திங்கள், 10 நவம்பர், 2025

95. திருமெய்யம்

 


 திருமங்கையாழ்வார்                                                                                         பெரிய திருமொழி 

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய் உலகு உய்ய நின்றானை                            அன்று பேய்ச்சிவிடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ                                                                                                                                                                                     கானில்
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெருநெறியை   வையம்                                                                                                                                                                                             காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ்கடல்மல்லைத்                                                                                                                                                                         தலசயனத்தே.    1090 

      இவ்வுலகம் நன்முறையில் இயங்குவதற்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவில் பிரிந்து பிரளய காலத்தில் ஒன்றாக இணைந்து நிற்பவன். கிருஷணாவதாரத்தில் பூதகியின் விஷப்பாலை அருந்தியவன்.  கன்றுகளை திறமையுடன் மேய்த்து விளையாடியவன். காளமேகம் போன்றவன். தஞ்சையில் எழுந்தருளி இருப்பவன். உலகம் காக்க குதிரை மீது  கல்கியாய் அவதரிக்கப் போகிறவன். இத்தகைய பெருமை மிக்கவனை சோலைகள் சூழ்ந்த கடல் மல்லையில் தலசயனப் பெருமானாக தரிசித்தேன்.   அதர்மம் புரிகிறவர்கள் எத்தகைய உயரத்தில் இருந்தாலும் அவர்கள் அடக்கப்படுவார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது இப்பாசுரக் கருத்தாகும். 

பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானைப் பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரைமேல் கிடந்தானை பணங்கள் மேவி
எண்ணானை எண் இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண் ஆரக் கண்டுகொண்டேன் கடி  பொழில் சூழ் கடல்மல்லைத்   தலசயனத்தே   1095 

      மோகினியாய் அவதரித்து இனிமையான அமிர்தத்தை அசுரர்கள் உண்ணாதபடி தேவர்களுக்குத் தந்தவனை, பிரகலாதனுக்காக கோரைப் பற்களுடன் நரசிங்கமாய் உருவெடுத்து இரண்யனை அழித்தவனை, நீரால் சூழப்பட்ட திருமெய்யம் என்ற குன்றின் மேல் அனந்தனின் படங்களின் கீழே கண் வளர்ந்திருப்பவனை, அளவற்ற பெருமைகளைக் கொண்டவனை, தாமரை விழிகளைக் கொண்டவனை, நான் சோலைகள் நிறைந்த கடல் மல்லையின் தலசயனத்தில் தரிசித்தேன் என்கிறார் ஆழ்வார்.
      துர்வாச முனிவனின் சாபத்தால் இந்திரன் தன் சக்தியை இழந்தான். இதனால் அசுரர்களின் பலம் பெருகி தேவர்களுக்குத் துன்பம் தந்தார்கள். பெருமான் மோகினி வடிவமெடுத்து பாற்கடலில் வந்த அமுதத்தை அசுரர்கள் பெறாதவாறு தேவர்களுக்கு வழங்கினான். இத்தகையவன் திருமெய்யம் என்னும் திருத்தலத்தில் பாம்பணையில் பள்ளிகொண்டிருப்பவன்.  பக்தர்களுக்கு தனது கல்யாண குணங்களினால் நன்மைகள் பல அளிப்பவன். உறங்குபவன் போல் மக்களின் இன்னல்களை கண்டறிந்துக் காப்பவன். இத்தகையவன் தலசயனத்தில் சேவை சாதிக்கின்றான். 

நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும்  என்
முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே.      1206 

      சார்ங்கம் என்ற வில்லை வளைத்து அதை ஆள்பவனே! சுக்ரீவனின் நம்பிக்கையைப் பெற மாமரங்களை சாய்த்த பலம் பொருந்திய ஸ்ரீராமா! திருமெய்யம் என்னும் திருப்பதியில் ஆளப் பிறந்தவனே! பிரளய காலத்தில் ஆலிலை மேல் துயில் கொண்டனே! நான் உன்னை வணங்கும்படி அருள் செய்யாத போது ஒரு நாளாவது என் மார்பு உன் அகலமான மார்பில் இறுகும்படி அணைத்துக் கொள்ளக் கூடாதா? நீ அவ்விதம் என்னைக் கையாண்டால் கையில் வளை தங்காமல் தாம்முறுவது நடைபெறாது என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
      எனது பலம் உள்ளவரை உன் திருவடிகளில் சரண் செய்வதே என் கடமையாகும். என் நிலையறிந்து ஒரு நாளேனும் உன் திருமேனியைக் தரிசிக்க அருள் செய்யக் கூடாதா? இதையும் செய்யாத நிலையில் அடியார்களைக் காப்பேன் என்று கூறி வில் பிடித்துக் கொள்வது தகுமோ? நான் ஒருத்தி உனக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இத்தகைய பெருமை கொள்வது தகுமோ? மேனி இளைத்து உன் கையில் வரும் வளையானது நீ என்னை நெருங்கி வந்தால் அந்த மகிழ்வில் உடல் பருத்து வளை வெடித்துதான் போகுமே! இத்தகைய நிலை என்று வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறாள் பரக்கால நாயகி.       

கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே          1524 

      மிகுந்த காவலையுடைய நீண்ட சோலைகளைக் கொண்ட, காண்டவமென்னும் வனத்தை அக்னிக்கு இரையாக்கியவனை, திருமெய்யத்தில் கோயில் கொண்டிருக்கும் பகவானை, தேன் நிறைந்த கற்பக மரத்தை, சத்தியபாமா பிராட்டிக்காக துவாரகையில் கொண்டு வந்து நட்ட ஸ்ரீகிருஷ்ணனைத் தேடியலைந்து திருநறையூரில் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      அக்னி பகவானின்  பசியைத் தீரக்க எம்பெருமான் காண்டவ வனத்தை அழிக்கும்படி சொன்னார்.  அதன் காரணமாக அக்னியின் பசி அடங்கியது அதேபோன்று நமது தாகத்தையும் பகவான் தணிக்கக் கூடியவர். அதனால் அக்னியுடைய பசியும் அடங்கியது. சத்யபாமாவுக்காக கற்பக மரத்தை  தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தார். இதையறிந்த இந்திராணி அதனை இந்திரனிடம் சொல்லி தடுத்தார். அதனால் இந்திரன் போர் தொடுத்து வந்தான். ஆனால் பகவானின் தொடர்ந்த தாக்குதலால் நிலைகுலைந்து போய் தோற்றுப் போனான். அத்தகையவன் திருநறையூரில் வாசம் கொண்டுள்ளான். அவனை தரிசிக்க வாருங்கள் என்று கூறுகிறார்.

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ?         1660 

      அருவிகள் நிறைந்த திருவேங்கடம் அவன் இடம், இல்லை இல்லை திருநீர்மலை என்றும் பிதற்றுகிறாள். திருமெய்யப் பெருமானைப் பற்றி விசாரித்து வருகின்றாள்.  பெருமை பெற்ற கண்ணபுர சௌரிராஜனைப் பற்றி பேசும்போது உருகிப் போகிறாள்.  சரீரம் மட்டுமின்றி அவளது உள்ளமும் பலவீனமாயின. இப்படி ஒரு நிலையும் ஏற்படுமா? என்று புலம்பித்  தவிக்கிறாள் தாயார்.
      பகவானிடம் அன்பு தோன்றிவிட்டால் சரீரம், மனம், புத்தி இவை எல்லாமே வேறுபட்டதாகிவிடும். ஏனெனில் ஆன்மா என்பது சரீரமோ, மனமோ, புத்தியோ இல்லை. அது ஆண்டவனின் ஒளிக்கூறு.  ஆண்டவனுடன் ஐக்கியமாகும் போது அழியக்கூடிய சரீரத்தைப் பற்றியோ, நிலையில்லாத மனதைப் பற்றியோ அது கவலை கொள்வதில்லை. பகவானிடம் அன்பு மேலோங்கும்போது மற்றவை எவையும் சிந்தனையில் வராது என்பது இப்பாசுரக் கருத்தாகும்.

வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
     மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ
     தாமரைக் கண்கள் இருந்த ஆறு
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்
     செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்
     அச்சோ ஒருவர் அழகியவா!      1760 

      குன்றுகளால் சூழப்பட்ட திருமெய்யம் மலையில் எழுந்தருளியுள்ள அழகிய மணவாளர், மூன்றடி மண்ணில் உலகை அளந்த உத்தமரோ! தாமரை போன்று திருக்கண்களையுடையவரோ! என் சொல்வேன். நெடிதுயர்ந்தும், பரந்தும் இருக்கின்ற மலைகள் பிரம்மாண்டமாக இருப்பது போன்று அழகும் தேஜசும் உடையவராய், ஆயிரம் திருத்தோள்களும், பொன்னாபரணங்கள் அணிந்தவரோ. அச்சோ! இவரது அழகினை எப்படி கூறுவேன் என்று பரகாலநாயகி கூறுவது போல் ஆழ்வார் கூறுகிறார்.
      தோழியைப் பார்த்து பகவானின் அழகினையும், பெருமைகளையும் வியந்துப் போற்றுகிறாள். முற்பாட்டில் பெருமானுக்கு நான்கு தோள்கள் என்று கூறி இப்பாட்டில் அவருக்கு ஆயிரம் தோள்கள் என்கிறார். பெரியவாச்சான் பிள்ளை தனது வியாக்யானத்தில் ‘நான்கு தோள்களே ஆயிரம் தோள்களாகக் காணப்பட்டது, நம்பியைக் காண ஆயிரம் நயனம் வேண்டும், ஆயிரம் கண் கொண்டு காண வேண்டியபடி அழகு மிஞ்சி நிற்கின்றதே’ என்று கூறுவதாக அமைகின்றது. 

சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண்
விடலையைச் சென்று காண்டும்  மெய்யத்துள்ளே.   1852 

      சுட்ட சாம்பலை மேனியில் பூசும் சிவபெருமானுக்கு பிரம்மனால் ஏற்பட்ட சாபத்தினால் வந்த சங்கடத்தைத் தீர்த்தவன் எம்பெருமான்.  அத்தகையவன் என் நெஞ்சில் புகுந்து என்னை உருக்கி உண்கின்ற மணவாளனை இன்று திருநறையூரிலே தரிசித்து, நாளை திருமெய்யத்தில் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      சிவபெருமானை படைத்தது நான்தான் என்று பிரம்மன் அகந்தையினால் கூற அதைக்கண்டு வெகுண்ட சிவபெருமான் அவனது ஒரு தலையைக் கொய்தான். அதனால் கோபமுற்று பிரம்மன் சிவனுக்கு சாபம் தந்ததால் கொய்த தலை கபாலமாக சிவனின் விரலில் ஒட்டிக் கொண்டது. இந்த சங்கடத்தைத் தீர்த்தவன் எம்பெருமான்.  அத்தகையவன் என் உடலில் நுழைந்து நெஞ்சை உருக்கியவன் என்கிறார். தூய்மையுடைய மனம் தான் பகவானின் கோயில். அதனால் பகவான் ஆழ்வாரின் தூய்மையான நெஞ்சில் குடிபுகுந்து அவரை உருகும்படி செய்தார் என்று கூறுகிறார். அது போன்று நாமும் அத்தகைய தூய்மையான நிலையை அடையவேண்டும். 

மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கு ஏந்தும்
கையானை கை தொழா கை அல்ல கண்டாமே        2016  

       கறுத்த மை போன்ற பெரிய கடலையம், நீலமணி போன்ற மலையையும்காளமேகத்தையும், பறிக்கத் தூண்டும் நீலோற்பவத்தையும், காயாம் பூவையும் போன்ற கறுத்த தேகம் கொண்டவனை, திருமெய்ய மலையில் குடி கொண்டிருப்பவனை, பாஞ்ச சன்னியத்தை தரித்திருக்கும் திருக்கையானை கைகூப்பி தொழாத கைகள் கைகளே இல்லை என்று கூறுகிறார்.
      நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கைகள் பெருமானை வணங்குவதற்கு மட்டுமே என்ற கருத்தை முன்வைக்கிறார் ஆழ்வார். அடுத்தவரை துன்பம் கொள்வதற்கும்,  கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கும் நமக்கு கைகள் வழங்கப்படவில்லை. ஆதியந்தமற்ற பகவானை கை கூப்பித் தொழுவதற்கே என்கிறார் ஆழ்வார். இரு கை கூப்பி பகவானை வணங்க, வணங்க நம்மில் கொண்டிருக்கும் தீய எண்ணங்கள் நம்மை விட்டு அகலும். நம் உள்ளமே கோவிலாக மாறி அதில் பகவான் வந்து குடியேறுவான் என்பது இதன் கருத்தாகும். 

 திருமங்கையாழ்வார்                                                                                 திருக்குறுந்தாண்டகம் 

பிண்டி ஆர் மண்டை ஏந்திப் பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே?         2050 

      உளுத்துப் போன மாமிசத் துகள்கள் உதிரும் மண்டையோட்டை தரித்து வெளி இல்லங்களில் பிச்சை ஏற்றுத் திரியும் சிவபிரானின் சாபத்தைத் தீர்த்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் அருள் புரியும் இடமான திருக்கண்டியூர், திருமெய்யம், திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பேர்நகர், மாமல்லபுரம் போன்ற திவ்யதேசங்களுக்கு சென்று சேவிப்பவர் பிறவிப் பயன் பெறலாம். மற்றவர்கள் பாவ வினைகள் தீர்ந்தும் முக்தியடையாத நிலை பெறுவர். இங்கு பிறவிப்பயன் என்று கூறுவது பிறப்பு இறப்பு இல்லாத பேரானந்த நிலை! ஆத்மாவை அறிந்து விட்ட தூய நிலை, வேறுபாடுகளைக் கடந்துவிட்ட ஒரு அற்புத நிலை! பகவானின் ஒரு கூறாய் நாம் இருப்பதை உணர்த்தும் நிலை என்பதாகும். எனவே மக்கள் அனைவரும் இத்தகைய திவ்யதேசங்களுக்குச் சென்று பெருமானை சேவித்தல் வேண்டும் என்று உணர்த்துகிறார்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...