வெள்ளி, 28 நவம்பர், 2025

57. திருப்புட்குழி

 


திருமங்கையாழ்வார்                                                                                  பெரிய திருமொழி 

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம்   என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லி கோமள வல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை                                                                                                                                                     பிரானே.  1155. 

      திருவிடந்தைப் பெருமானே! இப் பெண்ணானவள் ‘கலப்பையைக் கையில் தரித்த கண்ணபிரானின் குழலோசையைக் கேட்டு என் உள்ளம் உருகுகின்றது’ என்று கூறுகிறாள்.  நீர்வளம் பொருந்திய அழகிய திருப்புட்குழி என்னும் தலத்தில் விஜயராகவனாக சேவை சாதிக்கும் பெருமானைக் குறித்துப் பாடுகிறாள்.  ‘திருநீர்மலைக்குச் செல்வோமா’ என்கிறாள். கொல்லிப் பாவை போன்ற கொடி இடையைக் கொண்ட அழகிய தோள்களையுடையவள், இடைவிடாமல் மழை போன்று கண்ணீரைச் சொரிகின்ற என் மகள் விஷயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தாய் கேட்பது போன்று இப்பாசுரம் அமைந்துள்ளது.
      திருத்தாயாரானவள் தன் மகள் பற்றி வருந்திப் பாடுகிறாள். ‘கண்ணனின் மதுரமான குழலோசை என் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது. திருப்புட்குழியின் நீர்வளத்தைப் பாடுகிறாள். திருநீர்மலை செல்ல வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறுகிறாள். தனது விருப்பம் எதுவும் நிறைவேறாததைக் கண்டு துன்புறுகிறாள். ஜடாயுவுக்கு மோட்சம் அளித்ததை எண்ணிப் பாடுகிறாள். கொல்லிமலை கொடியிடைப் பாவையான என் மகள் படும் துன்பம் கண்டு மனம் இறங்கவில்லையே’ என்ற கூறுகிறாள்.


 

 

 


58. திருநின்றவூர்

 


திருமங்கையாழ்வர்                                                                                         பெரிய திருமொழி 

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந்                                                                                                                                         நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை என் வணங்கப்படுவானை                                                                                                                                                      கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத்தை                                                                                                                                                   தொத்து ஆர் சோலை
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான்                                                                                                                                                            கடல்மல்லைத் தலசயனத்தே.  1089. 

      பொல்லாத செயல்களைச் செய்வது, வயிற்றுப் பிழைப்பிற்காக பிறருக்கு அடிமையாக இருந்து பணி செய்வது, அபத்தமான உண்மைக்குப் புறம்பான தவறுகள் உள்ள சமய நூல்களை மெய்யான நூல்கள் என்று எண்ணி படித்துப் பாழாகிப் போகாமல் உய்ய வாருங்கள் என்றும், மனிதர்களே கெட்டுப் போகாமல் என் சொல்லை ஆதரியுங்கள் என்று வற்புறுத்தியும், அதை ஏற்காமல் அவர்களை விட்டொழித்தார். பத்தராவிப் பெருமான் முகம் கொடாமல் பிராட்டியுடன் சல்லாபித்து இருந்ததால் தலசயனப் பெருமானை தஞ்சம் அடையப் புறப்படுகிறார்.  திருமகள் வாக்கினால் தூண்டப்பட்ட பெருமான் தலசயனத்தில் வந்து அருள் புரிந்தார். இப்பெருமான்  எனக்குத் தந்தையானவன், என் போன்றோர் வணங்கும்படி எளியவனாய் இருப்பவன், அடியார்கள் போற்றும் வேதப் பொருளானவன். காளமேகம் போன்ற நிறமுடைய எங்கள் தலைவன் திருநின்றவூரில் முத்துத் திரள் போல் குளிர்ச்சியாய் இருப்பவன். காண்டவ வனத்தைத் தீக்கிரையாக்கிய பகவான் கடல்மல்லை பூமியில் பள்ளி கொண்டிருப்பதைக் கண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார். தலசயனத்துப் பெருமானை தாம் சேவித்து ஆனந்தம் கொண்டது போன்று அனைவரும் சேவித்து ஆனந்திக்க வேண்டும் என்பதே அவரது அவாவாக உள்ளது.

 


வியாழன், 27 நவம்பர், 2025

59. திருஎவ்வுள் - திருவள்ளூர்

 


திருமங்கையாழ்வார்                                                                                       பெரிய திருமொழி 

காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய்தான் அவன் ஊர்
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.     1058 

      காவி உடையால் தன் சரீரத்தை மறைத்து பஞ்சவடிக்கு விரைந்து வந்து சீதா தேவியிடம் மையல் கொண்ட இராவணனது ஊரான இலங்கையை அழிய அம்பெய்து முடித்த பூரண சக்தியுடைய வீரத்திருமகனான எம்பெருமான் மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய ஆய்ச்சியர், இவன் வெண்ணெய் திருடி உண்டவன் என்று பரிகசித்த கோவிந்தன், திருஎவ்வுளூரில் கண் வளர்ந்தருளுகிறான்.
      முன்னடிகளில் ஸ்ரீராமனாகவும், பின்னிரண்டடிகளில் ஸ்ரீகிருஷ்ணனாகவும் இவ்வூரில் சேவை சாதிக்கின்றான். இராவணன் சீதையைக் கவர்வதற்காக சன்னியாசி வேடமிட்டு பிச்சை கேட்பதுபோல் கேட்டு கவர்ந்து சென்றான். அத்தகையவனை தன் அம்பால் நிர்மூலம் செய்தவன் இங்குள்ளான். அது போன்று வெண்ணெயுண்டவனான கிருஷ்ணனும், இவ்விதம் இராமகிருஷ்ணராக இங்கு வாசம் செய்கின்றான். எவராலும் வெல்ல முடியாத இராவணனை போரில் வென்று முடித்தார். அதே சமயம் கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டு அனைவரின் பரிகாசத்தையும் ஏற்றான். 

தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர் தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.       1059 

      அழகில் சிறந்தவளான வைதேகி மேல் மோகம் கொண்ட சந்திரஹாசம் என்ற வாளையுடைய இராவணனது மெய்யான பொன் முடிகள் பத்தையும், முன்பு இராமாவதாரத்தில் நடந்த இராம இராவணப் போரினால் ஒரே அனல் உமிழ் என்ற சிவந்த பாணத்தினால் மண்ணில் உருளச் செய்த என் தலைவனான வீரராகவன் திருஎவ்வுளூரில் கண் வளர்ந்தருளுகின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
      பிராட்டியைப் பிரிந்த பெருமான் வெண்மையான மேகக் கூட்டங்களைக் கண்டவுடன் சீதையின் நினைவில் தவித்தான். இதைக் கண்ட அனுமன் ஒரு பெண்ணிற்காக வீரம் பொருந்திய இராமன் இவ்வாறு கலங்குகிறானே என்று நகைத்தான். பின் இலங்கை சென்று அசோகவனத்தில் சீதையைக் கண்டவுடன் அய்யகோ! இத்தகைய பிராட்டியைப் பிரிந்த பின்பும் உயிர் வாழ்கிறானே, அவனிலும் மிக்க கலநெஞ்சம் உண்டோ என்று நினைத்தான் அனுமன். இவ்வாறு எண்ணத் தூண்டியது சீதையின் வடிவழகே ஆகும். அத்தகைய அழகு பொருந்திய பிராட்டியிடம் காதல் கொண்ட பெருமான் வீரராகவனாக திருஎவ்வுளூரில் சேவை சாதிக்கின்றான். 

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே    1060 

      ஸ்ரீராமாவதாரத்தில் அனுமனை பிராட்டிக்குத் தூது அனுப்பி சிறந்த இலங்கையை ஓர் அம்பினால் மாண்டு போகும்படி அழித்தவன், கிருஷ்ணாவதாரத்தில் மன்னர் குலத்தில் அவதரித்தும் பாண்டவர்களுக்காகத் தூது சென்று பாண்டவ தூதன் என்று உலகத்தவரால் போற்றப்பட்ட வீரராகவன் எவ்வுளூரில் கிடந்தான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      ஸ்ரீராமன் அதர்மம் செய்த இராவணனிடம் சென்று சமரசம் பேச விரும்பவில்லை. மேலும் அரச பரம்பரையில் இத்தகைய தூதினை தானே மேற்கொள்ளத் தவிர்ப்பார்கள். எனவே இராமதூதனான அனுமனை அனுப்பி எச்சரித்து வருமாறு கூறி அனுப்பினார். இருப்பினும் தான் தூது பணியினை மேற்கொள்ள இயலாமல் போனது சிறிது வருத்தம்தான் என்றார். ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் துரியோதனன் பாண்டவர்களக்குச் செய்த துரோகத்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக தானே தூது சென்றார். இந்த அவதாரத்தில் தூது சென்ற பிறகுதான் பெருமானுக்குத் திருப்தி உண்டாயிற்று என்பது பட்டர் வியாக்யானமாக உள்ளது. 

பந்து அணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே     1061     

      பந்தினைத் தன் மெல்லிய விரல்களால் அணைத்துப் பிடித்திருக்கும் நப்பின்னைப் பிராட்டியை மணமுடிக்க குரூரமான மிடுக்குடைய ஏழு முரட்டுக் காளைகளையும் வென்ற துவாரகாபதி, உலகெங்கும் பரந்த புகழையுடைய நந்தகோபனுக்கு திருக்குமாரனாக பரிபூரணமாக அவதரித்த எம்பெருமானும், நற்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன் திருஎவ்வளூரில் கண் வளர்ந்து அருளுகிறான் என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
      நப்பின்னையின் தந்தை சொன்னபடி வலிமையுள்ள ஏழு காளைகளை அடக்கிய பெருவீரன் அந்த விடாய் தீர திருஎவ்வுளில் திருக்கண் வளர்ந்துள்ளான். கையிலே பந்தைப் பிடித்து அதைவிட மென்மையான விரல்களைக் கொண்டவளான நப்பின்னை சித்திரப் பதுமைப் போன்று திகழ்வாள். கண்ணபிரானைப் பிள்ளையாகப் பெற நோன்பு நூற்றவன் வசுதேவன். அவனைப் பார்த்த கணத்தில் நன் நோன்பின் பயனைப் பெற்றான். அத்தகைய மகனை நந்தகோபனிடம் விடவேண்டியது ஆகிவிட்டது. ஏழு காளைகள் என்பது நம்மில் உள்ள ஏழு அசுர குணங்களாகும். அதனை அடக்குபவனும் எம்பெருமானே என்ற கூறுகிறார் ஆழ்வார். 

பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின் எவ்வுள் கிடந்தானே.            1062 

      நினைத்துப் பார்த்தால் முன்பொரு காலத்தில், ஊழிக்கால முடிவில், சிறு குழந்தையாய் ஏழு உலகங்களை உண்டு ஆலந்தளிரின்  மேல் நீண்ட காலம் பள்ளி கொண்ட கிருஷ்ணன், நீல வண்டுகள் தேனை உண்டு வாழும் நெய்தல் மலர்களில் படிந்த வண்டுகள் மலரில் உள்ள தேனைப் பருகி வாழப்பெற்ற அழகிய குளிர்ந்த நெய்தல் வயல்களையும், மணம் கமழ்கின்ற சோலைகளையுடைய திருஎவ்வுளூரில் சயனித்திருக்கிறான் என்ற பொருளில் இப்பாசுரம் அமைந்துள்ளது.
      உலகமெல்லாம் மறையும் நிலையில் இருந்த ஊழிக்காலத்தில் தான் மட்டும் மறையாமல் சிறு குழந்தையாக ஆலிலைமேல் சயனித்திருப்பது அனைத்தையும் மறைப்பதற்காக. ஆனால் திருஎவ்வுளூரில் சயனித்திருப்பது உலகத்தைக் காத்துக் கரையேற்றுவதற்காக. அவனைப் பொருத்தவரை இப்பிரபஞ்சம் இயங்குவதும் முடிவதும் ஒரு விளையாட்டாகும்.  இந்த உலகம் கொடியதாக தெரிந்தாலும் அதுவும் பகவானின் விளையாட்டு என்று கொள்ள வேண்டும். பகவானின் திருவடியைப் பற்றியபடி இவ்விளையாட்டில் நாமும் பங்கு கொண்டால் ஒரு துன்பமும் நேராது என்பதாக பொருள் அமைகிறது. 

சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.     1063 

      அடியவர்கள் ஒன்று கூடி நெருக்கமாகத் திரண்டு, ‘சுவாமி! குணங்களால் நிறைந்தவனே! உனக்கு வணக்கம்’ என்று கூறி இடைவிடாமல் போற்றும்படி இருப்பவன். செந்தாமரைக்  கண்ணுடையவன். ஸ்வாமியாய் இருப்பவன், குறைகளை நீக்குபவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன். சிவனுக்கும் தேவன் என்று சனகர் முதலிய முனிவர்கள் போற்றும் பரந்தாமன் திரு எவ்வுளூரில் சயனித்திருக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பெருமானை பக்தி மார்க்கத்தோடு தொழுபவர்கள் அதற்கு அநுகூலமாகத் தாழ்ந்த தோற்றத்தில் இருப்பார்கள். அத்தகையவன் ஆபத்பாந்தவனாக இருந்து அருள் புரிகிறான்.  இவ்விதம் நாம் அழைத்துவரும் அளவிற்கு எளியவனாக இருந்தாலும் அவன் சாமானியனல்ல. தேவர்களுக்கெல்லாம் மூத்தவனென்றும், முக்கண்ணனான சிவனுக்கு அந்தர்யாமியாக இருந்து காரியங்கள் பல நடத்துபவனாக இருக்கின்றான். இவ்விதமான உண்மைகளை அறிந்த சனகாதி முனிவர்கள் தொழுதேத்தும் பரம் பொருளாகத் திகழ்பவன்.  சௌலப்யமும், பரத்வமும் உடைய பெருமான் திருஎவ்வுளூரில் இருந்து சேவை சாதிக்கின்றான். 

திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசை முகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூடநின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.   1064 

      சந்திரன் ஜலம்  ஆகாசம் அக்னி  வாயு ஆகியவற்றை சரீரமாயும்  நான்முக பிரம்மாவுக்கு  தந்தையாயும்  ஸாமவேதத்தால் ஸ்தாபிக்கப்பட்ட  காரணபூதனானான எம்பெருமான்  தனது சரீரத்தின் ஒருபக்கத்திலே  இருப்பவனாய்  வண்டுகள் நிறைந்த  கொன்றை மாலையையும்  கங்கா ஜலத்தையும்  நீண்ட சடையிலுடைய சிவ பெருமான்  உலகமெல்லாம் தாவி அளந்த விசாலமான எம்பெருமானின் திருவடிகளை  தன் தலைமீது சூடி  வணங்கச்செய்த  எங்கள் அப்பன்  எம்பெருமான்   பள்ளிகொண்டுள்ளார்.
      காரியவர்க்கங்களை எல்லாம் தனக்கு சரீரமாகக் கொண்டு, தான் அவற்றிற்கு ஆத்மாவாக இருப்பவன். உலகங்களைப் படைத்த நான்முகக் கடவுளைப் படைத்தவனாவான். கீதையில் ‘வேதங்களுக்கெல்லாம் நான் சாமவேதமாக இருக்கிறேன்’ என்கிறார். கங்கா தீர்த்தத்தை தன் சடையில் தாங்கி திருமேனியில் ஏகதேசத்தில் உறைகின்ற சிவபெருமான் தனது தலையினால் சுமக்கின்ற திருவடிகளை உடைய எம்பெருமான் எவ்வுளூரில் சேவை சாதிக்கிறான். 

முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.    1065 

      உலகங்களைப் படைக்க சங்கல்பம் செய்தவனும், கபிலனாய் அவதரித்தவனும், பிரம்மா, விஷ்ணு, சுவன் என்று மும்மூர்த்திகளுக்கு அந்தர்யாமியாய் இருப்பவனும், வேதத்தின் பொருளைக் விரிவாகச் சொன்னவரும், காயாம்பூ நிறம் கொண்டவனும், எல்லா உயிர்களுக்கும் தலைவனும், வடிவு கொண்ட புண்ணிய வடிவானவனும், ஸர்வ ஸ்வாமியுமாய், தேவர்களின் நாயகனும், எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி ஒரே வடிவாக நின்றவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனாகவும், ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம’ என்று உபநிஷத்தில் ஓதப்பட்டவனும், கீதையை ஓதியவனும்,  தான் ஒருவர்க்கு மனத்தினால் எட்டாதவனாக  இருப்பினும், தன் அடியார்களுக்கு நெருங்கி இருப்பவனும், ஆலிலை மேல் பாலகனாகக் காணப்பட்ட போதும் அடியவர்களுக்குத் தந்தையாக விளங்குபவனுமான பகவான் திருஎவ்வுளூரில் கண் வளர்ந்தருளினான் என்று கூறுகிறார்.  மேலும் நாம் உடல்கள் அல்ல. அழியாத ஆத்மா என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆழ்வார் இப்பாசுரத்தை நமக்கு வழங்கியள்ளார்.      

பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகன் ஆய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே.      1066 

      சீதையாய் அவதரித்து பந்தைப் பிடித்து மெல்லிய விரல்களை உடையவளும், குளிர்ந்த தாமரையில் பிறப்பிடமாகக் கொண்ட மகாலட்சுமி உறையும் மார்பை உடையவனும், நீலமணி போன்ற நிறத்தை உடையவனும், சுவர்க்கத்தில் வாழும் தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரனுக்கும் நாயகனாக விளங்கும் எம்பெருமான் திருஎவ்வுளூரில் சேவை சாதிக்கின்றான் என்ற ஆழ்வார் கூறுகிறார்.
      ஒரு நாளும் எம்பெருமைனைப் பிரியாமல் பெருமான் மீது கொண்ட நித்ய அன்பினாலும், கையில் பந்துமாய் கொண்டு, அந்தப் பந்தையும் தாங்கி ஏந்த முடியாத தளிர் போன்ற மெல்லிய விரல்களைக் கொண்டவளான பிராட்டியானவள் தனது குளிர்ந்த தாமரைப் பூவைப் பிறப்பிடமாகக் கொண்டவள். என்றுமே எம்பெருமானை நினைத்தவண்ணம் உள்ளதால் இளம் பூவும் அவளுக்கு நெரிஞ்சி முள்ளாக நினைத்து அவனது திருமார்பில் வாசம் கொள்கிறாள். நீலநிறம் என்பது தூய்மையின் அடையாளம்.   எனவேதான் பகவான் நீலநிறத்தைக் கொண்டிருக்கிறார். அத்தகையவன் திருஎவ்வுளூரில் வாசம் கொண்டுள்ளான் என்பது இதன் கருத்தாகும். 

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே.     1067 

மலர் மாலைகளை ஏந்திக் கொண்டு வரும் பக்தர்கள் வணங்கும்படியாக எம்பெருமான் திருஎவ்வுளூரில் பள்ளி கொண்டுள்ளான். வண்டுகள் ரீங்கரிக்கும் மலர் வனங்களையுடைய, பகவத் குணங்களால் திருமங்கை நாட்டுக்கு அரசனான கலியன் அழகிய தமிழில் பாடிய இந்தப் பத்துப் பாமாலைகளையும் பக்தியுடன் சொல்ல வல்லவர் இந்த அண்டங்களை எல்லாம் ஆள்வது நிச்சயம். அவ்விதம் உலகப் பற்றில் இச்சை கொள்ளாதவர்கள் வைகுண்டத்தில் நித்ய சூரிகளாவர் என்ற கூறுகிறார் ஆழ்வார்.
      ஸ்ரீவைஷ்ணவர்கள் மலர்மாலைகளைக் கொண்டு ஆராதித்து அடிமை செய்து வாழும்படியான திருஎவ்வுளூரில் சேவை சாதிக்கும் எம்பெருமான் பற்றி ஆழ்வார் பாடும் பாசுரங்கள் அனைத்தும் இறைவனைப் போற்றும்படி அமைந்துள்ளது. இறைவனின் பெருமைகளைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இவை வரப்பிரசாதமாக அமையும் என்பது அசைக்க முடியாத உண்மையாகும். இப்பாமாலையை படிக்க வல்லவர்கள் துன்பம் என்ற பாதையை விட்டு விலகி உண்மையான பாதைக்கு திரும்புவார்கள். மேலும் இவ்வுலகைப் ஆளும் பேற்றினைப் பெறுவார்கள்.     

திருமழிசையாழ்வார்                                                                            நான்முகன் திருவந்தாதி 

நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்            2417 

      ஆதிசேஷன் என்ற படுக்கையின் மேல் திருப்பாற்கடலில், திருக்குடந்தையில், திருவெஃகாவில், திருவள்ளூரில், திருவரங்கத்தில், அன்பில் என்ற திவ்யதேசங்களில்  அரிதுயில் கொள்ளும் எம்பெருமான், ஆதிமுதல்வன் அடியார்கள் உள்ளத்திலும் புகுவதற்கு காத்துக் கிடக்கிறான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பல புனித தலங்களில் சயனித்திருக்கும் பெருமானை நாம் நெருங்கினால் அவன் விரைந்து நம்மில் புகுந்து கொள்ளக் காத்திருக்கிறான்.  ஆனால் நாம் இத்தகைய பேரானந்தப் பெருவாழ்வினைப் புறந்தள்ளிவிட்டு அழியும் பொருட்களுக்குப் பின்னால் சென்று காலத்தை விரயமாக்கி, பின் மரண காலத்தில் புலம்புகிறோம். எனவே பகவானை அடைவதற்கு வாழும் காலத்திலிருந்தே அவனை நெஞ்சில் நிறுத்த முயற்சிக்க வேண்டும். எம்பெருமான் நம் உள்ளத்தில் வந்து நித்தியவாசம் புரிவதற்கு தயாராக உள்ளார். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும்.


60. திருவல்லிக்கேணி

 


திருமங்கையாழ்வார்                                                                                       பெரிய திருமொழி 

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே!    1068 

       தனுர்யாகம் என்ற திருவிழாவினை கம்சன் சிறப்பாக நடத்தினான். அதற்கு கண்ணனை வரவழைத்து மல்லர்களைக் கொண்டு அவனை அழிப்பது என்ற எண்ணத்தில் இருந்தான். கண்ணனைக் கொல்வதற்காக மதம் பிடித்த குவலயாபீடம் என்ற யானையைக் கொண்டு அவனை கொல்லத் துணிந்தான்.  ஆனால் கண்ணனானவன் அனைவரையும் அழித்து துவம்சம் செய்தான்.  அத்தகையவன் திருபுரமெரித்த சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை பதரிகாச்ரமப் பெருமானாக நின்று போக்கி சிவனைக் காத்தார்.  களைந்தொழிந்த தேவனும் எதிரிகள் வீழும்படி சாட்டையை திருக்கையில் பற்றிக்கொண்டு பார்த்தசாரதியாய் சேவை சாதிக்கின்றான். தனது சிற்றன்னை சொன்ன சொல்லை ஏற்று முடியினைத் துறந்து வனம் சென்றவன். இவ்வாறு கண்ணனாகவும், ராமனாகவும்  அவதரித்து அக்கால மகான்களை வாழ்வித்தருளின பகவான் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.     

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதில் இன் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்    
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே      1069     

      பகவான் வேதத்தின் பொருளாகவும், சுவையாகவும் விளங்குபவன். பற்றற்ற வாழ்வினை மேற்கொள்ளும் முனிவர்கள் உண்ணும் குற்றமற்ற கனி போன்றவனும் அவனே. உலகத்தார் பணிந்து போற்றும் ஆதிநாயகனும் அவனே. அமிர்தத்தைப் போன்றவனாவான். என்னை எந்நாளும் அடிமை கொண்டவன்.  இத்தகைய பெருமைகள் உடையவனை நிகரில்லலாப் பெண்கள் வாழும் மாடங்கள் நிறைந்த திருமயிலையின் அடுத்துள்ள திருவல்லிக்கேணியில் கண்டேன் என்ற கூறுகிறார் ஆழ்வார்.
      பகவான் வேத ஸ்வரூபியாக இருப்பவன். உலகில் ஒவ்வொரு மக்களின் விருப்பத்திற்கேற்றவாறு உபாயங்களையும், பலன்களையும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்படி அளிப்பவன். நந்தகோபன் வயிற்றில் பிறந்த ஆனைக்கன்று போன்ற பிள்ளையானவன். தினமும் அவனைக் காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுபவன். பூமியில் உள்ளோரெல்லாம் வணங்கித் துதிக்கும் ஜகத்காரணனானவன். தன்னை விரும்பி வருபவனைத் தூக்கி கழுத்தில் அமர்த்தி சுமப்பவனும், தன்னை நிந்திப்பவர்களை விட்டு விலகும்படி இருப்பவனும் அவனே. தினமும் சேவிக்கத்தகுந்த வடிவழகைப் பெற்றவனானவன் திருவல்லிக்கேணியில் வாசம் செய்கின்றான் என்பது இதன் பொருளாகும்.                                         

வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண் உரு ஆகி
அம்சுவை அமுதம் அன்று அளித்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே       1070  

        கிருஷ்ணனைக் கொல்லத் தாய் வடிவில் கபடமாக வந்து பாலூட்டிய பூதனை என்ற அரக்கி அலறிப் பூமியில் விழும்படி செய்தவன் எம்பெருமான். அசுரர்களுக்குக் காலனாக இருப்பவன்.  வித்யாதரர், தேவர், சாரணர், சித்தர் முதலானவர்கள் வியந்து போற்றும்படி மோகினி வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு அமுதத்தை வழங்கியவன். அத்தகைய பெருமைகளைக் கொண்டவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன் என்ற கூறுகிறார் ஆழ்வார்.

      கம்சன் பலவிதமாக கிருஷ்ணனைக் கொல்வதற்கு முயன்று தோற்றுப் போனான். பூதனை என்னும் அரக்கியை பெண் உருவம் கொண்டு தனது விஷப்பாலை அருந்திக் கொல்ல நினைத்தாள். கிருஷ்ணன் அவளை கொன்று முடித்தான். அதுபோன்று திருமால் தேவர்களுக்காக பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, அசுரர்கள் அதனைப் பறித்தனர். ஜெகன்மோகனனான பெருமான் மோகினி உருவம் கொண்டு அமுதத்தை மீட்டெடுத்தார். இத்தகைய பெருமான் நம்மைக் காக்க திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான் என்பது இதன் பொருளாகும். 

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து
ஆயர் எந்தம்மோடு இன ஆநிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே.   1071                             

      இந்திரனுக்கென்று யாதவர்கள் கொண்டாடிய விழாவில் பழங்காலம் தொட்டு செய்து வருகின்ற மந்திர விதிப்படி பூஜை நடத்தாமல் தடுத்த கண்ணன் மீது சினம் கொண்டு இடைவிடாமல் மழை பொழிவிக்க ஆயர்கள் மனம் நொந்தனர். எங்கள் தலைவனே! எங்களோடு பசுக்கள் இனமும் துன்பப்படாது காத்தருள்வாய் என்று பிரார்த்தனை செய்தனர். அப்போது பெரிய கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து அருளினவனை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.

      இந்திரனுக்கு செய்யவுள்ள பூஜை குறித்து கண்ணன் வினவியபோது வருடத்திற்கு ஒருமுறை இத்தகைய பூஜை செய்து அவனை மகிழ்விப்போம் என்றனர். உங்களை எல்லாம் காப்பது இந்த கோவர்த்தன மலை. எனவே அதனை வழிபடுவதே சிறந்தது என்றான். இதனால் சினம் கொண்ட இந்திரன் கோகுலத்தில் அடைமழை பெய்வித்து அவர்களை துன்பத்தில் ஆழ்த்தினான். ஆனால் கண்ணனோ கோவர்த்தனத்தை தாங்கிப் பிடித்து மக்களையும் ஆநிரைகளையும் காத்தருளினான். அத்தகையவன் இன்று திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான். 

இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு  இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு  எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணிக் கண்டேனே.   1072     

      தனக்கு இனிய  துணைவியான தாமரையில் பிறந்த திருமகளை மார்போடு இணைத்துக் கொண்டவன். பூமிதேவியின் நாயகன். ஆயர்குலச் செல்வியான நப்பின்னையின் மணாளன். மற்றவர்க்கெல்லாம் உறுதுணையாக இருப்பவன், பஞ்ச பாண்டவர்களுக்காக தூது சென்றவன். என் குலத் தந்தையாகிய பகவானைத் திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.
      திருப்பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியை துணையாக ஏற்றார் பகவான். பூமி பிராட்டிக்கு வந்த துன்பங்களைக் களைந்து அவளையும் துணையாக ஏற்றார்.  ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையின் மணாளனாகப் பெற்றார். இத்தகையவன் உலக உயிர்கள் அத்தனையும் காத்து அருள்கிறான். சத்தியத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் துணையாக இருப்பவன். எளியவர்களையும் ஏற்பவன். இத்தகைய நற்குணங்களைப் பெற்ற பெருமான் திருவல்லிக்கேணியில் உள்ளான். அவனை சரண் புகுந்து பேரின்ப வாழ்வினைப் பெற வேண்டும் என்பது இதன் பொருளாகும். 

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணிக் கண்டேனே!      1073 

      திருதராட்டினன் மகனாகிய துரியோதனனின் தம்பி துச்சாதனன் திரௌபதியிடம் சென்று எங்களுக்கு அடிமை செய்வாய் என்று சொல்ல, அது கேட்டுத் துடித்து கண்ணனைக் காப்பாற்றுமாறு அழைத்தாள். திரௌபதியின் இந்த வருத்தத்தால் கௌரவர்கள் நூறு பேர்களின் மனைவிகளின் மாங்கல்யம் இழக்குமாறு செய்தான் கண்ணன். இந்திரன் மகனான அர்ச்சுனன் தேருக்குச் சாரதியாக நின்று பாரதப் போரில் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்த பகவான் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.
      அரசர்க்கெல்லாம் தாம் அரசன் என்ற செருக்குடன் செயல்பட்ட துரியோதனனின் தம்பி துச்சாதனன் கூறிய சுடுசொற்களைக் காது கொடுத்து கேட்க முடியாமல், கரிய இருள் போன்ற கூந்தலையுடைய திரௌபதி கண்ணனை நினைத்து ‘கோவிந்த! புண்டரீகாக்ஷ; ரக்ஷமாம் சரணாகதாம்’ என்று பெருமானைச் சரணடைந்தாள். அவளின் வயிற்றெரிச்சல்  காரணமாகவே பார்த்தனுக்கு சாரதியாக இருந்து கௌரவர்களின் மனைவிகள் அனைவரையும் கைம்பெண்களாக்கி கதறி அழுமாறு  செய்து முடித்தான் கண்ணன். இத்தகைய பெருமான் அல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக அருள் பாலிக்கின்றான் என்பது பொருளாகும். 

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.  1074 

      பரதாழ்வானும், சத்ருக்னனும், இலட்சுமணனோடு சீதாப் பிராட்டியும் எல்லாக் காலங்களிலும் துதி செய்யும்படி வீற்றிருப்பவன், இராவணனைக் கொன்ற எம்பெருமான், அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன். அல்லி மலர்கள் மணம் வீசும் குளிர்ந்த சோலைக்குள் குயில்களின் பாட்டிற்கேற்ப ஆடும் மயில்கள் நிறைந்தது. சூரியனின் கதிர்கள் நுழைந்தறியாத சோலை சூழ்ந்தது அந்த திருவல்லிக்கேணி என்ற பொருளில் ஆழ்வார் பாடுகிறார்.
      தந்தைக்கு மகனாக, தாய்க்குப் பிள்ளையாக, மனைவிக்கு கணவனாக, தம்பிக்கு அண்ணனாக, பகைவர்களுக்கு காலனாகத் திகழ்ந்தவன் இராமன். இலக்குமணன் ஸ்ரீராமனை விட்டு பிரிய இயலாத காரணத்தினால் பிராட்டியுடன் தம்மையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டினான். இவற்றோடு பரத சத்ருக்னனையும் தம் மனதில் சேர்த்தான். இத்தகைய ஸ்ரீராமனை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார். சூரியனே உள்ளே வராதவாறு குளிர்ச்சியான அழகிய மணம் வீசும் சோலைகள் நிறைந்தும், அழகு மயில்கள் நடனம் புரியவும், குயில்கள் கானம் இசைக்கும் தலமாக இத்தலமாக விளங்கியது என்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது. 

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.       1075 

      பள்ளியில் படித்துவிட்டு வந்த தன் மகனாகிய பிரகலாதனுடைய வாயிலிருந்து விஷ்ணுவின் ஓராயிர நாமங்கள் வெளிவர, அதை எள்ளளவும் பொறுக்க மாட்டாமல் இரணியன் மகனைக் கோபித்தான். தூணிலே இருப்பான் என்று மகன் சொல்ல தூணை கதையால் உடைக்க, பிறை போன்ற வளைந்த பற்களுடன், தீக்கண்களுடன், அகன்ற வாயைத் திறந்து இரணியனை மடிமீது இருத்தி அழித்த தெளிசிங்கப் பெருமானாக வந்தவரை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் ஆழ்வார்.
      இறவாத வரம் பெற்றவனும், அனைவரும் தன்னைக் கடவுளாக வணங்குமாறு செய்வித்த இரணியன் தன் மகனையும் ‘இரண்யாய நம: என்று கூறுமாறு தெரிவித்தான். ஆனால் பிரகலாதனோ அஷ்டாக்ஷர மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்று தொடர்ந்து சொல்லி வந்தான். இதனைக் கண்டு வெறுப்புற்ற அசுரன், மகனென்றும் பாராமல் பல்வேறு சித்ரவதைகள் புரிந்தான். தூணில் இறைவன் உள்ளான் என்று கூற, இரணியன் தூணை உதைக்க அதிலிருந்து பிரவேசித்த நரசிம்ம மூர்த்தி அசுரனை வதம் செய்தார். அத்தகைய பெருமானை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார். 

மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை
தேன் அமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.     1076     

      மீன்கள் நிறைந்த தடாகத்தில் தினமும் வழிபாட்டிற்காக புதுத் தாமரை மலர் பறிக்கும் கஜேந்திரன் என்ற யானை துதிக்கையைத் தூக்கிப் பிளிறுமாறு, முதலை ஒன்று அதன் காலைப் பற்றியது. அந்த யானையின் துன்பம் தீர்க்க கருடன் மீது அமர்ந்து விரைந்து வந்த பகவான் சுதர்சனச் சக்கரத்தை முதலை மீது ஏவினான். யானையும் முதலையும் முற்பிறவியில் அரசர்களாக பிறவி எடுத்து பெரியோர்களை அவமதித்த காரணத்தால் அவர்கள் இட்ட சாபத்தின் காரணமாக அடுத்த பிறவியில் யானையாகவும், முதலையாகவும்  பிறந்தனர். யானையை முதலையிடமிருந்துக் காத்த அந்த எம்பெருமானைத் திருவல்லிக்கேணியில் நான் கண்டேன். தேன் நிறைந்த மலர்களையுடைய சோலைகள் நிறைந்த பெரிய மாடங்களைக் கொண்ட மயிலையை அடுத்து இருப்பது அந்தத் திருத்தலமாகும். 

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நல் மயிலைத் திருவல்லிக்கேணி  நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான்  உலகே.     1077 

      நித்யமாய் குளிர்ந்த நந்தவனங்களும், நீர்நிலைகளும், பொய்கையும், மதில் சுவரும், மாட மாளிகைகளும், மண்டபங்களும் கொண்ட பாண்டிய குல மன்னனான தொண்டைமான் அமைத்த மயிலைக்கு அருகிலுள்ள திருவல்லிக்கேணியில் நின்றருளும் பெருமானைக் குறித்துப் பாடியவரும், சிறந்த வைஷ்ணவ லஷ்மியை தன்னகத்தே கொண்டவருமான திருமங்கை மன்னன் அருளிய சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பக்தியுடன் பாடவல்லவர்கள் ஆனந்தமயமான வைகுந்தத்தை ஆளப்பெறுவர் என்று ஆழ்வார் கூறகிறார்.
      திருவல்லிக்கேணி தலத்தின் அருகில் அழகிய மலர்வனங்களும், பொய்கையும், மாட மாளிகைகள் கொண்ட மதில் சுவர்களை அரசன் தொண்டைமான் அமைத்துள்ளான். இத்தலத்துப் பெருமான் அடியார்களை எதிர்பார்த்த வண்ணம் நின்றருளுகிறான். பாண்டிய மன்னனுக்குத் தென்னவன் என்றும் பெயர் உள்ளது. ‘தென்கூடல் கோன் தென்னவன்’ என்று பெரியாழ்வாரும் பாடியுள்ளார். அழகிய சிறந்த மாதர்கள் வாழும் இடமான மயிலையைக் குறிப்பிடுகிறார் ஆழ்வார். இதனை வடமொழியில் ‘மஹிளாபுரீ’ என்றும் தமிழில் ‘மயிலை’ என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தனை சிறப்புமிக்க மயிலைக்கு அருகில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாக பெருமான் சேவை சாதிக்கின்றார் என்ற பொருளில் அமைந்துள்ளது. 

பேயாழ்வார்                                                                                                     மூன்றாம் திருவந்தாதி 

வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று          2297 

      அழகிய இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவில் தோன்றிய மகாலட்சுமி வீற்றிருக்கும் திருமார்பை உடையவன். கரையில் வந்து வீசும் வெண்மையான அலைகளில் உண்டான சிவந்த பவழங்களும், வெண்மையான முத்துக்களும், மாலையில் ஏற்படும் அலங்காரத் தீபங்களாகத் தோற்றமளிக்கும் திருவல்லிக்ககேணியில் அருள் புரியும் பாரத்தசாரதி எனக்குத் தஞ்சம் அளிப்பார் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      திருப்பாற்கடலிலிருந்து தம் திருவுள்ளத்திற்கு வரும்போது திருவல்லிக் கேணியில் வந்து தங்கினார். அருகிலுள்ள கடலில் அலைகள் வந்து வீசி மோதும்போது சிவந்த நிறம் கொண்ட பவழங்களும், வெண் முத்துக்களும் கொழிக்கப்படுகின்றன. அவை சந்தியா காலத்தில் ஏற்றப்படும் மங்கள தீபமோ என்று எண்ணும்படி உள்ளது. இவை இரு வர்ணத்தில் பிரகாசிப்பதால் திருவிளக்கு என்று போற்றப்படுகின்றது. எந்நேரமும் மாலைப் பொழுதின் திருவிளக்காக உள்ளது. திருவல்லிக்கேணி தலத்தில் எப்போதும் மாலைப் பொழுது திருவிளக்கு எரிந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இத்தகைய தலத்தில் எழுந்தருளியுள்ள திருமாமகள் கொழுநன் எனக்கு ஸ்வாமியாகத் திகழ்கிறார் என்று கூறுவது போல் உள்ளது.      
 

திருமழிசையாழ்வார்                                                                             நான்முகன் திருவந்தாதி 

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்?
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மாவல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து அணை.      2416 

      பெரிய அலைகள் கடலில் வந்து வீசும் சிறந்த மயிலை நகருக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணியில் தொண்டைமான் சக்ரவர்த்தியின் பிரார்த்தனைக்காக பார்த்தசாரதியாக தரிசனம் கொடுத்தவன், ஐந்து தலைகளையும், ஐந்து வாய்களையும் கொண்ட ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கிறான். வாய் திறந்து ஒன்றும் பேசாமல் உள்ளானே!  திருவடியால் உலகினை அளந்த களைப்போ என்று வினவுகிறார் ஆழ்வார்.
      அர்ச்சாவதாரத்தில் பெருமான் நின்ற, கிடந்த, இருந்த நிலையில் நமக்கு சேவை சாதிக்கின்றார். ஒருநாளும் தனது சோதிவாயால் பேசியதில்லை என்பது ஆழ்வார்கள் அறிவார்கள். இருப்பினும் பகவான் பெயரில் கொண்ட அதீத பக்தியால் நேரடியாகப் பேசி தனது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் புளிங்குடி திவ்ய தேசப் பெருமாளிடம் நேரில் பேசுவது போல் அமைந்துள்ளது. இவரே திருக்குடந்தை ஆராவமுதனை பாடும்போது ‘நடந்த கால்கள் நொந்தனவோ’ என்று பரிவுடன் பாடுகிறார். இருப்பினும் சோதிவாய் திறந்து ஒரு வார்த்தை பேசாமல் அரவணையின் மேல் அரிதுயில் கொண்டுள்ளாரே என்று கேட்டு, காடும், மேடும், பூமியையும் தனது கால்களால் அளந்ததால் ஏற்பட்ட களைப்போ என்று வினவுகிறார் ஆழ்வார்.


புதன், 26 நவம்பர், 2025

61. திருநீர்மலை

 


திருமங்கையாழ்வார்                                                                                  பெரிய திருமொழி 

அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம்                                                                                                                                            திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது                                                                                                                                                நீர்மலையே.  1078 

      கண்ணனாக அவதரித்த காலத்தில் நப்பின்னையுடனும், மலர் மகளோடும் அன்புடன் கலந்திருப்பவன். அசுரர்களிடம் இரக்கமின்றி இருப்பவன், என்றும் உறையும் ஊர் திருநீர்மலையாகும். சோலைகளால் சூழப்பட்ட திருநறையூர், திருவாலி, திருக்குடந்தை, திருக்கோவலூர் முறையே நின்றவனும், அமர்ந்தவனும், இருந்தவனும், நடந்தவனும் உள்ள எம்பெருமான் இந்நான்கு நிலைகளில் நீர்மலையில் காட்சி தருகிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
      இப்பாசுரத்தில் ‘ஆயர் குலக்கொடி’ என்பது நப்பின்னையைக் குறிப்பதாகும். ‘அணிமாமலர் மங்கை’ என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். அவளின் அம்சமானவளே ருக்மிணி பிராட்டியாகும். மூன்று பிராட்டிகளை அடைய அசுரர்களை அழித்தவனாவான். அரக்க குணம் கொண்ட துரியோதனனை குருட்க்ஷேத்திரத்தில் பகவான் அழித்தார்.  இராவணனை இலங்கை போரில் அழித்தார். இரண்ய சிசுபாலர்களை அழித்து மக்களைக் காத்தார். பலரை துன்புறுத்தி வந்த கம்சனையும் அழித்தார். எனவே அசுர குணம் கொண்டவர்களுக்கு பகவான் இரக்கமே காட்டமாட்டார் என்பது இப்பாசுரவழி அறியப்படுகிறது. 

காண்டா வனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து  அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே.   1079 

      தேவர்களின் தலைவனான இந்திரனின் காண்டவ வனம் என்கின்ற காட்டை அவன் காண அக்னியின் பசி தீர உண்ண உத்தரவு தந்தவன். பாரதப் போரில் பூமி பாரங்களை நீக்கி உலகைக் காத்தவன். இரணியனின் அகன்ற மார்பைப் தன் நகங்களால் பிளந்து நரசிங்கமாய் உருவெடுத்தவன், வாமனனாய் மூன்றடி மண் பெற்று திரிவிக்ரமனாய் ஓங்கி வளர்ந்த எம்பெருமான் அருளும் இடம் திருநீர் மலையாகும் என்கிறார் ஆழ்வார்.
      காண்டவ வனம் என்பது தேவேந்திரனுக்கு உரியதான பூலோகத்திலுள்ள காடு. அக்னிதேவன் அந்தண வேடம் பூண்டு தன் உணவுக்கு காண்டவ வனம் வேண்டும் என்று கேட்டான். அக்காட்டில் துஷ்டர்களும், அரக்கர்களும் நிரம்பி இருந்ததால் கண்ணனும் அதனை அக்னி பகவானுக்கு அளித்தான். அக்காடும் முழுமையாக எரிந்து அக்னி தன் பசியைத் தீர்த்துக் கொண்டான். இவையனைத்தும் பூபாரம் நீக்க பகவான் செய்த திருவிளையாடலாகும். இத்தகைய பெருமான் திருநீர் மலையில் சேவை சாதிக்கின்றான். 

அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர்  உருவின்
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணிகொண்டு  அணிசேர்
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது  நீர்மலையே.   1080 

      அழகுள்ள திருமேனியில் தீக்ஷ்ணமான திருவாழியோடு, கலப்பையும், பாஞ்சஜன்யம் என்ற சங்கையும் தரித்தவனாயும், மனோகரமான முத்துவடங்களணிந்த பூமிபிராட்டியின் பாரத்தை நீக்கியவன். விரோதம் கொண்ட துரியோதனாதியரை அழித்துப்  பாரதப் போரில் கூட்டம் கூட்டமாக வீரர்கள் மடிய ஜயத்ரதனைக் கொல்ல சக்கரத்தால் சூரியனை மறைத்து சாரதியாய் நின்று பகை முடித்த துவாரகாதீசன் ஸ்ரீராமன் வீற்றிருக்கும் இடம் திருநீர்மலையாகும்.
      திருவாழி, திருச்சங்கு, கலப்பை ஆகியவற்றுடன் காட்சி அளிக்கும் இப்பெருமான் துஷ்டர்களும் அரக்கர்களும் நிறைந்த இப்பூமியின் பாரத்தை அறவே நீக்கியவன். எம்பெருமான் பலராமனாகத் திகழ்ந்த போது கலப்பையுடன் காட்சி தந்தான். ‘ஹலம்’ என்ற சொல் கலப்பையைக் குறிக்கும். இப்பெருமானுக்கு ‘ஹலாயுதன்’ என்ற திருநாமமும் உண்டு. திருமடந்தையும், மண்மடந்தையும் ஒருசேர இத்தலத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பாகும். அத்தகையவன் நம் துன்பங்களையெல்லாம் எப்படியாவது அழிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். 

தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன் தனை வீட முனிந்து அவனால்  அமரும்
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள்                                                                                                                                                               வாள் அமரில்
பாங்காக முன் ஐவரொடு அன்பு அளவிப் பதிற்றைந்து இரட்டிப் படைவேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே.   1081 

      பகைவர்களால் தாங்க முடியாத ஒப்பற்ற நரசிம்மமாய் அவதரித்து இரணியனை அழித்து அவன் மனைவியைத் தீக்குளிக்குமாறு செய்தவன். மேலும் போர்க்களத்தில்  பாண்டவர்களோடு  சேர்ந்து நூற்றுவரான துரியோதனாதியர் அழிய உரிய நேரத்ததில் திரௌபதியின் நலத்தைக் காத்த எம்பெருமான் வீற்றிருக்கும் இடம் திருநீர்மலையாகும் என்கிறார் ஆழ்வார்.
      எவ்வகையாலும் எதிரிகளால் வரும் துன்பங்களைப் பொறுக்க மாட்டாமல் நரசிம்மராய் அவதரித்து நம்மைக் காப்பவன். கௌரவர் சபையில் திரௌபதிக்கு நேர்ந்த பெருத்த அவமானத்தைப் பொறுக்க மாட்டாமல் அவளது மானத்தைக் காத்தவன். ஆழ்வார் திருநறையூரில் பாடிய பாசுரத்திலும் ‘பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க’ என்று இதே கருத்தினைக் கூறியுள்ளார். மக்கள் மீது வைக்கும் அன்பானது மாறுதலுக்குட்பட்டதாகும். ஆனால் பகவான் மீது நாம் கொண்டுள்ள அன்பானது என்றும் மாறாது என்பதை ஆழ்வார் வலியுறுத்திக் கூறுகிறார்.

மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெடப் படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள்முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது   நீர்மலையே.   1082 

      முன்னொரு காலத்தில் கடல் நிறையுமாறு மலைக் கொடுமுடிகளைக் கொண்டு அக்கரையில் சேர்க்குமாறு சேதுவினைக் கட்டி, நிலவினைத் தொடுமாறு வாணளாவிய மதில்களைக் கொண்ட இலங்கை அழியுமாறு ஆயுதங்களைச் செலுத்தி இலங்கை வேந்தனை போர்க்களத்தில் அழிப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று எண்ணி தனது பிரம்மாஸ்திரத்தினால்  ஒளிமிக்க அவனது பத்து தலைகளையும் அறுந்து விழுமாறு செய்து பின்பு பிராட்டியுடன் அயோத்தி மாநகருக்கு வந்து சேர்ந்தான். இத்தகைய பெருமை மிக்கவன் இன்று திருநீர்மலையில் வாசம் செய்கின்றான்.
      பெருமான் ஸ்ரீராமனாக அவதாரமெடுத்து பஞ்சவடியில் பிராட்டியை பறிகொடுத்த பிறகு அனுமனின் உதவியுடன் இலங்கை அடைந்து இராவணனை முதலில் கண்ட போது ஸ்ரீராமனுக்கு சினம் வரவில்லை. இவன் நல்ல புத்தி கொண்டு திருந்துவான் என்று பல சந்தர்ப்பங்களை அளித்தார். ஆனால் அவனோ திருந்துவதாக இல்லை. மேலும் மேலும் செருக்குடன் பல குற்றங்கள் செய்தவண்ணம் இருந்தான். இனி அவனை அழித்துதான் தீரவேண்டும் என்றெண்ணி அதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தக் கொண்டு தக்க தருணத்தில் அவன் பத்து தலைகளைக் கொய்தான். 

பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும்  எல்லையினான்
நீர் ஆர் பேரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே.     1083 

      விசாலமான பூமியும், குளிர்ந்த மலைகளும், ஆர்ப்பரிக்கும் சமுத்திரங்களும், சந்திர சூரியர்களும், இவற்றையெல்லாம் உண்ட பிறகும், ‘எனக்கு வயிறு நிரம்பவில்லையே’ என்று கூறியவனும், எம்போன்றவர்க்கு ஸ்வாமியானவனும், கடல் சூழ்ந்த உலகத்துக்கெல்லாம் நான் அரசன் என்று கூறிக்கொண்டிருந்தவர்களையும், அக்குலத்தை சீறிக் களைய பரசுராமன் வடிவம் கொண்டு, உனக்கு மேற்பட்டவர் எவருமில்லை என்ற பெருமையின் எல்லையில் நிற்பவனும், நீர்வண்ணன் என்ற திருநாமத்தைக் கொண்டவனுமான பெருமான் திருநீர்மலையில் குடிகொண்டுள்ளான் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      உலகில் உள்ளவர்கள் எவரும் தம்மை வெல்ல முடியாது என்று இறுமாப்புடன் மக்களைத் துன்புறுத்தி வந்த அரசர்களையெல்லாம் தனது கூரிய கோடாரி கொண்டு வீழ்த்திய பரசுராமன் என்ற அவதாரத்தில் தோற்றம் தந்தார் பெருமான். இவன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன். இவனது வலிமையும், பெருமையும் அற்புதமானது.  இராணவனைவிட பரசுரமான் வலிமை மிக்கவர் என்பர். ஸ்ரீமந் நாராயணன் விபவ அவதாரத்தில் பரசுராம-பலராம அவதாரங்களில் மட்டும் ஆவேசித்து நிற்பது போன்றுள்ளது. இத்தகைய பெருமான் திருநீர்மலையில் சேவை சாதிக்கின்றார். 

புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள்  அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிப்பணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது   நீர்மலையே1084

      கண்ணபிரான் போலவே தன்னை உருமாற்றிக் கொண்டவன் பௌண்டரீக வாசன் என்பவன். இவன் கண்ணனைப் போன்று சங்கு சக்கரம் தரித்துக் கொண்டு யானே கண்ணன் என்று மக்களை ஏமாற்றி வந்தான். அத்தகையவனை தன் சினத்தைக் காட்டி அவனது புகழ் மங்கும்படி மாய்த்தான். அத்தகையவனின் உயிரை அபகரித்தவனும், யாருக்கும் அடிபணியாத இரணியாசுரனை இரண்டாகப் பிளந்தவனான எம்பெருமான் நீர்வண்ணனாக திருநீர்மலையில் சேவை சாதிக்கின்றான்.
      பௌண்டரீகவாசன் என்பவன் கண்ணனைப் போன்று உருமாறி மக்களை ஏமாற்றி தானே கண்ணன் என்று சொல்லி வந்தான். மேலும் அவன் கண்ணனை போருக்கு அழைத்து அவனது செருக்கினைப் பறைசாற்றிக் கொண்டான். இதனையறிந்த கண்ணன் மக்களிடம் தன் சொரூபத்தைக் காட்டி உண்மையை விளக்கினான். பௌண்டரீகவாசனின் அகம்பாவத்தை அழிப்பதற்கு அவனை போருக்கு அழைத்து போரில் அவன் புறமுதுகிட்டு ஓடுமாறு செய்வித்தான்.  அத்தகையவன் திருநீர்மலையில் வாசம் செய்கின்றான் என்பது இதன் பொருளாகும்.   

பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார் அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மாமலர் தூய்
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து  ஆர்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது  நீர்மலையே.  1085 

      இவ்வுலகில் மயிற்தோகையினைக் கையில் ஏந்திக் கொண்டு நடமாடும் திகம்பரர்கள் எவ்வித அச்சமுமின்றி நாணமுமின்றித் திரிபவர்கள். இத்தகையவர்கள் தரையில் புழு பூச்சி நடமாடுவதால் அதனை அழிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதால் தங்களது மயிலிறகிறால் அவற்றினை ஒதுக்கி ஒதுக்கி பின் நடந்து செல்வார்கள். தங்களை  வருத்திக் கொள்ளும் இவர்கள் தங்கள் செயல்களில் உள்ள  வேறுபாட்டினை மறந்து அழகுமிக்க மலர்களை பெருமானுக்குச் சமர்ப்பித்து பக்தி மேலோங்க மனங்குழைந்து வேண்டி நிற்பவர்களுக்கு நீர்வண்ணப் பெருமான் சேவை சாதிப்பான் என்பது பொருளாகும்.
      ஜைன மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஜீவகாருண்யக் கொள்கைகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். எனவே தரையிலிருக்கும் புழு பூச்சிகளைக் கூட இம்சிக்கக் கூடாதென்று தங்களது மயிலிறகினால் அவற்றை ஒதுக்கி நடப்பார்கள். ஆனால் இவர்கள் ஒரு இடத்தில் தங்காமல் திரிந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் இவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொண்டு இறைவனை அடையும் கொள்கையினை மேற்கொள்வார்கள். இத்தகைய பழக்கத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வேறுபடுத்தி நீர்வண்ணப் பெருமானை வந்தடையுங்கள் என்று கூறுகிறார்.     

பேசும் அளவு அன்று இது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள் மலர் மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்  மதிஇல்
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே   1086 

      நம்மவர்களே! இத்தலமானது தன்னை வணங்கியவர்களின் பாபங்களை அழிக்கும் தன்மையால் நீர்மலையே நாம் உய்வதற்கு தகுந்த இடமாகும்.  ஐம்புலன் வழியாக இன்பம் அனுபவிக்க மனம் தூண்டுகிறது.  நாம் அதன்படி நடக்கிறோம்.  அதனால் துன்பம் கொண்டு வேதனையுற்று கரையேறவும்  முடியாமல் அதிலேயே உழலும் அறிவற்றோர் செல்ல முடியாத எம்பெருமான் அருளும் இடம் நீர்மலையாகும்.  அன்றலர்ந்த மலரில் படிந்து மணக்கின்ற அழகிய வண்டுகள் ரீங்கரிக்கும் பசுமையான சூழலுக்கு இடையிலுள்ளது இத்திருநீர்மலையாகும்.
      நாம் அடைந்து உய்வதற்கு ஏற்ற இடமாக நீர்மலைத் திகழ்கின்றது.  இப்பெருமானிடம் பணிந்தால் நம் தீவினைகள் உடனே நாசமாகிவிடும். சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்து விஷயாந்தரங்களிலே  செல்லப்பெற்று மிகவும் வருந்துகிறவர் புத்திகெட்ட அற்ப மனிதர்களாவார்கள். அப்படிப்பட்டவர்களால் அடைய முடியாதவன் எம்பெருமான். அப்போது மலர்ந்த மலரின் மேல் படிந்துள்ள பரிமளத்தை ஏற்றுள்ள வண்டுகள் பாடி பரவசித்து உலாவும் இடமானது பெருமானின் உறைவிடமான நீர்மலையாகும். 

நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல் நிலவும் புகழ் மங்கையர் கோன்   அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு  உடனே
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி  இலங்க ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே.     1087    

      சர்வேஸ்வரன் நித்யவாசம் செய்யம் திருநீர்மலை பற்றி போரில் யானையை நடத்தும் திறன் படைத்த திருமங்கை மன்னராகிய கலியன் இயற்றிய இத்தமிழ்ப் பாமாலையை பக்தியுடன் படிப்போருக்கு அப்போதே தீவினைகள் அகன்றொழியும்.  விரும்பினால் சுவர்க்க வாசமும் கிடைக்கும். மேலும் பெரிய சமுத்திரங்களால் சூழப்பட்ட இவ்வுலகத்தை சந்திரனையொத்த வெண்கொற்றக்குடைக் கீழ் மன்னர்களாய் ஆட்சி செய்து திருமாலின் திருவடியைச் சென்றடைவர்.
      இடைவிடாமல் பெருமானை நினைத்து இப்பாசுரங்களைப் பாராயணம் செய்பவர்கள் பெரும் புகழ் பெற்ற ராஜனாக இருப்பார்கள். மேலும் மதக் களிற்றை அடக்கியாளும் வல்லவரான திருமங்கையாழ்வார் இயற்றிய இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள் எத்தனை பாவங்கள் அடைந்தாலும் அப்போதே அவர்களை விட்டொழியும். அதனால் மோட்சத்தைப் பெறுவார்கள். மேலும் இவ்வுலகத்தை சிறப்புற நெடுநாள் ஆட்சிபுரிந்து பரமபதம் அடைவர்.   எனவே இப்பாசுரங்களைப் பாராயணம் செய்யும் நிலையில் இருவேறு நன்மைகள் பெறுவர் என்பது இதன் கருத்தாகும். 

அலங்கெழு தடக்கை ஆயன் வாயாம்பற்கு ஆழியுமால் என்னுள்ளம் என்னும்
புலங்கெழு பொரு ந¦ர்ப்புட்குழிபாடும் போதுமோ ந¦ர்மலைக்கு? என்னும்
குலங்கெழு கொல்லிக் கோமளவல்லி கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்திருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே.   1115 

      திருவிடந்தைப் பெருமானே! இப் பெண்ணானவள் ‘கலப்பையைக் கையில் தரித்த கண்ணபிரானின் குழலோசைக் கேட்டு என் உள்ளம் உருகுகின்றது’ என்று கூறுகிறாள்.  நீர்வளம் பொருந்திய அழகிய திருப்புட்குழி என்னும் தலத்தில் விஜயராகவனாக சேவை சாதிக்கும் பெருமானைக் குறித்துப் பாடுகிறாள்.  ‘திருநீர்மலைக்குச் செல்வோமா’ என்கிறாள். கொல்லிப் பாவை போன்ற கொடி இடையைக் கொண்ட அழகிய தோள்களையுடையவள், இடைவிடாமல் மழை போன்று கண்ணீரைச் சொரிகின்ற என் மகள் விஷயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தாய் கேட்பது போன்று இப்பாசுரம் அமைந்துள்ளது. 

ஓடா அரி ஆய் இரணியனை ஊன் இடந்த
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாள்தோறும் நாடி நறையூரில் கண்டேனே.        1521 

      நாட்டில் நடமாடாத அபூர்வமான வடிவத்தில் தோன்றிய நரசிம்மரை, இரணியனின் உடலைக் கிழித்து அழித்தவரை, இளமை பொருந்திய தருக்களைக் கொண்ட தோட்டங்கள் சூழ்ந்த திருநீர் மலையில் அருள் புரிபவரை, வாடாத அழகிய மலர்களையும், திருத்துழாய் மாலையையும் திருமுடியில் அணிந்தவரை நாள்தோறும் தேடியலைந்து பின் திருநறையூரில் கண்டு தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.    
      பரம பக்தனான பிரகல்லாதனுக்கு நேர்ந்த தொடர் துன்பங்களைக் கண்டு மனம் கொதித்து அதனை பொறுக்க மாட்டாமல் நரசிம்மமாய் அவதரித்து இரணியனின் உடலைப் பிளந்து அவனை அழித்தார்.  பகவான் அபூர்வமான வடிவில் அவதாரமெடுத்தார். மேலும் அபூர்வமான செயல்களையும் செய்தவண்ணம் உள்ளார். அசுர சக்திகள் வீழ்ந்து கொண்டே இருப்பதால்தான் இவ்வுலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றது. இத்தகைய பகவான் திருநறையூரில் உள்ளார். அவரை தரிசித்து பெறற்கரிய பேறுகளைப் பெறுங்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். 

கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே! திருநீர்மலை நித்திலத் தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.       1554 

      எனது ஐஸ்வர்யமே! திருநீர் மலையில் பள்ளி கொண்ட முத்துமாலை போன்றவனே! அடியேனுக்குப் பாதுகாப்பு தந்தவனே! எனக்கு உன் அருளின்றிப் புகலிடம் இல்லை. திருத்தலங்களைப் போற்றி வணங்கும் அன்பர்களுக்கு கதியாக இருப்பவனே! உன்னைத் தரிசனம் செய்து உள்ளத்தில் பதிக்கும் பேறு பெற்றேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      நமக்குப் பாதுகாப்புத் தருவது பணம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மரணம் நம்மைத் தழுவும்போது கோடான கோடி பணத்தை விட்டுத்தான் நாம் செல்ல வேண்டியுள்ளது.  அதுபோல் பட்டம், பதவி, புகழ் இவை அனைத்தும் நம்முடன் வரப்போவதில்லை. பகவான் ஒருவரே நமக்கு நிரந்தரப் பாதுகாப்பு. இந்த ஞானம் நமக்கு வந்துவிட்டால் சுயநலம், துரோகம், தீய குணங்கள் இவை அனைத்தும் நம்மை விட்டு அகன்று ஓடிவிடும். எவருக்கும் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. நம் உடலே திருக்கோயிலாக மாறிவிடும். அக்கோயிலில் பகவான் நிரந்தரமாக குடியேறிவிடுவார். 

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ?   1660 

      அருவிகள் நிறைந்த திருவேங்கடம் அவன் இடம், இல்லை இல்லை திருநீர்மலை என்றும் பிதற்றுகிறாள். திருமெய்யப் பெருமானைப் பற்றி விசாரித்து வருகின்றாள்.  பெருமை பெற்ற கண்ணபுர சௌரிராஜனைப் பற்றி பேசும்போது உருகிப் போகிறாள்.  சரீரம் மட்டுமின்றி அவளது உள்ளமும் பலவீனமாயின. இப்படி ஒரு நிலையும் ஏற்படுமா? என்று புலம்பித்  தவிக்கிறாள் தாயார்.
      பகவானிடம் அன்பு தோன்றிவிட்டால் சரீரம், மனம், புத்தி இவை எல்லாமே வேறுபட்டதாகிவிடும். ஏனெனில் ஆன்மா என்பது சரீரமோ, மனமோ, புத்தியோ இல்லை. அது ஆண்டவனின் ஒளிக்கூறு.  ஆண்டவனுடன் ஐக்கியமாகும் போது அழியக்கூடிய சரீரத்தைப் பற்றியோ, நிலையில்லாத மனதைப் பற்றியோ அது கவலை கொள்வதில்லை. பகவானிடம் அன்பு மேலோங்கும்போது மற்ற எவையும் சிந்தனையில் வராது என்பது இப்பாசுரக் கருத்தாகும்.  மகள் பற்றி தாயார் வருந்திப் பாடுகிறாள். ‘கண்ணனின் மதுரமான குழலோசை என் நெஞ்சைக் கொள்ளைக் கொள்கிறது. திருப்புட்குழியின் நீர்வளத்தைப் பாடுகிறாள். திருநீர்மலை செல்ல வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறுகிறாள். தனது விருப்பம் எதுவும் நிறைவேறாததைக் கண்டு துன்புறுகிறாள். ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தை எண்ணிப் பாடுகிறாள். கொல்லிமலை கொடியிடைப் பாவையான என் மகள் படும் துன்பம் கண்டு மனம் இறங்கவில்லைய’ என்ற கூறுகிறாள். 

மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
     மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
     நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
     மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்
     அச்சோ ஒருவர் அழகியவா.         1765     

      மேக மண்டலத்தை எட்டி நிலவினைத் தொடுமளவு உயர்ந்த திருமாலிருஞ்சோலையில் அருள்புரியும் மணவாளார்! அங்கிருந்து புறப்பட்டு என் உள்ளத்திலும், கண்களிலும் நிலையாக நின்று நீங்காமல் இருக்கிறார். திருநீர்மலைப் பெருமானாய் இருக்குமோ!  இன்னாரென்று நான் அறிய முடியவில்லையே!  அழகிய இறக்கைகளைக் கொண்ட கருடன் மீதேறி வந்த இவர் மேக மண்டலத்தை விட உயரமான ஒரு பொன்மலை படிந்த காளமேகம் போல் இருக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள். அச்சோ! இவர் அழகினை ஒருவரால் சொல்ல இயலுமோ என்று கூறுகிறார் ஆழ்வார்.
      மாலிருஞ்சோலையில் அருள் புரிபவன் என் கண்களிலும் நிலையாக நின்றுவிட்டார். இவர் அழகை ஒருவராலும் சொல்ல இயலுமோ? இவர் யார் என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லையே என்று பரக்கால நாயகியானவள் புலம்புகிறாள். ஆத்ம ஐக்கியத்திற்கு இப்பெண் தகுதி பெற்றுள்ளாள் என்பது இதன் மூலம் அறிய முடிகின்றது. பரம்பொருளை புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவனுள் இணையும் நிலையில் அவனே நம்மிடம் நெருங்கி வருவான் என்பது இதன் பொருளாகும். 

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே.    1848 

      ஈடில்லாத நல்லுறவாய், எனக்கு உயிரினும் மேலான ஆத்மாவாய், ஒப்பற்ற பொருளாய், இனிமேல் வரப்போகும் பரமபதமாய் இருக்கும் கோசலை மைந்தனை நேற்று வணங்கியது திருநீர்மலையில்.  இன்று கருக்கொண்ட பயிர்களால் சூழப்பட்ட திருக்கண்ணமங்கையில் சென்று வணங்குவோம் என்று கூறுகிறார் ஆழ்வார்.
      பெண்கள் திருமணம் முடித்து புக்ககம் செல்லும் தருவாயில் தன் பிறந்த இடத்தில் நெடுநாள் பழகிய தோழிகளின் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று சொல்லிக் கொண்டு செல்வது என்பது நமது மரபு.  அது போன்று ஆழ்வாரும் தன் புக்ககமான பரமபத பயணத்திற்கு செல்வதற்கு முன் தனது ஈடுபாட்டிற்குகந்த திருப்பதிகளான திருநீர்மலை சென்று நீர்வண்ணப் பெருமாள் முன்னிலையிலும், திருக்கண்ணமங்கை சென்று பத்தராவிப் பெருமான் முன்னிலையிலும் தான் பரமபதம் செல்வதாகப் பிரிவாற்றாமையுடன் கண்ணீர் மல்கத் தெரிவித்துவிட்டு செல்கின்றார். ஆழ்வாரின் இத்தகைய பண்பு இப்பாசுரவழி அறிந்து நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது எனலாம். 

கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
     கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
     பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
     எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
     இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?    2069

 

      எனது பெருமானின் திருமேனி கருத்த மேகத்தின் நிறமாகும். திருக்கண்களும், திருவாயும், திருக்கைகளும், திருப்பாதங்களும் தாமரை மலர் போன்றவை.  அவன் பூமிபிராட்டியின் பக்தன். தாமரை மலரில் பிறந்த திருமகளிடம் மயக்கம் கொண்டவன் என்றெல்லாம் மகள் பிதற்றுகிறாள் என்று தாயார் புலம்புகிறாள். நான் பாவி அதனால்தான் என்னை விட்டு போகாதே என்று கூறியும் என்னிடமிருந்து விலகினாள். பகவான் பள்ளிகொண்ட திருவரங்கம் போவேன் என்றும் பரந்தாமன் உறையும் திருநீர்மலைக்கு போவேன் என்றும் அடம் பிடிக்கிறாள். அடக்கம் விட்டவர்கள் இப்படித்தான் செய்வார்கள்.
      தன் மகள் பகவான் பேரில் கொண்ட பெருமைகளில் மூழ்கி விட்டதால் அடக்கம் விட்டவர்கள் என்று தாய் புலம்புகிறாள். அடக்கம் என்று உலகியல் வாழ்வில் மூழ்குவது அன்று. காம இச்சைகளில் உழல்வதன்று. வாழ்நாளை வீணடித்து தேவையற்ற காரியங்களில் இருப்பது அடக்கமன்று. இவைகள் அனைத்தும் மனிதனின் அறியாமைகள். தனது மகள் பகவான் மீது கொண்ட பக்தியை புரிந்து கொள்ள இயாலதவளாக தாய் இருக்கிறாள் என்றே கருத வேண்டும்.  

பூதத்தாழ்வார்                                                                                           இரண்டாம் திருவந்தாதி

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால்         2227 

      நீலமணி போல் அழகுடன் விளங்குபவனும், வள்ளலானதால் நீண்ட திருக்கைகளை உடையவனுமான எம்பெருமான் பள்ளிகொண்ட இடம் திருவரங்கம். குடியிருக்கும் தலம் திருக்கோஷ்டியூர்.   மேலும் பல நாட்களாக  நித்திய வாசம் செய்யும் இடம் திருமலை.  பலநாள்  பயின்றது அழகு மிக்க சோலைகள் சூழ்ந்த திருநீர்மலையாகும்.   பாகவதர்கள் இதர போகங்களில் லாப நஷ்டங்களில் மனம் செலுத்துகிறார்கள்.  இவ்வுலகச் செல்வங்களைப் பெறுவதாலும், இழப்பதாலும் பல துன்பங்களை அடைந்து வருகிறபடியால் எம்பெருமான் பல திவ்ய தேசங்களில் கோயில் கொண்டு அருள்புரிகிறார். இத்தலங்களில் பெருமான் பிரசாதமாகவும், தீர்த்தமாகவும் தன்னை ஆட்படுத்திக் கொண்டுள்ளார். தன்னைக் கொள்வாருண்டோ என்று நெடுங்காலம் படுத்துக் காத்துக் கிடப்பது திருவரங்கத்தில், விபவம் போல் வாழ்ந்து மறைந்தது திருக்கோட்டியூரில், சேதனனை வசீகரிக்க நெடுங்காலமாய் தன் அழகை காட்டுது திருமலையில், அதனிலும் திருப்தி கொள்ளாமல் தனது நிலையழகையும், இடையழகையும், இருப்பழகையும், நடையழகையும் ஒருமித்தே காட்டுவது திருநீர்மலையிலாகும்.


Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...