செவ்வாய், 9 டிசம்பர், 2025

36. திருத்தெற்றியம்பலம்

 


திருமங்கையாழ்வார்                                                                                       பெரிய திருமொழி

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
     மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக்
     கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து
     இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.      1278

 

நூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்ட தாமரைகள் பள்ளத்தில் முளைத்திருக்கும். அதில் உள்ள விரிந்த வாயுடைய நண்டுகள் உணவிற்காக மலரில் சென்று புகும்போது சேற்று வளையிலே இளம் பாக்கு மரங்களின் பாளையானது வெண்மையான முத்துக்களை இறைக்கப்பெற்று சிந்தும். அதனால் வளை அடைபட்டுப் போகும். இத்தகைய வளமிக்க திருநாங்கூரில் திருத்தெற்றியம்பலம் என்ற தலத்தில் பெருமான் செந்தாமரைக் கண்ணனாக அருள் புரிகிறான்.  மாணிக்கங்கள் இழைத்த மணி முடியும், தேஜசும், வலிமையும் கொண்ட துரியோதனன் முதலானவர்களை அழித்தவன்.  அத்தகையவர்களின் மனைவிகளான அரசிகள் அணிந்த காதணிகளை நீங்கச் செய்தவன். தனது தந்தையான வசுதேவரின் காலில் இடப்பட்டிருந்த விலங்கை ஏக காலத்தில் ஒழியும்படியாக  நீக்கியவன். கோபம் கொண்ட கஜேந்திராழ்வானை காத்தருளிய ஆதிமூலத்தை இத்தலத்தில் வந்து தரிசனம் செய்யுங்கள் என்று ஆழ்வார் இப்பாசுரத்தில் கூறுகிறார்.

 பள்ளத்தில் முளைத்த  நூறிதழ் கொண்ட  தாமரைப் பூவிலே பிரவேசித்த  பெரிய வாயை உடைய  நண்டின்  சேற்று வளையில்  இளம் பாக்கு மரங்களின்  முற்றின பாளையானது,  வெளுத்த முத்துக்களை  இறைக்க,  திருநாங்கூரின்  திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்  சிவந்த கண்களையுடைய  எம்பெருமானானவன், பகைவரான  துரியோதனாதிகளின்  மணிகள் இழைத்த கிரீடங்களும் அவர்களின் திறமையும்  மதிப்பும் பெருமையும்  மேலும் அவர்களுடைய  மனைவிமார்களின்  காதணிகளும்,  தன் தகப்பனாரான வசுதேவருடைய  காலிலே இடப்பட்டிருந்த விலங்கும்  ஒரே சமயத்தில்  கழன்றுவிழும்படியாகக் கண்ணன் அவதரித்தான்.  சீற்றத்தை உடைய கஜேந்திரனை  காத்தருளின  கண்ணனை காணுங்கள் என்கிறார்.

      

பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட
     பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
     பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்
     இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே .       1279

 

நெற்கதிர்களின் மேல் வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட கரு நெய்தற் பூக்கள் படர்ந்திருக்க, சுற்றுப்புறங்களில் அழகிய சிறகுகள் கொண்ட வண்டுகள் ஆர்ப்பரித்து ரீங்காரமிட, நீண்ட அழகிய கண்களையுடைய மங்கையரின் சிறிய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பும் சேர்ந்தொலிக்கும் சிறப்புடைய நாங்கூரில் திருத்தெற்றியம்பலத்தில் என் செந்தாமரைக் கண்ணன் குடி கொண்டுள்ளான். தங்க வளையல்கள் அணிந்த புஜங்களை உடைய ஆத்ம குணம் கொண்ட யசோதை போல உருவமெடுத்து வந்த பொல்லாத பூதனை, தான் பெற்றெடுத்த தாய் போல்  நஞ்சுப்பாலை ஊட்ட, அதைக் கண்ணன் உறிஞ்சி அவளது உயிரை மாய்த்து மகிழ்ந்த மாதவனை இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்துப் பெருமானை சேவித்தால் பகைவர்கள் தோற்று ஓடுவார்கள். உறுதிமிக்க பலத்தை பெற்று ஆன்மீக வாழ்வு வாழலாம் என்று இப்பாசுரம் நமக்கு உணர்த்துகின்றது.

திருநாங்கூர்‌ வயல்களில்‌ நெற்பயிர்கள்‌ செழித்து வளர்கின்றன. அந்த நெற்கதிர்களின்மேல்‌ கருநெய்தற்‌ பூக்கள்‌ வரிசை வரிசையாகப்‌ படர்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட சுற்றுப்புறங்களில்‌ வண்டுகளின்‌ ஆரவாரமும்‌, பூக்கொய்வதற்காகச்‌ சென்ற மங்கைமார்களின்‌ பாதச்சிலம்புகளின்‌ ஒலியும் சேர்ந்து தொனிக்கின்றனவாம்‌. இப்படிப்பட்ட திருநாங்கூரில் உள்ள திருத்தெற்றியம்பலத்‌ திருப்பதியின்கண்‌ எழுந்தருளியுள்ள எம்பெருமான்‌ யாவனென்னில்‌, முன்பு கம்ஸனால்‌ ஏவப்பட்டுப்‌ பேய் வடிவை மறைத்துத்‌ தாய் வடிவு கொண்டு நஞ்சு தீற்றிய முலை கொடுக்க வந்த பூதனையின்‌ தனத்தை உறிஞ்சி உண்டு அவளுயிரை முடித்தவன் எம்பெருமானேயாவான்.

      

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்
     பசு வெண்ணெய் பதம் ஆரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி
     அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ
     மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே .        1280

 

பாளைகள் மிகவும் நிறைந்து, உயர்ந்திருக்கும் தென்னை மரங்களிலிருந்து மட்டையுள்ள தேங்காய்கள் மாமரங்களில் விழ, அதனால் உதிர்ந்த மாம்பழங்கள் உருண்டு கொண்டும்,  அதனுடன் பல்வேறு மலர்களைச் சுமந்து கொண்டும் பெருகிவரும் பொன்னிநதி, மேட்டு நிலங்களிலிருந்து வாய்க்கால்களாகப் பிரியும். அத்தகையதான திருநாங்கூர்  திருத்தெற்றியம்பலத்தில் எனது செந்தாமரைக் கண்ணன் அருள் புரிகின்றார். அத்தகைய பெருமான் கிருஷ்ணாவதாரத்தில் கடைந்து வைத்த பசு வெண்ணெயை உண்பதற்கு படலைக் கொண்டு மூடிய சிறு குடிசைக்குள் நுழைந்து உள்ளே போய் வேற்படை போன்று விழிகளைக் கொண்ட  கோபியர்களுடைய புடவைத் தலைப்பைப் பிடித்திழுத்து இன்பமாகக் குறும்புகளைச் செய்து ஆயர்பாடியெங்கும் சுற்றித் திரிந்தார். அத்தகைய தாமோதரனை இத்தலத்தில் காணலாம்.

கோகுலத்தில் கோபிகைகளின் புடவைகளைப் பிடித்து இழுத்து பல குறும்புகள் செய்த கண்ணனின் லீலைகளை ஆழ்வார் இப்பாசுரத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.  கோபிகைகள் தங்கள் பிறவித்தளையை நீக்கும் தகுதியினைப் பெற்றிருந்தார்கள்.  அவர்கள் கண்ணனை விரும்பியதும், கண்ணன் பல குறும்புகளைச் செய்ததும் காம இச்சையால் ஏற்பட்டதல்ல. ஆத்ம ஐக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆத்ம ஐக்கியம்தான் நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய இறுதி இலட்சியமாகும்.

 

வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி
     வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட
     கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்
     எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதி
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.      1281  

 

திருநாங்கூரில் உள்ள திருத்தெற்றியம்பலத்தில் கண்ணன் கோயில் கொண்டுள்ளான். கச்சையணிந்த தனங்களைக் கொண்ட, ஆத்ம குணங்களைக் கொண்டவளான நப்பின்னை பிராட்டிக்காக வளைந்த கொம்புகளையுடையவனாய், மிகுந்த கொடிய கோபத்தையும் கொண்டதுமான, வலிமையான கால்களையும், கரிய நிறத்தையும் கொண்ட காளைகளை அடக்கி அவளை மணந்து கொண்டான். அத்திருத்தலமானது அழகு பொருந்திய மலர்கள் நிறைந்த நந்தவனங்களைக் கொண்டது.  அந்த நந்தவனங்கள் ஆகாயத்தைத் தழுவி அழகிய சந்திரனை சற்றே திகைத்து அசைய விடாமல் செய்கின்றன. ஒளி வீசும் சிறந்த மணிகள் கொண்ட மாடமாளிகைகள் நிறைந்த அத்திருத்தலத்தில் என் நீலமேக சியாமளனான கண்ணனை நீங்கள் காணலாம் என்று கூறுகிறார் ஆழ்வார்.

அழகிய சோலைகளால்‌ சூழப்பட்டதும்‌ சந்திரமண்டலத்தளவும்‌ ஓங்கியிருந்துள்ள மணிமாடங்கள்‌ மலிந்ததுமான திருநாங்கூரில்‌ திருத்தெற்றியம்பலத்தில் எழுந்தருளியிருக்கும்‌ பெருமான்‌ யாவனென்னில்‌; முன்பொரு காலத்தில் நப்பின்னைப்‌ பிராட்டியைத்‌ திருமணம் புரிவதற்காக அதற்கு இடையூறாயிருந்த கொழுத்த ரிஷபங்கள் ஏழையும்‌ அடக்கி, அவளை மணம் புரிந்த காளமேகத்‌ திருவுருவனான கண்ணபிரானே!

பகவான் செருக்கடக்க நீக்கமற நிறைந்துள்ளான். அவர் இல்லாத இடம் என்பதில்லை. இவ்வுலமே அவன் தான். ஆனால் மக்கள் இதனை நரகமாகக் காண்கிறார்கள். பலர் சுவர்க்கமாகக் காண்கிறார்கள். அனைத்தும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததாகும். அவரவர்களின் குணங்களுக்கேற்ப இந்த உலகம் காட்சி தருகின்றது. இத்தலத்து எம்பெருமானை தரிசனம் செய்தால் அவனே இவ்வுலகமாக இருக்கிறான் என்ற தெளிவு பிறக்கும் என்கிறார் ஆழ்வார்.

      

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை
     கதிர் முத்த வெண்ண கையாள் கருங் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப
     மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி
     ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.       1282

 

மலை போன்று உயர்ந்து திகழ்கின்ற வரிசை வரிசையாக ஒன்றோடொன்று சேர்ந்துள்ள மாடங்களையுடைய வீதிகளில், மதுரமான இனிய பேச்சினைக் கொண்ட பெண்களின் முகத்தில் உள்ள இரு விற்கள் போன்ற புருவங்கள் வளைந்து ஆடவர்களின் மனத்தை ஈர்க்கின்றன. இத்தகைய அழகிற் சிறந்த மாதர்கள் வாழப்பெற்ற பெருமைமிக்க ஊர் திருநாங்கூர் திருத்தெற்றியம்பலத்தில் எனது செந்தாமரைக் கண்ணன் குடி கொண்டுள்ளான். அங்கு மேகலை திகழும் அழகிய இடையையும், ஒளி பொருந்திய முத்துக்களைப் போன்ற வெளுத்த பற்களைக் கொண்ட பெரிய பிராட்டியினுடைய, கரிய விழிகளைக் கொண்ட நப்பின்னை ஆகியோரின் தனங்களில் விளங்குகின்ற அழகிய மணிகளை இழைத்த கண்டிகையும், ஆரமும் சேர்ந்து உராய்கின்றது. இத்தகைய அழகிய நப்பின்னை பிராட்டியின் மணாளனாக உள்ள பெருமானை இத்தலத்தில் காணலாம்.

ஆண்களை எளிதில்‌ வசப்படுத்தும்‌ வல்லமை வாய்ந்த பெண்கள்‌ மலிந்திருப்பதை வருணிப்பதும்‌, நகர்ச்சிறப்பை வருணித்தலாதலால்‌ அதனை வருணிக்கிறார்‌ பின்னடிகளில்‌. திருநாங்கூரின்‌ வீதிகள்‌தோறும்‌ மலைமலையான மாடங்கள்‌ வரிசை வரிசையாக இடைவிடாது ஒன்றோடொன்று சேர்ந்திருக்‌கின்றன. அப்படிப்பட்ட வீதிகளில்‌, மதுரமான பேச்சையுடைய பெண்கள்‌ தங்களுடைய புருவநெறிப்பினால்‌ ஆண் பிள்ளைகளின்‌ மனத்தைக்‌ கவர்ந்து கொள்ளுகின்றனராம்‌. இப்படிப்பட்ட ௮ழகிற்சிறந்த மாதர்‌ வாழப்பெற்ற திருநாங்கூரில்‌ திருத்தெற்றியம்பலத்‌து எம்பெருமான்‌ யாவனென்னில்‌, பெரிய பிராட்டியாரோடும்,‌ நப்பின்னைப்‌ பிராட்டியோடும்‌ நித்ய ஸம்ச்லேஷம்‌ பண்ணாநிற்‌கச்‌ செய்தேயும்‌ யெளவனம்‌ சிறிதும்‌ மாறாத நித்யயுவரவான பெருமான்‌ காண்‌மின்‌ என்பதாம்‌,

     

தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்
     அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன
     இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்
     மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.       1283

 

கொடியவனான இராவணன் மிகுந்த அகந்தையுடன் ‘இராமன் என்னும் சிறு மனிதன். உலகையெல்லாம் தானே ஆள்வதாக நினைத்துக் கர்வம் கொண்டுள்ளான். இதை அறிந்தும் நான் சகித்துக் கொண்டிருப்பேனா? அப்படி சகித்துக் கொண்டிருந்தால் நான் அரக்கர்களுக்குத் தலைவன் என்று சொல்லிக்கொள்ள முடியுமா?’ என்று வெகுண்டெழுந்து மலை போன்ற இருபது தோள்களையும் துண்டித்த இராகவன் எழுந்தருளியுள்ள இடம் திருநாங்கூர் திருத்தெற்றியம்பலம்.  அத்தலமானது மிரண்ட மான் போன்ற பார்வையையும், சிவந்த இதழ்களையும் கொண்ட பெண்கள் பச்சை நிறமுள்ள, அழகான கிளியைக் கையில் கொண்டு தேன் போல் இனிமையாகவும், மிருதுவாகவும் பேசக் கற்றுக் கொடுக்கும் இடமாகும் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.

 மானின் பார்வை போன்ற  அழகிய பார்வை உடையவும்  சிவந்த  அதரத்தையுமுடைய பெண்கள்  மரகதப்பச்சை போல்  அழகிய கிளியைக் கைமேல்  வைத்துக் கொண்டு  தேன் போல் இனிய மிருதுவானபேச்சைக் கற்பிக்கும்  திருநாங்கூரின்  திருத்தெற்றியம்பலத்திலிருக்கும்  சிவந்த கண்களை உடைய  எம்பெருமானை,  இராமபிரானை  அரக்கர் அரசன் போல் நினைத்து  எதிரிட்டு வருகிறான் என்று அவனைத் தண்டிக்காமல் பொறுத்திருந்தவனை  இவன் அரக்கர்  தலைவனாவனோ என்று எழுந்த ராவணனின் மலை போன்றற  இருபது தோள்களையும்  ஒரே சமயத்தில் அழித்த  ஒருவனைக் கண்டீர்களோ! என்கிறார்.

இராமனின் பராக்கிரமத்தைப்பற்றிப் பலமுறைறை சான்றோர்கள் இராவணனுக்கு எச்சரிக்கை செய்தார்கள். சீதையின் பதிவிரதைத் தனத்தைப் பற்றி எடுத்துக் கூறி அவளை இராமனிடம் சேர்த்துவிடுமாறு பலமுறை கூறினார்கள். ஆனால் இராவணன் இதனையெல்லாம் இலட்சியம் செய்யவில்லை. அதனால் ஶ்ரீராமன் போர்க்களத்தில் அவனைச் சந்தித்து அவனது மலை போன்ற தோள்களையும் அறுத்துத் தள்ளினான். அத்தகைய பராக்கிரமசாலியான இராமன் இத்தலத்தில் குடிகொண்டுள்ளான் என்பது இதன் கருத்தாகும்.

      

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்
     பொல்லாத குறள் உரு ஆய்ப் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு
     மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த
     குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.       1284

 

என் செந்தாமரைக் கண்ணன் யாரென்றால் ‘பூணூலும், மான் தோலும் தொங்க அழகிய வாமன வடிவம் தாங்கி மகாபலியின் மங்கலம் பொருந்திய வேதகோஷத்தையுடைய யாகப் பூமியில் எழுந்தருளி மகாபலியின் ஆணவத்தைப் போக்க தனக்குக் குறையுள்ளது என்பதைக் காட்டி மூன்றடி நிலத்தைக் கேட்ட மைந்தனாவான். அத்தகைய சர்வ வல்லமை படைத்தவன் கோயில் கொண்டுள்ள இடம் திருநாங்கூரில் உள்ள திருத்தெற்றியம்பலமாகும். இத்தலத்து இறைவனை வேண்டி அகந்தையினை அழிக்குமாறு தெரிவிக்கிறார் ஆழ்வார். மேலும் அத்திருத்தலம் பரிமள மணமுடைய பூக்களை அணிந்த கூந்தலையுடைய பெண்கள் நீராடும்போது அவர்களது தனங்களில் படிந்துள்ள குங்குமச் சேறானது நீருடன் சேர்ந்ததால் சிவப்பாக மாறி நீரானது வெள்ளை மணல் குன்றுகளில் பரவப்பெற்ற இடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

பரிமளமான சுகந்த நறுமணத்தையுடைய மலர்களைத் தன் தலையில் சூடியுள்ள கரிய நிறம் கொண்ட கூந்தலைக் கொண்டுள்ள நங்கையர்களின் தனங்கள் மீது படிந்துள்ள குங்குமச் சாறானது வழிந்தோடி தன்னை அளைந்ததனாலுண்டான வனப்பினால் சிவந்துள்ளது. பெருவெள்ளமானது சீறி வந்து வெளுத்துப் போன மணற்குன்றின் மேல் பரவப்பெற்ற நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால் மிகவும் விளங்குகின்ற புரிநூலும், மான் தோலும் கொண்ட அழகிய வாமன மூர்த்தியாகி மங்களம் பொருந்திய வேத கோஷங்கள் கொண்ட யாகப் பூமியில் எழுந்தருளினார் என்பது இதன் கருத்தாகும்.

 

சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு
     திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக்
     கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்
      ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.      1285  

 

என் செந்தாமரைக் கண்ணன், வராகமாய் அவதரித்தபோது அதன் தண்டைச் சிலம்புகளில் நடுவில் உள்ள சிறிய பரல்கள்போல், பெருமைமிக்க  பெரிய மேரு மலையானது அழகிய குளம்பிலே ஓசையெழுப்ப, மார்பில் உள்ள மகாலட்சுமி குலுங்க, பூமிதேவியை கொம்பினால் குத்தி எடுத்துக் கீழே விழாமல் அணைத்துப் பிடித்தவனாவான்.  அத்தகைய பெருமான் திருநாங்கூர் திருத்தெற்றியம்பலத்தில் அருள் புரிகிறான். அந்தணர்களால் சிறந்து விளங்குகின்ற நான்கு வேதங்களும், ஆறு வேதாந்தங்களும், ஏழு ஸ்வரங்களும், இதிகாச புராணங்களும், எட்டுத் திசைகளிலும் ஒலிக்கும் புனிதத்தலமாகும். பெரும் செல்வவளம் பொருந்திய தலமாகவும் இது திகழ்கின்றது. மேலும் உலகத்தின் இயக்கங்களை இயல்புக்கு மாறாக யாராவது செயல்பட நினைத்தால் பெருமான் அவர்களைத் தண்டித்துவிடுவார் என்பது இதன் கருத்தாகும்.

வேதங்களும்,‌ வேதாந்தங்களும்‌, இதிஹாஸ புராணங்களும்‌ எங்குப்‌ பார்த்தாலும்‌ பெரிய கோஷமாக அதிகரிக்கப்‌ பெற்றதும்‌ இதனையே பெருஞ்‌செல்வமாக உடையதுமான திருநாங்கூரில்‌ திருத்தெற்றியம்பலத்தில் உள்ள பெருமான்‌ யாவனென்னில்‌; வராஹமூர்த்தியாகிப்‌ பூமிப்பிராட்டியை உத்தரிப்‌பித்த பெருமான்‌ காண்மின்‌ என்பதாம்‌. ஒரு தண்டைச்‌ சிலம்பிலே மிகச்சிறிய பருக்காங்கல்லை இட்டு வைத்தால்‌ ௮து எப்படி கண கண வென்று ஓலிக்குமோ அப்படியே பெரிய மேருமலையானது வராஹநாயனாருடைய திருக்குளம்பில் கணகணத்ததென்‌றவிதனால்‌ மிகப்பெரிய மேருமலையும்‌ ஒரு குளம்பின்‌ ஏகதேசத்திலே ஒடுங்கும்படியாக வராஹகநாயனார்‌ அத்‌தனை பெரிய வடிவுகொண்டாரென்பது விளக்கப்பெறுகிறது.

      

ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி
     எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்
     முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து
     ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர்
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே      1286

 

என்னுடைய செந்தாமரைக் கண்ணன் யாரென்றால் ஏழு உலகங்களையும், பெரிதான மலைகளையும் விழுங்கி, எட்டுத் திசைகளிலும், மண்டலம் முழுதும் அண்டத்திலும் பரவி, கீழ் வெள்ளம் கிளம்பி பெரிய சமுத்திரம் பொங்கும்படி பிரளய பெருவெள்ளத்தை முன்னர் தனது திருவயிற்றில் அடக்கிய மூர்த்தியாவார். இவர் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்தில் குடி கொண்டுள்ளார்.  இத்தலமானது காலம் செல்லச் செல்லப் பெருகிவரும் செல்வவளம் உடையவராய், சிறந்த வேதங்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கின்ற, நாவண்மையுடன் ஓதும் அந்தணர்கள் வாழும் மிகவும் உயர்ந்த மணிமாடங்கள் நிறைந்ததாகும். பிரளயகாலம் வரும்வரை நம் முன்வினைகளை இவ்வுலகில் தீர்த்துக் கொள்ளலாம். இது நமக்கு அளிக்கப்பட்ட அரிய வாய்ப்பாகும்.  எனவே இத்தலத்து பெருமானிடம் மக்கள் அனைவரும் சரணடையுமாறு வேண்டுகிறார் ஆழ்வார்.  சிறந்த வேதங்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிற நாவையுடையவரான வைதிகர்கள் வாழப்பெற்றதும் மிகவும் உயர்ந்த மணிமாடங்கள் கொண்டதாகவும் நாங்கூர், திருத்தெற்றியம்பலம் விளங்கப் பெறுகிறது.

காலம் செல்லச்செல்ல வளர்ந்துவருகிற செல்வத்தையுடையராய் சிறந்த வேதங்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிற நாவையுடையவரான வைதிகர்கள் வாழப்பெற்றதும் மிகவும் உயர்ந்த மணிமாடங்கள் விளங்கப்பெற்றதுமான நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால்– ஸப்தத்வீபங்களும் பக்கத்துச் சிறுமலைகளையுடைய பெரிய மலைகளும் ஆகிய எவ்விடங்களையும் ஆக்கிரமித்து எட்டுத் திக்குக்களிலும் எல்லாப் பூமியிலும் அண்டத்திலும் பரவி மோழை கிளம்பி கடல் பெருகும்படியான பிரளயப் பெருவெள்ளத்தை முன்பொருகால் திருவயிற்றில் அடக்கிக்கொண்டஎமது ஸ்வாமியானவான் என்கிறார்.

நாள் செல்லச் செல்ல,‌ செல்வம்‌ குறைந்து போவதுண்டே பலர்க்கு. ௮ப்படியல்லாமல்‌ மேன்மேலும்‌ வளர்ந்து வரும்படியான செல்வத்தை உடையர்களாயும்‌ சதுர்வேதங்களையும்‌ தரித்துக்‌ கொண்டிருக்கிற நாவை உடையவர்களாயுமிருக்கிற அந்தணர்களால்‌ நிறைந்த திருநாங்கூரில்‌ திருத்தெற்றியம்பலத்தில் உள்ள எம்பெருமான்‌ பண்டு பிரளயப்‌ பெருங்கடல்‌ வெள்ளம் உலகமெங்கும்‌ பரவினபோது உலகத்தையெல்லாம்‌ திருவயிற்றின்‌ ஒரு மூலையிலே ஒடுக்கின ஆபத்பாந்தவானான பெருமான்‌ காண்மின்‌கள் என்கிறார்.

      

 சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்
     கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன
     பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி
     சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே.       1287

 

சிறந்து விளங்கும் மணிமாடங்களைக் கொண்ட நாங்கூர் திருத்தெற்றியம்பலத்தில் உள்ள செந்தாமரைக் கண்ணனைப் பற்றி, கூர்மிகுந்த வேல்படை கொண்டவரும், திருவாலி நாட்டின் தலைவரும், கொடி பறக்கும் தடாகங்களுமான திருக்குறையலூரின் மன்னரும், பசுமையான கீர்த்தியை உடையவருமான திருமங்கையாழ்வார் இயற்றிய இப்பத்துப் பாசுரங்களையும் பக்தியோடு பாட வல்லவர்கள் பூவுலகில் அரசர்களாய் வாழ்ந்து மேலுலகில் தேவர்களாகத் திகழ்வார் என்று ஆழ்வார் கூறுகிறார். இதன் எட்டாம் பாசுரத்தில் வராக மூர்த்தியின் திருவடிகளில் உள்ள சிலம்பு கிங்கினி போல் ஒலிக்கின்றது. மேருமலை சிறுபரல்களாகச் சிலம்பாக உள்ளது. அதன் ஒலி பெருமானின் திருமார்பில் உள்ள பிராட்டியை குலுங்க வைக்கிறது. திருவுரு குலுங்க வந்தவன் பிராட்டிக்குத் துணையாக மண்மடந்தையை இடந்தெடுத்து தம் கோட்டிடையே வைத்துக் கொண்டான் என்று அழகுற குறிப்பிடுவது ஆழ்வார் பெருமானின் மீது கொண்ட அன்பையும் பக்தியையும் தெரிவிக்கின்றது.

இதுவரை ஆழ்வாரால் பாடப்பெற்ற பாசுரங்களை அனைத்தும் நம்முடைய உண்மையான இலட்சியத்தை எட்டுவதற்காகப் பாடப்பெற்ற பாமாலையாகும். நமது உண்மையான இலட்சியம் என்பது பகவானின் அருளால் பிறவித் துன்பத்தை நீக்கிப் பேரானந்தப் பெருவாழ்வை அடைவதாகும். ஆனால் நாம் மற்றவர்களிடம் பணிந்து வாழும் வாழ்வையே பெரிதாகக் கொண்டு அவர்களுக்கு அடிபனிந்து வாழ்கிறோம். அவர்களிடமிருந்து பெரும் அற்ப பொருளுக்காகவும், அற்ப சுகத்திற்காகவும் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறோம். அதுவே முடிவில் துன்பத்தை நமக்குக் கொடுக்கும் என்ற உணர்வின்றி நாம் செயல்படுகிறோம். பகவான்தான் உண்மை என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு அவனடி தொழுதல் அவனை அடைவதற்கான முயற்சியாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...