ஞாயிறு, 14 டிசம்பர், 2025

31. திருசெம்பொன்செய் கோயில்

 


திருமங்கையாழ்வார்                                                                       பெரிய திருமொழி      

பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்
     பேர் அருளாளன் எம் பிரானை
வார் அணி முலையாள் மலர் மகளோடு
     மண் மகளும் உடன் நிற்ப
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்
     செம்பொன்செய்கோயிலினுள்ளே
கார் அணி மேகம் நின்றது ஒப்பானைக்
     கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.      1268

 

இவ்வுலகில் உள்ள மக்கள் பெருங்கூட்டமாகக் கூடி அடிபணிந்து போற்றும் பேரருளாளப் பெருமானை, கார்மேகம் போன்றவனை, கச்சையணிந்த தனங்களையுடைய மகாலட்சுமித் தாயாரும், பூமிதேவியும் மலர்களைத் தூவி வணங்கியிருக்க பெருமை மிக்க மாட மாளிகைகள் நிறைந்த திருநாங்கூரின் நடுவில் உள்ள செம்பொன்னால் செய்யப்பட்ட கோயிலை வணங்கிப் பிறவிப் பயனை நான் பெற்றேன் என்கிறார் ஆழ்வார்.

செம்பொன்செய்கோயில்’ என்னும் திருப்பதி திருநாங்கூரில் நட்ட நடுவில் உள்ளது. இவ்வாழ்வார் தாமும் இத்திருப்பதியின் மங்களாசாஸனமான இத்திருமொழியைத் திருநாங்கூர்ப் பதிகங்கள் பதினொன்றின் நன்னடுவே அமைத்தருளின அழகும் ஆராயத்தக்கது. நந்தாவிளக்கே” என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த” என்ற திருமொழியளவாகப் பதினொரு திருமொழிகள் திருநாங்கூர்த் திருப்பதிகளைக் கவிபாடுவன. அவற்றுள் கீழே ஐந்து திருமொழிகள் சென்றன. மேலே ஐந்து திருமொழிகளுள்ளன. இத்திருமொழி நன்னடுவே உள்ளது எனக்காண்க.

      இவ்வுலகில் உள்ளவர்கள் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு பெருமான் திருவடிகளில் பணிந்து கொண்டுள்ளனர். பேரருளாளன் என்று பெயர் பெற்றவனும், கார்கால மேகம் போன்று வடிவு கொண்டவனும், செம்பொன்செய் கோவிலில் சேவை சாதிக்கின்றார். இத்தலமானது அனைத்து மக்களும் அடி பணிந்து போற்றும் இடமாக உள்ளது.  இரு தாயார்களும் அருகில் உள்ளார்கள். நாம் உடல் அல்ல ஆத்மா என்பதை அறிவதே பிறவிப் பயனாகும். இத்தலத்துப் பெருமானை வந்து வணங்கிப் பிறவிப் பயனைப் பெறுமாறு ஆழ்வார் நம்மை அறிவுறுத்துகிறார்.

      

பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னைப்
     பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை
     ஏழ் இசையின் சுவை தன்னை
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்
     செம்பொன்செய் கோயிலினுள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனை
     கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.       1269

 

பிறப்பு, முதுமை போன்றவைகள் இல்லாத மாறுபாடற்ற இன்பவெள்ளமாய் இருப்பவன், கடந்த, நிகழ், எதிர் போன்ற மூன்று காலங்களிலும் இருப்பவன், ஏழிசையின் சுவை போன்றவன், வேதங்களின் சிறந்த பொருளாய்த் திகழ்பவன், நித்யசூரிகளின் தலைவனாக இருக்கும் ஸ்ரீஹரி சிறந்த வேதியர்கள் வசிக்கும் திருநாங்கூரின் மத்தியில் உள்ள செம்பொன்செய் கோயிலிலே குடி கொண்டிருப்பது கண்டு நான் பிறவிப் பயன் அடைந்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

ஆனந்தமுடைமை ஜீவாத்மாவுக்கும் இருந்தாலும் பிரகிருதி ஸம்பந்தத்தாலே அதற்குக் குறைவு உண்டாகிறது.  இப்படியல்லாமல் எம்பெருமானுடைய ஆனந்தமயத்வம் ஒரு உபாதியினாலும் பேதப்படாதிருக்குமென்க. பெருமான் விகாரமடையாத  இன்பவெள்ளமே ஸ்வரூபமாயுள்ளவனாக உள்ளான். எம்பெருமான் இன்னகாலத்திலுள்ளான்,  இன்னகாலத்திலில்லை என்னவொண்ணாதபடி எக்காலத்தும் உள்ளமை பற்றி  இறப்பெதிர் காலக் கழிவுமானானை.    கழிந்து கொண்டே செல்லுகிற நிகழ்காலத்தைச் சொன்னபடி. ஏழிசையின் சுவை தன்னை ஸப்த ஸ்வரங்களில் உண்டான ரஸமே ஒருவடிவு கொண்டாற்போல் பரம போக்யனானவனாக இருக்கிறான்.

      ஜீவாத்மா என்றும் ஆனந்தமயமாக இருப்பினும், அதன் வினைப் பயன்களால் குறைவு உண்டாகிறது. இவ்விதம் இல்லாமல் எம்பெருமானின் ஆனந்தத்தினால் சிறு குறைவு வந்தாலும் அதில் துன்பம் கொள்ளா நிலை எழும். எம்பெருமான் இன்ன காலத்தில் உள்ளான், இன்ன காலத்தில் இல்லை என்று கூறமுடியாதவாறு எக்காலத்திலும் உள்ளான். ஆத்மாவுக்கு எல்லை என்பதே கிடையாது. அதனுள் எம்பெருமான் வீற்றிருக்கிறான்.  அழியும் பொருட்களை நீக்கி அழியாப் பொருளைத் தருபவன் பெருமான். நம் கோடிக்கணக்கான கூறுகளில் அவன் வியாபித்துள்ளான். இதனை உணர செம்பொன்செய் கோவிலுக்கு வாருங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்
     செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை
     பங்கயத்து அயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய் கோயிலினுள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்
     கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.       1270

 

திடம் மிக்க ஆகாயம், நெருப்பு, நீர், சந்திரன், சூரியன், வளம்  மிக்க பூலோகத்து உயிர்கள் மற்றும் பலவகைப்பட்ட பொருட்கள் ஆகியவற்றில் அந்தர்யாமியாய் இருக்கும் கடல்நிற வண்ணனை, தாமரையில் பிறந்த பிரம்மாவைப் போன்ற உறுதியான வாக்குகள் கொண்ட வேதம் பயின்றவர்கள் வாழும் திருநாங்கூர் நடுவில் உள்ள செம்பொன்செய் கோயிலில் அடியேன் தரிசித்து பிறவிப் பயன் பெற்றேன் என்கிறார் ஆழ்வார்.

திருநாங்கூரில் உள்ள அந்தணர்கள் பிரமனைப் போன்றவர்கள் என்றும், எப்போதும் வேதாத்யயந சீலர்களாய், ஆசாரபரர்களாய் இருக்கையை நோக்கியாம்.  பிரமனைப் போலே ஜகத்ஸ்ருஷ்டி பண்ணவும் வல்லவரென்னவுமாம்.  திடமொழி மறையோர், சொன்னசொல் தவறாத ஸத்யசீலர்களாக இருப்பார்கள் என்கிறார்.

      விசும்பு, எரி, நீர் என்று மூன்று பூதங்களைச் சொன்னது பஞ்ச பூதங்களுக்கும் உபலக்ஷணம் என்று சொல்வர். இதில் காற்றும் உள்ளடங்கும். ஆகாயமே மற்ற பூதங்களுக்கும் மூல காரணமாகத் திகழ்கின்றது. மற்றவை  அழிந்தாலும் ஆகாயம் நிலைத்து நிற்கும் என்பதனால் அதற்குத் திடம் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. மற்ற நான்கு பூதங்களை ஒப்புக்கொண்டு ஆகாயம் இல்லை என்று கூறும் மதத்தினரைக் கண்டிப்பது போன்று திடவிசும்பு என்று கூறுகிறார் ஆழ்வார். இந்நிலையில் திடம் என்பது பிரமாணத்தினாலும் திடம் என்றும் கொள்ளலாம். இவை அனைத்திலும் இருக்கும் பெருமான் செம்பொன் கோயிலில் குடிகொண்டுள்ளான் என்பது பொருளாகும்.     

      

வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி
     மண் அளவிட்டவன் தன்னை
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க
     அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய் கோயிலினுள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக்
     கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.      1271

 

குற்றங்களில்லா வாமன வடிவினனாய்க் கொண்ட மகாபலியினுடைய வேள்விச் சாலையில் உலகளந்தவனை, சலிப்பில்லா நித்யசூரிகளும் தன் திருப்பாதங்களைச் சேவிக்கும்படி அலைகள் வீசும் திருப்பாற்கடலில் நித்திரை செய்பவனை, உயர்ந்த இரத்தின கிரீடம் அணிந்து கொண்டிருக்கும் எம்பெருமானை, நான்முகனைப் போன்று அந்தணர்கள் வாழும் திருநாங்கூர் மத்தியில் உள்ள செம்பொன்செய் கோவிலில் தரிசனம் செய்து பிறவிப் பயனை அடைந்தேன் என்கிறார் ஆழ்வார்.

குற்றமற்ற வாமனனாக  மஹாபலியின் யாகபூமியில்  உலகளந்தவனும்  சஞ்சலமில்லாத மனமுடைய  நித்யஸூரிகள்  தன் திருவடிகளை  வணங்க,  பாற்கடலில்  பள்ளி கொண்டிருக்கும்  எம்பெருமானை,  உயர்ந்த ரத்ன கிரீடத்தை   அணிந்து கொண்டிருப்பவனை  பிரமனைப் போன்ற,  அந்தணர்கள் வாழ்கிற திருநாங்கூரின் நடுவிலே  செம்பொன்செய் என்னும்  கோயிலின் உள்ளே  அவனைப் பார்த்து  அனுபவித்து வாழ்ந்தேன் என்கிறார்.

      குள்ளமான வடிவம் கொண்டவரை உலக மக்கள் பரிகாசம் செய்வார்கள். ஆனால் எம்பெருமான் கொண்ட உருவம் ஒரு குறையும் சொல்ல இயலாத நிலையில் மிகவும் அழகான வடிவமாக இருந்தது. பெருமானை தனது சேஷத்துவத்திற்கு எவ்வித நழுவுதலல்லாத அமரர் என்று குறிப்பிடப்படுகிறது.  திருப்பாற்கடல் செல்லும் தேவர்கள் எம்பெருமானை கைங்கர்யம் செய்ய மிகுந்த யோக்யதாம்சங்களுடன் இருப்பர். அது போன்று நாம் பகவானைத் தொழ மனதாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் தீமை செய்யாதிருக்கும் அரிய குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பொருளாகும்.

 

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே
     என்று சென்று அடைந்தவர் தமக்கு
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்
     தயரதன் மதலையை சயமே
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்
     செம்பொன்செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்
     கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.      1272

 

தீய எண்ணங்களைக் கொண்ட அரக்கர்களின் வலிமையை அழித்தவனே!  என்று சொல்லி உன்னை வந்தடைந்தவர்களுக்கு தாய் போன்று கரைந்து கிருபை செய்யும் தசரதன் மைந்தன், பிரத்யுமனனைப் பெற்ற ஸ்ரீகிருஷ்ணன், ஜய கோஷங்கள் நிறைந்த மலர்த் தோட்டங்களால் சூழப்பட்ட திருநாங்கூர் மத்தியில் செம்பொன்செய் கோவிலினுள்ளே அடியேன் தரிசித்து பிறவிப் பயன் பெற்றேன் என்கிறார் ஆழ்வார்.

தீய நெஞ்சையுடைய  அரக்கர்களின்  பலத்தை அழித்தவனே!  என்று சொல்லிக் கொண்டு  வந்தவர்க்கு  தாயைப் போல்  கரைந்து இரங்கி  அருளைக்  கொடுக்கும்  தசரதன்  புதல்வனான ராமனை,  பிரத்யும்னனைப்  படைத்தவனுமானவனை  ஜயசப்தங்கள் பொருந்தியிருக்கப் பெற்றதும்  தேன்நிறைந்த புஷ்பங்களையுடைய  சோலைகளாலே சூழ்ந்த  திருநாங்கூரின் நடுவிலே  செம்பொன்செய் என்னும்  கோயிலின் உள்ளே  அடியேனான நான்  அவனைப் பார்த்து அனுபவித்து  வாழ்ந்தேன் என்கிறார்.

      சாதுக்கள் நலிவதையே வழக்கமாக் கொண்ட அரக்கர்களைத் தொலைத்தவனே! என்று கூறும் அன்பர்களுக்கு ஒரு தாயுள்ளம் போன்ற நிலையில் அவனதுவேண்டுதலைச் செவிசாய்த்துது வந்து அவனுக்கு அருள்புரியும் பெருமான் செம்பொன் கோவிலில் குடி கொண்டுள்ளான் என்று அவனது பெருமைகளை ஆழ்வார் எடுத்துக் கூறுகிறார்இங்குத் தான்ன் பிறவிப் பயனை அடைந்ததாகக் கூறுகிறார்.  தாமஸ, ரஜஸ், சத்துவம் போன்ற முக்குணங்களின் வேறுபாட்டால் தீய குணங்கள் வருகின்றன. இந்நிலைமாறித் தாமஸமஸ குணமும், உத்தம குணமும் ஒருங்கே அளிக்கும் பெருமான் என்று கூறுகிறார்.

      

மல்லை மா முந்நீர் அதர்பட மலையால்
     அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை
     கலங்க ஓர் வாளி தொட்டானை
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
     செம்பொன்செய் கோயிலினுள்ளே
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்
     கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.      1273

 

இரத்தினங்களின் பிறப்பிடமான பெரிய சமுத்திரமே பாதையாகும்படி மலைகளைக் கொண்டு அணை கட்டி மகிழ்ந்தவன்.  திருக்கூடமென்னும் மலையின் மீது கட்டப்பட்ட கடினமான மதிலையுடைய இலங்கை சிதறிக் கலங்கும்படி அம்பு தொடுத்தவன். சதுர் வேதங்களையே செல்வமாகக் கொண்ட அந்தணர்கள் வாழ்கின்ற நட்ட நடுவில் செம்பொன்னால் செய்யப்பெற்ற கோயிலுள்ளே திருமகளுடன் வீற்றிருப்பதை அடியேன் கண்டு தரிசித்துப் பிறவிப் பயன் அடைந்தேன் என்கிறார் ஆழ்வார்.

செல்வம் மிக்க  பெரிய கடலில்  பாதை உண்டாகும்படி  மலையால்  அணை கட்டி  மகிழ்ந்தவனும்  மலையின் மேலே  கட்டப்பட்ட  அரணான மதிளை உடைய  இலங்கை  சிதறும்படி ஒரு அம்பை  எய்தவனுமான எம்பெருமானை  நான்கு வேதங்களைச் செல்வமாகவுடைய  அந்தணர் வாழ்கிற   திருநாங்கூரின  நடுவிலே  செம்பொன் செய் என்னும்  கோயிலின் உள்ளே  தாமரையிலிருக்கும்  திருமகளோடு சேர்ந்திருப்பவனை, அடியேனான நான்  அவனைப் பார்த்து  அனுபவித்து  துயர் தீர்ந்து உய்ந்தேன் என்கிறார் ஆழ்வார்.

      கொடிய இராவணனைஅழிக்கக் கடலில் அணை கட்டிய இராமபிரான் இலங்கையை நடுங்கச் செய்தான். அவன் செம்பொன்செய் கோவிலில் வீற்றிருக்கிறான். இப்பிறவியில், முற்பிறவியில் செய்த தீவினைகளின் துன்பங்களை அனுபவித்தல் வேண்டும். அது போன்று நல்வினைகளின் இன்பங்களையும் அனுபவித்தால்தான் நம்முள் இருக்கும் ஆன்மாவை நாம் காண இயலும். அத்தகைய உயரிய நிலையை நாம் அடைய வேண்டும்.

      

வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்
     வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானைக்
     கரு முகில் திரு நிறத்தவனை
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
     செம் பொன் செய் கோயிலினுள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக்
     கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.       1274

 

மிகுந்த சினத்தையுடைய குவலயாபீடமென்னும் யானையைச் சீறி அழித்தும், தனுர் விழாவில் வில்லினை முறித்தும், சாணூரன், முஷ்டிகன் போன்ற அரக்கர்களை அழித்தும், கம்சனைக் கொன்ற காளையான எம்பெருமானை மைமலை போன்ற நிறம் கொண்டவனை, கரியமலை நின்றது போன்ற அரவிந்தனை, சதுர் வேதங்கள் கற்று அழகிய சொற்களை உதிர்க்கும் அந்தணர்கள் வசிக்கும் நாங்கூரின் நடுவில் உள்ள செம்பொன்செய் கோயிலில் தரிசித்து துன்பங்கள் தொலையப் பெற்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

வெவ்விய சினத்தை உடைத்தாயிருக்கிற குவலயாபீடத்தையும்‌, அதனருகே உள்ள கம்ஸன் இட்டு வைத்த வில்லையும்‌, அதுக்குள்ளாக நிறுத்தின மல்லர் வர்க்கத்தையும்‌, குவலயாபீடத்தைச்‌ சீறி,  வில்லை முறித்து, மல்லையடர்த்தவன் தன்‌னை, அதுக்குள்ளே நின்ற கம்சனை நிக்ரஹித்த காளைபருவம் நிரம்‌பாத அளவிலே, ஈஸ்வரன்‌ செய்தத்தை செய்து, கம்சனை நிரஹித்து, வடிவோடே நின்றவனைக் கண்டேன் என்பதாகும்.

      இப்பாசுரத்தில் ஆழ்வார் கண்ணனின் பெருமைகளைக் கூறுகிறார். களிற்றை வெகுண்டவன் என்றும், வில்லை இறுத்தவன் என்றும், மல்லர்களை அடர்த்தவன் என்றும் அவரது லீலைகளைப் பலவாறு வர்ணித்துள்ளார்.  இம்மூன்று நிகழ்வுகளும் கம்ச வதத்திற்கு முன் நிகழ்ந்தவையாகும். கிருஷ்ணாவதாரத்தில் செய்த சிறுசிறு செயல்களெல்லாம் விளக்கும்படியாகச் செம்பொன்செய் கோவிலில் கண்டார். கண்குளிரும்படி ஓர் அஞ்சனகிரி நிற்பது போன்று நிற்கும் பெருமாளைக் கண்டு அடியேன் சகல தாபங்களையும் தணியப் பெற்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

 

அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
     துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்
     மேவிய வேத நல் விளக்கை
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
     செம்பொன்செய் கோயிலினுள்ளே
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை
     வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே .       1275    

 

கோபத்தில் போரிட்ட பாணாசுரனுடைய ஆயிரம் தோள்களும் அறுந்து விழுமாறு அக்காலத்தில் சக்கரத்தைச் செலுத்தியவன், பிரகாசமான சிகரத்தையுடைய திருவேங்கடமலை மேல் எழுந்தருளியிருக்கும் வேதங்களால் காணக்கூடிய நல்தீபமானவன். தென்திசைக்குத் திலகம் போன்று மஹான்கள் வாழும் நாங்கை செம்பொன்னால் செய்த கோயிலில் உள்ளம் மகிழ, பாகவத கோஷ்டிகள் நிறைந்த வாசுதேவனை வணங்கிப் பிறவிப் பயன் பெற்றேன் என்கிறார் ஆழ்வார். 

கோபத்துடன் வந்த  பாணாசுரனின்  ஆயிரம் தோள்களையும்  அன்று வெட்டி வீழ்த்தியசக்கரத்தைப் பிரயோகித்தவனும்  ஒளிமிக்க சிகரத்தையுடைய  திருவேங்கட மலையின் மேலிருப்பவனும்  ஸ்வயம் பிரகாசமான வேத விளக்காக  இருப்பவனும்  தென்திசைக்கு  திலகம் போன்ற  மஹான்கள் வாழ்கிற  திருநாங்கூரின்  செம்பொன் செய் என்னும்  கோயிலின் உள்ளே  பாகவத கோஷ்டி  பொலிவு பெறுவதைப்பார்த்து  மகிழ்ந்து நின்றானைவணங்கித் தாஸனானன நான்  வாழ்ந்து உய்ந்தேன் என்கிறார்.

      தனது பேரனாகிய அநிருத்தனை சிறையிட்ட பாணாசுரனை தனது திருவாழியினால் அழித்த. திருவேங்கடப் பெருமானே செம்பொன்செய் கோவிலில் சேவை சாதிக்கின்றான். பாணாசுரனைஅழிக்கும்போதுது சிவபெருமான் வேண்டிக் கொண்டவாறு அவனை உயிரோடு விரட்டி விட்டார் என்றும் புராணங்கள் பகர்கின்றன. பலர்கூட்டமாகச் சேருமிடம்ம் என்பார்கள். நாங்கை நாலாயிரம் என்ற  கூற்றின்படி நாலாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்தார்கள் என்பதனால் ‘மன்றதுபொலிய’ என்ற பொருளும் கொள்ளலாம்.

      

வண்ணா கண்ணனே என் தன்
     கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்
     உள்ளத்துள் ஊறிய தேனை
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
     செம்பொன்செய் கோயிலினுள்ளே
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை
      வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.       1276

 

களாக்கனி போன்ற நிறமுடையவனே! கண்ணா! எனது காளமேகமே! எனத்தியானித்து மனம் கனிந்திருக்கும் அடியார்களுடைய நெஞ்சில் பக்குவப்பட்டு அடியார்களின் நெஞ்சில் ஊறிய தேன் போன்றவனை, நான்கு வேதங்களும் கற்றுத் தெளிந்த சிந்தனை கொண்ட அந்தணர் வசிக்கும் நாங்கையின் நடுவில் உள்ள செம்பொன்னால் செய்த கோவிலில் பரமானந்தத்துடன் வீற்றிருக்கும் பெருமானை வணங்கி அடியேன் பிறவிப் பேற்றை அடைந்தேன் என்று கூறுகிறார்.

தெளிந்த நான்மறையோர் ஒரு சமயத்தில் ஸர்வேச்வரன் ரக்ஷகனென்றிருப்பது, மற்றொரு ஸமயத்திலே மற்றொன்று, ஆகவிப்படி மாறிமாறிக் கலங்குகையின்றியே, எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவ்வவஸ்தையிலும் எம்பெருமானே ரக்ஷகன் என்னும் தெளிவுடையார் வாழும் திருநாங்கூர் ஆகும்.  இப்படிப்பட்ட தெளிவுடையார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டு நிற்கப் பெற்றோமே என்னும் மகிழ்ச்சி வடிவிலே தோன்ற நின்றமையால் “வளங்கொள் பேரின்பம் மன்னிநின்றானை” என்றார்.

      தியானம் என்பது நம்மை பெருமானுடன் ஒன்றாக கலக்கும் ஒரு உபாயமாகும். இது மன ஒருமைப்பாட்டால் கைகூடுகிறது.  கண்ணனை நெஞ்சில் நிறுத்தினால் தியானம் கை கூடும். அவ்விதம் செய்யும்போது மனத்தில் உள்ள தேவையற்ற எண்ணங்கள் தீயினால் சுட்ட பஞ்சு போல் எரிந்துவிடும். மனதினை மாறி மாறி நினைக்காமல் எம்பெருமானே நம்மைக் காப்பான் என்ற தெளிவான சிந்தனையுடன் அவனை அணுகினால் அவனும் நமக்கு காட்சி தந்து இத்தகையவர்க்கு காட்சி தந்தோமே என்று மனம் குளிர்வான் என்பது இதன் பொருளாகும்.

      

 தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்
     செம்பொன்செய் கோயிலினுள்ளே
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்
     மங்கையார் வாள் கலிகன்றி
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்
     ஒழிவு இன்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு
     வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.         1277

 

தேன் நிறைந்த வண்டுகள் கொண்ட சோலைகள் நிறைந்த திருநாங்கூரின் நடுவில் செம்பொன்செய் கோவிலில் உள்ள தேவாதி தேவனைத் சேவித்தபடி அருள் புரியும் வாட்படை கொண்ட கலியன் என்கிற திருமங்கையாழ்வார் குறையின்றி இப்பத்து பாசுரங்களால் விளக்கியுள்ளார். இவற்றை ஒன்று விடாமல் பொருளோடு படிப்பவர்கள் பரப்பையுடைய வெண் கொற்றக்குடைக்கீழ் உலகை மகிழ்வுடன் ஆண்டு பின்பு வைகுந்தவாசம் செய்வார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

வண்டுகள்‌ நெருங்கியிருந்துள்ள சோலையையுடைத்தான திருநாங்கூரிலே செம்பொன்செய்‌ கோயிலினுள்ளே அயர்வறும் அமரர்கள் அதிபதியைக்‌ கண்டமையாய்ந்து சொல்லிற்று. திருமங்கையிலுள்ளார்க்கு மிடுக்கான வாளையுடையரான ஆழ்வார்‌, லக்ஷணங்களில்‌ குறையறச்‌ சொன்ன பத்தும்‌, வழுவவிடாது அப்யஹிக்க வல்லவர்கள்‌,  பரப்பையுடைத்தான வெண்கொற்றக்‌ குடைக் கீழே, பூமியை அடைய பாகவத சேஷமாக்குகைக்காக நிர்வஹித்து, அநந்தரம்‌ நிரவதிக ப்ரீதியுக்தராய் நித்யஸூரிகளோடே ஒரு கோவையாகப் பெறுவர்.

      செம்பொன்செய் கோவில் பெருமானின் அருளால்  பிறவிப் பயனை அடைந்தேன் என்றார் ஆழ்வார்.  பிறவிப் பயன் என்பது நிலையற்ற பொருட்களை நிராகரித்து நிலைபேறான ஆத்ம ஒளியினை தரிசிப்பதே ஆகும்.  இந்தத் தரிசனம் என்பது ஒவ்வொருவரின் தார்மீக உரிமையாகும். எத்தகைய தாழ்ந்து இருப்பினும் அவர்கள் ஆத்ம தரிசனம் காண்பார்கள்.  நம்முள் இருக்கும் மாயத்திரை விலகுவதற்கு புராணங்களும், வேத வாக்கியங்களும், இப்பாசுரங்களும் பெரிதும் உதவுகின்றன. நாம் இத்தகைய நிலை பெற வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...