திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பகை உள்ளம் கொண்ட இரண்யனின் அகன்ற மார்பினைக் கிழித்தவனும், பெரிய
திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்து மகிழ்ந்தவனும், காளமேகம் போன்ற திருமேனியை
உடையவனுமான பெருமான் தினமும் மகிழ்ந்து
வாழுமிடம் திருவைகுந்த விண்ணகரமாகும்.
இத்தலம் நீரைக் குடித்துப் பூக்களைச் சொரிகின்ற மல்லிகைச் செடிகளும்,
சுரபுன்னை செண்பக மரங்களும், மணம் வீசும்
வனங்களுடன் மீன்கள் துள்ளி விளையாடும் இடமாகும். நெஞ்சமே! நீ அங்குச் சென்று பகவானை வணங்குவாயாக! என்று
கூறுகிறார் ஆழ்வார்.
தப்பு எண்ணங்கொண்ட ஹிரண்யாஸுரனுடைய அகன்ற மார்வைப் பிளந்தொழித்தவனும், பெரியகடலை அதில்
தோன்றிய அமுதத்தை தேவர்களுக்காக, எடுத்துக் கொடுத்துத்
திருவுள்ளமுவந்தவனையும், நித்ய யௌவனமுடையவனும் அழகிய
நீலமேகம் போன்ற திருமேனியை உடையவனுமாய் இருக்கின்ற எம்பெருமான் எப்போதும்
திருவுள்ளமுவந்து போக்கியமாகப் பொருந்தி வாழுமிடமாய் புஷ்பங்களைச் சொரிகின்ற அழகிய
மல்லிகைச் செடிகளும், சுரபுன்னை மரங்களும், செண்பக மரங்களும், பரிமளம் வீசப்பெற்ற அழகிய
சோலைகளினுள்ளே மீன்களானவை ஓடித்துள்ளி விளையாடப்பெற்ற திருநாகூரில் வைகுந்த
விண்ணகரமென்னும் திருப்பதியை மட நெஞ்சே! வணங்கு என்கிறார் ஆழ்வார்.
ஸ்ரீமந் நாராயணனின் நாமத்தைக் கேட்கப் பெறாத பாவியான இரண்யனை பெருமான்
வதம் செய்தார். துர்வாசரின் சாபத்தினால் அனைத்து செல்வங்களும் இழந்த தேவர்கள்பின்
பெருமானின் பாதங்களில் சரணடைந்தனர். அவர்களது பாவங்களைப் போக்கியவனும், எத்தனை அவதாரமெடுத்தாலும் நித்யமாக இருப்பவனும் வைகுந்த விண்ணகரத்தில்
வாசம் செய்கிறான். பாவம் புரிந்தவர்களாகிய நாம் துன்பத்தில் அல்லல் படும்போது
அதற்காகத் தவறான வழியினைக் கடைபிடிக்காமல் பகவான் உறையும் இடத்திற்கு நம் மனத்தினை
செலுத்த வேண்டும் என்பது இதன் உட்பொருளாகும்.
அனைத்து திசையிலுள்ளவர்களும் அஞ்சி நடுங்கும்படி தேவரும், அசுரரும்
கலங்கும்படி, பலமுள்ள நரசிம்மமாகி இரணியனின் மார்பை தனது நகங்களால் பிளந்த பகவான் வாழும் தலம்
வைகுந்த விண்ணகரமாகும். எண்ண முடியாத
செல்வத்தைக் கொண்டவர்களிடமிருந்து வேதங்கள் முழங்குகின்றன. வேள்விகள் நடக்கின்றன.
சிறந்த குணமுள்ள வேதியர்கள் நிறைந்துள்ளனர். நெஞ்சமே! இச்சிறப்புமிக்க ஆலயத்திற்கு
நீ சென்று வணங்குவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார்.
எல்லாத்
திசைகளிலுள்ளவர்களும் நடுங்க தேவரும் அசுரரும் கலங்க
வலிய ஒப்பற்ற நரசிம்ம ரூபியாய் இரணியனை
அணுகி அவனுடைய அகன்ற மார்பை நகங்களை ஊன்ற
வைத்துப் பிளந்த பெருமான் நாள்தோறும் மகிழ்ந்து இனிது
மருவி உறையும் கோயில் எண்ணிலடங்காத பெரும்
செல்வமும், அழகு மிகுந்த வேதங்களும், ஸப்தஸ்வரங்களும்
அவற்றின் அர்த்தங்களை அறிந்த மேன்மை
பொருந்திய குணமுடையவர்களும் உலகில் சிறப்புப்பெற்ற வைதிகர்கள் நிறைந்த
திருநாங்கூரிலிருக்கும் வைகுந்த விண்ணகரம் அடைந்து வணங்கு மட நெஞ்சே! என்பது ஆழ்வாரின்
அருள்வாக்கு.
எல்லா உயிர்களையும் காக்கும்
எம்பெருமான் மனிதர்களின் துயரினையும் வெகுஎளிதாகக் களைந்துது விடுவார். ஆனால்
அதற்கானத் தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதி என்பது பணமோ, பொருளோ அல்ல. பகவான் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான அன்பு மட்டுமே.
எவருக்கும் தீமை செய்யாத சுயநலமற்ற ஒழுக்கத்தினை அவர் எதிர்பார்க்கிறார்.
எனவேநெஞ்சத்தைத் தவறானன பாதைகளிலிருந்து விலக்கி வைகுந்த விண்ணகரப் பெருமானின்
திருத்தலத்திற்கு செல்லுங்கள் என்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.
ஊழிகாலத்தில் எல்லா உலகங்களையும் உண்டவன், சிவபெருமானின் பிரம்ம கபாலத்தை நீக்கியவன்,
ஆதியான பகவான் மகிழ்ந்து கோயில் கொண்ட இடம் வைகுந்த விண்ணகரமாகும்.
இங்குச் சம்பாப் பயிர்களும், தென்னை மரங்களும், வாழை, பாக்கு மரங்கள், வெற்றிலைக்
கொடிகள் ஒன்றுக்கொன்று செழித்திருக்கும். வண்டுகள் பாட, மயில்கள்
நடனமாடும். இப்படிப்பட்ட வளமிக்க தலத்திற்கு சென்று வணங்குவாய் மனமே! என்று
பாடுகிறார் ஆழ்வார்.
அண்டங்களும், இந்த அலைகளையுடைய கடலும் பூமியும் ஆகிய
எல்லாவற்றையும் பிரளய காலத்தில் உட்கொண்ட வயிற்றையுடையவனும், ருத்ரன்
கையில் வைத்திருக்கும் கபாலத்தை நிறைத்து அவனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கினவனுமான
ஆதிஎம்பெருமான் மகிழ்ந்து இனிது அவன் உறையுமிடம் எல்லா
இடத்திலும் செழித்து வளர்ந்த நெற்பயிரும் சிறிய
தென்னங்கன்றுகளும் வாழை மரங்களும் இலைகளும் கொடிகளும் குலைகளும்
பாக்கு மரங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று
தழுவிக்கொண்டு வண்டுகள் ரீங்காரம் பண்ண மயில்கள் ஆட நாங்கூரிலிருக்கும்
வைகுந்த விண்ணகரம் அடைந்து வணங்கு மடநெஞ்சே! என்கிறார்
ஆழ்வார்.
பிரளய காலத்தில் அண்டங்களையும், அலையெறிகின்ற
கடல்களையும், பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் தன்
வயிற்றில் வைத்துக் காத்தான். இப்பாசுரத்தின் மூலம் மனிதனின் துயர்களையும் பகவான்
களைந்து விடுவார் என்பது புலனாகிறது. சிவபெருமானின் இடரைத் தீர்த்தவன் நம் போன்ற
மக்களின் துயரை தீர்க்காமல் விடுவானா? தீவினைகளைக் களைந்து
தூய அன்பினால் அவனை ஆராதித்தால் நம் துயரங்கள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தவறான
பாதையில் செல்லும் நெஞ்சினைத் தடுத்து நல்வழியில் செல்ல முயற்சித்தல் வேண்டும்.
சிறந்த உடையில் திகழும் அகன்ற இடையுடைய அரக்கர் குலப் பெண்ணான சூர்ப்பனகையின்
செவியையும், மூக்கையும் அறுக்க அவள் அலறியவாறு இலங்கைக்குள் செல்ல வைத்த வலிமை கொண்ட
பெருமான் மகிழ்ந்து கோயில் கொண்ட இடம் வைகுந்த விண்ணகரமாகும். அங்கு ஒளி வீசும்
இரத்தினங்கள் இழைத்த மாளிகைகளின் உச்சியில் நடப்பட்ட சூலங்கள் வான்
மேகங்களைப் பிளக்கும். அதனால் அழகிய
முத்துக்கள் மாளிகைமேல் மலைபோல் குவிந்து இருக்கும். இத்தகைய வளமான தலத்தில்
வாழும் பெருமானை சென்றடை மனமே! என்று பாடுகிறார்.
திருநாங்கூரின் செல்வச் சிறப்பை ஆழ்வார் வருணிக்கிறார். பின்னடிகளில் மாட
மாளிகைகளின் முனையிலே பாதுகாப்புக்காகச் சூலங்கள் நாட்டப்படும். “நீடுமாடத்
தனிச்சூலம் போழ்கக் கொண்டல் துளிதூவ” என்பர்.
திருவழுந்தூர்ப் பதிகத்திலும் அந்தச் சூலங்கள் மேக மண்டலத்தளவும் ஓங்கி
எழுந்து அவை மேகங்களின் வயிறுகளைக் குத்திப் பிளக்க அவற்றினின்றும் முத்துக்கள்
சிதறி விழுந்து மாளிகைகளிலெங்கும் மலிந்து கிடக்கின்றன என்றவாறு இவ்வூரின் சிறப்பை
விளக்குகின்றார்.
அரக்கியான சூர்ப்பனகை அழகிய பெண்ணாக மாறித் தன்னை மணக்குமாறு இராமனிடம்
வேண்ட, அவன் அவளது அங்கங்களைக் கொய்து அனுப்பினான். இதனைக்
கண்ட அவளது தமையனாகிய கரன் பதினாறாயிரம் சேனையுடன் தூஷணன், திரிசிரஸ்
மற்றும் அக்கரன் ஆகியோர் போரிட்டு இராம பாணத்திற்கு இறையானார்கள். அத்தகையவன்
கோவில் கொண்ட தலத்து மாளிகையின் சூலங்கள் விண்ணைத் தொட்டது என்ற கருத்தினை ஆழ்வார்
திருவழுந்தூர் பதிகத்திலும் குறிப்பிட்டுள்ளார். அதர்ம சிந்தனையை விட்டுத் தர்ம
சிந்தனையினை மனத்தில் செலுத்தி இத்தலத்து பெருமானை வேண்டுமாறு கூறுகிறார்.
முற்காலத்தில் மின்னலைப்
போன்ற மெலிதான இடையையுடைய சீதா பிராட்டிக்காக இராவணனின் பத்துத் தலைகளும், இருபது தோள்களும்
விழும்படி தன்னிகரற்ற கோதண்டத்தை வளைத்து அம்பெய்தி இலங்கையை பொடியாக்கிய
வலிமைமிக்க எம்பெருமான் மகிழ்ந்து கோயில் கொண்ட இடம் வைகுந்த விண்ணகரமாகும். இத்தலத்தில் சம்பா பயிரும் செந்தாமரைகளும்,
சேல், கயல், வாளைப்
போன்ற மீன்களும், செங்கழுநீர் பூக்களும் நெருங்கி வயல்களில் நிறைந்திருக்கும்.
கீர்த்திபெற்ற வேதியர்கள் நிறைந்திருக்கும் தலத்தைச் சென்றடைவாயாக நெஞ்சமே! என்று
கூறுகிறார் ஆழ்வார்.
முன்பொரு சமயம் மின்னல் போன்று நுட்பமான இடையுடைய மெலிந்த
சீதைக்காக இலங்கை அரசன் ராவணனின் பத்துக் தலைகளும் இருபது
தோள்களும், உதிரும்படி
ஒப்பற்ற தனது வில்லை வளைத்து இலங்கையை
பொடி செய்த மாவீரன் மகிழ்ந்து
இனிது அவன் உறையுமிடம் செந்நெல்லும், செந்தாமரையும்
சேல், கயல்கள், வாளைப் போன்றற மீன்கள் செங்கழு
நீர்பூக்களும் சேர்ந்து கொண்டு கழனிகளெல்லாம்
பிரகாசிக்கும் கீர்த்தியுள்ள
வைதிகர்கள் வாழுமிடம் என்கிறார்.
சீதையை சிறை வைத்த குற்றத்திற்காக இராவணனை வதம் செய்து இலங்கையை அழித்த
மாவீரன் வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான். இவர் தீய சக்திகளை விரட்டி நம்மைக்
காப்பவராவார். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் மோகமானது இல்லற தர்மத்திற்குள்
இருக்க வேண்டும். இதைமீறிச் செயல்படும்போது இத்தகையஇன்னல்களைச் சந்திக்கக
வேண்டும். எனவே அதர்ம காரியங்களை விடுத்து
நற்காரியங்களை புரிய மனதினை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும் என்பது
இப்பாசுரத்தின் பொருளாகும்.
கண்ணனைக் கொல்வதற்காக அழகு மிக்க, உத்தமமான பெண்ணின் வடிவாகமாகத் தன்னை
மாற்றிக் கொண்டு வந்து, தன் உண்மை வடிவமான கொடிய பேய்
அரக்கியாக வந்த பூதனையின் நச்சுப் பாலினை அருந்தி அவளது உயிர் மாளும்படி செய்தவன்,
திடமான மருத மரங்களோடும், கொடிய சகடத்தையும்
முறித்துத் தள்ளியவனான எம்பெருமான் இனிது மகிழ்ந்து கோயில் கொண்டிருக்கும் இடம்
திருநாங்கூர் திருவைகுந்த விண்ணகரமாகும்.
அங்குள்ள அந்தணர்கள், உள்ளபடி சொல்லும் வேதங்களைக்
கூறுவதும், அதன் வியாக்யானங்களை அர்த்தத்துடன் செப்புவதும், நற்கலைகளில் அதிகத் திறமை
கொண்டவர்களாகவும், மிகுந்த பொறுமை, அதீத
தயாளகுணம் போன்றவற்றைத் தன்னகத்தே பெற்றுள்ளவர்களாகவும் உள்ளனர். எனவே
நெஞ்சமே! நீ அங்குச் சென்று பெருமானை
வணங்குவாயாக! என்று கூறுகிறார் ஆழ்வார். நமது நெஞ்சத்தை அதர்மக் காரியங்களில்
நினைக்கவொட்டாமல் நன்மைகளையே நினைக்கப் பெருமான் பக்கம் திருப்ப வேண்டும் என்ற
பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
உத்தம ஸ்தீரியின் வடிவெடுத்து வந்த பூதனையானவள் தன்
கொடிய பேய் வடிவத்துடனே இறக்கும் படியாக உயிரை வாங்கியவனும் திடமாகக்
கிடந்த மருத மரத்தையும் கொடிய சகடத்தையும் முறித்தவனுமான
எம்பெருமான் மகிழ்ந்து இனிது அவன்
உறையுமிடம், உண்மை பேசும் வேதங்களும் இதிஹாஸ
புராணங்களும் நிறைந்த நற்குணங்களும், உதவும் மனமும் கொடை
போன்றற குணங்களும் இவற்றை எப்போதும் உடையவர்களாய் சிறந்த
வைதிகர்கள் நிறைந்த திருநாங்கூரிலிருக்கும் வைகுந்தவிண்ணகரம்
என்பது இதன் பொருளாகும்.
கம்சனால் ஏவப்பட்ட இளங்கன்றாக வந்த வத்சாசுரன் என்ற அரக்கனைத் தூக்கி
எறிந்தும், விளாம் பழங்கள் உதிரும்படி
கபித்தாசரன் மேல் வீசி எறிந்தவனும், வேல் விழிகளையுடைய கோபியர்கள் வைத்த தயிர், வெண்ணெயை தன் திருவுள்ளம் குளிர உண்டு மகிழ்ந்தவனும், பிரளய காலத்தில் உலகங்களையெல்லம் உண்ட காளை போன்ற
வலிமையுடையவனான எம்பெருமான் மகிழ்ந்து நாள்தோறும் அருள்பாலிக்கும் கோயில் நாங்கூர்
வைகுந்த விண்ணகரமாகும். அங்கு இளமையை இயல்பாகவுடைய பாக்கு மரங்களும், குலைகளையுடைய தென்னை மரங்களும், வெற்றிலைக் கொடிகளும்,
செந்நெற்
பயிர்களும், நாள்தோறும் செழித்து வளரும் இனிய
கரும்புத் தோட்டமும், செழித்தோங்கி வளரும்படி
வேரில் நீர்பாயும், அழகு மிகுந்த ஐஸ்வர்யம்
நிறைந்திருக்கும் அவ்விடத்தை நெஞ்சமே! நீ சென்று வணங்குவாயாக என்று கூறுகிறார்
ஆழ்வார்.
இளங்கன்றைத் தூக்கி விளாம்பழங்கள் உதிரும்படி இரண்டு
அசுரர்களையும் மாளும்படி வீசி
யெறிந்தவனையும் வேல் போல் நீண்ட
கண்களையுடைய, ஆய்ச்சியர்கள் உறிகளில்
வைத்த தயிரையும், வெண்ணெயையும் மனம் குளிர அமுது செய்தவனும் இந்த உலகங்களை அமுது செய்தவனும் யெளவனனாயிருக்கும்
எம்பெருமான் மருவி உறை கோயில் செழித்தோங்கி நாள்தோறும் இனிய கரும்புகளும்
வளரும்படி இளமையையுடைய நல்ல பாக்கு மரங்களும் குலைகளையுடைய தென்னை
மரங்களும் வெற்றிலைக் கொடிகளும் செந்நெற் பயிர்களும் அடியிலே பாய்கின்ற தண்ணீரினால் வளம் மிகுந்த பெருஞ்செல்வமுடைய
வளரும் அழகிய திருநாங்கூரிலிருக்கும்
பெருமானை வணங்கு மடநெஞ்சே! என்கிறார் ஆழ்வார்.
என்றும் தணியாத கோபத்தைத் தன்னகத்தே கொண்ட நரகாசுரனுடைய வலிமையை அழித்த, சக்ராயுதத்தை தன்
கையில் தரித்தவன். இடப்பாகம் மகாலட்சுமிக்கும் வலப்பாகத்தை சிவனுக்கும்
கொடுத்தருளிய திருமேனியன். நித்யசூரிகளுக்கு நாதனாக விளங்கியவன் வாழும் இடம்
நாங்கூர் திருவிண்ணகரமாகும். இத்தலம்
தாமரைப் பூக்கள், செங்கழுநீர் மலர்கள், இவற்றிலிருந்து தேன் பெருகி வெள்ளமாக ஓடுவதால் வயலை உழுபவர்கள் தங்கள்
வயல் மடையை அடைக்க, வற்றாத செல்வம் கொண்ட அந்நகரின்
தெய்வத்தை மடநெஞ்சே! நீ சென்று அடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
நரகாசுரனின் தாய் பூமி தேவி.
வரங்களைப் பெற்ற ஆணவத்தால் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். பூமி தேவி
தாய்ப்பாசத்தில் அவன் செய்யும் தீமைகளைப் பொறுத்து வந்தாள். ஒரு நிலையில்
பொறுமையின்றி அவனை வெறுத்தாள். இதுதான் சமயம் என்று பெருமான் அசுரனை அழித்தார்.
பெற்றதாய் மகனை வெறுத்தால் அவனுக்குப் புகலிடம் வேறு இல்லை என்பது இதன்வழி
புலனாகிறது. ஆணவத்துடன் இருப்பவர்கள் இறைவனால் அழிக்கப்படுவார்கள் என்பது இதன்
பொருளாகும்.
அலைகள் நிறைந்துள்ள திருப்பாற்கடலில் தேவர்களும், முனிவர்களும் கூடி அழகிய மலர்களைத் தூவி, எங்கள் ஒப்பற்ற நாயகனே! எங்களிடம் கருணை காட்ட வேண்டும்
என்று வேண்ட, திருமால் மகிழ்ந்து உறையும் கோயில்
நாங்கூர் திருவிண்ணகரமாகும். அங்கு சிவந்த
கயல், வாளை மீன்கள் செந்நெல்
பயிர்களிடையே களித்து விளையாடும் பொய்கைகள் சூழ்ந்திருக்கும். சந்திரனின்
கீழ்வயிறு தேயுமாறுள்ள மாட மாளிக்கைகள் உயர்ந்து நெருங்கி இருக்கும் பெரிய
வீதிகளையுடைய சிறப்பான தலமாகத் திகழ்கின்றது என்று கூறுகிறார் ஆழ்வார்.
மரக்கலங்கள் நிறைந்த பாற்கடலில் தேவர்களோடு முனிவர்களும் பலர் கூடி சிறந்த புஷ்பங்களை தூவித் தொழுது வணங்கினர். எங்கள் தனிநாயகனே! எமக்கருளாய் என்று வேண்டி மகிழ்ந்த
எம்பெருமான் உறைகோயில் கயல்மீன்களும், வாளைமீன்களும் செந்நெற் பயிர்களிடையே துள்ளிக் குதிக்க சேல் மீன்களும் கூடவே களித்து விளையாட அழகிய தடாகங்கள் சூழ்ந்த வீதிகள் தோறும் நெருங்கி
இருக்க ஆகாசத்தில் சந்திரன் வயிறு தேயும்படி உயர்ந்த மணி மாடங்களை
உடையதுமான திருநாங்கூரிலிருக்கும் வைகுந்தவிண்ணகரம் அடைந்து வணங்கு மட நெஞ்சே! என்கிறார்
இப்பாசுரத்தில்
குறிப்பிட்டுள்ள தேவர்களும் முனிவர்களும் பல பிறவிகள் எடுத்து வினைகள்
தீர்ந்தபிறகு எம்பெருமானை அடைந்துள்ளார்கள்.
அத்தகையவர்கள் பெருமானை அடைந்த பிறகும் அவனை வேண்டி தமக்கு கருணை காட்ட
வேண்டும் என்று வேண்டுகிறார்கள். ஆனால்
நம்முடைய நிலையோ அவர்கள் நிலைக்கு வரவில்லை. நாம் அந்நிலையை அடைய எந்த அளவிற்கு
முயற்சிக்க வேண்டும்? அதை விடுத்து நாம்
கீழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அந்நிலை மாற விண்ணகரப் பெருமானை வந்து
அடைக! என்று கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
பாஞ்சஜன்னியமும்,
கௌமோதகி, சுதர்சனம் ஆகிய திவ்ய ஆயுதங்களைத்
கண்முன்னே தரித்து கொண்டிருக்கிற தாமரை விழிகளைக் கொண்ட எம்பெருமான் நித்ய வாசம்
செய்யும் திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம் பற்றி, வண்டுகள்
ரீங்காரம் செய்யும், சோலைகள் சூழ்ந்த திருமங்கை நாட்டு
மன்னன் பகைவர்கள் அஞ்சும்படி வாள் வீசுபவன், பரக்காலன் என்ற
பட்டம் பெற்ற கலியன் இயற்றிய இப்பத்து பாசுரங்களைப் பக்தியோடு பாட வல்லவர்கள்
விண்ணையும், மண்ணையும் சேர்த்து ஆள்வார்கள் என்று
கூறுகிறார்.
சங்கும், திடமான கதையும், சக்கரமும்
ஆகிய இவற்றைக் கண்முன் தரித்திருக்கும் நீண்ட
தாமரை போன்ற நெடிய கண்களையுடைய எம்பெருமான் இருக்கும்
கோயில் கப்பல்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகத்தில் பிரஸித்திபெற்ற
திருநாங்கூரில் உள்ள வைகுந்தவிண்ணகரைக் குறித்து வண்டுகள்
ரீங்காரம் செய்கின்ற சோலைகளினால் சூழ்ந்த திருமங்கை நாட்டு தலைவன்
சத்ருக்கள் தொலையும்படி வாட்படையை வீசுகின்ற பரகாலன்
என்னும் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த, சங்கப்புலவர்கள்
கொண்டாடத் தக்க தமிழ்ப் பாசுரங்களான இப்பத்துப் பாசுரங்களையும்
ஓத வல்லார்கள் பூமியையும் பரமபதத்தையும்
ஆளும் பாக்யம் பெறுவர் என்ற பொருளில் அமைகிறது.
நம்முடைய நெஞ்சங்களைத் திருவைகுந்த விண்ணகரத்திற்கு செல்லுமாறு தமது
பாசுரங்களில் தெரிவிக்கின்றார். நம்
நெஞசம் தூய்மை அடைந்தால் அதற்கு மிகப் பெரிய பலம் வருவதை யதார்த்தமாகக் காணலாம்.
மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்டாலே நம் பலம் கூடும் என்பார்கள். பலவீனமான
நெஞ்சம் அச்சப்படும். அச்சமுள்ளவன் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது.
அனைத்திற்கும் நம் நெஞ்சமே பிரதானம். அதனைத் தூய்மையாக்கி அவனை அடைவதே நமது முதல்
கடமையாகும் என்ற பொருளில் அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக