ஞாயிறு, 14 டிசம்பர், 2025

30. திருவண்புருஷோத்தமம்


 திருமங்கையாழ்வார்                                                                        பெரிய திருமொழி

      

 கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.     1258

 

காணும்போதே அஞ்சி நடுங்க வைக்கும் பெரிய சமுத்திரத்தில் அணைகட்டி இலங்கையை அடைந்து, இராவணனது ஒளிமிக்க பத்துத் தலைகளை அம்பினால் அறுத்து, அரசாட்சியை அவன் தம்பி விபீஷணனுக்கு அளித்த பெருமான், கோயில் கொண்டிருக்குமிடம் திருநாங்கூர் திருவண் புருடோத்தமமாகும். இங்குச் சிவந்த வரிசையான பலா மரங்கள், செண்பகம், வாழை, மாமரங்கள், குருக்கத்திச் செடிகள், மணம் வீசும் பாக்கு மரங்களும், ஓங்கி வளர்ந்திருக்கும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

இட்ட தடையைக்‌ கரைந்து போகும்படி அலையெறியா நின்‌றுள்ள பெரிய கடலை அணை செய்‌து அரணுடைத்தான இலங்கைக்கு நான்‌ நிர்வாஹகனல்லேனோ” என்று அத்‌தாலே துர்மாநகரத்தைப் பண்ணியிருக்கிற ராவணனுடைய திக்விஜயம் பண்ணிச் சூடின முடியை உடைத்தான தலைபத்தையும்‌, அம்பினாலறுத்து ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும்‌ கேளாத படி வரபலத்தாலே பூண்கட்டியிருக்கிற தலைகளை ௮ம்பாலே அழியச்செய்து, அவனது ஐஸ்வர்யங்களை தம்பி விபீஷணனுக்கு அளித்தான் இராமபிரான். பலாக்களுடைய செவ்வியநிரை, செண்பகம்‌, குருக்கத்தி, தேமா, வாழைகள்‌ இவை சூழ்ந்திருக்குமாய்த்து புறச்சோலைகள்‌, உட்சோலைகளிருக்கும்படி, எப்போது மொக்கப்‌பாளை நாற்றத்தை, உடைத்தான திருநாங்கூரில் பெருமான் வாசம் செய்கிறான்.

      வாயுப்புத்திரன் இலங்கையை துவம்சம் செய்து போனபின் இராவணன் தன் சபைகூட்டி ஆலோசித்தான். அவனது அடிவருடிகள் அவனது செய்கையை ஆமோதித்தனர். ஆனால் விபீஷணனோ சீதையை இராமனிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினான். கோபம் கொண்ட மன்னன் அவனை விரட்டிவிட, இராமனிடம் வந்து தஞ்சம் பெற்றான். ஸ்ரீராமன் அப்போதே விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணிசெய்து, மின்னிலங்குபூண் விபீடணன் நம்பிக்கு, என்னிலங்கு நாமத்தளவு மரசென்றே’ என்று பெரியாழ்வாரும் கூறுகிறார்.

      

 பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக் காளியன் பணவு அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில்
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.      1259

 

மிருதுவான இளந்தளிர்களையும், அழகு மலர்களையும் கொண்ட கடம்ப மரத்தில் ஏறி, கிருஷ்ணன் யமுனை மடுவில் பாய்ந்து காளியனின் படங்களில் திடீரென்று வந்து குதித்து நடனமாடினான். அத்தகைய தேவாதிதேவன் குடிகொண்ட கோயில் முத்தீயினையும், நால் வேதங்களையும், பஞ்சமஹா யாகங்களையும், ஆறு வேதாகமங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் நிறைந்த திருநாங்கூர் புருடோத்தமமாகும் என்கிறார் ஆழ்வார்.

 தளிர்களும் பூக்களும்  திகழும் கடம்ப  மரத்தில் ஏறிக்  காளியன் என்னும் நாகத்தின்  படங்களாகிற அரங்கில்  திடீரென்று வந்து  சிக்கெனக் குதித்து,  அருமையான நடனம் செய்த  தேவாதி தேவன்  இருக்குமிடம்  முறைப்படி மூன்று வித  அக்னிகளையும்  ஆறு அங்கங்களோடு  நான்கு வேதங்களையும் ஓதி  ஐந்து வேள்விகளையும் செய்து  மற்றவர்களுக்கும் கற்பிக்கும்  அந்தணர்கள்  நிறைந்த திருநாங்கூரின்  வண்புருடோத்தமமே என்கிறார் ஆழ்வார்.

      யமுனை நதி மடுவில் காளியன் தன் விஷ நாக்கினால் பொய்கையை நஞ்சாக்கி நீரை வெம்மையாக்கினான். இது கண்ட கிருஷணன் கடம்ப மரத்திலேறி அவன் தலையில் சட்டென்று குதித்து கோர நர்த்தனமாடி அதன் ஆணவத்தை அடக்கி அதற்கு உயிர்ப்பிச்சை அளித்தான். காளிங்கன் கடம்ப மரத்தினை விஷமாக்கியதால் அது பட்டுபோய் காய்ந்திருந்தது. பெருமானின் திருவடித்தாமரை பட்ட மாத்திரத்தில் மரம் துளிர்த்தெழுந்து பூத்துக்குலுங்க ஆரம்பித்தது. ‘பூத்தநீள் கடம்பேறி’ என்று ஆண்டாளும் பாடியுள்ளாள். அத்தகைய பெருமான் நம் சம்சாரமாகிய கொடிய அரவத்தையும் தண்டிக்க வண்புருடோத்தமத்தில் குடிகொண்டுள்ளான்.

      

அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு அது எல்லாம்
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டல் ஆர் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடம் ஆட
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே.      1260

 

யாதவர்கள் இந்திரனுக்காகப் படையல் போடச் சமைத்த உணவுகளைக் கோபியர்களோடு உண்டு, மாடுகளை மேய்த்து, அவற்றிற்கு துன்பம் வராமல் காத்த கோபாலன் வாழுமிடம் நாங்கூரில் உள்ள வண்புருடோத்தமமாகும். இத்தலம் மேகங்கள் முழங்க, அதைக் கேட்டு மயில்கள் கூட்டமாகக் குளிர்ச்சியான சோலைகளில் நாட்டியமாட, அதற்குத் தகுந்தபடி வண்டுகள் இன்னிசை பாடும் வளமான பூமியாகத் திகழ்கின்றது என்று கூறுகிறார் ஆழ்வார்.

பசுக்களுக்கும் முகம் தோற்ற நின்று வர்த்திக்கிற இவனுக்கு மேல்பட ஒரு தேவதை உண்டோவென்று கண்டது. இடையரானவர்கள்‌, தேவஜாதிக்கெல்லாம்‌ நியாமகனாய்ப்‌ போந்தவனான இந்திரனுக்கென்று சமைத்த சோற்றையெல்லாம்‌ தான் அமுது செய்து, கோநிரை மேய்த்து அரந்தரம் அவற்றினுடைய ரக்ஷணமும்‌ தனக்கே பரமாகையாலே ௮வற்றை மேய்த்து அவற்றினுடைய ஆபத்தைப்‌ போக்கி காத்தருள்பவன்‌, இன்னமும் இப்படி ரக்ஷிக்கைக்குப்‌ பாங்கான தேசமென்று அவனுகந்து நித்யவாசம் பண்ணுகிற தேசம் வண்புருஷோத்தமமாகும்.

      திருவாய்ப்பாடி இடையர்கள் கிருஷ்ணனின் லீலைகளைக் கண்டு இவனே  நம்மைக் காப்பவன் என்று உணர்ந்தனர். இந்திரனுக்கு படைக்கபட்ட உணவினை உண்டான். நமக்கு  உதவுபவை இந்த ஆநிரைகளும், இந்தக் கோவர்த்தன மலையுமாகும். எனவே இதனைத் தான் உண்டு ஆநிரைகளுக்கு உணவாக வழங்கினார். இதைக்கண்ட  இந்திரன் சினமுற்று கொடிய மழை பெய்வித்து யாதவர்களைத் துன்புறுத்தினான். அவர்கள் கோபாலனிடம் முறையிட, கோவர்த்தன மலையைத் ஒற்றை விரலால் தாங்கிப் பிடித்து மக்களையும், கோவினங்களையும் காத்தருளினான். அத்தகைய பெருமான் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

      

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.       1261

 

வலிமையான பருத்த துதிக்கையை உடைய குவலாயபீடமென்னும் யானையின் தந்தங்களைப் பிடுங்கி பாகனோடு அதையும் கொன்று, உள்ளே நுழைந்து மல்லர்களை ஒரசேர அழித்து, பின் கம்சனையும் மடியச் செய்த கண்ணபிரான் வீற்றிருக்கும் இடம் நாங்கூர் வண்புருஷோத்தமமாகும்.  இங்குக் கரும்புத் தோட்டங்களில் இடையே நெற்பயிர்கள் விளையப்பெற்ற கழனிகளில் நிறைந்துள்ள கிணறுகளும், மலர் வனங்களும் மிகுந்திருக்கும் என்று கூறுகிறார் ஆழ்வார். 

 பருத்த துதிக்கையையுடைய  குவலயாபீடம் என்ற யானையின்  தந்தங்களைப் பறித்து  அதன் பாகனைக்  கொன்று அதன்பின்  உள்ளே நுழைந்து  மல்லர்களை அழித்து,   பின் கஞ்சனை  உதைத்தவன்  இருக்கும் கோயில்  கரும்புச் சோலையின் நடுவே ஓங்கி  நெற்பயிர்கள்  விளையும்  வயல்களில்  நிறைந்திருக்கும் கிணறுகளைச்   சுற்றிலும்  ஓங்கி வளர்ந்துள்ள சோலைகளையுடைய  திருநாங்கூரின்  வண்புருடோத்தமமே என்கிறார் ஆழ்வார்.

      கபட எண்ணம் கொண்ட கம்சன்வஞ்சகமாகக் கண்ணனை அரண்மனைக்கு அழைத்துவர, அவனால் ஏவி விடப்பட்ட மதயானை சீறிவ, அதனைப் பாகனுடன் சேர்த்துக் கொன்றான். சாணூரன், முஷ்டிகன் ஆகிய மல்லர்களை வதம் செய்தான். பின் கம்சனது மஞ்சத்தின் மேலேறி அவனது கிரீடத்தை உடைத்து, அவனது மார்பில் அடித்துக் கொன்றான். அதர்மம் பல வழிகளில் வந்து தாக்கும்போது அதனை எம்பெருமான் தகர்த்தெறிந்தார்.அது போன்று உங்கள் துயரங்களை அவனிடம் சொல்லி முறையிடுங்கள். எல்லாத் துன்பங்களையும் அவர் தகர்த்தெறிவார் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.

 

      

சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ் தரு நாங்கூர் வண்புருடோத்தமமே.       1262

 

அசுரனால் ஆக்கிரமிக்கப்பட்ட சகடமானது வீழ்ந்து அழியும்படி திருவடிகளைத் தூக்கியவனும், பாணாசுரனோடு நடந்த யுத்தத்தில் சிவபெருமானோடு, அவரது படைகளும், சுற்றத்தாரும் தோற்று ஓடியபோதும் அசுரனின் ஆயிரம் தோள்களையும் அறுத்தொழித்த வாசுதேவன் அருள் புரியும் இடம் நாங்கூர் வண்புருடோத்தமமாகும்.  இத்தலம் மாட மாளிகைகளில் உள்ள கொடிமரங்கள் பரந்த ஆகாயத்தைத் தொடும்படி இருப்பதால் ஆதவனின் கதிர்களை மறைத்து நிழலைத் தரும் தலமாக உள்ளது என்று கூறுகிறார் ஆழ்வார்.

      அசுரனால் ஆவேசிக்கப்பட்ட சகடமானது விழுந்தொழியும்படி திருவடிகளைத் தூக்கினவனாயும், ருத்ரன் தனது சேனைகளோடும் சுற்றத்தாரோடும் தோற்று ஓடிப்போகும் படியான வளவில் பாணாசுரனை ஆயிரம் தோள்களையும் அறுத்தொழித்தவனாயுமுள்ள பெருமான் உறை கோயில், அசையா நின்ற பெரிய த்வஜங்கள் பரந்த ஆகாசத்தைத் தழுவி உயரக் கிளம்பி சூரியனுடைய பிரதாபத்தை மறையச் செய்யப்பெற்ற மாடங்களினாலும் மாளிகைகளினாலும் சூழப்பட்ட திருநாங்கூரில் வண்புருடோத்தமம் ஆகும்.

      நந்தகோபர் திருமாளிகையில் சிறு கண்ணனைக் கிடத்தி யமுனையில் நீராடச் சென்றாள் யசோதை. கம்சனால் ஏவப்பட்ட அசுரன் சகடம் வடிவில் வந்து கண்ணனைத் தாக்கினான். தனது சிறிய திருவடிகளால் சகடத்தை எட்டி உதைக்க அது முறிந்து விழுந்தது. சிவபிரானின் நடனத்தைப் பாணாசுரன் நன்கு ரசித்தான். அதனால் மகிழ்ந்த ருத்ரன் அவனுக்கு ஆயிரம் கைகளையும், நெருப்பு மதிகளையும், அளவிறந்த வலிமைகளையும், மிகுந்த செல்வங்களையும் தன் பரிவாரங்களோடு அனுப்பி வைத்தான். அகந்தை கொண்ட அரசன் ஒரு நேரத்தில் சிவனைத் தாக்க, அதைக் கண்ட புருஷோத்தமன் அசுரனை எதிர்த்துத் தனது திருவாழியால் அவனது ஆயிரம் தோள்களை அறுத்துக் கொன்றான். அத்தகையவன் உறையும் கோயில் வண்புருஷோத்தமமாகும்.

      

அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர் வண்புருடோத்தம.      1263

 

மகாபலியிடம் மூன்றடி நிலத்தைத் தாரை வாங்கி திருவிக்ரமானய் ஓங்கி வளர்ந்து, விண்ணை அளந்து தன் திருவடிகளை உயர்த்த, அது சத்ய லோகத்தில் பட்டது.  பிரம்மன் பாத முனைகளை  மலர்கொண்டு அர்ச்சித்து பூஜை செய்தார். அதனால் கட்டை விரலிலிருந்து கங்கை பெருகும்படி காலை நீட்டிய பகவான் வீற்றிருக்கும் இடம் நாங்கூரில் உள்ள திருவண் புருடோத்தமமாகும்.  இத்தலத்தில் வந்து பெருமானின் திருவடிகளைத் தரிசித்து  நல்வழி அடையுங்கள் என்று கூறுகிறார். இங்குள்ள வயல்களில் உள்ள கோங்கு மரத்தின் மொட்டுக்கள் மங்கையரின் கண் போன்று இருக்கும். சிவந்த ஆம்பல் மலர்கள் பெண்களின் வாயை நினைவு படுத்தும். பெரிய தாமரை மங்கையரின் முகம்போல் காட்சி அளிக்கும் என்று ஆழ்வார் கூறுகிறார். அற்ப பொருட்களை நினையாமல் பெருமானிடம் பக்தியும், வைராக்கியமும் கொண்டு அவனை அடைய வேண்டும். அப்போது நம்முள் இருக்கும் ஆன்மா ஒளிரும். நாம் பகவானின் ஒரு கூறாக உள்ளோம் என்ற நினைவினை எப்போதும் மனதில் கொள்ள  வேண்டும்.

மூவடி நிலத்துக்காக  அழகிய கையில்  தானநீர் ஏற்று கொண்டும்,  பிரம்மா பூக்களை  ஸமர்ப்பித்து  துதித்து வணங்கிக் கங்கை நதி  பெருகும் படியாகக் காலை உயர நீட்டின  கண்ணன் வந்து  இருக்கும் கோயில்  கோங்கு மரத்தின்  அரும்புகள்  பெண்களின் கண்கள்  போன்றிருக்க,  குமுதங்கள் பெண்களின்  வாய் போன்றிருக்க,  சிறந்த தாமரை மலர்கள்  மங்கைமார் முகம் போன்று  பிரகாசிக்கும் திருநாங்கூரில்  வண்புருடோத்தமமே ஆகும்.

     

உளைய ஒண் திறல் பொன்பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் * கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.   1264

 

பிரசித்தமான பெரும் பலம் கொண்ட இரணியனைக் நோவுபடும்படிக் கிழித்து அவனது குருதியை அளைந்த உக்கிரநரசிம்மனும், குதிரை வடிவில் வந்த கேசிகாசுரனை அழித்த கேசவனும் வாழுமிடம் நாங்கூர் வண்புருடோத்தமம் ஆகும்.  இத்தலம் இளம் மங்கையர் நாட்டியமாடும்போது இரு கால்களில் அணிந்துள்ள தண்டைச் சிலம்பின் ஒலியோடு, அழகிய சிறுமிகள் பந்தடிக்கும்போது ஏற்படும் கைவளை ஓசையும் நிறைந்தது என்று கூறுகிறார் ஆழ்வார்.

திருநாங்கூரில் சிறுமிகள் நர்த்தனமாடுவார், சிலர் பந்தடிப்பர். அன்னவர்களது காற் சிலம்புகளின் ஒலியும் கை வளைகளின் ஒலியுமே ஓங்கி மற்ற நகர கோஷங்களைக் கீழ்ப்படுத்தி நிற்குமென்று நகர்ச்சிறப்பு சொல்லிற்றாயிற்று, பின்னடிகளில்.

      அச்சம் என்பது சிறிதும் கண்டறியாத பெரும் மிடுக்கானவன் இரணியன். அத்தகையவனை நெஞ்சு இரண்டாகப் பிளக்குமாறு இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தினார் நரசிம்மர். அது போன்று தன்னைக் கொல்ல வந்த கேசிகன் என்னும் அசுரனையும் தொலைத்தான். அத்தகையவன் வாழும் ஊரில் சிறுமிகளின் நர்த்தன ஓசையும், கைவளை ஓசையும் மற்ற நகர ஓசையைக் கீழ்த்தள்ளி நிற்கும் என்று அந்த நகரத்தின் சிறப்பினை கூறுகிறார்.

      

வாளை ஆர் தடங் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே.       1265

 

வாளை மீன் போன்று அழகான விசாலமான கண்களையுடைய பார்வதியைத் தன் இடப்பக்கம் கொண்டுள்ள சிவபெருமானின் வலிய சாபம் நீங்குமாறு பிரம்மனின் மூளை இருந்த தலை ஓட்டிலே சாபம் தீர்த்த என் மேகவண்ணன் வாழும் இடம் நாங்கூர் வண்புருடோத்தமமாகும்.  இங்கு ஓங்கி வளர்ந்த பாக்கு மரங்களின் பாளைகளையும், அதனிடையே உயர்ந்து காட்சி அளிக்கும்.  தென்னையின் பெரிய காய்கள் தடாகத்தில் விழ, அங்குள்ள வாளை மீன்கள் அஞ்சி வேறு இடத்திற்கு ஓடும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

பாக்குச் சோலைகளின் நடுவே தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன; அவற்றினின்று பெருத்த காய்கள் இற்றுக் குளங்களிலே விழுகின்றன;  அவற்றின் கடுமையான ஓசையைக் கேட்டவாறே மீன்கள் ‘தங்களை இரையாகக் கொள்வதற்கு ஏதோவொன்று வந்து குதித்துவிட்டது’ என்று பிரமித்து வேறிடந் தேடித் துள்ளித் தாவுகின்றனவாம். 

      பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒரு தலையினைக் கிள்ளி எடுத்ததால் சிவனின் விரலில் தலை ஒட்டிக்கொண்டது. இந்தச் சாபம் தீரக் கபாலத்தில் அது நிரம்பும் வரை பிச்சை எடுக்க வேண்டும் என்பதால், பல தலங்களில் பிச்சையெடுத்துச் சாபம் தீரவில்லை. பின் பதரிகாச்ரமம் சென்று நாராயண மூர்த்தியை வணங்கியதால் சிவனுக்கு சாப விமோசனம் கிட்டியது. இத்தகைய பெருமான் நமது பாவங்களையும் தீர்த்து வைப்பான் அதனால் வண்புருஷோத்தமனை சரணடைந்து முக்தியடைய வேண்டும் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

      

 இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான் முகனை தன் எழில் ஆரும்
உந்தி மா மலர் மீமிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர் வண்புருடோத்தம.       1266

 

சந்திரனை சிரசில் தரித்த சடையுடைய சிவபெருமான், பிரம்மன், விஷ்ணு மூவரும் ஒருவர் என்று ஆழ்வார் கூறுகிறார். இதில் மகாவிஷ்ணு அனைவருக்கும் மூலம் என்று கூறுகிறார். இத்தகைய சிறப்புமிக்க பெருமான் வாழுமிடம் திருநாங்கூர் வண்புருடோத்தமமாகும். இத்தலத்தில் மந்தியானது வாழை மரத்தில் அமர்ந்து, செழுமையான வாழைப் பழத்தைத் தின்று தன் குட்டியை அணைத்தபடி மாமரக் கிளைக்குத் தாவி அங்கேயே வாசம் செய்யும் என்கிறார் ஆழ்வார்.

சந்திரனை  சடைமுடியில் தரித்த  சிவனை  படைத்த  நான்முகனை  தன் அழகு மிக  நாபிக் கமலத்தில்  படைத்த எம்பெருமான்  மகிழ்ந்து இனிது   இருக்கும் கோயில்,   பெண் குரங்குகள்  வாழையின்  கனிந்த பழங்களைத் தின்று   தன் குட்டிகளை  அணைத்துக் கொண்டு  அங்கிருந்து போய்  மாமரக் கிளைகளின் மேல்  உறங்கும் திருநாங்கூரில்  வண்புருடோத்தமமே என்கிறார் ஆழ்வார்.

      இவ்வுலக இயக்கம் நன்கு நடைபெற ஆக்கல், காத்தல், அழித்தல் என்று முத்தொழில்கள் தேவையுள்ளன. உயிர்களின் நலன் கருதி இத்தொழில்கள் நடைபெறுகின்றன. உயிர்கள் இப்பூமியில் பிறந்து அதன் முன்வினைகளைக் களைவதற்காக மூன்று தொழில்கள் தேவைப்படுகின்றது. எனவே ஒரே பரம்பொருள் சிவனாகவும், பிரம்மனாகவும், திருமாலாகவும் தோற்றம் கொண்டு தமது தொழில்களை நடத்துகிறார். எனவே வேறுபாடுகளைக் களைந்து காலவிரயம் மேற்கொள்ளாமல் மூலமூர்த்தியாக விளங்கும் பெருமானை நாம் சரணடைவோம் என்பது இதன் கருத்தாகும்.

      

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப் பத்தும் வல்லார் உலகில்
எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே.      1267

 

மண்ணுலகில் மிகுந்த புகழையுடைய வைதிகர்கள் வசிக்கின்ற திருநாங்கூர் வண்புருடோத்தமத்தில் உறையும் பகவானின் திருவடிக் கமலங்களில் அடைந்து உய்ந்துவரும், திருவாலி நாட்டிற்கு தலைவரும், கிருபையை வர்ஷிக்கும் மேகமாயுள்ளவருமான திருமங்கையாழ்வார் பாடிய பாக்களில் இந்த பத்து பாசுரங்களையும் பக்தியோடு பாடக்கூடியவர்கள் உலகில் எண்ணற்ற மஹாநந்தங்களையும் பெற்றபின் தேவர்களோடு கூடி வாழ்வார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள வண்புருடோத்தமம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியினுடைய திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும் திருவாலி நாட்டுக்குத் தலைவரும் கிருபையை வர்ஷிக்கும் மேகமாயுள்ளவருமான திருமங்கையாழ்வார் கானத்திலே பொருந்தும்படி பாடின பாசுரமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள் இவ்வுலகின்கண் அளவற்ற மஹாநந்தங்களை அநுபவித்து பிறகு நித்யசூரிகளோடும் கூட்டி வாழப்பெறுவர்.

      இப்பாசுரங்களில் பகவானின் பெருமைகளைக் கூறி, இரணியனை அழித்தது, உலகை அளந்தது, கேசிகாசுரனைக் கொன்றது, பூதனையை முடித்தது, சிவனின் பிரம்ம கபாலத்தை விலக்கியது போன்ற பகவானின் பெருமைகளைக் கூறினார்.  இதனை நம் மனதில் பதிய வைத்துக் கொண்டாலே பெரும் தவத்திற்கு ஈடாகும்.  அத்தகைய தவ வலிமையை நாமும் பெறவேண்டும் என்பதே ஆழ்வாரின் அவா.  இதனை ஓதவல்லவர்கள் இணையில்லா இன்பம் பெற்று தேவர்களோடு இணைவார்கள் என்ற பொருளில் அமைந்துள்ளது.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...