ஞாயிறு, 23 நவம்பர், 2025

73. திருவாறன்விளை

 


நம்மாழ்வார்                                                                                                                திருவாய்மொழி 

இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும்
     இவ் ஏழ் உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து
     ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில்
     சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும்
     நாள்களும் ஆகும்கொலோ?    3436     

அழகிய தாமரை மலரில்  பிறந்த திருமகளும்  தானும் பெருமானும்  இன்பம் உண்டாகும்படி  இந்த ஏழு உலகங்களுக்கும் இன்பம் உண்டாக்க  ஒரு சேர  எழுந்தருளியிருந்து   எங்கள் ஸ்வாமியானவர் அன்போடு மனம் பொருந்தி  இருக்கும் இடம்  அழகிய சோலைகள் சூழ்ந்த  திருவாறன்விளை என்னும் திவ்ய தேசத்தில்  அன்போடு மனம் பொருந்தி  அமர்ந்து பக்தியுடன்  வலம் செய்து  கைகளைக் கூப்பி  வாழ்த்தி வணங்கும் நாள்  என்று உண்டாகுமோ! என்று வினவுகிறார்.
எழில்மலர் மாதரான மகாலட்சுமியடன் சேர்ந்திருக்கும் பெருமானுக்கு ஆழ்வார் பாசுரங்களைக் கேட்டு ஆனந்தம் கொண்டு முகம் மலர்ந்ததைப் பார்த்து பிராட்டிக்கு ஆனந்தம். இவ்விருவரும் ஆனந்தம் கொள்வதைக் கண்டு ஏழுலகத்தாரும் இன்பம் கொண்டனர்.   திருவாறன்விளை என்னும் திவ்யத் தலத்தில் இனிதோடு வீற்றிருக்கின்றார். பெருமானுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பதை விட ஆறன்விளையில் வந்து, அமர்ந்து, தங்கியிருப்பது ஆனந்தம். பாசுரங்கள் பாடி ஆழ்வார் அடுத்த தலத்திற்குச் சென்றுவிட்ட நிலையிலும் அதன் இனிமையில் சொக்கிப் போய் பெருமான் இத்தலத்திலேயே தங்கி விடுகிறார்., தான் விருப்பத்தோடு சில காலம் தங்கியிருந்து வலம் வந்து, கைகூப்பி வணங்கும் நாட்கள் என்று வருமோ என்று ஆழ்வார் ஏங்குகிறார். இக்கருத்து உலக மாந்தர்களுக்காகவும் வேண்டுகிறார் என்று கொள்ளலாம்.    
 

ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்
     முற்றவும் ஈர் அடியே
ஆகும்பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன்
     அமர்ந்து உறையும்
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு
     மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து
     கைதொழக் கூடும்கொலோ?   3437 

      பகவானானவன் அகன்ற இவ்வுலங்களை தன் இரண்டு திருவடிகளாலே தாவி அளந்து கொண்டான். இதனைக்கண்ட அனைவரும் குள்ள உருவம் கொண்ட வாமனனால் உலகினை அளப்பது சாத்தியமா? என்று நினைக்குங்கால் உலகத்தோரின் ஐயமே இல்லாதவாறு நொடிப்பொழுதில் அளந்து முடித்துவிட்டார். திருவிக்கிரம அவதாரம் செய்யுங்கால் இத்தலத்தில் திருக்குறளப்பனாக வந்தமர்ந்தார். நெடிய கொடிமாடங்கள் சூழ்ந்துள்ள திருவாறன்விளையில் நல்ல பன்னீர் புஷ்பங்கள் மிகுந்த மணம் வீசக்கூடிய தூய்மையான தீர்த்தங்களையும் கொண்டு பெருமானுக்கு திருமஞ்சனமாட்டி, நல்மலர்களை பெருமானுக்கு அளித்து, வலம் வந்து, அடியேனும், அனைவரும் அதைப் பருகும் பாக்கியம் கிடைக்குமா என்கிறார்.
ஆகுமோ!’ என்ற சந்தேகம் ஒரு சிறிதும் இல்லாமல் அகன்று உலகமனைத்தும் இரண்டு திருவடிகளுக்குள்ளே ஆகும்படி வளர்ந்த அழகிய வாமனனாகிய உபகாரன் பொருந்தி எழுந்தருளியிருக்கின்ற, பெரிய ஆகாசத்திலே விளங்குகின்ற கொடிகளையும் மாடங்களையும் நீண்ட மதிள்களையுமுடைய திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்தை, சிறந்த வாசனை பொருந்திய தண்ணீரைக்கொண்டு தூவி வலம் வந்து கையால் தொழுவதற்குக் கூடுமோ? என்கிறார். 

கூடும் கொல் வைகலும்? கோவிந்தனை
     மதுசூதனைக் கோளரியை
ஆடும் பறவைமிசைக் கண்டு கைதொழுது
     அன்றி அவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து
     ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ
     வாய்க்கும்கொல் நிச்சலுமே?    3438 

       தொண்டர்களிடம் வாத்சல்யத்தைக் காட்டும் கோவிந்தனை, தொண்டர்களுக்கு இடர்வரும் நேரத்தில் கருணைக்காட்டி சாமர்த்தியமாக அதைக் களையும் மதுசூதனனை, அவருக்குள்ள மிடுக்கும், பவித்ர அழகும் கொண்ட அவரை நெருங்கி வராதவர்களுக்கு, அவரை விட்டு அகன்று விடுபவராகவும் ஆழ்வார் திகழ்கின்றார். வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் பெருமான் கருடப் பறவையின் மேல் அமர்ந்து திருக்குருகூர் செல்ல, ஆழ்வாரோ திருவாறன்விளை சென்றுவிட, குருகூர் வந்த பெருமானை சற்றே சேவித்து நான் புகும் ஊர் வாறன்விளை என்கிறார். பெரும் புகழ்மிக்க சதுர்வேதங்கள் ஓதும், ஐந்துவகை வேள்விகள் நடத்தும், வேதங்களை விரிவாக சொல்லும் வைதீகர்கள் வாழும் இவ்வூரில் தங்கி வாசம் கொள்ளும் பாக்கியம் நித்யம் கிடைக்குமா என்கிறார் ஆழ்வார். 

வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து
     ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்
     வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்
     வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்
     மலர் அடிப்போதுகளே?    3439 

      பெருமானைத் தொழும் பேறு நித்தியம் அடியேனுக்குக் கிடைக்குமா? எனது மனோரதம் தினசரி இத்தகைய தரிசனம் கிடைக்கக் காத்திருக்கிறேன். நன்கு வாய்த்துள்ள நிலங்களில் இனிய கரும்பும், நன்கு முற்றிய பெருநெல்லும் சூழ்ந்துள்ள திருவாறன்விளை, பெரும் புகழினையுடைய மூவுலகங்களுக்கும் பெருமானான, வடமதுரையில் பிறந்த அந்தக் நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரான் குடிகொண்டுள்ள இடமானது அப்ராகிருத திவ்யமங்கள திருமேனியைக் கொண்ட அழகிய திருவிக்கிரகத்திற்கு கைங்கர்யம் பண்ணக்கூடிய பாக்கியம் அடியேனுக்குக் கிட்டுமோ? என்கிறார். இது சாமானிய மக்களான நமக்கும் சேர்த்தே வேண்டுகிறார். வினைகளால் மறைக்கப்பட்ட கண்களிலுள்ள மயக்கத்திலிருந்து விடுபட்டு திருத்தலங்கள் தோறும் சென்று அவனை சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும் என்றவாறு ஆழ்வார் உணர்த்துகிறார். 

மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்
     இருத்தி வணங்க
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு அணை அப்பன்
     அமர்ந்து உறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு
     மதிள் திருவாறன்விளை
உலகம் மலி புகழ் பாட நம்மேல் வினை
    ஒன்றும் நில்லா கெடுமே.    3440 

        திருவாறன்விளையில் நமக்காக சேவை சாதிக்கும் பெருமான் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பெருமானாகும்.  இத்தலத்துப் பெருமானின் புகழினைப் பாடப்பாட வினைகள் அனைத்தும் அகன்றுவிடும். இத்தகைய பெருமானின திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்து வணங்க வேண்டும். பல அடியார்கள் கூடியிருந்த இடத்தில் ஆழ்வார் தனித்து ஒதுங்கியிருக்க சட்டென்று பெருமான் அவரை அருகில் வருமாறு அழைத்து ஆழ்வாருக்கு அருள்பாலித்தார். அத்தகைய பெருமான் அரவிணைப் படுக்கையாகக் கொண்டு அதன்மேல் அமர்ந்துறையும் நெடிய மணிமயமான உயர்ந்த மாட மாளிகைகளும், வலிமைமிக்க அழகான மதில்களும் கொண்ட, உலகம் முழுதும் புகழ்மிக்க பெருமானின் புகழ் பாட நமது முன்வினைப்பயன்கள் அனைத்தும் நம்மைவிட்டுத் தெறித்து விலகிவிடும் என்று கூறுகிறார்.
   என் நெஞ்சமே! எப்பொழுதும் மலரடிகளை நினைத்து வணங்க வேண்டும். பல பக்தர்களுக்கெல்லாம் தம்முடைய அருளைப் பொழிந்த அந்த பாம்பணையப்பன் மலர்களால் அழகுபெற்ற மணி ஒலிக்கும் நெடுமாடங்களும், உயர்ந்த மதில்களும் சூழ்ந்த திருவாறன்விளை எனும் தலத்தில் உறைகிறார். அத்தகைய பெருமாளின் புகழ் உலகமெல்லாம் விரிந்தும் நிறைந்தும் பாடப்படுகிறது. அவரை நம்மால் வணங்கும்போது, நம்மீது நிற்கின்ற பாவ வினைகள் எதுவும் நிலைக்காமல் அனைத்தும் அழிந்துவிடும்.            

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித்
     தொழுமின் தொண்டீர்!
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை
     அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப
      உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திருவாறன்விளை என்னும்
     நீள் நகரம் அதுவே    3441 

      இத்தலத்துப் பெருமானை சேவிக்குங்கால் ஒரு பாவமும் நம்மை அண்டாது. நம் பாவங்களை மிச்சம் மீதி வைக்காமல் அனைத்தையும் தொலைத்து விடுவார். ‘சர்வ பாபேப்யோ மோக்க்ஷயிஷ்யாமி’ என்று கண்ணன் கூறியது போன்று பெருமான் அத்தனைப் பாவங்களையும் போக்குவார். பெருமானை நன்றாகத் தொழுவதால் பிரகலாதனுக்காக தூணிலிருந்து அன்றே அப்போதே தோன்றியது போன்று நமக்கு அப்போதே தோன்றி நம் பாவங்களைக் களைவார். ருக்மிணி கரம் பற்றி மணம் புரிந்த மாயபிரானை என் நெஞ்சில் வைத்துத் துதிப்பேன். மனத்தில் உதித்த பிரான் என் நேரிலும் நின்ற பிரான் என் கண்ணெதிரிலும் வந்து நின்றார் என்று பாடுகிறார். அத்தகைய பெருமான் நின்றருளும் அழகிய திருவாறன்விளை என்னும் பெரிய நகரத்தை நினைத்து வணங்குங்கள். உங்கள் பாவங்கள் உடனே அழிந்து போகும் என்கிறார்.     

 நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள்
     சூழ் திருவாறன்விளை
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால்
     கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய
     வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண்
     அன்றி மற்று ஒன்று இலமே.     3442 

      கண்ணபிரான் தன் பேரன் அநிருத்தனுக்கு உஷையை திருமணம் செய்விக்க அவன் நகரமான சோணிதபுரத்தில் வந்து வாணாசுரனிடம் போர் புரிந்து அவனை முடித்தான். அத்தகையவன் தங்கியுள்ள தலமானது திருவாறன்விளை. நகரமும் நீண்டது, பெருமானின் உரைதலும் நீண்டது. நெடுநேரம் தன் பக்தர்களை நினைவில் வைத்துக் கொண்டு தன் வடிவழைகைக் காட்டும் தேவாதி தேவனான கண்ணபிரான், வலிமையான வாணாசுரனின் ஆயிரம் தோள்களில்  இருதோள்களைத் தவிர மற்றவற்றைத் துண்டித்து வெற்றிகொண்டான். அத்தகையவன் கோயில் கொண்டுள்ள திருவாறன்விளை என்னும் பிராப்யத்தைப் பெற்றுக்கொடுக்கும் உபாயமான பெருமானின் அழகிய திருவடிகளை நாம் என்றும் பற்றுவோம் என்கிறார் ஆழ்வார்.  

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று
     அகல் இரும் பொய்கையின்வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின்
     நெஞ்சு இடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில்
     சூழ் திருவாறன்விளை
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை
    உள்ளத்தின் சார்வு அல்லவே.    3443 

உன்னுடைய திருவடி தவிர  வேறு ஒரு உபாயம்  எங்களுக்கு இல்லை என்று  ஆழமும் அகலமுமான  பொய்கையில் நின்று உன் திருவடிகளைத் துதித்த  கஜேந்திரனுடைய  மனத்துயரை  போக்கின உபகாரகன் சென்று அங்கு இனிது  உறைகின்ற  செழுமையான  சோலைகள் சூழ்ந்த  திருவாறன்விளையை  அடைந்து வலம் செய்ய  கூடுமோ? அப்படிக் கூடுமாகில்  பாபங்கள் உள்ளத்தில்  வந்து தங்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்.
      பெருமானே! நின் திருவடிகள் தவிர எனக்கு வேறு உபாயமில்லை என்று கஜேந்திரன் அழைத்தான். அகன்ற ஆழம் கொண்ட பொய்கையில் முதலை வந்து யானையின் காலைக் கௌவியது போல், சம்சாரமென்னும் பொய்கை துன்பங்கள் நிறைந்து கரைக் காணாமல் உள்ளது.      இந்நிலையில் பெருமானின் நீண்ட திருவடித் தாமரைகள் பொய்கை வரை நீண்டு கழலானது கரியின் துன்பத்தைத் தீர்த்த பிரானானவன் முதலைக்கு சாபம் தீர்த்து மோட்சமும், யானைக்கு நித்ய மோட்சத்தையும் அளித்த கையோடு திருவாறன்விளை வந்து சேர்ந்தார். அத்தகையவரை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமோ என்று வருந்திக் கேட்கிறார். 

தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகித்
     தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த
     தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில்
     திருவாறன்விளை அதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்?
     என்னும் என் சிந்தனையே.        3444 

       என்னிடமுள்ள பாவங்கள், கர்மங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன.  என் மனத்தைப் பாவம் தொடாமல் காத்து  வைகுண்டம் செல்லும் பேறு வாய்க்கும் என்றாலும், அதை விடவும் நாவால் உன்னைப் போற்றி, நெஞ்சில் உன்னைப் பதித்து, உனக்குக் கைங்கர்யம் செய்து வானவர்களும் நித்யசூரிகளும் தேவர்களும் வந்து வழிபடும் இத்திருத்தலமும், இயற்கை சூழ்ந்ததும், நல்வேதர்களும் கூடித் தொழும் இத்திருவாறன்விளையை அடைந்து என் மனதுடன் வந்து உன்னை வலம் வந்து கைகூப்பி வணங்க வேண்டும் என்று விரும்புவேன் என்று என் சிந்தனை சொல்லுகின்றது. என் ஆன்மாவும் இதனையே விரும்புகிறது. இத்தகைய அரிய பேறு எனக்குக் கிடைக்குமா என்று கேட்கிறார் ஆழ்வார். 

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை
     தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன
     மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர்
     குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை
     தீர்த்தனுக்கு அற்ற பின்னே.   3445 

      தேவர்களின் உபகாரகனைச் சிந்தனையால், சொல்லினால், சேவையால் வணங்கும் திருமால் பக்தர்கள் நெஞ்சம் மகிழும்படி திருவாறன்விளையில் குடியிருக்கும் திருக்குறளப்பனுக்கு நாம் அடிமையான பிறகு என் சிந்தை வேறொன்றும் நாடாது. இதை எம்பெருமானும் நன்கறிவான். அவனால் வகுக்கப்பட்ட மாயங்களை அவன் அறியாதவனா என்று கூறுகிறார். ஆழ்வார் பரமபதம் வேண்டி பல பாசுரங்கள் பாடி வந்த நிலையில் திருவாறன்விளைப் பெருமாளைப் பார்த்த நிலையில் அவரது அழகில் மனம் லயித்து அவருக்கு சேஷனாகி தனக்கு வைகுந்தமே வேண்டாமென்றார். இதற்கு திருவாறன்விளை பெருமானே சாட்சியாகும். எனது விருப்பத்தை நன்கறிந்த பிரான் எனக்கு வைகுந்தம் தராமல் மிகவும் நித்யமான இத்தலத்திலேயே இருத்தி விடுவான் என்கிறார். 

தீர்த்தனுக்கு அற்றபின் மற்று ஓர் சரண்
     இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகிச் செழுங்
     குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும்
     வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி
     உரைப்பர் தம் தேவியர்க்கே.     3446 

     புனிதமான பகவானுக்கு நான் சேஷனாக விளங்குகிறேன். இத்தகைய எம்பெருமானைத் தவிர எனக்கு மற்றொரு சரணில்லை. அடியேன் இனி பெருமானின் திருவடிக்குத்தான் என்று தீர்மானமாக இருந்துவிட்டேன். ஸ்ரீ சடகோபர் பெருமான் மீது பாடிய ஆயிரம் பாசுரங்களும் தீர்த்தமாகும். அவற்றில் இவை பத்தும் மிகவும் புனிதமானதாகும். இவற்றை நாள்தோறும் சொல்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் புனிதத்தன்மை ஏற்படும்.  தேவர்கள் தம் தேவியர்களிடம் இப்பத்துப் பாட்டைத் தெரிந்து பக்தியுடன் பாடி வருபவர்களை என்றும் கொண்டாடிப் பேசுவார்கள். இத்தகைய பெருமை கொண்ட திருவாறன்விளை பெருமானுக்கு கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்கிறார் ஆழ்வார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...