே! இவை அனைத்தையும் பெருமானிடம் சொல்லுங்கள் என்று கூறுகிறாள். 

நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டி தன்னைக் கனியை இன் அமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே?     3209 

      நன்மையை சொல்லும் தோழியரே! குளிர்ச்சியான திருவல்லவாழ் என்ற தலத்தில் சிறந்த அந்தணர்களால் செய்யப்படும் வேள்விப்புகை கரிய நிறத்தோடு உயர்ந்த வானத்தை மறைக்கும். அங்கு நின்றருளும் வெல்லக்கட்டியை, கனியை, இனிப்பான அமிர்தத்தை, எனக்கு நலம் தரும் ஜோதியை என் விழிகள் குளிரக் காணுகின்ற திருநாள் எப்போது வரும் என்று வினவுகிறார் ஆழ்வார்.   
      பகவானையே என்றும் தொழுது வாழும் நல் அந்தணர்கள் நடத்தும் யாகத்தில் வரும் வேள்விப் புகையானது விண்ணைச் சென்று முட்டுகின்றது. கன்னலையும், பழச்சாறையும், அமுதத்தையும் கொண்ட எம்பெருமான் என் நலனைக் கொண்டு ஒளியாகக் காட்சி தருகிறார். இவரைக் காண அனைவரும் செல்கிறீர்கள். ஆனால் நானோ வாசலில் ஒதுங்கியுள்ளேன். அவர் குழந்தையான என்னை விட்டு மற்ற குழந்தைகளை அரவணைக்கிறார். ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார். இத்தகைய நிலையில் நான் உள்ளேன் என்று வருந்திக் கூறுகிறாள்.  

காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே?.    3210 

      கொவ்வைக்கனி போன்ற வாயிதழினைக் கொண்ட பெண்களே! வண்டினுடைய ராகமும், பசுமையான தென்றலுமாக எங்கும் பரவி, ஓங்கி வளர்ந்த மரங்கள் காய்களும், பழங்களும், பூக்களுமாகச் செழித்து வளமான அழகிய கடற்கரைத் தோட்டங்களைக் கொண்ட திருவல்லவாழ் திவ்யத்தலத்தில் வாமனனாக அவதரித்த கோலபிரான் நின்றருளுகிறார். அவரது தாமரைப் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் திருநாள் என்று வரும் என்று கேட்கிறார் ஆழ்வார்.
      சிறுவடிவாய் அவதரித்த வாமன மூர்த்தி இத்தலத்தில் கோலப்பிரானாக வாசம் செய்கிறார். அவரது தாமரை போன்ற திருவடிகளை என்று காண்போமா என்று நான் அறியேன்.  ஒரு கொடிய அசுரனான மகாபலிக்குக் கிடைத்த பாக்கியம்கூட எனக்குக் கிட்டவில்லேயே! அனைவரும் பெருமானை தரிசித்த நிலையில் என் முன்வினைப்பயன் காரணமாக நான் அவரைக் காண இயலவில்லை. கரிய வண்டுகள் ராகம் பாடித் திரிகின்றன. பசுமையான தென்றல் என்னை துன்பத்தில் ஆழ்த்துகின்றது. மலர் வனங்கள் சூழ்ந்துள்ள இத்தலத்துப் பெருமானை நான் என்று காண்பது என்று துன்பம் கொள்கிறாள் தலைவி. 

பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ் ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்தொறுமே?.     3211 

பாவை போலே அழகிய  தோழிகளே!  கடல் போன்று பெரிய  தடாகங்களுக்குள்ளே  உயர்ந்த தாமரைப் பூக்களும்  செங்கழுநீர் மலர்களும்,  பெண்களின் ஒளிபொருந்திய  வதனத்தின் அழகையும்,  கரிய விழிகளின் அழகையும்  பறிக்கும்படி இருக்கும்  திருவல்லவாழில் இருக்கும்  எம்பெருமான்  இந்த உலகங்களை  பிரளய காலத்தில் உண்ட  நம்பிரானின்  திருவடிகளின் மீது  அலங்கரிக்கப்பட்ட  மலர்களையாவது வணங்க  நாள் தோறும்  கூடுமோ?
      நம் பிரான் ஸ்ரீவல்லபனின் பாதங்களின் மேல் சாற்றப்பட்ட அழகிய மலர்களையும், குளிர்ந்த திருத்துழாயினையும் பிரசாதமாக நான் தொடக்கூடுமோ? என்கிறாள். தோழிகளே என் மனம் என்னிடத்தில் இல்லாத நிலையில் நான் உங்கள் சொல்லை கேட்க மாட்டேன் என்கிறாள்.  தோழிகள் அனைவரும் என்ன சொல்லி இவளைத் தேற்றுவது என்று தவிக்கின்றனர். இத்தலத்துத் திருக்குளத்தில் அழகிய பெண்டிர்கள் முகங்கள் காணும் என்கிறார். ‘அல்லிக்கமலம் முகம் காட்டும் அணியழுந்தூர்’ என்று மங்கை மன்னன் கூறியது போன்று பெருமானின் திருவதனம் அத்தனை அழகுடையதாகக் காட்சியளிக்கிறது. அதனைக் காண்பது என்றோ என்கிறார். 

நாள்தொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்
ஆடு உறு தீங் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே? .     3212 

      அழகு மிகுந்த நெற்றியையுடைய பெண்களே! எங்கும் காற்றில் அசைந்தாடும் இனிப்பான கரும்பும் மற்றும் குளிர்ச்சியுள்ள செந்நெற்பயிர்களும், பக்கங்களில் வண்ண மலர்கள் நிறைந்த தடாகங்களும் கூடிய பசுமையான வயல்கள் சூழ்ந்த கோலபிரானின் மண்ணளந்த நீண்ட திருப்பாதங்களைத் தினமும் இடைவெளியின்றி வணங்க முடியுமோ என்ற கேட்கிறார் ஆழ்வார்.
      நான் கொண்ட பக்தியானது நாள்தோறும் எவ்வித தடங்கலுமின்றி விடுபாடின்றி ஆற்ற வேண்டும்.    இத்தகைய பக்தியுடன் அவனைத் தொழ வாய்ப்பு கிட்டுமா என்று கேட்கிறாள். ஆச்சாரிய உபதேசமும், இராகத்துடன் கூடிய பாடலுடன் அவனைத் தொழ வேண்டும். இத்தகைய திருவிக்கரமப் பெருமானின் திருவடியைத் தாங்குவது எப்போதோ? உலகை அளந்தபோது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களின் தலையிலும் தனது திருவடியைத் தடவினார். அத்தகைய திருவடியை காண்பது எப்போது என்கிறார். பகவானின் திருவடிகளை இடைவெளியின்றி வணங்கி இந்த நிலையற்ற வாழ்வினைக் கடக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறார் ஆழ்வார்.     

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ
குழல் என்ன யாழும் என்னக் குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல் அருளே?      3213 

      குளிர்ந்த சோலையுள் தேனை உறிஞ்சி, குழலிசையோ, யாழிசையோ என்னும்படி இளம் வரிவண்டுகள் மழலைப் பேச்சில் ரீங்கரிக்கும் திருவல்லவாழ் திவ்ய தலத்தில் வேகமாகச் சுழலும் சுதர்சனத்தைத் தரித்திரிக்கும் பகவான் இயல்பாகவே அருளை வாரிப்பொழிபவர். அவரை நாம் தரிசித்துக் கைதொழும் நாள் எப்போது வரும்? அப்புறமல்லவா கழன்று விழும் நம் கைவளை பூரித்துக் கையில் தங்கும் என்கிறாள் தலைவி.
      நாயகியானவள் பெருமானை கைதொழுது வணங்கும்போது அவள் அணிந்துள்ள கழல் வளையானது முழங்கை வரை செல்கிறது. அவனைத் தொழுது பூரித்தால் என் கழல்வளை கழலாது. தொழவில்லையெனில் கை மெலிந்து கழல்வளை கழன்று விழும் என்று கூறுகிறாள்.  என் கழல் வளை கழலும் வளையாகிடக்கூடாது என்கிறாள். இப்பாட்டில் ‘நாம் தொழ’ என்னும் சொற்களில் யான் துன்புற்று இறுதியில் பெருமானைக் காணும் பேறு பெறுகிறேன். இப்பேறு தங்களுக்கும் கிடைக்கப்பெறுகிறது என்று தோழிகளைக் கூறுவது போன்று நம்மையும் சேர்த்துக் கூறுகிறார்.  

தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே? 3214 

      தோழியர்களே! நம் பகவான் நாராயணன் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டு மண்ணுலகத்தாரும், விண்ணுலகத்தாரும் வணங்கும்படி திருவல்லவாழ் நகரில் நின்றருளுகிறான். அங்கே ஆயிரக் கணக்கான விஷ்ணு பக்தர்கள் நாட்டு நலம் கருதி வேள்வி முதலான நற்செயல்களைச் செய்கிறார்கள். இவ்வாறு அருள் மழை பொழியும் பெருமானின் நாமாக்களை அவன் அருளால் சொல்லி அனுபவிக்க முடியுமோ? என்று கேட்கிறார்.
      பெருமானின் அருள் பெற்று என் பாவங்கள் அனைத்தும் விலகின.  அவரது அருளினால் எனக்கு நன்மைகள் கிட்டும். அதனால் மீண்டும் அவனை நாடி அவன் மீது அன்பு ஏற்பட்டு அவனது நாமங்களைச் சொல்வேன். விண்ணிலும் மண்ணிலும் உள்ளோர் வந்து சேவிக்கும் தலமாகும். பெருமானின் நல்லருளைப் பெற்று வாத்சல்யத்தோடு இருப்பவர், அவரிடம் உள்ள குணத்தைவிட மேன்மையாக இவ்வூர் மக்களுக்கு இருக்கும் என்கிறார். அத்தகைய திருவல்லவாழ் நாராயணனின் நாமங்களைச் சொல்வீர்களாக தோழிகாள்! என்று கூறுகிறார். 

நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடிமேல்
சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.    3215 

      சஹஸ்ர நாமங்களையுடைய எம்பெருமானின் திருவடி மேல் காவலையுடைய தென் குருகூர் சடகோபர் ஆராய்ந்து அருளிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துப் பாமாலைகளும் க்ஷேமத்தையுடைய திருவல்லவாழ் தலத்தைக் குறிப்பதாகும். இவற்றைத் தினமும் பக்தியுடன் படிப்பவர்கள் சிறப்போடு சிறந்து வாழ்வார்கள் என்று கூறுகிறார்.
      திருவாய்மொழியில் உள்ள இப்பத்துப் பாசுரங்களைச் சொல்லக் கூடியவர் சிறந்தே பிறந்தவர்களாகக் கருதப்படுவர்.  இந்தத் தென்திசை நகரில் உள்ள மக்கள் பிறக்கும்போது சிறப்பினைப் பெற்று பிறந்தார்கள். சாஸ்திர நாமங்களால் சொல்லப்பட்ட நம்பெருமானின் திருவடியின் விஷயமாக அங்கு மிகவும் க்ஷேமமாக உள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் கூறிய இத்தகைய நாமங்கள் ஆயிரத்துள் ஸ்ரீவல்லபனைப் பற்றி பாடிய இப்பத்துப் பாசுரங்களைச் சொல்பவர்கள் சிறந்தே பிறந்தவர்களாகக் கருதப்படுவர் என்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...