திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம்
நன்று இருந்து யோக நீதி
நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?
814
முறையாக யோகவித்தைக் கற்று, தியான
யோகத்தாலே உன்னை அடைய நினைப்பவர் மனத்திலே குடி கொண்டு கொடிய பாவங்களைத்
தீர்த்தருளும் தேவாதி தேவா! மலை போல் உயர்ந்த மாளிகைகளையுடைய திருப்பாடகத்திலும், திரு
ஊரகத்திலும் இருந்தும் நின்றும், திருவெஃகாவில் சயனித்தும் அருள் செய்கிறாய் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
இப்பாசுரத்தில் பகவான் நின்றான், அமர்ந்தான், கிடந்தான் ஆகிய
திருக்கோலங்களில் தன் மனத்தில் உள்ளதை எடுத்துக் கூறுகிறார். ஞானநிலை ஏற்படாதவரை
எனக்கு வெளியிலிருந்து அருள் புரிந்தான். ஞானம் பெற்ற பின் என்னால்
வெளிப்புறத்தில் பகவானைப் பார்க்க முடியவில்லை. இடைவிடாமல் இறைவனைப் பற்றி சிந்தனை
செய்வதால் மனதிலேயே தரிசிக்கும் உயர்நிலையை ஆழ்வார் பெற்று விட்டார். எனவே அவர்கள் திருக்கோயில்களுக்குச் சென்று
பெருமானை தரிசிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.
பாமர மக்களுக்கு இது பொருந்தாமல் போகின்றது.
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது
எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே. 815
நான் பிறவாதிருந்த முற்காலத்தில்
எம்பிரான் திருவூரகத்தில் நின்றும், திருப்பாடகத்தில் வீற்றிருந்தும், திருவெஃகாவில்
பள்ளிகொண்டும் அருள்
புரிந்தான். அத்தகைய நாட்களில் எனக்கு ஞானப்பிறவி ஏற்படவில்லை. அன்று முதல்
எம்பெருமான் நிற்பதும்,
வீற்றிருப்பதும்,
சயனித்திருப்பதுமான செயல்களை என் உள்ளத்தில் நடத்திக் கொண்டிருக்கிறான்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
நாம் ஒருவனிடம் கொடுத்த
செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு பல விதங்களில் முயற்சிக்கிறோம். அவன்
இருப்பிடத்திற்குச் சென்றும், நின்றும், அமர்ந்தும் பின் அங்கேயே படுத்துக் கிடந்தும் அதனைப் பெற
முயற்சிக்கிறோம். அது போன்று எம்பெருமான் உடையவன் உடைமையை இழக்க மாட்டாமை போல, அஸ்மாதிகள்
செலுத்த வேண்டிய கடனை பெறுவதற்காக அந்தந்த திவ்ய தேசங்களில் நின்றும், அமர்ந்தும், கிடந்தும் இருக்கிறான்
என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள்
நச்சிப் பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே 1541
கல்லினால் கட்டப்பட்ட
திருமதில்களால் சூழப்பட்ட காஞ்சியில் வசிக்க
விரும்பிய, உலகமெல்லாம்
துதிக்குமாறு திருப்பாடகமென்னும் திருப்பதியில் உறையும் பகவான், இலங்கை அரசனான
இராவணனின் பலமான உடம்பை வில் வளைத்து அம்பெய்து அழித்த தென்பெருமானே!
விபீஷணனுக்கு நன்மைகள் புரிந்த எம்பிரான்
திருநாமத்தைச் சொன்னால் அது ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதாகும் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
காஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர்
சந்நிதியை ‘பாடும் அகம்’ என்று கூறுவர். துரியோதனன் கண்ணபிரானை வஞ்சகமாகக் கொல்ல
குழி அமைத்து அதன்மேல் பட்டுத் துணி போட்டு அமர்த்தினான். பெருமான் விஸ்வரூபமெடுத்து
மல்லர்களையெல்லாம் அழித்தார். அத்திருக்கோலத்தில் இத்தலத்தில் சேவை
சாதிக்கின்றார். பெரியாழ்வாரும் ‘அரவுநீள் கொடியோன் அவையுளாசனத்தை அஞ்சிடாதே இட, அதற்கு
பெரியமாமேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்’ என்று
பாடியுள்ளார். அத்தகைய பெருமான் திருநறையூரிலும் சேவை சாதிக்கின்றார்.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
உற்று வணங்கித் தொழுமின் உலகு
ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு 2275
பிரளய காலத்தில் உலகத்தை
முற்றிலுமாக உண்டு விழுங்கி உமிழ்ந்த மேக வண்ணனை, பகைவனான இரண்யாசுரனின் மார்பைக்
கிழித்தவனை, அழகிய
திருப்பாடகம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பாண்டவதூதனான ஸ்ரீ கிருஷ்ணனை, என் நெஞ்சம்
போற்றித் துதிக்கும். நீங்கள் அவனை
பாதாதிகேசமாக தரிசித்து வணங்குங்கள் என்று ஆழவார் கூறுகிறார்.
மிகவும் தாழ்ந்தவரான நாம்
மிகுந்த உயர்ந்தவரான பெருமானை அடைவது சாத்தியமா என்று நமது தகுதியின்மையை எண்ணிப்
பாராமல், திருவாய்ப்பாடியில்
வெண்ணெயை ஆவலுடன் உண்டது போல் நம்மை அவனுடன் சேர்த்துக் கொள்வதில் ஆவலாக உள்ளான்.
இதனை நன்குணர்ந்து அவனது திருவடியில் விழுந்து வணங்கிக் கைகூப்பித் தொழுங்கள். நம்
விரோதிகளை அழிப்பதனால் அவன் நமக்கு இனியவனாகிறான். குழந்தை தாயிடமிருந்து பால்
குடிக்கும்போது அவள் நிறம் மாறுவது போன்று உலகத்தை உண்டு விழுங்கியபோது அவன் மேக
வண்ண நிறமாக மாறினான் என்றவாறு வியாக்யானம் அமைந்துள்ளது.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவு அணை மேல் ஐவர்க்கு
ஆய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் *உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே! வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான். 2309
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக