வியாழன், 18 டிசம்பர், 2025

28. திருக்காழிச்சீராம விண்ணகரம்


 

திருமங்கையாழ்வார்                                                                        பெரிய திருமொழி

      

ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் 
ஒடுக்கி                                                                                                                   ஒன்றும்
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.       1178

 

வாமனரூபியாகி மகாபலியிடம் சென்று மூன்றடி மண் கேட்டு, பூமியையும் விண்ணையும் ஈரடியால் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு, இயலாத மகாபலியை காலால் அழுத்திப் பாதாளத்தில் சிறை வைத்துக் கட்டிய பெருமானின் திருவடியை சரண் அடையுங்கள். அரிய வேதங்களின் திரள்கள் நான்கும்,  ஐந்து யாகங்களும், வியாகரணம் முதலான ஆறு அங்கங்களும், ஏழு ஸ்வரங்களும், வீதி நிறைய உத்ஸவச்  சிறப்புகளையுடைய காழிச் சீராமவிண்ணகரத்தை சென்றடைவீர்களாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

இப்பாட்டில் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு என்னும் எண்கள் அழகாக அமைந்திருத்தல் நோக்கத்தக்கது.  இத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற பெருமான் (மூல மூர்த்தி) உலகளந்த பெருமாளாதலால் ஒரு குறளாயென்று தொடங்குகிறார்.

      ஒப்பாற்ற வாமன அவதாரமெடுத்து இந்தப் பரந்த பூமியில் மூன்றடி நிலத்தை மாத்திரம் யாசித்து உலகு அனைத்தையும் இரண்டு அடிகளால் அளந்து மூன்றாமடிக்கு நிலம் தருக என  மகாபலியைக் கேட்க, அவன் தர இயலாத நிலையில் அவன் தலையை மண்ணில் அழுந்துமாறு வைத்த பெருமை பொருந்திய பெருமானின் பாதங்களை அணைய விரும்பும் அன்பர்களே! அவனுக்குத் தக்க கீர்த்தியுடைய அரிய வேதங்கள் நான்கும், வேள்வி ஐந்தும், வேதாங்கங்கள் ஆறும், ஏழு ஸ்வரங்களும் வீதி நிறைந்த உற்சவங்களும் திருவிழாக்களும் சிறப்பு மிக்க  காழியென்னும் க்ஷேத்திரத்தில் நடைபெறும். அத்தகைய சீராம விண்ணகரை நீங்கள் சென்று சேருங்கள் என்கிறார் ஆழ்வார்.

      

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத் தொல் குருகு சினை என்னச் சூழ்ந்து இயங்க                                                                                        எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.     1179

 

ஆயுள் தனக்கே அதிகமென நான்முகன் ஆணவம் கொண்டிருக்க, வேதத்தை அனுட்டிக்கும் நற்குணங்களுடைய உரோமச முனிவரின் விருப்பப்படி ஒரு ரோமம் உதிரும்போது பிரம்மனின் ஒரு தலை உதிரும் என்று வரமளித்து, நான்முகனின் செருக்கை அடக்கிய சிவனின் கையில் ஒட்டிய மாமிசங்களாலான பிரம்ம கபாலத்தை கையிலிருந்து விழச்செய்த பரந்தாமனின் அழகு மிக்க திருவடிகளை அணுக நினைப்பவர்களே, உழுகின்ற காளைகள் வயல்களில் ஓடுவதால், பிரசவிக்கும் நிலையில் உள்ள சங்குகள் வளைகளில் ஈன்ற முத்துக்களை  கொக்குகள் தங்களது முட்டைகள் என்று மயங்கி அந்த முத்துக்களைச் சுற்றிவர,  எல்லா இடங்களிலும் தேன் சிந்தும் தாமரை மலரில் மீன்கள் துள்ளி விளையாடும் வயல்களைக் கொண்ட காழிச் சீராம விண்ணகரத்தை அடையுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஊழிக்காலம் முடியும் காலம் பிரம்மா உறங்கப் போகும் காலமாகும். அந்த விதிப்படி பிரம்மா உறங்குவதற்குச் சென்றார்.  அப்போது எல்லா உயிர்களும் ஊழியின் பெருவலியால் மறைந்து போயின. மீண்டும் பகவான் உலகங்களை உண்டாக்கி சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவையும் படைத்தார். உடனே மீண்டும் இயக்கம் தொடங்கியது. ஊழிக்காலங்களில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது. இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு, இவையனைத்தும் தன்னால் நடைபெறுகிறது என்று இறுமாப்பு கொண்டார். இதனைக் கண்ட சிவபெருமான் பிரம்மனின் தலையைக் கிள்ளியெடுக்க அது அவரது கைகளில் ஒட்டிக் கொண்டது. அந்தப் கபாலத்தை கீழே விழச்செய்தது திருமால் என்ற கருத்தினை இங்குத் தருகிறார் ஆழ்வார்.

      

வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய் அணைந்து களை களையாது ஏறும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.     1180

 

கூரான முனையுடைய கோரைப் பற்களைக் கொண்ட வராகமாகி பூமியை மீட்டுக் கொண்டு வந்தவன், வாணாசுரனுடைய வலிமையான கரங்களைத் திருவாழியால் அறுத்த எம்பெருமானின் திருப்பாதங்களை அடைய விரும்பும் மனிதர்களே! வயலில் களை எடுக்கும் பெண்கள் இறங்கி நெய்தல் மலரையும்,  குவளை மலரையும் தங்கள் விழிகள் என்றும், சிவந்த ஆம்பல் மலரைத் தங்கள் வாயாகவும் கருதி களை பறிக்காமல் கரையேறும் இடமான காழிச் சீராம விண்ணகரத்தைச் சென்றடையுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

கூர்மையான முனையும் கோரைப் பற்களையும் உடைய ஒப்பற்ற வராகமாகப் பூமி முழுவதையும் பிளந்து எடுத்துக்கொண்டுவந்து சாதனை செய்தவனும் வாணாசுரனின் திடமான தோள்களைக் கூர்மையான சக்கரத்தால் துணித்தவனுமானவனின் பாதங்களைப் பற்ற நினைக்கும் அன்பர்களே! பள்ளஸ்த்ரீகள் நெய்தல் மலரையும் கருத்த குவளை மலரையும் தங்களுடைய கண்களென்றும் சிவந்த ஆம்பல் மலரை தங்களுடைய வாயாகவும் பிரமித்து வயல்களில் களை பறிக்காமலே கரை ஏறும் காழியிலிருக்கும் சீராம விண்ணகரை நீங்கள் சென்று சேருங்கள் என்கிறார் ஆழ்வார்.

      இங்கு வாழும் களை பறிக்கும் பெண்களும் அழகு பொருந்தி சிறந்துள்ளார்கள். கடைசிமார்களின் அழகே இவ்விதம் இருந்தால் குலப் பெண்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று ஆழ்வார் பெண்களின் அழகினை வர்ணிப்பது இவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கும். ‘ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி’ என்று மற்றொரு பாசுரத்தில் மாதர்களின் அழகினை வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆணவத்தை வேரறுக்கும் ஆதிமுதல்வனை விண்ணகரம் சென்று சேவிப்பீர் என்ற பொருளில் அமைந்துள்ளது.

      

பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே    1181

 

முற்காலத்தில் பஞ்சு போன்று மிக மென்மையான பாதங்களைக் கொண்ட நப்பின்னைக்காகப் பலமுள்ள காளைகள் ஏழினை அடக்கியவனும், நகங்களை வேலாகக் கொண்டு இரணியனைப் பிளந்தவனுமாகிய பெருமானின் திருப்பாதங்களைச் சேர விரும்பும் மக்களே! மாடங்களில் பதிக்கப்பெற்ற நீல மணிகள் மாலையிலேயே இருட்டை அதிகமாக்க அவற்றின் அருகே பதிக்கப்பட்ட முத்துக்கள் குளிர்ந்த நிலவினைப் போல ஒளி தர, இடையிடையே பதிக்கப் பெற்ற பவளங்கள் உதயகால சூரியனுடைய சிவந்த வெயில் போலப் பிரகாசிக்க, அழகு பொருந்திய சீராம விண்ணகரத்தைச் சென்றடைவீராக! என்று கூறுகிறார் ஆழ்வார்.

      இத்தலத்து திருமாளிகைகளெல்லாம் நவமணிகளால் இழைக்கப் பட்டனவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீலமணிகள் முத்துக்கள், பவழங்கள் திருக்கோயிலில் பதிந்துள்ளதால் நீலமணிகள் பதிந்துள்ள இடத்தில் நீலச்சுடர்கள் ஒளி மழுங்கி இருளாகக் காட்சி தருகின்றது. முத்துக்கள் பதிக்கப் பெற்ற இடத்தில் நிலவொளி போல் மின்னுகின்றது. பவழமணிகள் பதித்துள்ள இடங்களில் செஞ்சுடராகி உதயகாலத்து ஆதவன் போன்று சிவந்து காணப்படுகின்றது. இருளான அறையில் ஒளி வந்ததும் இருள் அகன்று விடுகின்றது. அது போன்று அறியாமையான இருள் நம் மனத்தில் உள்ளது. இறையொளி கொண்டு அதனை நம் மனதிலிருந்து அகற்ற பகவானின் நாமங்களைச் சொல்வோம்.     

      

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.      1182

 

      எதிரிகளாகிய க்ஷத்திரியர்களின் குருதியால் தன் வம்சத்தில் இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் செய்த பரசுராமனாகத் தோன்றியவனும், குதிரை வடிவில் கேசியை அழித்தவனும், குவலயாபீடத்தைக் கொன்றவனுமான தேவாதி தேவனின் திருப்பாதங்களை அடைய விரும்பும் பக்தர்களே! நெய்தல் மலர்கள் வயலில் வேலை செய்யும் பெண்களின் விழிகள்போல விளங்கவும்,  கமலங்கள் அவர்களது வதனம் போல் பிரகாசமாகவும், இவற்றின் அருகில் உள்ள செவ்வல்லி மலர்கள் அவர்கள் வாய்போல் ஒளிரவும், கழனிகளால் சூழ்ந்துள்ள காழிச் சீராம விண்ணகரத்தை அடைவீராக என்று கூறுகிறார் ஆழ்வார்.

      சத்ருக்களாகிய வீர அரசர்களின் ரத்தத்தாலே தன் வம்சத்தில் மாண்டவர்களுக்கு தர்ப்பணம் செய்த பரசுராமனும்,  கொடிய வாயையுடைய குதிரையாக வந்த கேசி என்னும் அசுரனின் வாயைக் கிழித்தவனும், கம்ஸனது யானையை முடித்தவனுமான தேவாதி தேவனுடைய தாள் பற்ற விரும்பும் அன்பர்களே! வேறுபாடுகளுள்ள பெண்களின் அப்படிப்பட்ட ஒளி பொருந்திய நீண்ட கண்கள் கருநெய்தற் பூக்களைக் காட்டவும், தாமரை மலர்கள் முகத்தொளியைக் காட்டவும் அருகில் உள்ள அல்லி மலர்கள், சிவந்த வாயின் கூட்டங்களைக் காட்டும் நெல் வயல்களால் சூழ்ந்த  காழியிலிருக்கும் சீராம விண்ணகரை நீங்கள் சென்று சேருங்கள் என்கிறார்.

      தனது தந்தையைக் கொன்ற பரசுராமர் க்ஷத்ரியர்களை வேரறுத்துத் தன் பழியைத் தீர்த்துக் கொண்டார். அவர்களது இரத்தத்தைக் கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வித்தார். அவரே ஸ்ரீமந் நாராயணன் ஆவார்.  பெரிய பிராட்டியார், பூமி பிராட்டியார், நீளாதேவி இவர்களின் நாயகனும், அநந்த கல்யாண குணங்கட்கு கொள்கலனாக இருப்பவனும், ஒரு காலத்தில் எல்லா உலகினையும் திருவயிற்றில் வைத்துக் காத்தவனுமான பெருமான் நம்மை நீடுகாலம் அடிமை கொள்வான் என்பது இதன் பொருளாகும்.

 

பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை
வெம்கண் விறல் விராதன் உகவில் குனித்த விண்ணவர்கோன் தாள் அணைவீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே     1183

 

மிடுக்கான பார்வையும் சிவந்த முகமுடைய வாலி இறக்கவும், சுபந்திரன், விராதன் ஆகியோரும் அழியுமாறு வில்லை வளைத்த தேவாதி தேவன் திருப்பாதங்களை அடைய விரும்புகிறவர்களே!  மலை போன்ற மாளிகையில் மேலிருந்து நட்புடன் பேசிக் கொண்டிருக்கும், நுண்ணிய இடையை உடைய பெண்களின் தாமரை போன்ற முக ஒளியால் நிலவின் முகத்திலே வருத்தம் உண்டாகப் பெற்ற அழகிய காழிச் சீராம விண்ணகரத்தைச் சென்றடைவீராக என்று பாடுகிறார் ஆழ்வார்.

 சந்திர மண்டலத்தளவும் ஓங்கியுள்ள மாடங்களின் மீது  மாதர்கள் ஒருவர்க்கொருவர் தோழமை கொண்டாடி வார்த்தையாடா நிற்கையில் அவர்களுடைய முகச்சோதியைப் பார்த்துச் சந்திரன் “இவர்கள் முன்னே நாம் பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பா! என்று வெட்கி வருந்துகின்றானென்ற, இதனால்  இத்தலத்து மாட மாளிகைகள் மிகவும் ஓங்கி விளங்குகின்றன என்பதும், இத்தலத்து மாதர்கள் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்பதும் பெறுவிக்கப்பட்டனவாம்.

      சந்திர மண்டலத்தைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களின் மீது மாதர்கள் நின்று கொண்டு மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் தோழமையுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், அவர்களது முகப் பொலிவினைக் கண்ட சந்திரன் மெல்ல மேகக் கூட்டங்களிலிருந்து சற்றே கண்ணுற்று, இவர்கள் முன்னே நமது பிரகாசமான ஒளி எம்மாத்திரம், இதுவும் ஒரு பிழைப்பா என்று நாணித் தலை குனியுமாம். அத்தகைய பெருமை மிக்க நங்கையர்களைப் பெற்றுள்ள சீராம விண்ணகரத்துப் பெருமானை சென்று சேவிப்போமாக என்பது போன்று பொருள் அமைகிறது.

      

பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த்                                                                                தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.     1184

 

ஒப்பற்ற வலிமைமிக்க இராவணனது பத்துத் தலைகளும் புற்றுச் சரிவது போன்று கீழே இற்று விழும்படி யுத்தத்தில் கோதண்டத்தைத் திருக்கரத்தால் வளைத்த மலை போன்ற தோள்களைக் கொண்டவனின் பாதகமலங்கள் சரண் அடைந்து உய்ய விரும்பும் பக்தர்களே! வலம்புரிச் சங்குகள் கடலை வெறுத்து சீர்காழியில் தாழைகள் மலிந்த சுழியினுள்ளே வந்து சேர்ந்து வயல்களை அடையும். அங்கிருந்து மழைநீர் கால்வாய்வழி வீதிகளில் வந்து சேர்ந்து சங்குகளையும், முத்துக்களையும் பெற்றுவிடும் வளம்மிக்க காழிச் சீராம விண்ணகரத்தை சென்றடைவீர்களாக என்று பாடுகிறார் ஆழ்வார்.

கடலிலே வாழ்ந்து கொண்டிருந்த சங்குகளானவை  இத்தலத்தின் நீர்வளத்தைப் பார்த்துக் கடலின் வாஸத்தை இகழ்ந்து விட்டிட்டு இத்தலத்தில் தாழைகள் மலிந்த கழிகளிலே வந்து சேர்ந்து, பிறகு வயல்களிலே சென்று பாய்கின்ற அக்கழிகள் மூலமாக வயல்களிலே வந்து சேர்ந்து, அவ்விடத்தில் நீர்தேங்கி நின்று அது வாய்க்காலாலே ஊரிலே வந்து புகுர அவ்வழியாலே தெருக்களிலே வந்தேறி, அந்நீர் வழிந்தவாறே பின்னைப் போகமாட்டாதே அவ்விடந்தன்னிலே கிடந்து சங்குகளையும் முத்துக்களையும் ப்ரஸவிக்கின்றனவாம்.  இத்தால் நீர்வள நிலவளங்கள் சொல்லப்பட்டன.

      புற்றுகளை சிதைப்பது எவ்வளவு எளிதான காரியமோ அது போன்று வலிமையான இலங்கை வேந்தனின் பத்து தலைகளை எளிதில் கொய்தான் ஸ்ரீராமன். எனவே இராமனின் பராக்கிரமம் இதிலிருந்து தெரிகின்றது. இராவண சம்ஹாரம் செய்து வெற்றி பெற்ற கோதண்டராமனுடைய திருவடிகளைச் சேருமிடம் காழிச் சீராம விண்ணகரமாகும். மனிதனின் மறதி போன்று நாம் உடல் அல்ல ஆத்மா என்பதையும் மறந்து போகிறான். இத்தகைய மறதியைப் போக்க அவனை அடையுங்கள் என்று கூறுவதாகப் பொருள் அமைகிறது.     

      

பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால்                                                                      ஆம்இன்சொல்
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.       1185

 

பட்டாடை  அணிந்துள்ள, பாம்பின் படத்தைப் போல் அழகியதும் அகன்றதுமான நிதம்பத்தையும், பவழத்தைப் போன்று சிவந்த அதரத்துடன் மூங்கிலையொத்த தோள்களையும் மான்விழிகளையும், அமுதம் போன்ற பேச்சையுமுடைய, கூந்தலில் சூடிய மலர்களிலிருந்து தேன் வடிந்து மணக்கும் சத்யபாமாவுக்காகத் தேவலோக சோலையில் உள்ள பாரிஜாத மரத்தை வேருடன் பறித்து வந்த பெருமானுடைய திருவடிகளைச் சேர விரும்பும் அன்பர்களே! அணில்கள் கிளைக்குக் கிளை தாவித் தவழ்வதனால் நீண்ட இலைகளைக் கொண்ட கறுத்தப் பாக்குமரக் காய்கள் உதிர்ந்து விழுகின்றன. நீண்ட பலா மரங்களின் காய்களின் கனத்தால் தாழ்ந்த கிளைகளில் நெருங்கியுள்ள பருத்த கனியப்பெற்ற பலாப்பழங்கள் நசுங்கித் தேன் சொரிகின்றது. பெருமானின் அடியைப்பேண விருப்பமுடையார்க்குக் காழிச் சீராம விண்ணரமே கதி என்றும் அதனை அடைவீராக! என்று கூறுகிறார் ஆழ்வார்.    

அணிற்பிள்ளைகள் மரங்களிலே தாவித் திரிவது வழக்கமாகையாலே பாக்குமரங்களின் பணைகளிலே தாவும்போது அந்த உராய்தலினால் பழுக்காய்கள் உதிர்ந்து அவை பலாப்பழங்களின் மேல் “தொப்“  என்று விழ அதனால் அப்பழங்கள் பிளவுற்று உள்ளிருந்து தேன் வெள்ளமிட்டுப் பெருகுகின்றதாம். எம்பெருமானார் இத்திவ்யப்ரபந்த காலக்ஷேபம் நடத்தியருளும்போது இவ்விடத்தில் உள்ள “தெட்ட“ என்பதற்குச் சரியான பொருள் விளங்கவில்லையென்று அருளிச் செய்து வைத்து, பின்பொருகால் திவ்யதேச யாத்திரை யெழுந்தருளும்போது இத்தலத்தின் சோலை வழியே  வந்து கொண்டிருக்க, அங்கே காவல் மரங்களின் மீது சில சிறு பிள்ளைகள் ஏறிப் பழம்பறியா நிற்கையில் கீழேயிருந்த சில பிள்ளைகள், அண்ணே! தெட்டபழமாகப் பார்த்துப் பறித்துப் போடு என்ன  அதை யாத்ருச்சிகமாகக் கேட்டருளின எம்பெருமானார்“ பிள்ளாய்! தெட்ட பழமென்றால் என்ன? அதை யாத்ருச்சிகமாகக் கேட்கப் பழுத்த பழம் என்று இப்பிள்ளைகள் சொல்ல, உடையவரும் திருவுள்ளமுவந்து“ இது ஒரு திசைச்சொல் போலேயிருந்தது“ என்றார்.

     

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடித்
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.      1186

 

பிறைச் சந்திரனை தனது நீண்ட திருமுடியில் சூடிக்கொண்ட சிவபெருமானை பரந்தாமன் தன் வலப்புறத்தே வைத்திருந்தான்.  பிரம்மனை நாபிக் கமலத்தில் உண்டாக்கினான். எதிரிகளின் குருதியின் கரை படிந்த வேல் போன்ற விசாலமான திருவிழிகளையுடைய திருமகளை தன் மார்பில் வைத்துள்ளான். இத்தகைய பெருமானின் திருப்பாதங்களைச் சேர வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்களே! வண்டுகள் செங்கழுநீர் பூக்களில் தம் துணையோடு நீர் நிலைகளில் உள்ள தாமரை மலரில் புகுந்து தேனை உண்டு உறங்கி, பின் தாழை மடல்களின் மகரந்தத் தூள்களில் புரண்டு, களித்து, ரீங்கரிக்கும் கழனிகள் சூழ்ந்த இடமான சீராம விண்ணகரத்தை சென்றடையுங்கள் என்கிறார் ஆழ்வார்.

வண்டுகளானவை செங்கழுநீர் மலர்களிலே பேடைகளுடன் கூடிரமித்து அதனுள் உண்டான துவட்சிக்குப் பரிஹாரமாகத் தாமரைப் பூக்களிலே வந்து துயில் கொண்டிருந்து (தேனைப் பருகிக் களை தீர்ந்து) பின்பு தாழை மடற் சுண்ணங்களிலே போய்ப்புரண்டு களிப்பின் மிகுதியாலே இசை பாடுகின்றனவாம்.

      சங்கர நாராயணனாகக் காட்சிதரும் பெருமானை பேயாழ்வாரும் ‘தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்’ என்று திருமலை வேங்கடவனைப் பாடுகின்றார். மும்மூர்த்திகளின் எல்லா வடிவங்களும் பரந்தாமனே என்று ஆழ்வார் எடுத்துக்காட்டுகிறார். ஆகவே வடிவ மாற்றங்களைக் குறித்து வாதம் செய்யாமல் ஸ்ரீமந் நாராயணனே எல்லாம் என்று நினையுங்கள் என்று இப்பாசுரம் பொருள்படுகிறது. 

 

செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச் சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே.     1187

 

நாபிக் கமலத்தில் பிறந்து பிரம்மன் போன்ற வைதிகர்கள் வாழும் காழிச் சீராம விண்ணகத்தில் செந்தாமரைப் போன்ற கண்ணனான பகவானைப் பற்றி அழகிய தாமரைத் தடாகங்கள் உள்ள, வயல்களால் சூழ்ந்துள்ள திருவாலி நாட்டுத் தலைவரும், பக்தர்களுக்கு அருள் புரியும் மாரி போன்றவரும் தீங்கு விளைவிப்போரை தலையெடுக்க விடாமல் அடக்குபவரும், எதிரிகளுக்குச் சிங்கம் போன்றவரும், தேன்மிக்க மலர்கள் அணிந்த கூந்தலையுடைய மாதர்களால் விரும்பத்தகுபவரும், திருமங்கை நாட்டுக்குத் தலைவரும், பகைவரின் எதிரியும், வெற்றி பொருந்திய வேல் படையை உடைய, கூட்டம் கூடி கொண்டாடத் தகுந்த கலியன் இயற்றிய இப்பாமாலையினைப் பக்தியுடன் பாட வல்லவர்கள் கடலால் சூழப்பட்ட இவ்வுலகிற்கு தலைவராவர் என்று கூறுகிறார் ஆழ்வார்.

திருநாராயணனின்  நாபிக் கமலத்தில் பிறந்த பிரம்மனை யொத்த வைதிகர்கள் வாழ்கிற காழி சீராம விண்ணகரத்திலிருக்கும் செந்தாமரைப் போன்ற கண்களையுடைய பெருமானைக் குறித்து அழகிய தாமரைத்  தடாகங்களின் வயல்களால் சூழ்ந்த திருவாலி நாட்டுக்குத் தலைவரும் அருளைப் பொழியும் மேகம் போன்றவரும், தீங்கு செய்யுமவர்களை அமுங்கச் செய்பவரும், சத்ருக்களுக்கு ஸிம்ஹம் போன்றவரும், தேன்மிக்க மலரணிந்த கூந்தலையுடையவர்களுக்கு விரும்பத்தக்கவரும், திருமங்கைக்கு அரசனும் எதிரிகட்கு யமன் போன்றவரும், வெற்றி தரும் வேலையுடையவருமான திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த புலவர்கள் அனுபவிக்கத் தகுந்த தமிழ் இலக்கணத்தோடு கூடின  இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லார் பரந்த கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ளோர் அனைவருக்கும் தாங்களே தலைவர் ஆவர் என்கிறார் ஆழ்வார்.

இவ்வூரில் திருமங்கையாழ்வார் திருஞானஸம்பந்தரை வாதில் வென்று அவருடைய வெற்றி வேலைப் பரிசு பெற்றதுடன் "கடியுண்டநெடுவாளை" என்ற ஓர் அழகிய பாடலாலும் புகழப் பெற்றார். நாலுகவிப் பெருமாள் என்ற விருதையும் பெற்றார் என்று ஒரு செய்தியும் உள்ளது.

பகவான் மும்மூர்த்திகளின் வடிவங்களாக இருந்து உலக இயக்கத்தை நடத்துவது, இலங்கையை அழித்து இராவணனின் பத்துத் தலைகளையும் மண்ணில் உருளச் செய்தது, சத்திய பாமாவுக்காக இந்திரனை வென்று பாரிஜாத மலரைக் கொண்டு வந்தது. நப்பின்னை பொருட்டு ஏழு காளைகளையும் அடக்கியது போன்ற தீரச் செயல்கள் நம் முன்னே கொண்டு வரப்பட்டன. இவையெல்லாம் நம் மனங்களைத் தூய்மைப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட அஸ்திரங்கள் என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...