குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ. 725
ஊழிக்காலத்தில் உலகத்தை உண்டு ஆலிலை மேல் யோக நித்திரை செய்வனே! வாலியைக் கொன்று வாக்குறுதிப்படி சுக்ரீவனை அரசனாக்கியவனே! அலையினால் ரத்தினங்களை கரை சேர்க்கும் திருக்கண்ணபுரத்தில் வீற்றிருக்கும் என் கரிய மாணிக்கமே! திருவாலி திருநகருக்குத் தலைவனே! அயோத்தியின் அரசனே! உன்னைத் தாலாட்டுகிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆலின் இலைமேல் சிறு பாலகனாய் உருக்கொண்டு பிரளயக் காலத்தில் உலகமெல்லாம் உண்டவனே! வாலியைக் கொன்று கிஷ்கிந்தை அரசை இளைய வானரமாம் சுக்ரீவனுக்குக் கொடுத்தவனே! தென்றல் காற்று நதியின் கரையின் மேல் அலை அடிக்கும்படி செய்யும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! ஆலி நகருக்கு அதிபதியே! அயோத்தி மன்னனே! தாலேலோ! என்று பாடுகிறார்.
இதுவரை கணக்கற்ற ஊழிக்காலங்கள் தோன்றி முடிந்துள்ளன. தோற்றமும் ஒடுக்கமும் பகவானால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் பகவானின் கருணையினால் தோன்றியுள்ளோம். அதே கருணையினால் அவர் எல்லோரையும் ஐக்கியமாக்கியுள்ளார். அந்தப் பேரின்பத்தை அறிந்து கொள்ளாமல் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். உண்மை நிலையினை உணர்தத்தான் பகவான் ஊழிகாலம் தோறும் ஆலிலை மேல் நித்திரை கொண்டுள்ளார். அத்தகையவனை நான் தாலாட்டுகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே. 1078
கண்ணனாக அவதரித்த காலத்தில் நப்பின்னையுடனும், மலர்மகளோடும் அன்புடன் கலந்திருப்பவன். அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவன். அத்தகையவன் என்றும் உறையும் ஊர் திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் ஆகிய இடங்களில் முறையே நின்றவனும், அமர்ந்தவனும், இருந்தவனும், நடந்தவனும் உள்ள எம்பெருமான் இந்நான்கு நிலைகளில் நீர்மலையில் காட்சி தருகிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
கண்ணனாக அவதரித்தபோது நப்பின்னை பிராட்டியோடும், திருமகளோடும் அன்புடன் கலந்து, எக்காலத்தும் அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவருக்கு என்றும் இருக்கும் இடமாக இருப்பது திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட நீர் வளமுடைய திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் ஆகிய இடங்களில் முறையே நின்றவனும், அமர்ந்தவனும், படுத்தவனும், நடந்தவனுமாகிய பெருமானுக்கு இடமாகிய மலையாக இருப்பது திருநீர்மலையாகும்.
இப்பாசுரத்தில் ‘ஆயர் குலக்கொடி’ என்பது நப்பின்னையைக் குறிப்பதாகும். ‘அணிமாமலர் மங்கை’ என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். அவளின் அம்சமானவளே ருக்மணி பிராட்டியாகும். மூன்று பிராட்டிகளை அடைய அசுரர்களை அழித்தவனாவான். அரக்க குணம் கொண்ட துரியோதனனை குருக்ஷேத்திரத்தில் பகவான் அழித்தார். இராவணனை இலங்கை போரில் அழித்தார். இரண்ய சிசுபாலர்களை அழித்து மக்களைக் காத்தார். பலரை துன்புறுத்தி வந்த கம்சனையும் அழித்தார். எனவே அசுர குணம் கொண்டவர்களுக்குப் பகவான் இரக்கமே காட்டமாட்டார் என்பது இப்பாசுரவழி அறியப்படுகிறது.
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய் திருவே என் ஆர் உயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே. 1188
அழகு மிக்க இளந்தளிர்களைக் கொண்ட பெரிய அசோக மரத்தின் தளிர்கள் எல்லா இடத்திலும் பரவி இருப்பது சிவந்த நெருப்புத் தழலாக ஜொலிக்கும், திருவாலியில் எழுந்துள்ள பெருமானே! எனது செல்வமே! என் ஆருயிரே! நீயாகவே வந்து உன் அடியவரான என் உள்ளத்தில் புகுந்து கொண்டாய். அவ்விதம் புகுந்தபிறகு வணங்கும் என் சிந்தைக்கு இனியவனாய் விளங்குகிறாய் என்று ஆழ்வார் கூறுகிறார்.
எம்பெருமானுக்கு பரமபதத்திலும், திருப்பாற்கடலிலும், திருமலை முதலான உகந்தருளின இடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமாகையாலே. இப்போது அப்பெருமான் இவ்வாழ்வாரது திருவுள்ளத்திலே வந்து குடிகொண்டான். அவனாகவே வந்து புகுந்தாலும் ‘உன்னை இங்கிருக்க வொட்டேன்’ என்று அடித்துத் துரத்தும் பாவிகளுமுண்டே ஸம்ஸாரத்தில், அப்படியல்லாமல்” இசைவித்து என்னையும் தாளிணைக் கீழிருத்தும் அம்மானே என்னுமாபோலே பெருநன்றி பாராட்டின தமக்குத் தித்தித்திருந்தமை சொன்னபடி. ஆழ்வாருடைய திருவாராதனத் திருமூர்த்திக்குச் சிந்தனைக்கினியானென்று திருநாமம் ப்ரஸித்தம். இத்தலத்தின் சோலைப் புறமெங்கும் அசோக மரங்கள் அடர்ந்து கிடப்பதால் அவற்றின் செந்நிறமான தளிர்களின் ஒளி எங்கும் வீசி அக்நிஜ்வாலை பரவியிருப்பது போல் விளங்குகின்றது; ஆகவிப்படி எங்கும் நெருப்புக் கொளுத்தினாற்போலே அழகியதாய்த் திகழ்கின்ற திருவாலி மாநகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! நீ உன்னுடைய சிந்தையிற் புகுந்து தித்தித்திருக்கின்றாய் என்றாராயிற்று.
எம்பெருமான் பரமபதத்திலும், திருப்பாற்கடலிலுல், திருமலையிலும் மற்றும் உகந்தருளின இடங்களில் இருப்பதைக் காட்டிலும் மெய்யடியாருடைய இதயத் தாமரையில் வாழ்வதை அவன் விரும்புகிறான். நான் வேண்டாமல் என் உள்ளத்தில் வந்து புகுந்தான் என்று ஆழ்வார் கூறுகிறார். மனதில் இருக்க வேண்டாம் என்று துரத்திவரும் பாவிகளாகிய சம்சாரிகள் இவ்வுலகில் உள்ளார்கள். அவ்விதம் இல்லாமல் ‘இசைவித்தென்னை உன் தாளிணைக் கீழிருத்துமம்மானே’ என்பதுபோல் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறார்.
நீலத் தட வரை மாமணி நிகழக் கிடந்ததுபோல் அரவு அணை
வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி ஆலி அம்மானே. 1189
ஆலைகளில் கரும்புச்சாறு காய்ச்சுவதால் ஏற்படும் கரும்புகையானது கருமையான மேகங்கள்போல் பரவி மணம் கமழ்ந்து இருப்பதைக் கண்டு மயில் கூட்டமானது அதை மழைமேகம் என்று கருதி சோலையில் தோகை விரித்துக் கூத்தாடும், அழகிய திருவாலியில் உறையும் பெருமானே! நீலநிற மலையில் இரத்தினங்கள் உதிர்ந்து படுத்திருப்பது போன்று திருப்பாற்கடலில் அனந்தாழ்வானின் மீது கௌஸ்துபமணி விளங்கக் கண் வளர்ந்தாய். இப்போது என் நெஞ்சில் புகுந்து நீங்காதுள்ளாய் என்று பாடுகிறார் ஆழ்வார்.
அடியேனுடைய மனத்தில் சமயம் பார்த்து வந்து சேர்வதற்காகவே நீ திருப்பாற்கடலில் உபாய சிந்தனை பண்ணிக்கொண்டு கிடந்தாய் என்ற கருத்து விளங்கும். நீலநிறத்ததொரு மலையின் மேல் மாமணி விளங்குவது போலத் திருப்பாற்கடலில் அரவணைமேற் கிடந்தாய் என்றவிதனில், நீலமலையின் ஸ்தாநத்திலே எம்பெருமானையும் மாமணியின் ஸ்தாநத்திலே ஸ்ரீகௌஸ்துப மணியையும் உபமேயமாகக்திலே கொள்ள வேணும். எம்பெருமானுடைய கரிய திருமேனியின் நிழலீட்டாலே பாற்கடலும் பாம்பணையும் நீலநிறம் பெற்றனவென்று கொண்டு, பாற்கடற் பாம்பணையை நீலத்தடவரைக்கு உபமேயமாகவும் எம்பெருமானை மாமணிக்கு உபமேயமாகவும் கொள்ளலாம். கரும்பாலைகளில் கருப்பஞ்சாறு ஆடுவதனால் விசேஷமாகப் புகை; கிளம்பி எங்கும் பரவியிருப்பதைக் கண்ட மயில்கள் அப்புகைத்தரளை மேகத்தரளாக மயங்கிக் களித்துக் கூத்தாடுகின்றனவாம். மயில்கள் மேகங்களைக் கண்டு தோகை விரித்துக் கூத்தாடுதல் இயல்பு.
அடியேனுடைய நெஞ்சில் சமயம் பார்த்து வந்து புகுந்து கொள்வதற்காக நீ திருப்பாற்கடலில் உபாய சிந்தனை செய்து கொண்டிருந்தாயோ! என்று நீலமலை ஸ்தானத்தில் எம்பெருமானையும், மாமணியின் ஸ்தானத்தில் கௌஸ்துப மணியையும் ஒப்பிட்டுள்ளார். மக்களாகிய நாம் சிங்கத்தின் வலிமையைப் பெற்றுள்ளதை அறியாமல் பலவிதமான பலவீன எண்ணங்களில் ஆட்பட்டு நாம் நம்மையே இழந்து வருகிறோம். அழியாத ஆத்மா என்று ஒன்று உள்ளதையே நாம் மறந்து போகிறோம். பகவான் நம் உள்ளத்தில் புகுந்துவிட்டான் என்று நினைக்கையில் அச்சமற்ற ஆண்மைத் தன்மை வருகின்றது. நற்குணங்களைப் பெற்றால் பகவான் நம் உள்ளத்தில் வந்து அமர்வது உறுதி என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது
இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளஞ் செறுவில்
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு
அந் நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே. 1190
அலை எரிகின்ற நீர்வளம் மிக்க வயல்களில் செந்நெற் பயிர்கள் கனம் தாங்காமல் வரப்புகளில் சாய, அறுவடை செய்பவர் முகத்தில் துள்ளி குதித்த மீன்கள் அவர்கள் பிடியிலிருந்து தப்பி நீர் நிறைந்த கரும்புத் தோட்டங்களில் போய்ச் சேரும். வளமான திருவாலியில் எழுந்தருளி இருக்கும் மணவாளா! நேற்று போனான், இன்று வருவான் என்று எதிர்பார்த்து ஏங்கவிடாமல் நிலையாக என்னுள்ளில் குடியிருப்பது இப்பிறவி முழுமைக்கும் என்று எண்ணியிருந்தேன் என்று பாடுகிறார் ஆழ்வார்.
உலகத்திலே ஒருவர் விட்டுப் பிரிய நேர்வதுண்டே, காதலியைக் காதலன் விட்டுப் பிரிந்து தேசாந்தரம் சென்றால் விரஹ வ்யஸநத்தை ஒருவாறு ஆற்றிக் கொள்வதற்காக ‘நேற்றுப் போனார், இன்று வந்திடுவர்’ என்று சொல்லிக் கொண்டே காதலி காலங்கழிப்பது வழக்கம். அப்படிச் சொல்லிக் கொண்டு ஏங்கிக்கிடக்க வேண்டாதபடி வயலாலிமணவாளன் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றமையைக் கூறுகிறார். நேற்று ஒரு நாள் கழிந்தது, இற்றை நாள் வந்தது, இதுவுங் கழிந்து நாளை நாள் வரக்கடவது, அதுவும் கழிந்து அடுத்த நாள் வரக்கடவது என்றிப்படியே பல்லைக்கடித்துக் கொண்டு பிரிவு நாள்களை எண்னியிருக்க வேண்டாதபடி என்றுமாம். ஆழ்வார்! இப்போது உம்முடைய நெஞ்சிலே எம்பெருமான் இப்படி வந்து புகுந்தாலும் அடுத்த க்ஷணத்திலே ஓடிப்போய்விட மாட்டானை என்று பிறர்சங்கிக்க இடமில்லாதபடி இருக்கிறாரா்.
கழனிகளில் செந்நெற் பயிர்கள் வானோங்கி வளர்ந்திருந்ததனால் அவற்றை நேரே நின்று அறுக்க முடியமால் கதிர்த்தலைகளை மடக்கி வரப்புகளிலே படியவைத்து அறுக்கின்றார்களாம் பயிர்த்தொழிலாளர். அப்படி யறுக்கும்போது அக்கதிர்களைச் சேரப்பிடித்த பிடியிலே அகப்பட்டுக்கொண்ட வாளைமீன்கள் அவர்களுடைய முகத்திலே எழப்பாய்ந்து அபாயமுள்ள அவ்விடத்தைவிட்டுக் கவலையின்றி வாழ்வதற்காகச் சமீபத்தில் உள்ள கருப்பங் காட்டிலே சென்று சேர்கின்றனவாம்.
காதலன் காதலியை விட்டுத் தூரதேசத்திற்கு சென்றபோது நேற்று போனான் இன்று வருவான் என்று பிரிவு நாட்களை நினையாமல் மனச்சாந்தி கொள்வாளாம். அது போன்று நினையாமல் வயலாளி மணாளன் என்னுள்ளில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார். நடுவில் பெருமான் பிரிந்து விடுவார் என்று எண்ணாமல் இப்பிறவி முழுதும் இருப்பார் என்று எண்ணுகிறேன் என்று கூறுகிறார். திருக்கோயில் போன்ற இந்த உடல் அமைப்பின் உள்ளே பகவான் ஆத்மாவாகக் குடியேறியுள்ளார். நாம் பக்தியுடன் முதிர்ச்சி பெற்றால் பகவானை அறிந்து கொள்ளலாம் என்பது இதன் பொருளாகும்.
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே. 1191
புன்னை, சுரபுன்னை மரங்கள் செழித்து வளர்ந்துள்ள அழகிய அகன்ற சோலைகள் கூடிய பொய்கைகளில் அன்னப் பறவைகள் கூடி வாழும் வளமான வயல்கள் நிறைந்த எழிலான திருவாலி நகரில் வாசம் செய்பவனே! மின்னலைப் போன்ற இடையை உடைய மாதர்கள் மேல் சிந்தை செய்யாமல் உன் திருப்பாதக் கமலங்களுக்கே நான் பணி செய்யுமாறு அருள் புரிந்திருக்கிறாய் என்று பாடுகிறார் ஆழ்வார்.
ஆழ்வார் தம்முடைய பழைய நிலைமையையும் இப்போதைய நிலைமையையும் நினைந்து எம்பெருமானிடத்திலே பெருநன்றி பாராட்டுகின்றார். பிரானே! அநாதி காலமாக நான் எப்படி இருந்தவன்; மாதர்களின் இடையழகிலே மயங்கிக் கிடந்தவனான்றே, அப்படிப்பட்ட என்னை அவ்விஷயத்தைக் காறியுமிழ்ந்து உன் திருவடிகளையே சிக்கெனப் பிடித்துக்கொண்டு வாழுமாறு பண்ணிவைத்தாயே! இந்த மஹோபகாரத்தை நான் மறக்கலாகுமோ? என்கிறார்.
ஆழ்வார் தன் முந்தைய நிலையையும், தற்போதைய நிலையையும் நினைத்து எம்பெருமானிடத்தில் நன்றியுடன் பாடுகிறார். மாதர்களின் பெரு அழகில் மயங்கிக் கிடந்து, அதனால் துன்பம் கொண்டு, அல்லல்பட்டு வந்த என்னை உன் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வைத்தாயே. இந்தப் பரோபகாரத்தை நான் மறக்கலாகுமோ என்று மனமுருகிப் பாடுகிறார். பெண் மோகத்தில் இருந்தால் நாம் பகவானை அடைய முடியாது. இந்த அறியாமையால் பாமரர் மட்டுமின்றி சாத்திரம் படித்தோரும் அகப்பட்டுத் தடுமாறுகிறார்கள். இதுவும் முன்வினைப் பயனால் வந்த கொடுமையாகும். அந்த மாயை அகற்ற வல்லவர் மாயக் கிருஷ்ணன். அதனால் அவனைச் சரண் புகுமாறு கூறுகிறார் ஆழ்வார்.
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே. 1192
பாசுரங்களின் மதுரமான ஒலியும், சங்குகளின் முழக்கமும் எங்கும் நிறைந்தொலிக்கப் பலவகையான வாத்திய முழக்கங்கள் எல்லா இடங்களிலும் பரவி இருக்க, நாட்டிய ஓசையும் இடையறாது கேட்கும் அழகிய திருவாலி நகரின் பெருமானே! சுக்ரீவனுக்கு நம்பிக்கை உண்டாக ஏழு மரா மரங்களை ஒரே அம்பால் துளைத்த இராகவா! உன் திருப்பாதக் கமலங்களில் பலவகையான மலர் மாலைகளை நெடுங்காலம் சமர்பித்து வழிபடும் அடியேனுடைய மனம் உன்னைப் பிரிந்து வருத்தமடையும்படி நீ எண்ணலாகாது என்று கூறுகிறார் ஆழ்வார்.
என்றும் உனது திருவடிகளிலேயை அந்தரங்கப் பணிவிடைகள் செய்து கொண்டு போது போக்காக நின்ற என் மனதை ஒருபோதும் வாடச் செய்ய நெஞ்சால் நினைக்கக் கூடாது. இவனுக்கு ஒரு குறை நேர்ந்தால் இவனது மனம் வாடிப்போகும் என்று எண்ணி ஒரு நாளும் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும். சுக்ரீவனுக்கு செய்தது போல் எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். என்னை விட்டுப் பிரியாமலிருந்தாலே போதும் என்ற பொருளில் அமைந்துள்ளது.
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே. 1193
சந்தியா வந்தனம் என்ற மூவேளைக்குரிய நித்ய கர்மங்களையும், வேள்வி, விசேஷ கால சடங்குகள், நான்கு வேதங்களையும் முற்காலம் முதல் தாம் ஓதியும், பிறருக்கு ஓதுவித்தும் வருகின்ற அந்தணர்கள் வாழும் அழகிய இடமான திருவாலி நகரில் கோயில் கொண்டிருப்பவனே! உன் எழில் நிறைந்த திருப்பாதக் கமலங்களில் மணம் நிறைந்த எட்டுவகைப் பூக்களையும் சமர்ப்பித்து கைகள் கூப்பி வணங்கியெழும் பழக்கத்தைக் கொடுத்து என் மனதில் வந்து புகுந்த உன்னை வெளியேற விடமாட்டேன் என்று கூறுகிறார்.
மணமிக்க எண் வகை மலராகக் குறிப்பிடுவது கருமுறை, கற்பகம், நாழல், மந்தாரம், சௌகந்தி, செங்கழுநீர், தாமரை, தாழை என்பதாகும். திருவெட்டெழுத்து மந்திரத்திற்கு ஏற்றதாக எட்டுவித மணமுள்ள மலர்களை எம்பெருமானுக்கு சூடி மகிழ்வார்கள். அகிம்சை, இந்திரிய நிக்ரஹம், எல்லா பிராணிகளிடத்திலும் இரக்கம், பொறுமை ஞானம், தவம், தியானம், சத்யம் போன்ற எண் குணங்களையும் இம்மலர்களுக்கு ஒப்பிட்டு மகிழ்கிறார்கள். இத்தகைய பெருமான் நம் மனதில் புகுந்தால் நம்மிடமுள்ள துயரம், சுயநலம், துரோகம், பகைமை, பொறாமை, அச்சம் இவைகள் நம்மை விட்டு அகலும். ஆழ்வார் கூறும் இப்பொருள்கள் அனைத்தும் நமக்கும் சேர்த்துதான் என்று நாம் கொள்ள வேண்டும். இங்கு ஆசையை விளைவிக்கவல்ல திருவடி என்றபடியால் அழகிய திருவடி என்கிறதாயிற்று. உனது ஸ்ப்ருஹணீயமான திருவடிகளைக் கைதொழுது உஜ்ஜீவிக்க வேணுமென்னும் அத்யவஸாயமுடையேனான என்னுடைய ஹ்ருதயத்திலே, நானுன்னை விரும்பாதிருக்க நீயாகவே வந்து புகுந்தபின்பு இனிப் போகவொட்டேன் தானாகவே விரும்பி வந்து சேர்ந்த செல்வத்தைத் தள்ளுவாருண்டோ? என்கிறார்.
உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகலொட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின்மிசை மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே. 1194
எப்போதும் மலர்ந்திருக்கும் புன்னை, புலிநகக் கொன்றை ஆகியவற்றின் குளிர்ந்த நிழலில் தாமரைமலரின் மேல் ஆண் நண்டுகள் கண் துயிலும் வளமான அழகிய திருவாலி நகரில் உறைபவனே! அலைகள் வீசும் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தவன் அங்கிருந்து வந்து உனது அடியவனான எனது உள்ளத்தில் புகுந்த புண்ணியனே! உன்னை இனி ஒருகாலும் வெளியே விடமாட்டேன் என்று பாடுகிறார் ஆழ்வார்.
எப்போதுமுள்ள புஷ்பங்களையுடைய புன்னை மரங்களென்ன ஞாழல் மரங்களென்ன, இவற்றினுடைய நிழலில் குளிர்ந்த தாமரைப் பூவின் மேலே பெரிய ஆண் நண்டுகள் பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திரைக்கிளப் பத்தையுடைய திருப்பாற்கடலில் சயனித்திருந்து சமயம் பார்த்திருந்து அங்கு நின்றும் ஒடிவந்து உனது தாஸனான என்னுடைய மனத்திலே புகுந்த அப்படிப்பட்ட ஸர்வஜ்ஞனே! எனது பாக்கியம் வடிவெடுத்துள்ளவனே! என்னிடம் வந்து சேர்ந்த உன்னை இனி வேறிடம் போகவொட்டேன் என்கிறார்.
எம்பெருமான் திருப்பாற்கடலில் நித்யவாசம் செய்வது எதற்கென்றால் எந்தச் சமயத்திலாவது அன்பர்களின் திருவுள்ளத்தில் புகலாமா என்று தான். நாம் பகவானை நோக்கி ஒரு அடி வைத்தால் அவன் நம்மை நோக்கிப் பத்து அடி வருவான் என்று சொல்லப்படும் கருத்து இப்பாசுரத்தில் உண்மையாகிறது. நம்மை நெருங்கி வருவதற்கு என்றும் தயார் நிலையில் உள்ளான் என்பது பொருள்படும். ஆனால் நாமோ மாயையினால் அவனை மறந்து போகிறோம். எனவேதான் ஆழ்வார் ஒரு முறை என்னுள் புகுந்தால் அவனைச் செல்லவிட மாட்டேன் என்கிறார்.
சங்கு தங்கு தடங் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ!
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளந்
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே. 1195
இன்னிசை பாடும் இளவண்டுகள் மணமிக்க செண்பகம், மல்லிகை இவற்றைத் தழுவிப் பார்த்து அவை கொதித்தபடியால் அதைவிட்டு தென்னம் பாளைகளில் சேரப்பெற்ற திருவாலியில் உறையும் வயலாளி மணவாளா! பெரிய திருப்பாற்கடலிலும், மாமல்லபுரத்திலும் சயனித்திருந்தவனே! இப்போது கருணையோடு என் நெஞ்சத்தில் பிரவேசித்தாய். இனி நீ வெளியேற முயன்றால் வெற்றி கிட்டாது என்ற பொருளில் பாடியுள்ளார்.
இனிய இளவண்டுகள் மணம் மிக்க செண்பகப் பூவையும் மல்லிகை மலரையும் தழுவி மது அருந்தியபின் அவற்றை விட்டுப்போய் இளைய தென்னை மரங்களின் பாளைகளிலே அளைய அழகிய திருவாலிநகரின் பெருமானே சங்குகள் தங்கிய திருப்பாற்கடலிலும் திருக்கடல் மல்லையிலும் சயனித்திருந்த நீ இங்கு என்னுள் அருள்புரிந்து புகுந்தாய். இனி நீயே என்னை விட்டுப்போக நினைக்க முடியுமா என்று வினவுகிறார் ஆழ்வார்.
சங்குகள் தங்கியுள்ள கடற்கரையில் உள்ள திருக்கடல்மல்லையில் அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் பெருமான் ஆழ்வார் நெஞ்சில் குடி புகுந்துள்ளார். பல்வேறு திருப்பதிகள் இருக்க என் நெஞ்சில் வந்து தங்கினாயே! இனி இவ்விடம் விட்டு உன்னால் போக இயலாது என்கிறார். அன்பினால் கட்டுண்டால் நாம் வசப்பட்டு விடுவோம். இதையே ஆழ்வாரும் கையாண்டுள்ளார். எந்நிலையிலும் அன்பும் பொறுமையும் வெல்கிறது. அதனால் ஆழ்வாரும் இத்தகைய அன்பைக் கொண்டு என்னை விட்டு அகல முடியாது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதி ஆகிய வேத மா முனி யாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதி ஆய் இருந்தாய் அணி ஆலி அம்மானே. 1196
வேதங்களையும், முனிவர்களின் வரலாற்றினை உரைத்தவனும், படைப்பின் இரகசியத்தை விளக்கியவனும், எல்லோருக்கும் காரணமாக உள்ள ஆதியானவன் நீயே! வேதவடிவான தேவனே! அழகிய திருவாலி நகரில் கோயில் கொண்டிருப்பவனே! உனது ஆயிரம் நாமங்களைத் துதித்து வழிபட்டு உன்னையே அடைக்கலமாகக் கொண்டுள்ள எனக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையோ வேதத்தின் உள் அர்த்தத்தையோ அருளிச் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
விதிமுறை வகுக்கும் வேதம், வேதமந்திரங்களால் ரிஷிகளின் உற்பத்தி ஆகியவற்றை அறிவித்து மற்றுமுள்ள எல்லார்க்கும் காரணபூதனாயும் இருந்தாய்! அழகிய திருவாலி நகரின் பெருமானே! வேதமொன்றினாலேயே அறியத்தக்கவனே! என் குறும்புத்தனத்தை அறுத்த எம்பெருமானே! ஸஹஸ்ர நாமங்களையும் சொல்லி வணங்கித் துதித்து உன்னை அடைந்த எனக்கு மோக்ஷமடையும் கைங்கர்யம் என்னும் ஒரு உபாயத்தை கூறி அருள்வாய் என்கிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் தாம் உய்வதற்கான ஒரு வழியினை தெரிவிக்க வேண்டும் என்று பெருமானை வேண்டுகிறார். பகவானைத் தவிர ஆறுதல் வார்த்தைகள் கூறுபவர் இவ்வுலகில் எவருமில்லை. நம்மைச் சூழ்ந்துள்ள சுற்றம் இகலோக வாழ்வினை நோக்கிச் செல்ல வைக்கும். ஆனால் பகவானோ நம்மிடமுள்ள அற்பப் பொருட்களை விலக்கி விடுமாறு பல தருணங்களில் சொல்லி வருகிறான். ஆனால் நாமோ அவனது வார்த்தைகளைச் செவி சாய்ப்பதில்லை. மனிதன் ஆன்மாவைத் தரிசனம் செய்வதுதான் அவன் உய்வதற்கு அடையாளமாகும்.
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன்
வல்லர் ஆய் உரைப்பார்க்கு இடம் ஆகும் வான் உலகே. 1197
வண்டுகள் ஒன்றோடொன்று இசைந்து இன்னிசை பாடும் மலர் வனங்களாலே சுற்றிலும் சூழப்பட்ட திருவாலி திருநகரிலே எழுந்தருளி இருக்கும் மாயவனைப் பற்றி மலை போன்ற திடமாயும், திரண்ட தோள்களையுடைய கலியனான திருமங்கையாழ்வார் பாடிய இப்பாமாலையினைப் படித்து மற்றவருக்கும் கற்று கொடுப்பவர்களுக்குப் பரமபதமே இருப்பிடமாகும் என்கிறார் ஆழ்வார்.
வண்டுகள் சோலைகளில் படிந்துள்ள தேனைப் பருகிக் களித்து நிற்கப்பெற்ற திருவாலிப் பெருமானைப் பற்றிக் கவிபாடின இச்சொல்மாலையை பொருளுடன் பாடவல்லவர் திருநாட்டில் நித்ய கைங்கர்யம் செய்யப்படுவார்கள். இத்திருமொழியை ஓதுபவர்கள் எவ்விடத்தில் இருக்கிறார்களோ அதுவே பரமபதம். தனியே பரமபதமென்று ஒன்று கிடையாது. இதே கருத்தினை சுவாமி நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் ‘உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம் ஊரெல்லாம்’ என்று பாடியுள்ளார். மேலும், இத்திருவாய் மொழி கற்க வல்லவர்கள் இருந்த தேசத்தே அவ்வெம்பெருமான் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்று கூறுகிறார்.
தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே . 1198
சிறகு விரியும்படி இருந்து மலர்களை மிதித்துத் தன் துணைவியை விட்டுப் பிரியாமலிருந்து மலர்கள் மலரும்போது அவற்றில் உள்ள மதுவை உறிஞ்சும் புள்ளிகளும் ரேகைகளும் கொண்ட சிறிய வண்டே! அக்கினி வளர்த்து வைதீக காரியங்கள் செய்து அதனால் ஏற்படும் உயர்வினைக் கொண்ட அந்தணர்கள் வசிக்கின்ற திருவாலி நகரில் அம்புகள் தொடுக்கப்பட்டு, பகைவர்களுக்குக் கொடியவனாக விளங்கும் சாரங்கத்தை ஆளவல்ல பெருமானுக்கு என் வேதனையைச் சொல்வாயாக என்று வண்டின் மூலம் தூது விடுகிறார் ஆழ்வார்.
வயலாலி மணவாளன் பக்கலிலே சென்று தமது நிலைமையைச் சொல்லுமாறு ஒரு வண்டை நோக்கிக் கூறுகிறார். அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தமையால், ‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக் கிடக்கும்போது நீ இப்படி உன் காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ?’ என்றது. முன்னடிகளால், வண்டை விளித்து, இனிப் பின்னடிகளால் தனக்காகச் செய்ய வேண்டுங் காரியத்தை நியமிக்கிறாள் பரகாலநாயகி. வயலாலி மணவாளனை நீ இங்கே அழைத்துக்கொண்டு வர வேண்டா; ‘இன்னாள்’ இன்னபாடு பட்டுக்கொண்டிருக்கிறாள்’ என்று ஒரு சொல் அவன் செவியிலே விழவிட்டால் போதுமென்கிறாள்.
வயலாளி மணாளன் அருகில் சென்று தனது ஆற்றாமையை தெரிவிக்குமாறு வரிவண்டிடம் தூது விடுக்கிறார் ஆழ்வார். நான் என் துணைவியினை விட்டுப் பிரிந்து வருந்திக் கொண்டிருக்கும்போது நீ உனது துணையுடன் சல்லாபித்து மலரில் உள்ள மதுவினை உண்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமா. பரக்கால நாயகியானவள் வண்டிடம், வயலாளி மணாளனை நீ இங்கு அழைத்துக கொண்டு வர வேண்டாம். இன்னாள் இன்னபாடு பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று ஒரு சொல் அவன் செவியில் விழவிட்டால் போதுமென்கிறேன் என்று வருந்திக் கூறுகிறார்.
பிணி அவிழு நறு நீல மலர் கிழியப் பெடையோடும்
அணி மலர்மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன்
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே. 1199
கட்டு அவிழ்கின்ற நல்ல மணமிக்க நீலோற்பவ மலர்கள் கிழியும்படியாகத் தனது பேடையுடன் அந்த மலர்களிலிருந்து கொண்டு தேன் உறிஞ்சும் ஆறு காலுள்ள சிறுவண்டே! அழகிய செங்கழுநீர் மலர்கள் நாற்பக்கத்திலும் மலரும் வயல்களையுடைய திருவாலியில் உள்ள மணவாளனுடைய காரிய நோக்கம் என்னவென்று புரியவில்லை. நீ சென்று என் தேகப் பிரிவாற்றாமைாயால் பசலை ஏற்பட்டதைக் கூறுவாயாக என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
நீலோற்பவ மலரில் தனது குடும்பத்துடன் உள் அமிழ்ந்து அதன் தேனை குடித்துக் கொண்டிருக்கிறது சிறிய வண்டு. அதனைப் பார்த்துப் பரக்கால நாயகியானவள், வயலாளி மணாளன் தன்னுடன் இருந்து பிரிந்து சென்று விட்டானென்றும், அவன் என்னை நினைக்கிறானோ இல்லை இங்கே வருவானோ என்று அங்கலாய்க்கிறாள். அவனைப் பிரிந்து நான் பசலை நோயால் வாடித் தவிக்கிறேன். இது தெரிந்தால் உடன் அவன் என்னை வந்து சேர்வான். அவனது காரிய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. வரிவண்டே நீ சென்று என் நிலையை அவனுக்கு எடுத்துச் சொல்வாயாக என்று வேண்டுகிறாள். முன்வினைப் பயன் காரணமாக ஆழ்வார் துன்பப்படுகிறார். வினைப்பயன் தீர்ந்தவுடன் பகவான் அவரிடம் சேருவார் என்பது இதன் பொருளாகும்.
நீர் வானம் மண் எரி கால் ஆய் நின்ற நெடுமால் தன்
தார் ஆய நறுந் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே. 1200
பஞ்ச பூதங்களான நீர், ஆகாயம், பூமி, நெருப்பு, காற்று ஆகியவற்றின் தலைவனாக உள்ள திருமால் தன்னுடைய துளசி மாலையைத் தகுதியுடைய எனக்குக் கொடுத்து அருள் புரியவில்லை. சீர்மை பொருந்திய மலர் வனங்களால் சூழப்பட்ட திருவாலி மாநகரில் உள்ள வயல்களில் வசிக்கும் கூர்மையான அலகினைக் கொண்ட நாரையே, மணவாளனின் திருவுள்ளத்தை நீ சென்று அறிந்து வந்து கூற வேண்டும் என்று பாடுகிறார் ஆழ்வார்.
சோலைகள் நிறைந்துள்ள திருவாலியின் கழனிகளிலே மேய்ந்து வாழ்கின்ற சிறு குருகே, எல்லாப் பொருள்களும் தானேயாய் நிற்கிற ஸர்வேசுவரனான வயலாளி மணவாளன் தனது திருத்துழாய் மாலையை எனக்கு அருள் செய்கின்றிலன்; மார்பில் அணிந்துள்ள மணமாலை என்கொங்கைத் தடத்தில் நெருக்குண்ணும்படி வந்து பண்ணுகிறது. அவனுடைய திருவுள்ளம் என்மேல் மாறிவிட்டதோ அறியேன்; நீ சென்று அவனது திருவுள்ளத்தைத் தெரிந்துகொண்டு வந்து எனக்குச் சொல்லவேணும்; நானொருத்தி இருக்கிறேனென்கிற நினைவோடேயிருந்து இவ்விடம் வருவதாக இருக்கிறானா? அல்லது, இத்தலையை மறந்தே யொழிந்தானா? அபிப்ராயமிருக்கும்படியை அறிந்து கொண்டுவந்து எனக்குச் சொல்லாய் என்கிறாள்.
பரக்கால நாயகியானவள் முன் பாசுரங்களில் வரிவண்டினை தூது விடுத்து பெருமானின் எண்ணத்தை அறிந்து வரச் சொன்னாள். ஆனால் இப்பாசுரத்தில் வெண்மையான கொக்கினைத் தூது அனுப்புகிறாள். மேலும் நான் தூது சொல்லும் வார்த்தைகளை அவனிடம் சென்று உடனே சொல்லாமல் என்னைக் குறித்து என்ன நினைக்கிறான் என்பதை அறிந்து கொண்டு பின் சொல்வாயாக என்று கூறுகிறாள். நாயகி இவ்வாறு துன்பம் கொள்வது முன்வினைப் பயன்களின் காரணமாகும். அவை தீரும் வரை நமக்குப் பரிபூரண அருள் கிடைக்காது என்பதை ஆழ்வார் அறிந்திருப்பார். இருப்பினும் மனிதப் பிறவியின் எதிர்பார்ப்புகள் அவரை அவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது எனலாம்.
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீன் ஆய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ?
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும்
ஆன் ஆயற்கு என் உறு நோய் அறியச் சென்று உரையாயே. 1201
தேன் போன்று இன்னிசை பாடும் கரிய வண்டே! வயலாளி மணாளன் தானகவே என்னை நினையாமல் இருந்தாலும் அவனையே நினைத்து மனம் தளர்ந்துள்ள என்னை மீன் கொடியையுடைய காமன் வருத்த நான் இளைத்து விட்டேன். திருவாலி நகரை ஆட்சி செய்யும் கோவிந்தனுக்கு என்னுடைய தாபத்தின் நோயைத் தெளிவாகக் கூறுவாயாக என்று பரக்கால நாயகி கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.
உடையவன் உடைமையை விட்டுப் பிரிந்தால் வாடுவான். அதைப் பெறுவோமா என எதிர்பார்த்துக் காத்திருப்பான். அதே போன்று பெருமான் என்னை விட்டுப் பிரிந்ததனால் துன்பப்பட்டிருப்பானோ என வினவுகிறார். இல்வாழ்வில் கவலை கொள்ளாமலிருக்கலாம். எப்போதும் பெருமானை நினைத்துருகும் எனக்கு இத்தகைய பிரிவு தாங்க முடியவில்லை. பெருமானை நினைப்பதே குற்றமென்ற எண்ணத்தில் மன்மதன் எனக்கு நோவை அளித்துள்ளான். இத்துன்பம் பெருமானால் வந்தால் சகிக்கலாம். ஆனால் மன்மதனால் வந்துள்ளதே என்று வருந்துகிறாள் நாயகி. மன்மதனை தன் புதல்வனாக எண்ணி ‘நம் வயிற்றில் பிறந்த பிள்ளை நம் மீது அம்பெய்தி நலியும்படி நம் கதி இவ்விதம் ஆயிற்றே’ என்று வருந்துகிறாள்.
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த
தோளாளா என் தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே. 1202
பூமியை அளந்த திருவடிகளை உடையவனே! குளிர்ச்சியான திருக்குடந்தையை ஆளுகின்ற சாரங்கபாணியே! கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்தவனே! வாள் போன்ற என் விழிகள் நீரைப் பொழிய இளம் தனங்களில் பசலை நோய் படரத் தினந்தோறும் உன்னை நினைத்து உருகும் எனக்கு நீ துணையாக வர வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
வயலாலி மணவாளனையே இடைவிடாது நெஞ்சில் பாவனை செய்து கொண்டிருந்ததனால், அவன் கண் முன்னே வந்து தோற்றுகிறானாகக் கொண்டு அவனோடு நேரே வார்த்தை சொல்லுவதாகச் சில பாசுரங்கள் அமைந்துள்ளன. பிராட்டி அசோகவனத்தில் திருவடியை நோக்கிப் பெருமாளுக்குத் தூதுமொழிகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையிலே பெருமாளையே ஸம்போதநம் பண்ணி ‘நாதா! என் விஷயத்தில் சிறிது அபராதம் பண்ணின காகத்தின் விஷயத்தில் உன் பராக்கிரமத்தைப் பெரிதாகக் காட்டினாய், சீதையைப் பிரித்துக் கொணர்ந்து சிறை வைத்திருக்கின்ற மஹாபாபியான இராவணன் மேல் பொறுமை பாராட்டி நிற்கின்றாய், இஃது என்ன? என்றிப்படிப்பட்ட சில வார்த்தைகளை முன்னிலேயாகவே சொன்னது போல இப்பரகால நாயகியும் வயலாலி மணவாளளே முன்னிலையாக்கிச் சில பாசுரங்கள் பேசுகிறாள்.
ஆழ்வார் பகவானின் பெருமைகளை இங்குப் பறைசாற்றுகிறார். தன்னைத் தலைவியாகப் பாவித்து அவர் பெருமைகளை நம் நெஞ்சத்தில் பதிக்கின்றார். பெருமானை அடைய முடியாததால் மனம் துன்பங்கொண்டு பசலையால் வாடுகிறாள். இதனைக் காமம் என்று நினையாமல் ஆத்ம ஐக்கியமாகச் சிந்தித்தல் வேண்டும். அற்ப பொருளின் மீது பற்று கொண்டுள்ளதால் இத்தகைய தெய்வீக நிலையை நாம் புரிந்து கொள்ள இயலவில்லை எனலாம். பக்தியுடன் மனம் பக்குவப்பட்டு இந்நிலையை அறிய முயற்சித்தல் நன்று என்ற கருத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.
தார் ஆய தன் துளவ வண்டு உழுதவரை மார்பன்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதித் திருவாலி நகர் ஆளும்
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ?. 1203
பெருமானுக்கு சாற்றிய திருத்துழாய் மாலையில் உள்ள தேனும் கன்னலும் கலந்து சேராகி தேனால் கசிந்திருக்கும் மலை போன்ற திருமார்பை உடைய மணவாளன், போர் யானையான குவலாயபீடத்தின் கொம்பினை முறித்தவன், கருடனை வாகனமாகக் கொண்ட என் பெருமானே! திருத்தேர் வருவதற்கு ஏதுவாக வீதிகளைக் கொண்ட திருவாலி நகரை ஆள்பவன். கரிய உருவமுடைய எம்பிரான் என் பொன் வளைகளை கழன்று விழும்படி மெலியச் செய்வானோ என்று பாடுகிறார் ஆழ்வார்.
திருத்துழாய் மாலையில் மதுவெள்ளத்தாலே சேறு செய்யப் பெற்ற திருமார்பை உடையவனும், கம்ஸனுடைய அரண்மனை வாசலில் புகும்போதே தன்னைக் கொல்லுவதாகச் சீறிவந்த குவலயாபீடமென்னு மதயானையின் தந்தங்களை முறித்தொழித்தவனும், அடியார்களிருக்குமிடம் தேறச் சென்று உதவுகைக்காகப் பெரியதிருவடியை வாஹநமாக உடையவனுமான வயலாலி மணவாளன் என்னுடைய நாண் மடம் அச்சும் முதலிய ஆத்ம குணங்களைக் கொள்ளை கொண்டவளவோடு திருப்திபெறாமல் கையில் வளைகளையும் கவர்ந்து கொண்டானே! என்கிறாள்.
இப்பாடலில் தலைவியின் விரகதாபம் நன்கு புலப்படுகிறது. அசுரர்களை அழித்தவன் கண்ணன். அத்தகையவன் என் கைவளை கழன்று விழுமாறு நான் மெலியக் காரணமானான். தலைவி இளைத்து போகிறாள். பெருமான் ஆட்கொள்ளக் காலதாமதமாகும். இது அவளின் முன்வினைப் பயனே எனலாம். பகவானை நினையாதவர்கள் பின்தங்கி விடுவார்கள். அவனை நினைப்பவர்கள் முன்னேறி வருவார்கள். எனது முக்குணங்களான அச்சம், மடம், நாணம் போன்றவற்றை கொள்ளை கொண்டும் திருப்தி பெறாமல் என் வளையலைக் கவர்ந்து கொண்டானே என்று நாயகி வருந்துகிறாள்.
கொண்டு அரவத் திரை உலவு குரை கடல்மேல் குலவரைபோல்
பண்டு அரவின் அணைக் கிடந்து பார் அளந்த பண்பாளா
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ? 1204
முற்காலத்தில் ஆர்ப்பரிக்கும் அலைகள்வீசும் திருப்பாற்கடலில் அருள் கொண்டு ஆதிசேஷன் மேல் மலை போன்று பள்ளி கொண்டவனே! திருவிக்கிரமனாய் உலகை அளந்த தயாளனே! வண்டுகள் நிறைந்த மலர்வனங்களால் சூழப்பட்ட வயல்வெளிகளையுடைய அழகுமிக்க திருவாலியின் மணவாளனே! என் கண்ணுறக்கத்தைப் போக்கடித்த உனக்கு என் கை வளையையும் இழக்கக் கடவேனோ? என்று பாடுகிறார்.
பக்தர்களுடைய கூக்குரல் கேட்பதற்குப் பாங்கானவிடமென்று திருப்பாற்கடலைத் திருவுள்ளம்பற்றி அங்கே பள்ளிகொண்டிருக்கும் பெருமானே! அங்ஙனம் அங்கே பள்ளி கொண்டிருக்கையில் ஒருகால் தேவேந்திரனுடைய கூக்குரல் கேட்டுப் பதறியெழுந்து மாவலிபக்கலிலே வந்து திரிவிக்கிரமனாகி உலகளந்த பெருமானே! இப்போதும் அன்பர்களைக் காப்பதற்கென்றே திருவாலியில் நித்யஸந்நிதி! நீ இப்படிப்பட்ட குணசாலியாயிருந்து என்னுடைய கண்ணுறக்கத்தையும் அபஹரித்து, கைவளையையும் அபஹரித்தாயே! இது என்ன முறைமை என்கிறாள்.
இப்பாட்டால், இரவும் பகலும் உன்னையே சிந்தித்துக்கொண்டு கண் உறங்கப் பெறாமல் மேனி மெலிந்து போனேன். துன்பக் காலங்களில் பக்தர்களின் கூக்குரலை கேட்பதற்கு ஏதுவாகத் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமானே! ஒரு காலத்தில் தேவேந்திரனின் குரல் கேட்டுப் பதறியெழுந்து மகாபலியின் செருக்கினை உலகளந்த திருவிக்கிரமனாக அவதாரமெடுத்துக் காத்த பெருமான் திருவாலியில் நம் துன்பங்களைப் போக்க எழுந்தருளியுள்ளார். பகவான் நமது இன்ப துன்பங்களை விளையாட்டாகக் கருதி கர்ம வினைகளைத் தீர்க்கிறார். இத்தகைய குணசாலியாக இருந்த நீ என்னுடைய கண்ணுறக்கத்தையும், கை வளையையும் அபகரித்தாயே. இது தகுமோ என்று நாயகி கேட்பது போல் அமைந்துள்ளது.
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடம் ஆடி
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ?
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே. 1205
குயில்கள் பாடுகின்ற பொழில்களால் சூழப்பட்ட குளிர்ச்சியான திருக்குடந்தையில் அருளும் குடக்கூத்தாடிய பெருமானே! தூங்காத கண்களையுடைய நான் உன்னை நினைத்துத் துயரடைகின்றேன். வயலாளி மணாளா! முயல் ஆடும் சந்திரன் ஆகாயத்தில் தோன்றியவுடன் என் வளையல் கழன்று விழுகின்றதே. தாகத்தால் மெலிந்த என்னை இத்தனை வேதனைகளுக்கிடையே மேனி நிறத்தையும் பசலை படரச் செய்கின்றாயே! என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
இப்பாமாலையில் தலைவி பிரிவுத்துயரால் வருந்துகிறாள். உடல் மெலிந்து கைகள் சிறுத்துவிட்டபடியால் அணிந்திருந்த கைவளை நழுவி விழுகின்றது. என் வேதனையைத் தீர்க்க நீ வராமல் இருப்பது ஏனோ? என்று வருந்திக் கூறுகிறாள். நாம் எதற்காகவோ கண்ணீர் வடிக்கிறோம். ஆனால் பகவானுக்காகக் கண்ணீர் வடிக்கிறோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தலைவியின் இந்தக் கண்ணீர் மோகத்தினால் வந்ததல்ல. அன்பால் வந்த கண்ணீர் என்கிறார் ஆழ்வார்.
இவ்வுலகில் தம் மனைவி மக்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்கள். செல்வம் வேண்டும், பதவி வேண்டும், பொருள் வேண்டும். பட்டம் பதவிகள் வந்து சேர வேண்டும் என்றெல்லாம் அவனிடம் வேண்டுகிறோம். ஆனால் நமக்கு உயிர் கொடுத்து நம்மைப் படைத்த ஆண்டவனுக்காக யாரும் கண்ணீர் சிந்துவதில்லை. ஆனால் தலைவி பகவானுக்காக அழுகிறாள். இது அன்பால் வந்தது. இது போன்ற அன்பை நாமும் பெற வேண்டும் என்று ஆழ்வார் விரும்புகிறார்.
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே. 1206
சார்ங்கம் என்ற வில்லை வளைத்து அதை ஆள்பவனே! சுக்ரீவனின் நம்பிக்கை பெற மாமரங்களை சாய்த்த பலம் பொருந்திய ஸ்ரீராமா! திருமெய்யம் என்னும் திருப்பதியில் ஆளப் பிறந்தவனே. பிரளய காலத்தில் ஆலிலை மேல் துயில் கொண்டவனே! நான் உன்னை வணங்கும்படி அருள் செய்யாதபோது ஒரு நாளாவது என் மார்பு உன் அகலமான மார்பில் இறுகும்படி அணைத்துக் கொள்ளக் கூடாதா? நீ அவ்விதம் என்னைக் கையாண்டால் கையில் வளை தங்காமல் கழ்ல்வது நடைபெறாது என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
சத்தையுள்ள வரைக்கும் உன் திருவடிகளுக்கு ஆளாயிருக்க வேண்டுவதே கடமை; ஆனாலும் இப்படி நீ திருவுள்ளம் பற்றினாலன்றி இந்த நித்ய கைங்கரியம் கிடைக்கமாட்டாதன்றோ; என்னை நித்ய கைங்கரியத்திற்கு ஆளாக்கிக் கொள்ளத் திருவுள்ளமில்லை எனினும் ஒரு நாளாகிலும் உன்திருமேனியை எனக்குத் தந்தாலாகாதோ? இதுவும் நீ செய்யமாட்டாகில், ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்காகக் கையிலே வில் பிடித்துக் கொண்டிருக்கிறேனென்று நீ இருப்பது எதற்காக? சுக்ரிவனுக்கு நம்பிக்கை உண்டாவதற்காக மராமரங்கள் ஏழையும் துளைத்த மிடுக்கையுடையவனென்று உன்னைப் புகழ்வது ஏதுக்காக? திருமெய்யத்திலே ஸத்யேசனென்று பெயர் படைத்திருப்பது ஏதுக்காக? நான் ஒருத்தி வாழும்படி காரியஞ் செய்யமாட்டாத உனக்கு இப்புகழெல்லாம் பொருந்துமோ என்கிறாள்.
எனது பலம் உள்ளவரை உன் திருவடிகளில் சரண் செய்தே என் கடமையாகும். என் நிலையறிந்த ஒரு நாளேனும் உன் திருமேனியைக் தரிசிக்க அருள் செய்யக் கூடாதா? இதையும் செய்யாத நிலையில் அடியார்களைக் காப்பேன் என்று கூறி வில் பிடித்துக் கொள்வது தகுமோ? நான் ஒருத்தி உனக்காக வாழ்ந்து கொண்டிருக்கும்போது இத்தகைய பெருமை கொள்வது தகுமோ? மேனி இளைத்து உன் கையில் வரும் வளையானது நீ என்னை நெருங்கி வந்தால் அந்த மகிழ்வில் உடல் பருத்து வளை வெடித்துதான் போகுமே. இத்தகைய நிலை என்று வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறாள் பரக்கால நாயகி.
மை இலங்கு கருங் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை நெடுமாலை
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ் மாலை
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அரு வினைகள் அடையாவே. 1207
மைப் போன்ற கருமையானக் குவளை மலர்கள் மலரும் கழனிகளை உடைய திருவாலியில் உறைகின்ற நெய் பூசப்பட்டு சுடரையுடைய சுதர்சனம் என்ற சக்ராயுதத்தை ஆயுதமாகத் தரித்திருக்கும் மணவாளனைச் சேவித்துக் கையில் விளங்குகின்ற வேலினையுடைய திருமங்கை ஆழ்வார் இயற்றிய இப்பத்து பாசுரங்களையும் படிக்க வல்லவர்களைக் கொடிய பாவங்கள் நெருங்காது என்று கூறுகிறார் ஆழ்வார்.
வேலையுடைய திருமங்கையாழ்வார் மை போல் கருத்த குவளை மலர்கள் கழனிகளையுடைய அன்றலர்ந்த மலர்களுள்ள வயல்களையுடைய திருவாலி அம்மானே! நெய் பூசப்பட்ட சுடர் ஆழியை படையாகக் கொண்ட நெடுமாலை எதிரில்கண்டு உரைத்த தமிழ்மாலை பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லார்க்கு பாபவினைகள் சேராதே என்று கூறுகிறார்.
முன் பாசுரங்கள் அனைத்தும் பரக்காலநாயகி படும் விரக வேதனைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டன. இது ஆண் பெண் சேர்க்கைக்கான விரகதாபம் இல்லை. பரமாத்மாவுடன் இந்த ஜீவன் இணைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடப்பட்டவையாகும். நாம் இம்மண்ணுலகிற்கு வந்த காரணமே இதுதான். ஆனால் நாமோ அதை விட்டுக் கீழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தாமல் போவதால்தான் இத்துன்பங்கள் ஏற்படுகின்றன. பொருளைப் பெறும் எண்ணத்தை அறவே நீக்கி எப்போதும் பகவானை நினைத்து அந்த ஆத்ம தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.
கள்வன்கொல்? யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என் தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கை பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர் கொலோ? 1208
பரக்கால நாயகியான என் மகளை வந்து அழைத்துக் கொண்டு சென்றவன் கள்வனோ? அல்லது உரியவனோ? யானறியேன்! கருநிறமுள்ள ஒரு அழகு இளைஞன் வந்து கொடி போன்ற சிறிய இடையையுடைய இளமான் போன்ற என் மகளின் வெள்ளி வளையணிந்த கைகளைப் பிடிக்க, அவள் பெற்ற தாயான என்னை விட்டுச் சென்று விட்டாள். இவர்கள் மலர்வனங்கள் நிறையப்பெற்ற சேற்று நிலங்கள் சூழ்ந்த திருவாலிக்கு போயிருப்பார்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருத்தாயார் சொல்லத் தொடங்கும்போதே “கள்வன் கொல்” என்று எம்பெருமானைத் கள்ளனாகச் சங்கித்துச் சொல்கிறாள். ஸர்வ ஸ்வாமியானவன் தன் உடமையைக் கைக்கொண்டு போனானாகையாலும், பிரகாசமாகவே கொண்டு போனானாகையாலும் கள்வன்கொல் யானறியேன்” என்று உல்லேகிப்பதுபோலச் சொல்லலாயிரா நின்றது. இங்ஙனே திருத்தாயார் தெருவிலே ஓடிவந்து “கள்வன்கொல் யானறியேன்” என்று கதறினவாறே இங்குமங்குள்ளாரடங்கலும் திரண்டு வந்துசேர்ந்து ‘அம்மா! இஃது என்ன அநியாயம், கள்வனா வந்துவிட்டான்? யார் அவன்? அவன் கவர்ந்து சென்ற பொருள் யாது?’ என்று பேராரவாரமாய் வினவ, மேலே சொல்லுகிறாள் கரியனொரு காளை வந்து என்று தொடங்கி நீலமேக நிறத்தனாய் இளம் பருவமுடையனான ஒருவன் என்னகத்தினுள்ளே புகுந்து என்மகளை ‘புறப்படு, புறப்படு’ என்று சொல்லிக் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு போகின்றான் காண்மின் என்கிறாள்.
சாத்திரங்கள், சேதநனை கள்வனாகச் சித்தரிக்கின்றன. எம்பெருமானுக்கே உரிய ஆத்மாவை அநந்ய சேஷத்துவமாகக் கருதுகின்றது. தன் உடைமையைத் தான் கைகொள்கிற எம்பெருமானை கள்வன் என்று கூறலாகாது. அஹங்கார மமகாரங்கள் சேதநனிடம் அதிகம் காணப்படுவதால் தன்னுடைய கள்ளத்தனத்தை எம்பெருமான் மீதே சொல்லும்படியாகிறது. அவன் கள்வன் என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லை என்று திருத்தாயார் கூறுகிறாள். ஒளிமிக்க அவனுக்குண்டான உடைமையை அவன் கொண்டு செல்கிறான் போலுள்ளது என்கிறாள். அதைப் போன்று நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் பராங்குசநாயகி தானாகத் திருக்கோளூர் எம்பெருமான் உறைவிடம் நோக்கிச் செல்கிறாள். ஆனால் இங்கு நாயகியை எம்பெருமானே வந்து அழைத்துப் போவதாகக் குறிப்பிடுகிறார் ஆழ்வார்.
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள் தன்
தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிரக் கிளிபோல் மிழற்றி நடந்து
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ. 1209
பெண்ணே! என் மகளைக் கொண்டு போன இவன் முன்னர் கோபாலனாகக் கன்னியரைக் கவரும் தீம்பு செய்யும் இடையனாக இருந்தான். இப்போது என் இல்லத்தில் புகுந்து என் செல்வியின் சிவந்த அதரத்தை வருடிச் சென்றான். அப்படிப்பட்டவனை என் பெண் விரும்பிக் கெண்டை மீன் போன்ற கண்கள் பளிச்சிட, கிளி போன்று மழலைச் சொற்களைப் பேசியபடி அவன்பின் தொடர்ந்தாள். அவ்விருவரும் வண்டுகள் அமர்ந்த சோலையான திருவாலிக்குச் சென்றுள்ளார்களோ என்று கேட்கிறாள் திருத்தாயார்.
அயல்வீட்டுப் பெண்மணி, கள்வன் கள்வன், என்றாயே என்று வினவ, அதற்குத் தாயார், முற்காலத்தில் ஆயர்பாடியில் பெண்களைக் கவர்ந்து, தீமைகள் செய்தவனான கோபாலன் என் பெண்ணின் அதரபானத்தைப் பருகி அவளை மயக்கி அழைத்துச் சென்றுள்ளான் என்று தாயார் கூறுகிறாள். காம மயக்கத்தைக் காட்ட கோபாலன் இத்தகைய காரியம் செய்யவில்லை. ஆத்மாவுக்கு ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. மனிதர்களான ஜீவாத்மாவை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். புல்லாங்குழல் இசைத்துப் பசுக்கூட்டங்களை மயக்கித் தன் வசம் ஈர்த்தது இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான். எனவே நம் கண்ணோட்டோமும் இத்தகைய சிந்தனையில் மலர வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? 1210
திருத்தாயாரானவள் அயல் வீட்டுப் பெண்ணைப் பார்த்து ‘மங்கையே! அரக்கர் குலப் பெண்ணான சூர்ப்பனகையின் மூக்கை கடுங் கோபத்தால் அறுத்த கம்பீரமானவனான ஸ்ரீராமனின் கோபத்தைக் கேள்விப் படும்போது அச்சமாக உள்ளது. பஞ்சு போன்ற மென்மையான பாதங்களையுடைய, மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட என் மகள் பெரும் பழிக்கு ஆளாகி அவனுடன் செல்ல, குளிர்ந்த நீர்நிலைகள் நிறைந்த வயல்களைக் கொண்ட திருவாலிக்குச் சென்று சேர்ந்திருப்பார்களோ’ என்று வினவுவது போல் அமைந்துள்ளது.
அரக்கியின் மூக்கை அறுத்தது போல் என் மகளின் மூக்கையும் அறுப்பானோ என்று ஐயுறுகிறாள். பெருமான் இவ்வாறு செய்யக் கூடியவரா. அவர் குணாளன் என்று பெயர் பெற்றவர் இத்தகைய காரியம் செய்வாரா என்று நினைக்கும்போது, இராமனைப் பிரிந்து சீதை அசோகவனத்தில் துயறுற்றது போன்று என் மகளும் துயர் கொண்டுள்ளாளே என்று ஒரு தாயாருக்குண்டான அங்கலாய்ப்புடன் கூறுகிறாள் என்று கொள்ள வேண்டும். இலக்குவனே அரக்கியின் மூக்கினை அறுத்திருந்தாலும் அந்தப் பழியானது இராமனைச் சார்ந்துள்ளது. ஏனெனில் பெருமானின் வலக்கரமே இலக்குவன். எனவே பெருமான்தான் பொறுப்பேற்க வேண்டும். அத்தகையவனுடன் என் பெண் சென்றுள்ளாளே. அவளுக்கு என்னவாயிற்றோ என்று கவலை கொள்கிறாள்.
ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்கொலோ? 1211
அவனது முற்பிறவியினை யான் அறியேன். அவன் க்ஷத்ரியனோ, இடைக்குலமோ யானறியேன். இப்போது இளைஞனாகவும், சங்கு ஊதுபவனாகவும், பாண்டவர் தூதனாகவும் உள்ள அவனது ஊரைச் சொல்லுங்கள். மாதவனே துணை என்று மகள் அவனுடன் சென்றுள்ளாள். மலர் வனங்களிலுள்ள மலர்களில் வண்டுகள் களித்துக் கூத்தாடும் பெருமை பெற்ற தீரத்தங்களைக் கொண்ட திருவாலிக்குச் சென்றிருப்பாளோ என்று கேட்கிறாள் திருத்தாயார்.
விண்ணகரம், வெஃகா, விரிதிரை நீர்வேங்கடம், மன்னகரம், மாமாட வேளுக்கை-மன்னகத்த, தென்குடந்தை, தேனார்திருவரங்கம், தென்கோட்டி, கண்டியூரரங்கம், மெய்யம், கச்சி, பேர்மல்லை என்று எதனை நான் சொல்ல! அவனது குலமும் ஊரும் நானறியேன். இன்னாரென்றறியேன்! அன்னே ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னாரென்றறியேன் என்று இதே கருத்தினைத் தாயாரிடம் பரக்கால நாயகி முன்பாசுரங்களில் கேட்டுள்ளாள். பெருமான் வந்து மகளை அழைத்த போது திருவாலிக்கு போவோம் என்று சொன்னது மட்டும் நினைவில் உள்ளது. என் மகள் தனியாக சென்றிருந்தாலும் கவலையில்லை. அவள் திருவாலிக்குத் தான் சென்றிருப்பாள் என்றிருப்பேன். ஆனால் பெருமானுடன் போனதால் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் மயங்கி என்ன அபாயம் வந்திருக்குமோ என்று கலங்குகிறாள் தாயார்.
தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்
வேய் அன தோள் விசிறிப் பெடை அன்னம் என நடந்து
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர்கொலோ? 1212
பெற்ற தாய் என்று என்மேல் இரக்கம் காட்டாமல் பெரிய தோள்களையுடைய என் மகளானவள், மாதவன் வா என்று அழைத்ததும் அவன் பேச்சைக் கேட்டு என்னை விட்டு அகன்று விட்டாள். மூங்கில் போன்ற தோள்களையுடைய அவள் கைகளை வீசிக்கொண்டு அன்னம் போன்று மென்மையாக நடந்து சென்றாள். பூங்கொடியானவள் நீர்வளம் மிகுந்த திருவாலிக்கு மாயனோடு சென்றிருப்பாளோ என்று தாயார் கேட்கிறாள்.
“ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால், திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான்” பெற்றதாய் வயிறெரியக் கூடுமென்பது என் மகளுக்குத் தெரியாமையில்லை, தெரிந்தும், ‘அப்படித்தான் வயிறெரியிட்டுமே; நமக்கு என்ன கெடுதி’ என்று ஈரமற்ற நெஞ்சினளாய் அகன்று போய்விட்டாள். நம்மைப் பெற்று வளர்த்த தாய் நம்மைப் பரிந்து பரிதாபமுறாதபடி நாம் நடந்துகொள்ள வேணுமேயென்று சிறிதும் இரக்கங் கொண்டாளில்லை. தன்னை வந்து அழைத்தவன் ஆச்சரியமான குணங்களோடும் சக்தியோடும் கூடினவன் என்றும், பெரிய பிராட்டியாரித்தில் பழகி ராஸிக்யத்தில் கைதேர்ந்தவனென்றும் அவனுடைய பெருமையை மதித்து உடன் சென்றாளேயொழிய, நான் வருந்துவேனென்பதைச் சிறிதும் நினைத்திலள். அவள் புறப்பட்டு நடந்து சென்ற போதையழகை நினைக்க நினைக்க என் வயிற்றெரிச்சல் ஆறவில்லை; மிகவும் உல்லாஸமாக நடப்பவள்போலத் தோள்களை வீசிக்கொண்டு, ‘அன்னப்பேடைதான் நடந்து செல்லுகின்றதோ’ என்னலாம்படியாகச் சென்ற அழகை என் சொல்லுவேன். என்னை வருத்தத்திற்கு ஆளாக்கிவிட்டுப் போனாலும் போகட்டும்; சேரவேண்டுமிடத்தில் சுகமாகச் சென்று சேர்ந்தாளாகிலும் ஸந்தோஷமே; தனக்கமைந்த மாயவனை, மாதவனைப் பின் செல்லுகின்றாளாகையாலே பரஸ்பரம் மயங்கி வழி தப்புவர்களோ வென்று கவலைப் படுகின்றேன் என்று திருத்தாயார் கூறுகிறாள்.
என்னுடைய ஒரே மகளை உலகம் புகழும் திருமகள் போல் வளர்த்தேன். நான் படும் துன்பம் என் மகளுக்குத் தெரியாமலில்லை. தெரிந்தும் என்னை வஞ்சித்து விட்டு ஈரமற்ற நெஞ்சாக என்னை விட்டு அகன்றுவிட்டாள். பெற்ற தாய் நம்மால் துன்பம் கொள்ளலாகாது என்று நினைக்கவில்லை. வலிமை மிக்க குணவாளனான பெருமான் என் மகளைக் கவர்ந்து சென்று விட்டான். அவள் என்னை விட்டு அகன்ற நிகழ்வு என்னால் தாங்க முடியவில்லை. போய்ச் சேரும் இடத்திலாவது மகிழ்வுடன் இருக்கட்டும். ஆத்மா என்பது இறைவனால் உண்டாக்கப்பட்டது அது இறைவனிடத்தில் சென்று சேர்வதுதான் முறை என்ற எண்ணம் திருத்தாயாருக்கு தெரியவில்லை என்பது போல் இப்பாசுரத்தின் பொருள் அமைந்துள்ளது.
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ?. 1213
திருத்தாயாரானவள் மிகுந்த துயரத்துடன் ‘இவள் நமக்குத் துணை இருப்பாள் என்று வளர்த்து வந்ததற்கு சிறிதேனும் நம் மீது இறக்கம் கொள்ளவில்லையே. இதுவரை உற்ற துணையாக இருந்த நான் இனி தனிமையாக இருக்கப் போகிறேனே என்று அவள் வருந்தவில்லை. தேவர்களுக்கு உதவியாக இலங்கை சென்று அசுரர்களின் பலத்தை அடக்கிப் போரிட்ட களைப்பு அகல திருவரங்கத்தில் சயனித்திருக்கின்ற இனிய துணைவனோடு எழிலான திருவாலிக்கு வந்திருப்பாளோ என்று ஐயுற்றுக் கேட்கிறாள்.
உலகத்தில் மக்களைப் பெற்று வளர்ப்பது எதற்காக? நாம் தளர்ந்திருக்குங் காலத்திலே நமக்குத் துணையாவரென்றே. அப்படியிருக்கவும், என் மகள் எனது அர்த்தியைக் கனிசியாமலும், பெற்று வளர்த்த தாயைத் தனித்துவிட்டுப் போகிறோமே என்று விசாரப்படாமலும் விட்டொழிந்தாள். அவளோ பெரிய துணைவனைப் பிடித்துக்கொண்டாள். ஆச்ரிதர்கட்காகத் தன் உடம்பை அம்புகட்கு இரையாக்கிக் காரியம் செய்யுமவன் என்று அவன் திறத்திலே ஈடுபட்டு உடன் சென்றாள். திருவரங்கம் பெரிய கோயிலில் திருக்கண் வளர்ந்தருளும் பெருமான் வந்து அழைத்தால் போகாதிருக்கலாமோ என்றும், இவனேயன்றோ நமக்கு இனிய துணைவனென்றும் நினைத்துச் சென்றுவிட்டாள். செல்லிற் செல்லுக. இருவரும் வழியே சென்று வயலாலியிற் சேர்ந்திருக்கவேணுமே, அப்படி சேர்ந்திருப்பர்களோ, சேராதிருப்பர்களோ என்று கவலைப்படுகின்றாள்.திருத்தாயார்.
நாம் வயதானால் நம் மகள் நம்மைக் காப்பாள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவளோ என்னைப் பிரிந்து பெரிய துணைவனுடன் சென்று விட்டாள். திருவரங்கத்ததில் கண் வளர்ந்தருளும் பள்ளிகொண்ட பெருமாள் எழுந்து வந்து கூப்பிட்டவுடன் சென்று விட்டாளே. இவள் நமக்குத் துணை என்ற நம்பி இருந்தேனே. அவள் வயலாளி சென்றிருப்பாளோ என்று கேட்கிறாள். இவ்விதம் திருத்தாயார் புலம்பும்போது நடுவில் பெருமானின் பெருமைகளையும் கூறிக் கொள்கிறாள்.
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெருந் தோள் நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ? 1214
மின்னலையும் இளம் வஞ்சிக்கொடியையும் தோற்கடிக்கும் இடையைக் கொண்டவள் என் மகள். அவள்மீது அன்பு கொண்டபோதும் தாய் தந்தை ஆயிற்றே என்று என்னிடம் தயவு காட்டவில்லை. நப்பின்னையின் கணவனான மணவாளனது பெருமையுள்ள தோளோடு அணைத்து பெரும் சுகத்தை விரும்பியவளாய் அவனோடு நடந்து புன்னை மரங்களும், அன்னப் பறவைகளும் சூழ்ந்த நீர்வளம் மிக்க திருவாலிக்குச் சென்றிருப்பார்களோ என்று கேட்கிறாள்.
போகிறவள் தாய் தந்தையிடத்து ஒரு வாய்ச்சொல் சொல்லிவிட்டுப் போகலாமே அதையும் செய்திலள். தனக்குத் தாய் ஒருத்தி, தந்தை யொருவன் இருப்பதாகவே நெஞ்சில் கொண்டலள். எங்களை இவ்வளவு அலக்ஷியஞ் செய்துவிட்டுப் போவதற்குக் காரணம் உண்டு. நப்பின்னை பிராட்டியைக் கைப்பிடித்த பெருமானே நேரே வந்து அழைத்தமையால் அவனுடைய தோளழகிலே தோய்ந்து எம்மை மறந்தாள். உலகங்கட்கெல்லாம் தாய் தந்தையானவனுடைய தோளோடே அணையப்பெறில் பிராகிருதர்களான தாய் தந்தையர் நமக்கு ஏதுக்கு? என்று அலக்ஷியஞ் செய்தனள் போலும்; செய்திடுக; அவள்தான் நடந்து செல்லக் கூடியவளோ? மின்னல் வஞ்சிக் கொடி என்னுமவற்றிற் காட்டிலும் நுட்பமான இடையையுடைய இவள் நடந்து செல்லத் தகுந்தவளன்றே. அழைத்துக்கொண்டு போகிறவன் பெரிய திருவடியின் மேலே வைத்துக் கொண்டு போகலாகாதோ? நடந்து போனாலும் போகட்டும்; இருவராய்ச் செல்லுகிற இவர்கள் உத்தேசித்த இடத்திற்சென்று சேர்ந்திருப்பர்களா? என்கிறாள்.
உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையாக விளங்குகின்ற பெருமான் இருக்கும்போது மனிதப் பிறவியான என்னைத் தாயாக அவள் ஏற்கவில்லை. ‘சேலேய் கன்னியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலா தாய் தந்தையுமவரே இனியாவாரே’ என்று பிரிதொரு பாசுரத்தில் குறிப்பிட்டவாறு நடந்து கொண்டுள்ளாள். கொடியிடையான அவள் நெடுந்தூரம் நடக்கலாகுமோ. பெருமான் தனது திருவடியில் அவளை அமர்த்திச் செல்லலாமே, திருவாலியை அடைந்திருப்பாளோ என்று பலவாறு புலம்பி அந்த நேரத்திலும் மகளின் மேல் அன்பைப் பொழிகிறாள்.
முற்றிலும் பைங் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்று எல்லாம் கைதொழப் போய் வயல் ஆலி புகுவர்கொலோ? 1215
மின்னலையும் இளம் வஞ்சிக்கொடியையும் தோற்கடிக்கும் இடையைக் கொண்டவள் என் மகள். அவள்மீது அன்பு கொண்டபோதும் தாய் தந்தை ஆயிற்றே என்று என்னிடம் தயவு காட்டவில்லை. நப்பின்னையின் கணவனான மணவாளனது பெருமையுள்ள தோளோடு அணைத்து பெரும் சுகத்தை விரும்பியவளாய் அவனோடு நடந்து புன்னை மரங்களும், அன்னப் பறவைகளும் சூழ்ந்த நீர்வளம் மிக்க திருவாலிக்குச் சென்றிருப்பார்களோ என்று கேட்கிறாள்.
போகிறவள் தாய் தந்தையிடத்து ஒரு வாய்ச்சொல் சொல்லிவிட்டுப் போகலாமே அதையும் செய்திலள். தனக்குத் தாய் ஒருத்தி, தந்தை யொருவன் இருப்பதாகவே நெஞ்சில் கொண்டலள். எங்களை இவ்வளவு அலக்ஷியஞ் செய்துவிட்டுப் போவதற்குக் காரணம் உண்டு. நப்பின்னை பிராட்டியைக் கைப்பிடித்த பெருமானே நேரே வந்து அழைத்தமையால் அவனுடைய தோளழகிலே தோய்ந்து எம்மை மறந்தாள். உலகங்கட்கெல்லாம் தாய் தந்தையானவனுடைய தோளோடே அணையப்பெறில் பிராகிருதர்களான தாய் தந்தையர் நமக்கு ஏதுக்கு? என்று அலக்ஷியஞ் செய்தனள் போலும்; செய்திடுக; அவள்தான் நடந்து செல்லக் கூடியவளோ? மின்னல் வஞ்சிக் கொடி என்னுமவற்றிற் காட்டிலும் நுட்பமான இடையையுடைய இவள் நடந்து செல்லத் தகுந்தவளன்றே. அழைத்துக்கொண்டு போகிறவன் பெரிய திருவடியின் மேலே வைத்துக் கொண்டு போகலாகாதோ? நடந்து போனாலும் போகட்டும்; இருவராய்ச் செல்லுகிற இவர்கள் உத்தேசித்த இடத்திற்சென்று சேர்ந்திருப்பர்களா? என்கிறாள்.
உலகங்களுக்கெல்லாம் தாய் தந்தையாக விளங்குகின்ற பெருமான் இருக்கும்போது மனிதப் பிறவியான என்னைத் தாயாக அவள் ஏற்கவில்லை. ‘சேலேய் கன்னியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலா தாய் தந்தையுமவரே இனியாவாரே’ என்று பிரிதொரு பாசுரத்தில் குறிப்பிட்டவாறு நடந்து கொண்டுள்ளாள். கொடியிடையான அவள் நெடுந்தூரம் நடக்கலாகுமோ. பெருமான் தனது திருவடியில் அவளை அமர்த்திச் செல்லலாமே, திருவாலியை அடைந்திருப்பாளோ என்று பலவாறு புலம்பி அந்த நேரத்திலும் மகளின் மேல் அன்பைப் பொழிகிறாள்.
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? 1216
நீலோத்பவ மலர் போன்று அழகிய விழிகளைக் கொண்டவளும், அழகில் திருமகளுக்கு ஈடானவளும், இறக்கையையுடைய அன்னப் பேடையின் நடையை உடையவளும், மூங்கில் போன்ற தோள்களை உடையவளுமான என் மகள் பாவியான என் வயிற்றில் பிறந்த குற்றத்தால் பெரும்பழிக்கு ஆளாகும்படி திருமாலின் பின்னே தடாகங்களும், குளிர் சோலைகளும் நிறைந்த திருவாலி சென்றிருப்பாளோ என்ற பொருளில் அமைந்துள்ளது.
இவள் திருப்பாற் கடலிலாவது தாமரை மலரிலாவது பிறந்திருப்பாளாகில் அவன் திருமார்பை விட்டுப் பிரியாதே இருந்திருக்கக்கூடும்; அங்ஙன்றியே பாவியேனான என் வயிற்றிலே வந்து பிறந்தனளாதலால் நால்வர் வாயிலே பழிச்சொல் புறப்படும்படியாகப் போக நேர்ந்தது இவளுக்கு என்கிறாள்.
இப்படி, சீதாபிராட்டி சக்ரவர்த்தி திருமகனாருடனே சென்றது போலே இருவராய்ச் சென்ற இவர்கள் திருவாலித் திருப்பதியினுள்ளே சென்று சேர்ந்திருப்பர்களோ, அல்லது ஊர்ப்புறத்தே வாவித்தடங்களிலே ரமித்து மயங்கிக் கிடப்பர்களோ என்று ஐயுறுகிறாள்.
என் மகளை அழகு மிக்க மகாலட்சுமியுடன் ஒப்பிட்டுப் பார்த்து வளர்த்தேன். ‘கடிமாமலர்ப் பாவை ஒப்பாள்’ என்று திருத்தாயார் கூறுகிறாள். ‘பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்’ என்று நம்மாழ்வாரும் கூறியுள்ளார். திருமகள் எம்பெருமானுக்கே உரியவள், அவனையே சரணமாகப் பற்றுபவள், அவனையே போக்யமாகக் கொண்டவள், அவனாலேயே தான் நிர்வகிக்கப்படுபவள் என்று நினைப்பவள், ஸம்ஸ்லேஷத்தில் அறியிருக்கை, விச்லேஷத்தில் அறியிராமை போன்ற அரிய குணங்களைக் கொண்டவள். அத்தகைய குணங்களும் என் மகள் பெற்றும் என் வயிற்றில் பிறந்த பாவியானாள் என்று வருந்துகிறாள்.
தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே. 1217
தாய் மனம் பரிதவிக்க, அவளிடம் சொல்லிக்கொள்ளமல் தனியாகத் திருமாலைத் துணையாகக் கொண்டு புறப்பட்டுப் போன அழகிய கொடி போன்ற என் மகளானவள் நீர் வளமிக்க திருவாலிக்கு சென்றிருப்பாளோ என வேதனைப்படுவதாக, பகைவர் அஞ்சும் கோபத்தையுடைய, கூரிய வேலையும் உடைய கலியன் அருளிய இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் பாடும் மனமுடையோர் உறுதியாகப் பரமபதம் அடைவார் என்பது இதன் பொருளாகும்.
திருத்தாயார் வயிறெரிந்து சொல்லும்படியாக விட்டுப் பிரிந்து வயலாலி மணவாளன் பின்னே நடந்து சென்ற பரகால நாயகியைப் பற்றிக் கவலைப்பட்டுப் பேசின இத்திருமொழியை ஓதவல்லவர்கள் விண்ணுலகத்தே நித்யாநுபவம் பண்ணப் பெறுவார்கள்.
தடாகத்தில் தாமரை மலர்ந்திருக்க அதன் இதழ்களில் பனித்துளிகள் விழுந்ததால் அதன் இதழ்கள் உதிர்ந்த நிலையில் வாடிப் போனது போன்று, என் மகள் இல்லாததால் இல்லம் வெறிச்சோடி கிடக்கின்றது. பிறந்த வீட்டிலிருந்த திருமணமாக முறையாகப் புக்ககம் செல்லுவதை விடுத்து யாருமறியாமல் திருமாலுடன் சென்று ஊராரின் பெரும் பழியினைத் தேடிக் கொண்டுள்ளாளே என்று வருந்திக் கூறுகிறாள் தாயார். இப்பாசுரங்களில் திருமாலை பழித்தும் உயர்த்தியும் பாடியிருப்பது ஆழ்வாரின் சிறப்பைக் காட்டுவதாகும்.
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா *அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே. 1329
உள்ளத்தை விட்டு ஒரு நொடிப் பொழுதும் நீங்காதிருக்கும் என் செல்வமே! அனுபவிக்க அனுபவிக்க இன்பமாக இருக்கின்ற தேவகி மைந்தனே! அழகிய குளிர்ந்த திருவாலிநகர் மணாளனே! திருமாலிருஞ் சோலையில் உலாவி வரும் யானைக் கன்று போன்றவனே! என்றும் அணையாத தீபச்சுடரே! திருநறையூரில் அருள் புரியும் பரிபூரணனே! இந்தளூர் எம்பெருமானே! அடியேனிடம் சிறிதும் இரக்கம் காட்டவில்லையே என்று ஆழ்வார் கூறுகிறார்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் பகவானை இறைஞ்சிக் கேட்கிறார். கடலில் நீர் வற்றுவதுண்டோ?. உன் திருவுள்ளத்தில் இரக்கம் மாறுவதுண்டோ? இப்படியும் என்னைக் கொல்லலாமா? பாவியான எனக்குச் சிறிதும் இறங்க மாட்டாயோ? என்று வினவுகிறார். நம் மீது இரக்கம் கொண்டுள்ளதால்தான் நாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகவானின் கருணை இன்றும் அமுத வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் அற்ப பொருளுக்காக அவரது கருணையை அலட்சியம் செய்கிறோம். ஆத்ம தரிசனத்தைத் தவிர வேறு எதையும் பகவானிடம் வேண்டக் கூடாது என்ற மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள்.
முந்நீரை முன் நாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந் நீரை மீன் ஆய் அமைத்த பெருமானை
தென் ஆலி மேய திருமாலை எம்மானை
நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே. 1519
முன் காலத்தில் அமிர்தத்தைப் பெற வேண்டித் திருப்பாற்கடலைக் கடைந்தவனை, பிரளய காலத்தில் பெரிய மீனாக உருவெடுத்துப் பெரு வெள்ளத்தைத் தன் வயிற்றில் அடக்கி, மக்களைக் காத்த பெருமானை, திருவாலி திருநகரியில் அருள் புரியும் திருமகளின் நாதனான பரந்தாமனை, நல்ல நீர் பாயும் வயல்களால் சூழப்பெற்ற திருநறையூரில் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
திருப்பாற்கடலைக் கடைந்தபோது வந்த விஷம்போல் நம் மனதை தியானத்தின் மூலம் கடைந்தெடுத்தால் நம்மிடமுள்ள விஷத்தன்மை கொண்ட தீய எண்ணங்கள், செயல்கள் போன்றவைகள் அழிந்து போகும். அதன் பிறகு நம் மனத்தில் பல அரிய நல்லெண்ணங்கள் தோன்றி நமக்கு ஞானம் பெறுவதற்கான வழிவகை செய்யும். அத்தகை எண்ணங்களின் செயல்பாட்டினால் நம் மனதில் ஆத்ம ஒளி தோன்றும். அமிர்தம் சாகா நிலை தருவது போன்று ஆத்ம ஒளியும் நம்மைப் பிறவா நிலைக்கு அழைத்துச் செல்லும் என்ற பொருளில் ஆழ்வார் கூறுகிறார். இதில் வரும் முந்நீர் என்பது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று மேலெழுந்தவாரியாகப் பொருள் கொண்டாலும், மூன்று செயல்களான மண்ணைப் படைத்தல், மண்ணை அழித்தல், மண்ணைக் காத்தல் போன்ற மூன்று செயல்களை இந்த நீர் செய்வதால் இதனை முந்நீர் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே. 1733
எல்லா காலத்திலும் நிரம்பி இருக்கும் கொடிய நரகத்தில் அழுந்தி நடுங்குகின்ற என்னை அஞ்சாதே என்று தேற்றி என்னை முழுதும் ஆட்கொள்ளும் வல்லவனை, மேகக் கூட்டத்தைத் தொடும் அளவிற்கு உயர்ந்த மாளிகைகளும், வயல்களும் சூழ்ந்த திருவாலியில் அருள் புரியும் பகவானை, சௌரிப் பெருமானை, நெஞ்சமே! நீ நொடிப் பொழுதும் நினையாமல் இருக்கின்றாயே என்று ஆழ்வார் தனது நெஞ்சைக் குறிப்பிடுகிறார்.
எம்பெருமான் செய்தருளின பேருதவிக்குத் தம்முடைய மறவாமை ஈடல்ல; அந்த உபகாரத்தின் கனத்தையும் தம்முடைய நினைவையும் ஒத்திட்டுப் பார்க்குமளவில் தம்முடைய மறவாமை அஸத்கல்பமாய்த் தோன்றிற்றுப் போலும்; பலவகைகளாலும் கனக்கப் பாவங்களைப் பண்ணி அவற்றின் பலன்களை அனுபவிக்கக் கொடிய நரகங்களிலே சென்று நோவுபடுங்கால் ‘தான் பண்ணின பாவங்களின் பலனைத் தான் அநுபவிக்கட்டும்; நமக்கு வந்ததென்ன? என்றிராமல் அங்கே யெழுந்தருளி ‘நாம் இருக்க, நீ பாவங்களின் பலனை அநுபவிக்க ப்ராப்தியுண்டோ? அஞ்சாதே’ என்றார் பெருமான்.
தீயவர்கள் மண்ணுலகில் அதிகம் உள்ளதால் நரகம் நிரம்பி வழிகின்றது. அப்படிப்பட்ட மக்களுக்கும் ‘அஞ்சாதே’ என்று கூறும் திறனும் நம்மை விடுவிக்கும் திறனும் பகவானுக்கு மட்டும் உண்டு. செய்த வினைகளுக்கேற்ப தண்டனை அனுபவிக்கட்டுமென்று இல்லாமல் அப்போதும் அபயகரம் காட்டி நம்மை காத்தருள்கிறான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை நாம் ஒரு நொடிப் பொழுதேனும் நினைத்துப் பார்க்காமல் இருக்கலாமா என்று கேட்கிறார் ஆழ்வார்.
கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெருங் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை. 1735
வேத சாஸ்த்திரம் கற்றவர்கள் முற்றிலும் வெறுத்து ஒதுக்கும் சம்சாரம் என்ற பெரும் கடலைப் பற்றியதால் நான் இங்கு வந்து பிறந்தேன். இவ்விதம் பிறப்பெடுத்த பிறகு, ஒருகாலும் வற்றாத நீர் வளமுடைய வயல்களால் சூழப்பட்ட வயலாலி என்னும் திருவாலியில் அருள் புரியும் பகவானின் அருளைப் பெறும் பேறு பெற்றேன். அதனால் இனி பிறவாமை என்ற பேறு பெற்றவனாவேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பெருங்கடலில் அலைகள் தொடர்ந்து வந்து செல்வது போல் பல்பிறப்புகள் பிறந்தேன். ஆயினும் பெருமான் வந்து என்னை நெருங்கியமையால் அவனைப் ஆழ்ந்துப் பற்றினேன். அதனால் பிறப்பில்லாமையைப் பெற்றேன். பிறவாமல் பேறு பெற்றேன். நன்றியறிவும் பிறவாமலேயே பேறு பெற்றேன் என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம். சம்சாரம் என்பது மனைவி, மக்கள், சுற்றம் ஆகியவற்றைப் பற்றி இருப்பது. சம்சார சாகரத்தை ஒதுக்குவது என்பது இறைவன் ஒருவனையே பற்றி இருப்பதாகும். பற்றற்ற இறைவனைப் பற்றும்போது நம்முடைய எல்லாப் பற்றுகளும் அகன்று போகின்றது. பிறவாமை என்னும் பாக்கியத்தை நாம் பெறுவோம். எனவே நிலையற்ற சம்சார நிலையை நீக்கித் திருவாலிப் பெருமானை பற்றுவோம் என்பது இதன் பொருளாகும்.
வேலை ஆல் இலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆர் அமுதத்தினைப் பைந் துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே. 1850
பிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆலிலையின் மேல் திருக்கண் துயின்று விரும்பிப் பள்ளி கொண்டவனை, பாலையும், அமிர்தம் போன்றவனையும், திருத்துழாய் மாலை அணிந்தவனை முதலில் திருவாலியில் வணங்கி மகிழ்ந்து, பின்பு உலகத்தோர் அனைவரும் தியானம் செய்யும் திருநாங்கூர் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் உண்டு உமிழ்ந்தபின் சிறு குழந்தையைப் போல் ஆலிலையின் மேல் நித்திரை கொண்டுள்ளான் அந்தப் பகவான். அது யோக நித்திரையாகும். உலகங்களைத் திரும்பவும் படைப்பதற்கான சிந்தித்தலையே யோக உறக்கம் என்பர். எந்தக் காலக் கட்டத்தில் உலகத்தைப் படைப்பது என்ற நினைப்பில் உள்ளார். கர்மவினைகளின் கனமாக மீண்டும் உலகினை நிலைநிறுத்துவது குறித்து சிந்தப்பதையே உறக்கம் என்பர். பெருமான் உலகத்தைச் சிந்திப்பவன் என்றும், உலகத்தால் சிந்திக்கப்படுபவன் என்றும் இரு பொருளில் அமைந்துள்ளது.
தூயானைத் தூய மறையானை தென் ஆலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை வணங்கி அவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே. 2014
தூய்மை உடையவனை, பரிசுத்தமான வேதங்களால் ஆராதனை செய்யப்படுபவனை, அழகு மிக்க திருவாலி என்னும் தலத்தில் அருள் புரிபவனை, பூதனையின் விஷப்பாலை அருந்தி அவளது உயிரை உண்டு, வாயில் பாலின் ருசி மாறுவதற்கு யசோதையின் பாலமுதை உண்ட திருவாயனை, திருமாலை வணங்கி அப்பகவானின் பெருமைகளைப் பேசாதவர்களின் பேச்சு ஒரு பேச்சே அல்ல என்று பெரியோர் பேசக் கேட்டுள்ளோம் என்பது இதன் பொருளாகும்
பரமபவித்திரனும், பரிசுத்தமான வேதங்களினால் பிரதிபலிக்கப்படுபவனும், அழகிய திருவாலிப்பதியிலே பொருந்தி வாழ்பவனும், பொருத்தமற்றவளான பூதனையினுடைய உயிரை உறிஞ்சியுண்டு அந்த விஷத்திற்கு மாற்றாகத் தாயின் தனத்தின் பாலமுதை உண்ட வாயையுடையவனுமான திருமாலை அடிபணிந்து அப்பெருமானுடைய பெருமேன்மையை பேசப்பெறாதவர்களுடைய பேச்சுக்களானவை ஒருகாலும் பேச்சுக்களாகமாட்டா இதனை நாம் பெரியோர்களிடத்துக் கேட்டிருக்கின்றோம் என்பது இதன் கருத்தாகும்.
பரிசுத்தமற்ற மனிதர்களின் நெஞ்சிலே வந்து அமர்ந்தாலும் தனது பரிசுத்த தன்மையிலிருந்து மாறாமல் இருந்து தானும் பரிசுத்தமாய் மற்றவரையும் பரிசுத்தமானவராக இருக்கச் செய்பவன் பகவான். இவ்வுலக வாழ்வில் திளைத்துக் கொண்டிருக்கும் நாம் தரமற்ற வார்த்தைகளைப் பேசி வருகிறோம். மற்றவர்களைக் கேலி பேசி அவர்கள் மனதைப் புண்படுத்துகிறோம். இதனால் காலம் வீணாகிறது. அதனால் சக்தி குன்றி காரியங்கள் செய்யத் திறனற்று வாழ்கிறோம். நம் தோல்வியைப் பிறர் மீதும், தெய்வத்தின் மீது போட்டுத் தப்பிக்கிறோம். இதை விடுத்து பகவானின் நாமங்களைச் சொல்லி அவனது பெருமைகளைப் பேசுவதன் மூலம் ஆன்மா வெளிப்படும் அற்புதத்தைக் காணலாம் என்பது இதன் பொருளாகும்.
படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய அருளாய் எனக்கு உன் தன் அருளே. 2027
கலப்பை கொண்டு உழும்போது அதில் அகப்பட்டு அழியாமல் தப்பிப் பிழைக்கும் பசுமையான தாமரைக் கொடிகளும், அழகிய நீலோற்பவ கொடிகளும், நீர்பாயும் மடைகளிலிருந்து மலரும் வளமான வயல்களைக் கொண்ட திருவாலியில் அருள் புரியும் மணவாளா! இடையர்கள் மாட்டுக்குத் தீனி வேண்டி வெட்டிய மரம் காய்ந்தாலும் தங்கிய பகுதி பசுமையாக இருப்பது போல் அடியேன் முழுமையாக உன் அருளை அனுபவிக்க வேண்டும் என்று உருகிப் பாடுகிறார் ஆழ்வார்.
விளைநிலங்களில் கலப்பைகொண்டு சால்சாலாக உழும்போது இருபுறத்தும் உழுபடை செல்ல அதற்கு அறாமல் இடையிடையே கிடக்குமிடம் படை யெனப்படும். கலப்பைச் சாலில் அகப்படாமல் தப்பிப் படையென்னும் அந்நடு விடத்திலே நின்ற பசுமையான தாமரைக் கொடிகளும் அழகிய நிலோற்பவக் கொடிகளும் பின்பு பயிர் செய்பவர்களால் களையாகப் பறித்துப் புறத்திலே யெறியப்பட்ட இடமான நீர்பாயுமடையிற் கிடந்து மலருமென அந்நாட்டின் நிலவள நீர்வளச் செழுமை கூறியவாறாம்.
ஆழ்வார் இப்பாசுரத்தில் திருவாலியின் அற்புதமான செழிப்பினைப் பாடுகிறார். நிலவளமும் நீர்வளமும் கொண்ட வயலாலியில் பெருமான் வாசம் செய்வதை விவரிக்கின்றார். ‘மணி கெழுநீர் மருங்கலரும் வயலாலி’ என்றும் ‘மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி’ என்றும் பிற பாசுரங்களிலும் இவ்வூரினைப் புகழ்ந்து பாடியுள்ளார். இத்திருவாலியில் மணாளனாக வந்து அமிருதகடவல்லி நாச்சியாரை மணம் புரிந்து திருமணக் கோலத்துடன் ஆழ்வாருக்குக் காட்சி அளித்ததாகக் கூறுகிறார். மேலும் தமக்கு ஞான லாபத்தில் உண்டான மகிழ்வை பெற்றதனோடு, பேறு கிடைக்கப்பெறாததால் வந்த வாட்டத்தையும் அடைந்திராதபடி அருள் புரிய வேண்டும் என்கிறார்.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும்
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா! என்னும்
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும்
என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே. 2063
பெருமான் மீது கொண்ட காதலால் இவள் மனம் உருக, விழிகளில் நீர்கட்டி நிற்க, தான் தளர்ந்து போய்ப் பெருமூச்சு விடுகிறாள். அவளுக்கு உணவும் உறக்கமும் மறந்து போயிற்று. பாம்பின் மேல் துயிலும் நாராயணா, மலர்களின் வாசம் வீசும் இடமான திருவாலியில் எழுந்தருளும் தேவகி பெற்ற மைந்தனே என்று ஆதங்கப்பட்டுத் தவிக்கிறாள். அழகிய கருடக்கொடி பார்த்து ஆடுகிறாள். திருவரங்கம் செல்வோமா என்கிறாள். என் கட்டுக்குள் அடங்காத பெண்ணைப் பெற்ற நான் பெரும் பழியைச் சுமக்கிறேன். இது நான் செய்த பாவமோ என்று திருத்தாயார் கவலை கொள்கிறாள்.
இப்பெண்பிள்ளை மனமானது நீர்ப்பண்டமாய் உருகி கண்ணீர் பெருக நிற்கின்றாள்; மோஹிக்கின்றாள்; பெருமூச்சு விடுகின்றாள்; உணவு உட்கொள்ள மறுக்கிறாள்; உறங்க மறுக்கிறாள்; விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரை புரிகின்ற நம்பீ! என்கிறாள்; அழகிய சிறகையுடைய கொடியாகிய பெரிய திருவடியை அனுபவித்து ஆடுகின்றாள்; பாடுகின்றாள்; ‘தோழீ! நாம் திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்; என் கைக்கடங்காத பெண்மகளைப் பெற்ற நான் விசாலமான இப்பூமண்டலத்திலே ஒப்பற்ற பழியை சம்பாதித்துக் கொண்டேன்; அந்தோ! என்கிறாள் திருத்தாயார்.
தன் மகளின் நிலையை இப்பாசுரத்தின் மூலம் திருத்தாயார் தெரிவிக்கிறாள். ஆண்டாள் பகவான் மீது கொண்ட பற்றும் பாசமும் போல நாமும் அவரிடம் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறாள். என் பெண்ணானவள் தனது சுயநினைவை இழந்தவளாய்த் திருவரங்கப் பெருமானின் நினைவாக இருப்பதால் பழியைச் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று அந்தத் தாய் சொல்லுகிறாள். உலகத்தவர் கூறும் பழியை துச்சமெனத் தூக்கியெறிய வேண்டும் என்பதை ஆழ்வார் இங்கு மறைமுகமாகத் தெரிவிக்கிறார். தாய்-மகள் கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி இந்த அற்புதத் தத்துவத்தை அவர் உணர்த்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக