சனி, 6 டிசம்பர், 2025

44. அஷ்டபுயகரம்

 


திருமங்கையாழ்வார்                                                                                          பெரிய திருமொழி 

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை
     மலர்மிசைமேல் அயனும் வியப்ப
முரி திரை மா கடல் போல் முழங்கி
     மூவுலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு
     இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன
     அட்டபுயகரத்தேன் என்றாரே.       1118                                                                                                 

      திரிபுரம் தகர்த்த சிவபெருமானும், தாமரை மலரில் பிறந்த பிரம்மாவும், வியக்க, கடல் அலைபோல் மூவுலகத்தாரும் வியந்து முறையோடு வழிபட வருவதால் ஆரவாரம் எழுகிறது. இரணியனின் உடல் இரு கூறாகப் பிளக்கும்படி தீ பறக்கும் பிடறி, வாள் போன்ற, கூர்மையான பற்களை கொண்ட நரசிங்க உருவம் பெற்ற இவர் யார் என நான் வினவினேன். அதற்கு அவர் நான் காஞ்சியில் உறையும் அஷ்டபுஜ கரத்தானான ஆதிகேசவன் என்றார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பெருமான் ஆழ்வாரிடம் நான் அட்டபுயகரத்தில் வசிப்பவன். பிரகலாதனுக்காக வந்து உதவினது மட்டுமல்லாமல் உனக்கும் உதவுவதற்கு சந்தர்ப்பம் பார்த்து நிற்கிறேன் என்றார். பெருமானுடைய ஸ்வரூபங்களை நன்கறிந்த ஆழ்வாரே இவர் யார் என்று கேட்பதோ என்ற வினா எழும். அதற்கு பெரியவாச்சான் பிள்ளை, இவருடைய முகலக்ஷணங்களைப் பார்த்தால் பெருமானாக இருக்கக்கூடும் இருப்பினும் துர்பாக்கியசாலிகளான நமக்கு இவ்வளவு எளிதில் சேவை சாதிக்க நமக்கு பிராப்தி இருக்காதே என்று மனித மனத்தில் எண்ணங்கள் தோன்ற அவரிடத்திலே கேட்டேன். நான் அஷ்டபுஜ க்ஷேத்திரத்திற்கு அதிபதி என்று மறுமொழிந்தான் என்றார் ஆழ்வார்.     

 வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார்
     வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும்
     தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து
     மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன
     அட்டபுயகரத்தேன் என்றாரே.             1119 

      தேவர்கள் அனைவரும் வேத மந்திரங்களைக் கூறி வணங்கும் வீரர்களின் பெரிய வீரரான        ஸ்ரீராமபிரானைப் போன்ற இவர், அழகிய தமிழ்ப் பாசுரங்கள் பாடும் முதலாழ்வார்கள் வணங்கும் திருவேங்கடத்தானோ? தெரியவில்லை. வாமனனாய் மகாபலியின் வேள்விச் சாலையில் வந்து மூவடி மண் யாசித்தபின் திருவிக்கிரமனாய் வளர்ந்த அந்தணனைப் போலிருக்கும் இவர் எவர்? என்று நான் கேட்க, அவர் யானே அஷ்டபுஜகரத்தான் என்று கூறினார் என்ற தமது பாடலில் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
      பரக்கால நாயகியானவள் பெருமானை இராமனாகவும், திருமலை வேங்கடவனாகவும், திருவிக்ரமனாகவும் சேவை சாதிக்கும் அழகைப் பாடுகிறார். மேன்மையைப் பார்த்தால் கம்பீரமான சக்ரவர்த்தித் திருமகன் போலிருக்கிறதே, தாழ நின்று பரிமாறும் சீலத்தைப் பார்த்தால் முதலாழ்வார்கள் பாடிய திருமலைத் தெய்வம் போலுள்ளதே, நான் இவ்வாறு குழப்பத்தில் இருக்கும்போது தனது உருவை வாமனனாகி திருவிக்ரமனாக மாறியுள்ளாரே! யார் இவர்? என்று வினவும் போது நானே அட்டபுயக்கரத்தான் என்றார். பிறர்க்காக இரந்து வந்தவனல்லேன், எனக்காக இரந்துவந்தவனென்கிறார். 

செம் பொன் இலங்கு வலங்கை வாளி
     திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு
     கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
     வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன
     அட்டபுயகரத்தேன் என்றாரே        1120 

      சிவந்த நிறத்தில் பசும்பொன் போன்ற வலத்திருக்கையில் அம்புகளையும், நிமிர்ந்த சார்ங்கம் என்னும் வில்லினையும், கௌமோதகி என்னும் கதையையும், பாஞ்சசன்னியம் என்ற சங்கினையும், இடத் திருக்கையில் நாந்தகம் என்ற வாளையும், ஒளிமிக்க சுதர்சன சக்கரத்தையும், கேடயத்தையம், அழகிய மலரையும் தாங்கி, சினம் கொண்ட குவலயாபீடம் என்ற யானை அழியும்படி அதன் வெளுத்த தந்தத்தை பிடுங்கி எறிந்த கருத்த யானை போன்று காட்சியளிக்கும் இவர் யார் என்று கேட்க நான் அஷ்டபுயகரத்தான் என்று கூறுகிறார் பெருமான்.
      இத்தலத்தில் பெருமான் பஞ்சாயுதங்களோடு கூடிய சிறுசேவகமும், திருமேனியழகும் கொண்டு சேவை சாதிக்கும் அழகினை பராங்குச நாயகி எடுத்துக் கூறுகிறாள். என்னைப் போன்ற சிறுமிகளை வசப்படுத்திக் கொள்ள இத்தகைய திவ்யாயுதங்களுடன் காட்சி தருகிறார் என்கிறாள். ஆயுதம் இல்லாமலே அழகினை அள்ளி வழங்கும் இவர் ஆயுதங்களோடு வந்து திவ்யமாக காட்சி தருகிறார். இதே போன்று குவலயாபீடம் என்ற யானையை அழித்த போதும் இத்தகைய வடிவழகில் வந்து நின்றார். இத்தகைய அழகு பொருந்திய பெருமான் ஆழ்வாருக்குக் காட்சி அளிக்கிறார். 

மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி
     மா மழை காத்து ஒரு மாய ஆனை
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும்
     ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
     வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன
     அட்டபுயகரத்தேன் என்றாரே.   1121 

      மேக மண்டலம் வரைத் தொடும் உயரமும், சிறந்த இரத்தினங்களைக் கொண்ட கோவர்த்தன கிரியினால் கொட்டும் பெருமழையைத் தடுத்து,  குடையாகப் பிடித்து, மதுராவுக்குச் சென்ற காலத்தில் குவலயாபீடம் என்ற யானையை அழியும்படி அதன் கொம்பினைப் பிடுங்கி எறிந்த கண்ணனோ? இன்னாரென்று அறியக் கூடிய மாயத்தை நான் அறியவில்லை. அனல் பறக்கும் சுதர்சனத்தையும், பாஞ்சசன்னியத்தையும் தரித்து, எதிரே வேத மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருக்கிறாரே, பரமபதத்துப் பேரொளி போன்றிருக்கும் இவர் யார் என்று கேட்க, நான் அஷ்டபுஜகரத்தான் என்று கூறினார்.
      திருவாய்ப்பாடியில் இந்திரனுக்கு செய்து வந்த தினசரி பூஜையினை செய்யத் தவறியதால் கோபம் கொண்ட இந்திரன் பெருமழை பெய்வித்தான். அதனை கோவரத்தனகிரி கொண்டு கண்ணன் தடுத்து அனைவரையும் காத்தான். அதுபோன்ற கம்சன் ஏவிய யானையைத் தடுத்து அழித்தான். இவன் யாரென்று அறியுமுன் சங்கு சக்கரம் ஏந்தி வேதஒலியைக் கூறியபடி வந்தவர் பரமபதநாதரோ என்று திகைத்து நிற்க பெருமான் யான் அட்டபுய கரத்தான் என்று கூறினார் என்கிறார் ஆழ்வார். 

கலைகளும் வேதமும் நீதி நூலும்
     கற்பமும் சொல் பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
     நீர்மையினால் அருள்செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர்மேல்
     மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன
     அட்டபுயகரத்தேன் என்றாரே.     1122 

      வேதத்தின் உபநிடத பாகமான வேதாந்தங்களையும், நான்கு வேதங்களும், உபநிடதங்களும், இதிகாசங்களும், யாகங்களும் செய்யும் முறைகளை விளக்கும் கல்பசூத்ரங்களும், இலக்கண நூல்களும், வேத விளக்கங்களைக் கூறும், மீமாம்ச சாத்திரமும், அவரவர்க்கான இது போன்ற மற்றவைகளையும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் அருள் செய்கிறார்.  மலை போன்ற தோள்களும், கௌஸ்துப மணியும், மகாலட்சுமியும், பாஞ்சசன்னியம் எப்போதும் நிலைபெற்று நிற்கும் இவர் யார் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் ‘நான் அஷ்டபுஜகரத்தான்’ என்றார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      கருங்கடலைத் தந்தவர் இவரோ’ என்று ஆழ்வார் வினவ, நான் அஷ்டபுஜகரத்தான் என்றார் பெருமான். கலைகள் என்ற சொல் இங்கு வேதாந்த பாகத்தைக் குறிப்பிடுகின்றது. இதிகாசங்கள் நீதியை போதிக்கும் நூல்களாகும். வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைமைகளை உணர்த்தும் நூல் கல்பசூத்ரம் என்பதாகும். ஒரு சொல் சுத்தம், அசுத்தம் என்று பிரித்து அதன் பொருள் அறியும் முறை வியாகர்ஷண சாத்திரத்தில் உள்ளது. வேதங்களின் உண்மைப் பொருளை உணர்த்துவது மீமாம்சமாகும். இத்தகைய சாத்திரங்களையெல்லாம் முனிவர்களுக்கு அநுசந்தித்த பெருமான் அஷ்டபுஜகரத்தவனாக இத்தலத்தில் சேவை சாதிக்கிறான் என்பது பொருளாகும். 

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்
     ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்
     தம்மன ஆகப் புகுந்து தாமும்
பொங்கு கருங் கடல் பூவை காயா
     போது அவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன
     அட்டபுயகரத்தேன் என்றாரே        1123 

      எந்த விதத்திலும் நாம் இவரது குணங்களை அறிய முயன்றாலும் நம்மால் அது இயலவில்லை.  அழகிய பெண்களின் ஆபரணங்களையும், மனத்தையும், அவர்களது அடக்கத்தையும், தம்முடையதாகக் கொண்டு அலைகள் வீசுகின்ற கருமையான கடல், பூவை மலர்கள், காலத்தில் மலர்ந்த காயாம் பூ, கரு நெய்தல், அழகிய நீலமேகம் இவற்றைப் போல் காணப்படும் இவர் யார் என்றேன். நான் அஷ்டபுஜ கரத்தான் என்றார் அவர் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      மேலெழுந்தவாரியாக பாராமல் உள்ளிருந்து எவ்வளவு தூரம் ஆராய்ந்துப் பார்த்தாலும் இப்பெரியவரின் குணங்களை அறிந்து கொள்ள இயலவில்லை. அழகு மங்கையர்களின் அத்தனை லட்சணங்களையும் இவர் கொள்ளை கொண்டது போலுள்ளது.  பெண்களின் சங்கு போன்ற கழுத்தும், மனமும், நிறைவும், தமக்குள் புகுந்தது போன்று உள்ளது.  இவரைக் கண்டவுடன் நான் கலவி செய்ய இயலாமல் போனதால் என் மெய் வருந்தி இளைத்து அதனால் கைவளை கழன்று விழுந்தது. என் நெஞ்சானது இவரிடத்திலேயே பதிந்து விழும்படியும் என் அடக்கத்தையும் விட்டு பதறி அவர் மேல் விழும்படியாகி விட்டது என்று பரக்கால நாயகி கூறுவது போல் அமைந்துள்ளது.       

முழுசி வண்டு ஆடிய தண் துழாயின்
     மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி அம் சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும்
     எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார்
எழுதிய தாமரை அன்ன கண்ணும்
     ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன
     அட்டபுயகரத்தேன் என்றாரே      1124 

      வண்டுகள் மகிழ்வுடன் தேனில் மூழ்கிக் கூத்தாடும் குளிர்ந்த மற்றும் அழகாக தொடுக்கப்பட்ட துளசி மாலையும், மலர் மாலையும்,  திருமேனியிலே மணமுள்ள சந்தனமும் பூசப்பெற்ற அழகும், நிறைந்த இலாவண்யத்தை என்ன சொல்வேன்? ஓவியம் எழுதுவதில் வல்லவர்கள் எழுதிய அழகு கமலம் போன்ற திருக்கண்களும், தோள்களும், திருமார்பும், பவளம் போன்ற வாயும், இரம்யமாக உள்ளன. இப்படிப்பட்ட இவர் யார்? என்று நான் கேட்க, அவர் நான் அஷ்டபுஜ கரத்தான் என்று கூறினார் என்ற பொருளில் அமைந்துள்ளது.
      இப்பாசுரமானது பெருமானின் இயற்கை அழகிலும், செயற்கை அழகிலும் ஈடுபட்டுப் பேசுவது போல் அமைந்துள்ளது. திருத்துழாயும் சந்தனமும் சாத்தியுள்ள அழகை என்னவென்று சொல்வேன். திருக்கண்களும், திருமார்பும் அழகில் ஒன்றை ஒன்று போட்டி போட்டு தமது அழகினை காட்டிக் கொண்டிருக்கின்றது. கிருஷ்ணாவதாரத்தில் கம்சனால் விழாவிற்கு அழைக்கப்பட்டபோது இத்தகைய அழகில் கிருஷ்ணர் இருந்தார் என்று கூறப்படுகிறது. வராக அவதாரத்துப் புருஷரோ, மீனாக வடிவெடுத்து வேதங்களை மீட்ட பெருமானோ, பிரகல்லாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்தவரோ என்று ஆழ்வார் பல்வேறு அவதார வடிவங்களைச் சொல்வது போன்று இப்பாசுரம் அமைந்துள்ளது. 

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க
     வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால்
     சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார்
     கண்ணும் வடிவும் நெடியர் ஆய் என்
ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன
     அட்டபுயகரத்தே என்றாரே.      1125 

      நித்யசூரிகள் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு வேத மந்திரங்களைக் கொண்டு பெருமானை தொழுது நிற்பார்கள். மகாலட்சுமி இவர் திருமார்பில் எழுந்தருளியிருக்கிறாள். பாஞ்சசன்னியம் என்ற சங்கினை இடக்கையிலும், சுதர்சனத்தை வலக்கையிலும் கொண்டுத் திகழ்கிறான்.  இதன் பிறகும் இவரது நிறத்தை ஆராய்ந்து சொல்ல வேண்டுமென்றால் கருநெய்தல் மலரையொத்த நிறத்தைக் கொண்டவன், கரிய சமுத்திரத்தையும் கொண்டுள்ளார். திருகண்களிலும் வடிவழகிலும் அளவிறந்தவராய் என் உயிரை ஒத்திருக்கின்ற இவர் யாரோ என்று கேட்க நான் அஷ்டபுஜகரத்தவன் என்று பகர்ந்தார்.
      ஆழ்வார் முன் தோன்றிய பெருமான் தனியே வராமல் நித்யசூரிகள் புடைசூழ வேத கோஷங்களுடன் வந்து காட்சி தந்தார். அவரது வடிவழகுக்கும் கண்ணழகுக்கும் என்னால் எல்லை காண முடியவில்லை. என்றும் உயிரில் குடிகொண்டிருக்கும் இவர் உருவெடுத்து வந்தாரோ என்று நினைக்கும்படி தோன்றுகிறது.  இத்தகையவரை இன்னாரென்று அறுதியிட்டுக் கூற முடியாத இவர் யாரோ என்று ஆழ்வார் திகைத்து நிற்க, பெருமான் யான் அஷ்டபுஜ கரத்தவனே என்று கூறினார்.       

 தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா
     நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி
     வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம்
      நான் இவர் தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன
      அட்டபுயகரத்தேன் என்றாரே.      1126 

      நான் ஆராய்ந்து பார்த்த வகையில் என் மனமானது அவருடையதாகி விட்டது. உறுதியாக என் கை வளையல்கள் கழன்று விழுந்தன.  வஞ்சிக் கொடி போன்ற என் இடை துவளும்படி பார்த்து தனது பவள வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொன்னதுண்டு. இவரது பார்வை எனது உயிரை உண்ணுவதால் நஞ்சு கலந்தது போலிருந்தது. நான் இவரைப் பூரணமாக அறியமாட்டேன். இவர் யார் என்று புரியாமல் அஞ்சி நிற்கையில் நான் அஷ்டபுஜகரத்தான் என்று கூறினார் என்று பரக்கால நாயகி கூறுகிறார்.
      பரக்கால நாயகியின் கை வளைகளும், மனமும் அவரிடம் தங்கவில்லை. அவரிடத்தில் சென்று சேர்ந்து விட்டது. உடம்பு மெலிந்து மூர்ச்சையும் அடைந்து விட்டாள்.  இவ்விதமாக அனைத்தையும் என்னிடத்தில் கவர்ந்துவிட்டு மேலும் என்ன இருக்கிறதென்று ஆராயந்து பின்பு கொடி போன்ற என் இடையை உற்று நோக்கியவாறு வாய்விட்டு ஏதோ சொன்னது போல் இருந்தது. அவரது பார்வை என்னை எரிப்பது போன்றிருந்தது. இவர் நம்மை காக்க வந்தாரா இல்லை கவர வந்தாரா என்று ஐயுறுகிறேன் என்கிறார். என் அச்சத்தைக் கண்டு என்னை வேறொருவராக நினைக்க வேண்டாம். உனக்காக நான் அஷ்டபுஜகரத்தில் காட்சி அளிக்கிறேன் என்று கூறுகிறார் என்பதாக அமைந்துள்ளது.        

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும்
      நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி
      அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
      காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
     ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே     1127 

      தொண்டை மண்டல மன்னன் வைரமேகனால் வணங்கப்படும் நீள்முடி கொண்ட எம்பெருமானாகவும், அம்மன்னனின் வலிமையாலும், புகழாலும் சூழப்பட்ட காஞ்சி மாநகரில், திரு அட்டபுயகரத்தில் எழுந்தருளியிருக்கும் முதல்வனாக இருப்பனைப் பற்றி, அழிவற்ற நல்ல மதில்களால் சூழப்பட்ட திருமல்லையின் வேந்தனும், விரும்பத்தக்க குணங்களைக் கொண்ட கலியன் என்ற திருமங்கையாழ்வாரால் தன்னை ஒரு பெண்ணாகக் கற்பனை செய்து இயற்றப்பட்ட இனிய பாடல்களைப் பக்தியுடன் பாடி வழிபடுவோருக்கு வைகுந்தம் இருப்பிடமாகும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      திருஅட்டயபுரத்துப் பெருமானின் மேல் பாடப்பட்ட இப்பாசுரங்களை பக்தியுடன் பாடுபவர்கள் வைகுந்தம் சென்று சேர்ந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவார்கள். இத்திருமொழியை ஓதுபவர்கள் எவ்விடத்தில் வசிக்கிறார்களோ அவ்விடமே பரமபதமாக இருக்கும். முற்காலத்தில் பல அரசர்கள் பல்வேறு திருக்கோயில்களைப் பராமரித்து திருக்குடநீராட்டு செய்துள்ளார்கள். அது போன்று இந்த திவ்யதேசம் வைரமேகன் என்ற அரசனால் சம்ரோக்க்ஷணம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க இத்தலத்துப் பெருமானின் பெருமை பற்றி ஆழ்வார் தமது பாசுரங்களில் எடுத்தியம்பியுள்ளார்.     

பேயாழ்வார்                                                                                                    மூன்றாம் திருவந்தாதி 

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு       2380 

      ஏந்திய எட்டு திவ்ய ஆயுதங்களாலும் தோல்வியறியாத வெற்றியைக் கொண்டவனும், திருக்கச்சி நகரிலுள்ள அட்டபுயக்கரத்தில் உறைபவனும், முற்காலத்தில் தடாகத்திலிருந்த செருக்கான முதலை மடியுமாறு குறிதவறாமல் வீசிய சதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியவனுமான பகவானது திருவடிகளே எங்களுக்குத் துணையாகும் என்று பாடுகிறார் ஆழ்வார்.
      வாள், சிலை, தண்டு, சங்கம், வாள், ஆழி, கேடகம், மலர் என்கின்ற எட்டுவிதமான திவ்யாயுதங்களை ஏந்திக் கொண்டு படைகளைக் கொண்டு போர்க்களத்தில் வெற்றிவாகை சூடினான். இந்த எட்டு ஆயுதங்களை எவ்வித சிரமமுமின்றி தன் கையில் ஏந்திக் கொண்டு பெருமான் காட்சி தருகிறான். கஜேந்திரன் என்ற யானை முதலையின் வாயில் அகப்பட்டு துன்பம் கொண்டபோது தன்னால் முடியாத நிலையில் முற்பிறவியில் தான் கற்றுணர்ந்த நிர்க்குண பரப்ரம்மஹ ஸ்தோத்திரத்தை கூறியபோது பெருமான் கருட வாகனத்தில் ஓடி வந்து காத்தது போன்று அடியார்களின் எதிரிகளை அழிப்பான். திவ்யாயுதங்களையும், திவ்ய விக்ரகங்களையும் உடைய அவனுடைய பாதமூலமே அநந்ய ஸரணத்தவத்தை ஸ்வரூபமாகக் கொண்ட பகவான் நமக்குக் கதியாகத் திகழ்கின்றான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...