திங்கள், 8 டிசம்பர், 2025

37. திருமணிக்கூடம்

 


திருமங்கையாழ்வார்                                                                                        பெரிய திருமொழி 

தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ட எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.      1288
 

துளையாக உள்ள பனங்காய் போன்ற துதிக்கையையுடைய கஜேந்திரன் என்ற யானையின் இடரினைப் போக்கியவன், மூங்கில்களால் வளரப்பெற்ற கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிப் பிடித்துப் பெருமழையிலிருந்து கோகுலத்தின் மக்களைக் காத்த பகவான் திருநாங்கூர் திருமணிக் கூடத்தில் எழுந்தருளியுள்ளான். இத்தலமானது அழகிய நீருடைய காவிரியானது எங்கும் பாய்ந்து பொன்னாலான பொடிகளைக் கொண்டு வந்து தள்ளுகின்றதும், கண்ட இடங்களிலும் தேன் சிந்தும் மலர்வனங்கள் நிறைந்து மணம் பரப்பும் இடமாகும் என்று ஆழ்வார் கூறுகிறார். மேலும், தீவினைகள் செய்து அதனால் மனம் வருந்தும் மக்கள் எனக்கு வேறு கதியே இல்லை என்று புலம்புவதும் நாம் பார்க்கின்றோம். எதற்கும் அஞ்சாமல் பகவானின் திருநாமங்களைக் கூறிக்கொண்டு நல்வினைகளைத் தொடர்ந்து செய்யும் நிலையில் நாம் முன் செய்த பாவங்களும் விலகி ஆண்டவனின் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது இப்பாசுரத்தின் உட்கருத்தாகும்.

தாமரைப்பொய்கையிலே முதலை வாயிலகப்பட்டுத்‌ தடித்த கஜேந்திராழ்வான் துயரைத்‌ தொலைத்தருளினவனும்‌, கோவர்த்தன மலையைக்‌ குடையாக வெடுத்‌துக்‌ கடுமழையில்‌ நின்றும்‌ கோநிரையைக்‌ காத்தருளினவனுமான எம்பெருமான்‌ நம் போன்‌றவர்களினுடைய துயரையும்‌ தொலைப்பதற்காகத்‌ திருநாங்கூரில்‌ திருமணிக்கூடமென்னும்‌ திருப்பதியிலே வந்து தங்கியிரா நின்றான்‌. அத்திருநாங்கூர்‌ எப்படிப்பட்டதென்னில்‌ காவிரியாற்றின்‌ பாய்ச்சல்‌ எங்கும்‌ பரவிக்‌ கண்டவிடமெங்கும்‌ பொற்குவியல்கள்‌ கொண்டு குவிக்கப் பெற்‌றிருப்பதும்‌ தேன்மிக்க சோலைகள்‌ கமழப்பெற்றதுமாம்.

      

கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை
வவ்விய இடும்பை தீரக் கடுங் கணை துரந்த எந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர் கழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.      1289
 

வாள் போன்ற கூர்மையான பற்களையுடையவளாய், ஆரவாரம் செய்பவளாய் வந்த கல்நெஞ்சக்காரியான அசுரப்பெண் பூதனையின் விஷப்பாலைச் சுவைத்தவனை, இலங்கையைப் பற்றிய பாவமானது தொலைய கடுமையான பாணங்களை எய்த பகவானை நாங்கூர் திருமணிக்கூடத்தில் தரிசிக்கலாம். இத்தலம் கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடைய பெண்கள் தங்களது தனத்திலிருந்து குங்குமச் சேறுகளைக் கழுவ, அவை கலந்த தெய்வ தீர்த்தம் உள்ள இடமாகும் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது. 

      சீதையைக் கவர்ந்து வந்ததால் இலங்கையைப் பாவம்பற்றிக் கொண்டது. தருமம் அழிந்துவிட்டதால் அனுமனின் தாக்குதலால் தருமதேவதை அடிபட்டு விழுந்தாள். இது இராவணனின் அதர்மச் செயலால் நிகழ்ந்தது. அதன்படி மாற்றான் மனைவியான சீதையை அடைய விரும்பியது மட்டுமல்லாது அவளைக் கடத்தியும் சென்று சிறை வைத்தது மிகவும் தீய செயல்தான். இராவணன் அளப்பரிய வரங்கள் பெற்று தேவர்களுக்கு இன்னல்கள் விளைவித்துக்கொண்டிருந்தான். தனது சகோதரனான குபேரனின் நாட்டைப் பறித்துக்கொண்டான். ஒன்பது கோள்களையும் தனக்கு அடிமையாக்கினான். இன்னும் பல இடர்களைத் தான் வரம் பெற்ற அகந்தையால் செய்தான்.  அதனால் இலங்கை தீப்பிடித்து எரிந்தது. இவையும் தீவினையால் நேர்ந்தது. இராமன் இராவணனை அழித்ததால் தீவினையும் அழிந்தது. செயல் வடிவில் நாம் நல்வினைகள் செய்ய வேண்டும். சுயநலத்தைக் கைவிட்டு பகவானை நேசித்தல் வேண்டும் என்பது இதன் பொருளாகும். 

 

 

மாத் தொழில் மடங்கச் செற்று மருது இற நடந்து வன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னைசெவ்வித் தோள் புணர்ந்த எந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கைத்
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.     1290

 

கண்ணனைக் கொல்வதற்கு கம்சன் குதிரை வடிவில் கேசிகாசுரன் என்ற அசுரனை அனுப்பினான். அவனது செயல் யாவும் ஒடுங்குமாறு கண்ணன் அவனை அழித்தான். மருத மரங்கள் வடிவில் இரு அசுரர்கள் வந்தார்கள். அம்மரங்கள் இற்று விழுமாறு தவழ்நடைக் கற்றவனாய் வந்து அவர்களையும் அழித்தான். ஏழு காளைகளையும் அடக்கி நப்பின்னையின் தோள்களைச் சேர்ந்த பகவான் நாங்கூர் திருமணிகூடத்தில் வாழ்கிறான்.  இத்தலமானது வேதத்தொழில் செய்து அதனைக் கற்றுத் தரும் வல்லவர்கள் உன்னதமானக் காரியங்களைச் செய்து வருகிறார்கள். ஆசையோடு தருமங்களை அனுட்டிக்கும் அக்கினி காரியங்கள் செய்யும் வைதிகர்கள் வசிக்கும் புனிதத் தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

மனிதனுடைய ஆர்வம் வேகமாகச் செயல்படும். அது பொதுவாக, குணமாக வெளிப்படும். பற்று, பாசம், விஸ்வாசம், பிரியம் போன்ற நல்ல குணங்களாகவும்; வெறுப்பு, துரோகம், பழிவாங்குதல் போன்ற கெட்ட குணங்களாகவும் வெளிப்படும். பொதுவாகச் சொன்னால் குணமே மனிதன், குணமே வாழ்க்கை எனலாம். குணங்களை மாற்றுதல் எளிதன்று. இருந்தாலும், முயன்று ஓரளவு மாற்றலாம். அறிவைப் படிப்பு அதிகரிக்கும். குணத்தை பழக்கம் பக்குவப்படுத்தும். நமக்குத் துன்பம் வந்தால் அறிவு அதனை ஆராயும். எதனால் இத்துன்பம் வருகிறது என்ற எண்ணம் வரும். இறைவனுடன் நாம் கலக்கும்போது இத்துன்பத்திற்கான காரணம் புரியும். பொதுவாக இதற்கான காரணம் நமது தவறினால் ஏற்பட்டது என்பதை அறிய முடியும். இதனை மறுமுறை செய்யாமலிருக்கும் மனத்தெளிவு அப்போது பிறக்கும். அதுவே இறைவன் நமக்களிக்கும் வரமெனக் கருதலாம். 

பகவானின் நினைவுகள் கூட இல்லாமல் மனம் போன போக்கில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் அசுர குணங்களைக் கொண்டதனால் ஏற்படுகிறது.  நம் உற்ற துணையான  பகவானின் நிழலில் இத்தகைய அசுர குணங்களை அழித்து முக்தி பெற வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.     

      

தாங்கு அரும் சினத்து வன் தாள் தடக் கை மா மருப்பு வாங்கி
பூங் குருந்து ஒசித்து புள் வாய்பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழைத்
தீங் கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.          1291

 

அதர்மம் செய்யும் நபர்கள் அனைவரும் இறுதியில் இவ்வாறு அழிவார்கள் என்பது கிருஷ்ணாவதராம் நமக்குப் போதிக்கின்றது.  கொடியவனான கம்சன் கண்ணனைக் கொல்வதற்காக, அடங்கிடாத கோபம் கொண்ட வலிமையுள்ள கால்களை உடையதும் துதிக்கையையும் உடைய குவலயாபீடம் என்னும் யானையினுடைய தந்தத்தைப் பிடுங்கியவன்,  அதனை அழித்தவன்.  பூத்த குருந்த மரத்தை வேரோடு முறித்தவன், கொக்கு வடிவில் வந்த பகாசுரன் என்னும் அசுரனின் வாயைப் பிளந்தவன், முரட்டுக் காளையாக வந்த அரிஷ்டாசுரன் என்னும் கொடிய அசுரனை அழித்த பகவான் திருநாங்கூர் திருமணிக்கூடத்தில் எழுந்தருளியுள்ளான். இத்தலமானது இனிய மாங்கனிகளை உண்ட பெண் குரங்கானது வாழை மரங்களுக்குத் தாவியதனால் அங்குள்ள கரிய வண்டுகள் அதிர்ந்து சிதறி திசையெங்கும் ஓடும்படி குரங்குகள் வாழைப் பழங்களைத் தின்னும் வளமுடைய ஊராகும் என்ற பொருளில் அமைந்துள்ளது. எனவே இத்தலத்துக் பெருமானை தரிசித்து பிறவிப் பயனை அடையுமாறு மக்களிடம் வேண்டுகிறார்.

கம்ஸனால் ஏவப்பட்டுச்‌ சினம் உண்டு வந்த குவலயாபீடமென்னும்‌ மதகரியின்‌ மருப்பையொசித்து அழித்தவனும்‌, ௮சுராவேசம் பெற்று குருந்த மரத்தை முறித்துத்‌ தள்ளினவனும்‌, கொக்கின்‌ வடிவுகொண்டு வந்த பகாசுரனுடைய வாயைப்‌ பிளந்தொழித்தவனும்‌, எருதுகளை அடர்த்தவனுமான எம்பெருமான்‌ நாங்கூர்த்‌ திருமணிக்கூடத்திலுள்ளான்‌.

நாங்கூர்‌ எப்படிப்பட்டதென்னில்‌ அவ்வூர்ச்‌ சோலைகளில்‌ குரங்குகளானவை முந்தி மாம்பழங்களைப் புசித்து அந்த ரஸம்‌ திகட்டவே, வேறொரு ரஸத்தினால்‌ போதுபோக்க வேணுமென்று வாழைப் பழங்களை நுகரத்தொடங்குகின்றன; அப்போது அவற்றில்‌ மதுவைப்‌ பருகுவதற்காக ஏற்கனவே படிர்ந்திருந்த வண்டினங்கள்‌ அஞ்சிக் கிளம்புகின்றன. இதுவாயிற்று அவ்வூர்ச்‌ சோலைகளின்‌ நிலைமை.

      

 கரு மகள் இலங்கையாட்டி பிலங் கொள் வாய் திறந்து தன்மேல்
வரும் அவள் செவியும் மூக்கும்வாளினால் தடிந்த எந்தை
பெரு மகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவு இலாத
திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.     1292

 

மிகவும் கீழ்த்தரமான சண்டாள குணத்தைப் பெற்ற சூர்ப்பனகை இலங்கையை ஆட்டுவித்தாள். இவள் குகை போன்ற தனது அகன்ற வாயைத் திறந்து தன் மீது மோகம் கொள்ளுமாறு ஸ்ரீராமனிடம் நெருங்கியபோது இவள் நாணம் இல்லாதவள், இவள் நல்லவளும் அல்ல என்று அவளது மூக்கு, காதுகளை வாளால் அறுக்கக் காரணமான பகவான் திருநாங்கூர் திருமணிக்கூடத்தில் வீற்றிருக்கிறான். இத்தலமானது பெருமை மிக்க, அடியார்களின் குற்றங்களை என்றும் அறிந்திராத பூமிதேவியும், ஸ்ரீதேவியும் ஒரு போதும் பிரியாமல் சேர்ந்திருக்கும் புனிதமான தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

மட்டமான ஸ்த்ரீயான  இலங்கையில்  அதிகாரம் செலுத்துமவளாய்  குகை போன்ற  வாயைத் திறந்துகொண்டு  தன் அருகில்  வந்த சூர்ப்பனகையின்  காதையும் மூக்கையும்  வாளினால்  அறுத்த எம்பெருமான்  பெருமையுடைய  பூதேவியும்  தன்னை விட்டுப் பிரியாத  திருமகளும் இருக்கும்  திருநாங்கூரின்  திருமணிக்கூடத்தில் உள்ளான்.

      ஸ்ரீராமனிடம் தகாதவாறு நெருங்கி வந்த சூர்ப்பனகையின் அவயங்களை அறுத்தெரிந்தவன் இலக்குவன்தான். ஆனாலும் இராமன் அச்செயலைப் புரிந்தான் என்றுள்ளது. இராமனுக்கு லஷ்மணன் என்றும் வலது கரமாகவே செயல்பட்டான். எனவே லஷ்மணன் செய்த இச்செயலுக்குத் தனது வலக்கரத்தைக் காரணம் காட்டி தானே அச்செயலைப் புரிந்ததாக ஏற்றுக் கொண்டான். அத்தகையவன் திருமணிக்கூடத்தில் வீற்றிருக்கிறான் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.   

      

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை
ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.       1293

 

மச்சம், வாமனம், அன்னம், வராகம், நரசிம்மம், கல்கி போன்ற அவதாரங்களை எடுத்த பிரம்மாண்ட நாயகனானவனும், சூரிய, சந்திரர் மற்றுமுள்ள  எல்லா பொருட்களுமாகியவனுமாய் உள்ள பகவான் நாங்கூர் திருமணிக்கூடத்தில் வீற்றிருக்கிறார். இத்தலமானது வலிமை கொண்ட பாண்டியனும், பாண்டிய நாட்டின் வடக்கில் உள்ள சோழதேசத்து அரசர்களும் தோற்கும்படி செய்த வல்லமை பெற்றவர் வாழும் இடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

மத்ஸ்யாவதாரம்,‌ வாமநாவதாரம்,‌ ஹம்ஸாவதாரம்,‌ வராஹாவதாரம்‌ நரசிம்ஹாவதாரம்,‌ ஹயக்ரீவரவதாரம்‌ முதலிய பல திருவவதாரங்கள்‌ செய்தருளினவனும்‌, சந்திரன்‌ சூர்யன்‌ முதலிய சகல பதார்த்தங்களும்‌ தனக்கு ப்ரகாரமாகத்‌ தான்‌ ப்ரகாரியாய்‌ நிற்பவனுமான எம்பெருமான்‌ நாங்கூர்‌ திருமணிக்கூடத்‌திலுள்ளான்‌. அத்திருநாங்கூர்‌ எப்படிப்பட்டதென்னில்‌  பண்டு ஒரு சமயத்தில்‌ தென்‌ திசைத்‌ தலைவனான பாண்டியராஜன்‌ படையெடுத்து வந்து அவ்வூரை ஆக்ரமிப்பதற்காகப்‌ புகுகையில்‌ அவனை விரட்டி, ஓட்டிவிட்டனர். அவ்வூரில் உள்ள அந்தணர்கள்‌ மற்றொரு சமயத்தில்‌ சோழராஜனையும்‌ அப்படியே தோற்கடித்து ஓட்டினாராம்‌. இப்படிப்பட்ட வீரர்கள்‌ வாழுமிடம்‌ திருநாங்கூர் மணிக்கூடமாகும்.

      பெருமான் அவ்வப்போது மக்கள் தாங்கொணாத் துயரை அனுபவிக்கும்போது அவதாரங்கள் பல எடுத்துத் தீமையை அழித்து மக்களைக் காப்பார். தனக்காகவும் தனது அடியவர்களுக்காகவும் இத்தகைய அவதாரங்களை எடுப்பார். ‘மீனோடாமை, கேழலரி குறளாய் முன்னுமிராமனாய்த் தானாய், பின்னுமிராமனாய்த் தாமோதரனாய் கற்கியுமானான்’ என்று பாடியுள்ளார். அவ்வப்போது பெருமான் தான் எடுத்த அவதாரங்களை ஆழ்வாருக்கு நினைவுபடுத்தி, ஆழ்வீர், ஆச்ரிதர்க்காக நாம் அவதரித்த அவதாரங்களை அநுஸந்தித்துத் தரிக்க மாட்டீரோ? என்று ஆழ்வாரைக் கேட்பாராம் .

      

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.       1294

 

பெரிய மலைகளும், விரிந்த ஆகாயமும், அகன்ற பூமியும், குளிர்ச்சியான நீரும், சந்திர சூரியர்களும், நட்சத்திரங்களும் ஆகிய எல்லாமுமாகி இருக்கும் பகவான் திருநாங்கூர் திருமணிக்கூடத்தில் வீற்றிருக்கிறான். இத்தலமானது கழனிகளும், நந்தவனங்களும், பெரிய திருவீதிகளும், மாட மாளிகைகளுமாகிய அனைத்து இடங்களிலும் தென்றல் காற்றானது நறுமணம் பரப்பி வீசுகின்ற இடமாகும் என்று ஆழ்வார் கூறுகிறார்.

      இவ்வுலகில் உள்ள அனைத்தும் பகவானின் படைப்புகளாகும். இவ்வுலகமே பகவானின் வடிவம்தான். ஆனால் மனித மனமோ வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. அதனால்தான் பகவானிடமிருந்து மனிதன் எப்போதும் விலகியே உள்ளான். அவனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதால்தான் துன்பங்களில் நாம் உழன்று கொண்டிருக்கின்றோம். மனிதனைக் கண்டு மனிதன் அச்சப்படுகிறான். பகவானின் பிரதி பிம்பங்களாக அனைத்து உயிர்களும், உயிர் அற்ற பொருள்களும் உள்ளன. பகவான் எவ்வுயிரையும் கைவிடுவதில்லை. நாம் செய்யும் செயல்களே நன்மை தீமைக்கு வித்திடுகின்றன. இதனைப் புரிந்து கொண்டால் இறைவனின் ஆசியுடன் நாம் வாழ்வாங்கு வாழலாம் என்பதே இதன் கருத்தாகும்.

      

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய
செங் கயல் உகளும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே      1295

 

      சந்தேகம், நம்பிக்கை, பொய், சத்தியம், இப்பூமண்டலத்தைக் காக்கும் பரம்பின மேகங்கள், மற்றுமுள்ள பொருட்களாக விளங்கும் பகவான் நாங்கூர் திருமணிக்கூடத்தில் உறைகின்றான். இத்தலமானது தாமரையிலிருந்து வழியும் மகரந்தம் கலந்த தேனை உண்ட வாளை மீன்கள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து விளையாட, அவற்றிற்கு அஞ்சிய கயல் மீன்கள் வேறிடத்திற்குப் பாயும் வளமுடைய இடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      ஸந்தேஹமும்,   நிச்சயமும்,  அஸத்யமும்,  ஸத்யமும்  இந்த உலகத்தைக் காக்கும்  பலனை எதிர்பார்க்காத  மேகமும்  மற்றுமுள்ள  பொருள்களும் தானேயாய் இருக்கும்  எம்பெருமான்  தாமரைப் பூவிலிருந்து  பெருகின தேனை  பருகிய வாளை  மீன்கள் இங்குமங்கும்ஓடச் சிவந்தத கயல் மீன்கள்  பயந்து துள்ளுமிடமான  திருநாங்கூரின்  திருமணிக்கூடத்தில் உள்ளான்.

      இப்பாசுரத்தில் பகவான் எல்லாமுமாக இருப்பதை ஆழ்வார் குறிப்பிடுகிறார். மகாபாரதப் போரில் கண்ணன் செய்த செயல்களில் சந்தேகங்களும், அவ்வப்போது சூழ்ச்சிகளும் கலந்து வந்துள்ளன. தருமத்தை வெற்றி பெறச் செய்வதற்கு பரமாத்மா இத்தகைய சூழ்ச்சிகளை செய்ய வேண்டியதாயிற்று. துரோணரைவீழ்த்தத் தருமனை பொய் சொல்ல வைத்தது கண்ணன்தான். தருமம் சூட்சுமம் நிறைந்தது. பகவானின் திருவுள்ளப்படி சந்தேகம், பொய்கள்கூட செயல்படுகின்றன என்பது இதன் பொருளாகும். தருமத்தை வெற்றிபெறச் செய்ய எந்த அஸ்திரத்தை பகவான் தொடுப்பான் என்பது எவராலும் அறிய இயலாது.

      

 பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.       1296

 

பாவம், புண்ணியம்,  மோட்சம், சுகம், துக்கம், கோபம், சாந்தம், மற்றுமுள்ள சத்வம் போன்ற எல்லா குணங்களுமாக இருக்கின்ற பரந்தாமன் திருநாங்கூர் திருமணிக்கூடத்தில் வீற்றிருக்கின்றான். இத்தலமானது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று மூர்த்திகளுள் நாங்கள் வணங்கும் மூர்த்தி திருமாலேயெனப் புரிந்து கொண்டு முனிவர்களும் தேவதைகளும் வந்து சேவிக்கும் புனிதத்தலமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள செய்யக்கூடாதென்று மறுக்கப்பட்ட செயல்களும், செய்ய வேண்டும் என்ற செயல்களும் ஆகிய இரண்டுமே எம்பெருமானிட்ட வழக்கு எல்லாவற்றிற்கும் மேற்பட்டதான மோட்ச சுகமும், மற்றுமுள்ள இதர சுகங்களும் அவன் வகுத்ததாகும். மேலும் மனங்கலங்கி இருக்கின்ற கோபமும், தெளிந்துள்ள அருளும் குணமும், மற்றும் சத்வ, ரஜ, தமோ குணங்களும் அவனால் வழங்கப்பட்டதாகும். இவ்விதம் சகலத்தையும் பரிபாலிக்கும் குணம் கொண்ட எம்பெருமான் திருமணிக்கூடத்தில் உள்ளான். இவ்வுலகம் என்னும் நாடக மேடையில் நாம் எல்லோரும் ஒரு கதாபாத்திரம். அதை ஆட்டுவிப்பவன் இறைவன். நமக்கு வழங்கிய கதாபாத்திரத்தை நாம் சரிவரச் செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால் ஆண்டவனும் நமக்குத் துணை வருவான்

என்பது இதன் கருத்தாகும்.

      

 திங்கள் தோய் மாட நாங்கூர்த் திருமணிக்கூடத்தானை
மங்கையர் தலைவன் வண் தார்க் கலியன் வாய் ஒலிகள் வல்லார்
பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன் உலகு ஆண்டு பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்துஊடு போய் விளங்குவாரே.           1297

 

சந்திர மண்டலம்வரை படர்ந்து உயர்ந்திருக்கும் மாடங்களைக் கொண்ட திருநாங்கூர் திருமணிக்கூடத்தில் உறையும் பகவானைக் குறித்து திருமங்கை மன்னனும், அழகிய மாலையை அணிந்தவருமான கலியன் பற்றிய இப்பத்துப் பாசுரங்களையும் பக்தியோடு பாடக்கூடியவர்கள் அலை பொங்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகை ஆட்சி செய்து பின்னர் சொர்க்க லோத்தில் வசித்து அதற்கு மேல் சூரிய மண்டலத்தின் வழியே சென்று வைகுண்டத்தில் வாழ்வார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

சந்திர மண்டலத்தளவும்‌ ஓங்கியிருக்கின்ற மாடமாளிகைகளினால்‌ அழகு பெற்றுள்ள திருநாங்கூரில்‌ ஒரு பகுதியான திருமணிக்கூடத்தில்‌ எழுந்தருளியிருக்‌கின்ற எம்பெருமான்‌ விஷயமாகத்‌ திருமங்கையாழ்வார்‌ அருளிச்‌ செய்த இத்திருமொழியைக்‌ கற்குமவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ விருப்பத்தின்படி இவ்வுலக இன்பங்களையும்‌ ஸ்‌வர்க்கலோக சுகங்களையும்‌ பரமபதாநுபவங்களையும்‌ லயிக்கப்பெறுவர்‌ என்‌று பலன் சொல்லித்‌ தலைக்கட்டினாராயி்ற்று.

      மேற்கூறிய பாசுரங்களில் பகவான் எல்லாமுமாக இருக்கிறார் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.  உண்மையன்றி பொய்யிலும் பகவான் நிறைந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. தீமை, துக்கம், கோபம், சந்தேகம் போன்ற எதிர்மறையிலும் பகவான் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி நாம் தீயவர்களையும் நேசிக்க வேண்டும் என்றும் அறியப்படுகிறது. புண்ணியம் பெற பிச்சைகாரர்களுக்கு கொடுத்து உதவுதல் நலம். அவர்களே இல்லாதபோது நாம் எவ்விதம் உதவி புரிந்து புண்ணியத்தை சேர்க்க முடியும். எனவே எல்லா வடிவங்களிலும் கடவுளைக் காணும் ஞானத்தை நாம் பெறுதல் வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...