வியாழன், 18 டிசம்பர், 2025

24. திருசிறுபுலியூர்

 



திருமங்கையாழ்வார்                                                                         பெரிய திருமொழி

      

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரிய கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே.      1628

 

      மனம் கள்ளத்தனமான செயல்களைச் செய்ய நினைக்கக் கூடாது என்று விரும்பிப் பரந்தாமன் திருவடிகளை வணங்க எண்ணுபவர்களே! கடல் அலைகளால் ஏற்படும் வெள்ளம் கரைகளில் பரவ, அதனால் கொழிக்கப்பட்ட இரத்தினங்கள் நிறைந்த சிறுபுலியூரில் சலசயனத்திலும், என் மனதிலும் உறையும் பகவானைத் தியானியுங்கள்’ என்று கூறுகிறார் ஆழ்வார்.   

      நல்ல எண்ணங்கள் கொண்ட மனத்தூய்மையும் சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும் தான் இருக்கும் இனத்தின் தூய்மையால் சிந்தாமல் வரும். மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும். ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும் என்று மனத்தூய்மை தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. நம்மில் செயல்கள் உருவாக மனம் காரணமாக உள்ளது. தருமனின் மனம் தூய்மையாக இருந்தது. பகைவனுக்கும் அவர் அருள் புரிந்தார்.  துரியோதனன் சுயநலம் கொண்டவன். அதனால் அவன் அழிந்தான். கள்ளத்தனமாக எண்ணங்கள் அவனிடம் இருந்தது. அதனால் பகவான் அவனை விட்டு விலகினார். தெய்வம் நம் வசம் ஆக வேண்டுமானால் கள்ளத்தனத்தை விட்டுச் சிறுபுலியூர் பெருமானை சரணடையுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ் சோற்றொடு கஞ்சி
மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின் உணர்வீரே.      1629

 

வீதிகளில் திரிகின்ற, அற்பமான நோன்புகளைக் கடைப் பிடிக்கின்ற, சம்பா சோறும், கஞ்சியும் உண்ண ஆசை கொண்ட, வேதியர்களிடமிருந்து வேறுபட்ட சமணர் முதலானோர்களின் வாய்ப் பேச்சுக்களை மதியாமல் பகவானை வந்தடையுங்கள். செல்வச் செழிப்புள்ள வைதீகர்கள் நிறைந்த சிறுபுலியூர் சலசயனத்து வாமனனாய் அவதரித்த பெருமானின் திருப்பாதங்களை தியானம் செய்வீர்’ என்கிறார் ஆழ்வார்.

சமண மதத்தவர்களுடைய சொற்களை மதியாமல் அவமதித்து விட்டுச் சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமாளுடைய திருவடிகளைச் சிந்தை செய்மின் என்று விவேகிகளை நோக்கி உபதேசிக்கின்றார்.  சமணமதத்தில் ப்ரஸித்தமாக ஒரு விரதம் உண்டு. அதாவது பெருஞ்சோறுண்ணுதல்.  (இது வெஞ்சோறுண்ணுதல் எனவும் வேகு சோறுண்ணுதல் எனவும் கூறுவர். தயிர்ச்சோறு, செஞ்சோறு, கஞ்சிக்சோறு) என்றிப்படி சில சோறுகளைத் தின்றுகொண்டு தெருக்களில் திரிந்து கொண்டிருப்பார்களாம், “தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை, மிடற்றிடை நெருக்குவார்” என்று கீழ் இரண்டாம் பத்திலும் முதல் திருமொழியில் அருளிச்செய்யப்பட்டது.  இப்படி, ஏதோ விரதஞ் செய்வதாகப் பேரிட்டுக் கொண்டு செஞ்சோற்றையும் கஞ்சியையும் உட்கொண்டு தெருவில் திரிகின்ற வைதிககோஷ்டி பஹிஷ்டர்களின் வாய்மொழிகளைத் திரஸ்கரித்து விட்டு வந்து உற்றது பற்றுங்கள் என்கிறார்.

      திகம்பரர்கள் சுத்தமின்றி அழுக்குடன் ஆடையின்றி திரிகிறார்கள். புறத்தில் தூய்மையற்றவர்கள் அகத்தில் தூய்மை உடையவர்களாக எப்படி இருக்க முடியும். மேலும் தெய்வத்தைப் பற்றித் தெளிந்த சிந்தனையின்றி மக்களைக் குழப்பி வருகிறார்கள். வேதம் படித்தவர்கள் நம்மில் பிரகாசிக்கும் ஆத்ம தரிசனத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் நம்மைப் பகவானிடத்தில் அழைத்துச் செல்வார்கள் என்ற பொருளில் அமைகிறது.

      

பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒருபால் வயல் ஒருபால் பொழில் ஒருபால்
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே.      1630

 

நிலையில்லா செயல்களுக்காக எவர் எவரையோ வணங்கும் சிறுமை குணம் கொண்ட அடிமைகளே! நீங்கள் சிறுபுலியூர் சலசயனத்துப் பெருமானைத் தொழுது பிழையுங்கள். அதனால் உங்கள் பாவங்கள் தொலையும். அலை வீசும் நீரிலும், வயல்களிலும், தோட்டங்களிலும் சிறகினை விரித்துச் செல்லும் வண்டுகள் ரீங்காரம் செய்யும் சிறுபுலியூர் பரந்தாமனின் திருவடியல்லாது மற்றொரு தெய்வத்தை நான் அறியேன்’ என்கிறார் ஆழ்வார்.

சிற்றின்பங்களில் ஈடுபட்டுள்ள தொண்டர்களே! நீங்கள் பெருமானைத் தொழுது உய்யுங்கள். பாவங்கள் தொலையும். ஒருபக்கம் ஒலிக்கின்ற நீரும், ஒருபக்கம் வயல்களும், ஒருபக்கம் சோலைகளில் சிறகுகளையுடைய வண்டுகள் ரீ்ங்காரஞ் செய்யும் சிறுபுலியூர் சலசயனத்தில் இருக்கும் பெருமானின் திருவடிகளைத் தவிர நான் வேறொன்றை சிறிதும் அறியேனே என்கிறார்.

      பணத்தை திரட்டுவது, சொத்துக்கள் சேர்ப்பது, பட்டம் பதவிகள் பெறுவது போன்ற நிலையற்ற அற்பபொருட்களுக்காகத் தகுதியற்றறமனிதர்களைத் தொழுகிறோம். அடிமைத்தனம் துன்பத்தில் சேர்க்கும், அன்பு வேறு அடிமைத்தனம் வேறு. பகவானிடம் நாம் கொண்டுள்ளது அன்பு. பகவான் நிலையான பொருளைத் தந்து அடிமை விலங்கை உடைக்கிறார்.அவரைத் தரிசனம் செய்யுங்கள் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.

      

வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால்
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம்
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே.   1631

 

தனது திருமேனியில் ஒரு பக்கத்தில் வானத்து சந்திரனைச் சடையில் மழுவேந்திய சிவபெருமானோடும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அந்தராத்மாவாகத் திகழும் தலைவன் சிறுபுலியூர் சலசயனம் என்னும் ஆலயத்தில் அருள் புரிகிறான்.  இத்தலம் தேன் நிறைந்த தோட்டங்கள் சூழ்ந்தது. அங்கு வீற்றிருக்கும் கண்ணபிரானது திருவடியல்லாது அடியேன் வேறு ஒன்றையும் அறியேன்.

சிறு தொண்டர்களிடத்தில் நம்முடைய உபதேசம் பலிப்பது அரிது என்று துணிந்து உபதேசத்தை நிறுத்தித் தமது உறுதியையே இனி வெளியிட்டருளுகிறார்.  நம்முடைய உறுதியை வெளியிட்டுக் கொண்டோமாகில் இது கேட்டு இவர்கள் திருந்தக்கூடும் என்று நினைத்து அருளிச் செய்கிறார், “ஏறாளுமிறையோன் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந்தனியுடம்பன்”  என்கிறபடியே சிவனுக்குத் தன் திருமேனியிலே ஒரு கூறு கொடுத்திருப்பவனும் தேவேந்திரனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்வர்க்க லோகத்தை ஆள்பவனுமான சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமானது திருவடிகளையன்றி மற்றொன்றும் அறிகின்றிலேன் என்கிறார்.

      வலப்பக்கத்தில் சிவபெருமானின் அந்தராத்மாவாகப் பகவான் திகழ்கிறார் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.  சிவபெருமானும் பகவானும் உடலும் உயிருமாக இணைந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. வாதங்கள் செய்து கால விரயம் செய்வதைத் தவிர்த்து ஒரு தெய்வத்தை மனதில் நிறுத்தி நாம் அவனை அடைய முயற்சித்தல் வேண்டும். ஆனால் சிலர் இதை விவாதமாகக் கொண்டு துன்பம் கொள்கிறார்கள். வேற்றுமைகளை மறந்து சாதனைகளில் மனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆழ்வார் நல்வழி காட்டுகிறார்.

      

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்ச்
செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே.        1632

 

தேவர்கள் அனைவரும் ஒரு சேர நந்தகுமாரா! என்று வணங்கித் தொழும் ஸ்தலம் அலையடிக்கும் நீர் நிலைகளில் செந்தாமரை மலர்கள் பூத்திருக்கும் சிறுபுலியூராகும். அங்கே சலசயனத்தில் அழகிய தாமரை போன்ற திருவடிகளுடன் பள்ளி கொண்ட பெருமானே! உனது அடியவனான என்னிடம் கருணை காட்ட வேண்டும். கொடிய நரகத்தில் நான் சேராதபடி அருள் புரிய வேண்டும்’ என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

தேவர்கள் நாள்தோறும் எம்பெருமானே! என்று சொல்லி அடிபணிந்து தொழுது துதிக்குமிடம் அலைமோதும் நீர் நிலைகளிலே செந்தாமரை மலரும் சிறுபுலியூர் சலசயனத்தில் அழகிய தாமரைபோலத் திருவடிகளை உடைய அழிவில்லாத பெரிய ஸம்ஸாரமான நரகத்திலே நான் சேராதபடி உன் அடியேனான எனக்கு அருள் புரிய வேண்டும்

      ஆழ்வார் குறிப்பிடும் பெரிய நரகம் என்பது தீய எண்ணங்கள் ஆகும். இவையே தீவினைகளுக்கு காரணமாக உள்ளது. வயல்களில் நெல்லுக்குப் பதில் முள் விதைத்தால் முள் செடிதான் விளையும். அது போன்று நம் மனத்தில் தீய எண்ணங்களை விடுத்து நல்லெண்ணங்கள் விதைக்க வேண்டும். நம் மனதில் நல்விதைகளைத் தூவுபவன் பகவான் தான். அவனது கருணையால்தான் நல்லெண்ணங்கள் நம் மனதில் உருவாகுகின்றன. அந்தக் கருணை பெற திருசிறுபுலியூர் பெருமானின் பாதம் பணிய வேண்டும்.

      

முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி
கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும்
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழு நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே.       1633

 

முழுமையான நீல நிறம் கொண்ட நீலோற்பவமும், ஆம்பல் மலர்களும், தாமரைகளும், செங்கழுநீர் மலர்களும் சேர்ந்து அழகிய பெண்களின் கண்களைப் போலவும், வாயைப் போலவும், முகத்தைப் போலவும் மலர்கின்றன. அத்தகைய செழுமையான நீர் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சிறுபுலியூர் சலசயனத்தை வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர்களின் திருவடியைத் தொழுபவர்கள் துயரின்றி வாழ்வார்கள்’ என்கிறார் ஆழ்வார்.

சிறுபுலியூரும் வேண்டா, அங்குள்ள சலசயனத் திருக்கோயிலும் வேண்டா, அதில் உள்ள பெருமானும் வேண்டா அத்திருக்கோயிலைத் தொழுவதையே இயற்கையாகவுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவருளர், அவர் திருவடிகளே சரணமென்றிருப்பார்க்குத் துயரெல்லாம் தொலைந்திடும் என்கிறார். அடியார்களின் திருவடியே தனக்கு போதுமென்கிறார்.

நீலோற்பவங்களைப் பார்த்தால் அவ்வூர்ப் பெண்களினுடைய கண்களாகவும், அரக்காம்பல்களைப் பார்த்தால் அப்பெண்களது அதரமாகவும், தாமரைப்பூக்களைப் பார்த்தால் அவர்களது முகங்களாகவும் விளங்குகின்றமையால் உள்வீதிகளுக்கும் வெளிநிலங்களுக்கும் வாசிதெரிவரிதாம். சிறுபுலியூர் சலசயனத்தை தொழுபவர்களின் திருவடிகளைத் தொழுபவர்கள் துக்கமற்றவர்கள் என்கிறார்.

      பகவானின் அடியவர்களைத் தொழுவது சிறந்தது என்று ஆழ்வார்கள் கூறியிருக்கிறார்கள். இராமானுஜரை பகவானின் ரூபமாகவே கண்டனர் வைணவர்கள். அடியார்களின் தரிசனம் பகவானின் தரிசனம் போன்றது. இந்த அற்புதமான ரகசியத்தை நாம் அறிதல் வேண்டும்.  அடியார்களின் திருவடிகளை வணங்குவது நம் துயர் போக்குவது  போன்றதாகும். அவர்களை எக்காரணம் கொண்டும் புண்படுத்திப் பாகவத அபச்சாரத்தைப் பெற்று விடக் கூடாது என்று கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

      

சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்கு உரையாய் இது மறை நான்கின் உளாயோ?
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ? உனது அடியார் மனத்தாயோ? அறியேனே.       1634

 

நெடிதுயர்ந்த குளிர்ச்சிமிக்க திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியுள்ள மாயவனே! நீ நான்கு வேதங்களிலும் இருக்கிறாயா? யாகத்தின் அக்னியை வளர்க்கின்ற வேதியர்கள் வாழும் சிறுபுலியூர்ச் சலசயன கோயிலில் இருக்கிறாயா? அல்லது உனது அடியார்களின் நெஞ்சில் குடிகொண்டுள்ளாயா? என நான் அறியேன். எனக்கு அதனைச் சொல்லியருள வேண்டும் என்று ஆழ்வார் வினவுகிறார்.

திருமாலே! நீ வேதங்களில் இருக்கின்றாயா? சிறுபுலியூர்ச் சலசயனக் கோயிலில் இருக்கின்றாயா? அன்பர்தம் உள்ளத்தில் இருக்கின்றாயா? இன்னவிடத்தில் இருக்கின்றாயென்று தெரியவில்லை; அடியேனுக்கு தெரியவருளிச் செய்யவேணுமென்கிறார். நால்வேதங்கள், சிறுபுலியூர்ச் சலசயனம், அடியார் மனம் என்னுமிடங்களில் எல்லாமுள்ள எம்பெருமான் ஒருவனே என்று உண்மையை விளக்குதல் இப்பாட்டின் உள்ளுறையாதலால் திருமாலிருஞ்சோலை மலையில் உறைபவனும் இவனே என்பது அறியப்படும்.  சாஸ்த்ரங்களைக் கொண்டே அறிய வேண்டிய அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹங்களையும், கண்ணால் கண்டு அநுபவிக்கலாம்படியான அர்ச்சாரூபங்களையும், நெஞ்சாலே அநுபவிக்கலாம்படி அந்தர்யாமியாயிருக்கும் வடிவுகளையும் ஒருகாலே ஸேவை ஸாதிப்பித்தபடியாலே கண்டு ஆச்சரியப்படுகிறார் பெரியவாச்சான் பிள்ளை அவர்கள்.

      வேதப் பொருளாக இருக்கும் பகவான் அதில் நிறைந்துள்ளார். வேதம் ஒலிக்கும் ஹோமத்தில் உள்ளார். அன்பர்கள் நெஞ்சத்திலும் வீற்றிருக்கிறார். மேலும் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். எங்கும் திரிந்து செல்லாமல் சிறுபுலியூர் சென்றால் இம்மூன்று இடங்களையும் பகவானைக் காண முடியும்.  இம்மண்ணுலகில் சொர்க்கம் என்பது வேத மந்திரங்கள் ஒலிக்கும் திருக்கோயில்களே ஆகும். நரகம் என்பது அற்ப பொருள்களுள்ள இடங்கள் என்ற கருத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

      

மை ஆர் வரி நீலம் மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஐ வாய் அரவு அணைமேல் உறை அமலா அருளாயே.        1635

 

மை அணிந்த ரேகைகளையுடைய, கரு நெய்தல் மலர் போன்ற கண்களைக் கொண்ட மங்கையரிடம் ஆசை கொள்வதை விட்டு விட்டு என் பிறவி புனிதமடைய உன் திருவடிகளை வணங்கி நிற்கிறேன். கிளியானது பெண்களின் சிவந்த வாயிலிருந்து வரும் சொற்களைச் சொல்லி மொழி பயிலும் சிறுபுலியூர் சலசயனத்தில் ஐந்து வாய்களையுடைய அனந்தாழ்வான் மீது பள்ளிகொண்ட தூயவனே! என்னிடம் கருணை  காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.

கிளிகள் பெண்களின் சிவந்த வாயிலிருந்து வரும் சொற்களைப் பயிலும் சிறுபுலியூர் சல சயனத்தில் ஐந்து வாயையுடைய ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் அமலனே! கரு நெய்தல் பூ அணிந்த பெண்களின் மீது ஆசையை விட்டு உய்வதற்காக உன் திருவடிகளை வணங்கித் தொழுகிறேன் அருள் புரிய வேண்டும் என்கிறார்.

      தியாகமின்றி எந்த விடுதலையும் பெற முடியாது. பெண்களின் இன்பம், இறைவனின் கருணை இவை ஓருசேரக் கிடைக்காது. பெண் தருவது சிற்றின்பம், பகவான் அளிப்பது பேரின்பம். கல்லை ஒதுக்கித் தங்கமும், மண்ணை ஒதுக்கி வைரமும் பெறுவது போன்று பெண்ணாசை விட்டால்தான் இறைவனின் காட்சி கிடைக்கும். இக்கருத்தினைப் புரிந்து இத்தகைய மயக்கத்திலிருந்து தம்மை விடுவிக்குமாறு ஆழ்வார் வேண்டுகிறார்.

      

கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே.       1636

 

கரிய, பெரிய மேகத்ததின் நிறத்தைக் கொண்டவனே! நெருப்பு போன்ற வடிவினைக் கொடண்டவனே!  நீர் போன்ற குளிர்ச்சியை உடையவனே! பெரிய மலை போன்ற வடிவம் கொண்டவனே! எல்லாப் பொருளிலும் இருப்பவனே!  உனக்கென்று விஷ்ணு உருவம் கொண்டவனே! மகாலட்சுமி கொலுவிருக்கும் சிறுபுலியூர் சலசயனத்து கடலமுதே! உனது திருவடிகளே எனக்குப் புகலிடமாகும்’ என்று கூறுகிறார் ஆழ்வார்.

இப்பாசுரத்தின் இனிமை கனிந்த நெஞ்சினரால் நன்கு அனுபவிக்கத்தக்கது.  ஆழ்வார் தமது உள்ளன்பானது நன்கு விளங்க எம்பெருமானை வாயார விளிக்கின்றார்.  காணும்போதே ஸகல தாபமும் தீரும்படி பெரிய காளமேகம் போன்ற திருவுருவத்தை உடையவனே! தீயபுத்தியை உடைய கம்ஸன் போல்வார்க்குக் கிட்டவொண்ணாதபடி நெருப்புப் போன்றிருப்பவனே! அக்ரூரர், விதுரர், மாலாகாரர் போன்றவாரான மெய்யன்பர்களுக்குத் தண்ணீர் போலே விரும்பத் தக்க ரூபத்தை யுடையவனே! மலைபோல் எல்லைகாண வொண்ணாத ப்ரகாரத்தை யுடையவனே! நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய், சீரார் சுடர்களிரண்டாய் சிவனாயயனானாய்” “தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்” இத்யாதிப்படியே எல்லா வடிவுமானவனே! இப்படி ஜகதாகாரனாக இருப்பதுந் தவிர “கூராராழி வெண்சங்கேந்தி” என்கிற அஸாதாரண வடிவுகளையும் உடையவனே! பெரிய பிராட்டியார் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சிறுபுலியூர்ச் சலசயனத்துப் பரமபோக்யனே! உன் திருவடிகளே சரணம் என்கிறார்.

      உலகமே பகவானின் உருவம்தான். ஆனால் இரண்டும் வேறு வேறு என்று நாம் நினைப்பதால்தான் துன்பம் நம்மைத் தொடருகிறது. நம் சகோதர மக்களை எதிரிகளாக நினைக்கிறோம். வேறுபாடுகளை வளர்த்துக் கொள்வதால்தான் இத்தகைய அவல நிலையை நாம் எதிர்கொள்கிறோம். அனைத்தும் கடவுள் மயம் என்ற நிலையினை நாம் கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் நம்மைத் துன்பம் நெருங்காது என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.

      

சீர் ஆர் நெடு மறுகில் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஏர் ஆர் முகில் வண்ணன் தனை இமையோர் பெருமானை
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே.        1637 
 

சிறப்புமிக்க நீண்ட வீதிகளையுடைய சிறுபுலியூரில் சலசயனத் திருக்கோயிலில் அருள் புரியும் எழில்மிக்க மேக நிறத்தவனாகிய தேவர் தலைவனை, கரிய வயல்கள் நிறைந்த திருமங்கை நாட்டுத் தலைவனான கலியன் இயற்றிய இப்பாசுரங்களை மண்ணுலகில் உள்ளவர்கள் பயின்று வணங்கி வந்தால் அவர்களைப் பாவம் நெருங்காது என்று கூறுகிறார் ஆழ்வார்.

நீண்ட திருவீதிகளையுடைய சிறுபுலியூர் சலசயனத்திலிருக்கும் அழகிய மேகம் போன்ற நிறமுடையவனை தேவர்களின் தலைவனைக் குறித்து, கருத்த வயல்களையுடைய திருமங்கைக்கு தலைவரான திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களை உலகத்தவர்கள் அனுஸந்தித்து தொழுமளவில் பாவம் நில்லாதே என்றார்.

      இப்பத்து பாசுரங்கள் அனைத்தும் பகவானின் பெருமைகளைப் பறைசாற்றின. பெண் மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும், ஐம்புலன்களை அடக்கியாள வேண்டும்,  பகவான் நீக்கமற நிறைந்துள்ளான் என்ற நினைவில் வாழுதல் வேண்டும் போன்ற அரிய கருத்துக்களை ஆழ்வார் தெரிவித்துள்ளார். உண்மை மொழிகள் ஒலிக்கும்போது பொய்யுரைகள் புறமுதுகிட்டு ஓடிடும். அது போன்று ஆழ்வாரின் ஞான மொழிகளை நாம் கடைபிடித்தால் நமது பாவ மூட்டைகள் எரிந்து சாம்பலாகும் என்பது இதன் கருத்தாகும்.


25. தலைச்சங்க நாண்மதியம்


 

திருமங்கையாழ்வார்                                                                     பெரிய திருமொழி

      

கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் 

தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்கமேல் திசையுள் 

விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை 

கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ.     1736

 

      நோக்கிய விழிகளை மீட்டெடுக்காதபடி காட்சி தரும் திருக்கண்ணபுரத்திலும், சோளிங்கபுரத்திலும், மணமுள்ள குளிர்ச்சியான தாமரை மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த தலைச்சங்கத்தில்  மேற்கு திசையில் வானவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் சந்திரன் போன்றவனை,  காலை நேரக் கதிரவனை, அடியேனின் கண்கள் கண்ணார தரிசித்து மகிழும் நாள் எந்நாளோ என்று ஆழ்வார் கூறுகிறார்.

      மேற்குத் திசையி்ல் வானவர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் சந்திரன் போன்றவனே! நான் திருப்தியடையும்படி தரிசித்து மகிழும் நாள் என்று வருமோ? என்று ஆழ்வார் வினவுகிறார். நாம் காணும் காட்சிகள் நிலையற்றது என்று அறியாமல் ஏமாந்து துன்பம் அடைகிறோம். மனம் போன போக்கில் நாம் செல்கிறோம். அதனால் மோகமும், காமமும், பணப்பித்தும் நம்மைச் சீர்குலைக்கின்றன. ஒருநாள் மரணமும் நம்மை வந்து சேர்கின்றது. போகத்தில் வாழ்ந்தவர்கள் நற்கதியை எவ்விதம் அடைய முடியும்? எனவே நாளும் நம் மனதை பெருமானின் பாதக்கமலங்களில் பதிக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்தாகும்.

      சோழநாட்டுத் திருப்பதிகளுள் ‘தலைச்சங்க நாண்மதியம்’ என்பது ஒரு திருப்பதி.  (திருநாங்கூர் சமீபத்திலுள்ளது.) அங்குள்ள எம்பெருமானுக்கு ‘நாண்மதியப் பெருமாள்’ என்று திருநாமம்.  சிறந்த திருச்சங்கையேந்திய, நாண்மதியப் பெருமானையுடைய தலமாதலால் தலைச்சங்க நாண்மதியம் என்று திருநாமமென்பர்.  இது ‘தலைச்சங்காடு’ என்று வழங்கப்படும். தலைச்சங்கநாடு’ என்பது மருவிற்றுப் போலும்.  தலைச்சங்கப் பெருமாளுடைய இருப்பிட மென்றவாறு. கைப்பால் அலைச்சங்கமேந்த மணியரங்கத் தம்மான், தலைச்சங்க நாண்மதியத் தான்” என்பது பிள்ளை பெருமாள் ஐயங்காரது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதிப் பாசுரம். 


26. திருஇந்தளூர்

 


திருமங்கையாழ்வார்                                                                      பெரிய திருமொழி      

 நும்மைத் தொழுதோம் நும் தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆ ஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே?       1328

 

திரு இந்தளூரில் கோயில் கொண்டிருக்கும் பரிமள ரங்கநாதரே! தேவரீரை தாழ்ந்து வணங்கினோம். உமக்குச் சேவை செய்தே உயிர்  வாழும் தொண்டர்களாக இருக்கின்றோம். இப்பிறப்பிலே உம்மைப் பற்றின உணர்வாகிற ஆனந்தத்தைப் பெற்றிருக்கிறோம்.  இவ்விதமான எங்கள் விஷயத்தில் ஐயோ என்று மனமிரங்கி விரைவில் ஏதேனும் ஒரு கைங்கரியத்தை விரைவாக உண்டாக்கி தங்களை ஒருமுறையாவது தரிசிக்கும்படி செய்தால் நாங்கள் பிழைக்க மாட்டோமா என்று ஆழ்வார் கூறுகிறார்.

பெருவிடாய்ப்பட்டவன் ஒருகால் நாக்கு நனைக்கத் துளிதீர்த்தம் கிடைத்தால் போதும் என்பதுபோல இவ்வாழ்வார் திருவிந்தளூர்ப் பெருமானுடைய வடிவழகை ஒருகால் காணப்பெற்றால் போதுமென்கிறார்.  ஒருகால் கண்ட மாத்திரத்தில் தமக்குப் பூரணத்ருப்தி பிறந்துவிடும் என்று பொருளான்று; கண்ணில் சிறிது காணப்பெறுவோமாகில் பிறகு வளைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தாம்.

      மிகுந்த தாகம் கொண்டவன் நாக்கு நனைக்க ஒரு துளி நீர் கிடைக்குமா என்று தவிப்பது போல் ஆழ்வார் இந்தளூர் பெருமானின் வடிவழகை ஒரு நிமிடம் காணப்பெற்றால் அந்த ஒரு கணத்தில் பெருமாளைத் தனதாக்கிக் கொள்ளலாம் என்று கூறுகிறார். பகவானைக் காண்பது என்பது அவனுக்கு நாம் செய்யும் சேவையின் மூலமாக அவனை அடைவதாகும். அந்தச் சேவையை நமக்கு அளிப்பது பகவானின் விருப்பமாகும்.  நமது பக்குவ நிலையினை அறிந்து, நம் உள்ளத்தினை நன்கு உணர்ந்தபின் அத்தகைய சேவையினை பகவான் நமக்கு அளிப்பார். மனமென்னும் திருக்கோயிலை தூய்மையாக வைத்திருந்தால் அத்தகைய சேவையைப் பகவானே நமக்கு அளிப்பான் என்பது இதன் கருத்தாகும்.

      

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே.        1329

 

உள்ளத்தை விட்டு ஒரு நொடிப் பொழுதும் நீங்காதிருக்கும் என் செல்வமே! அனுபவிக்க அனுபவிக்க இன்பமாக இருக்கின்ற தேவகி மைந்தனே! அழகிய குளிர்ந்த திருவாலிநகர் மணாளனே! திருமாலிருஞ் சோலையில் உலாவி வரும் யானைக் கன்று போன்றவனே!  என்றும் அணையாத தீபச்சுடரே! திருநறையூரில் அருள் புரியும் பரிபூர்ணனே! இந்தளூர் எம்பெருமானே! அடியேனிடம் சிறிதும் இரக்கம் காட்டவில்லையே என்று ஆழ்வார் கூறுகிறார்.

 பிரானே! கடலிலே நீர் வற்றுவதுண்டோ?  உன் திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? இப்படியும் என்னைப் படுகொலை அடிக்கலாமோ? பாவியேனுக்குச் சிறிதும் இரங்கியருள மாட்டாயோ? என்கிறார். சோலைக்குள்ளே வளர்ந்தவொரு இளவானைக் கன்றுபோலே இணியனாய் இருப்பவனே!  திருமாலிருஞ்சோலையில் திகழும் யானைக்குட்டியே! என்று செல்லமாக அழைக்கிறார். விளக்கில் திரியும் எண்ணெயும் புகையுமான அழுக்கின்றியே புகர்தான் ஒருவடிவு கொண்டதோ என்னும்படியாக ஞான ஸ்வரூபனாய்ப் பிரகாசிப்பவனே! சிறிதேனும் இரங்கவேணும் என்கிறார்.

      இப்பாசுரத்தில் ஆழ்வார் பகவானை இறைஞ்சிக் கேட்கிறார். கடலில் நீர் வற்றுவதுண்டோ. உன் திருவுள்ளத்தில் இரக்கம் மாறுவதுண்டோ, இப்படியும் என்னைக் கொல்லலாமா? பாவியான எனக்குச் சிறிதும் இறங்க மாட்டாயோ? என்று வினவுகிறார். நம் மீது இரக்கம் கொண்டுள்ளதால்தான் நாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகவானின் கருணை இன்றும் அமுதவெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் அற்ப பொருளுக்காக அவரது கருணையை அலட்சியம் செய்கிறோம். ஆத்ம தரிசனத்தைத் தவிர வேறு எதையும் பகவானிடம் வேண்டக் கூடாது என்ற மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள்.

             

பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்! உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே     1330

 

நான் சொல்வது இதுவே. உலகங்களையெல்லாம் ஈரடியில் அளந்து கொண்ட இந்தளூர் நாதரே! வண்டுகள் மொய்த்து ரீங்காரமிட்டுக் கொண்டே தேனை உறிஞ்சும் மாலையைத் திருமுடியில் அணிந்து கொண்டிருக்கும் உம்மைக் கண் குளிர தரிசிக்க வேண்டுமென்கிற ஆசைக் கடலில் விழுந்து இங்கு விரைந்து வந்திருக்கின்றோம்.  மற்றவர்களின் கேலிப் பேச்சு எங்களது மூட நம்பிக்கையைப் பற்றியதாகும்.  உனக்கு ஒரு பழி வராமல் இருப்பதற்காகவாவது  நீ காட்சி தரக்கூடாதா? என்று வினவுகிறார் ஆழ்வார்.

இந்தளூரீரே! உலகங்களை இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவரும் வண்டுகள் மொய்த்துக்கொண்டு ரீங்காரம் செய்யும் மாலையை முடியில் அணிந்தவருமான இவ்வுலகில் உம்மைப் பார்க்க விரும்பி ஆசை என்னும் கடலில் வீழ்ந்து அறிவு கெட்டோம்.  நீர் முகம் காட்டாததால் அயலாரும் இதுபற்றிப் பழித்தார்கள். உமக்கொரு பழிச்சொல் வரக் கூடாது என்பதே நாம் விரும்புவது என்கிறார்.

      இந்தளூர் எம்பிரானே! உன்னை நான் சேவித்தாலும்  சரி, இழந்தாலும் சரி, இது விஷயமன்று. நீ குணசாலி என்ற பெயரெடுக்க பல இன்னல்களைப் பட்டுள்ளாய். மூன்றடி மண் அளந்தாய். பல்வேறு அவதாரங்களில் துன்பப்பட்டு இத்தகைய குணத்தினைப் பெற்றுள்ளாய். பல்லாண்டுகளாக வேண்டிவரும் எனது விருப்பத்தினை நிறைவேற்றாவிடில் உனக்குக் குணக்கேடு விளையாதா என்று கேட்கிறார் ஆழ்வார். நான் நாற்சந்தியில் வார்த்தை கிளப்பினால் அயலார் ஏசுவார்களே. யோசித்துக் கொள்வாய். சர்வ ரக்ஷகனான நீ இவ்விதம் நடந்து கொள்ளலாமா? என்று வினவுகிறார் ஆழ்வார்.   

      

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீரே.      1331

 

பூவுலகிலே ஆசை குறையாமல் துதிக்கின்ற எமக்கு இங்கு அதுவே இழுக்காய் அமைந்தது.  உலகமெல்லாம் அறியும்படி உங்கள் தொண்டராய்த் திரிகின்ற எமக்குத் தங்கக் காசைவிட ஒளிமிக்கதாய் விளங்குகின்ற உமது வடிவழகினைக் காட்ட மறுக்கிறீர்.  இந்தளூரில் உள்ள சுகந்தவன நாதனே! உனது சௌந்தர்யத்தை நீரே அனுபவித்து இரசியுங்கள் என்று கூறுகிறார் ஆழ்வார்.

      திருவிந்தளூரில் உலகமறிய சேவை சாதிக்கும் பெருமானே! எங்களுக்குப் பொன்னொளியைக் காட்டிலும் அதிக வடிவழகை காட்டுமாறு வேண்டுகிறேன். எங்களுக்கான திருமேனியை எங்களுக்குக் காட்டாமல் இருப்பது ஏனோ? நம் மேனியை நித்யசூரிகள் மட்டும் காணட்டும். இத்தகைய அற்பனெல்லாம் காண வேண்டாம் என்று கருதுகிறீரா? நித்ய சம்சாரிகளுக்கும் உன் வடிவழகை காட்ட மாட்டீரோ? உம்முடைய உடம்பு உம்மை ஆசைப்பட்டவர்களுக்காக உள்ளது என நினைத்திருந்தோம். அது இல்லாத நிலையில் நீரே கண்டு, தொட்டு, முகர்ந்து, கட்டிக்கொண்டு நீரே வாழும் என்று வெகுண்டு கூறுகிறார் ஆழ்வார்.    

திரு இந்தளூர் பெருமானே! நீங்கள் தீயாக, நீராக, திசைகளாக, நிலமாக, ஆகாயமாக இருப்பதை வேத புராணங்கள் சொல்லுகின்றன. எமக்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருப்பது உண்மை. ஆனால் அடியார்கள் உனது வடிவழகைக் காண விரும்புகிறோம். தாங்கள் எங்களுக்கு அனுகூலமாக உதவ மாட்டீரா? என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.

      நமது கண்ணால் காணும் பொருளெல்லாம் எம்பெருமான் என்று துணிவுடன் ஆழ்வார் கூறுகிறார்.  இத்துணிவு இல்லாதவர்தான் வருந்த வேண்டும். இத்தகைய துணிவு பெற்றவர்களுக்குப் பெருமானின் கடாக்ஷம் நிறைந்தே கிடைக்கும். சங்கும், சக்கரமும், சிரித்த முகமும், தொங்கும் பதக்கங்களும் கொண்ட அசாதாரணமான விக்ரக வடிவத்தினை நான் கண்டு களிக்க ஆவல் கொண்டுள்ளேன். தாங்கள் ஜகத் சொரூபியாக இருந்து என்ன பயன் என்று வினவுகிறார். நீரும், நெருப்பும் உன் வடிவே என்று சொல்லிக் கொள்வதில் யாதொரு தயக்கமுமில்லை. அப்படியாவது உனது திருமேனி வடிவழகைக் காண்போமா என்கிறார். ஆனால் அவர் தரும் வடிவழகை நமது ஊனக்கண் கொண்டு பார்க்க இயலாதவர்களாக இருக்கிறோம் என்பதே இதன் கருத்தாகும்.

 

 தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும்
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம் பெருமான் தந்தை தந்தை ஆவீர் அடியோமுக்
கே எம் பெருமான் அல்லீரோ நீர்? இந்தளூரீரே.      1332

 

திரு இந்தளூர் பெருமானே! நீங்கள் தீயாக, நீராக, திசைகளாக, நிலமாக, ஆகாயமாக இருப்பதை வேத புராணங்கள் சொல்லுகின்றன. எமக்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருப்பது உண்மை. ஆனால் அடியார்கள் உனது வடிவழகைக் காண விரும்புகிறோம். தாங்கள் எங்களுக்கு அனுகூலமாக உதவ மாட்டீரா? என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.

நாம் கண்ணால் காண்கிற பொருள்களெல்லாம் எம்பெருமான் வடிவேயென்று இவர் துணிந்திருப்பவராதலால், ‘இத்துணிவு இல்லாதவரன்றோ வருந்த வேண்டும். இத்துணிவுடையார்க்கு எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் எப்போதும் குறையற்றிரக்கின்றதன்றோ, ஆகையாலே இவர் வீணாக வருந்துகின்றார்’ என்று திருவிந்தளூர்ப் பெருமான் திருவுள்ளம் பற்றி இருப்பதாகக்கொண்டு, பிரானே! நீ எல்லாப் பொருளுமாக நிற்கின்றாய் என்கிற சாஸ்த்ரார்த்தம் அடியோமுக்குத் தெரியாமையில்லை.சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களும்;” என்றாற் போலே  அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ வேஷத்தைக் கண்டுகளிக்க ஆவல் கொண்டிருக்கிற அடியோமுக்கு ஜகத் ஸ்வரூபனாயிருக்கும் இருப்பு என்ன பயனளிக்கும்? தீ, நீர் முதலானவையெல்லாம் உன்வடிவே என்று அநுஸந்தித்துக்கொள்வதில் யாதொரு ஆக்ஷேபமுமில்லை.  அப்படி அநுஸந்திப்பதனால் அவற்றில் உனது அஸாதாரணத் திருமேனியைக் காண்போமோ.  யாம் காணமாட்டோம்; நாங்கள் கண்டுகளிப்பதற்கன்றோ நீ திருவிந்தளூரிலே வந்து நிற்கிறது என்கிறார்.

      

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்தில்
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே   1333

 

இந்தளூர் பெருமானே! அடியேன் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  நான் மனதில் உணர்வதைக் கூறுகிறேன். உம்மைப் பிரிக்க முடியாத அடியேனை, நீங்கள் உமது மற்ற மனிதர்களோடு சமமாக எண்ணியுள்ளீர். நல்லவர் யார், தீயவர் யார் என்பது உமக்குத் தெரியும்.  இவ்வுலக நடைமுறைகளை நீர் அறியாதவரா. இருப்பினும் என்னுடைய தன்மையினை அறிந்து கொள்ள மாட்டேன் என்கிறீரே என்று வருந்திப் பாடுகிறார் ஆழ்வார்.

இந்தளூர் பெருமானே! அடியேன் விண்ணப்பஞ் செய்ய நினைத்த விஷயத்தைக் கூசாமல் விண்ணப்பஞ் செய்துவிடுகிறேன்; சேஷபூதன் சேஷியை நிர்ப்பந்திக்கலாகாது என்று முறையறிந்து இருக்கமாட்டுகின்றிலேன்; ஸர்வஜ்ஞரான உமக்கும் தெரியாத விஷயம் ஒன்றுண்டு என்று அடியேன் நினைத்திருக்கிறேன்.  உமக்குப் பல்லாயிரம் பேர்கள் அடியாருண்டு. மற்ற அடியார்கள் எல்லாரையும் போலே இக்கலியனும் ஓரடியான்’ என்று நீர் நினைத்திருக்கின்றீர் அத்தனையல்லாது எனக்குள்ள வாசியைச் சிறிதும் அறிகின்றிவீர். ஊர்த்வம் மாஸாந்நஜீவிஷ்யே” (ஒரு மாதம்வரையில் உயிர்தரித்திருப்பேன்) என்று சொன்ன அசோகவனத்துப் பிராட்டியையும் என்னையும் ஒருதட்டாக நினைத்திருக்கிறீரே யொழிய ‘ஒரு நொடிப்பொழுதும் நம்முடைய பிரிவைப் பொறுக்கமாட்டாத சுகுமார ஸ்வபாலன் இவன்’ என்று என்னுடைய வாசியை அறிந்திலீர் என்கிறார்.

      அடியேன் தங்களிடம் விண்ணப்பம் செய்து விடுகிறேன். உமக்குத் தெரியாத விஷயம் என்பது ஒன்றுமில்லை. பல அடியார்கள் போன்று இந்தக் கலியனும் ஒரு அடியன். ஒரு மாதம்வரை உயிர் தரிப்பேன் என்று அசோக வனத்தில் பிராட்டி சொன்னதையும் என்னையும் ஒரு தட்டில் வைக்கிறீரே. ஒரு நொடியும் நம் பிரிவைத்தாங்க மாட்டான் என்று நீர் அறியவில்லையா? உலகத்தவர் சிலர் தங்களை மறந்து வேறு பாதையில் செல்கின்றனர். ஒரு சிலரோ அனுதினமும் தங்களையே துதித்து வருகிறார்கள். இருவரும் ஒருவரா என்பது போன்று ஆழ்வார் வினா எழுப்புகின்றார்.

      

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நும் தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே.      1334

 

இந்தளூர் பெருமானே! தாங்கள் எனது சேவையை நிராகரிப்பவராய் உள்ளீர். அடியேனுக்குக் கைங்கர்யத்தின் மகிமையை உணர்த்திவிட்டு கைவிட்டுவிட்டீர். எனது ஆதங்கத்தினால் இதைச் சொல்கிறேன். தேவரீருடைய திருப்பாதக் கமலங்களை இதுவரை காட்டவில்லை. அதை மட்டும் நாங்கள் தரிசித்துவிட்டால் தொண்டு செய்து நாங்கள் பிறவிப் பயனை அடைய மாட்டோமா என்று வினவுகிறார் ஆழ்வார்.

இந்தளூர்! பெருமானே நீர் எம்மிடத்தில் கைங்கரியங்கொள்ள விரும்பாதவராயிருக்கின்றீர் அடியோங்களுக்கு பணியை உணர்த்திவிட்டு கைவிட்டு விட்டீர். இதனைத் தனியே சொன்னோம். உம் பாதங்களைக் காட்டாமல் போனீர். காட்டியருளினால் இந்த நாட்டிலே உமக்கு இசைந்து வந்து உங்கள்  தொண்டர்கள் ஆன நாங்கள் உய்ந்து போகமாட்டோமோ?

      பெருமாளே! நீர் மிகுந்த சக்தி உள்ளவராக இருந்த போதிலும் என்னுடைய கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்வதற்கான சக்தி உம்மிடம் இல்லை.  இந்த நீசனால் என்ன கைங்கர்யம் செய்து விட முடியும் என்று நினைக்கின்றீரா? நிறையில்லாத நீசனையும் சேவை புரிமண்கட்டியாகப் படைத்திருக்கலாமே சேதனனாகப் படைத்திருக்கிறீரே. கைங்கர்யம் செய்யாவிடில் அதன் பலனை அனுபவிக்க இயலாது என்று கூறுகிறீர். இத்தகைய அறிவைப் படைத்து என்னை ஒதுக்கி விடுகிறீரே. தங்களது அருளை வழங்க இயலாவிட்டாலும் தங்கள் திருவடி சேவையை நான் தரிசிக்கக் கூடாதா என்று ஆழ்வார் வருந்திக் கேட்கிறார்.

      

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே.     1335

 

இந்தளூர் பெருமானே! தேவரீருடைய திருமேனி நிறத்தை ஆராய்ந்து பார்த்தால் முதல் யுகமான கிருதயுகத்தில் பால்போல் வெண்மையாக எப்போதும் நிலை நிற்பதாக இருந்தீர்கள். கடைசி யுகமான கலியுகத்தில் கரு நிறமான காளமேக வண்ணனாக இருக்கின்றீர்.  நினைத்துப் பார்த்தால் திரேதாயுகத்தில் பொன் வண்ணமாகவும், துவாபரயுகத்தில் நீலமணி வண்ணனாகவும் கூடக் காட்சி  அளிக்கும் தாங்கள் இதுதான் நிலையான நிறமென்று காட்டியருள வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

எம்பெருமான் ஒவ்வொரு ஒவ்வொரு யுகத்திலும் நிறத்தைக்கொள்வன்; கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால் போன்ற நிறத்தைக்கொள்வன்;  த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன்; த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வான்; கலியுத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீலநிறத்தைக் கொன்வன்.

இந்தளூரீர்! உமக்குப் பல நிறங்கள் உள்ளனவாகச் சாஸ்த்ரங்களில் விளங்காநின்றது; இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கு மிருப்பிலே எந்தநிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாவோ? இதோபாராய், இதுவே என்வண்ணம்” என்று சொல்லி வடிவைக் காட்டியருளீர் என்கிறார்.

      பெருமானின் நிறம் யுகத்திற்குத் தகுந்தாற்போல் மாறும் என்கிறார் ஆழ்வார்.  கிருத யுகத்தில் இருந்தவர்கள் சத்வ குணத்தைக் கொண்டதால் பெருமான் வெண்மையாக இருந்துள்ளான்.  த்ரேதாயுகத்தில் சிவந்த நிறத்தைக் கொண்டவனாக இருந்துள்ளான்.  துவாபர யுகத்தில் பசுமை நிறத்தவனாகக் காட்சி அளித்துள்ளான். கலியுகத்தில் எந்த நிறம் கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே கருநீல நிறத்தைச் சார்ந்தவனாக உள்ளான். எனவே இறைவன் பல நிறங்களில் பல வடிவங்களில் இருக்கிறார். உருவமற்ற அருவமாகவும் உள்ளார். இதில் எவ்வித விவாதமுமின்றி அவனை அடைவது எப்படி என்று சிந்திப்போம்.

      

      

எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே    1336

 

இந்தளூர் பெருமானே! என் தந்தை, என் பாட்டனார், அவரது தகப்பனார் என்று எனது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் உமக்கான கைங்கர்யத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். இத்தகைய கைங்கர்யம் மேற்கொண்ட எங்களிடமே வேறுபாடு கொண்டு கணக்குப் பார்க்கிறீர். எனது இதயத்தில் தயங்காமல் குடிபுகுந்த உமக்கு இப்போது திருமேனி நிறம் இன்னதென்று காட்ட மனம் இல்லையே என்று வருந்திக் கூறுகிறார் ஆழ்வார்.

 இந்தளூர்! பெருமானே! என் தகப்பனார் தகப்பனாரின் தகப்பனார் என்கிற முறையில் எமது முன்னோர்கள் ஏழு தலைமுறையாகக் கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கும் தொண்டர் விஷயத்தில் வித்யாசம் பார்கிறீர்! என் மனதில் வந்து நிற்கிறீர்! ஆனால் சிறிதும் திருமேனி இந்த நிறமுடையது என்று காட்டவில்லையே

      எனது தலைமுறையே உமக்குக் கைங்கர்யம் செய்து வந்த நிலையிலும், ஏழு பிறவியிலும் உனக்கு அடிமை செய்து வரும் குடியில் பிறந்த நிலையிலும்என்மீது ஏன் இத்தகைய சந்தேகம் படுகிறீர். நம் திருமேனியைக் காணஇவனுக்குத் தகுதி உள்ளதா என்று ஐயம் கொள்கிறீரா. இவ்வளவு நினைக்கும் தாங்கள் எவ்வித சிந்தனையுமின்றி என் நெஞ்சில் புகுந்தீரே. அதை ஏன் செய்தீர். நெஞ்சில் பிரகாசிக்கும் நீர் என் கண்ணில் பிரகாசிக்கக் கூடாதா? நித்யசூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை, அந்தத் திருமேனியின் அழகினை, அடியேனுக்கு காட்சி அளிக்க என்ன தயக்கம்? என்று மனமுருகிக் கேட்கிறார் ஆழ்வார்.

      

ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய்த
சீர் ஆர் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே.       1337

 

அழகுமிக்க சோலைகளால் சூழப்பட்ட திரு இந்தளூரில் அருள் புரிகின்ற பகவானைக் குறித்து மேகங்கள் படிந்த தோப்புகளையுடைய திருமங்கை நகர்க்குத் தலைவரான கலியன் இயற்றிய சிறந்த மதுரமான இப்பாசுரங்களைக் கற்று பரப்புபவர் எவர் எவரோ அவர்களெல்லாம் எப்போதும் தேவர்களால் கௌரவிக்கத்தக்கவராவர் என்பது இப்பாசுரப் பொருளாகும்.

எம்பெருமானை அடிபணிந்தவர்கள் எக்குற்றவாளரா இருப்பினும் எவ்விழி பிறப்பாளராயினும் எவ்வியல்வினரா இருப்பினும் எம்பெருமானாரை ஆச்ரயிக்கப் பெற்ற பெருமையினால் மிகச் சீரியவரேயாவர் என்றாற் போலே, இத்திருமொழியை ஓதுமவர்களும் எத்தன்மையரா இருப்பினும் இந்த ஸ்ரீஸூக்தியை அதிகரிக்கப் பெற்ற பெருமையினால் சிறந்தவரேயாவர் என்கிறார். 

      இராமானுசனை மேவும் நல்லோர் எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றேர், அக்குற்றமப்பிறப்பு அவ்வியல்வே நம்மையாட்கொள்ளுமே’ என்று எம்பெருமானாரை அடி பணிந்தவர்கள் எக்குற்றவாளாராக இருப்பினும் எவ்விழிபிறப்பாளராயினும், எவ்வியல்வினராயிருப்பினும் எம்பெருமானாரை ஆச்ரயிக்கப் பெற்ற பெருமையினால் சிறந்தவரேயாவர் என்பது போன்று இத்திருமொழியை ஓதுபவர்களும் எத்தன்மையரா யிருப்பினும் இந்த ஸூக்தியை அதிகரிக்கப் பெற்ற பெருமையினால் சிறந்தவரேயாவர் என்று இராமானுஜ நூற்றந்தாதியில் சொல்லப்பட்டுள்ளது.


Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...