ஞாயிறு, 7 டிசம்பர், 2025

41. திருவயீந்திரபுரம்

 


திருமங்கையாழ்வார்                                                                                         பெரிய திருமொழி 

இருந் தண் மா நிலம் ஏனம் அது ஆய்
     வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்
     கமல நல் மலர்த் தேறல்
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம்
     பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு
     திருவயிந்திரபுரமே    1148 

      மிகக் குளிர்ந்த விரிந்து பரந்த பூமியை வராக வடிவமெடுத்துக் கொண்டு தேற்றைப் பற்களிடையே அதனை அடக்கியவனும், கறுத்த குளிர்ந்த பெரும் திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவனுமான எம்பெருமான் வாழுமிடம் எதுவெனில் அழகிய சோலைகளினுள்ளே வண்டுகள் தாமரை மலரிலுள்ள தேனை உறிஞ்சி வண்டினங்கள் கூட்டமாக முரலும். அது இன்னிசைப் பாடிக் கொண்டு பொன்னிறத்தினாலான சுரபுன்னை மரத்தினுடைய மலர்களிலே திரிந்து  போய் சேர்ந்து திரிகின்ற இடம் திருவயிந்திரபுரமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தில் முன்னடிகளில் திவ்யதேசத்து பெருமானின்  சிறப்புகளையும், பின்னடிகளில் திவ்யதேசத்தின் பெருமைகளையும் கூறப்படுகிறது. மகாவராகமாகி அசுரனிடமிருந்து பூமியை மீட்ட பெருமான் இங்கு எழுந்தருளியுள்ளார். உளங்கனிந்திருக்கும் அடியவர்கள் தங்களுக்குள் ஊறும் பகவத்விஷயம் என்ற தேனை விரும்பியும், ஆச்சாரிய பாதாரவிந்த சேவையாகிற மதுவைப் பருகுவதே தன் விரதமாகக் கொண்டு ஊர்த்துவ கதிக்கு சாதனமாக விளங்குகின்ற இரு சிறகுகளாக கர்ம ஞானங்களும், சாரக்ராகிகளாகவும் வைணவர்களை வண்டாகக் கூறுவது வழக்கம். அத்தகைய அந்தணர்கள் வாழும் இடம் திருவயிந்தரபுரமாகும் என்ற பொருளில் அமைகிறது.       

மின்னும் ஆழி அங்கையவன் செய்யவள்
     உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய
     பரன் இடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வரப்
     பிணி அவிழ் கமலத்து
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு
     திருவயிந்திரபுரமே       1149 

      ஒளிமிக்க சுதர்சனச் சக்கரத்தை அழகிய திருக்கையில் உடையவனும், திருமகள் வாசம் செய்யும் திருமார்பை உடையவனும், ஓதப்படுகின்ற வெவேறு முறைகளில் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களின் பல்வகைப் பொருளாகத் தானே இருப்பவனுமான பரந்தாமன் உறையுமிடம் வண்டுகள் மலைப் பக்கங்களில் நெருங்கியிருக்கின்ற குருக்கத்திப் பந்தலில் இருந்து தம் பேடைகள் வந்து சேர்வதற்காக கட்டவிழ்கின்ற தாமரை மலரில் இருந்து கொண்டு தென்ன தென்ன என்ற இன்னிசை குரல் எழுப்பும் திருவயிந்திரபுரமாகும்.
      கரிய நிறத்து கோலபிரானது கையில் உள்ள திருவாழியானது காளமேகத்ததில் மின்னல் மின்னியது போன்றுள்ளது. வேத வியாசரால் நான்காக பிரிக்கப்பட்ட வேதமானது எல்லாவற்றிலும் பெருமான் அதன் பொருளாக உறைகின்றார் என்று கூறுகின்றது.  அவன் மூலமூர்த்தியாக ஆராதிக்கப்படுபவன். ஆண் மற்றும் பெண் வண்டுகள் மகிழ்வுடன் மலரில் வண்டுகளை சுவைக்கும் போது ஊடலினால் பெண் வண்டு கோபித்துக் கொண்டு குருக்கத்திப் பந்தலில் தஞ்சம் அடைகிறது. வருந்திய ஆண் வண்டானது பிரிவாற்றாமையால் எற்பட்ட தன் துன்பத்தை எடுத்துச் சொல்கிறது. இத்தகைய நிகழ்வுகள் அடங்கிய இத்தலத்தில் பெருமான் குடிகொண்டுள்ளான்.       சம்சார வாழ்வில் ஈடுபட்டிருக்கின்ற மானுடர்கள் இறைவனையும் வணங்க முடியும் என்று இதன் பொருளாகக் கொள்ளலாம்.
 

வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய
     மாயவன் அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்
     மெய்தகு வரைச் சாரல்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய
     முல்லை அம் கொடி ஆட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு
     திருவயிந்திரபுரமே        1150 

      ஊழிக்காலத்தில் ஏழு உலகங்களையும் உண்டு அலிலையில் பள்ளி கொண்ட மாயவன், தன்னை அடிபணிந்தவர்களுக்கு மெய்யனாகத் தன்னை உள்ளபடி காட்டும்  தெய்வநாயகப் பெருமான் வாழுமிடம் பகவானின் திருமேனி நிறமுடையதான கரிய நிறத்தையொத்த மலைச்சாரலில் அருகில் குருக்கத்திச் செடிகளோடும், மாதவி செண்பக மரங்களோடும், பிணைந்திருக்கும் முல்லைக் கொடிகள் அசைவதும் செழுமையான வயல்களில் தாமரை மலர்கள் செழித்து வளர்வதுமான இடம் திருவயிந்திரபுரமாகும். வடமொழியில் இப்பெருமானை தாஸஸத்யன் என்று அழைப்பர்.
     
பிரளய காலத்தில் ஒரு சிறிய ஆலிலையில் வாசம் செய்தவன் பெருமான். இத்தலத்துப் பெருமானின் மற்றொரு திருநாமம் தாஸசத்யன் என்பதாகும். எனவே அவனை அடியவர்க்கு மெய்யன் என்று அழைக்கிறார் ஆழ்வார். ஆழ்வார் எம்பெருமானுடன் கலந்தது அத்வேஷம் மற்றும் அபிமுகம் என்ற நிலையில்தான். பகைமை பாராட்டாதிருக்கும் நிலையே பரம பக்திக்கு முதற்படியாகும். அத்தகைய அடியவர்களுக்கு தனது ஸ்வரூப ஸவபாவங்களை மெய்ம்மையாகக் காட்டித் தந்தருள்கிறான். உதாரணத்திற்கு அர்ச்சணன் பாரதப் போரில் விரக்தியில் இருந்தபோது அவன் மீது கருணை கொண்டு தன் மெய் வடிவத்தைக் காட்டினான். அவரது கீதோபதேசத்தைக் கேட்டுத் தெளிவு பெற்றான்.    

மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன்
     மார்பு அகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள்
     கொடுத்தவன் இடம் மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை
     விசும்பு உற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ்
     திருவயிந்திரபுரமே        1151 

      கொடும் பகை கொண்டு கறுவிய இரணியாசுரனின்  மார்பை இரு கூறாகப் பிளந்து அவனை அழித்து, அவன் மகனான பிரகலாதனுக்கு அருள் செய்த பெருமான் வாழுமிடம் திருவயிந்திரபுரமாகும். இப்புனிதத் தலமானது ஒன்றோடொன்று நெருங்கி வளர்ந்து கருப்பஞ்சாறு நிறைந்த கரும்புகள் வானைத் தொடும் அளவிற்கு வளர்ந்திருப்பதால் அக்கரும்பு வெடித்து அதிலிருந்து வரப்பெற்ற சாறானது வயல்களில் விழுந்து சேறாகியுள்ள வளமான பூமியாகும் என்று இவ்வூரின் பெருமையினை ஆழ்வார் போற்றுகிறார்.
      சர்வபூதானாம் என்று சொல்லப்படுகிற பெருமான் அனைத்து உயிர்களையும் காப்பவன். இவ்வுலகத்தில் மக்களுக்கு ஏற்படும் கர்ம வினைகள் அனைத்தையும் அவரே தீர்க்க வேண்டும் என்பது நியதி.  தந்தை மகன் உறவு இருந்தபோதிலும் கர்ம வினைகள் வேறாகும். இத்தகைய எளிய இரகசியத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கை மேம்படும். அறியாமை என்னும் இருளில் இருந்து இவர்கள் விலகி இருப்பார்கள். இதனை நன்குணர்ந்து திருவயிந்திரபுரத்து பெருமானான தாஸஸத்யனை சேவிப்பதற்கு வாருங்கள் என்ற பொருளில் ஆழ்வார் கூறுகிறார்.
 

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
     அகல் இடம் அளந்து ஆயர்
பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்
     பொன் மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு
     குரக்கினம் இரைத்து ஓடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு
     திருவயிந்திரபுரமே      1152 

      மகாபலியின் யாக சாலையில் சிறு உருவமாகத் தோன்றக்கூடிய வாமனனாகச் சென்று மூன்றடி மண் பெற்று அவ்விடத்தில் இருந்தபடியே மிகவும் பரந்த உலகம் முழுவதையும் அளந்துக் கொண்டவனும், அழகிய நப்பின்னைக்காக கொடிய ஏழு எருதுகளை போரிட்டு அழித்தவனும் வாழும் இடம் திருவயிந்திரபுரமாகும். இத்தலம் பொன்னிற மலர்கள் நிறைந்த வேங்கை, கோங்கு, செண்பகம் இவற்றின் கிளைகளில் குதித்து ஆரவாரம் செய்யும் குரங்குக் கூட்டம் இங்கும் அங்கும் ஓடித் தேன் கசியும் பலாப்பழங்களைத் தின்னும் வளமுடைய சோலைகளையுடைய தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பகவானின் பெருமைகளை மீண்டும் மீண்டும் கேட்டாலும் அது திகட்டாத தேனமுதமாகும்.  வாமன சரித்திரத்தை பலமுறை கேட்டாலும் அது பகவானின் எளிமையை பறைசாற்றும்.  இப்பாசுரத்தில் குரங்குகளைப் பற்றி கூறும்போது மனித மனம் குரங்கு போன்று தாவும் குணமுடையதாகும். சம்சாரிகளுக்கும் வானரங்களுக்கும் இத்தகைய குணம் நிறைந்தே உள்ளது என்பது அறியலாம். சம்சாரிகள் புற இன்பங்களில் எப்போதும் இருப்பதை விட்டு அவ்வப்போது பகவத் குணங்களையும் இடையிடையே அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆழ்வாரின் எண்ணமாகும்.
  

கூன் உலாவிய மடந்தை தன் கொடுஞ் சொலின்
     திறத்து இளங் கொடியோடும்
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன்
     இடம் கவின் ஆரும்
வான் உலாவிய மதி தவழ் மால் வரை
     மா மதிள் புடை சூழ
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய
     திருவயிந்திரபுரமே             1153 

      கூன் முதுகினைக் கொண்ட மந்தரை என்பவளின் கொடிய பேச்சால் இளங்கொடி போன்ற அழகுமிக்க சீதையோடு கானகம் சென்ற கார்மேகம் போன்ற வடிவமுடைய எம்பெருமான் வாழுமிடம் திருவயிந்திரபுரமாகும்.  இத்தலம் வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரன் தவழப்பெற்ற பெரிய மலையும், பெரிய மதிலும் சூழ்ந்துள்ள, வண்டுகள் உலாவும் அழகிய சோலைகளாலான செழுமையான பூமியாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      இராமன் கானகம் செல்ல மூலகாரணம் மந்தரை என்பவள். இராமனுக்கு பட்டாபிஷேகம் என்னும் செய்தி கேட்டு மகிழ்ந்த கைகேயி பின் கூனியின் துர்போதனைக்கு ஆட்பட்டு தசரதனுடன் பிடிவாதம் பிடித்து இராமனை கானகம் செல்ல வைத்தாள். இதே கருத்தினை பெரியாழ்வார் தனது திருமொழியில் ‘கொங்கைவன் கூனி சொற் கொண்டு’ என்ற பாசுரத்தில் கூறுகிறார். முதுகில் மலை போன்ற வடிவத்தினைக் கொண்ட மந்தரையின் சொல் கேட்டு கைகேயியானவள் இருப்பிலிருந்த சிறந்த யானைகள், குதிரைகள் மற்றும் ராஜ்ஜியங்களை பரதனுக்கு தந்தருளி இராமன் கானகம் செல்ல வேண்டும் என்றாள். அத்தகைய ஸ்ரீராமன் திருவயிந்திரபுரத்தில் வாசம் செய்கிறான்.
 

மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்
     விலங்கலின்மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது
     இடம் மணி வரை நீழல்
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்
     பெடையொடும் இனிது அமர
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு தண்
     திருவயிந்திரபுரமே     1154 

      மின்னலைப் போன்ற மெல்லிய இடையும், மடைமையுடைய குணத்தையும் கொண்ட வைதேகிக்காக இலங்கை வேந்தனான இராவணனுடைய பத்து தலையைப் பொடி செய்த மிடுக்குடைய எம்பெருமான் வாழுமிடம் திருவயிந்திரபுரமாகும். இப்புனிதத் தலம் மலையின் நிழலில் அன்னங்கள் தாமரைப் பூவாகிய படுக்கையில் தங்கள் பேடைகளோடு இனிது வாழ அவற்றிற்கு சாமரம் வீசுவது போன்று செந்நெற் கதிர்கள் அசையும் வளமான பூமியாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      சூவேல மலையின் த்ரிகூடத்தின் மேல் இலங்காபுரியை அமைத்து அதில் ஆட்சிபுரிந்த இலங்கேசுவரன், தமக்கு ஒருநாளும் அழிவில்லை என்ற மமதையில் இருந்தான். அத்தகையவனைப் போரில் அழித்தவன் ஸ்ரீராமன். அவன் வாழுமிடமான திருவயிந்திரபுரத்தில் சேறு சிறிதும் கலவாத தாமரைக் குளத்தில் அன்னங்கள் நீந்தி விளாயாட செந்நெல் சூழ்ந்த பசுமையான வயல்களில் உள்ள பூமியிது என்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.
 

விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்
      வில் இறுத்து அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்
     நிலவிய இடம் தடம் ஆர்
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு
     மலை வளர் அகில் உந்தி
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு
     திருவயிந்திரபுரமே     1155 

      பரிமள மணம் வீசும் மெல்லிய கரிய கூந்தலையுடைய பிராட்டிக்காக வில்லை முறித்தவனும், அடைமழை பெய்தபோது ஆநிரைகள் கலங்கி நிற்க கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்துக் காத்தவனுமாகிய பகவான் குடியிருக்கும் இடம் திருவயிந்திரபுரமாகும். இத்தலமானது தடாகங்கள் நிறைந்த மலைக்கு அழகு செய்து யானைகளின் தந்தங்களையும், மலையில் வளரும் அகில் மரங்களையும் அலைகளாலே தள்ளிக்கொண்டு வந்து சேருகின்ற கெடிலநதி கழனிகளில் பாயும் பூமியாகும் என்ற ஆழ்வார் அழகுறப் பாடியுள்ளார்.
      இத்தலத்து தெய்வநாயகனுக்கு இராமனுக்குரிய பராக்கிரமமும், கிருஷ்ணனுக்குரிய சௌசீல்ய குணமும் ஒருங்கே சேர்ந்துள்ளது. ஆழ்வார் இத்தலத்துப் பெருமானை இரு அவதாரங்களுடன் ஒன்றிணைத்துப் பாடியுள்ளார். அதுபோன்று இத்தலத்தின் அழகையும் தம் பாடலில் கூறியள்ளார். கெடில ஆற்றில் பெருவெள்ளமாய்ப் பெருகும்போது யானைத் தந்தங்களையும், அகில் மரங்களையும் மற்றும் பல்வேறு மாணிக்க மணிகளையும் கொழித்துக் கொண்டு வரும் வழக்கமாக இந்த ஆறு திகழ்ந்துள்ளது. எனவே இத்தகைய அழகு மிக்க தலத்திற்கு வந்து பெருமானை சேவித்து நன்மை பெறுங்கள் என்று கூறுகிறார்.     

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்
     விசயனுக்கு ஆய் மணித் தேர்
கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்
     குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடிக் கைஎழக் கமுகு இளம்
     பாளைகள் கமழ் சாரல்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு
     திருவயிந்திரபுரமே 
           1156 

      வேலாயுதத்தை கையில் தரித்த அரசர்களின் கொடிய பாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் துணையாக அவனது தேரினிலே தன் கையில் கோல் பிடித்து நின்ற பகவான் வீற்றிருப்பது திருவயிந்திரபுரமாகும். இத்தலம் மலைச்சாரலில் வெற்றிலைக் கால்கள் கணுக்கள் தோறும் இளைக்கின்ற வெற்றிலைக் கொடிகள் அதிகமாக வளரப் பெற்றதும், பாக்கு மரங்களின் குருத்துக்கள் மணம் வீசுகின்ற சாரலையுடைய மீன்கள் துள்ளி விளையாடும் கெடிலநதி வயல்களில் பெருகப் பெற்றதுமான வளமான பூமியாகும்.
      மலையைப் போன்ற வலிமையான தோள்களையுடைய அரசர்கள், தேர்வீரர்கள் மற்றும் பல வீரர்களும் நிறைந்துள்ள குருக்ஷேத்திர யுத்தக் களத்தில் பீஷ்மர், துரோணர் போன்ற வலிமை மிக்கவர்கள் பிரயோகப்படுத்திய அம்புகளிலிருந்து அர்ச்சுனனது தேர் அழிந்து போகாதபடி தனது திருவடிகளில் தொடர்பாக உறுதியாக இருக்கச் செய்தான்.  பார்த்தனே தாங்க முடியாதபடி வரும் பானங்களை தன் மார்பில் தாங்கிக் கொள்ள தேரின் முன்னே பாகனாக விளங்கி பாரதப் போரில் வெற்றியை தேடித் தந்தான் பரமாத்மா. அத்தகையவன் தில்லையில் எழுந்தருளியுள்ளான்.
 

மூவர் ஆகிய ஒருவனை மூவுலகு
     உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண்
     திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி
     கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்
     பாவங்கள் பயிலாவே           1157   

மும்மூர்த்திகளாய்த் தானே வடிவு கொண்டு மூன்று தொழில்களையும் நிகழ்த்துபவன், மூன்று உலகங்களையும் உண்டு பின் உமிழ்ந்து உண்டாக்கியவன், திரிவிக்கிரமனாய் உலகை அளந்தவன், தேவரும், அசுரரும் வந்து வணங்கும்படி திருவயிந்திரபுரத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் குறித்து, கூரிய வேல் எறிவதில் வல்லவரான கலியன் விரிவாக அருளிச் செய்த இப்பாமாலைகளைப் பக்தியுடன் பாடுபவர்களைப் பாவம் ஒரு போதும் அண்டாது என்று கூறுகிறார்.
      பிரம்மாவுக்கு அந்தர்யாமியாக இருந்து படைப்புத் தொழிலையும், சிவபெருமானுக்கு அந்தர்யாமியாக இருந்து அழிக்கும் தொழிலையும், தன்னுடைய தன்மையிலேயே ஸ்ரீமந் நாராயணனாக இருந்து காக்கும் தொழிலையும் நிர்வகித்து மூவராகிய ஒருவன் என்ற பெயர் பெற்றார். தேவர்களும்,
அசுரர்களும் தங்களது விருப்பம் போல் தரிசிப்பதற்காக திருவயிந்திரபுரத்தில் சேவை சாதித்து வருகின்றார். அவனது பெருமைகளை இப்பாசுரங்கள் மூலமாக பாடுபவர்கள் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் பெற்று அவன் திருவடி சேர்வார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...