வெள்ளி, 12 டிசம்பர், 2025

32. திருமணிமாடக் கோயில்

 


திருமங்கையாழ்வார்                                                                         பெரிய திருமொழி 

 நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
     நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
     இமையோர் பரவும் இடம் எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே
     களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே   1218

 

நித்யமான ஒளிவழங்கும் அணையா விளக்கே! அளவிட முடியாதவனே! நரநாராயணனாய் அவதரித்தவனே! கரிய பெரிய மேகம் போன்ற பெருமானே! எங்கள் வாழ்வின் முதலே! எங்களுக்கு அருள்வாய் என்று தேவர்கள் அனைவரும் நின்று வணங்கும் இடமான அழகிய தேனீக்கள் எல்லா திசைகளிலும் தேவகாந்தாரி ராகம் பாட, களிவண்டுகள் பக்க ஆலாபனை செய்ய, பாரிஜாத மரங்கள் நிழல் கொடுத்து நெருங்கி நின்று பரிமள வாசத்தை அள்ளி வீசும் திருநாங்கூரில் உள்ள மணிமாடக் கோவிலை என் மனமே, வணங்குவாயாக என்று போற்றிப் பாடுகிறார் ஆழ்வார்.

ஒரு நாளும் அணையாத விளக்கே! ஒளியினாலே  விளங்கும்  பொருள்  விளக்கு   எனப்படும்; அதுபோல எம்பெருமான் நித்யமாய் ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தைக் குணமாகவுடையனாயும் அப்படிப்பட்ட ஞானமே ஸ்வரூபமாக உள்ளவனாக இருப்பது பற்றி நந்தாவிளக்கு எனப்பட்டான் என்கிறார்.

அளவிட முடியாதவனே! உலகத்தில் உள்ள பொருள்களை மூன்று வகைகளாலே அளவிடுதல் உண்டு; அதாவது காலத்தைக் கொண்டும், தேசத்தைக் கொண்டும், வஸ்துவைக் கொண்டும் அளவிடுதல்; இஃது எம்பெருமானிடத்தில் செய்யவொண்ணாது; எம்பெருமான் ஸர்வகாலத்திலும் உள்ளவனாதலால் காலபரிச் சேதமில்லாதவன். ஸர்வ வ்யாபியாயிருப்பதால் தேச பரிச்சேதமில்லாதவன். அவனோடொத்த வஸ்து இல்லாமையினால் வஸ்து பரிச்சேதமில்லாதவன் என்பதாகும்.

      எம்பெருமான் நித்யமான பிரகாசமாய் ஞானத்தையும் குணத்தையும் உடையவன். அப்படிப்பட்ட ஞானம் உடையவன் இங்கு நந்தாவிளக்கு என்று வர்ணிக்கப்படுகிறான். உலகத்தினை, காலத்தைக் கொண்டும், தேசத்தைக் கொண்டும், பொருளைக் கொண்டும் அளவிடுதல் உண்டு. எம்பெருமான் சர்வ காலத்திலும் உள்ளவனாதலால் காலபரிதேசமில்லாதவனாகிறான். சர்வ வியாபியாக இருப்பதனால் தேசபரி தேசமில்லாதவனாகிறான். அவனைப் போன்ற பொருள் வேறு இல்லாததனால் வஸ்து பரிச்சேதமில்லாதவனாகிறான். இதுவே த்ரிவித பரிச்சேதராஹித்யம் என்று பாஷ்யகாரர்களால் வர்ணிக்கப்படுகிறான்.

      

முதலைத் தனி மா முரண் தீர அன்று
     முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
     வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்
பதலைக்க போதத்து ஒளி மாட நெற்றிப்
     பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே.      1219

 

முன்பொரு காலத்தில் அகாதமான நீரையுடைய பொய்கையில் முதலையின் கொடியத்தனம் தீரும்படி சிவந்த கண்களையுடைய கஜேந்திர யானை நடுங்கிய சமயத்தில் காப்பாற்றி அதன் துன்பத்தைத் தீர்த்த பகவான் எழுந்தருளியிருக்கும் இடம் நாங்கூர் மணிமாடக் கோயிலாகும்.  இத்தலம்  விண்ணைத்தொடும் கும்பங்களையுடைய மாட மாளிகையின் முகப்பில் பளிச்சிடும் பவழத்தூண்  போன்ற பசுமையான காலினைக் கொண்ட புறா, உயரிய மாடங்களின் மேல் பேடையுடன் கூடிக் களிக்கும் இடமாகும். மனமே! நீ அங்குச் சென்று எம்பெருமானை வணங்குவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

திருநாங்கூரில் மாடமாளிகைகள் விண்ணுலகளவும் ஓங்கியிருக்கின்றன அவற்றில் புறாக்கள் உல்லாஸமாகக் கலந்திருக்கின்றன என்கிறது. பதலையாவது நுனியில் ஸ்தாபிக்கப்படும் கும்பங்கள். ‘கபோதம்”  என்ற வடசொல் மாடப் புறாவுக்கு வாசகமாயினும், அப்புறாக்கள் தங்கி வாழுமிடமாகிய ஸ்ந்நிவேசத்தையும் தமிழில் கபோதமென்றும் கபோதையென்றும் கபோதியென்றும் வ்யவஹரிப்பதுண்டு. கட்டிடத்தின் ஓர்பகுதி.

      நாம் மிகவும் சிரம்பபட்டு பறித்த பூப்பெருமானுக்கு இல்லாமல் போனதே என்ற வருந்தியது யானை. பறவைகளின் தலைவனான கருடன் மேல் வந்து பெருமான் முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காத்தார். அது போன்று நம்மிடம் தீவினைகள் இருப்பினும் அதன் துன்பங்களைப் பகவான் களைவார். அதன் கொடுமையைத் தணிப்பார். நாங்கூரில் விண்ணைத்தொடும் மாட மாளிகையில் புறா தனது பேடையுடன்  மகிழ்வுடன் கலந்துள்ளது. இத்தகைய மணிமாடக்கோவிலை நோக்கித் தனது மனத்தினை செல்க என்று கூறுகிறார்.

      

கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று
     கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு
     அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்
     அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப் பண்டம் அண்ட திரை உந்து நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே.        1220

 

முற்காலத்தில் தும்பிக்கையால் கொலை செய்ய வல்லதும், புண்பட்ட தலையை உடையதும், மலை போன்றதுமான ஒரு யானை பிழைக்க அதன் காலைப் பற்றிய கொடிய முதலையைக் கொன்ற, தாமரைப் பூவில் வந்த  பிராட்டியுடன் கூடிய இன்பத்தை  அனுபவித்த பகவான் கோயில் கொண்டுள்ள இடம் திருமணிமாடக் கோவிலாகும். ஆற்றல் மிக்க யானைகளின் தந்தங்களையும், அகிலையும், முத்துக்களையும், வெண்சாமரங்களையும், மலையில் விளைந்த பலவகைப் பொருட்களையும் அலைகளால் தள்ளிக் கொண்டு காவிரி பாயும் இடமாகும். அத்தகைய இடத்தைச் சென்று அடைவாயாக மனமே! என்று கூறுகிறார்.

அக்காலத்தில்  கொலைத் தொழிலையும்,  புண்பட்ட தலையையும் உடைய மலை போன்றதுமான ஒரு யானை  உயிர் வாழக் கொடிய முதலைக்குத் துன்பமுண்டாக்கி  தேன் மணமுள்ள  இலைகளையுடைய தாமரைப்பூவில் பிறந்த திருமகளுடன்  சேர்ந்து அனுபவிக்கும்  எம்பெருமான் இருக்குமிடமான  காவேரியானது  வீரச் சிங்கங்களால்  கொல்லப்பட்ட  யானைகளினுடைய தந்தங்களையும் அகில் மரங்களையும்  அழகிய முத்துக்களையும்  வெளுத்த சாமரங்களையும், மலையில் இருக்கும்  பல பொருள்களையும் அலைகள் தள்ளிக்கொண்டு  வரும் நாங்கூரின்  மணிமாடக் கோயிலில் சென்று  வணங்கு என் மனமே!

      எம்பெருமான் விரோதிகளை அழித்து அதனைமகிழ்ச்சியாகக் கொண்டாடட பிராட்டியை அணைத்து இன்புறுகிறார். கரதூஷணனை இராமன் அழித்தபோது சீதையை இவ்வாறு தழுவியதாக இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. அது போன்று முதலைக்கு இடர்தீர்த்து மகிழ்வில்இருந்தபோது பிராட்டி பெருமானை மகிழ்வித்தாள் என்று ஆழ்வார் கூறுகிறார். முதலையும், யானையும் முற்பிறவியில் தீவினைகளால் இத்துன்பத்தினை ஏற்றது. பகவான் இரண்டுக்கும் விமோசனம் அளித்தார். உயிர்களின் ஆபத்துகூட காரணகாரியமாகத்தான் நடக்கின்றது என்ற உண்மை இதன்மூலம் புலப்படுகின்றது.

 

சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
     திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடியக்
     கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான்
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
     ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே.      1221

 

முன்காலத்தில் அழகிய சிறகினையுடைய கருடப் பறவையின் மீது ஏறிச் சென்று யுத்தத்தில் எதிர்த்த இரத்தக்கறை படிந்து, பெரும் வேற்படையைக் கொண்ட அசுரர்கள் எட்டு திசைகளிலும் சிதறி மடிய, கடல் சூழ்ந்த இலங்கையை வென்ற பகவான் வாழும் இடம் நாங்கூரின் மணிமாடக் கோவிலாகும். இத்தலமானது ஆகம விதிப்படி முத்தீ வளர்த்து, நால்வகை வேதங்கள் முழங்கி, ஐந்துவித யாகங்கள் நடத்தி, ஆறுவகையான வேதாகமங்கள் கற்று, ஏழு ஸ்வரங்களையும்  பயின்ற அந்தணர்கள் வணங்கும் புகழுடையதாகும். நெஞ்சமே! அங்குச் சென்று வணங்குவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

      மாலி, சுமாலி என்ற அரக்கர்களைத் திருமால் வென்றபோது இதே போன்று பெரிய திருவடியின் மீது வந்து போரிட்டு வென்றது மிகவும் பிரசித்தம். அப்போது திரண்டு வந்த அரக்கர்கள் நாற்றிசைகளிலும் சென்று மடிந்தனர். அதனையொட்டி ஆழ்வாரும் இதே நிலையில் இப்பாசுரத்தை இயற்றியுள்ளார் எனலாம்.  இதனை அடிக்கடி சொல்வதால் நம் மனதில் இந்நிகழ்வுகள் நன்கு பதிந்துவிடும் என்ற எண்ணத்தில் தமது மனத்தினை மணிமாடக் கோயிலுக்குச் செல்லுமாறு கூறுகிறார் ஆழ்வார்.

      

இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு
     இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத்
     தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான்
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே
     குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை ஆடு சோலை மயில் ஆலு நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே    1222

 

அணிகலன்கள் பூண்டு, பேய் வடிவில் வந்த பூதனையின் தனங்களில் உள்ள நஞ்சை உண்டவனும், கன்றாக வந்த வத்ஸாசுரனின் கால்களைப் பற்றி விளாமரமாய் நின்ற கபித்தாசுரன் மேல் அடித்து இருவரையும் அழித்தவனும், வலிமை பெற்ற குருந்த மரத்தை அதன் தழைகள் வாட முறித்தவனும், காளியன் கொட்டத்தை அடக்க யமுனை மடுவில் குதித்தவனுமான பெருமான் குடியிருக்கும் இடம், மரத்தின் இலைகளாட, அருகே உள்ள பூங்கொடிகளில் மயில்கள் நாட்டியமாடும் நீண்ட கொடிகள் நாட்டப்பெற்ற மாட மாளிகைகள் நிறைந்திருக்கும் நாங்கூரில் உள்ள மணிமாடக்கோவிலை மனமே! நீ சென்று அடைவாயாக என்று கூறுகிறார் ஆழ்வார்.

ஆய்ச்சிகளோடு ஜலக்ரீடை பண்ணுவதற்காகப் பொய்கையிலே புகுந்தபடியைச் சொல்லிற்றாகவுமாம். இப்படிப்பட்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடமான திருநாங்கூரில் மணி மாடக்கோயில் வணங்கென் மனனே! என்பது இதன் வியாக்யானம்.

      அரக்கியின் பாலை உண்டு அவளை அழித்தவனும், அசுரர்களை வதம் செய்தவனான எம்பெருமான் வலிமை மிக்க வேர் கொண்ட குருந்தை மரத்துத் தழைகள் அனைத்தும் காயும்படி, முழுதும் முறித்தவனாவான். தாமரைத் தடாகத்தில் கோபியர்களுடன் ஜலக்கிரீடை செய்தவனான பெருமான் நீண்ட துவஜஸ்தம்பத்தைக் கொண்ட மணிமாடக் கோவிலில் குடியிருக்கின்றான். மனமே! எவ்விதமான தீய எண்ணங்களையும் நினையாமல் அவனை அடைவாயாக என்று கூறுகிறார்.

      

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்
     பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்
     உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகிக்
     கழுநீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!      1223

 

அழகுற பேசும் ஆய்ச்சியர் பயங்கொள்ளும்படி பெரிய வாயும், பேய்ச்சியான பூதனையின் உண்ணத் தகாத அவளது பாலை அவளது உயிருடன் சேர்த்து உறிஞ்சிய பரந்தாமன் வாழுமிடம் திருநாங்கூர் மணிமாடக் கோவிலாகும். இத்தலமானது உயரிய பசுங்கால்களையுடைய கரும்பின் சோலைகளை இளம் எருதுகள் அதிகமாகத் தின்றதால் நகர முடியாமல் அங்கே தாமதித்துப் பிறகு செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளத்திலே மூழ்கி, சேற்றில் கொம்புகளைக் குத்தி, மண் உருண்டைகளைப் பெயர்த்து ஏந்தி, கரையேற மாட்டாமல் கிடக்கும் இடமாகும். மனமே! நீ அங்குச் சென்று பெருமானை தொழுவாயாக என்கிறார் ஆழ்வார்.

வயல்களில் இளைய எருமைகள் கரும்புகளின் தலையாடியை மேய்ந்து, தன்னளவல்லாதபடி மிகவும் தின்கையாலே நகர்ந்து செல்லமாட்டாமல் அவ்விடந் தன்னிலே இடம் வலங்கொண்டு இளைப்பாறி, பிறகு மெல்ல நடந்து சென்று செங்கழுநீர்க் குட்டையிலே மூழ்கி, சேற்றிலே கொம்புகளைக் குத்தி மண்ணுருண்டையைப் பெயர்த்தெடுத்துத் தாங்கிக் கொண்டு கிளம்பி, பின்னை அடித்து ஏறவிடவும் முடியாத அவ்விடத்திலேயே கிடக்கும்படியைக் கூறினவாறு.

      கண்ணபிரானின் சிறுசிறு விளையாட்டுக்கள் பல இருந்தாலும் அதில் பேய்ச்சியின் பாலை உண்டு பிழைத்து வந்த விளாயாடல் மிகச் சிறந்ததாகும். எனவேதான் ஆழ்வார்கள் இதனை அடிக்கடி பாசுரங்களில் கூறுகிறார்கள். பூதகியின் இறந்த உடலைக் கண்டு ஆய்ச்சியர்கள் மனம் பதைத்து இவள் நினைத்தது நடந்திருந்தால் இவ்வுலகமே அஸ்தமனமாகி இருக்கும். ‘பேய்ச்சி முலையுண்ட பிள்ளை இப்பிள்ளையை பேசுவதஞ்சுவனே’ என்று யசோதை கேட்பது போன்று மற்றொரு பாசுரத்தில் ஆழ்வார் கூறுகிறார்.

      

தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்
     தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்
     அடி வைத்த அம்மான் இடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
     செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே.       1224

 

மலர்ந்த தாமரை மலர்களும், அழகிய மொட்டுக்களும் நிறைந்த தடாகத்தில் புகுந்து அதில் அடங்கியிருக்காமல் நஞ்சைக் கக்கும் காளியன் நாகம் களைக்கும்படி அதன் தலையில் கூத்தாடிய பெருமான் குடியிருக்கும் திருநாங்கூர் மணிமாடக் கோயிலாகும். இங்குச் சங்கு வளைகள் அணிந்த வலைஞர் குலப்பெண்கள் விளையாடும் கொடி பறக்கும் மாளிகை நிறைந்த தெருக்களுக்குச் செல்வார்கள். அழகு முத்துக்கு வெண் நெல்மணிகள் பண்டமாகத் தருகிறோம் என்று சொல்லி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விற்பனை செய்வார்கள். அத்தகைய மகிமை வாய்ந்த ஊர் பகவானை சென்று வணங்குவாயாக மனமே! என்று கூறுகிறார்.

திருநாங்கூரில் வாழ்பவர்கள் அனைவரும் பெருஞ்செல்வம் பொலிந்தவர்களென்பது விளங்க “மாமதியந்திருஹக்குங் கொடிமாளிகை சூழ்தெரு” எனப்பட்டது. மாளிகைகளிலே கொடி நாட்டப்பட்டிருக்கும். அவை சந்திரமண்டலத்தை எட்டிருயிருக்கையாலே, கடமையாக ஸஞ்சரிக்க வேண்டிய சந்திரன் அக்கொடிகளிலே துவக்குண்டு அப்பால் செல்லப் பெறாமல்  அவற்றோடே விளையாடுகிறபடி. இப்படிப்பட்ட மாளிகைகள் நிறைந்த வீதிகளிலே குறத்திகள் தங்களுக்கு அவலீலையாகக் கிடைக்கிற நன்முத்துக்களைக் கூடை கூடையாகக் கொணர்ந்து நாழி நெல்லுக்கு விற்பனை செய்கிறார்களாம்.

 துளைகள் நிறைந்த கரிய மெல்லிய புல்லாங்குழல் போல் இனிய குரலுடைய ஆய்ச்சியர் என்பது ஒருவகை. துளைதற்கு நிறைந்துள்ள கரிய மெல்லிய கூந்தலையுடைய ஆயச்சியர் என்பது மற்றொருவகை.  துளைகள் பொருந்திய கரிய மெல்லிய குழலின் பெயரையும் அதன் அடைமொழிகளையும் தங்கள் கூந்தலையுடைய ஆய்ச்சியர் என்பது இன்னொருவகை. பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “துளையாரென்று துளைமிக்கிருக்கை; அதாவது சுருண்டு கருத்த ருதுவான குழலையுடையராய்” என்றருளிச் செய்திருக்கக் காண்கிறோம்.

      தாமரைத் தடாகத்தில் நெகிழாமல் முகுளமாக உள்ளதும், கட்டவிழ்ந்தும் உள்ள தாமரைகள் பூத்துள்ளது. தவங்கள் பல இருந்தும் கண்ணனின் தாமரைப் பாதங்கள் கிடைக்கப் பெறாதபோது, பாவியான காளிங்கனின் தலைமீது செந்தாமரைப் பாதங்கள் பட்டனவே. ஆழ்வானான நான் காளியன் தலையாகப் பிறந்திருக்கவில்லையே என்று அங்கலாய்த்துப் பாடுகிறார் ஆழ்வார். இத்தலத்தில் மாளிகையில் உள்ள கொடிகள் விண்ணைத் தொடும். சந்திரன் தன் கடமை மறந்து கொடியோடு விளையாடிப் பொழுதைக் கழிக்கும் என்ற பொருளில் அமைகிறது.

துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்
     துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்
     விளைவித்த அம்மான் இடம் வேல் நெடுங் கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று
     மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே.       1225

 

சுருண்ட கூந்தலின் துளைபோல் தெரியும் கருமையான, மெல்லிய கூந்தலையுடைய கோபியர்களின் ஆடைகளைக் கவர்ந்தும், அவர்கள் கட்டிய மணல் வீடுகளைச் அழித்தும், முற்றாத இளம் பெண்களோடு இராசலீலை நடத்தியும், ஆசைப்பெருக்கை உண்டாக்கிய பெருமான் திருநாங்கூர் மணிமாடக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.  அங்கு இனிய சொல்லையும், வளைந்த மதுரமான வாயையுடைய கிளிகள், வேல் போன்ற நீண்ட விழிகளையும், பிரகாசமான பற்களையும் கொண்ட பெண்கள்  சொல்லித்தரும் வேதச் சொற்களைக் கேட்டு அவற்றைத் திருப்பிக் கூறும் சிறப்புடைய தலத்து பகவானை சென்றடை மனமே! என்று கூறுகிறார்.

துளையார் என்ற பதத்திற்கு மூன்று வகையாகப் பொருள் கொள்ளலாம். துளைகள் நிறைந்த கரிய மெல்லிய புல்லாங்குழல் போல் இனிய குரலுடைய ஆய்ச்சியர் என்பது ஒருவகை; நீரிற்படிந்து துளைதற்கு நிறைந்துள்ள கரிய மெல்லிய கூந்தலையுடைய ஆயச்சியர் என்பது மற்றொருவகை.  துளைகள் பொருந்திய கரிய மெல்லிய குழலின் பெயரையும் (அதன் அடைமொழிகளையும்) தங்கள் கூந்தலையுடைய ஆய்ச்சியர் என்பது இன்னொருவகை. பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்- “துளையாரென்று துளைமிக்கிருக்கை; அதாவது சுருண்டு கருத்த மிருதுவான் குழலையுடையராய்” என்றருளிச் செய்திருக்கக் காண்கிறோம்.  கூந்தல் சுருண்டிருக்கும் நிலைமையில் துளைகள் தென்படுதல் பற்றி இங்ஙனே உரைத்தருளினார்.

      குழலாய்ச்சியர் என்ற சொல்லுக்குக் கரிய துளைகள் கொண்ட குழல் நாதம் போன்று குரல் என்றும், கரிய கூந்தலையுடைய ஆய்ச்சியர் என்றும் பொருள் கொள்ளலாம். இதே கருத்தினை நாச்சியார் திருமொழியில் கோதையானவள் ‘கோழியழைப்பதன் முன்னம்’ மற்றும் ‘நாமமாயிரமேத்த நின்ற’ என்ற பாசுரங்களில் தெரிவிக்கிறாள். இத்தலத்தில் வாழும் வைதிக அந்தணர்கள் கூறும் வேதங்களை அவ்வப்போது செவிமடுத்துப் பாடும் இல்லப் பெண்டிர்களின் பாட்டினை, இளங்கிளிகள் கேட்டு அவை சொல்வது வேதஒலியாகத் திகழும்.  

 

விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த
     விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று
     இமையோர் பரவும் இடம் பைந் தடத்துப்
பெடையோடு செங் கால அன்னம் துகைப்பத்
     தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடை ஓட நின்று மது விம்மு நாங்கூர்
     மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே     1226

 

ஏழு காளைகளை அடக்கி  நப்பின்னையின் மெல்லிய தோள்களை விரும்பி அணைந்த அழகனே! ஒளிமிக்க சுதர்சனத்தையும், ஒப்பற்ற பாஞ்சஜன்னியத்தையும் உடையவனே! என்று வானரவர்கள் போற்றுமிடம் நாங்கூர் மணிமாடக் கோவிலாகும்.  அங்குள்ள தடாகத்தில் சிவந்த காலுடைய ஆண் அன்னம், பெண் அன்னத்தோடு கூடித் தாமரைப் பூக்களை மிதிக்க, அப்பூக்களிலிருந்து பெருகும் தேன்  அருகில் உள்ள செங்கழுநீர் பூக்களின் இதழ்களில் ஓடிப்பாயும். அத்தகைய சிறப்புமிக்க தலத்தைத் தேடிச் செல்வாயாக மனமே! என்று பாடுகிறார்.

 ஏழு ரிஷபங்களும் ஓடி அழியும்படி  அவைகளை வென்று  நப்பின்னையின்  மென்மையான தோள்களை  அணைக்க விரும்பிய  விலக்ஷணமானவனே!  ஒளியோடு விளங்கும்  சக்ராயுதத்தையும்  ஒப்பற்ற சங்கையும்  உடையவனே  என்று சொல்லிக் கொண்டு  தேவர்கள்  துதிசெய்யுமிடமாய்  அழகிய தடாகத்திலே  பெடையோடு கூடின  சிவந்த கால்களையுடைய  அன்னப்பறவை ஏறித் துகைப்பப,  துகைப்பதால் திரளான  தாமரை பூக்களின்  நடுவிலிருந்த செங்கழுநீர் பூக்கள்  மடைகள் நிரம்பி ஓடின போதிலும்  உள்ளே நின்று மது வெள்ளம்  தேங்கும்படியான நாங்கூர்  மணிமாடக்கோயிலில் சென்று  வணங்கு என் மனமே! என்கிறார்.

      நாம் கண்ணனை அடைய வேண்டுமென்றால் பல்வேறு பெருமுயற்சி எடுக்க வேண்டும். முதலில் புலனடக்கம் வேண்டும். அடுத்து மன அடக்கம் வேண்டும்மூன்றாவதாகக் கர்மவினைகள்ள் தீர்க்கப்பட வேண்டும்இதற்குப் பலபல பிறவிகள் தேவைப்படும். ஆனால் கோபியர்களுக்கோஅவனைக் காணும்ம் பாக்கியம் கிட்டியது. மேலும் அவனுடன் ஒன்றிணைய வாய்ப்பு கிடைத்தது. இவர்களது கணவர்களும் அதை அனுமதித்து அவனுடன் இரண்டறக் கலந்தால் அதைத் தொடர்ந்து நாங்களும் அவனுடன் கலந்து முக்தி பெறுவோம் என்று கூறுவார்களாம்.

      

வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்
     மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர் கோன்
     கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களி யானை மீதே
     கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்
     விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே.        1227

 

வண்டுகள் நிறைந்த நந்தவனங்களால் சூழப்பட்ட அழகான திருநாங்கூரில் உள்ள மணிமாடக் கோயிலில் அருள் புரியும் பெருமானுக்குப் பணிவிடை செய்வதையே விரும்பும் திருமங்கை நாட்டுத் தலைவரான கலியன் அருளிய தமிழ்ப் பாசுரங்களைப் பக்தியுடன் பாட வல்லவர்கள் காண்போர் அனைவரும் வணங்கும்படி யானைமீது அமர்ந்து இவ்வுலகினை ஆட்சி செய்து மகிழ்ந்திருப்பார்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.   

      திருநாங்கூர் மணிமாடக் கோவிலில் எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள ஆழ்வார் அருளிய இத்திருமொழியை கற்று ஓதவல்லவர்கள் ‘ஒரு நாயகமாய் ஓடவுலகுடனாண்டவர்’ என்று கூறுவது போல் அரசராகி இப்பூமியை ஆள்வார்கள். சிறு பிள்ளைகள் மருந்து உட்கொள்ள அடம் பிடிக்கும்போது வெல்லக்கட்டியை கொடுத்து உட்கொள்ளச் சொல்வார்கள். அது போன்று ஆழ்வார் இகலோக புருஷார்த்த சாதனங்களிலேயே ஊற்றமுடைய பிராகிருதர்களையும் இழுத்துப் பிடிக்க இவ்வாறு அருளிச் செய்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...