வெள்ளி, 5 டிசம்பர், 2025

45. திருத்தண்கா - தூப்புல்

 


திருமங்கையாழ்வார்                                                                                      பெரிய திருமொழி 

பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே     1849 

      பொன் போன்று விரும்பத்தக்கவனை, உயர்ந்த இரத்தினம் போன்றவனை, அழகு மிக்க மின்னலைப் போன்று ஒளி பொருந்தியவனை, திருவேங்கடமலைச் சிகரத்தில் நேற்று வணங்கியதில் என்னை அடிமையாக்கிக் கொண்ட சுவாமியுமான சர்வேசுவரனை இன்று திருத்தண்காவிலே சென்று தரிசிப்போம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      இப்பாசுரத்தில் பெருமானை பொன்னாகச் சித்தரிக்கின்றார் ஆழ்வார். ஆபரணங்கள் செய்வதற்கு பொன்னை தீயிலிட்டு, அடித்து பலவிதமாக இம்சித்து  உருவாக்குகின்றோம். அதனால் பொன் வருந்துவதில்லை. மேலும் பொன் தனது ஒளியைக் கூட்டித் தருகின்றது. அதன் ஒரே வருத்தம் நம்மை ஒரு குந்துமணியாக மக்கள் நினைக்கிறார்களே என்பதுதான். அது போன்று பெருமானும் நம் நன்மைகளுக்காக தன்னையே தாழ்த்தி, கட்டுண்டு பிற துன்பங்களை தான் ஏற்றுக் கொள்கிறான். அவ்விதம் இருந்தும் மனிதர்கள் தாழ்ந்த வஸ்துக்களுடன் தன்னை ஒப்பிடுகிறாரே என்று வருந்துகிறார் என்ற பொருளில் அமைந்துள்ளது. 

திருமங்கையாழ்வார்                                                                                  திருநெடுந்தாண்டகம் 

முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா
     மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
     அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரதகத்தைத் திருத்தண்காவில்
     வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
     மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.         2065 

      மலையிலிருந்து உதிக்கும் இளங்கதிரவனைப் போன்றவனே, திருக்குறுங்குடியில் கார்மேகம் போன்று காட்சி தருபவனை, நித்யமான மூவுலகத்திற்கும் அப்பாற்பட்டனை, வைகுண்டத்து முதல்வனை, அளவிட முடியாத ஆராவமுதனை, திருவரங்கத்து அரங்கனை, வேதியர்கள் என்றும் சிந்தனை செய்பவனை, விளக்கின் ஒளி போன்று திகழ்பவனை, மரகதமணி போன்று கண்ணிற்கு பசுமையானவனை, தண்காவிலும், வெஃகாவிலும் உள்ள பிராட்டி மணாளனை, கிளிப்பாட்டுக் கேட்டு வளர்த்ததனால் உண்டான பயனை நான் அடைந்தேன் வா! என்று அழைத்து கிளியைக் கைகூப்பி வணங்கினாள்.
      பரக்கால நாயகி தன் கிளியை பெருமானின் பல லீலைகளைச் சொல்லி சொல்லி வளர்க்கிறாள். நாயகியோ பெருமான் மீது பக்தி கொண்டு அவளை ஏற்காதது குறித்து வருந்தினாள். தான் சொன்னதனால் அவள் மோகித்து வருந்துகிறாள் என்று கிளி கவலை கொண்டது. அவள் மனம் குளிர மீண்டும் பெருமானின் நாமங்களைக் கூறியது. அதனால் மகிழ்வுற்று ‘உன்னை வளர்த்ததனால் பயன் பெற்றேன் வா’ என்று அழைக்கிறாள். 

நம்மாழ்வார்                                                                                                                         திருவிருத்தம் 

நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது அம் பூந்
தேன் இளஞ் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே.     2503 

      நால்வகையான நிலங்களையும் தனது கதிர்களால் ருசித்து, சாரத்தைக் கொண்ட நீர்ப்பசை அறும்படி மென்று, சாரமற்ற பகுதி இதுவென்று வெம்மையை உமிழ்ந்த சூரியன், பாலை நிலத்தைத் தாண்டி வந்த பொன் போன்றவனே! தேவர்கள் தமது கால்கள் நிலத்தில் பதிய வந்து வணங்கும் கண்ணனது தலமான, அருகிலுள்ள திருவெஃகாவில் மலர் வனங்கள் உள்ளன. அவை எத்தகைய துன்பத்தையும் நீக்கி நன்மைகளைத் தரக் கூடியவையாகும் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.
      ஆதித்ய பகவானான சூரியன் நான்கு நிலத்தையும் தன்வசமாக்கி அதன் சத்தான நீரை வாயில் இட்டு மென்று தன் வெம்மையாலே மெல்கிறான். இத்தலத்தின் பெருமையினை ஆழ்வார் ஒரு பெண்ணைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்துள்ளது. இத்தலத்துப் பூந்தோட்டத்திற்கு வந்தாலே உனது துன்பமெல்லாம் அகன்று விடும் என்று கூறுகிறார். இங்குள்ள மலர் வனங்களுக்கே இத்தகைய பெருமை என்றால் அத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் நமக்கு எத்தகையவாறு அருள்வான் என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...