திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
போது அலர்ந்த பொழில் சோலைப் புறம்
எங்கும் பொரு திரைகள்
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணித் தென் கரைமேல்
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார் தொகையே. 1248
அழகிய மலர்கள் மலர்ந்துள்ள பெரிய மலர்வனங்கள் உள்ள இடங்களில் மலர்கள் மகரந்தப்
பொடி உதிருமாறு மன்னியாற்றில் அலைகள் வீசும். அதன் தென்கரையில் மாதவப் பெருமாள்
எழுந்தருளியுள்ளார். நெல் வயல்கள் சூழ்ந்துள்ள திருநாங்கூரில், வரிகளைக் கொண்ட
வண்டுகள் ‘தெனா, தெனா’ என்று இசைபாடும். இத்தகைய
சிறப்புடையது திருத்தேவனார்தொகை என்னும் தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
எம்பெருமானைச் சரணம் அடைந்தவர்கள் யாவரும் இவ்வுடல் முடியும்வரை (பிராரத்த
கருமம் தீரும் வரை) பொறுத்திருக்க வேண்டும் என்பதனையும், அதன்பிறகு சஞ்சித
கருமங்களைத் தீயினில் தூசாக்கி வீடு பேற்றினை நல்குவான் இறைவன் என்பதனையும்
இங்குக் காணலாம். எம்பெருமானை சேவிப்பதற்காக வானோர்களான தேவர்கள் நெருங்கி நின்ற இடம்
தேவனார் தொகை என்பர். இப்பூவுலகில் சுற்றித் திரிந்த மாந்தர்கள் என்ன பலனைக்
கண்டார்கள். செல்லக் கூடாத
இடங்களுகெல்லாம் நாள்தோறும் சென்று வருகிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பகவானின்
திருத்தலங்களுக்கு செல்வதற்கு நேரமில்லை. பல மக்கள் இத்தகைய தலங்களின் வாயிலை
மிதிக்காமலே உள்ளார்கள். உங்கள்
துன்பங்களைக் களைய திருத்தேவனார்தொகை பகவானான மாதவப் பெருமானை அணுகி உங்கள்
தீவினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
உலகில் அனைத்து உயிர்களுமாய், எல்லாவித பொருள்களுமாய், அழகு மிக்க
வேதங்களின் அர்த்தங்களாய், மும்மூர்த்திகளாய், ஆதிதேவனாய் உள்ள பகவான் வாழுமிடம்
திருநாங்கூரில் உள்ள திருத்தேவனார்தொகை என்னும் இடமாகும். அங்குக் கொடிய ஆயுதங்களுடன்
வலிய படை திரட்டிக் குதிரைமீது வந்த பாண்டியனைத் தோற்கடித்து வெற்றி பெற்ற
அந்தணர்கள் வாழுமிடமாகும். தேவலோகத்து மக்கள் வந்து வணங்கும் சோலைகள் நிறைந்த
புனிதத் தலமாகும்.
சித்தாகவும், அசித்தாகவும், தானாய் அழகிய
வேதங்களின் அர்த்தமும் தானாய் பிரமன் விஷ்ணு ருத்ரன்
மூவருமாய் முழுமுதற் கடவுளான எம்பெருமான் அமர்ந்திருக்குமிடம், குதிரைமேல்
ஏறிவருகிற திடமான ஆயுதங்களையுடைய ராஜகுலத்தை வெற்றிபெறும்
அந்தணர்கள் வாழும் இடம் திருநாங்கூரில் உள்ள திருத்தேவனார் தொகையே
என்பதாகும்.
முன்காலத்தில் பாண்டிய மன்னன் படை திரட்டிக் கொண்டு திருநாங்கூரை
ஆக்ரமிக்க வந்தபோது, அங்கிருந்த அந்தணர்கள் தாமே இறங்கி
படையுடன் வந்த பாண்டியனை விரட்டி அடித்தனர். அத்தகையஊரில் உள்ளள பெருமான் எல்லா
உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். எனவேதான் கிருஷ்ணர் கோபியர்களிடம்
விளையாடும்போதுஅவர்களைத் தன் வடிவமாகவே பார்த்தான். அனைத்து உயிர்களிலும் பகவான்
குடிகொண்டுள்ளான் என்பதை நாம் நினைத்தால் அடுத்தஉயிருக்குத் தீங்கிழைக்கக
மாட்டோம். இத்தகைய இரகசியத்தை வேதங்களும், சாத்திரங்களும்,
இதிகாசங்களும், புராணங்களும் மீண்டும்
மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றன.
வானில் உள்ள தேவர்களும், மண்ணுலக மனிதர்களும், மற்றும் உலகில்
உள்ள அனைத்து உயிர்களும் பகவானுக்கு அடங்கியவையாகும். அத்தகைய எம்பெருமான்
விரும்பி அமரும் இடம் தேன் நிறைந்த மலர்களுள்ள இடமான திருத்தேவனார்தொகை என்னும்
புனிதத் தலமாகும். இங்கு அழியாத பெரும்
செல்வத்தையுடைய அருமையான வேதங்களை
ஓதுபவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
வானுலகம், நிலவுலகம் என்ற இரண்டு விபூதிகளில் உள்ள
சகல சராசரங்களும் ‘தான்’ என்ற சொல்லுக்குள் அடங்கியுள்ள, இவற்றிற்கெல்லாம்
தானே அபிமானியாகி இருக்கின்ற சர்வேசுவரன் எழுந்தருளி இருக்கும் திருத்தேவனார்
தொகையாகும். மண்ணுலகில் புண்ணியம் செய்கிறவர்கள் அவர்கள் காலம் முடிந்து தேவர்களாக
மாறுகிறார்கள். ஆனால் தேவர்களும் முக்தி பெற வேண்டுமானால் அவர்கள் மண்ணுலகில்
பிறந்துதான் முக்தி பெற வேண்டும். வானவர்கள் போகத்தை அனுபவிப்பர். யோகத்தை
அனுபவிக்க அவர்கள் பூமியில் பிறக்க வேண்டும். இரு உலகத்தவரும் பகவானுக்கும்
அடக்கம். இந்த யதார்த்த நிலையினை இப்பாசுரம் நமக்குத் தெரிவிக்கின்றது.
தேவேந்திரனும் மற்றும் தேவர்களும், சனகாதி முனிவர்களும், எழிலான தாமரை மலரில் தோன்றிய வேதங்களின் தலைவனான பிரம்மாவும், சூரிய சந்திரர்களும் திரண்டு
வந்து என் தெய்வமே! எங்களிடம் கருணை காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க, அதற்கு இசைந்த எம்பெருமான் அருள் செய்யும் இடம் எதுவென்றால்
திருநாங்கூரில் அழகிய தோட்டங்களால் நான்கு புறமும் சூழப்பட்ட திருத்தேவனார்தொகை
என்னும் திருத்தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இந்திரனும் தேவர்களும் மற்றும் பிற முனிவர்களும் ஒன்றாகச் சேர்ந்து
திருத்தேவனார்தொகை எம்பெருமானை தம்மிடம் கருணை காட்டுமாறு வேண்டுகிறார். அவ்விதம் வேண்டுவதால் அவர்கள் இன்னும்
பூரணத்துவம் பெறவில்லை என்று அர்த்தம். பிரம்மாவுக்கும் ஆயுட்காலம் நிர்ணயிக்கப்
பட்டுள்ளது. இந்திரனும் ஒரு காலத்தில் இல்லாமல் போவான். பகவான் ஒருவர்தான் என்றும் நித்யமாக
இருப்பவர். அந்த நித்யனை நாம் மறந்தால்
நாம் துன்பத்தில் ஆட்படுவோம். தேவர்களே பெருமானிடம் வேண்டும்போது நம்நிலை
என்னவென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். மண்ணுலக வாழ்வை மறந்து அவன் பாதம்
பணிதலே அவனை அடைவதற்கான வழி என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஆகாயமும், அலையெறிகிற கடல்களும், தீவுகளும், உலகங்களும், மலைகளும் ஆகிய எல்லாவற்றையும்
ஊழிக்காலத்தில் உண்ட எம்பெருமான் வாழுமிடம், ஒளிமிக்க
ரத்தினங்களையும், சந்தனம் மற்றும் அகில் கட்டைகளையும்,
பொன்னையும், தெளிந்த அலைகள் கொண்டு வந்து
குவிக்கும் மன்னியாற்றின் தென்கரையில் உள்ள நாங்கையில்,
வேதத்தில் திறன் கொண்டவர்கள் வசிக்கும் திருத்தேவனார்தொகையாகும் என்கிறார்
ஆழ்வார்.
ஆகாசமும், அலை கடலும், தீவுகளும், மலைகளும்
ஆகிய அனைத்தையும் பிரளய காலத்தில் வயிற்றில் கொண்ட எம்பெருமான் இருக்குமிடம், ஒளிபொருந்திய
ரத்னங்களையும் சந்தன அகில் மரங்களையும் பொன்னையும் தெளிந்த
அலைகளின் வழியே வரும்படியாகக் கூட்டம் கூட்டமாகக் குவியும் தெளிந்த மன்னி ஆற்றின், தென் கரைமேல் மிக்க
பலசாலிகள் வாழும் திருநாங்கூரில் உள்ள திருத்தேவனார் தொகையே
என்பதாகும்.
நாம் காணும் காட்சிகள் அனைத்தும் கடவுளின் வடிவங்கள் எனலாம். இதனைச் சிந்தித்து உணர்ந்தால்
வேறுபாடு தோன்றாது. இந்த உண்மைகளை மாயை மறைக்கின்றது. அதனால்தான் நம்முடன் உள்ள
மக்களுக்கே நாம் தீங்கு நினைக்கிறோம். அதனால் கர்ம வினைகள் கூடிக்கொண்டே போகிறது.
பெற்றவர்களுக்கே துரோகம் நினைப்பதும் இதனால்தான்.
அதன் வினைகளே நமக்குதுன்பங்களாகத் திரும்பப வந்து நம்மைத்தாக்கி
வாட்டுகின்றது. இத்தகைய நிந்தனைகளை
மாற்றிக் கொண்டு திருத்தேவனார்தொகையில் இருக்கும் பெருமானை சரண் அடைந்து நம் கர்ம
வினைகளை நீக்க முயற்சிப்போம் என்ற பொருளில் இப்பாடல் அமைகிறது.
நான்கு வேதங்களாலும் பரந்தாமனின் பெருமையை முழுவதும் சொல்ல முடியாததால்
இப்போது பகவான் வீதிவலம் வரும்போது வேதமந்திரங்கள் அவனைத் தொடுவதற்கு விருப்பமுடன்
பின்னே வருகின்றன. அத்தகைய பெருமை கொண்டவன் நாங்கூர் திருத்தேவனார்தொகையில் வாசம்
செய்து வருகிறான். அவன் உலகங்களை உண்டு
ஆலிலையின் மேல் பள்ளி கொண்டுள்ளான்.
மன்னியாற்றின் கரையில் செழித்த நெற்பயிர்களினூடே மீன்கள் துள்ளி விளையாடும்
கழனிகள் நிறைந்த இத்தலத்தில் அவன் கோயில் கொண்டுள்ளான்.
நான்கு வேதங்களாலும் அணுகமுடியாத பெருமை
உடையவனும், இளங்குழந்தையாய் பூமி முழுவதையும் விழுங்கி
ஆலந்தளிரில் பள்ளி கொள்ளும் எம்பெருமான்
இருக்குமிடம் இத்தலமாகும். தெளிந்த மன்னி ஆற்றின் தென்கரைமேல்
செந்நெல் பயிர்களின் செழிப்பானது பெருகி வரும் சேல்மீன்கள்
துள்ளி விளையாடும் வயல்களையுடைய திருநாங்கூரில் உள்ள திருத்தேவனார் தொகையே
என்பதாகும்.
வேதங்களாலும் பெருமானின் பெருமைகளைமுழுமையாகச் சொல்லல இயலவில்லை. அதனால் பெருமான் வீதியுலா வரும்போது அவை போற்ற
வருகின்றன. கீதை முழுதும் வேதத்தின் சாரமே. அதில் முக்கியமானது ‘நாம் உடல் அல்ல
ஆத்மா என்பதுதான்’. ஆத்மாவை அறிவதுதான் நம் பிறப்பின் இலட்சியமாகும். அதனை அடைய பெருமானின் துணை தேவை. எனவேஅவரைச்
சரண்ண் புகுந்து அதனை அடைந்து பிறவிப்பயனை வேரறுப்போம் என்பது இப்பாசுரத்தின்
பொருளாகும்.
நாட்டிலே நடமாடாத அபூர்வ அவதாரமாக, நரசிம்ம மூர்த்தியாகத் தோன்றி இரணியனை, வளையாத தனது கூர்மைமிக்க நகங்களால் கிழித்து, அவனது
உதிரத்திலே அளைந்த எம்பெருமான் உறையுமிடம், புத்தகங்களில்
எழுதி வைக்கத் தக்க, குற்றமற்ற பெருஞ்செல்வத்தை உடைய,
சிறந்த வேதியர் வாழும் நாங்கூர் நகரில் மலர்வனங்கள் நிறைந்த
திருத்தேவனார்தொகையாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
முதுகு காட்டி ஓடாத அபூர்வமான நரஸிம்ம மூர்த்தியாக
அவதரித்து வளையாத கூர்மையான நகங்களினால் இரணியனை
இரண்டாகப் பிளந்து அளைந்த எம்பெருமான் இருக்குமிடம் அழகிய
வைதிகர்கள் வாழும் திருநாங்கூரில் கூடிய திருத்தேவனார் தொகை
என்பதாகும்.
திருநாங்கூரில் வசிக்கும் அந்தணர்கள் ஓதும் வேதமானது இதிகாச புராணங்கள்
போன்று புத்தகங்களாக எழுதத் தகுந்தது என்பதனை இங்கு வலியுறுத்தப்படுகிறது.
இரணியனைக்கொல்வதற்காகப் பகவான் இதுவரை யாரும் எடுத்திராத நரசிம்ம அவதாரத்தை
எடுத்தார். தனக்கு எந்த விதத்திலும் முடிவுவரக் கூடாது என்று நினைத்த இரணியன்
யாருமே கொல்ல முடியாத அளவுக்கு மிகவும் யோசித்து ஒரு வரத்தினை பெருமானிடம்
பெற்றான். ஆனால் பெருமானோ அசுரனை விட மேலானவராதலால் தான் அளித்த வரத்திற்கும்பழுது
இல்லாமல் ஒரு கால நேரத்தில் அவனைக் கொன்றார். அதர்மம் எத்தகைய பாதுகாப்பு வளையத்தில்
இருந்தாலும் அதனைநீக்கித் தெய்வவ சக்தி அழித்துவிடும் என்பது தெளிவாகிறது.
கச்சையிட்டுத் தாங்கும்
இளமையான தனங்களைப் பெற்ற மைதிலியைத் மணமுடிக்க வைரம் பொருந்திய சிவதனுசை முறித்த
இராமபிரான் குடியிருக்கும் இடம் சிறந்த அறிவார்ந்த செல்வத்தைக் கொண்டும் வேதத்தில்
தலைசிறந்தும், தேஜசில் கூடியவர்கள் வாழும்
திருநாங்கூர் நகரில் அழகிய மலர்களால் உடைய தோட்டங்களைக் கொண்டிருக்கும்
திருத்தேவனார்தொகை என்ற இடமாகும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
கச்சையை அணிந்த சீதையை திருமணம் செய்து கொள்ள கறுத்த திடமான வில்லை முறித்தவனான யௌவனபுருஷன்
இருக்குமிடம் ஏடுகளிலே பதிவு செய்யத்
தக்க பெருஞ்செல்வச் செழிப்போடு வைதிகர்கள் வாழும் திருநாங்கூரில் அழகிய பூக்களையுடைய சோலைகளால் சூழந்த திருத்தேவனார்தொகையே
ஆகும்.
சீதா பிராட்டியை மணமுடிக்க
ஜனகன் தனது ருத்ரதனுசுவை கொண்டு வைக்க இராமபிரான் அதனை நாண் ஏற்றி முறித்தான்.
இச்செயலானது கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. திரண்ட மக்கள் நாண்
ஏற்றியதைத்தான் பார்த்தார்கள். பெரும் ஓசையுடன் சிவதனுசு முறிந்து கிடந்தது.
இதனைக் கம்பர் ‘தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில் மடுத்ததும் நாண்நுதி வைத்ததும்
நோக்கார்; கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர்; இற்றது
கேட்டார்’ என்று கூறுகிறார். அத்தகைய
பராக்கிரமசாலியான இராமன் எழுந்துள்ள இடம் திருத்தேவனார்தொகையாகும்.
பெருத்த மத்தகத்தையுடைய மதம் பிடித்த குவலயாபீடம் என்ற யானையைப் பாகனோடு
அழியும்படி அதன் தந்தத்தைப் பறித்தவன். குடக்கூத்தாடியவன் வாழும் இடம்
திருத்தேவனார் தொகையாகும். இத்தலமானது
செண்பகத்தின் மணம் நிறைந்த செவ்வியப் பொன்னால் செய்யப்பட்ட மதில்களும், மலர்வனங்களும்
சூழ்ந்ததாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் யானைக்கும் மேகத்திற்கும் ஒப்புமை அழகாகக் கையாளப்பட்டுள்ளது.
ஆகவே, திருமலையில்
உள்ள யானையானது மலை முகட்டில் படிந்திருந்த மேகத்தை எதிரியானதொரு
யானையென்று மயங்கிப் பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால் குத்த, இதனை ஒரு யாளி
கண்டு ‘இக்களிற்றுக்கு இவ்வளவு மதமா‘ என்று சினந்து ஓடிவந்து அந்த யானையின் மேல்
பாய்ந்து அதன் கொம்பை முறித்தெறிந்து, அது வாய்விட்டு
அலறிக்கொண்டு விழும்படியாகக் கொலையும் செய்து, அவ்வளவிலும்
சீற்றம் தனியாமையாலே அவ்விடத்திலேயே நின்று மற்றுள்ள மிருகங்களும்
மண்ணுண்ணும்படியாகக் கர்ஜிக்கின்றதாம் என்று நோக்கப்படுகிறது.
கொடிய அரசனான கம்சன் கண்ணனைக் கொல்வதற்கு அவனைத் தந்திரமாக அரண்மனைக்கு
வரவழைக்க வாயிற்கதவில் வரும்போது குவலயாபீடம் என்று யானையை விட்டுக் கொலை செய்வது
என்று திட்டம் தீட்டியிருந்தான்.
இதையறிந்த கண்ணன் யானையை எதிர்த்து அதன் தந்தங்களைப் பற்றிப் பாகனுடன்
அதனைக் கொன்றான். இத்தகைய பராக்கிரமங்கள் அனைத்தும் மிகவும் சிரமப்பட்டு செய்யாமல்
குடக்கூத்து ஆடுபவன் போல் செய்து முடித்தான். இது போன்று மதம் பிடித்த யானை போன்று
நம் மனத்திலும் அசுர குணங்கள் உள்ளன.
பகவானின் துணையுடன் அதனை அழிப்பதற்கு முயல வேண்டும் என்ற பொருளில் அமைந்துள்ளது.
கார்மேகத்தைப் போன்ற திருமேனியை உடைய கண்ணபிரான் பொருந்தி வாழும் தலமாக, அழகிய
தோட்டங்களைக் கொண்ட திருநாங்கூர் நகரில் உள்ள திருத்தேவனார்தொகை என்னும் திவ்ய
தேசமாகும். கூர்வேல் கொண்ட கலியன் இயற்றிய இப்பத்து பாசுரங்களைப் பக்தியோடு பாட
வல்லவர்கள் நன்மை மிக்க வைகுண்டத்தில் நித்திய சூரிகளோடு வாசம் செய்வார்கள் என்ற
கருத்தில் ஆழ்வார் இப்பாசுரம் மூலம் கூறுகிறார்.
வெண்மையான மேகத்தைக் கொண்டிருக்கும் கரிய திருமேனியுடைய கண்ணன்
அமர்ந்து இருக்குமிடம் சிறந்த அழகிய சோலைகளையுடைய திருநாங்கூரில்
இருக்கும் திருத்தேவனார்தொகை என்னும் இத்தலத்தினைப் பற்றி, கூர்மையான
வேலையுடைய திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த தமிழ்ப்பாசுரங்களைக்
கற்கக வல்லார் நன்மை மிக்க வைகுண்டத்தில் நித்யசூரிகளோடு
கூடி இருப்பர் என்பதாகும். திருமங்கையாழ்வார் இப்பத்து
பாசுரங்களில் நாம் கொண்டுள்ள இன்னல்களை அழிப்பதற்கான வழிகளைத்
தெரிவித்துள்ளார். நம்மில் உள்ள அசுர
குணங்களே நம்மை அழிக்கின்றன. அதனை நீக்கி ஆத்ம தரிசனம் என்ற உயர் கொள்கையை நாம்
அடைய வேண்டும் என்ற நன்னோக்கில் கூறியுள்ளார். அசுரர்களை அழித்த பகவான் நம்மில்
உள்ள அசுர குணத்தையும் அழிப்பார்.
மதயானையை அழித்த பரமாத்மா நம் உள்ளத்தில் கொண்டுள்ள தீய எண்ணங்கள் என்ற
யானையை அழிப்பார். அப்படிப்பட்ட கருணைக்கடலான எம்பெருமான் திருத்தேவனார்தொகையில்
வாசம் செய்து வருகிறார். அவரை அடைந்து நல்வாழ்வு பெறுங்கள் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக