குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
அழகிய இடத்தையும், ஒளி பொருந்திய மதில்களால் நாற்புறமும் சூழப்பட்ட பிரசித்தி
பெற்ற அயோத்தி நகரத்தில் சகல லோகங்களையும் பிரகாசிக்கச் செய்யும் தீபச்சுடராக,
சூரிய குலத்து ஜோதியாக அவதரித்தவன் ஸ்ரீராமன். வானுலகத்து தேவர்களின் துயரைத் தீர்த்தவன்
அவன். சிவந்த திருவிழிகளையுடையவனும், கார்மேகம் போன்ற வடிவு
கொண்டவனுமான ராமனைத் தில்லை நிகரில் உள்ள திருச்சித்திர கூடத்தில் அருள்புரியும்
எங்கள் ஒப்பற்ற முதல்வனை, எம்பெருமானை கண்குளிரக் கண்டு வணங்கும் நாள் எந்நாளோ என்று கேட்கிறார்
ஆழ்வார்.
அழகிய இடத்தையுடையதும் உயர்ந்த மதில்களால் நாற்புறமும் சூழப்பட்டதும் அயோத்யா
என்று பிரசித்தி பெற்றதுமான அழகிய நகரத்திலே சகல லோகங்களையும் விளங்கச் செய்கிற
தனது ஒளியின் அம்சத்தாலே சூர்ய வம்சத்துக்கு விளக்கமுண்டாகும்படி ஒப்பற்றதொரு
விளக்குபோல, அதில் வந்து அவதரித்து, தேவர்கள் எல்லாரையும்
துன்பந்தீர்த்து வாழச்செய்த மஹாவீரனும் சிவந்த திருக்கண்களையுடைய பெரிய காளமேகம்
போன்ற வடிவமுடையவனும் ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவனும் தில்லை நகரத்தில் உள்ள
திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளியிருக்கிற, எமக்கு ஒப்பற்ற
காரணமாகிறவனும், எமக்குத் தலைவனுமான பரமனை கண்கள்
குளிரும்படி சேவிக்கும் நாள் எந்நாளோ! என்பது வியாக்யானம்.
கம்ப இராமாயணத்தில் அயோத்தியைப் பற்றிக் கம்பர் இவ்வாறு கூறுகிறார்.
உலகத்தவர் அனைவரும் தவம் மேற்கொண்டு முடிவாக வீடு பேறு பெறவே விரும்புவர். ஆனால்
அவர்கள் அங்குச் சென்றபின் இதைவிட சிறந்தது அயோத்தி என்று கூறுவர். மேலும்
நிலமகளின் முகம், திலகம், கண், மங்கல நாண் என்று அயோத்தியின் சிறப்பைக் கூறுகிறார். சந்திரனும் சூரியனும்
இமைக்காமல் இந்நகரின் அழகை கண்டு களிப்படைகிறார்கள். பொன்னும், மலரும் கொண்ட மண்டபங்கள், பொதுமன்றங்கள், செய்குன்றுகள், மணிமேடைகள், முத்துப்பந்தல்கள்
ஆகியனக் கொண்டு அமைக்கப்பட்டது என்று கம்பர் இந்நகரத்தை கற்பனை செய்து கூறுகிறார்.
செருக்குடன் எதிர்த்த தாடகையின் மார்பைப் பிளந்து உதிரம் பெருகும்படி அஸ்திரம்
எய்தவன் ஸ்ரீராமன். விஸ்வாமித்ரனின் யாகத்தைக் காத்தவன். சுபாகு, மாரீசன் போன்ற
அசுரர்களின் உயிரை அழித்தவன். சிவந்த தளிர்கள் நடுவே மலர்ந்த மலர்களையுடைய,
பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்ளும்படி அழகு படைத்த, செழுமையான குளிர்ந்த சோலைகளைக் கொண்டது தில்லை நகரமாகும். அங்குள்ள
சித்ரகூடத்தில் மூவாயிரம் அந்தணர்கள் திரண்டு வந்து துதிக்க, அழகு மிக்க ரத்தினங்கள் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்
எம்பெருமான் சர்வேஸ்வரனே என்று கூறுகிறார் ஆழ்வார்.
விச்வாமித்ர முனிவன் தனது வேள்வியைக் காக்கும் பொருட்டு தசரத
சக்கரவர்த்தியினிடம் அனுமதி பெற்று இராமபிரானை இளைய பெருமாளுடன் அழைத்துக்கொண்டு
போனபொழுது அம்முனிவரின் ஆச்ரமத்திற்குச் செல்லும் வழியிடையே மிக்க செருக்குடன்
வந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவனது கட்டளைப்படி பெண்ணென்று பாராமற் போர்
செய்து கொன்றதுமன்றி,
பின்பு முனிவன் செய்த யாகத்தில் தீங்கு விளைக்க வந்த சுபாஹூ முதலிய
பல அரக்கர்களையும் கொன்று மாரீசனை அஸ்தரத்தினாற் கடலிலே தள்ளிவிட்டு யாகத்தை
நிறைவேற்றுவித்தனன் என்பது வரலாறு.
‘எண் உருவுத் தெரிவு அரும் பாவம் ஈண்டி. ஓர் பெண் உருக் கொண்டெனத் திரியும்
பெற்றியாள்’ என்று கம்பர் தாடகையைப் பற்றிக் கூறுகிறார். உலகத்து பாவமெல்லாம்
திரண்டு பெண் வடிவம் கொண்டது போல் இருந்தாள் என்கிறார். இராமன் எய்த அம்பானது
வைரம் பாய்ந்து கல் போன்ற தாடகையின் நெஞ்சில் பாய்ந்து முதுகைப் பிளந்து சென்றது.
கல்வி அறிவற்றவருக்கு கல்வியாளர் கூறும் அறிவுரைகள் தங்காமல் சென்று விடுவது
போன்று இராமனின் அம்பும் சென்றது என்றும் இடி மின்னல் தோன்றும் பெரிய மேகம்
வீழ்ந்தது போன்று தாடகை சரிந்தாள் என்று கம்பர் கூறுகிறார்.
சிவந்த ரேகைகள் நிறைந்த கரிய விழிகளைக் கொண்ட சீதையை மணக்க ரிஷப வாகனனான
சிவனின் தனுசை முறித்துத் திருமணம் முடித்தவன் ஸ்ரீராமன். அவன் அயோத்தி நகருக்குத் திரும்பும்போது
கோடரியை ஆயுதமாகக் கொண்ட பரசுராமனின் விஷ்ணு தனுசை வாங்கி வளைத்து வெற்றி
கொண்டான். வேற் படையைக் கொண்ட அரச குலத்தவரின் பலியை தீர்த்த மாவீரன். அத்தகையவன், ஓங்கிய மதிலைக்
கொண்ட திருச்சித்திர கூடத்தில் எழுந்தருளியுள்ளான். அடக்குவதற்கு கடினமானதும், பகைவர்கள் அஞ்சுபடியுள்ள கோதண்டத்தை தரித்திருக்கும் நீண்ட கைகளையுடைய
ஸ்ரீராமனை வணங்கும் அடியவர்களின் திருவடிகளை வணங்குகின்றேன் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
உத்தம லக்ஷணமான சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களையுடைய
வனிதையை மணம்புரிதற் பொருட்டு கோபத்தையுடைய ரிஷபத்தை வாகனமாக உடையவனான
சிவபிரானுடைய வில்லை முறித்துப் பின்பு மிதிலாபுரியினின்று மீளும் வழியில்
கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை
கையிற்கொண்டு வளைத்து அவனை வென்று தான் அவதரித்த ஜாதியிற் பிறந்த வேற்படையையுடைய
க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த மஹாவீரனான பகைவர்கள் கண்ட மாத்திரத்திலே, கடக்கவொண்ணாதென்று
அஞ்சும் படியான உயர்ந்த மதிலையும் ஓங்கிய அட்டாலையென்னும் மதில்பக்கத்
திடத்தையுமுடைய தில்லை நகர் திருச்சித்ரகூடம் என்பதாகும்.
பெரிய பொன்மலை போன்ற சிவ தனுசுவைக் கையிலேந்தி சீதையை மணக்க வேண்டும் என்ற
எண்ணத்தில் அதைக் கையில் எடுத்தபோது சீதைக்கு அணிவிக்க போகும் மலர் மாலை போன்றதாக
இருந்தது. எனவே அதை எளிதாகத் தூக்கி முறித்தான் என்று கம்பர் கூறுகிறார். இராமன்
நாண் ஏற்றுவது மட்டுமே அனைவரும் பார்த்தனர். வில் ஒடிந்தது. கண் கொட்டாமல்
பார்த்தவர்களுக்கும் தனது பார்வை தவறிவிடும் நிலையில் அத்தகைய விரைவாக வில்லினை
இராமன் முறித்தான் என்று தனது கம்ப இராமாயணத்தில் கம்பர் கூறுகிறார்.
கொத்துக் கொத்தாக மலர்ந்த மலர்களைச் சூடிய சுருண்ட கருங் கூந்தலையுடைய
கைகேயினுடைய சொற்படி பரம்பரையாக வரும் அரசுரிமையை துறந்தான் ஸ்ரீராமன். பக்தனான
குகன் ஓடம் செலுத்த, கங்கையைக் கடந்து கானகம் சென்றான்.
கானகம் வந்த பரதனுக்குத் தன் பாதுகையையும்,
அரசாட்சியையும்
கொடுத்து சித்ரகூடத்தில் வனவாசம் கழித்தவன் எம்பெருமான். இப்போது தில்லை
சித்ரகூடத்தில் அவர் எழுந்தருளியுள்ளார். அவரைக் கண் குளிர வணங்கிப் பனி
செய்வோருக்கு தேவர்களும் நிகராக மாட்டார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
ஸ்ரீராமாவதாரத்திலே சித்ரகூட பர்வதத்தில் எழுந்தருளியிருந்த இருப்பைப்
பிற்பட்டார் கேட்டு அநுபவிக்கப் பெறுவதேயன்றித் தாம் கண்டு அநுபவிக்க பெறாமல் கண் விடாய்த்து
நிற்கிற குறைதீர எக்காலத்திலுமுள்ளார் அனுபவிக்கைக்காக அங்ஙனமே தில்லைத்
திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கின்றனன் என்பது இதன் கருத்தாகும்.
இராமவதாரத்தில் சித்ரகூடம்
என்னும் இடத்தில் எழுந்தருளியிருந்த இருப்பை பிற்காலத்தவரும் கண்டு அனுபவிக்க
வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தில் அனைவரும் தரிசிக்கும் வகையில் தில்லை
சித்ரகூடத்தில் எழுந்தருளி உள்ளார். ஆழ்வார் தமது பாடலில் ஸ்ரீராமனின்
பராக்கிரமங்களையும், குண நலன்களையும் கூறியுள்ளார். நம்
மனதில் தீய சக்திகள் உள்ளே செல்லாமல் இருக்க வளையம் போன்று இராமனின் நினைவுகள்
நம்மைக் காத்து வருகின்றன. அசுரர்களையெல்லாம் அழித்து நல்லவர்களைக் காத்த
எம்பெருமான் சித்ரகூடத்தில் எழுந்தருளியுள்ளார். அவரை வணங்கி தொழுவதால்தான் இப்பூமி
நிலைபெற்று இயங்குகிறது என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
பகைவர்களின் அசுர பலத்தைத் தோற்கடிக்கும் மலை போன்ற வலிமையான தோள்களையுடைய
விராதன் என்ற அரக்கனை அழித்தவன் ஸ்ரீராமன். சிறந்த தமிழ்முனி அகத்தியன் கொடுத்த
வில்லைப் பெற்று காமம் ஏறிய வில்லியாய் உருமாறி வந்த சூர்ப்பனகையின் மூக்கை
அறுத்தவன். கரண், தூஷணன் முதலானவர்களின் உயிரை அழித்தவன். கோதண்டத்தை வளைத்து மாயமானாக வந்த மாரீசனை அழித்தவன். அத்தகைய
ராகவனைத் தில்லை திருச்சித்ர கூடத்தில் தரிசனம் செய்து, வணங்கி,
கைகூப்பி துதிக்கவல்ல அன்பர்கள் நடமாடுவதால் இப்பூமி பேறு பெறுகிறது
என்கிறார் ஆழ்வார்.
இராமபிரான் பரசுராமனிடமிருந்து விஷ்ணு தநுஸ்ஸைப் பெற்று அவனை வென்றபோது அங்கு
வந்து தன்னைக் கொண்டாடிய தேவர்களுள் வருணனிடத்திலே அவ்வில்லை கொடுத்து அதனை
நன்றாகப் பாதுகாத்து வைத்திருந்து உரிய ஸமயத்தில் தன்னிடம் கொணர்ந்து கொடுக்குமாறு
சொல்ல அங்ஙனமே அதனை வாங்கிச்சென்று நன்கு பாதுகாத்து வைத்திருந்த வருணன் பின்பு
ஸ்ரீராமன் வனவாஸம் புக்குத் தண்டகாரனியத்தில் அகஸ்தியாச்ரமத்திற்கு
எழுந்தருளினபொழுது அதனை அம்பறாத்தூனியுடனும் வாளுடனும் அம்முனிவர் தரப் பெருமாள்
பெற்றுக் கொண்டனன் என்பது இங்கு அறியத்தக்கது.
இராமனும் இலக்குவனும் சினத்துடன் தனது கூரிய வாளினைக் கொண்டு அரக்கனின்
தோளினை வெட்டினர். இரு புருவமும் தேளை ஒத்ததாக நெளிந்தது. சினத்தினால் சிவந்த அவன்
கண்கள் இராகு என்னும் கிரகமாயின. சந்திர சூரியன் இராகுவை நெருங்கி வந்தது போல்
இருந்தது என்பது கம்பனின் கூற்றாகும். சூர்ப்பனகையின் மூக்கை இலக்குவன்
துண்டித்தான். அது அவளை அவலட்ணமாக்குவதற்கும், அவளது தனத்தை
அறுத்து அவளது பெண்மை நலம் சிதைப்பதற்காகச் செய்தான். அது போன்று இராவணனின்
வலக்கரமான கரனும் அழிந்தான். வஞ்சகனான மாரீசனையும் அழித்தான். அத்தகைய
பராக்கிரமசாலி சித்ரகூடத்தில் உள்ளான்.
தனக்கு பெரும் செல்வமாக இருந்த வைதேகியைப் பிரிந்து, அதனால் துக்கம்
கொண்டவன் இராமன். ஜடாயுவுக்கு மோட்சம் தந்து காட்டில் வாழ்ந்த வானர அரசன்
சுக்ரீவனிடம் நட்பு கொண்டு, அவனுக்காக வாலியைக் கொன்று
முடித்தவன் ஸ்ரீராமன். இலங்கை வேந்தனான இராவணனின் ஆணவத்தை அடக்க அனுமனைக் கொண்டு
இலங்கையை எரித்த ஸ்ரீராமனைத் தில்லை நகர் சித்ரகூடத்தில் துதிக்கின்ற அடியார்களின்
பாதக் கமலங்களை நான் போற்றுகிறேன் என்கிறார் ஆழ்வார்.
செல்வம் போன்ற சீதையைப்
பிரிந்து மனம் வளர்ந்து ஜடாயுவை பரமபதத்திற்கு
அனுப்பி வனத்தில் வசிக்கிற குரங்கு அரசனின் நட்பு
கொண்டு, வாலியை அழித்து இலங்கை நகரின் அரசனுடைய
சீற்றத்தை அடக்கி அனுமானால் எரித்திட்டவனும் தில்லைநகர்
திருச்சித்ரகூடத்தில் இனிதே இருக்கும் ஈசனான
இராமனை துதிக்கும் அடியார்களின்
பாதத்தைத் துதித்தேனே.
உலகில் உள்ள ஜஸ்வர்யங்களுக்குத் தலைவி வைதேகி
எனும் சீதாபிராட்டி. அந்தப் பிராட்டியே பெருமாளுக்கு தனம் ஆனவர் என்கிறார்.
பெருமானின் ஐந்து நிலைகளிலும் அவனுக்குப் பரத்துவத் தன்மை மாறுவதில்லை.
அதனடிப்படையில் மனிதனாக இருந்த போதும் ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தான். நட்பிற்கு
இலக்கணமாக அமைந்தது சுக்ரீவனிடம் கொண்ட நட்பு. அந்த நட்பிற்காக வாலியைக் கொன்றான்.
பராக்கிரமத்திற்கு உதாரணப் புருஷரான இராமன் வலிமை மிக்க இராவணனையும் அவனது அசுர
குலத்தையும் அழித்தான். இப்பாசுரத்தில் பாகவத பக்தியின் மேன்மையை எந்த ஒரு
சமயத்திலும் விடாது காத்து வந்தார் என்பது புலனாகிறது.
மிகுந்த ஆரவாரமிக்க சமுத்திரத்தை வெற்றி தரும் அம்பால் கலங்கச் செய்து பின்னர்
அதில் அணை கட்டி கடலைக் கடக்கச் செய்தவன் ஸ்ரீராமன். அவ்வாறு கடந்து வேற்படையைக்
கொண்ட அரக்கர்களோடு, இராவணனின் உயிரையும் போக்கியவன் எம்பெருமான். விபீஷணனை ஆட்சி பீடத்தில்
அமர்த்தியவன் ஸ்ரீராமன். திருமகளின் அவதாரமான சீதையுடன் இணையாகக் சிம்மாசனம் கொண்டு எல்லாச்
செல்வங்களையும் பெற்றவன் தில்லை சித்ரகூடத்தில் எழுந்தருளியுள்ளான். அவனது
திருவடிகளைத் தலைமேல் தாங்கும் பேற்றினைத் தவிர வேறு எதையும் பேறாகக் கருத
மாட்டேன்.
ஒலிக்கின்ற கடலை அழிக்கும் அம்பினால் கலங்கும்படி எய்து அணைகட்டி
அந்த வழியாக அக்கரையை அடைந்து பகைவனை எரிக்கும் நீண்ட
வேல் தாங்கிய அரக்கர்களோடு இராவணனது இன்னுயிரைக்
கவர்ந்து அவனுடைய தம்பிக்கு அரசாட்சியும் கொடுத்துச்
சீதையுடன் இனிதாகச் சேர்ந்த செல்வம் போன்றவனை தில்லை
நகர் திருச்சித்ர கூடத்தில் அரசாளுபவனுடைய திருவடியைத்
தலையில் சூடுவதல்லாமல் வேறொரு அரசாட்சியை அரசாட்சியென மதித்திடேன் என்கிறார்.
சீதாப் பிராட்டியைப் பிரிந்து துயருற்று மனவருத்தப்பட்டு இலங்கை சென்று
இராவணனுடன் போரிட்டு மீண்டும் அயோத்தி திரும்பும் நிலையில் தனது களைப்பு போக்க
தில்லை திருச்சித்ர கூடத்தில் வந்து சயனித்துள்ளான். இராமனின் திருவடிகள் தவிர
தமக்கு வேறு எந்த அரசும் வேண்டாம் என்கிறார் ஆழ்வார். இப்பாசுரத்தில் தீயவர்களை வீழ்த்தும் அதே சமயம்
நல்லவர்களுக்குப் பாதுகாப்பையும் அளிக்கின்றான் என்று கூறுகிறார். எனவே அவனது
திருவடியை வணங்குவதே நமக்குப் பெரிய சாம்ராஜ்ஜியமாகும் என்று கூறுகிறார்.
உயர்வு மிக்க பொன்னையும், அழகிய ரத்தினங்களையும் கொண்டு அமைக்கப்பட்ட மாட மாளிகைகளுள்ள
அயோத்திக்குத் திரும்பி வந்து அரசாட்சியை ஏற்றுக் கொண்டவன் ஸ்ரீராமன். தன்னால்
கொல்லப்பட்ட இராவணனுடைய பழைய வரலாறுகளை
அகத்தியர் மூலம் கேட்டவன் அவன். பிராட்டியான சீதை உலகம் முழுதும் உய்யும்படி
பெற்ற இலவன் மற்றும் குசன் ஆகியோரின்
சிவந்த பவழ வாயினால் தன் சரிதையான இராமாயணத்தைக் கேட்டருளிய சிறப்பு மிக்கவன்
ஸ்ரீராமன். அப்பெருமான் தில்லை திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளி இருக்கிறார்.
அவரைக் கண் குளிர சேவித்து இராமாயணத்தைக் கேட்டு வரும் நாம் அமிர்தத்தையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டோம்
என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆராவமுதமாகவுள்ள எம்பெருமானுடைய ஸேவையின் மிக்க இனிமைக்கும், அங்ஙனமேயுள்ள
அப்பிரானுடைய சரித்திரத்தின் மிக்க இனிமைக்கும் தேவாம்ருதத்தின் இனிமை சிறிதும்
ஈடாகாதென்னும் கருத்தால், இன்னமுதமதியோம் என்கிறார்.
இன்னமுதமதியோ மொன்றே என்றும் பாடமுண்டாம். குசலவர் இராமாயண ப்ரவசநம் செய்து அதனால்
உலகத்தை நன்னெறியில் உய்த்தலும், இராமபிரான் காலத்திற்குப்
பின் அப்பெருமான் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை இனிது ஆளுதலும் தோன்ற உலகுய்யத்
திருவயிறு வாய்த்த மக்கள் என்றார். ஸ்ரீசார்ங்கபாணி பெருமாளை சேவிக்கும்
எண்ணத்துடன் வீட்டிலிருந்து ஓர் அடி எடுத்து வைத்தாலும், அவர்களுக்கு
மறுபிறவி இல்லை என்கிறது புராணம். ஆரா அமுதமான
எம்பெருமானுடைய சேவை மிக்க இனிமைக்கும், அது போன்று அவனது
சரித்திரத்தில் உள்ள இனிமைக்கும், தேவாமிருதத்தின் இனிமைக்கும் ஈடாகாது என்ற கருத்தில்
‘இன்னமுதமதியோம்’ என்று கூறுகிறார். இராம சரித்திரத்தை கேட்டபின் அமுதத்தை ஒரு
பொருளாக மதியோம் என்று கூறுவதிலிருந்து ஆழ்வார் ஸ்ரீராமன் பெயரில் எத்தகையதொரு
அன்பினை வைத்துள்ளார் என்று புலனாகிறது. இராமனின் புத்திரர்களான இலவன் மற்றும்
குசன் ஆகியோர் இராமர் காலத்திற்குப் பின்னும் அவனது சரித்திரத்தை மக்களுக்கு
எடுத்துரைத்து அவர்களை நன்னெறியில் கொண்டு சென்றார்கள். அத்தகைய பெருமான்
சித்ரகூடத்தில் வாசம் செய்கிறான்.
மிகுந்த தவங்களை மேற்கொண்ட சம்புவனை அவன் இருப்பிடம் தேடிச் சென்று அழித்தவன்
ஸ்ரீராமன். சிறந்த வேதியன் புதல்வனின் உயிரைக் காத்தவன். அகத்தியர் கொடுத்த விலையுயர்ந்த இரத்தின மாலையை
அணிந்தவன். லவணாசுரனைத் தம்பி சத்ருக்ணனைக் கொண்டு அழித்தவன். துர்வாசகர்
சாபத்தால் அன்பு மிகுந்து லட்சுமணனைப் பிரிந்தவன். அத்தகைய பெருமான் தில்லை
திருச்சித்ரகூடத்தில் வீற்றிருக்கிறார்.
அவரை எப்போதும் மறவாமல் துதிப்பவர்கள் எவ்விதமான துயரங்களையும் அடைய மாட்டார்கள்
என்கிறார் ஆழ்வார்.
தன்னை அக்காலத்திற் காணப்பெறாத குறைதீரப் பிற்காலத்தார் காணும்படி தில்லைத்
திருச்சித்திரக்கூடத்தில் அப்படிப்பட்ட திவ்விய மங்கள விக்ரஹத்தோடு நித்யவாஸம்
செய்தருளாநின்ற எம்பெருமானை இறையும் மறவாது எப்பொழுதும் தியானிப்போமாகில்
அக்காலத்தில் எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோமே! என்று வரும் துன்பத்தை
அடையமாட்டோம் என்றகிறார்.
ராம அவதாரம் முடிவுறும் காலத்தில் எமன் மாறு வேடத்தில் வந்து ராமனுடன்
உரையாடும்பொழுது அதை யாரும் கேட்கக் கூடாது என்று இலக்குவனை காவலுக்கு நிறுத்த,
அவ்வமயம் துர்வாசக முனிவர் இராமனை சந்திக்க வேண்டும் என்று
சொல்லியும் இலக்குவன் அவரைத் தடுத்தான். அதனால் ஏற்பட்ட சாபத்தால் இலக்குவன்
இராமனை விட்டுப் பிரியும்படி நேர்ந்தது. அத்தகைய மகான் திருச்சித்ரகூடத்தில்
எழுந்தருளியுள்ளார். தன்னை அவதார காலங்களில் காணப் பெறாத குறையினைத் தீர்க்கத்
தில்லையில் திவ்யமங்கள விக்ரகத்தில் காட்சி தருகிறார். நிறைந்த மனதுடன் அவரை
நெருங்கினால் அக்காலத்தில் பெருமானை அனுபவித்தது போலாகும் என்பது இதன் கருத்து.
அவதாரத்தின் நோக்கம் முடிந்தபின் வைகுந்தம் செல்லும் அன்று அனைத்து
உயிர்களையும், புல், பூண்டு முதலான தாவரங்களையும் பரமபதத்திற்கு அனுப்பியவன்
ஸ்ரீராமன். கொடிய பாம்பின் பகையான கருடன் மீதேறி அசுரர்களை வென்ற அழகிய நீண்ட
நவரத்தின அனிகளுடன் நான்கு திருக்கைகளுடன் விணணிலுள்ளோர் எதிர்கொண்டழைக்க, அத்தகைய எம்பெருமான் தில்லை திருச்சித்ரகூடத்தில் எந்நாளும்
இராமனாக வாசம் செய்து வருகிறான். அத்தகையவனை போற்றி வணங்கும் தொண்டர்கள் உண்மையான
பக்தர்களாவார்கள்.
இளைய பெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்க மாட்டாமல் மிகவும் கிலேஸமடைந்த
இராமபிரான் ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து
உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும்
கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க ஸ்ரீராமன் அவர்களுடைய
பக்தியைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து, அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பனித்தருளிப்
பிரயாணப்பட்டனர். அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு, பறவை முதலிய
அஃறிணை உயிர்களும் அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ
ஸ்ரீபகவான் சரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தம்மிடத்து
இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த எல்லா உயிர்கட்கும்
ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே அனைவருக்கும் ஸாந்தாநிகமென்னும்
உலகத்தை அளித்தனர். ஸ்ரீராமபிரான் பரமபதத்துக்கு சென்றபோது சங்கு சக்கரங்கள் இரண்டையும்
தரிக்கிற மேற்பாற் கரமிரண்டுந் தோன்றப் பெற்றமை விளங்க அசுரர் தம்மை வென்றிலங்கு மணிநெடுந்தோள்
நான்கும் தோன்ற என்றார்.
அயோத்தி நகரத்து
உயிர்களெல்லாம் பெருமான் எங்கு சென்றாலும் தங்களையும் அழைத்து செல்ல வேண்டும்
என்று வேண்டுதலை ஏற்று அனைத்து உயிர்களையும்,
தாவரங்களையும்
பரமபதத்திற்கு பின் தொடர்ந்து வருமாறு அழைத்துச் சென்றான். சரயுநதியில் தனக்காக
உயிர்நீத்த எல்லா உயிர்களுக்கும் முக்தி அளித்து பரமபதம் போன்றதொரு ‘சாந்தாநிகம்’
என்னும் உலகத்தைப் படைத்து அதில்
இருக்குமாறு அருளினான். பெருமான் பரமபதம் செல்லும் போது நான்கு தோள்களும் நான்கு
கைகளும் தோன்றியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவனை தினமும் வணங்கி இராம
சரிதத்தை கேட்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நன்மைகள் பல பெற்று வாழ்வார்கள்.
தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் பராக்கிரமங்கள் மிகுந்து அனுமனுடன் உறையும்
எம்பெருமானைக் குறித்து எல்லையற்ற அழிவில்லாப் புகழுடைய தசரதன் மைந்தனாகப்
பிறந்தது முதல் வைகுண்டத்திற்கு திரும்பியது வரையிலான வரலாற்றினை, பகைவர்கள்
அழிக்கும் ஆயுதங்களைக் கொண்ட சேனைகளையுடைய, ஒளிமிக்க வாளைத்
தரித்தவருமான குலசேகராழ்வார், இலக்கணம் பொருந்திய இத்தமிழ்ப்
பாசுரங்களை அருளியுள்ளார். இதனைப் பக்தியோடு கற்றுப்பாட வல்லவர்கள் ஸ்ரீமந்
நாராயணனின் திருவடித் தாமரையை அடைவார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் பலம் பெற்ற அனுமானுடனே
இருப்பவனைக் குறித்து எல்லையற்ற சீர்மை
பெற்ற தசரதனின் மகனாய்ப் பிறந்த அந்தச் செயல் முதலாகத்
தனது உலகத்திற்கு சென்றது வரை கொல்லும்
திறனைப் படைத்தவனை வெற்றி வாளை உடைய உறையூர் கோமான் வெண்
கொற்றக்குடை உடைய குலசேகராழ்வார் அருளிச்செய்த சிறந்த
இனிய தமிழ்ப் பாசுரங்கள் இந்தப் பத்தையும் கற்று தினசரி அனு
சந்திப்பவர்கள் என்றும் நலம் தரும் நாராயணனின் பாதங்களை
அடைவார்களே!
ஸ்ரீராமனின் கதையைக் கேட்கும் இவ்வுலகத்தோர் அனைவரும் ஜீவித்திருக்குமாறு
ஸ்ரீராமனிடம் வரம் வேண்டிப் பெற்றார் அனுமன். தமது அவதார காலம் முடிவுற்று
வைகுண்டம் சென்றபோது பெருமான் இல்லாத அனுமன் மிகவும் வருந்தினார். அவரது கவலையை
அறிந்த பெருமான் அவரைத் தன்னுடன் திருச்சித்ரகூடத்தில் இருக்குமாறு அமர்த்திக்
கொண்டார். இராமனின் செய்திகளை ஆழ்வார் நமக்குப் பாசுரமாக நன்கு அளித்துள்ளார்.
இதனைப் பாட வல்லவர்கள் பரமபதம் அடைந்து நித்யசூரிகளாகக் காட்சி அளிப்பார்கள்.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
ஊன்சதை வற்றிப்போகும்படி உண்ணா நோன்பு இருந்து நீரையும் காற்றையும் உண்டு
உயிரைக் காத்து ஐந்து உறுப்புகள் வருந்தத் தவம் செய்யத் தேவையில்லை. பரமபதம் அடைய
விரும்புகிறவர்களே! நீங்கள் தில்லை திருச்சித்ரகூடம் தலத்திற்கு சென்று பகவானை
வணங்கினாலே போதும், இப்புனித பூமி சோலைகளில் மயில்கள்
ஆடவும், மீன்கள் துள்ளிக் குதித்து
கால்வாய் கொண்ட நீர்நிலைகளின் அருகே வண்டுகள் சென்று தேனை உறிஞ்சி மேலே பறக்கும், மாடங்களில் உள்ள கொடிகள் அசையும் இடமாகும் என்று ஆழ்வார்
கூறுகிறார்.
வேதங்களில் பிராமணர்கள்
யாகம் செய்தும் தானம் செய்தும், தவம் புரிந்தும், பட்டினி கிடந்தும் பேறு பெறப்
பார்க்கிறார்கள் என்று ஓதப்பட்டுள்ளது. சரீரத்தை வருத்தப்பட்டுச் செய்ய வேண்டியவை யாவும், அப்படி செய்தாலும் ‘அது தப்பிற்று; இது தப்பிற்று’ என்று சொல்லிப் பெரும்பாலும் பலனை இழக்க வேண்டியவையா
உள்ள அக்கருமங்களில் கைவைத்து அநர்த்தப்பட்டுப் போவதைக்
காட்டிலும் தில்லைத் திருச்சித்திரகூடத்தைச் சென்று சேர்ந்தால் அங்குள்ள
எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகி எளிதாக வாழலாம். ஆகையால் அது செய்யுங்களென்று
வீடுபேற்றினை அடைய விரும்புகிறவர்களை நோக்கி உபதேசிக்கிறார்.
வேதங்களில் அந்தணர்கள்
பகவானை அடைய தமது உடலை வருத்தி உண்ணா நோன்புடன் தவமிருந்து பேறுபெறப்
பார்க்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விதம் உடலை வருத்தி தவம்
செய்தாலும் அவற்றை முழுமையாக செய்ய இயலாமல் சில நாட்களில் விட்டுவிடும் சூழல்
ஏற்படும். அதனால் பலனை இழக்கும் நிலை
ஏற்படும். அதையெல்லாம் விடுத்து திருச்சித்ர கூடம் சென்று அவனடி சேர்வதே அவனை
அடைவதற்கான எளிதான வழியாகும். இதே கருத்தினை பிள்ளைபெருமாள் அய்யங்கார் தமது
நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் ‘மாதவம் புரிந்தும், தீ வேள்வி செய்தும், மாநதியிற் படிந்தும் பயனில்லை. கரம்பனூர் உத்தமனைக் கல்’ என்று கூறுகிறார்.
காயோடு சேர்ந்த பழங்களை உண்டு, வெப்பத்துடன் கூடிய காற்றை சுவாசித்து
நெடுங்காலம் ஐந்து வித தீயில் நின்று தவம்
செய்வது வேண்டாம். தாயாரை திருமார்பில் தரித்த பெருமானை தம் மனதில் நிறுத்த
விரும்பும் பக்தர்களே! வேதங்கள் நிறைந்துள்ள நற்பண்புகள் அமைந்த வேதியர்கள் தினசரி
முறையாகக் கடைபிடிக்கும் அக்னி காரியங்கள் வளர, புகழ்
ஓங்கப்பெற்ற தில்லை கோவிந்தனை தரிசித்தாலே போதும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இளம்பிஞ்சுகளைத் தின்றும் வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற பழங்களைப்
புசித்தும் வீசுகின்ற வெட்டிய காற்றைப் பருகியும், பஞ்சாக்நி மத்யத்தில் நின்று கொண்டு தவம் செய்தலாகிற வீண்தொழிலை விட்டிட்டுத் தில்லைத்
திருச்சித்ரகூடஞ் சென்று சேர்மின்களென்கிறார். பிள்ளைப் பெருமாளையங்கார் இப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றித் திருவரங்கக்
கலம்பகத்தில் “காயிலை தின்றுங் கானிலுறைந்துங் கதிதேடித், தீபிடை
நின்றும் பூவலம் வந்துந் திரிவீர்காள், தாயிலுமன்பன் பூமகள்
நண்பன் தடநாகப், பாயன் முகுந்தன் கோயிலரங்கம் பனிவீரே”
என்றருளிய பாசுரம் நோக்கத்தக்கது.
முற்காலத்தில் முனிவர்கள் காய் கனிகளை உண்டு, காற்றை
சுவாசித்து இறைவனை அடைய தவம் மேற்கொண்டார்கள். பலவிதமான துன்பங்கள் ஏற்பட்ட போதும்
தமது உடலை வருத்தித் தவம் புரிந்துள்ளார்கள். ஒரு சில வேளைகளில் அத்தகைய தவத்தில்
குறை ஏற்பட்டுவிடும். அவ்விதம் வருந்த வேண்டியதில்லை. தில்லை சென்று கோவிந்தனை
மனதில் நினைத்துப் பெருமானை தரிசித்தாலே போதும் நாம் முக்தி பெறலாம். மாயம் நிறைந்த வாழ்வில் உழன்று
கொண்டிருப்பவர்களே ஒரு முறையேனும் சித்திரக்கூடம் சென்று வருமாறு ஆழ்வார் இப்பாசுரத்தின் வழியாகக் கேட்டுக் கொள்கிறார்.
மணம் வீசும் மலர்வனங்களால் சூழப்பட்ட உலகமானது அசுரனால் கடல் வெள்ளத்தினுள்
புகுந்து மூழ்கிப்போக, திருமாலின் சினத்தோடு வராக அவதாரமெடுத்து அப்பூமியை மேலே
கொண்டு வந்து நிலைக்கச் செய்த எம்பெருமானின் திருவடிகளைச் சேர வேண்டும் என்று
விரும்புகிறவர்களே! பல்லவ மன்னன் அழகிய பொற்கட்டிகளையும், நல்முத்துக்களையும்,
மாணிக்கங்களையும் கொண்டு வந்து தந்து தனது பரிவாரங்களோடு
வணங்கப்பெற்ற மாடங்கள் சூழ்ந்த திருச்சித்திரக் கூடத்தைச் சென்றடையுங்கள் என்று
கூறுகிறார்.
உணவுக்கு விஷயமான சோலைகளால் சூழ்ந்த பூமியானது பரந்த
கடல் வெள்ளத்தில் புகுந்து மூழ்கிப்
போக அப்போது மிக்க கோபத்தையுடைய காட்டு
வராகம் ஒன்றாய் பூமியை எடுத்த பெருமானின் பாதங்களைப் பற்ற வேண்டுன்று
விரும்பும் அன்பர்களே அழகிய பொன்னும் முத்தும் மாணிக்கம்
கொண்டு வந்து ஸமர்ப்பித்து, தனது பரிவாரங்களோடுகூடப்
பல்லவவ மன்னன் பணிந்த செம் பொன்மணி மாடங்களால் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேருங்கள் என்கிறார்.
மஹாவராகமாக அவதாரமெடுத்து மகோபகாரம் செய்தருளின பெருமானுடைய
பாதாரவிந்தங்களைப் பணிய விருப்பமுடையவர்களே, உடன்
திருச்சித்ரகூடத்தை சென்றடையுங்கள். உலகத்து உயிர்களின் அச்சங்களை போக்கிய
அப்பெருமானை அடையுங்கள். உலகைக் காக்கும் பெருமான் உங்கள் துயரங்களையும்
நீக்குவான். மண்ணுலகில் வந்த காரணத்தை நாம் மறந்தாலும் அவன் அறிவான். நம்மை அவன்
கரை சேர்ப்பான் என்று நம்புவோமாக.
முன்னொரு காலத்தில் ஒருவராலும் அளக்க முடியாத மிகப்பெரிய பூமியை அளக்க வாமன
ரூபமாமாய் மகாபலி அரசனின் வேள்விச் சாலைக்குச் சென்று மூன்றடி மண் யாசித்த
பகவானின் திருநாமங்களை வாயாரச் சொல்லி உங்களது பிறவித் துன்பத்தினை நீக்கிக் கொள்ள
இருக்கும் பகவானின் தொண்டர்களே! பெருங்கடலில் ஆதிசேஷன் என்ற மெத்தையின் மேல்
மகிழ்ந்து பள்ளி கொண்டு அருள்புரியும் திருமால் புண்டரீகவல்லியோடு
குடிகொண்டிருக்கும் தில்லைச் சித்ரகூடம் சென்று சேருங்கள் என்று கூறுகிறார்
ஆழ்வார்.
முன்பொரு காலத்தில், ஒருவராலும் அளக்க முடியாத பெரிய பூமியை அளப்பதற்காக
வாமநரூபியாகி மாவலியென்னும் அசுரனுடைய பெரிய யாகபூமியிற் சென்று (மூவடிமண்)
யாசித்த பெருமானுடைய திருநாமங்களை வாயராச் சொல்லி உங்களுடைய ஸம்ஸார துக்கங்களைப்
போக்கிக் கொள்ள நினைத்திருக்கும் அன்பர்களே!, கறுத்துப்
பெரிய கடலிலே இரட்டை நாவையுடைய திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையின் மேல்
மகிழ்ந்து சயனித்தருள்பவனான திருமால் பிராட்டியோடு நித்யவாஸம் பண்ணப்பெற்ற தில்ல
சேர்மின்கள் என்கிறாள்.
மகாபலி என்னும் அசுரன் இப்பூமியின் அனைத்து இடங்களையும் தனக்கென ஒதுக்கித்
தம்முடையதாக்கிக் கொண்டான். அவனிடமிருந்த அதை மீட்டெடுப்பதற்கு குள்ளவடிவமான வாமன
ரூபம் கொண்டு அவனிடம் நிலம் வேண்டி மூன்றடி மண் வேண்டும் என்று யாசித்தான். தன்
பெருமையைப் பரைசாற்றிக்கொள்ள அரசனும் தந்தேன் என்றான். வானுக்கும் பூமிக்கும்
அளந்த பெருமான் அடுத்த அடியை அவன் தலைமீது வைத்து அழுத்தி அவனைப் பூமிக்குள்
சேர்த்தார். இத்தகைய பெருமான் திருச்சித்ரகூடத்தில் வாசம் செய்கின்றான்.
கொழுப்புடன்
திரியும் கொடுமைகள் பல செய்து வந்த க்ஷத்திரிய வம்சங்களை நிர்மூலம் செய்ய
மரக்கலங்களால் விளங்கும் பெருங்கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாம் அச்சமின்றி
வாழவும், வேந்தர்களின் உடல் மழுவால் துண்டிக்கப்பட, அப்போது
உண்டான போர்க்களத்தில் புகுந்து படையெடுத்து வென்ற பரசுராமனாகத் தோன்றிய பகவானைத்
தமக்கு உரியனாக்கும் பக்தர்களே! திருமகள் வலது பக்கமும், நிலமகள்
இடது பக்கமும் பொருந்த புகழ் பெற்ற திருமாலின் தேகமெங்கும் பரவியிருக்கும்
கீர்த்தியுள்ள அரணுடைய எழில் மிகுந்த மலர்வனங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம்
சென்று சேருங்கள் என்று கூறுகிறார்.
ஸ்ரீதேவி, பூத்தேவி, கீர்த்திதேவியென எம்பெருமானுக்கு மூன்று
திவ்ய மஹிஷிகளாம்; இவர்களுள் முதல்தேவி எம்பெருமானுடைய வலப்பக்கத்தைப் பற்றினள்; இரண்டாந்தேவி
இடப்பக்கத்தைப் பற்றின கீர்த்தியென்னும் மூன்றாந்தேவி உலக முழுவதையும் இடமாகப்
பற்றினாள் என்று ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிறார் காண்மின். ஸ்ரீதேவி பூதேவிகட்கு வல்லபனென்று உலகம் நிறைந்த புகழ்பெற்றிருக்கிற
எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற தில்லைத் திருச்சித்ரகூட மென்றதாயிற்று.
அரசர்கள் குடிமக்களுக்குப் பாதுகாவலனாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒரு
காலத்தில் இத்தகைய அரசர்கள் குடிமக்களுக்குப் பல்வேறு இன்னல்கள் தந்தவண்ணம்
இருந்தனர். இதனைக் கண்ட பெருமான் பரசுராம
அவதாரம் எடுத்து எல்லா அரசர்களையும் தனது பரசு என்னும் கோடாலியால் கொன்று
குவித்தார். அவரைக் கண்டு அரசகுலமே நடுங்கியது. அத்தகைய பெருமான் இருபக்கமும்
தேவிகளுடன் தில்லை திருச்சித்ரகூடத்தில் காட்சி தருகிறார். அவரை வணங்கி முக்தி
பெறுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
இராமனின் கூர்மையான அம்பானது நெய்யினாலிட்ட தீப் போன்று ஒளி பொருந்தி
இருந்தது. சமுத்திரத்தை வற்றச் செய்ய முற்பட, வருணன் வந்து சமுத்திரத்தின் மேலே அணை கட்ட
ஒப்புதல் தந்தான். கரிய மாணிக்கம் போன்ற வடிவை உடைய பகவானை நினைத்துத் தம்
உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணம் கொண்ட பக்தர்களே! இளம் மங்கையர் காதால் கேட்டு
மனத்தினால் பாடம் செய்த வேத மந்திரங்களைப் பாட, கிளிகளும்
அதைத் திருப்பிச் சொல்ல, அந்தணர் அது கண்டு மகிழும் தலமான
திருச்சித்ர கூடம் சென்று சேருங்கள் என்று
கூறுகிறார் ஆழ்வார்.
கூரிய அக்னி போன்ற ஒளியுள்ள அம்பினைப் பிரயோகித்து கடலை
வற்றச்செய்து அணை கட்டின ஆபரணங்கள் நிறைந்த
கருத்த நிறமுடையவனை உங்கள் மனதில் நினைத்து அந்தப்
பெருமானைப் பற்ற விரும்பும் அன்பர்களே அந்த
இடத்தில் சிறு பெண்கள் தங்கள் தந்தையர் வேதம்
ஓதக் கேட்டு அருமையான பெரிய வேத வாக்கியங்களைச் சொல்ல அதைக் கேட்டுச் சிவந்த வாயையுடைய கிளிகள் அந்தணர் சிந்தையில்
புகும்படி நான்கு வேதங்களையும் பாடுகிற தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேருங்கள் என்கிறார்.
ஸ்ரீராமன், நல்ல நூலாகிய வேதத்தில் கூறிய நெறிப்படி,
அடுக்கப்பட்ட தருப்பைபுல் கொண்டு மந்திரங்களைக் கூறி கடல் வழி
விடுவதற்கு வருணனை வேண்டினான். இது போன்று ஏழு நாட்கள் வேண்டினான். ஒரு பகல்
பொழுது ஒரு ஊழிகாலம் கழிவது போலானது. அப்படியும் வருணன் வரவில்லை. ‘நன்று நன்று’
என, நகையொடும் புகை உக’ என்று கம்பர் கூறியது போன்று
வெஞ்சினத்துடன் சிரித்தான் இராமன். கோபம் கொண்டவன் தீயை விட மும்மடங்கு கொடிய
சரங்களை கடலில் எய்தி சமுத்திரத்தை வற்றச் செய்தான். வருணன் பாணத்திற்கு அஞ்சி
இராமனிடம் மண்டியிட்டுக் கடலிடை வழிவிட்டான்.
முல்லைமலரைக் கூந்தலில் சூடும் நப்பின்னை பிராட்டியின் தோள்களை விரும்பி
அணைத்தவனும், மீன்கள் சுழலும்படி சுழன்று உழன்று வரும் பெரும் கடலில் உதித்த மகாலட்சுமி
நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவனுமான பரந்தாமனை நெஞ்சில் நிறுத்த ஆவல்
கொள்ளும் பக்தர்களே! சிங்கத்தோடு பிணங்கிப் பிளிறுகின்ற யானைத் தந்தங்களையும்,
மலையில் உள்ள சந்தன
மரங்களையும் தள்ளிக் கொண்டு வரும் நிவா எனப்படும் வெள்ளாறு சுற்றி வரப் புண்ணிய
தீர்த்தங்களால் சூழப்பட்ட அழகான தில்லைத் திருச்சித்ர கூடத்தைச் சென்றடையுங்கள்
என்று கூறுகிறார் ஆழ்வார்.
முல்லைப்பூவைக் கூந்தலிலே அணிந்துள்ள நப்பின்னைப் பிராட்டியினுடைய மெல்லிய
தோள்களை விரும்பி அணைத்தவனும், மீன்கள் சுழலும்படி சுழன்று வருகிற கடலினால் பிரஸவிக்கப்பட்ட
அழகிய பெரிய பிராட்டியர் நித்யவாஸம் பண்ணப் பெற்ற திருமார்பை உடையவனுமான பெருமானை
நெஞ்சில் வைக்க வேண்டியிருக்கும் அன்பகளே!, சிங்கத்தோடே
பிணங்கிப் பிளிறுகிற யானையின் கொம்புகளையும் மலையில் உள்ள மணங் கமழ்கின்ற சந்தன
மரங்களையும் தள்ளிக்கொண்டு ‘நிவா’ என்கிற ஆறானது சுற்றிலும்
பிரவஹிக்கப் பெற்றதும் புண்ய தீர்த்தங்களால் சூழப்பட்டு அழகியதுமான தில்லை சேர்மின்கள் என்கிறார்.
பாற்கடலைக் கடையும்போது பெரிய பிராட்டியான மகாலட்சுமி அதில் நின்று
தோன்றினவள். எனவே ‘நீர்பயந்த தெய்வத் திருமாமலர் மங்கை’ என்கிறார். திருமகளுக்கும்
நப்பினைக்கும் கணவான எம்பெருமானையே மனதில் இடைவிடாது சிந்திக்கும் பக்தர்களே!
அப்பெருமான் நம் மனத்தில் வந்து குடியேறாதவரை இவ்வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல்
போகும். கடவுளை நினையாதவன் சூனியமாகிறான்.
பகவானை அடித்தளமாக அமைக்காதவன் கடையவன் ஆகிறான். அந்நிலை மாறாமல் அவனை அடைய
தில்லை சென்று எம்பெருமானை வழிபடுங்கள் என்று கூறுகிறார்.
குதிரை வடிவில் வந்த கேசிகாசுரனின் வாயைப் பிளந்து அழித்தவன். இந்திரன்
பெய்வித்த மழையை கோவர்த்தன கிரியைக் கொண்டு குடையாகப் பிடித்தவன், யாதவர்களின்
தலைவனான ஆநிறைகளை மேய்த்தவன், உலகங்களை உண்ட பெருவாயன். இத்தகைய பெருமைகளைக் கொண்ட
பகவானின் ஆபரணவொலி பொருந்திய திருவடிகளைச் சேர விரும்பும் அடியார்களே! தில்லை
மூவாயிரம் அந்தணர்கள் தினமும் வழிபட ஒளிமிக்க ஜோதியான தேவாதி தேவன் திகழ்கின்ற
தில்லைச் சித்ரக்கூடம் சென்றடையுங்கள் என்று கூறுகிறார்.
குதிரை கேசியின் வாயையும் அங்கங்களையும் ஒரு
பொருட்டாக மதிக்காமல் பிளந்தவனும் மழை காக்க பெரிய பழைய கோவர்த்தன
மலையைக் குடையாக எடுத்து இடையர்கட்குத் தலைவனாய்
பசுக்களை மேய்த்தவனும் பிரளய காலத்தில் உலகம்
உண்ட மாயவனும் ஆபரண ஒலியோடு கூடின எம்பெருமானின் திருவடிகளை அடைய
விரும்பும் அன்பர்களே மூவாயிரம் வேதம் ஓதுபவர்கள் நாள்தோறும்
முறைபடி வணங்கும் அப்ராக்ருத தேஜஸ்ஸையுடைய; தேவாதிதேவனாகத் திகழும் தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேருங்கள் என்கிறார் ஆழ்வார்.
கம்சனால் ஏவப்பட்ட கேசி என்னும் குதிரை கோகுலத்தில் உள்ள ஆயர்களைத்
துரத்தியபடி வந்து பின் கண்ணனை தாக்க வந்தது. உடன் தன் திருக்கைகளை நீட்டி அதன்
வாயில் கை வைத்து அதன் பற்களைப் பொடியாக்கினான். அதன் உதட்டைக் கிழித்து உடலை
இரண்டாகப் பிளந்தான். மக்களையும் பசுக்கூட்டங்களையும் காத்தது போன்று எம்பெருமான்
நம்மைக் காப்பதற்காகத் தில்லை திருச்சித்ர கூடத்தில் எழுந்தருளியுள்ளான். அவனைச்
சரணடைந்து பிறவியற்ற வாழ்வினை மேற்கொள்ளுங்கள் என்பது இதன் பொருளாகும்.
போர்வேல் போன்ற நீல விழிகளையுடைய மங்கையரை அடைய விரும்பி, அது நிறைவேறாததால்
கடுங்கோபம் கொண்டு அவர்களை அடையப் பல்வேறு திட்டங்கள் தீட்டி, மேலும் பாவங்கள் பல புரிந்து பிரம்மாதி தேவர்களாலும் அடைய
முடியாத வைகுண்டத்தில் இருக்க விரும்பும் பக்தர்களே! நிவா என்னும் நதியில்
முத்துக்களை அடித்து வந்து விதை விதைத்தாற்போல் வயல்களில் பரப்பிக் கிடந்தது.
அங்கு மீன்கள் வயலில் துள்ளி குதிக்க, நெய்தல் மலர்கள் பூத்துக்
குலுங்கும் தில்லை திருச்சித்ரகூடத்தைச் சென்றடையுங்கள் என்று கூறுகிறார்.
தான் ஒரு மாதரை ஆசைப்பட்டிருக்க மற்றொருவனும் அவளிடத்தே ஆசைவைத்து இவனை அருகில்
நாடவொட்டாமல் அடித்துத் தள்ள, எப்பாடுபட்டாவது அந்த மாதரைத்
தான் பரிக்ரஹித்தே தீருவதென்கிற தீவிரமான நோக்கத்தினால் மற்றவனைக் கொலை செய்து விடுமளவுந்
துனிந்து நிற்கை. இப்படிப்பட்ட துணிவினால் செய்யப்படும் பாவங்கள் பகவத்
ப்ராப்திக்கு இடையூறாதலால் அவற்றை அகற்றி, தேவதைகட்கும் எட்டா
நிலமாகிய பரமபதத்திற் சென்று சேர்ந்து நித்ய கைங்கரியம் பண்ண வேணுமென்று
விருப்புற்றிருக்கும் அவர்களே! என்று கூறி ‘நீங்கள் தில்லைத்
திருச்சித்திரகூடம் சென்று சேர்மின்கள்’ என்று சொல்லுவதன் கருத்து இருவகையதாம்.
சித்திரகூடத்திலே நீங்கள் சிலகாலமாவது வாழ்ந்தால்தான் உங்கட்குப் பரமபத ப்ராப்தி
உண்டாகும் என்பதாக ஒருகருத்து; பரமபதத்துக்குப்
போகவேணுமென்கிற விருப்பம் உங்கட்கு ஏதுக்காக?
வீணான அந்த
விருப்பத்தை விட்டிட்டுத் சித்திரகூடம் சென்று சேர்ந்தீர்களாகில் அவ்விடத்திருப்பே
உங்கட்குப் பரமபத வாழ்ச்சியாங்கிடீர் என்பதாக மற்றொரு கருத்து.
தான் ஒரு மாதர் மீது மையல்
கொள்ள அதே மாதரை மற்றொருவர் கவர முயற்சிக்க,
எவ்வகையாலும்
அவளைக் கவர்வதற்கு முயற்சிக்க, அதனால் கொலையும் செய்ய
முயற்சிக்க இத்தகைய கொடும் பாவங்கள் அனைத்தும் பகவான் கைங்கர்யங்களுக்கு இடையூறாகும்.
நீலமலர் போன்ற கண்களையுடைய மாதர்களால் வரும் பரிதாபகரமான துன்பங்களைக் களைய
வேண்டும். இத்தகைய பாவங்கள் தானாக விலகாது. பகவானின் கருணை கொண்டுதான் இதனை விலக்க
வேண்டும். எனவே தில்லை திருச்சித்ரகூடம் சென்று தங்கி வந்தாலே பரமபதத்தில் வந்து
தங்குவது போன்றதொரு நிலை உருவாகும்.
அழகு மிக்க சோலைகள் நிறைந்திருக்கும் திருச்சித்ரகூடத்திலே எப்போதும் உறையும்
தெய்வநாயகனைப் பற்றி எவ்வளவுதான் கைங்கர்யம் செய்த போதிலும் மனம் நிறையாத
பக்தர்கள் ஆனந்தம் கொள்ளும்படி, கடல் சூழ்ந்த
இம்மண்ணுலகில் உள்ளவர்களுக்கு அருள் புரியும்படியாக கார்மேகம் போல் வள்ளலான கலியன்
என்ற திருமங்கையாழ்வார் அருளிய இப்பத்துப் பாசுரங்களைப் பக்தியுடன் பாடுபவர்கள்
உலகளந்த பகவானின் திருவடிகளில் பல காலம் தொண்டு செய்து வாழ்வார்கள் என்பது இதன்
பொருளாகும்.
சிறந்த சோலைகளால் சூழப்பட்டு அழகுபெற்ற தில்லைத் திருச்சித்திரகூடத்திலே நித்யவாஸம்
பண்ணுகிற புண்டரிகாக்ஷனான பெருமான் விஷயமாக, எவ்வளவு பகவதநுபவம் பண்ணினாலும் திருப்தி
பிறவாத நெஞ்சையுடையரான அன்பர்கள் கேட்டு ஆனந்திக்கும்படி, கடல்
சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்க்கு அருள் செய்யுமவராய் காளமேகம்போல் உதாரரான
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த குறையாத ஓசையையுடைத்தான சொல்மாலையாகிய இப்பத்து
பாசுரங்களையும் ஓதவல்லவர்கள், பூமியையும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
அளந்தவனான பெருமானுடைய திருவடிவாரத்திலே நெடுங்காலம் அடிமை செய்து நிற்கும்படி
வாழப் பெறுவர்.
இப்பத்து பாசுரங்கள்
திருச்சித்ரகூடத்தின் பெருமைகளைப் பேசப்பட்டவையாகத் திகழ்கின்றன. நாம் முக்தி பெற கானகம் சென்று கடுந்தவம்
மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கடுமையான யாகங்கள் செய்து, புகையில் சஞ்சரித்து,
பகவானை அடைய
வேண்டும் என்ற எண்ணத்தில் உடல் வருந்த
வேண்டியதில்லை. பகவானின் திருவடிகளை அடைய விரும்பினால் எளிதானதொரு வழி உள்ளது. அது
தில்லை திருச்சித்ரகூடம் என்னும் திருத்தலத்துப் பெருமானை நேரில் சென்று மனதார
வேண்டினாலே முக்தி அடையலாம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இரட்டை மருதமரங்களை தவழ்ந்து வந்து வேரோடு சாய்த்தவன், கொடிய மல்லர்களைக்
கொன்றவன், நடை பழகுவது போல் வந்த கேசிகாசுரனை வதம் செய்தவன்,
கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்துப் பெருமழையிலிருந்த கோகுலத்து
மக்களையும் ஆநிறைக் கூட்டங்களையும் காத்தவன், குடக்கூத்தாடி
மக்களை மகிழ்வித்தவன், இத்தகைய பெருமைகள் நிறைந்தவன்,
உடல் நலிவுற்று ஆலயம் வர இயலாத மக்கள் அவனைச் சேவிக்க வேண்டும்
என்று விரும்பினால் அவனே திருவீதியுலா வந்து நம்மை மகிழ்விக்கிறான். அத்தகைய இடமான
திருச்சித்ரகூடத்தில் பெருமான் வீற்றிருக்கிறான்.
வாடிய இரட்டை மருத மரங்களின் நடுவே போனவனும், மல்லர்களைக்
கொன்றவனும், ஆடிக்கொண்டு வந்த கேசி என்ற குதிரையைக்
கொன்றவனும், இடையர்கட்கும், பசுக் கூட்டங்களுக்கும் நேர்ந்த
துன்பத்தைத் தீர்ப்பதற்காக வந்த பெருமழையைத் தடுத்து காத்தவனுமான கூத்தாடும்
மாயவனாய் வருகின்ற அவன் அழகிய பூஞ்சோலைகளை
உடைய தில்லைச் சித்திரகூடத்தில் உள்ளான் என்கிறார்.
முதல் மூன்றடிகளால் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் செய்த லீலைகளை விவரித்துப்
பின்வரிகளில் திருச்சித்ரகூடத்து பெருமைகளைப் பேசுகிறார் ஆழ்வார். தீயசக்திகள்
நம்மை நெருங்காவண்ணம் பெருமானை சரணடையுமாறு வேண்டுகிறார். ஊனமுற்றவர்கள் மற்றும்
உடல் உபாதை கொண்டவர்கள் ஆலயம் சென்று தொழ முடியாமல் இருப்பவர்களுக்கும் பெருமானே
வீதியில் வந்து நமக்குத் தரிசனம் தருகிறார் என்ற தத்துவத்தை ஆழ்வார் நமக்கு
அருளியிருக்கிறார். கருணைக் கடலான பெருமானுக்குத்தான் நம் மீது எத்தகைய அன்பு. இதே
போன்று நாமும் அவனிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதே இப்பாசுரத்தின் பொருளாகும்.
பேய் அரக்கியான பூதனையின்
தனங்களிலிருந்த நஞ்சு கலந்த பாலை உறிஞ்சி உண்டான். இச்சிறு பிள்ளையின் செயல் என்று
சொல்லிக் கேட்டதும், இக்கண்ணன் நிலமகளுக்கும், வண்டுகள் தேன் அருந்தும் தாமரை மலரில் உள்ள திருமகளுக்கும்
நாயகன் என்று கூறி அழகு வடிவம் கொண்ட இடைப் பெண்ணானவர்கள் பாடல் பாடி மலர்கள் தூவி, கோகுலத்து வீதிகளிலே உலா வந்த பெருமான்
திருச்சித்ரகூடத்திலே தரிசனம் தருகிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
பேய்ச்சியான பூதனையின் விஷப்பாலை உண்ட ஆச்சர்யம்
தான் என்ன என்று கேட்டால் இது இச்சிறுபிள்ளையின் செயல்
என்று சொல்லி இக்கண்ணபிரான்; பூமாதேவியின் நாதன் என்றும், வண்டுகள்
மதுவுண்கிற தாமரையில் பிறந்த திருமகளின் பதி என்றும், கண்டார்
நெஞ்சை கவரும் அழகிய இடைப் பெண்கள் துதித்தும்
வணங்கியும் அன்றலர்ந்த மலர்தூவ அதைப் பெற்றுகொள்ள வரும்
கண்ணன் திருச்சித்திரகூடத்தில் உள்ளான் என்கிறார்.
கம்சன் ஏவிய பூதனை என்னும்
அரக்கியானவள் நல்ல பெண் உருவத்தில் திருவாய்பாடிக்கு வந்து அங்கு நித்திரை
கொண்டிருந்த கண்ணனுக்கு தனது நஞ்சு தடவிய தனங்களின் பாலினை அருந்த வைத்தாள். இதை
நன்குணர்ந்த கண்ணன் அவளது தனங்களில் உள்ள பாலை முழுவதும் உறிஞ்சி அவளது உயிரை மாய்த்தான்.
பெரிய இரைச்சலிட்டு வெட்டுண்ட மரம் போன்று சாய்ந்து உயிர் நீத்தாள். இந்த
நிகழ்ச்சியைப் பார்த்து ஆயர்பாடி பெண்கள் இவன் சாதாரணமானவன் அல்ல. ஸ்ரீமந்
நாராயணனே வந்து பிறந்துள்ளான் என்று பாராட்டி மகிழ்ந்தனர். அத்தகையவன் பரத்வ,
சௌலப்பிய குணங்கள் கொண்டு திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளியுள்ளான்.
முன்பு இவன் வெண்ணெயைக் களவாடி உண்டானெனக் கோபியர்கள் கேலிப் பேச்சு பேசுவர்.
எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் வணங்க, இரட்டை மருத மரங்களிடையே தவழ்ந்து வந்தபோது
கோபியர்களும், தேவர்களும் ஆயிரம் நாமங்கள் சொல்லி உனது
வலிமையை இசையோடு பாட கோகுலத்து வீதிகளிலே பவனி வந்தவன் இப்போது திருச்சித்ர
கூடத்தில் சேவை சாதிக்கின்றான் என்று ஆழ்வார் பாடுகிறார்.
சிலர் எளிமைக் குணத்திலே ஈடுபட்டிருப்பார்கள். சிலர் மேன்மைக் குணத்திலே
ஈடுபட்டிருப்பார்கள் அதன்படியே கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் வெண்ணெய்
முதலியவற்றைக் களவாடி அமுது செய்த எளிமைக் குணத்திலே நெஞ்சிழிந்தவர்கள். ”அறியாதார்க்கு
ஆனாயனாகிப்போய் ஆய்ப்பாடியார் நறுவெண்ணெய் உண்டுகந்தான் காணேடீ” என்றார் போலே
ஏசிப்பேசிப் போதுபோக்குவர்கள்; மேன்மைக் குணத்தில்
ஈடுபட்டவர்கள்” கானமருங் கல்லதர் போய்க் காடுறைந்த
பொன்னடிகள், வானவர் தஞ்சென்னி மலர்கண்டாய் சாழலே,” என்றாற் போலே
பேசி வணங்கிக் கிடப்பார்கள். ஆக இப்படி
ஏசுகைக்கும் ஏத்துகைக்கும் உரிய எளிமை மேன்மைகள் விளங்க நின்ற பெருமான்
அக்குணங்களிரண்டும் குன்றாமே ஸேவை ஸாதிக்குமிடம் சித்ரகூடம் என்றாராயிற்று.
சிலர் எளிமையான குணத்துடன் இருப்பார்கள். ஒரு சிலர் மேன்மையான குணத்துடன்
இருப்பார்கள். அதன்படி கண்ணபிரான் சிறுவயதில் வெண்ணெய் திருடி எளிமையாக வாழ்ந்து
வந்தான். பல இடர்கள் கண்ட ஆய்பாடி மக்களைக் காத்தவன் மேன்மையானவன். ஆக இரு
குணத்திலும் திருச்சித்ரகூடத்தில் சேவை சாதிக்கின்றான். எனவே வேறுபாடுகள், குழப்பங்கள் ஆகியவற்றை ஒதுக்கித் தள்ளித் திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளி
இருக்கும் பகவானை வந்து சரணடைந்து எல்லா வளத்தினையும் பெற்று இறுதியில் முக்தியும்
பெறுங்கள் என்று நம் அனைவருக்கும் நல்வழிக் காட்டுகிறார் ஆழ்வார்.
அழகிய வளையல்கள் அணிந்த கைகளையும், நீண்ட விழிகளையும் கொண்ட கோபியர்கள்
பயத்துடன், காளிங்கன் மீதேறி அடக்குகின்ற காட்சியைக் காண ஓடி
வாருங்கள் என்ற கூக்குரலிட, கோபியர்கள் தாமரைப் பூக்கள்
நிறைந்த தடாகத்தில் அருகில் இருந்தபடி பார்க்க, விஷம் கக்கிய
கொடிய பற்களைக் கொண்ட காளிங்கனின் படங்களிலே நின்ற அந்த நாகம் களைப்படையும்படி
நர்த்தனமாடி அதனுடன் போர் செய்து வெற்றி பெற்று மகிழ்வுடன் கோகுலத்து வீதிகளில்
வந்த பெருமான் இப்போது திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளியுள்ளான்.
வளையல்கள் அணிந்த கைகளையும் நீண்ட கண்களையும் உடைய இடைப்பெண்கள் பயப்பட்டுக்
காளிங்க நர்த்தனமாகிற இந்தப் பயங்கரமான செய்தியை வந்து பாருங்கள்’ என்று அழைக்க, இடையர்கள் மலர்ந்த
தாமரைப் பூக்களையுடைய ஒரு பொய்கையின் குளிர்ந்த கரையிலே சென்று பார்த்தவளவிலே
முளைத்த பற்களையுடையதும் விஷத்தை உமிழ்வதுமான காளியனென்னும் நாகத்தின் உச்சியிலே
நின்று கொண்டு அந்த நாகம் இளைக்கும்படி நர்த்தனம் செய்து உல்லாசமாக வீதியார
எழுந்தருளின பெருமான் சித்திரகூடத்து உள்ளான்.
யமுனையாற்றங் கரையில் கண்ணன் காளிங்கன் என்னும் கொடிய ஐந்து தலை
நாகத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அது கண்ட கோபியர்கள் பாலகனான கண்ணனை
நாகம் தீண்டி விடப்போகிறதே என்று அஞ்சி அயலாரைத் துணைக்கழைத்தனர். ஆனால் அங்கு
நடந்ததோ வியப்பான ஒன்றாகும். ஐந்தரவத்தின் தலையில் கண்ணன் நடம் புரிந்த காட்சியைக்
கண்டு கோபியர்கள் விக்கித்து நின்றனர். அரவமானது தனது தவறை உணர்ந்து மன்னித்தருள
வேண்டியது. கண்ணனும் அதனை மன்னித்துக் கடலில் சென்று வாழுமாறு கூறினான்.
அத்தகையவன் சித்ரகூடத்தில் உள்ளான் வந்து அவனை வணங்குங்கள் என்பது இதன் பொருளாகும்.
மழைக் காலத்தில் தோன்றும் கரியநிற மேகங்கள் போன்றவனும், முத்துக்கள்
நிறைந்த பெரிய சமுத்திரத்தைப் போன்றவனும், கொட்டும்
அருவிகளைக் கொண்ட ஆயிரம் பொன் மலைகளைப் போன்றவனும், கரிய
கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காகப் பெரிய காளைகளை அழித்த கோபாலன்
திருவாய்ப்பாடி வீதிகளில் கூத்தாடியபடியே வந்தவன், இப்போது
திருச்சித்ரகூடத்தில் சேவை சாதிக்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருவாய்ப்பாடித் திருவீதியிலே
கண்ணபிரான் எழுந்தருளும்போது பார்த்தால், ”கார்காலத்துக்
காளமேகந்தான் இங்ஙனே வடிவெடுத்து நடந்து செல்லுகின்றதோ! என்று சிலர்க்கு
எண்ணும்படியிருக்கும், முத்துவடங்கள் முதலிய ஆபரணங்களை
அணிந்து கொண்டு செல்வதைப் பார்த்தால் முத்துக்கள் மலிந்த கருங்கடல் தான் இங்ஙனே வடிவெடுத்து நடந்து செல்லுகின்றதோ! என்றும், அருவிகள்
விளங்குகின்ற பொன்மலைகள் பலகூடி இங்ஙனே உருவெடுத்து நடந்து செல்லுகின்றனவோ!
என்றும் சிலர்க்கு எண்ணலாம்படியிருக்கும். ஆக இத்தகைய வடிவழகு
வாய்ந்து, நப்பின்னைப்பிராட்டியைத் திருமணம் புணர்வதற்குக்
கொண்ட கோலத்துடனே வீதியார வரும்போது யாதொரு அழகு விளங்கிற்றே. அவ்வழகைப்
பின்புள்ளாரும் ஸேவித்து மகிழும்படி ஸேவை ஸாதிக்குமிடம் திருச்சித்ரகூடம்
என்றாயிற்று.
திருவாய்ப்பாடி வீதியில் நடனம் ஆடியபடியே கண்ணபிரான் செல்வது கார்கால கரிய
மேகமானது ஒன்று திரண்டு அசைந்து போவது போல் இருந்தது. அவன் முத்துமாலைகள் அனிந்து
செல்வது பெருங்கடலில் முத்துக்கள் திரண்டு வந்து அசைந்தசைந்து நகர்வது போன்று
இருந்தது. அருவிகளால் சூழப்பட்ட பொன்னாலான மலைகள் ஒன்றகூடி இங்கே உருவெடுத்து
நடந்து செல்கின்றதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. காளைகளை அடக்கி நப்பின்னையை
மணம் புரிந்து வந்த அழகு மற்ற அழகினை பின்தள்ளி வந்தது என்றும் அத்தகைய அழகுடையவன்
தில்லையில் வாசம் செய்கின்றான்.
இராமபிரான் ஒரு அம்பினைத் தொடுத்த மாத்திரத்தில் இலங்கை முழுவதும் சிதைந்து
அழிந்தது. ஏழு நாட்கள் ஓயாமல் பெய்த பெருமழையைத் தடுத்து பெரிய கோவர்த்தன மலையைக்
குடையாகப் பிடிக்க மழை நின்றது. கோகுலத்து மக்களையும், ஆநிரையையும்
காத்தருளினான் கண்ணன். அனைவரும் கண்ணனைப்
பணிந்துப் போற்றினர். பூமியில்
உள்ளோரெல்லாம் துதித்துத் தொழும்படியாக விளங்கினான். பெரிய மலை போன்ற கருடாழ்வார்
மீதேறி பவனி வரும் பெருமான் திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளியிருந்து நமக்கெல்லாம்
சேவை சாதிக்கின்றான்.
அம்பினால் அடித்தபோது இலங்கை அழிந்தது. பசுக்களின் கூட்டம்
கலங்கும்படி வந்த மழையை தடுத்து அவைகள் உய்ய
பெரிய கோவர்த்தன மலையைத் தூக்கி பசுக்களைக்
காத்தான் என்று சொல்லிப் பூமியிலுள்ளாரெல்லாரும் தொழும்படியாக அழகிய பெரிய தெய்வீக மலையே வருவது போலக் கருடன் மீது
ஏறி வரும் பெருமான் திருச்சித்திரகூடத்தில் உள்ளான்
என்கிறார்.
அடியவர்களைக் காக்கும் பொருட்டு எம்பெருமான் பெரிய திருவடியின் மீதேறி
வந்து காப்பதுண்டு. ‘எய்யச் சிதைந்த இலங்கை’ என்று பெருமானை ஏற்றிப் பாடுவார்கள்.
ஒரு அம்பு தொடுத்த மாத்திரத்தில் இலங்கை அழிந்தது என்று கூறுவார்கள். மிகவும்
துன்பம் கொண்ட இலங்கை சென்று இராவணனை அழித்தது சீதாப்பிராட்டியை மீட்டு
வருவதற்காகத்தான் என்றாலும் அவனால் துன்பம் கொண்ட பல கோடி உயிரினங்களைக் காக்கவும்
இச்செயல் புரிந்தான் என்று சொல்வர். அதர்மம் கோரத் தாண்டவம் ஆடும்போது பெருமான்
அவதாரமெடுத்து அதனை அழித்துத் தர்மத்தைக் காப்பார் என்பது இதன் பொருளாகும்.
‘பெரிய கரிய மலை போன்றதும், மிகுந்த சினத்தையுடைய பலமான குவலயாபீடம் என்னும்
யானை வீழ்ந்து மடியும்படி அதன் மேல் கோபமுற்ற கிருஷ்ணனைப் போல் யாரால் இப்படி
வீரத்தினைக் காண்பிக்க முடியும்’ என்று அழகான நீலோற்பவ பூக்களைப் போன்ற நீண்ட
விழிகளைக் கொண்ட பெண்கள் கைகூப்பி வணங்க, மதுராவின் வீதிகளில் கம்பீரமாக வலம் வந்தவன், தேவர்கள் வழிபடும்படி தில்லைச் சித்திரக்கூடத்தில்
வீற்றிருந்தான் என்கிறார் ஆழ்வார்.
பெரிய கரிய மலை போன்றதும் மிகுதியாகக் கொண்ட கோபத்தையுடையதும் சீறியருளினது
முதலிய இப்படிப்பட்ட அருந்தொழில்களைச் செய்வதறிவார் இக்கண்ணபிரான்
தவிர வேறு யாருமில்லை” என்று சொல்லி அழகிய
நீலோற்பவம் போன்ற நீண்ட கண்களையுடைய மாதர்கள் கைகூப்பித் தொழும்படியாக மிக்க
வலிமையுடையதுமான குவலயாபீடமென்னும் கம்ஸனது யானை மாண்டொழியும்படி வடமதுரைத்
தெருவிலே கம்பீரமாக எழுந்தருளினவன் நித்யசூரிகளும் வந்து வணங்கப்பெற்ற அழகிய தில்லைத்
திருச்சித்திரக்கூடத்தில் ஸேவை ஸாதிக்கின்றான்.
குவலயாபீடம் என்ற
யானையானது கண்ணனைக் கொல்வதற்கு வீறு கொண்டு எழுந்து வந்த போது அதன் இரு
கொம்புகளையும் பிடித்து சேற்றிலிருந்து கொடியினைப் பிடுங்குவது போன்று பிடுங்கி
அந்த இரு தந்தங்களையே ஆயுதமாகக் கொண்டு அதனையே எதிர்த்துப் போரிட்டு அழித்தான்.
இச்செய்தி மதுரா வீதிகளில் பரவி அங்கிருந்த பெண்கள் அனைவரும் ‘இத்தகைய வீரச்
செயலைப் புரிய வேறு யாரால் முடியும் என்று புகழ்ந்துத் துதித்துப் பாடி
வழிபட்டார்கள். மலையை எதிர்த்த மாவீரன் இவனோ! என்று வியந்து பாடுகிறார்கள்.
இத்தகைய அழகுமிக்க வீரனை பிற்காலத்தில் நாமெல்லாம் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருச்சித்ரகூடத்தில் வந்து
எழுந்தருளி உள்ளான். அவனைப் புகழ்ந்து பாடி துன்பங்களை விலக்கிக் கொள்ளுங்கள்.
முன்னொரு காலத்தில் போர்க்களத்தில் இரண்யாசுரன் அஞ்சும்படி அவனது உடலை
கூர்மைமிக்க நகங்களை வைத்து, தீயைக் உமிழும் விழிகளையும், நீண்ட
கோரைப் பற்களையும், பெரிய வாயையும் உடைய நரசிம்மமாகத்
தோன்றி ஆயிரம் தோளினை உடைய பகவான் திருச்சித்திர கூடத்தில் எழுந்தருளியுள்ளான்
என்று இப்பாசுரத்தில் ஆழ்வார் கூறுகிறார்.
முன்பொரு காலத்தில் போர்க்களத்தில் ஹிரண்யாசுரன் பயப்படும்படியாகக் கிளர்ந்து அவ்விடத்திலே
அவ்விரணியனது உடம்பிலே கை வைத்து அவனைச் சித்திரவதம் பண்ண வேணுமென்கிற பதற்றத்தாலே
கைகள் பலமுகமாகப் பெருக்கமடைய நெருப்பை உமிழ்கின்ற பசுத்த இரண்டு
திருக்கண்களையும், நீண்ட கோரப்பற்களையும் பெரிய வாயையுமுடைய
நரஸிம்ஹ ரூபியாய்க் காட்சி தந்த பெருமான் வருவான் என்பதாகும்.
இரணியன் கடும்தவம் செய்து
இறைவனை வேண்டியபோது மிகப் பெரிய பலத்தைப் பெற்றான். அந்த பலத்தைக் கொண்டு
தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான்.
மேலும் பகவான் மீது பக்தியாக இருந்த இரணியனின்
மகனான பிரகலாதனைக் கொல்வதற்கு பல்வேறு உபாயங்கள் செய்து அதில் தோற்றுப் போனான்.
பகவான் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்
என்று சொன்னவுடன் வெகுண்டு அங்கிருந்த தூணினை எட்டி உதைக்க பகவான் நரசிம்மராகத்
தோன்றி இரண்யனை மடியில் இருத்தி தனது கூரிய நகங்களால் அவனைக் கிழித்துக் கொன்றார்.
அத்தகையவன் சித்திரகூடத்தில் வாசம் செய்கிறான்.
காளமேகம் போன்ற திருமேனியைக் கொண்டவனாய்,
திருக்கைகளிலே
சங்கும் சக்கரமும் ஏந்தியவனாய், ஏழு உலகத்தவரும் சக்தி
மிக்க தேவர்களும் சுற்றிலும் சூழ்ந்து சேவித்து வழிபட நீளாதேவியின் அம்சமான
நப்பின்னையோடும், பூதேவி, ஸ்ரீதேவியோடும் கூடி
நகர்வலம் வருபவன் திருச்சித்திரக் கூடத்தில் உள்ளான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருமேனி காளமேகம் போன்றுள்ளது, அதற்குப் பரபாகமாகத்
திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகள் ஜ்வலிக்கின்றன. இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்து சுற்றிலும்
சூழ்ந்து வருகின்றனர். மற்றுமுள்ளாரும் தொழுது துதிக்கின்றனர். ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி என்ற நாச்சிமார் மூவரும் விட்டுப்
பிரியாதே கூடவே எழுந்தருளியிருக்கின்றனர். ஆக இப்படிப்பட்ட விபவம்
பொலியப் புறப்பட்டெழுந்தருளி நின்றான் சித்திரகூடத் தெம்பெருமானென்று
கண்ணாரக்கண்டு வாயாரப் பேசினாராயிற்று.
ஆழ்வாரின்
பாசுரங்களைக் கேட்ட பகவான் மகிழ்ந்து
வருவான் வருவான் என்று கூறிக் கொண்டே இருப்பதால் எமது புறப்பாடு காண ஆவலாக உள்ளீர்
போலும். எனவே எமது தேவிமார்களுடன் உமக்காக இன்று புறப்பாடு காட்டுகிறேன்.
அனுபவித்து எம்மீது கவிபாடி மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்று கூறுகிறார். பகவான் பல
அவதாரங்கள் எடுத்துக் காட்டியுள்ளார். அதுவே அவரது கருணையின் திருவுருவமாகும்.
எனவே திருச்சித்ரகூடம் சென்று தேவிமார்களுடன் காட்சி தரும் பெருமானை வணங்கிப்
பிறவித் தளையைத் களைந்து நிலையான வாழ்க்கைப் பெறுங்கள் என்ற பொருளில்
அமைந்துள்ளது.
வண்டுகள் மொய்க்கும் பூம்பொழில்களையுடைய தில்லைத் திருச்சித்திரக் கூடத்தில்
வீற்றிருக்கும் தேவாதி தேவனை, திருமங்கை மன்னனும், பகைவரின் உடலில் தைக்கும் வேலினைக் கொண்டவருமான
திருமங்கையாழ்வார் இயற்றிய இப்பத்துப் பாமாலைகளையும் படித்து ஓத வல்லவர்களைக்
கொடிய பாவங்கள் அணுகாது என்று கூறுகிறார் ஆழ்வார்.
வண்டுகள் மொய்த்து அழகிய சோலைகளையுடைய தில்லைத் திருச்சித்திரகூடத்திலே
நித்யவாஸம் செய்தருள்கிற தேவாதிதேவன் விஷயமாக, திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் எதிரிகளின்
சரீரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடையவருமான திருமங்கையாழ்வார் அருளிச்
செய்த அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓதித் தேறினவர்களிடத்தில் பாவங்கள்
கிட்டமாட்டாது என்கிறார்.
மேற்கண்ட பாசுரங்கள்
மூலமாகப் பகவானின் பெருமைகளை ஆழ்வார் எடுத்துச் சொல்கிறார். இந்நிகழ்வுகளை
எப்போதும் மனதில் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழ்வார் அடிக்கடி
கூறுகிறார். இக்கலிகாலத்தில் இறைவனை அடைய கடுந்தவம் மேற்கொள்ள வேண்டாம்.
சுட்டெரிக்கும் தீயினால் வளர்க்கும் யாகத்தை மேற்கொண்டு உடலை வருத்திக் கொள்ள
வேண்டாம் என்றும் கூறுகிறார். உடலாலும் மனதாலும் எவருக்கும் தீங்கிழைக்க வேண்டாம்.
அற்ப சுகங்களில் ஆசைப்பட வேண்டாம். வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போலாகும். நமது வாழ்வு முடிந்து மரணம் நெருங்குமுன்
ஆன்மாவைத் தேடி அடைய வேண்டும் என்று ஆழ்வார் பலவாறு நமக்கு அறிவரை கூறகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக