திங்கள், 8 டிசம்பர், 2025

39. திருப்பார்த்தன்பள்ளி

 


திருமங்கையாழ்வார்                                                                                      பெரிய திருமொழி 

கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாடம் நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.      1318

 

பவளம் போன்ற சிவந்த அதரத்தையுடைய எனது மகள், கவளம் கவளமாக உணவைக் கொடுத்து மதம் ஊட்டப்பட்ட குவலயாபீடம் என்ற யானையின் தந்தங்களை முறித்தவன் கண்ணபிரான் என்று பாடுகிறாள். அழகான கருநெய்தல் மலர், காளமேகம் போன்ற திருமேனியைக் கொண்ட மன்னன் என்று பாடுகிறாள். உயரிய மாட மாளிகைகள் நிறைந்த திருநாங்கூரில் உறையும் பார்த்தன்பள்ளி என்னும் தலத்து நாயகனைப் பாடுகிறாள் என்று தன்னை ஒரு பெண்ணின் தாயாக நினைத்துப் பாடுகிறார் ஆழ்வார்.

      என் கணவன் செய்த அருமைச் செயல்கள் உங்கட்குத் தெரியுமா? கம்ஸன் தனது மதயானையைக் கொழுப்பேற்றி என் கணவனைக் கொல்லுமாறு அரண்மனை வாயிலில் நிறுத்தி வைத்தான். இவனோ சேற்றிலிருந்து கொடியை இழுப்பவன் போல அதன் தந்தங்களை எளிதிற் பறித்திட்டு அதன் உயிரினைத் தொலைத்திட்டான்; அப்படிப்பட்ட சூரனைக் காண்மின் என்கிறாள்.

அதற்குமேல் திருமேனி நிறத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கி, குவளைப் பூப்போலும் காளமேகம் போலும் கறுத்துக் குளிர்ந்து கண்ணைக் கவரும் நிறமன்றோ என் கணவனது நிறம்  என்கிறாள்.  யானையை எத்தனை தடைவைப் பார்த்தாலும் ஒவ்வொரு தடவையிலும் அபூர்வ வஸ்துவாகிய ஆனந்தாவஹமாயிருப்பது போல, அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பன் என் கணவன் – என்கிறாள்.  அவனெழுந்தருளியிருக்கும் ராஜதானியின் சிறப்பும் பெயரும் உங்கட்குத் தெரியுமோ?  வெள்ளிய சாந்திட்டுப் பளபளவென்று விளங்குகின்ற மாடமாளிகைகள் ஓங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரிலே ஸ்ரீமானாய் விளங்குமவன் காண்மின் அவன் – என்கிறாள்.  இவ்வளவும் சொல்லிவிட்டுப் பார்த்தன்பள்ளித் திருப்பதியின் திருநாமத்தையிட்டு இசைபாடத் தொடங்கிவிட்டா என்று திருத்தாயார் கூறினாள்.

 

கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும்
செஞ்சொலாளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே.       1319  

 

பஞ்சு போன்ற மென்மையான பாதங்களையுடைய என் புதல்வி, கம்சன் ஏவிய கடும் கோபத்தைக் கொண்ட யானையை வென்ற காளை என்று பாடுகிறாள்.  கபடத்தை மேற்கொண்ட பூதனை என்னும் அரக்கியான பேய்ப் பெண்ணின் உயிரை உண்ட மாயவன் என்றும் பாடுகிறாள். செம்மையாகப் பேசவல்ல, வேதம் ஓதும் வேதியர்கள் நெடுங்காலம் குடிகொண்டிருக்கும் நாங்கூர் நகரில் அருள் புரியும் தேவாதிதேவன் என்று பன்முறை சொல்லியபடி பார்த்தன்பள்ளித் தலத்தைப் பார்த்துப் பாடுகிறாள்.

பஞ்சு போன்று மென்மையான பாதங்களையுடைய என் மகளானவள், கம்ஸனால் ஏவப்பட்ட கடுமையான கோபத்தையுடைய குவலயா பீடமென்னும் யானையைத் தொலைத்த இளையோன் என்று சொல்லிக் கொண்டும், கபடத்தை மேற்கொண்டு வந்த பூதனையினுடைய பிராணனை முடித்த ஆச்சரிய சக்தியுக்தன் என்று சொல்லிக்கொண்டும், செம்மையான சொற்களைக் கற்ற அந்தணர் நீண்ட காலமாக வாழப்பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற தேவாதிதேவன் என்று பலகாலம் சொல்லிக்கொண்டும் பார்த்தன்பள்ளி நோக்கிப் பாடுவாள்.

      ஆழ்வார் தன்னைப் பரக்கால நாயகியின் தாயாகப் பாவித்துப் பெருமானை நோக்கிப் பாடுகிறாள். உலகத்தின் அற்ப சுகங்களையெல்லாம் விடுத்து பகவானின்  பெருமைகளைப் பாடும் ஆர்வம் இப்பெண்ணுக்கு வருகிறது. இது அனைத்துப் பெண் இனதிற்கும் காட்டும் நல்வழியாகும். நிலையற்ற இவ்வுறவுகளை விடுத்து பகவான் ஒருவரே நிலையானவர் என்பதைக் கொண்டு அவரைப் பற்றுவதே உண்மையான பற்றாகும்.

      

அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள்தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை மன்னும் மாயன் என்று என்று ஓதி
பண்டுபோல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.       1320

 

என் பெண்ணானவள் இப்போதெல்லாம் முன் போன்று இல்லை. அவன் பிரம்மாண்டங்களுக்கும் தெய்வம் என்று பாடிக்கொண்டிருக்கிறாள்.  எனக்கு யானை போன்றவன் என்றும் பாடுகிறாள்.  ஆயர் குலத்து மங்கையர் தனங்களை அணையும் இயல்புடைய நந்தனின் செல்வன் என்றும்,  நான்கு வேதங்களை ஆய்வு செய்யும் பெருமையுடையவன் என்றும்,  வண்டுகள் உலவும் மலர்த் தோட்டங்களையுடைய நாங்கூர் நகரில் வாசம் செய்கின்ற மாயவன் என்றும் பலமுறை சொல்லியவண்ணம் பார்த்தனுக்காகப் பள்ளி கொண்ட இத்தலத்தைப் பார்த்துப் பாடுகிறாள்.

அவனிடத்தில் நான் இவ்வளவு காதல் கொண்டிருக்கச் செய்தேயும் இடைச்சிகளோடு இருப்பதையே அவனுக்கு நோக்கமென்று பிரணயரோஷம் தோற்றச் சொல்லுகின்றாள்.  வேதங்களெல்லாம் அவனுடைய பெருமைகளை எல்லை கண்டு சொல்லி முடித்துவிட வேணுமென்று அவனைப் பின்தொடர்ந்தோடி இளைத்து மீள்வனவாதலால் அவற்றுக்குப் பிடிகொடாமல் அபரிச்சிந்த வைபவனாயிருப்பவன். நேற்றுவரையில் மற்ற உலகத்துப் பெண்களைப் போலே பந்தம் அம்மானையும் பாவையும் பைங்கிளியுங் கொண்டு போதுபோக்கிக் கிடந்த இவள் இன்று இப்படி விகாரப்பட்டுப் பார்த்தன்பள்ளி என்று பாடத் தொடங்கி விட்டாள் என்கிறாள்.  அன்றியே, இதற்கு முன்பும் இவள் பார்த்தன்பள்ளி பாடினவளேயாகிலும் அப்போதெல்லாம் இப்படி அநுராகந் தோற்றப் பாடினாளல்லள் என்கிறாள் தாயார்.

      அண்டர்’ என்ற சொல் தேவர்க்கும் இடையர்க்கும் பொருந்தும். எனவே இத்தலத்துப் பெருமான் தேவர்க்கும் இடையர்க்கும் தலைவனாவான். அவன்மீது இத்தகைய காதல் கொண்டும் அவன் இடையர்குலப் பெண்களிடம் நாட்டம் கொண்டுள்ளான். வேதங்களைக் கொண்டு அவன் பெருமைகளைச் சொல்லி முடித்துவிட வேண்டும் என்று அவனைப் பின்தொடர்ந்து சென்று  அவள் இளைத்துப் போனாள். ஆனால் அவனோ பிடிகொடுக்காமல் உள்ளான். நேற்றுவரை மற்ற பந்தங்களைக் கொண்ட பெண்கள்போல் அம்மானைப் பாடியும், பைங்கிளியை ஏந்திக் கொண்டும் இருந்த இவள் இப்போது பார்த்தன்பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள் என்று தாயார் கூறுகிறாள்.

      

கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டு இலங்கைகட்டு அழித்த மாயன் என்றும்
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.        1321

 

பல்வேறு வளையல்கள் அணிந்த என் புதல்வியானவள், அழகு வளையல்கள் அணிந்த மற்ற பெண்களின் முன்பு தன் வரம்பை அழித்தவளானாள். பெண்மைக்குரிய அச்சம், மடம், நாணம் என்கிற மரியாதைகளை அழித்துக் கொண்டாள். பெரிய கடலில் அணைகட்டி இலங்கையின் பெருமைகளை அழித்த மாயன் என்றும், செல்வம் நிறைந்த வேதியர் குடியிருக்கும் திருநாங்கூரில் தேவாதி தேவன் என்றும் பலவாறு அழைத்துக் கொண்டு பார்த்தன்பள்ளி பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறாள் என்று தாயார் புலம்புகிறாள்.

நேற்று வரையில் ஒரு வரம்பிலே கிடந்த இவள் இன்று வரம்பு கடந்தவளாயினள். பெண்மைக்கு உரிய நாணம் மடம் அச்சம் முதலிய குணங்களைக் கைவிட்டாள். வேற்று மனிதரைக் கண்டால் நாணி வாய்மூடிக் கிடந்த இவள் பல பெண்டிர்களின் எதிரே தன் தலைமகனுடைய வீரச்செயல்களைச் சொல்லத் தொடங்கி, கடலிலே அணை கட்டினவன் என்றும் இலங்கையை பாழ்படுத்திய பெருமிடுக்கன் என்றும் சொல்லுகின்றாள்.  ஒருபிராட்டிக்காகப் படாதனபட்டு அரும் பெருங்காரியங்கள் செய்தவன் என் விஷயத்திலே வாளாயிருக்கின்றான் என்பதாகச் சொல்லுகிறாள்.

      நேற்றுவரை வரம்புடன் இருந்தவள் இன்று பெண்மைக்குரிய குணங்களைக் கைவிட்டாள். என்றும் நாணத்துடன் இருக்கும் இவள் மற்ற தோழிகள் முன்பு தன் தலைவனின் வீரச்செயல்களை பறைசாற்றுகிறாள். இவளுக்காகப் பல்வேறு வளையல்கள்  இட்டு அழகு பார்த்தால் இவள் பகவத் விஷயத்தில் தன்னை முழுதும் ஆட்படுத்திக் கொண்டு, தன்னை வருத்திக் கொண்டு உடல் மெலிந்து, வளையல் நழுவி விழும் அளவுக்கு ஆளாகி உள்ளாள் என்று வருந்திக் கூறுகிறாள் திருத்தாயார்.

 

அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோலவில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன் தான் என்று என்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.      1322

 

என் மகளானவள் முன்னொரு காலத்தில் அரக்கர்களின் உயிர் அழியும்படி ஆழமான கடல் சூழ்ந்த இலங்கையை அழித்த வானர வீரர்களின் தலைவன் என்று பாடுகிறாள். அழகிய வில்லையுடையவன் என்றும், அழகிய சந்திரனை செல்ல முடியாமல் எட்டு மாளிகைகள் ஓங்கியிருக்கப்பெற்ற திருநாங்கூரில் குடிகொண்டிருக்கும் நிர்மலன் என்றும் பலவிதமாகப் பாடி நிந்தைக்கு ஆளானவளாய் பார்த்தன் பள்ளியைப் பற்றிக் கீதம் பாடுகிறாள் என்று கூறுகிறார் திருத்தாயார்.

என் பெண்  முன்பொரு சமயம்  அரக்கர்கள் அழிய  ஆழ்கடலால் சூழ்ந்த  இலங்கையை  அழித்த  வானரவீரர்களுக்கு அரசன்  என்றும்,  அழகிய வில்லை  உடையவன் என்றும்,  சந்திரனை  திரியவொட்டாமல்  மாட மாளிகைகள் ஓங்கியிருக்கும் திருநாங்கூரில் இருப்பவன்,  புனிதமானவன்  என்று பலகாலம்  சொல்லிக்கொண்டு  பெரும்பழிக்கு இடமானவளாய்  பார்த்தன் பள்ளியென்னும்  கோவிலைப் பாடுவாளே என்கிறாள்.

      பிராட்டியை பிரித்து வைக்கக் காரணமான இராவணனை கொடிய  சீற்றத்துடன் அரக்கர் குலத்தை நிர்மூலமாக்கியவன் என் தலைவன். ஆண்பிள்ளைத்தனத்துக்கு அபிமானியாக இருப்போரெல்லாம் தோற்கும்படி அழகிய வில்லையேந்தியவன் என்கிறாள். ‘பரக்கழிந்தாள்’ என்ற சொல்லுக்கு அடக்கங்கெட்டாள் என்று பொருளுரைப்பர். கம்ப ராமாயணத்தில்  வாலிவதைப் படலத்தில் பரக்கழி-பெருநிந்தை, பெருந்தீங்குணம் என்ற சொல்லைக் கம்பர் கையாண்டுள்ளார்.  கொந்தளமாக்கிப் பரக்ககழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற’ என்ற  நாச்சியார் திருமொழிப் பாடலில் ஆண்டாள் ‘பரக்கழித்த’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளாள். 

      

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே.       1323

 

பாலைக் காட்டிலும் மிருதுவான இனிமையான வார்த்தைகளைக் கூறும் என் மகள், பிரளய காலத்தில் உலகம் முழுவதையும் உண்டு தன் வயிற்றில் அடக்கி வெளிப்படுத்திய எம்பெருமான் என்று பாடுகிறாள்.  பூமியைச் சூழ்ந்துள்ள கடல் போன்ற அழகு மிக்க திருமேனி நிறத்தவன் என்றும், சேல் மீன்கள் பாயும் அழகிய கழனிகள் நிறைந்த திருநாங்கூரில் வீற்றிருக்கும் தேவாதி தேவனென்றும் பலவிதமாய் கூறிக் கொண்டு பார்த்தன்பள்ளி பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறாள் என்று கூறுகிறார் திருத்தாயார்.

பாலைக் காட்டிலும் மதுரமாய் மிருதுமான சொற்களையுடையவளான என் பெண்ணானவள், உலகம் முழுவதையும் பிரளயத்தின்போது திருவயிற்றிலடக்கிப் பிறகு வெளிப்படுத்திய ஸ்வாமி என்றும், பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிற கடல் போன்ற அழகியதான திருமேனி நிறமுடையவனென்றும், மீன்கள் மேலே எழும்பித் துள்ளா நிற்கப்பெற்ற கழனிகளையுடைய திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற தேவாதிதேவன் என்றும் பலகாலம் சொல்லிக் கொண்டு பார்த்தன்பள்ளி பாடுவாள் என்றாள்.

      என் தலைமகனானவன் உலகில் உள்ள துன்பங்களையெல்லாம் தாங்கி நம்மைக் காப்பவனாம். இவளது பேச்சுக்கள் அனைத்தும் பாலைவிட இனிமையாக  உள்ளது. நானிலம் என்பது நான்கு நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவற்றைக் குறிப்பதாகும். இதில் பாலை என்பது பாலைவனங்களைக் குறிக்கும். இதில் ஒருசிலவற்றைத் தவிர மற்ற பிராணிகள் உயிர்வாழ வழியில்லை. இது நீரும் நிழலுமில்லாத நிலம் என்பதால் விலக்கப்பட்டது. எனவே பாலைக்குத் தனியே நிலமில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

      

நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே.        1324

 

பாலைக் காட்டிலும் மிருதுவான இனிமையான வார்த்தைகளைக் கூறும் என் மகள், பிரளய காலத்தில் உலகம் முழுவதையும் உண்டு தன் வயிற்றில் அடக்கி வெளிப்படுத்திய எம்பெருமான் என்று பாடுகிறாள்.  பூமியைச் சூழ்ந்துள்ள கடல் போன்ற அழகு மிக்க திருமேனி நிறத்தவன் என்றும், சேல் மீன்கள் பாயும் அழகிய கழனிகள் நிறைந்த திருநாங்கூரில் வீற்றிருக்கும் தேவாதி தேவனென்றும் பலவிதமாய் கூறிக் கொண்டு பார்த்தன்பள்ளி பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறாள் என்று கூறுகிறார் திருத்தாயார்.

பாலைக் காட்டிலும் மதுரமாய் மிருதுமான சொற்களையுடையவளான என் பெண்ணானவள், உலகம் முழுவதையும் பிரளயத்தின்போது திருவயிற்றிலடக்கிப் பிறகு வெளிப்படுத்திய ஸ்வாமி என்றும், பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிற கடல் போன்ற அழகியதான திருமேனி நிறமுடையவனென்றும், மீன்கள் மேலே எழும்பித் துள்ளா நிற்கப்பெற்ற கழனிகளையுடைய திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற தேவாதிதேவன் என்றும் பலகாலம் சொல்லிக் கொண்டு பார்த்தன்பள்ளி பாடுவாள் என்றாள்.

      என் தலைமகனானவன் உலகில் உள்ள துன்பங்களையெல்லாம் தாங்கி நம்மைக் காப்பவனாம். இவளது பேச்சுக்கள் அனைத்தும் பாலைவிட இனிமையாக  உள்ளது. நானிலம் என்பது நான்கு நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவற்றைக் குறிப்பதாகும். இதில் பாலை என்பது பாலைவனங்களைக் குறிக்கும். இதில் ஒருசிலவற்றைத் தவிர மற்ற பிராணிகள் உயிர்வாழ வழியில்லை. இது நீரும் நிழலுமில்லாத நிலம் என்பதால் விலக்கப்பட்டது. எனவே பாலைக்குத் தனியே நிலமில்லை என்று குறிப்பிடப்படுகிறது.

      

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.       1325

 

என் புதல்வியானவள் தாமரையாள் மணாளனை உலகமெல்லாம் கொண்டாடப்படும் ஒப்பற்றவன் என்றும், சந்திர சூரியர்களாலும் அமரர்களாலும் அணுக முடியாதவன் என்றும், பிரகாசிக்கும் சுதர்சனச் சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவன் என்றும், அடியார்களுக்குப் பிரியமானவன் என்றும், தென் திசைக்குத் திலகம் போன்றிருக்கும், வேதம் கற்றவர்கள் குடியிருக்கும் நாங்கை நகரின் தேவாதி தேவனென்றும் பலவிதமாகச் சொல்லிக் கொண்டு எல்லோரும் பழிக்கும்படி பார்த்தன்பள்ளியைப் பார்த்துக் கீதம் இசைக்கிறாள் என்று கூறுகிறாள் தாயார்.     

என் பெண்ணானவள் லோகமெல்லாம் கொண்டாடும்படியுள்ள ஒருவன் என்றும், விளங்குகின்ற சந்தர சூரியர்களாலும் மற்றுமுள்ள தேவர்களாலும் கிட்ட முடியாமல் ஜொலிக்கின்ற திருவாழியாழ்வானை ஆயுதமாகவுடையன் என்றும், அடியார்பக்கல் அன்புடையவன் என்றும், தெற்குத் திக்குக்கு திலகம் போலேயிருக்கிற வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற தேவாதி தேவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு எல்லாரும் பழிக்கும்படியாகப் பார்த்தன்பள்ளி பாடுவாள் என்கிறாள்.

      சூரியனின் ஒளிமிக்க சுடரைத் தோற்குமாறு திருவாழியை ஆயுதமாகக் கொண்டுள்ளான் என்று கூறுகிறாள். சூரிய சந்திரர்களாலும் நெருங்க முடியாத சக்கரத்தைக் கொண்டுள்ளான். ஆனால் அடியார்கள் அன்பினால் அவனை நெருங்கிச் செல்கிறார்கள். சம்சாரிகளாகி நாம் பெருமானை நோக்கிப் பொருள் வேண்டும், வாழ்க்கை வேண்டும் என்று இறைஞ்சுவது ஏசுகைக்குரிய செயலாகும். அதைவிடுத்து அவனே வேண்டும் என்றும், பிறவியின்றி நின் திருப்பாதங்களில் நான் இருத்தல் வேண்டும் என்று வேண்டுவதே சாலச் சிறந்தது என்ற பொருளில் அமைகிறது.

      

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள்பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே.       1326

 

இசை போன்று இனிமையாகப் பேசும் என் மகள் ஸ்ரீகிருஷ்ணர் என்றும், தேவர்கள் பக்தியுடன் மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கும்படி அவர்களது எண்ணங்களாய் இருப்பவனென்றும் பாடுகிறாள். எல்லா உலகங்களுக்கும் காரணமானவன் என்றும், உறுதியான மாடமாளிகைகள் ஓங்கி நிற்கும் திருநாங்கூரில் அருள் புரியும் தேவாதி தேவன் என்றும் பலவிதமாகக் கூறிக்கொண்டு பார்த்தன் பள்ளியை நோக்கிப் பாடுகிறாள்.

இசையோடு பண்ணோடு ஒத்த  மிருதுவான  பேச்சை உடைய என் பெண்  கண்ணன் என்றும்  தேவர்கள் பக்தியோடு  மலர்கள்  சமர்ப்பிக்கும் படியாக  அவர்களுடய எண்ணத்தில்  இருப்பவன் என்றும்,  இன்பம் அளிப்பவனென்றும்,  எல்லா உலகங்களுக்கும்  காரணபூதன் என்றும்,  திடமான மாடமாளிகைகள் உயர்ந்திருக்கும்  திருநாங்கூரிலிருக்கும்  தேவாதி தேவன் என்று  சொல்லிக்கொண்டு பலகாலம்  பார்த்தன்பள்ளி யென்னும்  கோவிலைப்  பாடுவாளே என்கிறாள் திருத்தாயார்.

      உலகத்தவர் அனைவரின் வாயிலிலும் வரும் கண்ணன் என்னும் திருநாமம் வந்தாலும் என் மகளின் வாயில் வரும் அத்திருநாமத்தின் அழகே அழகாகும். உபநிஷங்கள் கூறுபவர்களின் வார்த்தைகளை உன்னித்தும், அனுபவித்தும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அனைத்திற்கும் அவனே காரணபூதன் என்கிறாள். மகளின் நிலையை எண்ணித் தாய் கண்கலங்கிப் போகிறாள். சோகத்தில் கிடந்து தவிக்கிறாள். நாயகி தலைவனை நோக்கிச் செல்லுவது நன்மைக்கே என்று புரிந்து கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால் மகளோ அனைத்தையும் தவிர்த்துவிட்டு தனது ஒரே குறிக்கோளான பகவானை அடைவதையே முக்கியம் என்று கருதுகிறாள்.

      

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள்பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே.         1327

 

பூமியில் சிறந்த வேதம் கற்றவர்கள் வசிக்கும் திருநாங்கூரில் திருப்பார்த்தன் பள்ளியில் அருள் புரியும் செந்தாமரைக் கண்ணனைப் பற்றி அழகிய தனங்களைக் கொண்ட பரக்கால நாயகி பாடியதைத் தாய் கூறிய வார்த்தைகளாக அமைத்துக் கூறிய வேற்படைத் தலைவனான திருமங்கை ஆழ்வார் பாடிய இப்பத்து பாமாலையை பக்தியுடன் பாட வல்லவர்கள் அழகிய பரமபதத்தில் தினமும் இன்பம் அனுபவிப்பார்கள்.

இத்திருமொழியின் போக்யதை விலக்ஷணமாயிருக்கும்.  இதனிற் பாசுரங்களைச் சொன்னாலும், செவியுற்றாலும் நெஞ்சு நீர்ப்பண்டமாய் உருகும். திருவிந்தளூர்ப் பரிமளரங்கப் பெருமானைக் கண்ணாரக் காணவேணுமென்றும் கையாரத் தொழவேணுமென்றும் ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யப் பெறவேணும் என்றும், எவ்வளவோ பாரித்துக் கொண்டு வந்தார் ஆழ்வார்.  அப்பெருமானோ வென்னில், திருக்கண்களாலே குளிரநோக்குதல், வாரியணைத்தல், வினவுதல் அத்தானிச் சேவகத்திலே ஏவுதல் ஒன்றுஞ் செய்திலன்; நிரங்குச ஸ்வதந்த்ரனான அவனது திருவுள்ளத்தை அறியவல்லாரார்? ஆழ்வாருடைய உருக்கமான பாசுரங்களைக் கேட்க வேணுமென்று பிச்சேறினான் போலும்; கோபுர வாசற் கதவையுமடைத்துக் கொண்டு கிடந்தான் போலும்.  ஆழ்வார் துடிக்கிற துடிப்பை என்சொல்ல வல்லோம்!  பெண்ணுடையுடுத்துப் பாசுரமிட்டுக் காட்டுகிற துடிப்பை ஆணுடையிலேயே காட்டுந் திருமொழியன்றோ இது.

      இப்பத்துப் பாடல்களில் பரக்கால நாயகியின் தாயார் தன் பெண்ணின் தெய்வீக நிலையினைப் புரிந்து கொள்ளாமல் இகலோக வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தினைப் பெரிதாக எண்ணி புலம்பியுள்ளாள். உலகத்தவர் பழிக்குமாறு இவ்விதம் நடந்து கொள்ளலாமா என்று வினவுகிறாள். உடல் இச்சை காரணமாக ஏற்பட்ட நிலை இல்லை. இறைவனுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற ஒரே நினைவில் இவ்வாறு நடந்து கொள்கிறாள். ஆனால் தாயாருக்கோ இத்தகைய நிலையினை தெரிந்து கொள்ள இயலவில்லை. இத்தகைய அற்புத நிலையை நோக்கிச் செல்பவர்களைக் கண்டு மற்றவர்கள் நகையாடுவது வழக்கம். பரிகசிப்பார்கள், பழிபோடுவார்கள், நிந்தனை செய்வார்கள். இவற்றினை அலட்சியம் செய்து நமது குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே ஆழ்வாரின் இலட்சியமாகும்.

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...