திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
சொல்லு வன் சொல் பொருள் தான் அவை
ஆய்ச்
சுவை ஊறு ஒலி நாற்றமும்
தோற்றமும் ஆய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
இடம் தான் தடம்
சூழ்ந்து அழகு ஆய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில்
பலராய்ப் பல வேந்தர்
வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே. 1128
நித்ய சப்தங்களும், வேதமும், அவை உரைக்கும்
பொருள் ஆகியவற்றிற்குத் தலைவனாய், சுவை, ஊறு, ஒளி,
மணம், வடிவம்
ஆகிய ஐம்புல இன்பங்களுமாய், சிவனுக்கும், பிரம்மனுக்கும் அந்தர்யாமியாய் இருந்து உலகைக் காக்கும் நாராயணன் உறைவிடமாய்க் கொண்டிருப்பது அழகிய காஞ்சியிலே. பல்லவன், வில்லவன் ஆகிய அரசராலே வணங்கப்படும் வீரக்கழல்களையுடைய
மாமல்லபுரத்து வேந்தனான பல்லவர் வழிபட்ட விண்ணகரமாகும் என்கிறார் ஆழ்வார். எம்பெருமானானவன் உலகில் சாமான்ய
ஓசையாலும், வேதங்களாலும்
நிறைந்திருப்பவன். ஞானேந்திரியங்களால் அனுபவிக்கப்படுபவன், முத்தொழிலையும்
நிர்வகிப்பவன், உலக
விஷயங்கள் சிறிதுமறியாத யோகிகளுக்கு தானேயாயிருப்பவன். பல்லவர்களும் வில்லவர்களும்
வணங்கப்பெற்ற பாதத்தையுடையவன். திருக்கடல்மல்லையை படைவீடாகக் கொண்டு ஆட்சிபுரியும்
இத்தகையவர்கள் கைங்கர்யம் புரிந்து வரும் பரமேஸ்வர விண்ணகரத்தில் கோயில்
கொண்டுள்ளான் என்பது இதன் பொருளாகும்.
கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
சுடரும் நிலனும்
மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்
தடம் மா மதிள் சூழ்ந்து
அழகு ஆய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில்
செருவில் திறல் வாட்டிய
திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே. 1129
மேகங்கள் சூழ்ந்த பரந்து விரிந்த
ஆகாயத்தையும், சமுத்திரத்தையும், சூரியன்
சந்திரன் என்னும் சுடர்களையும், பூவுலகையும், மலைகளையும் தனது தொப்புளிலிருந்து தோற்றுவித்த தாமரை போன்ற
விழிகளையுடையவனின் இருப்பிடம் தடாகங்களும், மதில்களும் சூழப்பட்ட காஞ்சியில் பாண்டியனை போரில் வென்ற
வலிமையான பல்லவ மன்னன் வணங்கும் வைகுண்டப் பெருமாள் கோயிலாகும் என்பது பொருளாகும்.
உலகங்களைப் படைக்கும் பிரம்மனை
தனது உந்தியில் படைத்த பெருமான் உறையுமிடம் பரமேஸ்வர விண்ணகரமாகும்.
இப்பாசுரங்களில் பல்லவ அரசர்களை ஆழ்வார் போற்றிப் பாடுகிறார். அவர்கள் இத்தலத்தைப்
போற்றிப் பாதுகாத்து வழிபட்டதை நினைவு கூறுகிறார். பல்லாயிரம் தேர் வீரர்களோடு போர்
புரிந்து வெற்றி வாகை சூடியவர்கள் பல்லவ மன்னர்கள். அத்தகையவர்கள் வழிபட்ட
இத்திருத்தலத்தில் வைகுண்டப் பெருமாள் சேவை சாதிக்கின்றார் என்ற பொருளில் அமைந்துள்ளது.
உரம் தரு மெல் அணைப் பள்ளி
கொண்டான்
ஒருகால் முன்னம் மா
உருவாய்க் கடலுள்
வரம் தரு மா மணிவண்ணன் இடம்
மணி மாடங்கள் சூழ்ந்து
அழகு ஆய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
நெடு வாயில் உகச்
செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே. 1130
முன் காலத்தில் தனது மாபெரும்
வடிவுடன் திருப்பாற்கடலில் வலிமைமிக்க மிருதுவான ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவன்.
அனைவரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும், வரதன் என்ற பெயர் கொண்ட சிந்தாமணியைப் போன்ற எம்பெருமான்
உறைவது ரத்தினங்கள் கொண்ட மணிமாடங்கள் சூழ்ந்த அழகிய காஞ்சிபுரத்திலே. மன்னை
என்னும் நகரில் எதிரிகளின் வேல் வாயில் விழுந்து முடியும்படி யுத்த களத்தில்
நிறைந்திருந்த பல்லவ மன்னன் வணங்கிய வைகுந்தப் பெருமாள் கோயிலாகும் என்று
கூறுகிறார்.
அனந்தாழ்வான் மீது சயனித்தவனும், திருவத்தி
மாமலையில் பேரருளாளனாக,
வரதராஜனாக சேவை சாதிப்பவனான எம்பெருமான் வைகுண்டநாதனாக காட்சி
அளிக்கிறான். பிராட்டிகளுடன் தன் மீது ஏறித் துவைத்தாலும் வருந்தாது பொறுமையுடன், வலிவுடன்
தாங்கி நிற்பவன் ஆதிசேஷன். இப்பாசுரத்தில் பல்லவ ராஜனுடைய பெருமைகளை பேசுகிறார். இவ்வரசன் பல ராஜவீரர்களைப் போரில் வென்றவன்.
மன்னை என்னும் நகரில் எதிரிகளை வென்றவன். அத்தகையவன் பெருமானை வணங்கும் கோயில்
வைகுந்த விண்ணகரமாகும் என்று கூறகிறார்.
அண்டமும் எண் திசையும் நிலனும்
அலை நீரொடு வான் எரி
கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
ஒளி மாடங்கள் சூழ்ந்து
அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
விரைந்தார் இரியச்
செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே
1131
அண்டங்களையும், எட்டுத்
திசைகளையும், கடல்களையும், ஆகாயத்தையும், நெருப்பையும், காற்றையும்
மற்றும் எண்ணற்ற பொருட்களையும் திருவயிற்றில் வைத்துக் காத்தவன், என் குலத்
தலைவன் வாழுமிடம் ஒளிமிக்க மாடங்கள் சூழ்ந்த அழகிய காஞ்சியிலே போரிட வந்த
எதிரிகளின் கூட்டம் சிதறி ஓடும்படி வில்லினை வளைத்தவனான பல்லவர்கோன் வணங்கிய
வைகுண்டப் பெருமாள் கோயிலாகும்.
பிரளய காலத்தில் தனது
திருவயிற்றில் அனைத்து உலகங்களையும் உண்டு
காத்தவன் எம்பெருமான். மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்
அனைத்தையும் படைத்தான் இறைவன். அத்தகையவற்றை பிரளயம் கொண்டு செல்ல அனுமதியாமல்
நம்மைக் காத்தவனாகத் திகழ்கின்றான். அத்தகையவன் பரமேச்சுர விண்ணகரத்தில்
குடிகொண்டுள்ளான். இத்தலத்தைக் காத்து வந்த பல்லவராஜன் தன்னைப் எதிர்த்து வந்த
சத்ருக்களை தனது வில்லினை வளைத்து சிதறி ஓடும்படி செய்து அவர்களை வளைத்துத்
தோற்கடித்தான் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
தூம்பு உடைத் திண் கை வன் தாள்
களிற்றின்
துயர் தீர்த்து அரவம்
வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு
இடம் தான் தடம்
சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
திசைப்பச் செருமேல்
வியந்து அன்று சென்ற
பாம்பு உடைப் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே. 1132
துளையுடைய துதிக்கையையும், வலிமையான
கால்களையும் உடைய கஜேந்திரன் என்னும் யானையின் துன்பம் நீக்கியவன்,
காளியன் என்ற பாம்பு அஞ்சும்படி முன்பு பொய்கையில் பாய்ந்தவன்
வாழும் இடம் தடாகங்கள் சூழந்த அழகிய காஞ்சி மாநகரில் தேன் நிறைந்த சோலைகளையும், மலைகள் போன்ற
மதில்களையுடைய பாண்டிய மன்னனைப் போரில் வென்ற அரவக் கொடியை உடைய பல்லவ மன்னன்
வணங்கும் பரமேச்சுர விண்ணகரமாகும்.
முதலை வாயில் அகப்பட்ட யானையின்
துயரினைத் தீர்த்தவன் எம்பெருமான்.
யமுனையை நஞ்சினால் கலக்கிய காளிங்கனின் கொழுப்பை அடக்கியவன் எம்பெருமான்.
இங்கு முதலை மற்றும் பாம்பு என்ற சொல் நமது அசுர குணங்களைக் கொண்டதாகக் கொள்ளலாம். நமது ஆன்மீக
முன்னேற்றத்திற்குத் தடையான ஆசை, கோபம், சுயநலம், துரோகம் போன்ற தீயகுணங்கள் நம்மைப் பற்றித்
துன்புறுத்துகின்றன. எனவே பெருமானிடம் நாம்
முழு பக்தி வைத்து வணங்கினால் நம்மில் கொண்டுள்ள அசுர குணங்கள் தானே விலகிச்
சென்று நாம் பரமபதம் செல்ல வழிவகுக்கும் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
திண் படைக் கோளரியின் உரு ஆய்த்
திறலோன் அகலம்
செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம்
பொரு மாடங்கள் சூழ்ந்து
அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
விடை வெல் கொடி வேல்
படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே. 1133
முற்காலத்தில் வலிமை மிக்க
நகங்களையுடைய நரசிங்கமாக வடிவெடுத்து இரணிய கசிபுவின் மார்பைப் புண்படும்படி
இரண்டாகப் பிளந்த எம்பெருமானின் இருப்பிடம் பரமேச்சுர விண்ணகரமாகும். இது மாடங்கள்
சூழ்ந்த அழகான காஞ்சியில் வெண்கொற்றக் குடையின் நிழலில் தன் கட்டளை செல்லும்படி
பாம்புக் கொடியையும், வேற்படையையும், படைகளின்
முன்னே ஏந்தி நீதி தவறாதவனான பல்லவ வேந்தன் பணிந்த கோவிலாகும்.
இரணியனை அழித்த நரசிம்ம மூர்த்தி
இன்றும் விண்ணகரத்தில் சேவை சாதிக்கின்றான். அவர் பயன்படுத்திய நகத்தையே திண்படை
என்று ஆழ்வார் கூறுகிறார். இப்பாசுரத்தில் ஆழ்வார் பல்லவராஜனின் மேன்மையைப்
புகழ்ந்து பாடுகிறார். அவனது கொடியானது நஞ்சுடைய நாகத்தை கொடியாக கொண்டதால்
நாகக்கொடியோன் என்று அழைக்கப்பட்டான். முற்காலத்தில் இவ்வரசன் ரிஷபக் கொடியை
கொண்டிருந்தான் என்றும் பின்பு நாகலோகம் சென்று வெற்றி கொண்டவுடன் நாகத்தைக்
கொடியாகக் கொண்டான் என்ற வியாக்யானம் கூறுகிறது.
இலகிய நீள் முடி மாவலி தன்
பெரு வேள்வியில் மாண்
உரு ஆய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
இடம் தான் தடம்
சூழ்ந்து அழகு ஆய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனைக்
கன்னி மா மதிள் சூழ்
கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே.
1134
முன் காலத்தில் விளங்கா நின்ற,
நீண்ட முடியை கொண்ட மகாபலியின் பெரிய யாகத்திலே வாமன வடிவம் கொண்ட பெருமான்
வஞ்சனையாய் நீர்த்தாரை ஏற்று உலகை அளந்து கொண்டவனின் ஆலயம் பரமேச்சுர
விண்ணகரமாகும். தடாகங்கள் சூழ்ந்த அழகிய
காஞ்சியிலே அழிவில்லாத மதில்களால் சூழப்பட்டதாகும். மேலும் பாண்டியனைக் கரூவூர்
நகரம் கலங்குமாறு படைகள் தெறித்தோட வெற்றி கொண்ட பல்லவ அரசன் வணங்கும் இடமாகும்
என்ற ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
குறட்பிரமசாரியாய் மாவலியின்
யாகபூமியிலிருந்து எழுந்தருளி வஞ்சனையுடன் மூன்றடி மண் கேட்டு மூவடியைத்
திருவடியில் கொண்டு சேர்த்தது போன்று நமது அகங்காரங்களையும் தனது திருவடியில்
சேர்க்கும் வகையில் இத்தலத்தில் சேவை சாதிக்கிறான். நமது மனநிலைகளுக்கு ஏற்றவாறு
செயல்களும் நடைபெறுகின்றன. நற்செயல்களை செய்து பெருமானிடம் பக்தி கொண்டால் நற்கதியை அடையலாம் என்பதும்
இதன் பொருளாகும்.
குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால்
குரங்கைப் படையா
மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்
மணி மாடங்கள் சூழ்ந்து
அழகு ஆய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்
வெருவச் செரு வேல் வலங்
கைப் பிடித்த
படைத் திறல் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே . 1135
முன்பு வெண்கொற்றக் குடையை உடைய
சக்ரவத்தி திருமகனாய் அவதரித்து, வானரப் படையாகக் கொண்டு மலைகளால் தெற்கு சமுத்திரத்தில் அணை
கட்டிக் கடலை அடைத்தவனான என் குலத்தலைவன் உறைவது மணிமாடங்கள் சூழ்ந்த அழகிய
காஞ்சியி மிடுக்கான நடையுடைய மன்னனை நென்மேலி என்னும் நகரில் பயந்து ஓடும்படி
காளையின் வலிமை பெற்று வலக்கையில் கூரிய வேல் பிடித்த படைத்திறம் கொண்ட பல்லவ
மன்னன் வணங்கும் பரமேச்சுர விண்ணகரமாகும்.
தந்தை சொல்லை ஏற்று கானகம்
சென்று சீதையைக் கவர்ந்த இராவணனை வதம் செய்தவன் சக்ரவர்த்தித் திருமகனாகும்.
அத்தகையவன் கடலைக் கடக்க வானர சேனைகளின் உதவியுடன் பெரிய அணை கட்டினான்.
அத்தகையவன் பரமேச்சுர விண்ணகரத்தில் சேவை சாதிக்கிறான். இத்தகைய திவ்யதேசம் பல்லவ
ராஜனின் பணிவிடைகளைப் பெற்றதாகும். வில்லவன் என்னும் எதிரி அரசனை தோற்று ஓடும்படி
செய்தவனான பல்லவ மன்னன் வணங்கும் தலமாகத் திகழ்ந்தது என்கிறார் ஆழ்வார்.
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
முன்னே
ஒருகால் செருவில்
உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்
தடம் சூழ்ந்து அழகு ஆய
கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெடக்
கடல்போல முழங்கும்
குரல் கடுவாய்
பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்
அதுவே.
1136

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக