வியாழன், 18 டிசம்பர், 2025

27. திருக்காவளம்பாடி

 


திருமங்கையாழ்வார்                                                                          பெரிய திருமொழி

 

 தா அளந்து உலகம் முற்றும்
     தட மலர்ப் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த
     நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும்
     மறையவர் வாழும் நாங்கை
காவளம்பாடி மேய
     கண்ணனே களைகண் நீயே   1298   

 

உலகமுற்றும் தாமரை மலர்களைத் தேடி அலைந்து, ஒரு தடாகத்தில் பெரிய தாமரை மலர்களைக் கண்ட கஜேந்திரன் என்ற யானை அதில் இறங்கியது. அதைக் கண்ட கொடிய முதலையானது அதன் காலைக் கவ்வியது. யானை அதிர்ந்து ‘ஆதிமூலமே’ என்ற ஹரி நாமத்தைச் சொன்னவுடன் நேரில் வந்து தோன்றி அதன் நடுக்கத்தைப் போக்கியவனே! நிறைந்த செல்வம் பெருகியுள்ள வைதீகர்கள் வாழ்ந்து வரும் திருநாங்கூர் திருக்காவளம்பாடியில் எழுந்தருளி இருக்கும் கண்ணபிரானே.  நீ என்னைக் காத்தல் வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

உலகமெல்லாம் சுற்றித்திரிந்து பெரிய பூக்களையுடைய ஒரு தடாகத்தில் இறங்கி நாவுக்கு இனிய திருநாமங்களை சொல்லித் துதித்த  யானையின் அச்சத்தை போக்கினவனே! அதிக செல்வம் பெருகி இருக்கும் வைதிகர்கள் வாழும் திருநாங்கூரின் திருக்காவளம்பாடியிலிருக்கும் கண்ணனே நீயே காப்பாற்ற வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

      மனிதர்களுக்கு ஆபத்து வரும்போது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்  என்று யாரையேனும் உதவிக்கு அழைப்பது வழக்கம். அப்போதும் நாம் பகவானை நினையாமல் மனிதனை அழைப்போம்.  நாம் பகவானை நினைப்பதில்லை. ஆனால் யானையானது பகவானிடம் கொண்ட அன்பினால் தனக்கு ஆபத்து என்று அறிந்தபோது ‘ஆதிமூலமே’ என்று அழைத்தது. நமக்கு இத்தகைய நம்பிக்கை பகவானிடம் இல்லாததுதான் வியப்பு. கஜேந்திரனை காத்தது போல் பஞ்சேந்திரியம் என்ற முதலையிடமிருந்து காத்தருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.

      

மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே.    1299

 

ஆதிவராக அவதாரமாய் வடிவெடுத்து பூமியைக் குத்திப் பிரித்து எடுத்தவன், மகாபலியின் மிடுக்கையும், வலிமையையும் மாற்றத் தேவர்கள் வேண்டியதால் மூன்றடி மண் கேட்டவன், மாவலியின் யாகப் பூமியில் எழுந்தருளிவனே! தனக்கு வேண்டியதைப் யாசித்துப் பெற்றவனே! பகைவர்களை வேகமாக அழித்தவர்கள் வாழும் நாங்கூர் நகரில் உள்ள காவளம்பாடியில் கண்ணனாய் எழுந்தருளியிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.

வராஹமாக அவதரித்துப் பூமியை குத்தி எடுத்து வந்தவனே! மஹாபலியின் பலத்தை போக்கும்படி தேவர்கள் யாசிக்க யாகப் பூமியில் சென்று யாசித்துப் பெற்றவனே! பகைவர்களைச் சீக்கிரமாக வென்று வாழும் வீரர்கள் இருக்கும் திருநாங்கூரின் குளிர்ந்த சோலைகளையுடைய  திருக்காவளம் பாடியிலிருக்கும் கண்ணனே நீயே காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      இந்தப் பூமியானது உயிர்களின் நன்மைக்காகப் படைக்கப்பட்ட கர்ம பூமியாகும். நாம் செய்த கர்ம வினைகளை அந்த வினைகளால்தான் களைய முடியும். தீவினைகளால் துன்பம் வருவது போல் நல்வினைகளால் இன்பம் வருகின்றது. அசுரசக்திகள் நம்மைச் சுற்றிக் கொண்டிருப்பதைப் போன்று நல்ல தேவைதைகளும் நம்மைக் காத்து வருகின்றன. எனவே நாம் அனாதைகள், நமக்கு யாருமில்லை என்று எண்ணுவது அறியாமையாகும். பகவான் நம்மைக் காத்து வருகிறார் என்று நம்பிக்கை ஏற்படுத்தவே இத்தகைய அவதாரங்களை ஏற்று அசுரசக்தியிடமிருந்து நம்மைக் காத்து வருகிறார். இதனை நாம் புரிந்து கொள்ள ஆழ்வார் இத்தகைய பாசுரங்கள் வழி தெரியப்படுத்துகிறார்.

 

உருத்து எழு வாலி மார்வில்
     ஒரு கணை உருவ ஓட்டி
கருத்து உடைத் தம்பிக்கு இன்பக்
     கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும்
    பழம் விழுந்து ஒழுகும் நாங்கை
கருத்தனே காவளம் தண்
    பாடியாய் களைகண் நீயே   1300

 

மிகவும் கோபத்தோடு புறப்பட்டு வந்த வாலியின் மார்பில் பாயும்படி ஒரு அம்பு எய்தி அவனைக் கொன்று தனக்கு பிடித்த நண்பனான சுக்ரீவனுக்கு இன்பம் தரும் அரசாட்சியைத் தந்தவனே! மிகப் பெரிய பலா, மா மரங்களின் கனிகள் கீழே விழுந்து தேன் வழியும் வளமான நாங்கை காவளந்தண்பாடியின் பகவானே! நீயே எனக்குப் பாதுகாப்பு என்று கூறுகிறார் ஆழ்வார்.

 சற்று முன்னே சண்டைக்கு வந்து தோற்றோடிப்போன பையல் மறுபடியும் வெட்கமின்றி வந்தானே!’ என்று கோபமூண்டு கிளம்பி வந்த வாலியின் மார்பில் எத்தனையோ வீரர்கள் அம்புகளைப் பிரயோகித்ததுண்டு;  அவையெல்லாம் வாய் மடிந்து போயின வத்தனையொழிய ஒன்றேனும் காரியஞ் செய்யவில்லை; இராமபிரானுடைய கணையே காரியஞ் செய்ததுபற்றி ‘ஒருகணை’ எனப்பட்டது.

      வாலி பகவானுக்கு வேண்டாதவன் அல்ல. ஆனால் அவன் செய்த காரியம் தருமத்திற்கு உகந்ததாக இல்லை. தம்பி ஆட்சிபுரிந்த நாட்டை அபகரித்து அவனை நாட்டைவிட்டே துரத்தினான். நாட்டை விட்டு வந்த இராமனால் இச்செயல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி சுக்ரீவனின் மனைவியை வாலி அபகரித்தான். இவை அனைத்தையும் சொல்லிச் சுக்ரீவன் இராமனைச் சரணடைந்தான். எனவே வாலியை வென்று சுக்ரீவனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்தான். நாமும் அவனைச் சரணாகதி அடைந்து நம் செயல்களை நல்வினைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.

      

முனைமுகத்து அரக்கன் மாள
     முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே
     அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்
     சுரும்பு தேன் நுகரும் நாங்கை
கனை கழல் காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.       1301

 

போர்க்களத்தில் இலங்கை வேந்தன் இராவணன் அழியும்படி அவன் பத்துத் தலைகளையும் அறுத்துத்தள்ளி, அவனது தம்பி விபீஷணனுக்கு  இலங்கை அரசை அளித்தருளியவனே! சுனைகளில் கயல் மீன்கள் அஞ்சித் துள்ளிக் குதிக்க, கரிய வண்டுகள் ஆரவாரத்துடன் தேன் பருகும் திருநாங்கூர் நகரில் உள்ள காவளந்தண்பாடியில், ஒலிக்கின்ற வீரதண்டைக் கொண்டு அருள் புரிபவனே!  நீ எனக்குப் பாதுகாப்பு என்று கூறுகிறார் ஆழ்வார்.

      இப்பாசுரத்தில் பகவானின் பரிவுக்கு தருமமே அடிப்படையாக உள்ளது. இராவணன் செய்த பெரும் தவற்றினை தம்பி விபீஷணன் கண்டித்ததால் அவனை இலங்கை விட்டுச் செல்லுமாறு செய்தான். விபீஷணன் இராமனிடம் சரணடைந்தான். அதனால் இராமனுக்கு அவன்மீது பரிவு அதிகமானது. பணம் படைத்தவர்கள் கூறும் பேச்சினை கண்மூடி ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கினை நாம் ஏற்கலாகாது. ஆனால் இதனை ஏற்கும் அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நமது தாழ்வுகளுக்கெல்லாம் இதுவே மூல காரணமாகத் திகழ்கின்றது.  அதர்மம் செய்வோரை தன்மானத்துடன் தட்டிக் கேட்கும் மனத்துணிவு நமக்கு வர வேண்டும். இறைவன் கருணைக்கு முன்னால் இத்தகைய அதர்மச் செயல் மழுங்கிப் போகும் என்பது இப்பாசுரத்தின் கருத்தாகும்.

      

பட அரவு உச்சி தன்மேல்
     பாய்ந்து பல் நடங்கள்செய்து
மடவரல் மங்கை தன்னை
     மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாடத்
     தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.      1302

 

அகல விரிக்கப்பட்ட படங்களைக் கொண்ட காளிங்க நாகத்தின் முடிமேல் குதித்துப் அனேகவிதமான நர்த்தனங்களைச் செய்தவன், மடமை குணம் கொண்ட பெரிய பிராட்டியை மார்பில் நித்யமாக வைத்துக் கொண்டிருப்பவனான, பெரிய மலைகள் போன்ற மாளிகைகள் நிறைந்த புகழ்மிக்க திருநாங்கூரில் உள்ள காவளந்தண்பாடியில் எழுந்தருளி இருக்கின்ற இறைவனே! நீயே என்னைக் காப்பவன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

படங்களையுடைய  காளிய நாகத்தின் தலைமேல் பாய்ந்து பல நடனங்கள் ஆடி, மடமைக் குணம் வாய்ந்த  திருமகளை மார்பில் இருத்தினவனே! பெரிய மலைகள் போன்ற மாளிகைகளையுடையதும், தகுந்த புகழையுடையதுமான நாங்கை திருநாங்கூரின் குளிர்ந்த சோலைகளையுடைய திருக்காவளம்பாடியில் இருக்கும் கடவுளே! நீயே காப்பாற்ற வேண்டும் என்று  வேண்டுகிறார் ஆழ்வார்.

      காளிங்கனை அடக்கி அவனுக்கு உயிர் பிச்சை கொடுத்து மடுவை விட்டு அகன்றுவிடுமாறு கூறினார் பகவான். அதர்மத்தால் செய்யும் செயல்கள் அனைத்தும் பகவானால் ஒடுக்கப்படும். பகவானின் கிருபை நெருங்க அவை அகன்றுவிடும். நாகம் போன்று நம் புலன்களும் நம்மை ஆட்டுவிக்கின்றன. தவறு என்று தெரிந்தும் அதைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக நாம் உள்ளோம்.  இப்புலன்களை அடக்கி ஆண்டால் இவ்வுலகமே நமக்கு அடங்குவதைக் காண்போம். புலன்களை அடக்கப் பகவத் பக்தியும் அவனது திருநாமங்களையும் இடைவிடாது சொல்வதில் மட்டுமே அது சாத்தியமாகும் என்பது இதன் பொருளாகும்.

      

மல்லரை அட்டு மாளக்
     கஞ்சனை மலைந்து கொன்று
பல் அரசு அவிந்து வீழப்
     பாரதப் போர் முடித்தாய்
நல் அரண் காவின் நீழல்
     நறை கமழ் நாங்கை மேய
கல் அரண் காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.     1303

 

மல்லர்கள் மாண்டு வீழும்படி அழித்து, கம்சனை எதிர்த்துக் கொன்று, பல்லாயிரம் அரசர்கள் இறக்க பாரதப் போரை முடித்தவன், அரண் போன்று நல்ல பாதுகாப்பாக உள்ள தோட்டங்களின் நிழலில் வாசனை வீசுகின்ற திருநாங்கூரில் கல் மதிலையுடைய காவளந்தண்பாடியில் எழுந்தருளி இருப்பவனே! நீயே எனக்குப் பாதுகாப்பு என்று பாடுகிறார் ஆழ்வார்.

மல்லர்களை மாளும்படி செய்து கம்ஸனை எதிரிட்டுச் சென்று கொன்று பல்லாயிரம் அரசர்கள்  மாண்டு விழ, பாரதப் போரை முடித்தவனே!  நல்ல அழகிய  சோலைகளின் நிழலிலே மணம் வீசும் திருநாங்கூரின் குளிர்ந்த சோலைகளையுடைய திருக்காவளம்பாடியிலிருக்கும் கடவுளே! நீயே காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.

      பூமி பாரத்தைக்குறைப்பதற்காகப் பாரதரத யுத்தம் நடந்தது. அதில் பல்லாயிர அரசர்கள் போரிட்டு மாண்டார்கள். பகவான் கௌரபாண்டவர்கள்மீது எவ்வித விருப்பு வெறுப்பும் காட்டவில்லை. பூபாரத்தைக் குறைப்பதே அவரது அவதார நோக்கம். தேவ ரகசியங்கள் மறைத்துக் காக்கப்படுகின்றன. நமது முற்பிறவிகள் நினைவுக்கு வந்தால் பலர் புத்தி பேதலித்து அலைவார்கள்.  எனவேதான் பகவான் அதை மறக்கும்படி செய்தார். இதன் சூட்சுமக் கயிறு பகவான் கையில் உள்ளது. அவர் சுழற்றுகிறபடி உயிர்கள் வாழத்தான் வேண்டும். இத்தகையவன் காவளம்பாடியில் எழுதருளியுள்ளான் என்று கூறுகிறார் ஆழ்வார். 

 

மூத்தவற்கு அரசு வேண்டி
     முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ
     மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்து அமர் சோலை ஓங்கிப்
     புனல் பரந்து ஒழுகும் நாங்கை
காத்தனே காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.       1304   

 

முன்பு பாண்டவர்களுக்காக அரசாட்சி அமைப்பதற்கு மூத்தவரான தருமருக்கு ஆட்சி வழங்க வேண்டித் தூது சென்றார் கிருஷ்ணன். மத்தகத்தின் மீதிருந்து பாகனும் வீழ்ந்து மடிய குவலயாபீடம் என்ற யானையின் தந்தத்தை முறித்தவரான பரமாத்மா, மலர் வனங்கள் நிறைந்த தோட்டங்களைச் சுற்றி நீர் பரவியுள்ள வளமான நாங்கை நகரில் உள்ள காவளந்தண்பாடியில் உறையும் நீயே என் துயரைப் போக்குபவன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      உலகினை சிருஷ்டித்த பிரம்மனைப் படைத்தவன் பகவான். உலகம் தோன்ற காரணமாக இருக்கிறான். அத்தகைய உலகில் சுயநலம் மிக்க மனிதர்கள் உள்ளார்கள். அதனால் நல்லவர்களுக்குத் துன்பம் வருகின்றது. மெய்ப் பொருளாகிய வேதமந்திரங்களால் பகவானின் திருப்பாதங்களை பூஜை செய்பவர்களை இத்தகைய சுயநலப் பேய்கள் நெருங்க முடியாது. எனவே நாம் நமது கடமையைச் செய்து அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களை ஈட்டுங்கள். மற்றவற்றை பகவானிடம் விட்டு விடுங்கள். நாராயண மந்திரத்தைச் சொல்லி வந்தால் துன்பங்கள் விலகிப் பரமபதம் செல்ல வாய்ப்பளிக்கும் என்பது இதன் கருத்தாகும்.  

      

 ஏவு இளங் கன்னிக்கு ஆகி
     இமையவர் கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக்
     கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
     புரந்தரன் செய்த நாங்கை
காவளம்பாடி மேய
     கண்ணனே களைகண் நீயே.       1305

 

இளம் மங்கையான சத்தியபாமாவுக்காகப் போரில் இந்திரனைத் தோற்கடித்து துரிதமாக மலர்வனங்கள் பாழ்பட கற்பக மரத்தினை  துவாரகைக்கு எடுத்து சென்று நட்டவனே! செழித்த மலர் வனங்களால் சூழப்பட்டதாய் இந்திரனால் உண்டாக்கப்பட்டதான நாங்கூரில் காவளந்தண்பாடியில் எழுந்தருளியிருக்கும் கண்ணனே! நீயே என் துயர் நீக்குபவன் என்று பாடுகிறார் ஆழ்வார்.

 இந்தப் பாரிஜாத விருக்ஷத்தை என் வீட்டு முற்றத்தில் கொண்டு நட்டுவிடு’ என்று ஏவின, இளங்கன்னிக்காக அம்மரத்தைக் கருடனைக் கொண்டு போகுமளவில் இந்திரன் அஃதறிந்து வஜ்ராயுதத்தைத் தீட்டிக் கொண்டு போர்புரிய வந்து பங்கப்பட்டுப் போயினன் என்பதும் இங்கு அறியத்தக்கது. ஸ்வர்க்க லோகத்திற்கு உண்டான ஏற்றம் பூலோகத்திற்கும் உண்டாகவேணும் என்று கருதின தேவேந்திரன் ஸ்வர்க்கலோகத்துக் கட்டளையாகவே திருநாங்கூரை அமைத்தனன் என்று ஒரு இதிஹாஸம் உண்டென்பர். 

      பாரிஜாத மலர் வனங்களில் சத்தியபாமா மிகுந்த மனநிறைவுடன் தன்னை மறந்த நிலையில் இருந்ததைக் கண்ணன் பார்த்துவிட்டான். அவளது மகிழ்ச்சிக்காக கருடன் உதவியோடு கற்பக மரத்தினை துவாரகைக்கு எடுத்து வந்தான். இது போன்றே அடியார்களுக்கும் தங்களது காரியங்களை செய்விப்பதற்காக காவளம்பாடியில் எழுந்தருளியவனே! சுவர்க்க லோகத்திற்கு உண்டான ஏற்றம் பூவுலகிலும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திரன் காவளம்பாடியில் இத்தகைய மலர்வனத்தைத் தோற்றுவித்தான். அத்தகைய கருணையுள்ளவர், நம் குறைகளைப் பொறுத்து துன்பத்தை நீக்குபவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

 

 

      

 சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச்
     சமய ஐம் பூதம் ஆகி
அந்தம் ஆய் ஆதி ஆகி
     அரு மறை அவையும் ஆனாய்
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்
     மட மயில் ஆலும் நாங்கை
கந்தம் ஆர் காவளம் தண்
     பாடியாய் களைகண் நீயே.      1306

 

காயத்ரி, திருஷ்டும், ஜகதி என்று சொல்லப்படுகின்ற சந்தசுகள் எல்லாம் உரியவனாய், பல நிலைகளுள்ள காலமாய், பஞ்ச பூதங்களுக்கும் தலைவனாய், உலக சிருஷ்டிக்கு முதலவனாய், இறுதியாய் அரிய வேதங்களாலான எம்பெருமானே! மந்தார மரச்சோலைகள் எங்கும் மயில்கள் வந்தாடும் நாங்கை நகரிலே மணம் வீசும் காவளந்தண்பாடியில் இருப்பவனே! நீயே என் துயரை நீக்குவாய் என்று பாடுகிறார் ஆழ்வார்.

      மூன்று வகையான மந்திரங்களுக்குத் தலைவனாக இருப்பவன் பகவான். மந்திரங்களின் வலிமையினால்தான் பல்வேறு அஸ்திரங்கள் பகைவர்களை அழிக்கப் பயன்பட்டன. அரிய தவங்கள் புரிந்து தேவர்களும் அசுரர்களும் இத்தகைய அஸ்திரங்களைப் பெற்றனர். தருமத்திற்கு எதிராக இவைகளைப் பிரயோகிக்கும்போது இதன் வலிமை மழுங்கி விடுகின்றது. அதை மழுங்கச் செய்பவனே பகவான். எல்லா மந்திரங்களும் பகவானின் வடிவம் என்பதை ஆழ்வார் வலியுறுத்துகிறார். மேலும் வேதத்தின் வடிவமும் அவனே என்கிறார். இருப்பது ஒரே பிரம்மம் தான். அதனை அறிந்து கொள் என்ற வகையில் பொருள் அமைகிறது.

 

மா வளம் பெருகி மன்னும்
     மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
     கண்ணனைக் கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார்
     பார்மிசை அரசர் ஆகிக்
கோ இள மன்னர் தாழக்
     குடை நிழல் பொலிவர் தாமே    1307

 

பெரிய செல்வமானது உற்பத்தியாகும் திருநாங்கூரில் நிலையாக அந்தணர் வாழ்கின்றனர்.  அங்குத் திருக்காவளம்பாடியில் அருள்புரியும் கிருஷ்ணனைக் குறித்து கலியன் இயற்றிய இப்பத்து பாசுரங்களையும் பக்தியுடன் பாடக்கூடியவர்கள், பூவுலகில் மன்னராகி எல்லா அரசர்களும், இராஜகுமாரர்களும் வணங்கும்படி வெண்கொற்றக்குடையின் கீழ் புகழோடு வாழ்வார்கள் என்கிறார் ஆழ்வார்.

செல்வம் பெருகியிருக்கும் வைதிகர்கள் வாழுமிடமான நாங்கூரின் திருக்காவளம் பாடியிலிருக்கும் கண்ணனைக் குறித்து திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்கள் பத்தும் ஓத வல்லார் பூலோகத்தில் அரசர்களாகி அரசர்களும் இளவரசர்களும் வணங்குமாறு ஒருகுடை நிழலில் பொலிந்து விளங்குவர் என்கிறார் ஆழ்வார்.

      மேற்கண்ட பாசுரங்கள் அனைத்தும் நமக்கு நல்வழி காட்டுவதாக அமைந்துள்ளன.  இப்பாசுரத்தில் எல்லையற்ற செல்வம் மேன்மேலும் கரைபுரண்டு வளரப்பெற்ற  அந்தணர்கள் வேதாந்த விழுப்பொருளாகிய எம்பெருமானை கண்ணாலே கண்டு திருநாங்கூர் திருக்காவளம்பாடியில் கண்ணனாக நித்யவாசம் பண்ணுகிறான் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். மண்ணுலக வாழ்க்கையில் நமக்கு அருள்வது போன்று விண்ணுலக வாழ்க்கையிலும் நமக்கு அருள்கிறான். மந்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றின் பொருளாக இருந்து நமக்கு உணர்த்துகிறான்.  நமது பக்குவத்தை அறிந்து நம்மை மேல்நிலைக்கு அழைத்துச் செல்கிறான். எல்லா உயிர்களுக்கும் வேறுபாடின்றி அவன் தாய் தந்தையாக இருந்து காத்து வருகிறான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...