திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
‘மனம் கள்ளத்தனமான
செயல்களைச் செய்ய நினைக்கக் கூடாது என்று விரும்பிப் பரந்தாமன் திருவடிகளை வணங்க
எண்ணுபவர்களே! கடல் அலைகளால் ஏற்படும் வெள்ளம் கரைகளில் பரவ, அதனால் கொழிக்கப்பட்ட இரத்தினங்கள் நிறைந்த சிறுபுலியூரில்
சலசயனத்திலும், என் மனதிலும் உறையும் பகவானைத்
தியானியுங்கள்’ என்று கூறுகிறார் ஆழ்வார்.
நல்ல எண்ணங்கள் கொண்ட
மனத்தூய்மையும் சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும்
தான் இருக்கும் இனத்தின் தூய்மையால் சிந்தாமல் வரும். மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய
இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும். ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான்
அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும் என்று மனத்தூய்மை தொடர்பாகப்
பல்வேறு கருத்துக்கள் உள்ளன. நம்மில் செயல்கள் உருவாக மனம் காரணமாக உள்ளது.
தருமனின் மனம் தூய்மையாக இருந்தது. பகைவனுக்கும் அவர் அருள் புரிந்தார். துரியோதனன் சுயநலம் கொண்டவன். அதனால் அவன்
அழிந்தான். கள்ளத்தனமாக எண்ணங்கள் அவனிடம் இருந்தது. அதனால் பகவான் அவனை விட்டு
விலகினார். தெய்வம் நம் வசம் ஆக வேண்டுமானால் கள்ளத்தனத்தை விட்டுச் சிறுபுலியூர்
பெருமானை சரணடையுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.
‘வீதிகளில் திரிகின்ற, அற்பமான நோன்புகளைக் கடைப் பிடிக்கின்ற, சம்பா சோறும், கஞ்சியும் உண்ண ஆசை கொண்ட, வேதியர்களிடமிருந்து வேறுபட்ட சமணர் முதலானோர்களின் வாய்ப்
பேச்சுக்களை மதியாமல் பகவானை வந்தடையுங்கள். செல்வச் செழிப்புள்ள வைதீகர்கள்
நிறைந்த சிறுபுலியூர் சலசயனத்து வாமனனாய் அவதரித்த பெருமானின் திருப்பாதங்களை
தியானம் செய்வீர்’ என்கிறார் ஆழ்வார்.
சமண மதத்தவர்களுடைய சொற்களை மதியாமல் அவமதித்து விட்டுச் சிறுபுலியூர்ச்
சலசயனப் பெருமாளுடைய திருவடிகளைச் சிந்தை செய்மின் என்று விவேகிகளை நோக்கி
உபதேசிக்கின்றார். சமணமதத்தில் ப்ரஸித்தமாக ஒரு விரதம் உண்டு. அதாவது பெருஞ்சோறுண்ணுதல். (இது
வெஞ்சோறுண்ணுதல் எனவும் வேகு சோறுண்ணுதல் எனவும் கூறுவர். தயிர்ச்சோறு, செஞ்சோறு, கஞ்சிக்சோறு) என்றிப்படி
சில சோறுகளைத் தின்றுகொண்டு தெருக்களில் திரிந்து கொண்டிருப்பார்களாம், “தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை, மிடற்றிடை நெருக்குவார்” என்று கீழ் இரண்டாம் பத்திலும்
முதல் திருமொழியில் அருளிச்செய்யப்பட்டது. இப்படி, ஏதோ விரதஞ் செய்வதாகப் பேரிட்டுக் கொண்டு செஞ்சோற்றையும்
கஞ்சியையும் உட்கொண்டு தெருவில் திரிகின்ற வைதிககோஷ்டி பஹிஷ்டர்களின்
வாய்மொழிகளைத் திரஸ்கரித்து விட்டு வந்து உற்றது பற்றுங்கள் என்கிறார்.
திகம்பரர்கள் சுத்தமின்றி
அழுக்குடன் ஆடையின்றி திரிகிறார்கள். புறத்தில் தூய்மையற்றவர்கள் அகத்தில் தூய்மை
உடையவர்களாக எப்படி இருக்க முடியும். மேலும் தெய்வத்தைப் பற்றித் தெளிந்த
சிந்தனையின்றி மக்களைக் குழப்பி வருகிறார்கள். வேதம் படித்தவர்கள் நம்மில் பிரகாசிக்கும்
ஆத்ம தரிசனத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் நம்மைப் பகவானிடத்தில் அழைத்துச்
செல்வார்கள் என்ற பொருளில் அமைகிறது.
‘நிலையில்லா செயல்களுக்காக எவர்
எவரையோ வணங்கும் சிறுமை குணம் கொண்ட அடிமைகளே! நீங்கள் சிறுபுலியூர் சலசயனத்துப்
பெருமானைத் தொழுது பிழையுங்கள். அதனால் உங்கள் பாவங்கள் தொலையும். அலை வீசும்
நீரிலும், வயல்களிலும், தோட்டங்களிலும் சிறகினை விரித்துச் செல்லும் வண்டுகள்
ரீங்காரம் செய்யும் சிறுபுலியூர் பரந்தாமனின் திருவடியல்லாது மற்றொரு தெய்வத்தை
நான் அறியேன்’ என்கிறார் ஆழ்வார்.
சிற்றின்பங்களில் ஈடுபட்டுள்ள தொண்டர்களே! நீங்கள் பெருமானைத் தொழுது
உய்யுங்கள். பாவங்கள் தொலையும். ஒருபக்கம் ஒலிக்கின்ற நீரும், ஒருபக்கம் வயல்களும்,
ஒருபக்கம்
சோலைகளில் சிறகுகளையுடைய வண்டுகள் ரீ்ங்காரஞ் செய்யும் சிறுபுலியூர் சலசயனத்தில்
இருக்கும் பெருமானின் திருவடிகளைத் தவிர நான் வேறொன்றை சிறிதும் அறியேனே
என்கிறார்.
பணத்தை திரட்டுவது, சொத்துக்கள் சேர்ப்பது,
பட்டம்
பதவிகள் பெறுவது போன்ற நிலையற்ற அற்பபொருட்களுக்காகத் தகுதியற்றறமனிதர்களைத்
தொழுகிறோம். அடிமைத்தனம் துன்பத்தில் சேர்க்கும், அன்பு
வேறு அடிமைத்தனம் வேறு. பகவானிடம் நாம் கொண்டுள்ளது அன்பு. பகவான் நிலையான
பொருளைத் தந்து அடிமை விலங்கை உடைக்கிறார்.அவரைத் தரிசனம் செய்யுங்கள் என்பது
இப்பாசுரத்தின் பொருளாகும்.
தனது திருமேனியில் ஒரு பக்கத்தில் வானத்து சந்திரனைச் சடையில் மழுவேந்திய
சிவபெருமானோடும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அந்தராத்மாவாகத் திகழும் தலைவன்
சிறுபுலியூர் சலசயனம் என்னும் ஆலயத்தில் அருள் புரிகிறான். இத்தலம் தேன் நிறைந்த தோட்டங்கள் சூழ்ந்தது.
அங்கு வீற்றிருக்கும் கண்ணபிரானது திருவடியல்லாது அடியேன் வேறு ஒன்றையும் அறியேன்.
சிறு தொண்டர்களிடத்தில்
நம்முடைய உபதேசம் பலிப்பது அரிது என்று துணிந்து உபதேசத்தை நிறுத்தித் தமது
உறுதியையே இனி வெளியிட்டருளுகிறார். நம்முடைய உறுதியை
வெளியிட்டுக் கொண்டோமாகில் இது கேட்டு இவர்கள் திருந்தக்கூடும் என்று நினைத்து
அருளிச் செய்கிறார், “ஏறாளுமிறையோன் திசைமுகனுந்
திருமகளுங், கூறாளுந்தனியுடம்பன்” என்கிறபடியே
சிவனுக்குத் தன் திருமேனியிலே ஒரு கூறு கொடுத்திருப்பவனும் தேவேந்திரனுக்கு
அந்தர்யாமியாயிருந்து ஸ்வர்க்க லோகத்தை ஆள்பவனுமான சிறுபுலியூர்ச் சலசயனப்
பெருமானது திருவடிகளையன்றி மற்றொன்றும் அறிகின்றிலேன் என்கிறார்.
வலப்பக்கத்தில் சிவபெருமானின் அந்தராத்மாவாகப் பகவான் திகழ்கிறார் என்று
ஆழ்வார் குறிப்பிடுகிறார். சிவபெருமானும்
பகவானும் உடலும் உயிருமாக இணைந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. வாதங்கள் செய்து
கால விரயம் செய்வதைத் தவிர்த்து ஒரு தெய்வத்தை மனதில் நிறுத்தி நாம் அவனை அடைய
முயற்சித்தல் வேண்டும். ஆனால் சிலர் இதை விவாதமாகக் கொண்டு துன்பம் கொள்கிறார்கள்.
வேற்றுமைகளை மறந்து சாதனைகளில் மனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆழ்வார்
நல்வழி காட்டுகிறார்.
‘தேவர்கள் அனைவரும் ஒரு சேர
நந்தகுமாரா! என்று வணங்கித் தொழும் ஸ்தலம் அலையடிக்கும் நீர் நிலைகளில் செந்தாமரை
மலர்கள் பூத்திருக்கும் சிறுபுலியூராகும். அங்கே சலசயனத்தில் அழகிய தாமரை போன்ற
திருவடிகளுடன் பள்ளி கொண்ட பெருமானே! உனது அடியவனான என்னிடம் கருணை காட்ட வேண்டும்.
கொடிய நரகத்தில் நான் சேராதபடி அருள் புரிய வேண்டும்’ என்று ஆழ்வார் வேண்டுகிறார்.
தேவர்கள் நாள்தோறும் எம்பெருமானே! என்று சொல்லி அடிபணிந்து தொழுது
துதிக்குமிடம் அலைமோதும் நீர் நிலைகளிலே செந்தாமரை மலரும் சிறுபுலியூர்
சலசயனத்தில் அழகிய தாமரைபோலத் திருவடிகளை உடைய அழிவில்லாத பெரிய ஸம்ஸாரமான
நரகத்திலே நான் சேராதபடி உன் அடியேனான எனக்கு அருள் புரிய வேண்டும்
ஆழ்வார் குறிப்பிடும்
பெரிய நரகம் என்பது தீய எண்ணங்கள் ஆகும். இவையே தீவினைகளுக்கு காரணமாக உள்ளது.
வயல்களில் நெல்லுக்குப் பதில் முள் விதைத்தால் முள் செடிதான் விளையும். அது போன்று
நம் மனத்தில் தீய எண்ணங்களை விடுத்து நல்லெண்ணங்கள் விதைக்க வேண்டும். நம் மனதில்
நல்விதைகளைத் தூவுபவன் பகவான் தான். அவனது கருணையால்தான் நல்லெண்ணங்கள் நம் மனதில்
உருவாகுகின்றன. அந்தக் கருணை பெற திருசிறுபுலியூர் பெருமானின் பாதம் பணிய
வேண்டும்.
‘முழுமையான நீல நிறம் கொண்ட
நீலோற்பவமும், ஆம்பல் மலர்களும், தாமரைகளும், செங்கழுநீர் மலர்களும்
சேர்ந்து அழகிய பெண்களின் கண்களைப் போலவும்,
வாயைப்
போலவும், முகத்தைப் போலவும் மலர்கின்றன.
அத்தகைய செழுமையான நீர் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சிறுபுலியூர் சலசயனத்தை
வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர்களின் திருவடியைத் தொழுபவர்கள் துயரின்றி
வாழ்வார்கள்’ என்கிறார் ஆழ்வார்.
சிறுபுலியூரும் வேண்டா, அங்குள்ள சலசயனத் திருக்கோயிலும் வேண்டா, அதில் உள்ள பெருமானும் வேண்டா அத்திருக்கோயிலைத் தொழுவதையே
இயற்கையாகவுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவருளர், அவர் திருவடிகளே
சரணமென்றிருப்பார்க்குத் துயரெல்லாம் தொலைந்திடும் என்கிறார். அடியார்களின்
திருவடியே தனக்கு போதுமென்கிறார்.
நீலோற்பவங்களைப்
பார்த்தால் அவ்வூர்ப் பெண்களினுடைய கண்களாகவும், அரக்காம்பல்களைப்
பார்த்தால் அப்பெண்களது அதரமாகவும், தாமரைப்பூக்களைப்
பார்த்தால் அவர்களது முகங்களாகவும் விளங்குகின்றமையால் உள்வீதிகளுக்கும்
வெளிநிலங்களுக்கும் வாசிதெரிவரிதாம். சிறுபுலியூர் சலசயனத்தை தொழுபவர்களின்
திருவடிகளைத் தொழுபவர்கள் துக்கமற்றவர்கள் என்கிறார்.
பகவானின் அடியவர்களைத்
தொழுவது சிறந்தது என்று ஆழ்வார்கள் கூறியிருக்கிறார்கள். இராமானுஜரை பகவானின்
ரூபமாகவே கண்டனர் வைணவர்கள். அடியார்களின் தரிசனம் பகவானின் தரிசனம் போன்றது. இந்த
அற்புதமான ரகசியத்தை நாம் அறிதல் வேண்டும்.
அடியார்களின் திருவடிகளை வணங்குவது நம் துயர் போக்குவது போன்றதாகும். அவர்களை எக்காரணம் கொண்டும்
புண்படுத்திப் பாகவத அபச்சாரத்தைப் பெற்று விடக் கூடாது என்று கருத்தில்
இப்பாசுரம் அமைந்துள்ளது.
நெடிதுயர்ந்த குளிர்ச்சிமிக்க திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியுள்ள
மாயவனே! நீ நான்கு வேதங்களிலும் இருக்கிறாயா? யாகத்தின் அக்னியை வளர்க்கின்ற வேதியர்கள்
வாழும் சிறுபுலியூர்ச் சலசயன கோயிலில் இருக்கிறாயா? அல்லது
உனது அடியார்களின் நெஞ்சில் குடிகொண்டுள்ளாயா? என நான்
அறியேன். எனக்கு அதனைச் சொல்லியருள வேண்டும் என்று ஆழ்வார் வினவுகிறார்.
திருமாலே! நீ வேதங்களில் இருக்கின்றாயா? சிறுபுலியூர்ச் சலசயனக் கோயிலில்
இருக்கின்றாயா? அன்பர்தம் உள்ளத்தில் இருக்கின்றாயா? இன்னவிடத்தில் இருக்கின்றாயென்று தெரியவில்லை; அடியேனுக்கு
தெரியவருளிச் செய்யவேணுமென்கிறார். நால்வேதங்கள், சிறுபுலியூர்ச் சலசயனம், அடியார் மனம்
என்னுமிடங்களில் எல்லாமுள்ள எம்பெருமான் ஒருவனே என்று உண்மையை விளக்குதல்
இப்பாட்டின் உள்ளுறையாதலால் திருமாலிருஞ்சோலை மலையில் உறைபவனும் இவனே என்பது
அறியப்படும். சாஸ்த்ரங்களைக் கொண்டே
அறிய வேண்டிய அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹங்களையும், கண்ணால் கண்டு அநுபவிக்கலாம்படியான
அர்ச்சாரூபங்களையும், நெஞ்சாலே அநுபவிக்கலாம்படி
அந்தர்யாமியாயிருக்கும் வடிவுகளையும் ஒருகாலே ஸேவை ஸாதிப்பித்தபடியாலே கண்டு
ஆச்சரியப்படுகிறார் பெரியவாச்சான் பிள்ளை அவர்கள்.
வேதப் பொருளாக இருக்கும் பகவான் அதில் நிறைந்துள்ளார். வேதம் ஒலிக்கும்
ஹோமத்தில் உள்ளார். அன்பர்கள் நெஞ்சத்திலும் வீற்றிருக்கிறார். மேலும் அனைத்துப்
பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். எங்கும் திரிந்து செல்லாமல் சிறுபுலியூர்
சென்றால் இம்மூன்று இடங்களையும் பகவானைக் காண முடியும். இம்மண்ணுலகில் சொர்க்கம் என்பது வேத
மந்திரங்கள் ஒலிக்கும் திருக்கோயில்களே ஆகும். நரகம் என்பது அற்ப பொருள்களுள்ள
இடங்கள் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
மை அணிந்த ரேகைகளையுடைய, கரு நெய்தல் மலர் போன்ற கண்களைக் கொண்ட மங்கையரிடம் ஆசை
கொள்வதை விட்டு விட்டு என் பிறவி புனிதமடைய உன் திருவடிகளை வணங்கி நிற்கிறேன்.
கிளியானது பெண்களின் சிவந்த வாயிலிருந்து வரும் சொற்களைச் சொல்லி மொழி பயிலும்
சிறுபுலியூர் சலசயனத்தில் ஐந்து வாய்களையுடைய அனந்தாழ்வான் மீது பள்ளிகொண்ட
தூயவனே! என்னிடம் கருணை காட்ட வேண்டும்
என்று வேண்டுகிறார் ஆழ்வார்.
கிளிகள் பெண்களின் சிவந்த
வாயிலிருந்து வரும் சொற்களைப் பயிலும் சிறுபுலியூர் சல சயனத்தில் ஐந்து வாயையுடைய
ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் அமலனே! கரு நெய்தல் பூ அணிந்த பெண்களின் மீது
ஆசையை விட்டு உய்வதற்காக உன் திருவடிகளை வணங்கித் தொழுகிறேன் அருள் புரிய வேண்டும்
என்கிறார்.
தியாகமின்றி எந்த விடுதலையும் பெற முடியாது. பெண்களின் இன்பம், இறைவனின் கருணை இவை ஓருசேரக் கிடைக்காது. பெண் தருவது சிற்றின்பம்,
பகவான் அளிப்பது பேரின்பம். கல்லை ஒதுக்கித் தங்கமும், மண்ணை ஒதுக்கி வைரமும் பெறுவது போன்று பெண்ணாசை விட்டால்தான் இறைவனின்
காட்சி கிடைக்கும். இக்கருத்தினைப் புரிந்து இத்தகைய மயக்கத்திலிருந்து தம்மை
விடுவிக்குமாறு ஆழ்வார் வேண்டுகிறார்.
‘கரிய, பெரிய மேகத்ததின் நிறத்தைக் கொண்டவனே! நெருப்பு போன்ற
வடிவினைக் கொடண்டவனே! நீர் போன்ற
குளிர்ச்சியை உடையவனே! பெரிய மலை போன்ற வடிவம் கொண்டவனே! எல்லாப் பொருளிலும்
இருப்பவனே! உனக்கென்று விஷ்ணு உருவம்
கொண்டவனே! மகாலட்சுமி கொலுவிருக்கும் சிறுபுலியூர் சலசயனத்து கடலமுதே! உனது
திருவடிகளே எனக்குப் புகலிடமாகும்’ என்று கூறுகிறார் ஆழ்வார்.
இப்பாசுரத்தின் இனிமை கனிந்த நெஞ்சினரால் நன்கு அனுபவிக்கத்தக்கது. ஆழ்வார் தமது உள்ளன்பானது நன்கு விளங்க எம்பெருமானை வாயார
விளிக்கின்றார். காணும்போதே ஸகல தாபமும் தீரும்படி பெரிய காளமேகம் போன்ற
திருவுருவத்தை உடையவனே! தீயபுத்தியை உடைய கம்ஸன் போல்வார்க்குக் கிட்டவொண்ணாதபடி
நெருப்புப் போன்றிருப்பவனே! அக்ரூரர், விதுரர், மாலாகாரர் போன்றவாரான மெய்யன்பர்களுக்குத் தண்ணீர் போலே
விரும்பத் தக்க ரூபத்தை யுடையவனே! மலைபோல் எல்லைகாண வொண்ணாத ப்ரகாரத்தை யுடையவனே! “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய், சீரார் சுடர்களிரண்டாய் சிவனாயயனானாய்” “தாயாய்த் தந்தையாய்
மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்” இத்யாதிப்படியே எல்லா வடிவுமானவனே! இப்படி ஜகதாகாரனாக
இருப்பதுந் தவிர “கூராராழி வெண்சங்கேந்தி” என்கிற அஸாதாரண வடிவுகளையும் உடையவனே!
பெரிய பிராட்டியார் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சிறுபுலியூர்ச் சலசயனத்துப்
பரமபோக்யனே! உன் திருவடிகளே சரணம் என்கிறார்.
உலகமே பகவானின்
உருவம்தான். ஆனால் இரண்டும் வேறு வேறு என்று நாம் நினைப்பதால்தான் துன்பம் நம்மைத்
தொடருகிறது. நம் சகோதர மக்களை எதிரிகளாக நினைக்கிறோம். வேறுபாடுகளை வளர்த்துக்
கொள்வதால்தான் இத்தகைய அவல நிலையை நாம் எதிர்கொள்கிறோம். அனைத்தும் கடவுள் மயம்
என்ற நிலையினை நாம் கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் நம்மைத் துன்பம்
நெருங்காது என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.
சிறப்புமிக்க நீண்ட வீதிகளையுடைய சிறுபுலியூரில் சலசயனத் திருக்கோயிலில் அருள்
புரியும் எழில்மிக்க மேக நிறத்தவனாகிய தேவர் தலைவனை, கரிய
வயல்கள் நிறைந்த திருமங்கை நாட்டுத் தலைவனான கலியன் இயற்றிய இப்பாசுரங்களை
மண்ணுலகில் உள்ளவர்கள் பயின்று வணங்கி வந்தால் அவர்களைப் பாவம் நெருங்காது என்று
கூறுகிறார் ஆழ்வார்.
நீண்ட திருவீதிகளையுடைய சிறுபுலியூர் சலசயனத்திலிருக்கும் அழகிய மேகம் போன்ற
நிறமுடையவனை தேவர்களின் தலைவனைக் குறித்து, கருத்த வயல்களையுடைய திருமங்கைக்கு
தலைவரான திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களை உலகத்தவர்கள் அனுஸந்தித்து
தொழுமளவில் பாவம் நில்லாதே என்றார்.
இப்பத்து பாசுரங்கள்
அனைத்தும் பகவானின் பெருமைகளைப் பறைசாற்றின. பெண் மயக்கத்திலிருந்து விடுபட
வேண்டும், ஐம்புலன்களை அடக்கியாள வேண்டும், பகவான் நீக்கமற
நிறைந்துள்ளான் என்ற நினைவில் வாழுதல் வேண்டும் போன்ற அரிய கருத்துக்களை ஆழ்வார்
தெரிவித்துள்ளார். உண்மை மொழிகள் ஒலிக்கும்போது பொய்யுரைகள் புறமுதுகிட்டு
ஓடிடும். அது போன்று ஆழ்வாரின் ஞான மொழிகளை நாம் கடைபிடித்தால் நமது பாவ மூட்டைகள்
எரிந்து சாம்பலாகும் என்பது இதன் கருத்தாகும்.