ஞாயிறு, 14 டிசம்பர், 2025

29. திருஅரிமேய விண்ணகரம்


திருமங்கையாழ்வார்                                                                      பெரிய திருமொழி

      

திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்
     தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
     அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
     தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.      1238

 

நிலமகளும், திருமகளும் இருபுறமும் நின்று அடியவர்களின் கொடிய பாவங்கள் விலக எப்போதும் அருள்புரிந்து, ஏழுலகத்தவரும் வணங்க, வானுலகில் உள்ளோர் துதிக்க, பகவான் வாழுமிடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும். இங்குப் புகழ்பெற்ற வைதிகர்கள் வாழ்கின்றனர். செங்கழுநீர் மலர்கள், தாமரைகள், தாழைகள் தடாகங்களிலும், அவற்றின் கரைகளிலும் செழித்து வளர்கின்றன. அழகிய சோலைகள் நிறைந்த இத்தலத்துப் பெருமானை வணங்குவாயாக, மடநெஞ்சமே! என்று கூறுகிறார் ஆழ்வார்.

திருமகளும் மண்மகளும்  இரண்டு பக்கமும் இருக்க  பக்தர்களுக்கு என்றும்  அருள் புரிந்து  கொடிய பாபங்கள்  ஓடும்படி இந்த ஏழ் உலகத்தவர்களும்  வணங்க   நித்யசூரிகள் பூலோகத்தில் வந்திருந்து துதிக்க தகுந்த இடமாய்  பெரும் புகழ்வாய்ந்த  வைதிகர்கள்  வாழ்கின்ற  இடங்களை உடையதாய்  மிகுந்த மலர்களை உடையதாய்  தாழைகளும்,  செங்கழுநீர் பூக்களும்,  தாமரைகளும்  தடாகங்கள் தோறும்  பார்க்கும் இடங்களெல்லாம்  சோலைகள் சூழ்ந்த  ஆகாசம் வரை உயர்ந்து நிற்கும் மதில்களையுடைய அழகிய நாங்கூரிலிருக்கும்  அரிமேய விண்ணகர எம்பெருமானை வணங்கு  மட நெஞ்சே! என்கிறார் ஆழ்வார்.

      இவ்வுலகத்தவர்கள் பெரும்பாலும் குற்றம் புரிந்தவர்களாக உள்ளார்கள். நம் பாவங்களுக்கேற்ப பகவான் தண்டிப்பானே என்று அஞ்சும்போது, சேதநர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பிராட்டியும், பூமிபிராட்டியும், என்றும் பெருமானுடன் உடனிருக்கும் இவர்கள் பெருமானிடம் நம் பாவங்களை எடுத்துரைப்பர். அரிமேய விண்ணகரம் ஹரிர் ஹரதி பாபாநி, என்கிறபடி பாபங்களைப் போக்குவதினால் ஹரி என்கிற பெருமான் நித்யவாசம் புரியும் இடமாகத் திகழ்கின்றது. உண்மையான பக்தி, அன்பு இவற்றைச் செலுத்தி பகவானை வணங்கு நெஞ்சே! என்று கூறுவது போல் அமைகிறது.

      

வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும்
     விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
     குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
     ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.        1239

 

மிகுந்த வெற்றிகளைக் கண்ட நரகாசுரனின்  மிடுக்கான வலிமை அழியுமாறு, அவன்மீது எறிந்த சக்ராயுதத்தை திருக்கரத்தில் கொண்டவன். அன்று தேவர்களுக்காக மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தவன். எனது ரத்தினமே, எனது பரிபூரண அமுதம் வாழும் இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும். ஞானமுள்ள அந்தணர்கள் வாழுமிடம். ஏழிசையும், வேதங்களும் கற்ற பண்பாளர்கள், பிரம்மன் வாழ்ந்த இடத்தில் குடிகொண்ட பெருமானை நீ வணங்கு நெஞ்சமே! என்கிறார் ஆழ்வார்.

வெற்றியடையக்கூடிய  நரகாசுரனின்  மிடுக்கு அழிய  வீசி எறியப்பட்ட  வலிய சக்கரத்தைக் கையிலுடையவனாய்  தேவர்களுக்காக அன்று  மந்திர மலையை நட்டு   சப்திக்கும் கடலைக்  கடைந்து  அமுதம் அளித்தவனும்,  சிறந்த மணி போன்றவனும்  அமுதம் போன்றவனும்  கொண்டாடிக் கொண்டு  இருக்கும் கோயில்  தினமும் பெருகி வரும்  பெருஞ் செல்வமுடையவராய்  அழகிய வேதத்தை  நன்கறிந்தவராய்  ஸப்த ஸ்வரங்களும்  அவற்றின் அங்கங்களும்  அறிந்த பெரும்  குணமுடையவர்களாய்,  அன்று உலகம்  படைத்த பிரம்மாவைப் போன்ற  வைதிகர்கள் வாழும்  திருநாங்கூரின்  அரிமேய விண்ணகர  எம்பெருமானை வணங்கு  மட நெஞ்சே! என்கிறார் ஆழ்வார்.

      தான் சென்று போர் புரிந்த இடங்களெல்லாம் வெற்றியடைந்த எம்பெருமான், திருவாழியினால் தாயை புண்படுத்திய நரகாசுரனைக் கொன்றான். துர்வாசரின் சாபத்தால் அரசிழந்த தேவர்களுக்குக் கடல்கடைந்து அமுது எடுத்தவனும், சிறந்தவனும், பரம போக்யனுமாகத் திகழ்கின்றான். தாயைப் புண்படுத்திய அனைவரும் நரகாசுரன்தான். அனைத்து பாவங்களையும் புரிபவர்கள் நரகாசுரர்கள்தான். அவர்களை அழிக்கப் பெருமான் வியூகம் கொண்டுள்ளான். எனவே செய்த பாவங்களைப் போக்க விண்ணகரம் செல்லுங்கள் என்பது இதன் பொருளாகும். சிலர் அறியாமல் பாவம் செய்வார்கள். சிலர் நாம் செய்வது பாவம் என்று அறிந்தே செய்வார்கள். அதனால் அவர்களின் பாவக்கணக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தப்பு செய்தால் அதற்குத் தண்டனை கண்டிப்பாக உண்டு. ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். சிலரோ மரணத்தைவிடக் கடுமையான தண்டனையைக் கூட அனுபவிப்பார்கள். எனவே நம்முடைய பாவக்கணக்கு தீர நாம் விண்ணகர பகவானை அடிதொழுது தீர்த்துக்கொள்ள வேண்டும்.

      

உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்
     உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன்
     குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட
     பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே    1240

 

தேவர்கள், ஏழு உலகங்கள், ஏழு கடல்கள் ஆகிய அனைத்தையும் ஊழிக்காலத்தில் திருவயிற்றில் அடக்கிய பகவான், யாதவர்கள் மகிழும்படி குவலயாபீடம் என்ற யானையின் தந்தங்களை முறித்து, கம்சனை கீழே தள்ளி அழித்த பெருமான் கோயில் கொண்ட இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும்.  அங்குப் புன்னை மரங்கள் பூத்துக் குலுங்கி பசும் பொன்னும், வெண்முத்தும்  போல் ஒளி விடுகின்றன. பலாக்கனிகள் தேன் சொரிய, பாம்பின் இடையும், அம்பின் கண்களையொத்த பெண்கள் மகிழும் இத்தலத்தை அடைவாய் மடநெஞ்சமே! என்று கூறுகிறார் ஆழ்வார்.

பொதுவாக எல்லா ஆழ்வார்களுமே இங்ஙனம் எம்பெருமானின் வெற்றிச் செயல்களையும் வீரச்செயல்களையும் போற்றுவர் என்பதையும் நினைக்கின்றோம். சில சமயம் ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டுப் பிராட்டியின் நிலையை ஏறிட்டுக் கொண்டு அகத்துறை அமைந்த பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யும் அநுபவத்தையும் சிந்திக்கின்றோம். ஆகவே, எம்பெருமானைப் பற்றியே அகத்துறை, புறத்துறைகள் அமைந்த பாசுரங்களாலானதே ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’ என்னும் திருமறையாகும் என்ற பொது உண்மையை நினைந்து பரவசப்படுகின்றோம்.

      பிரளயப் பெருங்கடலில் உலகமெல்லாம் அழிந்து போயிருக்க, வேண்டிய காலத்தில் அவை எல்லாவற்றையும் தன் வயிற்றில் அடக்கி, பிரளயம் தீர்ந்தவுடன் உலகினை உமிழ்ந்து, உயிர்களைக் காத்தவன் எம்பெருமான். கம்சனை மஞ்சத்திலிருந்து கீழே தள்ளிக் கிரீடம் சிதற அவனைக் கொன்றான். அத்தகையவன் எழுந்தருளியுள்ள அரிமேய விண்ணகரமானது எங்கு நோக்கினும் புன்னை மரங்கள், அதன் மொக்குகள் முத்துக்கள் போலவும்  மலர்கள் பொன் போல் வழங்கப்பெற்ற அழகிய தலத்தினை சென்றடை என்று நம் மனதைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்துள்ளது.

        

ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு அன்று
     உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள் உகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு
     அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை
     செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.       1241

 

முன்பு போருக்குப் பின்வாங்காத நரசிம்மராய்த் தோன்றி இரணியனைக் கிழித்து பிரகலாதனுக்கு அருள் புரிந்தான்.  அத்தகையவன்  வாழும் ஊர் அரியமேய விண்ணகரமாகும். மல்லிகை, செங்கழுநீர், சுரபுன்னை, செண்பகம் போன்ற மலர்களும், பாக்குப் பாளைகளும் மணம் வீசும்.  அவற்றின் நடுவே கழனியில் கரும்பு ஆலைகளில் வரும் புகையானது மணம் கமழும்.  அத்தலத்து பகவானை நெஞ்சே! நீ சென்று வணங்கு என்று கூறுகிறார் ஆழ்வார்.

முன்பு ஒரு சமயம்  முதுகுக் காட்டி ஓடாத  நரசிம்மமாகத் தோன்றி  அனேக வரங்களைப் பெற்ற  இரணியனைப் பிடித்து அவனை  வளையாத, வலிய  நகங்களால் பிளந்து  அவன் பிள்ளை  பிரகலாதனுக்கு  அருள்செய்தவன்  வாழும் இடம்,  மல்லிகை பூவும்  செங்கழுநீர் பூக்களும்  திரளாகப் பூத்த புன்னைகளும்  அழகிய பாக்கு  பாளைகளும்  மணம் கமழும்  செண்பகங்களும்,  அழகிய சோலைகளின்  நடுவே  கரும்பு ஆலைகளுக்காக ஏறின.  வயலில்  ஆலைப்புகை கமழும்  திருநாங்கூரின்  அரிமேயவிண்ணகர  எம்பெருமானை வணங்கு  மட நெஞ்சே! என்பது ஆழ்வாரின் அருள்வாக்கு.

      இரணியன் தெய்வ நிந்தனை செய்து தூணை எட்டி உதைக்க அதில் தோன்றிய நரசிம்மர் அவனது உடலைக் கிழித்து அழித்தார். பிரகலாதனின் தந்தையால் வந்த எல்லா ஆபத்துகளையும் பெருமான் தீர்த்து வைத்தார். பகவானுக்கு தேவர், அசுரர், மனிதர், கந்தர்வர் என்ற  வேறுபாடு கிடையாது. நற்செயல்கள் புரிந்த அனைவருக்கும் பகவான் உதவுவார். அது போன்று தீவினைகள் செய்பவரை அழிப்பார். நாம் அனுபவித்து வரும் துன்பங்கள்  அனைத்தும் முன்வினைப் பயனால் ஏற்பட்டது. இவை பகவான் நமக்குத் தந்ததல்ல என்ற உண்மையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக்
     களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
     அளந்த பிரான் அமரும் இடம் வளங் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்
     அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.        1242

 

பார்த்தவர்கள் மனம் மகிழும்படி, மகாபலியின் யாகப் பூமியில் வஞ்சனை மிகுந்து சிறுத்த வாமன வடிவில் போய் மூன்றடி மண் கேட்டு உலகங்களையும், கடல்களையும் ஈரடியால் அளந்த பகவான் வாழும் ஊர் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும். அங்கு வளம் மிக்க தோட்டங்களும், வாத்ய கோஷமும், வண்டுகளின் ரீங்காரமும், வேத முழக்கங்களும் பெண்களின் சிலம்பொலியும், கடலோசையும் சேர்ந்து கேட்கும். இத்தகைய தலத்தை நெஞ்சமே! சென்று வணங்குவாயாக என்று ஆழ்வார் கூறுகிறார்.

கண்டவர்கள் அனைவரும் மனம் மகிழ  மகாபலியின்  வேள்வியில்  கபடமில்லாது தோன்றுமவனாய்  சிறிய வாமனனாய்  மூன்று அடி நிலம் தர வேண்டுமென்று  யாசித்து  ஆகாசமும்  அலை கடலும்  ஏழுலகங்கள் அனைத்தையும்  அளந்த பிரான்  இருக்குமிடம்  வளமுள்ள  சோலைகள் அருகே  ஆகாசத்தில் சென்று   முழங்கும் வாத்ய கோஷங்களும்  வண்டுகளின் ரீங்காரமும்  வேத கோஷங்களும்  நடனமாடும் பெண்களின்  நூபுர த்வனியும்  அண்டப்பித்தில் வரும்  அலைகடலின்  ஓசையும் திகழும்  திருநாங்கூரின்  அரிமேய விண்ணகர  எம்பெருமானை வணங்கு  மடநெஞ்சே! என்பது ஆழ்வாரின் வாக்கு.

      அநுகூலரோடும் பிரதிகூலரோடும் சேர்ந்து யார் பார்த்தாலும் அவர்களுடைய நெஞ்சு கவருமாறு வாமனமூர்த்தியாக யாகபூமியில் எழுந்தருளி மூன்றடி மண்ணை யாசகம் கேட்டார். அதற்கான அவசியம் அவருக்கில்லை. இருப்பினும் அசுரர்களின் வலிமை அதிகரித்தால் மக்கள் துன்பம் கொள்வார்கள். எனவே பகவான் சூழ்ச்சியினால் மகாபலியை வென்று அவனைப் பாதாளத்தில் அழுத்தினார். எனவே நாம் அனைவரும் அசுர குணங்களை அகற்றி, சுயநலத்தை விடுத்து, தூய்மையான மனத்துடன் நம்மைப் பகவானுக்கு காணிக்கையாக்க வேண்டும். அதன்பின் எல்லா நலன்களும் நம்மைத் தேடி வரும் என்பது இதன் கருத்தாகும்.

 

வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
     மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என் தன்
     தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர்
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை
     செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.       1243  

 

வாள் போன்ற கூர்மையான நீண்ட திருக்கண்களையும், வாசமுள்ள மலர்க்கூந்தலையும் உடைய மைதிலியைக் கவர்ந்து சென்ற குற்றத்திற்காக இராவணனின் பத்து தலைகளும், இருபது தோள்களும் விழுமாறு கதையோடு கூடிய வில்லினை வளைத்த தசரதனின் புதல்வன், எனது ஈடில்லா பாதுகாவலன், தேவர்களின் தலைவன் மகிழ்ந்து வாழுமிடம் திருநாங்கூர் அரிமேய விண்ணகரமாகும். பொய்கைகள் நிறைந்து ஓங்கி வளர்ந்த தாமரை மலர்களையும், சேல், கயல், வாளைப் போன்ற மீன்களையும், சம்பா நெற்பயிர்களோடு சேர்த்து பிடித்து அறுக்க அவற்றிலிருந்து செழுமையாக உதிர்ந்த அழகிய முத்துக்கள்  வாள் போன்ற நீண்ட கண்களையுடைய வலைச்சியர்கள் வாரித் திரட்டுகிறார்கள். நாங்கூர் அருகே கடல் உள்ளதால் அலைகளுடன் மீனும் முத்தும் வயலில் சேர அவை மீன்களின் வயிற்றில் புகும். அவை அறுவடையில் வெளிப்பட்டன. அத்தகைய சிறப்பானதொரு தலத்தை அடை நெஞ்சமே! என்று பாடுகிறார் ஆழ்வார்.

நாங்கூர், ஒரு சங்ககால வாழ்விடம். நாங்கூர் குறித்த குறிப்புகள் பட்டினப்பாலையிலும், பொருநராற்றுப்படையிலும் இடம்பெற்றுள்ளன. இடைக்காலத்தில் நாங்கூர் ஒரு நாட்டுப் பிரிவாக இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் நாங்கூர்  நாட்டின் கீழ் இருந்தது. காவிரிப்படுகைப் பகுதியில்  நாடு உருவாக்கம் போன்ற செய்திகள் தொடர்பாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருநாங்கூர் சமீபத்தில் கடலுள்ளதனால் அக்கடலோரமும் இங்கே வந்து கூடும் அவ்வோதங்களுடனே முத்துக்களும் வந்து சேரும். அவை மீன்களின் வயிற்றினுள்ளே புகும். அவை அறுவடையில் வெளிப்பட்டதென்பர் என்று அண்ணங்கராச்சாரியார் தமது விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளார். 

      

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
     தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்
     கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
     வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்
     அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.        1244

 

பொல்லாத மனமுடையக் கம்சன் ஏவலால் வஞ்சனையில் திரியும் தேனுகனை கண்ணபிரான் கொன்றொழித்தான். பெண்ணாக வந்த பூதனையின்  உயிரை முடித்தவனாகவும், மன்மதனை மகனாகப் படைத்தவனும், கரிய திருமேனியுடைய எம்பெருமான் விரும்பி இருக்குமிடம் அரிமேய விண்ணகரமாகும். இத்தலமானது அலைகளையுடைய துறைதோறும் முத்துக்களைத் தள்ளி வரும், நாவாலும் மனத்தாலும் மந்திரங்களையும், நான்கு வேதங்களையும் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கங்களையும் கற்று மற்றுமுள்ள கலைகளையும் பயின்று ஓதி பரிசுத்தமான மனமுடைய வைதிகர்களைக் கொண்டதாக உள்ள அழகிய திருநாங்கூரின் அரிமேயவிண்ணகர எம்பெருமானை வணங்கு மடநெஞ்சே! என்கிறார் ஆழ்வார்.

தீய எண்ணங்கள் கொண்ட கம்சனது சதியால் கழுதை உருவில் வந்த தேனுகாசுரனும், பேய்ச்சி பூதனையும் கண்ணனால் கொல்லப்பட்டனர். ஸ்ரீகிருஷ்ண ருக்மணி பிராட்டியின் மகனான பிரத்யும்னனை பெற்ற கரிய திருமேனியான பகவான் உறையும் இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும்.  தண்ணீர் அலையெறிந்து துறைகள் தோறும் முத்துக்களை ஒதுக்கி வீசும்.  வேதியர்கள் மனதாலும், சொல்லாலும் பகவானின் வேத மந்திரங்கள், ஆகமங்கள் ஆறு அங்கங்கள் அனைத்தையும் சொல்வார்கள். கலைகளைக் கற்று பஞ்ச மஹா யக்ஞங்களை நடத்தி நிலையான  புத்தியுடன் பொருந்தியவர்களான வைதிகர்கள் வாழ்வார்கள். இத்தகைய சிறப்புமிக்க பகவானின் தலத்தை அடை மனமே என்று கூறுகிறார் ஆழ்வார்.

      

கன்று அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்று அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே    1245

 

கன்று வடிவில் வந்த வத்சாசுரனைக் அழித்தான் கண்ணன்.  கபித்தாசுரன் மேல் விளாம்பழங்கள் உதிரச் செய்த பகவானும் அவனே. பரத்துவம், ஸௌலப்யம், ஸௌசீல்யம் போன்றவை பெருமானின் கல்யாண குணங்களாகும். அத்தகைய கல்யாண குணங்களைக் கொண்டவனும், நீலமேக ஷ்யாமளனான காளமேக நிறத்தவனும், பசுக்களைக் காக்க மலையைக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து யாதவர்களைக் காத்தவனும், காளிங்க வடிவில் அந்த அசுரனை குடக்கூத்தாடி மக்களையும் ஆநிரைகளையும் காத்தவனான எம்பெருமான் மகிழ்வுடன் இருக்கும் இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமானது,  கொடிகள் பொருந்திய மதில்களையும், கூடகோபுர மாளிகைகள், மணி மண்டபங்கள், யாகச் சாலைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இங்கு அந்தணர்கள் ஒன்றுகூடித் தொழுவார்கள். பறவைகளின் ஒலியோடு மலர்வனங்களில் அப்போது மலர்ந்த செவ்விப் பூக்களில் தேனைப் பருகி வண்டுகள் ரீங்காரம் செய்யும். அத்தகைய வளமிக்க தலத்தை நெஞ்சே! உனது அசுர குணத்தினை விடுத்து தெய்வ குணத்தினை வளர்க்க நீ அவனை அடைவாய் என்று கூறுகிறார் ஆழ்வார்.

இவ்விரு அரக்கர்கள் கம்சனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள். இருவரையும் பகவான் எமனுலகத்திற்கு அனுப்பினார்.  தனக்கு விழா எடுக்கவில்லை என்று இந்திரன் கோகுலத்தில் தொடர்ந்து மழை பெய்வித்து மக்களைத் துன்புறுத்தி வந்தான்.  அவ்வமயம் மக்களையும், ஆநிரைகளையும் குடமாடும் கூத்தனாகக் காத்தருளினான். பகவான் மலையையே குடையாகப் பிடித்து அனைவரையும் காத்தான்.  எனவே சுயநலத்தை வெறுத்து பிறருக்காகத் தியாகம் செய்யுங்கள். தெய்வ நிலைக்கு ஒப்பான இக்குணத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆழ்வாரின் நமக்குத் தெரிவிக்கும் கருத்தாகக் கொள்ளலாம்.

 

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
     தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க
கஞ்சன் உயிர் அது உண்டு இவ் உலகு உண்ட காளை
     கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து
     வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!       1246

 

கபட வேஷத்தோடு வந்த பூதனையின் உயிரை உறிஞ்சிக் குடித்தவன், கையில் கிடைத்த தயிரையும் வெண்ணெயையும் அமுது செய்தவன், வலிமை மிக்க கம்சனது உயிரை மாய்த்தவன், ஊழிக்காலத்தில் பிரளயம் கடல் கொள்ளாதபடி உலகங்களை அடக்கிய பகவான் விரும்பும் இடம் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும்.  அங்குக் காவிரி நதி, சந்தனம், அகில் ஆகிய மரங்களையும், பொன் துகள்களையும் அடித்துக் கொண்டு வந்து மேக மண்டலத்தைத் தொடுமளவு ஓங்கியுள்ள சோலைகளிலும், வயல்களிலும் நுழைந்து அவற்றுக்கு வளத்தைத் தரும். வேதம் ஓதுவோர் சிறந்த பூக்களைப் பகவானுக்கு சமர்ப்பணம் செய்து கைகூப்பி நின்று ஹரி, உன் திருவடியே சரணம் என்று கூறி வணங்குவர். அத்தகைய சிறப்பான தலத்தை அடை நெஞ்சமே! என்று கூறுகிறார் ஆழ்வார். 

கெட்ட எண்ணத்துடன்  வந்த கொடியவளான பூதனையின்  உயிரினை மாய்த்து  அருகிலிருந்த தயிரை உண்டு,  வெண்ணெயை உண்டு,  வலிமையுடைய கம்சனின்  உயிரை மாய்த்து,   இந்த உலகத்தை் முழுதும் உண்டவன்   விரும்பி இருக்குமிடம்  காவிரிநதி  சந்தன மரங்களையும்,  அகில் மரங்களையும் பொன்னையும் தள்ளிக்கொண்டு வந்து   மேகத்தளவு உயர்ந்த  சோலைகளிலும்  வயல்களிலும் புகுந்து புகுந்து  செழிப்பு உண்டாக்க  வைதிகர்கள்  மலர்களைத் தூவி  அங்குக் கைகூப்பி வணங்கி  ஹரிசரணம் என்று  துதிக்க அழகிய  திருநாங்கூரின் அரிமேய விண்ணகர  எம்பெருமானை வணங்கு,  மட நெஞ்சே! என்கிறார்.

 

 சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை
     செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
     அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்
     கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
      உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே.      1247

 

நப்பின்னைக்காகத் தானே சென்று கொடுமை மிகுந்த ஏழு எருதுகளும் மடியும்படி போரிட்டு பின் அவள் அழகிய தோளை அணைத்து மகிழ்ந்த லஷ்மிநாதன் மகிழ்வோடு குடிகொள்ளும் கோயில் நாங்கூர் அரிமேய விண்ணகரமாகும்.  வேதம் பயின்ற அந்தணர்கள், பிரம்மன், சிவன், முருகப் பெருமான் போன்றவர்கள் அழகில் ஒத்திருக்கின்றனர். அத்தகையவர்  வாழுமிடம் இதுவே ஆகும். இத்தலத்து பகவானை கோபக்குறியோடு நீண்ட நெடிய வேலினைக் கொண்ட திருமங்கையாழ்வார் பாடிய பத்து பாசுரங்களையும் பக்தியோடு படிக்க வல்லவர்கள் உலகில் உள்ள உத்தமர்களுக்கெல்லாம் உத்தமர்களாய் வாழ்ந்து பின் நித்யசூரிகளாக இருப்பார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார். மனம் நஞ்சாகும்போது மனிதன் தீய செயல்களைச் செய்கிறான். அதன் பலனாய் பாவங்களைச் சுமக்கிறான். அதே மனம் நற்செயல்களை தெய்வத்தின் துணையுடன் செய்யும்போது பாவங்கள் சரிந்து விழுகின்றன. அத்தகைய உயர்நிலையை அடைய ஆழ்வார் பாசுரங்களைப் பாட வல்லவர்களாக மாற வேண்டும்.

கிருஷ்ணவதார சேஷ்டிதங்களைச் சொல்லுகின்ற பாசுரங்கள் ஐந்தும், நரஸிம்ஹாவதாரம் வாமநாவதாரம், ராமாவதாரம் ஆகிய மூன்றவதாரங்களைப் பற்றிப் பேசுகின்ற பாசுரங்கள் மூன்றும் அர்ச்சாவதாரமான முதற்பாட்டு ஒன்றும், பயனுரைத்த ஈற்றுப்பாட்டு ஒன்றும், ஆகப் பத்துப்பாட்டுகள் என்கை, இரண்டு, மூன்று, ஏழு, எட்டு, ஒன்பதாம் பாசுரங்கள் கிருஷ்ணவதார விஷயங்கள் நான்கு, ஐந்து, ஆறாம் பாசுரங்கள், முறையே, நரஸிம்ஹ, வாமன, ராமாவதார விஷயங்கள் என்பதாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...