வெள்ளி, 5 டிசம்பர், 2025

50. திருவூரகம்

 


திருமழிசையாழ்வார்                                                                                      திருச்சந்தவிருத்தம் 

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?       814 

      முறையாக யோகவித்தைக் கற்று, தியான யோகத்தாலே உன்னை அடைய நினைப்பவர் மனத்திலே குடி கொண்டு கொடிய பாவங்களைத் தீர்த்தருளும் தேவாதி தேவா! மலை போல் உயர்ந்த மாளிகைகளையுடைய திருப்பாடகத்திலும், திரு ஊரகத்திலும் இருந்தும், நின்றும், திருவெஃகாவில் சயனித்தும் அருள் செய்கிறாய் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தில் பகவான் நின்றான், அமர்ந்தான், கிடந்தான் ஆகிய திருக்கோலங்களில் தன் மனத்தில் உள்ளதை எடுத்துக் கூறுகிறார். ஞானநிலை ஏற்படாதவரை எனக்கு வெளியிலிருந்து அருள் புரிந்தான். ஞானம் பெற்ற பின் என்னால் வெளிப்புறத்தில் பகவானைப் பார்க்க முடியவில்லை.
இடைவிடாமல் இறைவனைப் பற்றி சிந்தனை செய்வதால் மனதிலேயே தரிசிக்கும் உயர்நிலையை ஆழ்வார் பெற்று விட்டார்.  எனவே அவர்கள் திருக்கோயில்களுக்குச் சென்று தரிசிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.  பாமர மக்களுக்கு இது பொருந்தாமல் போகின்றது. நொடிப் பொழுதும் அவன் நினைவில் இருந்தால் நம் மனத்தில் அவனை தரிசிக்க முடியும் என்பது உண்மை. 

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.      815 

      நான் பிறவாதிருந்த முற்காலத்தில் எம்பிரான் திருவூரகத்தில் நின்றும் திருப்பாடகத்தில் வீற்றிருந்ததும், திருவெஃகாவில் பள்ளி கொண்டும், அருள் புரிந்தான். அத்தகைய நாட்களில் எனக்கு ஞானப்பிறவி ஏற்படவில்லை. அன்று முதல் எம்பெருமான் நிற்பதும், வீற்றிருப்பதும், சயனித்திருப்பதுமான செயல்களை என் உள்ளத்தில் நடத்திக் கொண்டிருக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      நாம் ஒருவனிடம் கொடுத்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு பல விதங்களில் முயற்சிக்கிறோம். அவன் இருப்பிடத்திற்குச் சென்றும் நின்றும், அமர்ந்தும் பின் அங்கேயே படுத்துக் கிடந்தும் அதனைப் பெற முயற்சிக்கிறோம். அது போன்று எம்பெருமான் உடையவன் உடைமையை இழக்க மாட்டாமை போல, அஸ்மாதிகள் செலுத்த வேண்டிய கடனை பெறுவதற்காக அந்தந்த திவ்ய தேசங்களில் நின்றும், அமர்ந்தும், கிடந்தும் இருக்கிறான். அத்தகையவன் என் நெஞ்சில் புகுந்து ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் உள்ளான் என்று ஆழ்வார் கூறுகிறார். 

திருமங்கையாழ்வார்                                                                                  திருநெடுந்தாண்டகம் 

 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
     நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
     உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
     காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
     பெருமான் உன் திருவடியே பேணினேனே .      2059 

      திருநீரகம் என்னும் திருப்பதியில் குடிகொண்டிருப்பவனே! உயர்ந்த திருவேங்கட மலையில் நின்றருள்கின்றவனே! நிலாத்திங்கள் துண்டம் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ளவனே! அழகிய காஞ்சியிலும், திருஊரகத்திலும் எழுந்தருளி இருப்பவனே! அழகிய தடாகக் கரையிலுள்ள திருவெஃகாவில் திருக்கண் வளர்ந்தருள்பவனே! சிந்திப்பாருடையவரின் உள்ளத்தில் உறைபவனே! உலகமெல்லாம் துதிக்கும்படி திருக்காரகம் என்னும் தலத்தில் நிற்பவனே! கோபியர் உள்ளங்களைக் கவர்ந்தவனே! விரும்பத்தக்கதாய் அழகிய காவிரியின் தெற்கில் திருப்பேர் நகரில் இருப்பவனே! என் மனதில் நீங்காமல் காட்சி தருபவனே! பெருமைக்குரிய பெருமானே! உன் கமலப் பாதங்களை பூஜித்து சேவிக்கின்றேன்’ என்கிறார் ஆழ்வார்.
      நீரானது பள்ளத்தில் பாயும். அது போன்று எம்பெருமான் தாழ் மக்களிடம் எளிதில் சேர்வான். ஸ்ரீகிருஷ்ணர் விதுரனின் மாளிகையில் தங்கியதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மனிதனின் தேவையே நீர். ஐந்து வகையான நீர் உள்ளது போன்று எம்பெருமானும் ஐந்து நிலைகளில் நமக்கு அருள்கிறான். எம்பெருமானை நினைப்பவரின் நெஞ்சினில் உறைபவன். அது போன்று என் நெஞ்சிலும் உறைபவன். இத்தகையவனின் திருவடிகளை ஆவலுடன் கண்டு நின்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார். 

கல் எடுத்துக் கல் மாரி காத்தாய்! என்றும்
     காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்றும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்றும்
     வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்றும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்றும்
     மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்றும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
     துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே.     2064     

      பரக்கால நாயகியானவள், கல்மழையிலிருந்து கோவர்த்தனகிரியைத் தாங்கிப் பிடித்து கோகுலத்தைக் காத்தவனே! என்றும்,  மலர் வனங்கள் நிறைந்த காஞ்சியில் அமைந்த திருவூரகத்தில் நின்றருள்பவனே! என்றும்,  சிவதனுசை முறித்து மெல்லிடையாளான சீதையின் தோளில் மாலை சூட்டியவனே! என்றும், திருவெஃகாவில் சயனிக்கும் அரசனே! என்றும்,  மல்லர்களை அழித்த கேசவா! என்றெல்லாம் தன் கிளியிடம் திருநாமத்தில் முதல் சொல்லைக் கூறி அதனை திருப்பிக் கூறுமாறு தனது உபயத்தனங்கள் நனைய கண்ணீரைப் பொழிந்து சோர்ந்து விடுகிறாள்.
      பரக்கால நாயகி மகிழ்வுடன் இருக்கும்போது கிளியிடம் பேசி மகிழ்வாள். இப்போது துன்பத்தில் நாயகி தளர்ந்திருக்கும்போது கிளியும் தளர்ந்து மூலையில் பதுங்கியுள்ளது. தாயாரானவள் கிளியை எடுத்து வந்து பெருமானின் திருநாமங்களைச் சொல்லுமாறு வற்புறுத்த கிளியும் சற்றே சொல்ல ஆரம்பிக்க அவள் கண்ணீருடன் அதைக் கேட்கிறாள். ஆபத்துக் காலத்திலெல்லாம் உதவுவதில் புகழ் பெற்றவனான கண்ணன் இன்று நம்மளவில் உதவாதொழிவதேன் என்று புலம்புகிறாள் நாயகி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...