ஞாயிறு, 7 டிசம்பர், 2025

42. திருக்கோவலூர்

 

திருமங்கையாழ்வார்                                                                                      பெரிய திருமொழி 

அன்று ஆயர் குலக் கொடியோடு
அணிமாமலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
உறையும் இடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
தடந்திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்
மாமலையாவது நீர்மலையே.     1078 

      கண்ணனாக அவதரித்த காலத்தில் நப்பின்னையுடனும், மலர் மகளோடும் அன்புடன் கலந்திருப்பவன். அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவன் என்றும் உறையும் ஊர் திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூரில் முறையே நின்றவனும், அமர்ந்தவனும், இருந்தவனும், நடந்தவனுமாகிய எம்பெருமான் இந்நான்கு நிலைகளில் திருநீர்மலையில் காட்சி தருகிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
      இப்பாசுரத்தில் ‘ஆயர் குலக்கொடி’ என்பது நப்பின்னையைக் குறிப்பதாகும். ‘அணிமாமலர் மங்கை’ என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். அவளின் அம்சமானவளே ருக்மிணி பிராட்டியாகும். மூன்று பிராட்டிகளை அடைய அசுரர்களை அழித்தவனாவான். அரக்க குணம் கொண்ட துரியோதனனை குருக்ஷேத்திரத்தில் பகவான் அழித்தார்.  இராவணனை இலங்கை போரில் அழித்தார். இரண்ய சிசுபாலர்களை அழித்து மக்களைக் காத்தார். பலரை துன்புறுத்தி வந்த கம்சனையும் அழித்தார். எனவே அசுர குணம் கொண்டவர்களுக்கு பகவான் இரக்கமே காட்டமாட்டார் என்பது இப்பாசுரவழி அறியப்படுகிறது. 

மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்
     வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர் இளந் தளிரில்
     கண்வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்
     தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே           1138 

      மேகங்களால் சூழ்ந்திருக்கும் ஏழு மலைகளும், ஏழு சமுத்திரங்களும், சுவர்க்கமும், பூவுலகமும் மற்றுமுள்ள எல்லாமும் அழியாதபடி திருவயிற்றில் அடக்கி, ஆலிலை மேல் கண் வளர்ந்தருளிய திருமாலை, மணிகள் முத்துக்கள் நிறைந்த வற்றாத நீர் வளம் கொண்ட பெண்ணையாற்றுத் தென்கரையிலே தூய்மையான நான்கு வேதங்களையும் கற்ற வேதியர்கள் சோம யாகம் நடத்த, நெற்பயிர்கள் செழித்து வளரும் வயல்கள் நிறைந்த திருக்கோவலூரில் நான் தரிசித்தேன் என்கிறார் ஆழ்வார்.
      திருக்கோவலூரில் நான் சேவிக்கும் பெருமான் ஆபத்து காலத்தில் உதவும் உபகாரசீலன். பிரளயத்தின் போது உலகினைக் காக்க உண்டு உமிழ்ந்து ஆலந்தளிரில் குழந்தையாக வந்து காத்தவன்.  நீர்வளம் மிக்க இத்திருத்தலம் பொன், முத்து, மாணிக்கங்களை கொண்டு வந்து சேர்த்தன. அநந்யப்ரயோஜனரான பல வைதிகர்கள் பலனைக் கருதாது சோம யாகங்கள்  நடத்திக் கொண்டிருப்பர். அவ்விதம் வேள்வி புரிந்தாலும் ஒரு வழிப்போக்கனுக்கு தேசத்தைக் காணாமல் அதனைப் பற்றிய செய்தி தன்னால் தெரிந்து விடுவது போன்று, இவர்களது யாகமும் பகவானின் அருளால் பலன்கள் கொடுக்கும். 

கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்
     தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள் பாம்பில்
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை
     தாம் இருவர் அடி வருடும் தன்மையானை
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து
     வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நான.      1139 

      பிரமன் முதலான தேவர்கள் கொத்து கொத்தாக மலர்ந்துள்ள மணமிக்க துளசியையும், சந்தனத்தையும் நறும் புகையையும், தீபத்தையும் கையிலேந்திக் கொண்டு தேவர்கள் வழிபட, திருமகளும், நிலமகளும், திருவனந்தாழ்வான் மேல் சயனித்திருக்கும் நின் திருப்பாதங்கள் பிடித்துவிட, ஏழு இசைகளையும், ஆறு அங்கங்களையும், ஐம்பெரும் யாகங்களையும், நான்கு வேதங்களையும், மூன்றுவித அக்னியையும் கொண்ட எம்பெருமான் மேல் மனது லயிக்க இரவும் பகலும் பூஜிக்கும் அடியார்களும், செல்வ வளமும் கொண்ட இடமாக திருக்கோவலூர் திவ்ய தேசம் திகழ்கின்றது.
      தேவர்கள் மலர்களைக் கொண்டு பகவானை ஆராதிக்கின்றனர். எப்போதும் பகவானிடம் ஈடுபாட்டுடன் உள்ளார்கள். திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மேல் பள்ளி கொள்ளும் பெருமாள் அடியார்களைக் காத்தருள்வதற்காக திருக்கோவலூரில் வந்து சேவை சாதிக்கின்றார். இம்மண்ணுலகில் பகவான் வீற்றிருக்கும் புண்யத் தலங்களைத் தேடிச் சென்றால் அதுவே சொர்க்கமாகும். வாழ்வதற்கு பொருள் தேவை. ஆனால் அப்பொருளை கைப்பற்றுவதிலேயே வாழ்நாளைச் செலவழிப்பது மனிதனின் அறியாமையாகும். இந்த அவல நிலையைப் போக்க திருக்கோவலூர் பெருமானை வந்து தரிசிக்குமாறு வேண்டுகிறார் ஆழ்வார். 

கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக்
     கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி
     அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட
     இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்      
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே   1140 

இளந்தளிர்களையும், மலர்களையும் கொண்ட சோலைகளில் மலர்கள் நிறைந்த குளத்தில் முதலை காலைக் கவ்வியதற்கு வேதனையடைந்த யானையான கஜேந்திரன், ‘ஆதிமூலமே’ என்று அலறியது. அப்போது திருவாழி ஏந்தி யானையைக் காத்தவனே! தாய் நீரிலிருந்து தோன்றி கருநெய்தல் மலர்கள் உனது நிறத்தைக் காட்ட, புன்னை மரங்களின் மொட்டுக்கள் உன் முத்துப்பற்களை நினைவூட்ட, அவைகள் பசும் பொன்னான உன் மனத்தை அறிவிக்க, பொய்கைத் தாமரைகள் தீப்பிழம்பாக காட்சி அளிக்கக்கூடிய தலம் திருக்கோவலூராகும்.
      கஜேந்திரன் என்ற யானையின் துயர் தீர்த்த பெருமான் நமது விரோதிகளையும் தொலைத்து நம்மையும் காத்தருள்வார். பகவான் வரும்போது ஆகாயம் இடமடையும்படி எழுந்தருளினார். யானையைக் காத்து அதன் பூவைப் பெற்றுக்கொண்டு அதன் காலில் கண்ட காயங்கள் ஆறும்படி செய்தார். பொற்கொல்லரின் இடமானது கரியும், பொன்னும் முத்துக்களும் நிறைந்திருக்கும். அதுபோன்று கருநீல மலர்கள் கரியாகவும், புன்னை மொக்குகள் முத்தாகவும், புன்னை மலர்கள் பொன்னாகவும், தாமரை மலர்கள் நெருப்பாகவும் திகழ்கின்றது என்பதை ஒப்பிடுகிறார். 

தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து
     தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்
     அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்
     குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே       1141 

      கொடிய அசுரனான மாலியை அழியுமாறு கருடாழ்வார் மேல் பறந்து போர் செய்து உலகிலுள்ளோர் குறைகளைக் களைந்த குணவாளனை, அச்சமயம் நன்றியுணர்வால் கண்ணீர் மல்க அன்புடன் துதிக்கும் அடியார்களுக்கு அமுதம் போன்றிருக்கும் ஆராவமுதனை, கோங்குப்பூக்களும், சுரபுன்னைகளும், குரவ மரங்களும் நிறைந்த நந்தவனங்களில் வண்டுகள் இசையோடு ரீங்காரிப்பதைக் கேட்டு கரும்புகள் கணு ஏறி வளர்ந்து வயல்களால் சூழப்பட்ட திருக்கோவலூரில் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      திருக்கோவலூரில் சேவை சாதிக்கும் கருட வாகனப் பெருமான் மாலி என்னும் அசுரனை வதம் செய்து சாதுக்களை வாழ வைத்தவன். இத்தகைய வீரச் செயல்களுடன் சௌலப்ய, சௌசீல்ய குணங்களை நினைத்து மனமுருகி, கண்ணீர் கரைந்து நிற்கும் அடியார்களின் மனத்தில் இருப்பவன். மாலியானவன் போரில் கருடனைத் தாக்குவதற்காக தேரிலிருந்து இறங்கி தன் கதையினால் அதன் முகத்தில் அடித்து துன்பம் கொள்ள வைத்தான். தன் துன்பத்தை வெளிக்காட்டாது பெருமானைக் காப்பாற்ற முயற்சிக்கும்போது பெருமான் தனது சக்ராயுதத்தை பிரயோகப்படுத்தி அசுரனின் தலையைத் துண்டித்தார்.      

கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி
     கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்
     பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளரப் புகழ் வளர மாடம்தோறும்
     மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே     1142 

      இரத்தமும் சதையும் உண்டான கரை படிந்த கூரிய வேலைப் பிடித்த கரன், கபந்தன், வாலி என்னும் கொடிய அரக்கர்களை ஒரே பாணத்தினால் அழியும்படி செய்த, இலங்கை அரக்கர் படைகளை முழுவதும் அவற்றின் தலைவனான இராவணனோடு அழித்த எம்பெருமானை, வீடுகளில் வேத மந்திரங்கள் ஒலிக்க, கீர்த்தி வளரவும், நாற்சந்திகளிலும் வாரமோதுகை என்னும் அத்யயநம் நடக்க, நீர் அரணையும், நந்தவனங்களை தழுவிய தென்றல் வீசும் இடம் திருக்கோவலூராகும்.
      வேதம் ஓதுபவர்கள் தமது அத்யயன முறைகளை பலவகையாக ஓதுவர். அவற்றுள் ‘வாரஞ்சொல்லுதல்’ என்பது அநுவாகத்தின் அடியையோ, பஞ்சாதியின் அடியையோ ஒருவர் எடுத்துக் கொடுத்து பதபாடம் சொல் மயங்காமல் ஏறக்குறைய இருநூற்றைம்பது பதங்களை ஒருசேர சொல்லி நிறுத்துதல் வேண்டும். இவ்விதமாக அங்கு ஒவ்வொரு வீடுகளிலும் இத்தகைய வேத கோஷங்கள் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும். அதனுடன் பகவானின் பெருமைகளையும் சேர்த்து உரைப்பார்கள். இத்தகைய வேத ஒலியானது திருக்கோவலூரில் கேட்டபடி இருக்கும் என்பது இதன் பொருளாகும்.      

உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு
     உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று
     தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு
     வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே       1143 

      இருட்டான இடங்களில் நடந்து சென்று உறிகளில் நிறைந்திருந்த வெண்ணெயைக் களவு செய்து உண்டவனைக் கண்டு யசோதை உரலோடு கட்ட, கட்டுத்தறியில் சேர்த்துக் கட்டப்பட்ட யானை போல் கட்டுண்டு, தனது  ஆழகான கண்களிலிருந்து நீரைப் பெருக்கிய கோவிந்தனை, திருமகளோடும், சரஸ்வதியோடும், மானை வாகனமாகக் கொண்ட எட்டுத் தோள்களையுடைய துர்க்கையோடும் செல்வச் செழிப்பு மிக்க நெருக்கம் நிறைந்த மணிமாடங்களைக்  கொண்ட  திருக்கோவலூரில் நான் தரிசனம் செய்தேன் என்ற கூறுகிறார் ஆழ்வார்.
      கண்ணன் வெண்ணெயைக் களவு செய்ய போனபோது அங்கிருந்த இருளினாலும், தனது கரிய நிறத்தினாலும் பானையைத் தேடி அலைந்து, பானை கிடைத்தவுடன் மகிழ்வுடன் புன்முறுவல் பூத்தான். பூரண நிலவு போன்ற முத்துப் பற்களின் ஒளியையே கை விளக்காகக் கொண்டு வெண்ணெயினை உண்டான். உரலோடு சேர்த்துக் கட்டியது கட்டுகடங்காத களிறானது கட்டுண்டது போலிருந்தது. முப்பெரும் தேவியரும் இங்கு சேவை சாதிக்கிறார்கள். பெரியாழ்வார் தமது திருமொழியிலும் துர்க்கை பற்றி ‘வெய்ய கலைப்பாகி’ என்று குறிப்பிடுகிறார். மூவரும் இங்கிருப்பதால் இவ்வூரில் குடியிருப்போர் கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவர் என்ற வியாக்யானக் குறிப்பு உள்ளது.   

இருங் கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி
     இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு
     வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று
     காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.     1144 

      நீண்ட துதிக்கையையுடைய குவலயாபீடம் என்ற யானையைச்  சீறி அழித்து, கேசி என்னும் குதிரையின் வாயைப் பிளந்து, ஏழு காளைகளைக் கொன்று, இரு மருத மரங்களை வேரோடு சாய்த்து, தன்னைக் கொல்ல வந்த சகடாசுரனை வண்டி முறிய உதைத்து, சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களை வதைத்து, வஞ்சனைகள் பல புரிந்த கம்சனுக்கு நஞ்சு போன்றவனை, நான் திருக்கோவலூரில் தரிசித்தேன். கரிய பாக்கு மரத்தின் பசும்பாளை வெண்முத்துக்களை கொடுத்து, காயெல்லாம் மரகதமாய் ஜொலிக்க, பவழங்கள் மின்ன, சுரபுன்னை மர மொட்டுக்களை மலரச் செய்யும் தோட்டங்களைக் கொண்ட இடமாகும்.
      கண்ணபிரான் சிறு வயதில் பல்வேறு சிறுசிறு சேவகங்கள் செய்தருளினான். கம்சனின் ஆணையால் வந்த அசுரர்களை துவம்சம் செய்து அழித்தான். பின் கொடியவனான கம்சனையம் அழித்தான். இச்செயல்களை ஆழ்வார் பலமுறை சொல்வது நமது மனத்தில் நன்கு பதிந்து விட்டால் நாம் தவம் மேற்கொள்ள அவசியமில்லை. வேத சாத்திரங்கள் கற்க வேண்டியதில்லை, கானகம் சென்று தனிமையை நாட வேண்டியதில்லை. அவனது உள்ளமே தியான பீடமாகிவிடும் என்று கூறுகிறார். 

 பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு
     பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை
     செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்
     புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.      1145 

      பூமியின் பாரத்தை நீக்க முற்காலத்தில் பாரதப் போரில் தூது சென்று பார்த்தனுக்கு தேர்ச்சாரதியாக இருந்து பகைவருடைய படைப் போரில் அழியுமாறு செய்த எம்பெருமானை, காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமானும் அளகாபுரி மன்னன் குபேரனும், இந்திரனும், பிரம்மாவும் வசிக்கும் ஊரைப் போலச் சிறப்புடைய வேதம் கற்றவர்கள் நிறைந்த செல்வ வளம் பெற்ற திருக்கோவலூரில் தரிசித்தேன் என்கிறார் ஆழ்வார்.
      பூமிதேவிக்கு நல்லவர்களை சுமப்பது இலவம் பஞ்சைப் சுமப்பது போலாகும். அதே கொடியவர்களைச் சுமப்பது பாரத்தை சுமப்பது போலாகும். இத்தகைய கொடியவர்களின் ஆட்சியால் பூமிதேவி பாரம் தாங்காமல் துன்புற்று ஸ்ரீமந் நாராயணனிடம் முறையிட்டாள். பெருமான் கண்ணனாக அவதரித்து அனைத்து அசுரர்களையும் அழித்து பூமியின் பாரத்தைக் குறைத்தான். அத்தகையவன் வாழும் ஊரானது, காமனை வென்ற சிவபெருமானுக்கும், செல்வம் மிக்கவர்கள் கொண்ட குபேரனுக்கும், அழகு மிக்க தேவேந்திரனுக்கு பட்டிணமாகவும், நான்முகனுக்கு வேதம் கற்றவர்கள் நிறைந்ததால் இவ்வூர் ஏற்ற இடமாகத் திகழ்கிறது.     

தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு
     சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று
     கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை
     செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே        1146 

      அழகிய வடிவுடைய திருமகளுடன் நிலமகளும் சேர்ந்து சங்கு சக்கரம் இருபுறமும் ஒளியுடன் இருக்க, கற்பக விருட்சம் போல் நின்று தன்னை நாடியவர்களுக்கு அருள் புரியும் எண்ணம் கொண்டவனை, சிவந்த திருவடிகள், திருக்கைகள், திருவாய், திருவிழிகள், சிவந்த ஆடை இவற்றைக் கொண்டு செம்பொன்னால் செய்த வடிவழகையுடைய பகவானைத் அக்னி போன்ற வண்ணமுடைய சிவபெருமான், பிரம்மா போன்றவர்களும், அரும் பெரும் காரியங்கள் செய்யவல்ல அடியார்கள் தங்கியுள்ள திருக்கோவலூரில் தரிசனம் செய்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      தமது தேவியர்களுடனும், பஞ்சாயுதங்களுடனும் சேவை சாதித்து அருள் புரிபவன் எம்பெருமான் என்று கூறுகிறார். அவரது கையில் உள்ள திருவாழியும், திருச்சங்கும் ஒளி விட்டு பொலிவுடன் பிரகாசிக்கின்றன. பெரியதொரு கற்பகவிருக்ஷமோ என்று நினைக்கும் அளவிற்கு அவரது ஒளி பொருந்திய உருவம் திகழ்கின்றது. இவர் பிரம்மருத்ரர்கள் போன்று ஸ்ருஷ்டி சம்ஹாரங்கள் செய்ய வல்லவரோ என்று அடியார் கூறுவது போல் உள்ளது. பகவானின் தோற்றமானது நமக்கு அபயம் தருவது போன்றுள்ளது என்றளவில் இப்பாசுரத்தில் பொருள் பொதிந்துள்ளது.    

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல
     மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
     திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்
     வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக்
     கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.      1147 

      கஜேந்திரன் என்ற யானைக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிய பெருமானும், கரு நெய்தல் மலர்கள், மரகதப் பச்சை, குளிர்ந்த கார் மேகத்தைப் போன்ற பெருமானை, ஆத்ம குணங்களால் ஆசைப்படும் வேதியர்கள் வாழும் திருக்கோவலூரில் தரிசித்தேன் என்று அழகு மிக்க மங்கையர் நிறைந்துள்ள திருமங்கையின் அரசனான கலியன் என்கிற திருமங்கையாழ்வார் இயற்றிய இப்பாமாலையினைப் பக்தியுடன் பாட வல்லவர்கள் உலக மக்களால் வணங்கப்பட்டு, ஒருவராலும் காண முடியாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரந்தாமனைத் தரிசிப்பர் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஆத்மகுணம் கொண்ட இவர்களைப் பார்த்தவாறு இவர்களுக்கு நாம் அடிமைப்படுவோம் என்று கூறுவது போன்று இத்தலத்து அந்தணர்கள் இருப்பார்கள். அதுபோன்று திருமங்கை நாட்டின் சிறப்பானது குளிர்ந்த சோலையும், அழகிய வயல்களும், பொலிவும் பெற்றதாக இந்நாடு விளங்குகின்றது. இங்குள்ள மாதர்களின் வதனங்கள் அவர்களது மேன்மையைச் பறைசாற்றும். பொருட் செல்வம், புத்திரச் செல்வம், இந்திர லோகம் வேண்டுமென்று கூறுபவர்களுக்கு பலன் அளிக்க பகவான் எங்கும் வியாபித்துள்ளான் என்று கூறுகிறார்.     

பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால்
மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண்
பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திரகூடத்து உள்ளானே.      1169 

பேய்ச்சியான பூதனையின்  விஷப்பாலை உண்ட  ஆச்சர்யம் தான் என்ன  என்று கேட்டால்,  இது இச் சிறுபிள்ளையின்  செயல் என்று சொல்லி  இக் கண்ணபிரான்  பூமாதேவியின்  நாதன் என்றும்,  வண்டுகள் மதுவுண்கிற தாமரையில் பிறந்த  திருமகளின் பதி என்றும்  கண்டார். நெஞ்சை கவரும் அழகிய  இடைப் பெண்கள்  துதித்தும் வணங்கியும்  அன்றலர்ந்த மலர் தூவ  அதைப் பெற்றுகொள்ள வரும் கண்ணன்  திருச்சித்திரகூடத்தில்  உள்ளான்.
      பகவானின் செய்கள் ஓவ்வொன்றும் காரண காரியத்துடன் இருக்கின்றன என்பதை நம் அனைவருக்கும் ஆழ்வார் உணர்த்துகின்றார்.  இந்த உலகத்தில் இன்பம் மட்டும் இறைவனால் அளிக்கப்படும் வரப்பிரசாதம் அல்ல. துன்பங்கள் கூட வரப்பிரசாதம்தான். துன்பங்கள் அதிகரிக்கின்றன என்றால் உங்கள் கணக்கு விரைவில் முடிக்கப்படுகிறது என்பது பொருள்.  ஆகவே துன்பங்களை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். இந்த விநாடியிலிருந்து நல்வினைகளைச் செய்ய தொடங்குங்கள். அது மலையாகப் பெருகட்டும். அப்போது தீவினை கடுகளவு ஆகி அதுவும் மறைவதைக் காண்பீர்கள். இதனைப் புரிந்துகொள்ள நாம் தெய்வீக நிலையினை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும். 

பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையைத்
     தெள்ளியார் வணங்கப்படும் தேவனை
மாயனை மதிள் கோவல் இடைகழி                                    
  மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை
     எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியைச் சென்று நாடிக்
     கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே.         1641 

பேய்ச்சியான பூதனையின் தனங்களில் உள்ள நஞ்சினை அருந்திய பாலகனை, தெளிவுமிக்க அறிவுடைய ஞானிகளால் போற்றி வணங்கப்படும் இறைவனை, திருமதில்களையுடைய திருக்கோவலூர் இடைக்கழியில் முதலாழ்வார்களிடையில் நின்றவனை, மாயவனை, வேதம் கற்ற அந்தணர்களின் நெஞ்சில் ஜோதியாய்க் குடி கொண்டவனை, நான் தளர்ந்து விழும் காலத்தில் எனக்கு நிதியாகவும், பொன்னாகவும், இரத்தினமாகவும் இருந்து உதவுபவனை, நாடிச் சென்று திருக்கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்கிறார் ஆழ்வார்.
      பகவான் ஜோதி வடிவானவன். ஜோதியிலிருந்து உலகத்து உயிர்கள் தோன்றியுள்ளன. இந்த உயிர்கள் அனைத்தும் பகவான் என்ற ஜோதியில் ஐக்கியமாகி விடுகின்றன. நாம் அழியும் உடல் அல்ல. அழியாத ஜோதி என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.  வயதான காலத்தில் நம் உடல் தளர்ச்சியடையும்போது நாம் பகவானின் ஜோதி என்ற உண்மைத் தத்துவத்தை நமக்கு உணரச் செய்து, நம் தளர்வுகளை அகற்றி, நமக்கு முக்தி அளிக்கிறான். நம்மை ஆத்மா என்ற நிலையில் வைத்துப் பார்க்கும்போது நமக்கு எல்லையில்லா ஆற்றல் பிறக்கும் என்பதை ஆழ்வார் நமக்குத் தெளிவிக்கிறார். 

திருமங்கையாழ்வார்                                                                                   திருநெடுந்தாண்டகம் 

 அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர் வேந்தன்
     அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன்
     தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த
     நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
     பூங் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே         2057 

      நெஞ்சமே! பகவானிடம் யாசிப்பவர்கள் மனம் நிறையும் அளவிற்கு கொடுக்கும் தேவர்களின் தலைவன், கருட வாகனன், அசுரர்களிடம் சீற்றம் கொண்டு அழித்தவன், அவன் விரும்பி கோயில் கொள்ளும் தலங்களில் எல்லாம் அவனது திருவடிகளைப் பாடி, மண்ணுலகமெங்கும் பரந்து பெருகி வருவதால் தென் பெண்ணையாறு கலங்குகிறது.  அதனால் அங்குள்ள மூங்கில்களை வேரோடு பறித்துச் செல்கிறது. அவை உதிர்க்கும் முத்துக்கள் வயல்களில் சேர, பொன் விளையும் பொய்கைகளை வேலியாகக் கொண்ட திருக்கோவலூருக்குச் சென்று வணங்குவோம் என்கிறார் ஆழ்வார்.
      ஆழ்வார், பெருமானின் கடாக்ஷம் கிடைக்காமல் அவதியுற்ற போது பெருமான் அவரைத் தேற்றி அவதாரத்திற்குப் பின் வந்தவர்கள் தரிசிக்க வேண்டுமென்றே நாம் தாயாருடன் சேவை சாதிக்கிறோம். அங்கே வந்து குறைவின்றி அனுபவிக்கலாமே என்கிறார்.  இதனைக் கேட்ட ஆழ்வார் நெஞ்சே! வா நாமும் அனுபவிப்போம் என்று கூறி அவரது பாக்களை பாடி தரிசிக்கச் சென்றார். பெருமான் திருவுள்ளம் உவந்து எழுந்தருளப்பெற்றவை திவ்ய தேசங்களாகும். போதும் என்று சொல்லுமளவிற்கு வாரி வழங்கும் திருக்கைகளை உடையவன். தானம் பெற்றபின் வேறொரு வாசலுக்கு செல்லாமல் நம்மை ஆக்கியவன். அத்தகையவன் திருக்கோவலூரில் வாசம் செய்கிறான். 

வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள
     வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த
     வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய
கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட
     கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற
     பூங் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!        2058 

      மிடுக்குடைய  மலைபோன்ற உயர்ந்த  தோள்களையுடைய  அரசர்கள் மாண்டுவிழ,  அழகிய கோடாலியை ஏந்திய பரசுராமனாகவும்,  ஸ்ரீராமனாக உலகம் ஆண்டும்,  மலையை உள்ளேயுடைய  பெரும் கடலுள்  ஒப்பற்ற வேற்படையை  செலுத்தின  முருகன் முதலான தேவதைகளை  பாணாஸுர யுத்தத்தில் வென்ற  பெருமான் இருக்கும் ஊர் விந்திய மலையில் வாழ்ந்த  கற்பு உள்ள  குணமுடைய கன்னி துர்கையால் காவல் காக்கப்படுவதும்  மணம் மிக்க சோலைகளாலே  சூழந்த விசாலமான வீதிகளையுடைய  தாமரைத் தடாகங்களையுடைய பராக்ரமசாலியான  மலயமான் அரசன்  வணங்கியதுமான  திருக்கோவலூரை  தொழுது வணங்குவோம், மனமே வா! என்று கூறுகிறார் ஆழ்வார்.
      எம்பெருமான் தனது சௌந்தர்ய குணத்தினால் சரணம் புகுந்த விபீஷணனைக் காத்தார். அது போன்று சுக்ரீவன் கலங்கி நின்ற போது தன் தோள் வலிமையைக் காட்டி அவனுக்கு தைரியம் அளித்தான். இந்நிகழ்வினால் ஆழ்வாருக்கும் அவரது அச்சத்தைப் போக்கி அபயமளித்தார். தேவர்களுக்கு சேநாதிபதியான சுப்ரமணியர் கடலினுள் கிடந்த மைநாகமலையை நலிவிழக்கச் செய்தார். துர்க்கையானவள் இத்தலத்தைக் காத்து வருகிறாள். அதுபோன்று மலையமான் என்ற அரசன் இத்தலத்திற்கு தொண்டுகள் பல புரிந்துள்ளதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. 

பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்பப்
     பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
     சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்
     தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன
     நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!         2068 

மென்மையான இளம் தனங்கள் நிறம் மாறிப் பசலை என்னும் நோய் பூத்திருக்கின்றன. கயல் விழிகளில் கண்ணீர் ததும்பி இருக்கிறது. அடிக்கடி பிரமை பிடித்தது போல் தனியே நிற்கிறாள். சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தங்கள் பேடைகளோடு மகிழும் ஒலி கேட்டு உடல் உருகி, அவள் தன்னோடு தொடர்பு கொண்டதை எண்ணி பகவான் எழுந்தருளியிருக்கும் திருத்தண்காவையும், குளிர்ந்த திருக்குடந்தையையும், திருக்கோவலூரையும் பாடி நடனமிடும் குரலைக் கேட்டுப் பெண்ணே! வாய் விட்டு நம் மணாளனை அழைப்பது நம் குலத்திற்கு ஆகாது என்று கூறி திருநறையூரைப் பாட மறந்தேனோ என்ற  பொருளில் பகவானை நினைத்துத் தன் பெண் புலம்புவதை திருத்தாயார் நிலையில் ஆழ்வார் பாடுகிறார்.
தன் மகள் சோர்வுற்ற நிலையைக் கண்ட திருத்தாயார், ‘’இவளுக்கு நாம் ஏதேனும் இதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம். அதனாலாகிலும் வழிப்படக் கூடுமோ” என்றெண்ணி 'நங்காய் நீ இங்ஙனம் வாய்விட்டுக் கூப்பிடுதலும் மோகித்தலுமான இவை நின்பெண்மைக்குத் தகாது, நம் குடிக்கும் இழுக்கு’ என்று சொல்ல, அங்ஙனம் அவள் இதம் சொன்னதுவே ஏதுவாக மேன்மேலும் அதிகமாக முயன்று பணைத்த படியைச் சொல்லுகிறது. 

திருமங்கையாழ்வார்                                                                                  திருக்குறுந்தாண்டகம் 

பிண்டி ஆர் மண்டை ஏந்திப் பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே?      2050 

      உளுத்துப் போன மாமிசத் துகள்கள் உதிரும் மண்டையோட்டை தரித்து வெளி இல்லங்களில் பிச்சை ஏற்றுத் திரியும் சிவபிரானின் சாபத்தைத் தீர்த்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் அருள் புரியும் இடமான திருக்கண்டியூர், திருமெய்யம், திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பேர்நகர், மாமல்லபுரம் போன்ற திவ்ய தேசங்களுக்கு சென்று சேவிப்பவர் பிறவிப் பயன் பெறலாம். மற்றவர்கள் பாவவினைகள் தீர்ந்தும் முக்தியடையாத நிலை பெறுவர். இங்கு பிறவிப்பயன் என்று கூறுவது பிறப்பு இறப்பு இல்லாத பேரானந்த நிலை, ஆத்மாவை அறிந்து விட்ட தூய நிலை, வேறுபாடுகளைக் கடந்துவிட்ட ஒரு அற்புத நிலை, பகவானின் ஒரு கூறாய் நாம் இருப்பதை உணர்த்தும் நிலை என்பதாகும். எனவே மக்கள் அனைவரும் இத்தகைய திவ்ய தேசங்களுக்குச் சென்று பெருமானை சேவித்தல் வேண்டும் என்று உணர்த்துகிறார்.  

பொய்கையாழ்வார்                                                                                         முதல் திருவந்தாதி 

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்      2158 

திருவேங்கடமும், வைகுந்த மாநகரும், திருவெஃகாவும், மலர்கள் நிறைந்த  நீர் நிலைகளைக் கொண்ட எழில்மிக்க திருக்கோவலூர்த் தலமுமான நான்கு புனிதத் தலங்களிலும் பகவான் முறையே நின்றருள்வதும், வீற்றிருப்பதும், சயனித்திருப்பதும், நடப்பதுமாய் தரிசனம் தருகிறார். எனவே நமது இடரெல்லாம் நீங்கிவிடும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளியுள்ளவாறு நாம் பாசுரங்களை அநுஸந்தித்தால் (சொன்னால்) நமது துன்பங்களெல்லாம் நீங்கிவிடும் என்கிறார். அவனது திருப்பதிகளில் நிற்பதும், இருப்பதும், கிடப்பது, நடப்பதும் போன்ற நிலைகளை நாம் சொல்லச் சொல்ல நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகலும். பகவான் நீக்கமற நிறைந்த போதிலும் மனதை ஒருமுகப்படுத்த ஆலய தரிசனம் செய்தல் வேண்டும். அந்த கட்டத்தில் மனம் முழு ஒருமைப்பாட்டுடன் விளங்கும். அந்நிலையில் மனமே கோவிலாக மாறி அதில் பெருமான் வீற்றிருப்பார் என்ற உயரிய தத்துவத்தை ஆழ்வார் நமக்கு அருளியுள்ளார்.     

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா உள் புகாக் காமர் பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி          2167 

      கொட்டும் மழையை ஆநிரைகள் மேல் விழாமல் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்துக் காத்த குணமுடையவனே!  எழில் மிக்க திருக்கோவலூரில் வாசலுக்கு வெளியே போகாமல், வீட்டுக்குள்ளேயும் நுழையாமல், இடைக்கழியிலேயே முதல் மூன்று ஆழ்வார்கள் தாங்கள் மூவரும் நின்றிருந்ததால் விரும்பி வந்து பிராட்டியை மார்பில் கொண்ட நீயும் நின்றருளினாயே! இது என்ன கருணை என்று வியக்கிறார் ஆழ்வார்.
      முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஒருங்கே சந்தித்துக் கொண்ட இடம் திருக்கோவலூர். அலைந்து திரிந்த மூவரும் நெருக்கமான ஒரு இடத்தில் தங்கியபோது பெருமான் பிராட்டியுடன் மூவருக்கும் காட்சி கொடுத்தார். அக்காட்சியானது காளமேகத்தில் மின்னல்கொடி படர்ந்தது போலிருந்தது. கோகுலத்து மழையில் ஆய்ச்சியர்களோடும் ஆநிரைகளோடும் நெருக்கி இருந்தது போன்று மூன்று ஆழ்வார்களும் நெருக்கி இருந்ததை ஒப்பிடுகிறார். ரேழி என்கிற இடைக்கழிக்கு வெளியே சம்சாரிகளும் உள்ளே முனிவர்கள் இருந்தபடியால் மூன்று ஆழ்வார்கள் நெருக்கடியில் இருந்தனர். பெருமானும் பிராட்டியும் அதே இடத்தில் வந்து நெருக்க அதனைக் கண்டு அனுபவித்து நிற்கின்றனர் என்பது இதன் கருத்தாகும்.      

பூதத்தாழ்வார்                                                                                             இரண்டாம் திருவந்தாதி 

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம்               2251 

      அழகிய தஞ்சை மாமணிக்கோயில், சிறந்து விளங்கும் திருவரங்கம், இயற்கை சூழல் நிறைந்த திருத்தண்கால், பக்தர்கள் தியானிக்கும் திருமலை, அழகிய திருப்பாற்கடல், கடல் சூழ்ந்த  திருக்கடல்மல்லை, நெடிதுயர்ந்த திருக்கோவலூர், அழகிய மதில்களைக் கொண்ட திருக்குடந்தை ஆகிய இடங்களைவிட அடியார்களின் இதயக்கமலத்தில் குடிகொள்வதே பெருமானுக்கு விருப்பம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
      பகவான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பது உண்மை. ஆனாலும் அலைபாயும் மனத்தினை கொண்டு அவனை கிரகித்துக் கொள்ள இயலாது.  எனவே பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்குச் சென்று வந்தால் நம் மனம் அலைபாய்வதை விடுத்து ஒருநிலைப்படும். அதனால் தெளிவு பிறக்கும். தீய வினைகள் புரியலாகாது என்ற வைராக்கியம் வளர்ந்து நாம் உத்தமர்களாக மாறுவோம் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது. 

ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நானவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவல்
ரே மதிள் கச்சி ஊரகமே பேரகமேபேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாலே 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம்  கணமங்கை   2706 

      தலைவியானவள் தொடர்ந்து கூறுகிறாள். இத்தகைய விஷயங்களில் பெருமான் எனக்கு விபரீதமான யோசனைகளைக் கற்றுத் தருகிறார். அடியேன் அவனது காளமேகம் போன்ற அழகிய திருமேனியைத் தரிசிக்கும் விருப்பத்தில் அவன் கோயில் கொண்டிருக்கும் திருத்தல்ங்களுக்குச் சென்று நான் மடலூருவேன். என்கிறாள். திருவேங்கடம், திருக்கோவலூர், மதில் சூழ்ந்த காஞ்சி, திரு ஊரகம், திருப்பேரகம் போன்ற இடங்களில் குடிகொண்டுள்ளான். தவழ்ந்து சென்று மருத மரங்களை முறித்தவனாகத் திகழ்கிறான். திருவாலி, திருவெள்ளறை, திருவெஃகா, திருத்தண்கால், திருநறையூர், திருப்புலியூர் ஆகிய திருத்தலங்களுக்கு அவனைத் தேடிச் செல்வேன் என்று தலைவி கூறுகிறாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...