ஞாயிறு, 7 டிசம்பர், 2025

43. திருக்கச்சி - அத்திகிரி

 


திருமங்கையாழ்வார்                                                                                         பெரிய திருமொழி 

கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் *இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே.     1541     

      கல்லினால் கட்டப்பட்ட திருமதில்களால் சூழப்பட்ட காஞ்சியில் வசிக்க  விரும்பிய, உலகமெல்லாம் துதிக்குமாறு திருப்பாடகமென்னும் திருப்பதியில் உறையும் பகவான், இலங்கை அரசனான இராவணனின் பலமான உடம்பை வில் வளைத்து அம்பெய்து அழித்த தென்பெருமானே! விபீஷணனுக்கு  நன்மைகள் புரிந்த எம்பிரான் திருநாமத்தைச் சொன்னால் அது ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதாகும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
காஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர் சந்நிதியை ‘பாடும் அகம்’ என்று கூறுவர். துரியோதனன் கண்ணபிரானை வஞ்சகமாகக் கொல்ல குழி அமைத்து அதன்மேல் பட்டுத் துணி போட்டு அமர்த்தினான். பெருமான் விஸ்வரூபமெடுத்து மல்லர்களை யெல்லாம் அழித்தார். அத்திருக்கோலத்தில் இத்தலத்தில் சேவை சாதிக்கின்றார். பெரியாழ்வாரும் ‘அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவப் பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்’ என்று பாடியுள்ளார். அத்தகைய பெருமான் திருநறையூரிலும் சேவை சாதிக்கின்றார். 

திருமங்கையாழ்வார்                                                                              திருக்குறுந்தாண்டகம் 

பிண்டி ஆர் மண்டை ஏந்திப் பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார்  உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே  2050 

      உளுத்துப் போன மாமிசத் துகள்கள் உதிரும் மண்டையோட்டை தரித்து வெளி இல்லங்களில் பிச்சை ஏற்றுத் திரியும் சிவபிரானின் சாபத்தைத் தீர்த்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் அருள் புரியும் இடமான திருக்கண்டியூர், திருமெய்யம், திருவரங்கம், காஞ்சிபுரம், திருப்பேர்நகர், மாமல்லபுரம் போன்ற திவ்ய தேசங்களுக்கு சென்று சேவிப்பவர் பிறவிப் பயன் பெறலாம். மற்றவர்கள் பாவவினைகள் தீர்ந்தும் முக்தியடையாத நிலை பெறுவர். இங்கு பிறவிப்பயன் என்று கூறுவது பிறப்பு இறப்பு இல்லாத பேரானந்த நிலை, ஆத்மாவை அறிந்துவிட்ட தூய நிலை, வேறுபாடுகளைக் கடந்துவிட்ட ஒரு அற்புத நிலை, பகவானின் ஒரு கூறாய் நாம் இருப்பதை உணர்த்தும் நிலை என்பதாகும். எனவே மக்கள் அனைவரும் இத்தகைய திவ்ய தேசங்களுக்குச் சென்று பெருமானை சேவித்தல் வேண்டும் என்று உணர்த்துகிறார். 

திருமங்கையாழ்வார்                                                                                  திருநெடுந்தாண்டகம் 

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
     மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
     குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
     பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா!
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
     ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே.      2060     

      ‘‘மரக்கலங்களில் சிறந்த இரத்தினங்களைக் கொண்டு தள்ளும் கடற்கரையைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் கோயில் கொண்டிருப்பவனே! திருமதில்களை உடைய காஞ்சியில் வாழ்பவனே! திருப்பேர் நகரில் குடிகொண்டிருப்பவனே! அழகிய கொன்றை மாலையை இடப்பக்கம் சூடிய மலைமன்னன் இமவானின் மகளான பார்வதியை இடப்பக்கம் அமர்த்தியுள்ள சிவபெருமானுக்கு உன் மேனியில் இடம் தந்தவனே!  குளிர்ந்த திருவேங்கட  மலையில் நின்றருள்பவனே! பவள நிறத்தவனே! எங்கே  போனாய்?  பகவானே! உன்னைத் தேடி இந்த ஏழை அலைகின்றேனே!’’ என்று ஆழ்வார் பகவானை வேண்டுகிறார்.
      பகவானைத் தேடுவதிலும் ஒரு அடித்தளம் அமைய வேண்டும். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்றெண்ணி தேடுவது சுயநலமாகும். இக்காரியத்தால் பகவான் நம்மை விட்டு விலகி விடுகிறான். சுயநலமில்லா அன்பைக் கொண்டு அவனை அடைய வேண்டும் என்ற கருத்தில் ஆழ்வார் இப்பாசுரத்தை இயற்றியுள்ளார். 

கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
     களிறு என்றும் கடல் கிடந்த கனியே! என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
     அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
     தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
      மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே.  2066 

      நீண்ட மதில்கள் சூழ்ந்த காஞ்சித் திருப்பாடகத் தலத்தில் குடி கொண்டிருக்கும் யானையே! எக்காலத்திலும் யோக நித்திரை கொள்ளும் கனியே! மணமுள்ள மலர்களையும், தடாகங்களையும் சுற்று வேலியாகக் கொண்ட அழகிய திருவழுந்தூரில் நின்றருளி வரும் என் முறை மாப்பிள்ளையே! என்று சொல்லி நாதம் மிகுந்த நீணட இசையை கொண்ட வீணையை தனங்களில் உரசுமாறு தாங்கிப் பிடித்து, தூய்மையான புன்சிரிப்பால் பல்வரிசை தெரியுமாறு புன்னகை செய்து, தனது மெல்லிய விரல்கள் சிவக்கும்படி வீணையை மீட்டி என் பேதைப் பெண் கிளி போன்று அவன் பெயரை இசைக்கின்றாள்’ என்று தாயார் பாடுவது போன்று அமைந்துள்ளது. இம்மண்ணுலகத்தில் பிறந்த  பயனை என் மகள் சரியாகப் பயன் படுத்திவிட்டாள். அற்ப மனிதர்களின் நடுவில் இவள் தனித்துவம் பெற்று விட்டாள் என்ற கருத்தில் அமைகிறது. 

பூதத்தாழ்வார்                                                                                             இரண்டாம் திருவந்தாதி 

என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான       2276 

      இரணியன் என்ற அசுரனின் வலிமையான மார்பைப் இரண்டாக கிழித்தவனும், நீலமணி போன்ற நிறத்தையுடைய நரசிம்மன், பிரளய காலத்திலும் அழியாதிருப்பவன், காலம் போன்ற பலவற்றையும் உண்டாக்கினவன், உலகத்தவர்கள் புகழ்பாடும் திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவன், அத்திகிரியில் குடியிருப்பவன், என் தலையில் புத்தியாய் இருப்பவன், என் மனத்தில் வாசம் செய்பவனாக உள்ளான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஹஸ்திகிரியில் நரசிம்மராக சேவை சாதிக்கும் பெருமான் ஆழ்வாரின் நெஞ்சத்திலும், தலையிலும் குடிகொண்டுள்ளார் என்று கூறும் போது மற்ற அவயங்களான கண், மார்பு தோள் ஆகியவற்றிலும் உள்ளார் என்பது பொருளாகும்.  இதே கருத்தினை நம்மாழ்வார் ‘இவையும் அவையும் உவையும்’ என்ற தமது திருவாய் மொழியில், பெருமான் ஆழ்வாரின் திருமுடியில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழ்வாரின் சுற்றுப்பறத்தில் நின்றான், அருகில் வந்தான், கூடி நின்றான். இடுப்பில் அமர்ந்தான், மார்பில் இருந்தான், தோள்மீது அமர்ந்தான், நாவில் புகுந்து, கண்ணுள்ளும், நெற்றியுள்ளும் நின்று திருமுடியில் வந்து நிலையாக அமர்ந்துவிட்டான் என்று கூறுகிறார். விதிவழி புத்தி செல்கிறது. அதன் தலைவனான பெருமான் புத்தியில் அமர்ந்தால் தடுமாற்றமின்றி நற்செயல்களையே செய்வோம் என்பது இதன் பொருளாகும். 

அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்           2277 

      கருடனை வாகனமாகக் கொண்டவன், அழகிய மாணிக்கங்களைக் கொண்ட படத்திலிருந்து பொறிகளையும் வெளிப்படுத்தும் ஆதிசேஷன் மேல் யோகநித்திரை செய்பவன், கார்ஹஸ்பத்யம், ஆஹவனியம், தக்ஷிணாக்னி  என்ற மூன்று அக்னிகளால் ஆராதிக்கப்படும் வேதபுருஷன் அவன். வேதங்களினால் போற்றப்படுபவன். பாற்கடலில் தோன்றிய விஷத்தை உட்கொண்ட சிவபெருமானால் போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ அத்திகிரியில் அருள் புரிகின்றான் என்று போற்றுகிறார் ஆழ்வார்.
       இத்தலத்துப் பெருமான் பேரருளாளனை ஆழ்வார் ‘புள்ளையூரான்’ என்று அழைக்கிறார். இப்பெருமானது கருடோத்சவம் மிகவும் பிரசித்திப் பெற்றது.  அனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்ட பெருமான் ஹஸ்திகிரியில் சேவை சாதிக்கின்றார். பெருமான் வேதங்களிலே பரம்பொருளாக உள்ளார்.  வேதத்துமறைநீ’ என்று பரிபாடலும் குறிப்பிடுகிறது. முக்தியையே முதன்மையாக தெரிவிப்பதால் ‘முத்தி மறையாவான்’ என்று கூறப்படுகிறது. இவ்விதம் உபயவிபூதிகளை உடையவானாக வேதாந்தங்களில் அறிவிக்கப்படுகிறான் என்ற பொருளில் இப்பாடல் அமைகிறது. 

பேயாழ்வார்                                                                                                  மூன்றாம் திருவந்தாதி 

சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர்நீள் கச்சி புள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கை பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார்.     2307 

      குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பரந்தாமன் ஒருநாளும் நீங்காத இடங்கள் எவையெனில் அனைத்திலும் சிறந்ததான என் நெஞ்சமும், சிவந்த கண்களையுடைய ஆதிசேஷனும், நிறைவான செல்வ வளம் கொண்ட பெரிய காஞ்சித் திருக்கச்சியும், திருவேங்கடமும், திருவெஃகாவும், திருவேளுக்கையும், ஆயர்பாடியுமாகும் என்று ஆழ்வார் கூறகிறார்.
       இவ்விதம் ஆழ்வார் சிறந்து தொழுத தம் உள்ளத்தை, பெருமான் நித்யசூரிகளிலும், உகந்தருளின நிலங்களைக் காட்டிலும் ஆழ்வார் விரும்பிவாறே அவரது நெஞ்சில் நித்யவாசம் செய்தார். திருவனந்தாழ்வானோ மதுவைப் பருகி மயங்குபவர் போல வேதங்களில் குறிப்பிடும் ஆராஅமுதை தினசரி அனுபவிப்பதால் ஏற்பட்ட சிவந்த கண்களைக் கொண்டுள்ளான். இதே கருத்தினை பெரியாழ்வார் தமது பெரியாழ்வார் திருமொழியில் ‘அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்து, என் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தா யெம்பிரான்’ என்று கூறுகிறார். இதுபோன்று நாம் சொல்வதற்கான உறுதியை நாம் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...