திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கடல்போல் கருத்திருக்கும் திருமேனியை உடைய கண்ணா! போரில் பகைவர்களை வெல்ல
வல்லமை மிக்கவர்கள் குடிகொண்டிருக்கும் திருநாங்கூரில் வலிமையான மதிற்சுவர்களால்
சூழப்பட்ட திருவெள்ளக்குளம் என்னும் தலத்தில் அருள்புரியும் அண்ணலே! அடியேனின்
துன்பங்களைப் போக்கியருள வேண்டும் என்று பெருமானிடம் ஆழ்வார் வேண்டுகிறார்.
திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கும் பிரானே! கடல் போன்ற திருமேனியை
உடையனாயிருப்பது சம்ஸாரத்தில் கொதிப்படைந்து கிடக்கும் எம்போன்றவருடைய
தாபங்களைத் தனிப்பதற்கேயன்றோ? அப்படியிருந்தும் அடியேனுடைய தாபங்களை இன்னமும்
அகற்றாமலிருப்பது என்னோ? கடுகவே என்னிடரைக் களைந்தருளாய்
என்கிறார்.
பரந்த கடல் போலே கறுத்த அழகையும் கம்பீரத்தோடு கூடின திருமேனியை உடையவனே! சத்துருக்களை
யுத்தத்திலே வெல்லும் அந்தணர் வாழும் திடமான மதில்களாலே
சூழப்பட்ட திருநாங்கூரின் திருவெள்ளக்குளத்தில்
இருக்கும் அண்ணா! அடியேனுடைய துன்பங்களைப் போக்க
வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
மலர் கொத்துக்களையும், துளசி மாலைகளையும் அணிந்து கொண்டிருப்பவனே! ஒருநாளும் குறையாத
புகழுடைய வேதங்களை நன்கு கற்ற வேதியர்கள் குடியிருக்கும், செந்தாமரைக்
பூக்களையுடைய நீர்நிலைகளுள்ள திருநாங்கூர் திருவெள்ளக்குளத்தில் வீற்றிருக்கின்ற
அண்ணலே! என்னுடைய துன்பத்தை நீக்கியருள வேண்டும் என்று கூறுகிறார் ஆழ்வார்.
திருவெள்ளக்குளத்து
எம்பெருமானே ! ஸர்வரக்ஷகன் என்பது விளங்கவன்றோ நீ திருத்துழாய் மாலை
சாத்தியிருப்பது என்னிடரை நீக்காதொழியில் துளபமலர் மாலை அணிந்திருப்பது
பயனற்றதாகுமே. உன்னுடைய திருவருளுக்குப் பாத்ரபூதர்களென்று நாடெங்கும்
புகழ்பெற்ற நல்ல வைதிகர்கள் நிறைந்திருக்கிற திருநாங்கூரிலன்றோ நீ நித்யவாஸம்
பண்ணுவது. அவர்களைப் போலே என்னையும் புகழுடையேனாக்க வேண்டுவது உனக்குப் பணியன்றோ? ஆகையாலே என்னிடர்களைக் களைந்தருள வேணும் என்றாராயிற்று.
திருவெள்ளக்குளத்துப் பெருமானே! சர்வரக்ஷகன் என்றதனால் திருத்துழாய் மாலை
அணிந்துள்ளாயா? நீ எனது துன்பங்களை நீக்காதிருக்கும்
நிலையில் துளசிமாலை அனிந்திருப்பது பயனற்றதாகுமே. உனது திருவருளுக்கு பாத்திரமான
நல்ல வைதிகர்கள் நிறைந்துள்ள திருவெள்ளக் குளத்தில் நித்யவாசம் செய்கிறாய்.
அவர்களைப் போன்று என்னையும் புகழுடையவனாக்க வேண்டும் என்பது உனது பணியல்லாவா?
எனவே என் இடர்களைக் களைவாயாக என்று வேண்டுகிறார். இங்கு ஆழ்வார்
குறிப்பிடும் துன்பம் என்பது சம்சார சாகரம் என்பதாகும். அதிலிருந்து என்னைக் கரை
சேர்த்து விடு என்று வேண்டுகிறார்.
திருவாய்ப்பாடியில் உள்ள கோவர்த்தனகிரியைத் தாங்கி, குளிர்ந்து
கொட்டிய மழையைத் தடுத்து மகிழ்ந்தவனே! நல்ல குணமும் பெரும் புகழும் பெற்ற வேதம்
ஓதுபவர்கள் வாழ்கின்ற நாங்கூருக்கு வருவார் போவாரெல்லாம் சேவிக்கும் திருவெள்ளக்குளத்துள் நின்றருளும்
திருவிக்ரமா! அடியேனுடைய துன்பங்களை நீக்கி அருள் புரிய வேண்டுகிறேன் என்கிறார்
ஆழ்வார்.
மலையைக் கொண்டு குளிர்
மழையை தடுத்து மகிழ்ந்தவனே! நல்ல பெருமைப்படத் தக்க
பெரும் புகழையுடைய அந்தணர் மற்றும் அனைவரும் வணங்கும்
திருநாங்கூரின் திருவெள்ளக் குளத்தில் நிற்கின்றவனே! எம்பெருமானே
அடியேனுடைய துன்பங்களைப் போக்க
வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
போவோர் வருவோரெல்லாம் கையெடுத்து கும்பிடுமாறு திருவெள்ளக் குளத்தில்
எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! இந்திரன் பசிக் கோபத்தினால் ஏழு நாட்கள்
திருவாய்பாடியில் தொடர்ந்து மழையை கொட்டுவித்தான். ஆய்ப்பாடி மக்களின் துயரினைப்
போக்க கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து மக்களைக் காத்தான். அந்த ஆயரையும்,
ஆநிரையையும் காத்தருளியது போன்று எம்துயரையும் நீக்கி என்னைக்
காத்தருளுமாறு வேண்டுகிறேன் என்கிறார் ஆழ்வார். பகவானின் கருணை மழையே நம்மைக்
காக்கின்றது. தவறிழைத்தவர்களெல்லாம்
தண்டிக்கப்பட்டால் ஒருவரும் உலகில் மிஞ்சமாட்டார். நமது குறைகளையும், தவறுகளையும் பகவான் கருணையோடு காக்கின்றார். அவனது பாதங்களைப் பற்றுவோம்
என்றவாறு அமைந்துள்ளது.
காட்டிலே வளர்ந்து நன்கு கொழுத்த குவலயாபீடம் என்னும் காட்டு யானையின்
தந்தங்களை முறித்த யானை போன்ற செருக்குற்ற பெருமானே! குலம், கல்வி முதலிய பல்வகைகளில் நன்மை பெற்று சிறந்தவர்கள்
நிறைந்த நாங்கூரில் தேன் நிறைந்த தோட்டங்கள் சூழ்ந்த திருவெள்ளக்குளத்தில் அருள்
செய்பவனே! என்னிடம் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
கண்ணனைக் கொல்ல வந்த
யானையானது கம்சனது பெரிய அரண்மனையில் நன்கு தின்று கொழுத்து வளரப்பெற்றது. அதனால்
இதனை எதற்கும் அடங்காத காட்டு யானை என்று கூறுகிறார். இத்தகைய யானையை நீ கொன்று
முடித்து நீ உன்னேயே காப்பாற்றிக் கொண்டது எங்களுக்கு அருள்வதற்காக என்ற முடிவில்
உள்ளேன். குலத்தாலும், ஞானத்தாலும், தினசரி செய்யும் கடமைகளாலும், ஆத்ம
குணங்களாலும் மற்றும் எல்லாவற்றினாலும் சிறந்து விளங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழும்
இடத்தில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அடியார்களுக்கு அருள் புரிவதே தர்மம்
என்று அவர்கள் சொன்னதை அப்படியே கேட்டு அவர்களுக்கே அருள் புரிகின்றாயே! அத்தகைய
பகவானே! நீ என்னிடத்தில் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார்.
வேடர்கள் நிறைந்துள்ள திருவேங்கட மலையிலே நித்யவாசம் செய்யும் என் தீபமே!
நாடெங்கும் நீறைந்த புகழ்பெற்ற வேதம் கற்ற வேதியர்கள் குடியிருக்கும் நாங்கூரில்
திரண்டிருக்கின்ற தோட்டங்கள் நிறைந்த திருவெள்ளக்குளத்தில் அருள் செய்பவனே!
உன்னைப் பாடிக் கொண்டு வருகின்ற என்னுடைய பாவங்களைச் சிதறடிக்க வேண்டும் என்று
ஆழ்வார் வேண்டுகிறார்.
வேடர்கள் மலிந்த திருமலையிலிருக்கும் விளக்குப் போன்றவனே நாடெங்கும் நிறைந்த புகழையுடைய அந்தணர் வாழும் தளிர்களால் சூழ்ந்த சோலைகளை உடைய திருநாங்கூரின் திருவெள்ளக் குளத்தில் இருப்பவனே! உன்னைப்
பாடிக்கொண்டு வரும் அடியேனின் பாவங்கள் அனைத்தையும் சிதறடிக்க வேணும்.
வடநாட்டுத் திருப்பதிகளில்
திருமலைக்கு எவ்வளவு சிறப்புகள் உண்டோ அது போன்று தமிழகத்துத் திருப்பதிகளில்
திருவெள்ளக்குளம் அண்ணன்கோவில் என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இரு
திருப்பதிகளிலும் ஒன்றான பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்ளப்படும். எனவே ஆழ்வார்
இத்தலத்தின் சிறப்பை வேங்கடமலைக்கு ஒப்பிடுகிறார். திருமலையில் உள்ள வேடர்கள்
வேங்கடவனை ஒருநாளும் விட்டுப் பிரியாமல் அவருக்குத் துணையாக அவ்விடத்தே
இருப்பார்கள். எனவே வேடார் திருவேங்கடம் என்று கூறுகிறார். எத்தகைய தீவினைகள்
வந்தாலும் அவனைப் பாடினால் அத்துன்பங்கள் வலுவிழந்து போகும் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
வலிமை மிகுந்த கற்களால் பெரிய சமுத்திரத்தில் அணைக்கட்டி மகிழ்ந்தவனே!
புகழ்மிக்க நல்ல அந்தணர்கள் வாழும் திருநாங்கூரின் செல்வனே! திருவெள்ளக்குளத்தில்
அருள் புரிபவனே! என் துன்பங்களை எல்லாம்
நீங்கும்படி அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
திருவெள்ளக்குளத்துறையும்
செல்வனே! நீ ஒரு பிராட்டிக்காகப் படாதபாடுபட்டு அரிய பெரிய காரியங்கள்
செய்தாயே!; நீரிலே ஆழ்ந்து போகக்கூடிய மலைகளைக் கொண்டு சேதுபந்தம் திருத்தினாய்;
பிராட்டியின் இடர்களையெல்லாம் கெடுத்தாய்; அப்படியே அடியேனுக்கும் சிறிது அருள் செய்யலாகாதோ? என்கிறார்.
திருவெள்ளக்குளத்து செல்வனே! நீ சீதா பிராட்டிக்காகத் துன்பத்துடன்
படாதபாடுபட்டு அரிய பெரிய காரியங்களைச் செய்து முடித்துள்ளாய். நீரில் மலைகளைக்
கொண்டு பெரிய சேது அணைக் கட்டினாய். ஜானகி பிராட்டியின் இடர்களையெல்லாம் முழுதும்
தீர்த்தாய்! அந்த அளவில் அடியேனுக்கும் எனது இடர்களைத் தீர்த்து அருள் புரிய
மாட்டாயா என்று மன்றாடிக் கேட்கிறார். ஸ்ரீராமன் அணை கட்டியதன் நோக்கம் சீதையை
மீட்பதற்காக மட்டுமல்லாமல் அசுரக் கூட்டத்தை முழுதும் ஒழித்து நல்லவர்களுக்கு
ஆறுதல் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இத்தகைய அரிய காரியங்களைச் செய்து முடித்தார். இத்தகைய பகவான் நம்
துன்பங்களையும் தீர்ப்பார் என்று நம்பி அவனைச் சரணடையுங்கள் என்று கூறுகிறார்.
கோலைக் கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்த என் கோபால கிருஷ்ணனே! நான்கு
வேதங்களையும் கற்று வல்லமை கொண்ட வைதிகர்கள் நிறைந்த திருநாங்கூரில் சேல்மீன்கள்
நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட திருவெள்ளக்குளத்தில் கோயில் கொண்ட திருமாலே! என்
கொடிய பாவங்களைப் போக்கியருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
திருவெள்ளக்குளத்து எம்பெருமானே ! நீ ஸங்கல்ப மாத்திரத்தாலேயே ஸ்ருஷ்டி
ஸம்ஹாரங்களையும் செய்து தலைக்கட்ட வல்லவனாயிருக்கச் செய்தேயும் இடையனாகப் பிறந்து
இடைச்சாதிக்குத் தக்க கோலைக் கையிலே கொண்டு கறவைகளின் பின்னே காடுகளிற் சென்று
அவற்றைப் புல்லும் தண்ணீருமுள்ள இடங்களிலே கொண்டு மேய்த்தாய்.
திருவெள்ளக்குளத்துப்
பெருமானே! நீ சங்கல்பத்தில் உயிர் சிருஷ்டிக்கிறாய். அதுசமயம் தீயவர்களையும்
அழித்து மக்களைக் காக்கின்றாய். இவ்விதம் இருக்க இடையனாகப் பிறந்து
இடைச்சாதிக்குத் தக்கவாறு ஆநிரைகளை கோல்கொண்டு மேய்த்து கறவைப் பசுக்களின் பின்னே
காடுகளில் அலைந்து திரிந்து அவற்றிற்கு புல்லும், நீரும்
அளித்து மேய்த்து வந்தாய். இவ்விதம் செய்தும் உனக்கு மனநிறைவு பெற்றதா? இத்தகைய கடினமான பணிகள் செய்தும் எனது வல்வினைகளைத் தீர்க்க
இந்தளவு முயற்சிகள் எடுக்க வேண்டுமா? ‘ஸர்வ பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி’ என்று திருவுள்ளத்தில் நினைத்தால் போதுமே. எவ்விதத்திலாவது எனது
வல்வினைகளைத் தீர்த்தருள வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
பெரிய வராகமாகி இந்தப் பூமியை அசுரனிடமிருந்து விடுவித்து எடுத்த நாராயணனே!
ஒழுக்கமான வேதியர்கள் குடி கொண்டிருக்கும் நாங்கூரில் சிறந்த மலர் வனங்கள் சூழ்ந்த
திருவெள்ளக்குளத்துள் அருள் புரிபவனே! எந்நாளும் போதும் என்ற நிறைவை ஏற்படுத்தாத
அமிர்தம் போன்றவனே! அடியேனுக்குக் கருணை காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார்
ஆழ்வார்.
திருவெள்ளக்குளப் பெருமானே! பூமியை பிரளயம் கொள்ள மஹாவராகமாகி
இடர்த்தெடுத்தாய். ஆகையாலே உனக்குச் செய்யக்கூடாத காரியங்கள் ஒன்றுமில்லை.
தவிரவும் நீ நாராயணன் என்று பெயர் பெற்றுள்ளாய். சரீரத்திற்கு நன்மை செய்ய
வேண்டியது சரீரியான ஆத்மாவின் கடமையன்றோ? அதுபோல் என்
இடர்தீர்த்து எனக்கு அருள் புரிவது உனது கடமை அல்லவோ. என்னைப் பரிபூரண
திருப்தியுடையவனாக மாற்றி விடுவாயாக. எனவே எனக்கு நீ அருள் செய்து தீர வேண்டும்
என்று பெருமானை இறைஞ்சி வேண்டுகிறார். கர்மவினைகள் தீர்க்கப் பூமியில் பிறத்தலே
சிறந்த வழி. அத்தகைய பூமியை அசுரனிடமிருந்து மீட்டெடுத்து நமக்குத் தந்துள்ளார்.
இத்தகைய பெருமானை திருவெள்ளக்குளத்தில் சென்று சேவிப்போமாக.
தாமரை மலரில் வசிக்கும் மகாலட்சுமி அணைந்த திருமார்பனே! உலகத்தவர் நாவில்
நிறைந்திருக்கின்ற கீர்த்தியுடைய வேதியர்கள் குடியிருக்கும் நாங்கூரின் இறைவனே!
திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளி இருக்கும் கோவிந்தா! சம்சாரத்தில் உழன்று கொண்டிருக்கிறானே அந்த
அடியவனைக் காப்பாற்ற வேண்டும் என்று என்மீது திருவுள்ளம் இறங்க வேண்டும் என்று
வேண்டுகிறார் ஆழ்வார்.
திருவேங்கடமலைக்குத் திருப்பதிகம் பாடின நம்மாழ்வார் “அகலகில்லேனிறையுமென்று
அலர்மேல்மங்கை யுறைமார்பா!” என்று பிராட்டியின் நித்ய ஸம்பந்தத்தையிட்டுப்
பாசுரம் சேவித்தது போலவே, அத்திருமலைக்குத் தோள்திண்டியான திருவெள்ளக்குளத்துக்குத்
திருப்பதிகம் பாடுகிற இவ்வாழ்வாரும் “பூவார் திருமாமகள் புல்கிய மார்பா!” என்று
பிராட்டியின் நித்ய ஸம்பந்தத்தையிட்டு இப்பாசுரம் பேசுகிறாரென்க. பிராட்டியானவள் உன்னை விட்டுப் பிரியாதிருக்கவும் நான் இழப்பது என்னோ?
என்ற கருத்தையடக்கிப் ‘பூவார் திருமாமகள் புல்கிய மார்பா!’ என
விளிக்கின்றார்.
திருவேங்கடமலைப் பெருமானை நம்மாழ்வார் தமது பாசுரத்தில் ‘அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா’ என்று
பிராட்டியின் தொடர்பில் பாடியுள்ளது போன்று திருமங்கையாழ்வாரும் பகவானை
பிராட்டியுடன் தொடர்புப்படுத்தி, ‘பிராட்டியானவர் உன்னை
விட்டுப் பிரியாதிருக்கவும் நான் இழப்பது என்னோ’ என்ற கருத்தினையடக்கி ‘பூவார்
புல்கிய மார்பா’ என்று பாடுகிறார். பொய் தோற்றமான இச்சரீரத்தின் உள்ளிருக்கும்
ஆன்மாவை எதனாலும் அழிக்க முடியாது. சம்சார வாழ்வு என்பது கனவு போன்றது. அதில்
கொடிய நிகழ்வுகள் அடிக்கடி வந்து செல்லும். நாம் ஆத்மா என்ற விழிப்புணர்வைப்
பெற்றுவிட்டால் ஒரு புதிய உலகத்தில் நாம் சஞ்சரிப்போம். அத்தகைய விழிப்புணர்வை
நீதான் எனக்குத் தர வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுவது தனக்கு மட்டுமன்றி நம் போன்ற
மக்களுக்கும் சேர்த்துதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சிறந்த பக்தியுடைய, வேதம் கற்றறிந்த
அந்தணர்கள் வாழும் திருநாங்கூரின் செல்வன்,
திருவெள்ளக்குளம்
என்னும் குடியிருப்பவனாக எம்பெருமான் திகழ்கிறான். மலையைவிட அதிக வலிமை கொண்ட கலியன் என்கின்ற
திருமங்கையாழ்வார் பாடிய இப்பத்துப் பாசுரங்களையும் இவர்கள் திறமைமிக்கவர்கள்
என்று மற்றவர் போற்றும்படி பாடவல்லவர்கள் தேவர்களோடு சேர்ந்து வாழ்வார்கள் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
ஆழ்வார் பாடிய இப்பத்துப்
பாசுரங்கள் அனைத்தும் பகவானின் பெருமைகளைப் பறைசாற்றுகின்றன. மேலும் நம்முடைய
அவலங்களையெல்லாம் நீக்கிப் பேரானந்த வாழ்வுக்கு வழிவகுக்கின்றன. பகவானின் படைப்பான
நாம் தங்கங்களாக உள்ளோம். இருப்பினும் அதன் மீது தூசு படிந்தது போல் அசுரகுணங்கள்
படிந்து கொண்டிருப்பதால் அதன் ஒளி மங்கி காணப்படுகின்றது. ஆழ்வாரின் பாசுரங்கள், படிந்த தூசுகளை விலக்கி ஒளி பெறச் செய்கின்றன. பெருமானின் துணையுடன் நாம் அனைவரும் தீய
குணங்களை விலக்கி ஒளி பெறுவோமாக என்று கூறுகிறார் ஆழ்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக