வெள்ளி, 16 ஜனவரி, 2026

2. திருக்கோழி - உறையூர்

 


குலசேகராழ்வார்                                                                         பெருமாள் திருமொழி

       

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லை இல் அடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே.    667

 

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிராட்டியான திருமகளின் கணவரான அரங்கனுடைய உண்மையான பக்தர்களுடைய அளவிடமுடியாத அடிமைத் திறத்தினில் எப்போதும் ஈடுபாடு கொண்ட மனத்தவராய் இருப்பவர், கொல்லி நகர் காவலனாகவும், மதுரை அரசனாகவும், உறையூர் வேந்தனாகவும் விளங்கும் குலசேகர ஆழ்வார் அருளிய இந்த இனியதான சப்தங்களையுடைய பாசுரங்களை மெய்யன்போடு பாடும் பாகவதர்களுக்கு நான் என்றும் தொண்டனாக இருப்பேன்.

        பெருமானின் கல்யாண குணங்களில் ஒன்று அடியவர்களின் குற்றங்களையெல்லாம் குணமாகக் கொண்டு அக்குற்றங்களை நம்மிடத்திலிருந்து அகற்றி நமக்குக் கருணையை புரிபவன். சிறு குற்றத்தைப் பெரிதாக்கி அற்பசுகம் காணும் குணம் கொண்ட மக்களிடையில் பகவான் நாம் செய்யும் பெரிய பாவங்களையும் மன்னித்துக் காக்கும் கருணா மூர்த்தியாக விளங்குபவன். அத்தகைய பெருமானை நாம் மறந்து திரிகின்றோம். ஆனால் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் பெற்றோர் நம்மைக் காப்பதுபோல் பெருமான் காத்து வருகிறான்.

 

திருமங்கையாழ்வார்                                                                           பெரிய திருமொழி

       

கோழியும் கூடலும் கோயில் கொண்ட
     கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
     பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
     மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி
     அச்சோ ஒருவர் அழகியவா.   1762

 

உறையூரிலும் தென்மதுரையிலும் குடிகொண்டிருக்கும் கோபாலன் தமது திடமான தோள்களில் மணம் வீசும் திருத்துழாய் மாலையும், கைகளில் சுதர்சனச் சக்கரமும், பாஞ்சஜன்னியம் என்று சங்கினையும் தரித்துள்ளார். அனைவராலும் விரும்பத் தக்க எம்பெருமான் நம் இல்லத்தில் உள்ளார்.  பண்புள்ளம் கொண்ட இளைவரான இவரது வாயின் நிறம் செம்பவளமாகும். மரியாதைக்குரிய இவரது உருவமோ அழகிய பவளக் குவியலாகும். இத்தகைய அழகை நான் என்னவென்று சொல்வேன்’ என்கிறாள்.

தோழி! இப்பெரியவர்‌ உறையூரிலும்‌ தென்மதுரையிலும்‌ கோயில்‌ கொண்டிருந்து காட்சிதந்த பெரியவர்‌ போலே இருக்கன்றார்‌. மலை போன்று வலிமை பொருந்திய நான்கு திருத்தோள்களை உடையவராக யிருக்கன்றார்‌; திருமேனி நிறத்தில்‌ கருங்கடலை ஒத்திருக்கின்றார்‌. திருக்கைகளில்‌ திருவாழியும்‌ திருச்சங்குமாய்த்‌ திகழ்‌கின்றார்‌. இப்பெரியவரை இதற்கு முன்‌ எங்கும்‌ கண்டதாக நினைவில்லை. இவர சிற்சில அம்சங்களுக்கு ஏதோ சிலவற்றை உவமை கூறினேனத்தனை ஒழிய இவருடைய வடிவழகு பேச்சுக்கு நிலமன்‌றுகாண்‌ என்கிறாள்‌.

        பகவான் ஆண், பெண், விலங்குகள், பறவைகள் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அதில் பெண்ணும் அடங்குவாள். இக்காலத்தில் ஆண் பெண் உறவில் காமம்தான் முன்வந்து நிற்கிறது. காமத்திற்கு அப்பாற்பட்டது தெய்வீக நிலை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஆத்மாதான். இதை நமக்குப் புரிய வைக்கவே பெண்ணை முன்னிருத்தி பாசுரங்கள் அமைத்துள்ளார் ஆழ்வார்.


3. திருக்கரம்பனூர் - உத்தமர் கோவில்

 

திருமங்கையாழ்வார்                                                                         பெரிய திருமொழி

       

பேரானைக் குறுங்குடியெம்பெருமானை  திருதண்கா

லூரானைக் கரம்பனூருத்தமனை  முத்திலங்கு

காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் 

ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே.   1399

 

திருப்பேர் நகரில் அப்பக்குடத்தானாக உறைபவன், திருக்குறுங்குடியில் அழகிய நம்பியாக அருள் பாவிப்பவன், திருத்தண்காலில் தண்காலப்பனாக வாசம் செய்பவன், திருகரம்பனூரில் புருஷோத்தமனாகத் திகழ்பவன், முத்துக்களைக் கொண்ட கரிய நிறமான ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும், ஏழு உலகங்களையும், ஊழிக்காலத்தில் உண்டு உமிழ்ந்தவனை நான் தென்னரங்கத்தில் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        உலகமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரம் பொருள் நம் மீது வைத்துள்ள கருணையால் பல திருத்தலங்களைக் கொண்டு அருள் பாலிக்கின்றார். ஊழிகாலத்தில் அனைத்து உலகங்களையும் உண்டும் திருப்தியடையாதவனை திருவரங்கத்தில் தரிசித்தேன். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நமது மனம் திருத்தலங்களில்தான் இறைவனுடன் சங்கமித்து ஒருமுகப்படுவதற்கான நிலை ஏற்படுகின்றது. அவ்விதம் ஒருமுகப்படும்போது இறைவனே நம் மனதில் கோயிலாகக் குடிகொள்வான். அத்தகைய ஒரு அற்புதநிலை வாய்க்கின்றவரை நாம் திருக்கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது அவசியம் என்று ஆழ்வார் கூறுகிறார். 



4. திருவெள்ளறை




பெரியாழ்வார்                                                                       பெரியாழ்வார் திருமொழி

       

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி

     உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர  

     கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில்சூழ்

     சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை

     ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே.   71

 

உன்னைத் தனது இடுப்பில் அன்புடன் சுமந்து செல்லும் கோபியர்கள், உன்னைத் விரும்பியவாறு ஆட்டுவித்து மகிழ்கிறார்கள். அவர்கள் மனம் மகிழுமாறும், அதனைக் கண்ணாரக் கண்டு கண்கள் குளிரவும், பாசுரங்கள் எழுதும் கவித்துவம் பெற்ற பண்டிதர்கள் கவிதையாகப் பொழியவும், என் ஞானக் கண்ணால் கண்டு மகிழவும், நீ செங்கீரை ஆட வேண்டும். திருக்குறுங்குடியில் உறைபவனே! திருவெள்ளறையில் அருள் புரிபவனே! திருக்கண்ணபுரத்து அமுதமே! ஏழு உலகங்களையும் ஆட்கொள்பவனே! என் அவலத்தைப் போக்க செங்கீரை ஆடுக...’’ என்கிறார் ஆழ்வார்.    

பாலகன் கண்ணனைத் தங்கள் மடிமேல் இருத்தி, சிறுமியரும், பெண்களும் தங்கள் இல்லத்திற்கு அவனை அழைத்துச் சென்று, அவனுக்கு விருப்பமானவற்றை அளித்து, அவனுடன் விளையாடி மகிழும் காட்சியைக் காண்பவர்கள் தங்கள் கண்கள் குளிர கண்டு மகிழ்கின்றனர்; கற்றவர்களோ சொல்வதற்கு வார்த்தையின்றி அவன் மழலைச் சொல்லின் மயக்கத்தில் தடுமாறி நிற்கின்றனர். அத்தகைய ஒரு பேரானந்தத்தை உன்னைப் பெற்ற எனக்கும் அருள்வாயாக! பேரருளாளா! திருக்குறுங்குடி வாமனா! திருவெள்ளறையின் செந்தாமரைக்கண்ணா! திருமாலிருஞ்சோலை அழகா! திருக்கண்ணபுரத்தமுதா! என் துயரம் களையமாட்டாயா? என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! ஏழுலகினுக்கும் இறைவா! ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

        பகவானின் செங்கீரை ஆடல் என்பது உலகத்தவரின் அவல நிலைகளையெல்லாம் மாற்றக்கூடியது. உலகத்தில் அழியக்கூடிய பொருட்களின் மீது பற்று கொள்வது அவலநிலையாகும். பகவான் ஒருவனே நமக்கு நிலையான துணை என்று கொள்வது அவலநிலையைப் போக்குவதாகும். இத்தகைய நிலையை மக்கள் பெற வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

 

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் .   192 

 

உயர்ந்த இடத்தில் நிலவு உள்ளது. அத்தகைய அளவிற்கு மாளிகைகள் நிறைந்த திருவெள்ளறை என்ற தலத்தில் கோயில் கொண்டிருப்பவனே!  சிவன், இந்திரன், பிரம்மன் ஆகியோர் வேதங்களைச் சொல்ல, பூலோகவாசிகள் மலர்களுடன் கண்ணில் படாமல் நிற்கின்றனர். இத்தகைய பெருமைகள் படைத்த உனக்குத் திருஷ்டி படாமல் இருக்க காப்பிட வாராய் கண்ணா! என்கிறார் ஆழ்வார்.

கிருஷ்ணனே! உனக்குப் பல்லாண்டு பாடிட அனைத்து தேவர்களும் வந்துள்ளார்கள். இந்திரனோடு பிரம்மன், ஈசன் அது மட்டுமன்றி முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும் உன்னை ஆராதிப்பதற்காகச் சிறந்த மலர்கள் கொண்டு வந்துள்ளார்கள். மந்திரங்களோடு தூய்மையாக்கப்பட்ட கற்பகம், பாரிஜாதம் போன்ற மலர்கள் கொண்டு வந்துள்ளார்கள்.  அவர்கள் அனைவரும் மறைந்து வந்துள்ளார்கள். இவர்கள் தூரமும் இல்லாமல் நெருங்கியும் இல்லாமல் நின்று கொண்டிருக்கிறார்கள். திருவெள்ளறையில் உயர்ந்த மாளிகைகள் உச்சியில் சந்திரன் வந்து தொடுமளவு உள்ளது. இத்தலத்து மக்களும் பெருமானைப் பல்லாண்டு பாடுவதில் சமர்த்தர்கள். புண்டரீகாக்ஷனாகத் திருவெள்ளறையில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே! என்று அழைக்கிறார் ஆழ்வார். சந்தியாகாலம் இதுவானதால் உன் விளையாட்டை முடித்துக் கொண்டு வருவாய் அழகனே! காப்பிட வாராய் என்று ஆழ்வார் அழைக்கிறார்.

பெரியாழ்வார் அன்பின் மிகுதியால் இறைவனுக்கு திருஷ்டிப்பட்டுவிடும், காப்பிட வேண்டும் என்று யசோதை மூலமாக சொல்ல வைத்திருக்கிறார்.  தேவாதி தேவருக்கெல்லாம் எட்டாத இறைவன் அன்பின் மிகுதியால் வெள்ளை உள்ளத்தோடு பேசும் அடியவர்களின் முன்பு எளிதாகக் காட்சி தருகிறார்.  

       

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப் போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என்தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்.    193

       

மதில்களை அரணாகக் கொண்ட திருவெள்ளறையில் கோயில் கொண்டுள்ள பெருமானே! என்மீது அன்பில்லாத காரணத்தினால் நான் கூப்பிட்டும் வராமல் நாற்சந்தியில் நிற்கிறாய். பால் கட்டிய பசுக்கள் கதறுகின்றன. பாலூட்ட கன்றுகள் அருகே உள்ளன.  அந்திப் பொழுதில் துஷ்ட தேவதைகள் நடமாடும். நாற்சந்தியில் நிற்காதே. உனக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும் வா! என்று யசோதை அழைப்பது போல் அமைந்துள்ளது.       நாம் இகலோக காரியங்களை ஒதுக்கி வைத்து விட்டுப் பகவானை உரிமையுடன் அழைத்தால் அவன் நம்மைத் தேடி ஓடோடி வருவான். அவனை விட்டு விலகிக் போகப் போக அவனும் நம்மை விட்டு விலகிப் போவான். பெருமான் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டும்தான். அந்த அற்புத சக்தியை அறிந்து கொள்ளாத காரணத்தினால் நம்மால் அவனைக் காண முடிவதில்லை என்று இப்பாசுரம் தெரிவிக்கின்றது.

பெருமானே! நீ காப்பிட வராத காரணத்தினால் பசுமாடுகளெல்லாம் தனது கன்றுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் அழுதவண்ணம் உள்ளன. நான் காப்பிட வருவதற்கும் கன்றுகள் அழுவதற்கும் என்ன தொடர்பு என்று கேட்க, பூச்சூடவும், காப்பிடவும் உன்னைக் கூவி நின்றொழிந்தேன். நான் சென்று கன்றுகளை அவிழ்த்துவிட்டால்தான் தாய் பசுக்களிடம் வந்து பால் கறக்க இயலும். காப்பிட வராமல் என்னைத் தவிக்கவிடும் நீ என்னிடம் சிறிதும் அன்பு இல்லாதவனாக உள்ளாயே! தெருவில் வந்து நிற்கும் வேலையைச் செய்யாதே! சந்தியாகாலம் நெருங்கியதால் தோஷம் வந்து உன்னை அண்டும். எனவே நீ தெருவில் நில்லாமல் உயர்மதில்கள் உள்ள திருவெள்ளறையில் வந்து நிற்பாயாக என்று கூறுகிறாள். உன்னைப் பல்லாண்டு பாட வானவர்கள், ஆச்சார்ய புருஷர்கள், நினது தொண்டர்கள் அனைவரும் காத்துள்ளனர்.  நான் சொல்லும் சொல் உன் நன்மையைக் கருதித்தான். எனவே என் பேச்சினைக் கேளாய் என்று யசோதை கூறுகிறாள்.

 

செப்பு ஓது மென்முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப் போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்.   194

 

என்னை எப்போதும் ஆளப்பிறந்த கண்ணா! முக்காலமும் தேவர்கள் உன்னைப் போற்றி வழிபடுகிறார்கள். முனிவர்கள் நிறைந்து வாழும் திருவெள்ளறையில் அருள்புரியும் எம்பெருமானே! ஆயர்குல சிறுமியர் விளையாடும் மணல் வீட்டையும், மணல் சோற்றையும் சிதைத்தாய். அதற்காக உன்னைக் கண்டித்தது உண்மைதான்.  அதற்காக நீ சாப்பிடாமல் இருந்தாய். இப்போது நான் உன்னைக் கடிந்து கொள்ள மாட்டேன். காப்பிட விரைவில் வா. என்று யசோதை நிலையில் ஆழ்வார் அழைக்கிறார்.

யசோதையிடமிருந்து விலகிக் கண்ணன் பெண்களிடம் சென்று விட்டான். செப்புக்கலசம் என்று சொல்லப்படுகிற மெல்லிய தனங்களைக் கொண்ட இளம் பெண்கள் மணலில் கட்டி வைத்த மண் வீடும், மணலினால் செய்யப்பட்ட சிறுசோறும் கட்டி விளையாடினதை நீ சென்று சிற்றில் சிதைத்து வைத்தாய். அவ்வமயம் நான் சினத்தோடு கண்டிக்க நீ அகல சென்று விடுகிறாய். இனிமையான சோற்றுடன் நான் காக்கும்போது நீ வராமல் போவாய்.

முக்காலமும் தேவர்களால் துதிக்கப்படுபவனாய்  முனிவர்கள் வாழும்  வெள்ளறையில்  நிற்கின்றாய்!  என்னை ஆளவந்தவனே!  எம்பிரானே!  செப்புபோன்ற  மார்பழகு உடையவர்களின்  மணல்சோறு மற்றும்  வீட்டையும்  அழித்தாய்  அப்போது நான்  கடுமையாகக் கூற  நீ சோற்றை  உண்ணவில்லை இப்போது நான் ஒன்றும் செய்யமாட்டேன்  காப்பிட வருவாயே!, என்னை ஆளப்பிறந்தவனே! திருவெள்ளறை திவ்யதேசத்தில் அடியார்கள் சூழ்ந்திருக்க முப்போதும் தேவர்கள் வந்து புண்டரீகாக்ஷப் பெருமானை திருவாராதனை செய்யும் தலத்தில் முனிவர்கள் வாழும் வெள்ளறையில் எழுந்தருளியுள்ளாய். இப்பாசுரத்தில், பெருமானை என்றும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்களை ‘முனி’ என்று கூறுகிறார் மணவாள மாமுனிகள். எனவே இப்போதாவது காப்பிட வாராய் என்று யசோதை அழைக்கிறாள்.          

       

கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்று என்று
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு இவர் ஆர்? முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரொடே தீமை செய்வாய்!
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய்.    195

 

திருவெள்ளறையில் கோயில் கொண்டுள்ள கண்ணா! அருளை வாழி வழங்கும் வள்ளலே! குறும்புகள் பல செய்பவனே! சிறார்களின் கண்ணில் மண்ணைத் தூவினாய், அவர்களை எட்டி உதைத்தாய் என்று என்னிடம் குறை சொன்ன போதும் உன்மீது நான் கொண்ட பாசம் குறையவில்லை. எனவே நீ காப்பிட வாராய்! என்று ஆழ்வார் அழைக்கிறார்.

காப்பிடுவதிலிருந்து விலகிக் கண்ணன் ஓடிவிட நினைக்கும்போது அவனை யசோதை தடுத்தாள். உடன் விளையாடும் பிள்ளைகளின் கண்ணில் மணல் தூவி, பாய்ந்து காலில் உதைத்துச் செல்வதாக உன்மேல் புகார் சொல்கிறார்கள். எண்ணிக்கையில் அடங்காத பிள்ளைகள் வந்து உன்மீது புகார் சொல்லி முறையிடுகிறார்கள்.         கண்ணன் இதனைச் சமாளித்து அவர்கள் திருவடி மண்ணால் அச்சிறார்களுக்கு நான் பூசிவிட்டேன் என்று கூறுகிறான். அத்தகைய எளிமையானவன் என்பதை ஆழ்வார் கூறுகிறார். இத்தகைய எளிமை மிக்கவனான நீ திருவெள்ளறையில்  கோயில் கொண்டுள்ளாயா? என்று வினவுகிறாள். உனது எளிமை மிக்க குணத்தினை உனது அடியார்களிடம் காட்டுவது நன்று, ஆனால் கண்டாரோடு நீ ஏன் தீமை செய்கின்றாய். வள்ளலே! உனது வனப்பானது கடலையொத்த வண்ணமாக உள்ளது. அதனை எங்களுக்குக் காட்சி அளிக்கும்படி செய்கிறாயே! இத்தகைய அழகுள்ள உனது வதனத்தை அவர்களின் பார்வை உன்மேல் விழுவதால் உனக்குத் துன்பம் வர வாய்ப்புள்ளது. எனவே நீ காப்பிட வர வேண்டும் என்கிறாள்.

         

பல்லாயிரவர் இவ் ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது எம்பிரான் நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச் சொப்படக் காப்பிட வாராய் .   196     

 

சாதுக்கள் வாழ்கின்ற திருவெள்ளறையிலே நின்று அருளுபவனே, ஞானமாகிற பிரபையை உடையவனே, எனக்கு உதவுபவனே, இந்த ஊரில், தீம்புகள் செய்யும் பிள்ளைகள் ஆயிரம் பேர் உள்ளார்கள். அவர்கள் செய்யும் எல்லா தீமைகளும் உன்மேல் ஏறுகிறதே தவிர வேறு எங்கும் போகாது. ஆதலால், நீ அவர்களோடு சேராமல், இங்கே வா. உன் திருமேனியை துதித்து மங்களா சாசனம் செய்து நன்றாகக் காப்பு இட வாராய் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.

உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி, உன்மேல் அன்புள்ளவர்கள் இருக்கின்ற இவ்விடத்திற்கு வர வேண்டும் என்று அழைக்கிறார். எம்பெருமானுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம், தானே பிரகாசமாய் (ஸ்வயம்ப்ரகாசமாய்) ஞான மயமாக இருப்பதால், ‘ஞானச்சுடரே’ என்று அழைக்கிறார். நல்லவர்கள் வாழ்கின்ற திருவெள்ளறையில் நின்றவனே வா என்று பாடுகிறார்.

        ஆயர்பாடியில் பல ஆயிரக்காணக்கான பிள்ளைகள் உள்ளார்கள். அவர்கள் தீமையென்னும் விஷமம் செய்வர். அவர்கள் தவறு செய்துவிட்டு உன்மேல் வழி சுமத்துவார்கள். அந்தப் பழி உன்மீது வருமேதவிர மற்றவர்மீது போகாது. எனவே, எம்பிரானே! அங்கு நில்லாமல் நீ திருவெள்ளறைக்கு வாராய் என்கிறாள்.  பகவான் மீது எவ்வித தோஷமுமின்றி அப்பழியை தம் மீது ஏற்றுக் கொள்பவர்கள் இத்தலத்தில் உள்ளார்கள். எனது ஞானச்சுடரே! பகவானுடைய திருமேனி திவ்யார்த்த  சொரூபமாகத் திகழ்கின்றது. ஜீவாத்மா அறிவே வடிவெடுக்காமல் பகவானுக்குத் தொண்டனாக உள்ளது. பெருமானின் பரமாத்ம சொரூபம் என்பது எங்கும் பரவி, தோஷங்கள் அண்டாதபடி, ஒளிவீசும் ஞானத்தைக் கொண்டது. அத்தகையவற்றை உனது சொரூபமாகக் கொண்டவனே! உனது திருமேனி உள்ளிருக்கும் திவ்யார்த்த சொரூபம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. உன் மேனி அதை இன்னும் பிரகாசித்துக் காட்டுகிறது. இத்தகைய திருமேனிக்கு திருஷ்டி விழப்போகிறது என்று அஞ்சுகிறாள். எனவே விரைவில் காப்பிட வாராய் என்கிறாள்.   

       

 

 

கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கரு நிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணி மாட மதிள் திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய்.    197   

 

மேகங்களானவை தவழும்படியாக உயர்த்தி உடையதாய், நவ ரத்தினங்கள் அழுத்தி அமைக்கப்பட்ட மாடங்களையும், மதில்களையும் உடைய திருவெள்ளறையில் நின்று அருளுபவனே, ‘கம்ஸன் உன்மேல் கோபம் கொண்டு கறுத்த நிறத்தையும், சிவந்த முடியையும் உடைய பூதனையை வஞ்சனையில் உன்னை முடிப்பதற்காக அனுப்பினான்’ என்கிற ஒரு செய்தியை நீ பிறந்த போதே கேட்டு இருக்கிறேன். ஆதலால், நீ அங்கே நிற்க, நான் அஞ்சுகிறேன். காப்பிட வேண்டும் படியான அழகை உடையவனே, காப்பிட வாராய் என்பது இந்தப் பாடலின் பொழிப்புரை.

கம்ஸன் ஆகாயத்தில் அசரீரி சொன்னதைக் கேட்டது முதல் தேவகியின் ஒவ்வொரு கர்ப்பத்தில் இருந்தும் குழந்தை பிறந்ததும் அவ்வப்போது அழித்து வருகையில் உனது யோக நித்திரையால் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்றபோது, அந்தக் கன்னி ‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளிந்து வளர்கின்றான்’ என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன்மீது கோபம் கொண்டு உன்னை அழிக்க முற்பட்டுக் கருநிற பேயை  ஏவி விட்டுள்ளாள். இருட்டு போன்ற நிறம் கொண்டு கண்ணனைக் கொல்வதற்காகப் பூதனையைக் அனுப்பியுள்ளான். வஞ்சனை செய்து அழிப்பதற்காக அனுப்பியுள்ளான். இதனை ஊரார் பேசக் கேட்டேன். வசுதேவர் நந்தகோபர் சொல்லகேட்ட செய்தியை நானறிவேன். கண்ணா! நீ திருவெள்ளறை தலத்திற்கு வந்து விடுவாயாக என்று கூறுகிறாள்.   மாளிகைகளின் உச்சியில் மேகங்கள், தவழ்ந்து போகும் மணிமாடங்கள், பெரிய மதில்களால் சூழப்பட்ட திருவெள்ளறையில் யாரும் உன்னை நெருங்கி வர முடியாது. வானத்து மேகங்கள் உன்னைப் பாதுகாக்கும். உன் அருள் வேண்டி வருபவர்கள் உன்னைக் காப்பார்கள். நீ அங்கே நின்று கொண்டிருந்தால் நான் அஞ்சி நிற்பேன். அழகனே! காப்பிட வாராய் என்று அழைக்கிறாள்.

       

கள்ளச் சகடும் மருதும் கலக்கு அழிய உதைசெய்த
பிள்ளையரசே! நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் .   198

 

அழகை உடையதான, திருவெள்ளறையிலே நின்று அருளுபவனே, பரம புருஷன் ஆனவனே, வஞ்சகமான சகடத்தையும், யாமளார்ஜுனர்களையும், சந்திபந்தங்கள் அற்றுப் போகும்படி உதைத்த பிள்ளைத்தனத்தில் பெருமை உடையவனே, நீ பேய்ச்சியின் முலையைக் கையால் பிடித்துச் சுவைத்த பின் உள்ளபடி ஒன்றும் அறியேன். இக்காலம் கண்வளர்ந்து அருளுகிற சமயம் ஆகிறது. காப்பு இட வாராய் என்பது இந்தப் பாடலின் பொழிப்புரை.

கள்ளத்தனமாகச் சக்கரவடிவில் உன்னைக் கொல்வதற்காக ஏற்கெனவே கம்சன் சகாடசுரனை அனுப்பி வைத்தான். அது போன்று கள்ளத்தனமான மருதமர வடிவில் இருந்த இரு அசுரர்களான நளகூபன், மணிக்ரீவன் என்பவன் மேல் இரு அசுரர்கள் அமர்ந்திருக்க, கண்ணன் இம்மரங்களை உதைத்தான். அவ்விரு அசுரர்களையும் திருவடியாலும், தொடையாலும், தோளாலும் நெட்டி உதைத்துத் தள்ளினான் என்பது மணவாள மாமுனிகளின் வியாக்யானம். இவ்விரு அசுரர்களும் சாபவிமோசனம் பெற்று மேலுலகம் சென்றார்கள். மரத்திலிருந்த இரு அசுரர்கள் வெட்டெனக் கீழே சாய்ந்தார்கள். இவ்வாறு செய்த பிள்ளையரசே! நீ பேயாகிய பூசனை விஷப்பாலைக் கொடுக்க வந்தவளின் பாலை உறிஞ்சி அவளது உயிரினைக் குடித்தாய். நான் உள்ளவாறு ஒன்றுமறியேன் என்று அஞ்சிக் கூறினாள். ஒளிமிக்க தலமான திருவெள்ளறையில் கோயில் கொண்டவனே! காப்பிட வாராய் என்று அழைக்கிறாள். சந்தியாகாலத்தில் உன்னை அழைத்துக் கொண்டிருந்த நான் தற்போது அந்தியும் வந்துவிட்டது. நீ உறங்கும் நேரம் வந்துவிட்டது.

பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கைகளோ மனிதர்களுக்கு அப்பாற்பட்டது. ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபத்தை என்னால் அறிய முடிய போவதில்லை. சகாடாசுரன், யமளார்ஜுனர்கள், பூதனை முதலியவர்களை முடித்த ஒளி வெள்ளத்தில் இருக்கும் திருவெள்ளரறயில் நின்றவனே, படுத்து உறங்குகின்ற நேரம், சந்தயா காலம் தாண்டி மாலை வந்து விட்டது. சௌந்தர்யாதிகளால் உனக்கு மேம்பட்டவர் ஒருவரும் இல்லை, உனக்கு ஒரு குறை வாராதபடி காப்பிட வர வேண்டும் என்று அழைக்கும் பாடல். பரமனே! நீ காப்பிட வாராய் என்று அழைக்கிறாள்.

       

 இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே கொடுங் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
செம்பொன் மதில் வெள்ளறையாய்! செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்கு கடிது ஓடிக் காப்பிட வாராய்.    199

 

ஆனந்தத்தை எனக்கு அதிகம் கொடுப்பவனே, தேவர்களுக்கு எந்நாளும் அறிவதற்கு அரியதானவனே, கும்பத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையை கொன்ற ராஜாவே, கொடூரமான கம்ஸனுடைய மனதில் யமனைப் போல அச்சத்தை விளைவிக்குமவனே, செம்பொன் போல் விரும்பத்தக்க மதிள்களை உடைய திருவெள்ளறையை இருப்பிடமாக உடையவனே, எல்லோருக்கும் அடங்கி நடக்கும் சக்கரவர்த்தி திருமகனை (இராமனை) போல வளருகை இல்லாமல், செல்வச் செருக்கோடு, வேண்டியபடி செய்து, வேண்டியபடி உண்டு வளர்கின்ற பிள்ளையானவனே, அவ்விடத்தில் கண்டவர்களுக்கு நடுக்கத்தை தரக்கூடிய மழுவையும், கபாலத்தையும் உடைய துர்க்கை சஞ்சரிக்கின்றாள்; ஆதலால் கெட்ட தேவதைகள் உலாவுகிற அந்தி பொழுதில் அங்கு நில்லாதே; நான் காப்பிடும்படி விரைவாக ஓடி வா என்பது இந்த பாடலின் பொருளாகும்

கண்ணா! நீ செய்யும் சேஷ்டிதங்களையும், லீலைகளையும் பேரானந்தம் கொண்ட யசோதை, என்னுடைய இன்பத்தினை வளர்ப்பவனே! என்று கூறுகிறாள். இது உனது எளிமை. இத்தகைய எளிமையினால் உன்னை எளிதில் அடைந்து விடலாம். ஆனால் வானத்து தேவர்களால் உன்னை அடைய முடியாது. அந்த இமையவற்கும் என்றும் அறிதானவன் என்கிறார் ஆழ்வார்.  பெரிய தலையான ஆண் யானையான குவலயாபீடத்தை அழித்த கோவே! கொடுமையான கம்சன் நெஞ்சத்திலே எமனாக இருந்து அச்சத்தை உண்டு பண்ணியவனே! திருவெள்ளறையில் கோயில் கொண்டுள்ளாய். பொன்னில் அமைக்கப்பட்ட மதில்களும், அழகும் ஈர்க்கும் தன்மை பெற்ற உயரிய மதில்களால் சூழப்பட்ட திருவெள்ளறையில் கோயில் கொண்ட செல்வத்தினால் வளர்க்கப்பட்ட பிள்ளையே! என்கிறாள். ‘சக்ரவர்த்தித் திருமகனைப் போலே பலருக்கும் நியமனனாய் வளர்க என்றிற்கே’ என்பது மணவாள மாமுனிகளின் வியாக்யானம். இராமபிரான் தனது பெற்றோர்கள், ஆச்சாரியர்கள் போன்றவர்க்கு கட்டுப்பட்டு இருந்தான். ஆனால் கிருஷ்ணனோ ஒருவருக்கும் அடங்காமல் வேண்டினபடி செய்து, வேண்டினபடி புசித்து, செல்வச்செருக்கோடு வளர்கிற பிள்ளையானவனே! என்று தன்னாலும் ஒன்றும் செய்ய இயலா நிலையினை வெறுத்துக் கூறுகிறாள் யசோதை. கபாலிகான் என்ற சொல்லில் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அருளிய திவ்யார்த்த தீபிகையில் ‘பார்ப்பதற்கு நடுங்கும்படியான அச்சமுடைய மண்டையோட்டினை கையில் வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பவன் ஒருவன் அங்கு வந்துள்ளான். எனவே விரைந்து ஒடிவந்து காப்பிட வாராய்’ என்று அழைக்கிறாள்.

 

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்
திருக்காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசு உடை வெள்ளறை நின்றாய்
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்.   200

 

தேஜஸ்ஸை உடைய திருவெள்ளறையிலே நின்று அருளுபவனே, தீம்பில் கை வளர்ந்தவனே, இன்னும் சில நாளைக்கு தாய்மார் வார்த்தையை மேற்கொண்டு நடக்க வேண்டும். வேதப் புனித இருக்கை, நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை (திருவாய்மொழி 5.2.9) என்கிறபடி, புருஷசுக்தம் முதலிய ரிக்குக்களோடே கூடச் சுத்த ஜலத்தை சங்கிலே கொண்டு விலக்ஷணரான வைதீக பிராமணர்கள் உனக்கு ரக்ஷை இடுவதாக வந்து நின்றார்கள். அவர்களைக் கொண்டு நீ ரக்ஷை இட்டுக் கொள்ள வேண்டும். அது கேளாமல் நீ  நாற்சந்தியிலே நின்று கர்வத்துடன் நிற்கிறாய். அப்படி இருக்காதே. தாயான நான் உனக்கு அழகிய ராக்ஷை இடும் பொருட்டு உன் திருமேனியை காட்டத்தக்கதான திருவந்திக்காப்பை இப்போது ஒளியை உடைத்தாம்படி ஏற்றுகின்றேன். அதைக் கண்டு அருளும் படி வாராய்! இது இந்தப் பாடலின் பொருளாகும்.

உனக்குக் காப்பு இடும்படி வேத விற்பன்னர்கள் சங்குகளில் நீர் எடுத்துக் கொண்டு  புருஷசுக்தம் முதலிய வேதங்களைச் சொல்ல வந்திருக்கிறார்கள் என்று யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப் போகவே, மீண்டும் ‘நீ வராவிட்டாலும் தெருவில் செருக்குடன் விளையாடித் திரிதல் கூடாது.  அது கெட்ட தேவதைகள் இருக்கிற நேரம் ஆகும் என்று கண்ணனை எச்சரிக்கின்றாள். தாய் சொல்வதை இன்னும் சில காலமாவது கண்ணன் கேட்கும்படி அவனுக்குக் காப்பிட விளக்கு ஏற்றுகிறேன் கண்ணன் வர வேண்டும் என்கிறாள். இன்றும் விளக்கேற்றிக் குழந்தைகளுக்குத் திருஷ்டி சுழற்றிப் போடும் வழக்கம் உள்ளது.

 

போது அமர் செல்வக்கொழுந்து புணர் திருவெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே.   201

 

பெண்கள் எல்லோரிலும் மேற்பட்டவளான யசோதைப் பிராட்டி செந்தூரப் பூவில் பொருந்தி இருப்பவளாய் ஸ்ரீ என்று பெயரை உடையவளாய், பிரதான மஹிஷியான பெரிய பிராட்டியாரோடு, அகலகில்லேன் இறையும் என்று தாமரைப் பூவினை மறந்து, நித்யம் சேர்ந்து இருப்பவனாய், (பங்கயச்செல்வி என்பது அவள் பெயர்) திருவெள்ளறையில் நிற்பவனாய், தனக்கு புத்திரனாய் நின்ற கண்ணனைக் குறித்து ரக்ஷையிட்ட பாசுரங்களை, வேதத்தின் தாத்பர்யத்தை, கைக்கொள்வதில் சமர்த்தரான பெரியாழ்வார் அருளிச் செய்த சொல் மாலையான இத்திரு மொழியில் பாட்டுக்கள் தோறும் பின்னடியில் (காப்பிடுகை) சொன்ன பயன் கைக்கொள்ளவல்ல பக்தி யுக்தர்களாய் உள்ளவர்களுடைய மங்களா சாசனம், விரோதியான பாபம் தன்னை விட்டு ஓடிப்போம் என்பது இந்தப் பாடலின் கருத்தாகும். 

நமது துன்பத்திற்கு காரணம் தீவினைகள். தற்போதைய தீவினைகள் நமக்குத் தெரியும். நமது முன்வினைகள் யாரும் அறிய வாய்ப்பில்லை. இவை அனைத்தும் பகவானுக்குத் தெரியும். நம் வினைகளுக்கேற்ப பாவ புண்ணியங்கள் அமையும். ஆனால் நம்மால் செய்ய முடிந்தது ஒன்று. இன்று முதல் நாம் நல்வினைகள் தவிர வேறு எதையும் செய்வதில்லை என்று உறுதி கொள்ள முடியும். அதனால் முன்செய்த தீவினைகள் குறையும். தொடர்ந்து நல்வினைப் புரிந்தால் முற்பிறவி தீவினையும் அழியும் என்று நம்பலாம். ஒரு பாசுரத்திற்கு இவ்வளவு பலன் என்றால் நாலாயிரப் பிரபந்தங்களுக்கு நாம் எவ்வளவு நல்வினைகள் பெறலாம் என்பது இப்பாசுரக் கருத்தாகும்.

 

திருமங்கையாழ்வார்                                                                           பெரிய திருமொழி

       

வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ! நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி
தென்றல் மா மணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே.   1368

 

வெற்றி தருகின்ற பெரிய கோடாரியை ஏந்தி மண்ணுலக அரசர்களை வேரறுத்த பராக்கிரமன் பரசுராமனே! மெல்லிய தென்றல் காற்று மலர்வனத்தில் புகுந்து அங்குள்ள மல்லிகை, முல்லை மலர்களைத் தழுவி அதனால் மணம் வீசும் திருவெள்ளறையில் நின்றருளும் புண்டரீகாட்சா! ஒலிக்கும் கழலினையுடைய உனது திருவடிகளை முழு மனதோடு போற்றும் ஏதேனும் ஒரு முறையை எனக்கருள வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

இத்திருமொழியில் பாசுரங்கள்‌ தோறும்‌ அருள்புரியே  என்று அருளை வேண்டுகின்றார்‌ ; பிரானே ! உனது திருவடித்தாமரைகளில்‌ எனக்குப்‌ பரிபூர்ணமான பக்திப்‌ பெருங்காதல்‌ உண்டாகும்படியும்‌ உனக்கு நான்‌. அத்‌தானிச்‌ சேவகஞ்‌ செய்து கொண்டு போதுபோக்கும்படியும்‌ கிருபை பண்ணியருளவேணு மென்று பிரார்த்திக்கிறார்.

        தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற சொல்லுக்குக் காரணமான பரசுராமன் செயல் வடிவில் செய்து காட்டியவன். அவனே திருவெள்ளறையில் நின்றவண்ணம்  சேவை  சாதிக்கின்றான்.  தனக்கு  வேண்டுவது போல்  வேண்டி  மக்கள்  அனைவரும்  பகவானைப்  போற்ற  வேண்டும்  என்று பாசுரவழி தெரிவித்துள்ளார்.

       

வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே! எனக்கு அருள்புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே.    1369

 

உன் நாபிக்கமலத்தில் வீற்றிருக்கும் பிரம்மன் சோமுகாசுரன் என்ற அசுரனிடம் வேதங்களைப்  பறிகொடுத்து வருந்தி நின்றபோதும், ஊழிகாலத்திற்கு பின் உலகம் தோற்றுவிக்க வேதங்கள் காணாது தவித்தபோதும்  பெருமான் பிரம்மனது நிலையை உணர்ந்து ஹயக்ரீவனாகத் தோன்றி ஸ்வர வடிவில் உள்ள வேதங்களை மீட்டுக் கொடுத்தவனே! நெடிதுயர்ந்து வளர்ந்த குருக்கத்தி மலர்களின் வாசம் தென்றலுடன் அணைத்துத் திருவெள்ளறை வீதிகளில் வீசும்போது அதன் மணம் நாற்திசையும் வீச, அழகிய நந்தவனங்கள் சூழ்ந்த திருவெள்ளறையில் அனைவருக்கும் நின்றவண்ணம் அருள் புரிபவனே! உலகம் இயங்குவதற்கு கருணை காட்டிய நீ என்மீது கருணை மழை பொழிய வேண்டும்’’ என்று ஆன்மீக தரிசனத்தை எதிர்நோக்கி ஆழ்வார் வேண்டுகிறார்.

குறுக்கத்திச்‌ செடிகளிலே படிந்து அங்குள்ள பரிமளங்களை முகர்ந்துகொண்டு எங்கும்‌ வீசுனெற தென்றலினால்‌ மணல்‌ கமழப்பெற்ற திருவெள்‌ளறையில்‌ நின்றருளும்‌ பெருமானே! முன்பு உன்பக்கலிலே வேதங்களை யெல்லாம்‌ பெற்று, பிறகு அவற்றை அசுரர் கொள்ளப்‌ பறிகொடுத்து கண்‌ணிழந்தேன்‌, தனமிழந்தேன் என்று கதறின நான்‌முகனுக்குக்‌ கருனணகூர்ந்து ஹயக்ரீவாவதாரம்‌ செய்து அவ்வேதங்களை மீட்டுக்கொணர்ந்து அவனுக்கு உபகரித்தருளினவனல்லையோ நீ? அப்படிப்பட்ட அருமையான உபகாரம்‌ ஏதேனும்‌ செய்யவேணுமென்று நான்‌ இரக்கிறேனோ? ஏதேனுமொரு குற்றே வலிலே அடியேனை நியமித்துப்‌ பணிகொண்டருளலாகாதோ என்பதாகும்.

 

வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் இரு பிளவா
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே! எனக்கு அருள்புரியே
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண்  தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே.    1370 

 

‘‘கொடிய அரக்கனான இரண்யகசிபு ஏழு உலகங்களையும் துன்புறுத்தி வந்தவனை கூரிய நகங்களால் அவனது உடலை இரண்டாகப் பிளந்தவனே! கரிய நிறத்திலான விரால்மீன்களின் திரள் அழகிய தடாகங்களில் துள்ளி விளையாட, அங்குள்ள தாமரைகள் இனிய மணம் வீசும் நீர் வளமுள்ள திருவெள்ளறையில் நின்று அருள் புரிபவனே! நீ என்னிடம் தயை காட்ட வேண்டும்’’ என்கிறார் ஆழ்வார்.

 கருத்த நிறமுடைய விரால் மீன்கள்,  அழகிய தடாகங்களிலே  துள்ளி விளையாடும்  தாமரைப் பூக்கள் மிக்க மணம் வீசும் அழகிய பொய்கைகளினால்  சூழ்ந்த திருவெள்ளறையில்  நின்ற பெருமானே! மிகவும் பொல்லாதவனாய்  இருந்து கொண்டு ஏழு உலகத்திலுள்ளவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்த இரணியனின் உடல்  இரண்டு பிளவாகும்படி  கைகளில்  நீண்ட நகங்களை  ஆயுதமாகப் பெற்றவனே!  எனக்கு அருளவேணும்.

        இரண்யகசிபுவை அசுரன் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் நமக்குள் இருக்கும் அசுர குணங்களை வீழ்த்தி வெற்றி கொள்ள பகவானை அழைக்க வேண்டும் என்கிறார். இகலோக ஆசைகளை அவனிடம் கேட்டுப் பெறுவதை விட்டு நமது ஆன்மீக தரிசனத்திற்கு தடையாக இருக்கும் இத்திரைகளை நீக்க வேண்டும் என்று பகவானிடம் வேண்டுமாறு ஆழ்வார் கூறுகிறார்.

 

 வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப! நின் காதலை அருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் வாய் அது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனித் தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே.   1371

 

‘‘தாவி வரும் குதிரை மடிந்துவிழ அதன்மீதுள்ள அரசர்களும் மாண்டுவிழ வைத்த பாண்டவர்களுக்கு அரசைக் கொடுத்தவனே! மூங்கில் காடுகள் நிறைந்துள்ள திருவேங்கடத்தில் உறைபவனே! மாந்தோப்புக் குயில்கள் மாந்தளிர்களைத் தனது அலகினால் கோதியதால் வாய் துவர்க்கும். அச்சுவையை மாற்றப் பலாக்கனிகளின் தேனை நுகரும். இத்தகைய வளம் பொருந்திய திருவெள்ளறையில் நின்றருள்பவனே! என்மீது பேரன்பு பொழிய வேண்டும்’’ என்கிறார் ஆழ்வார்.

        இவ்வுலகில் நாம் ஏதேனும் ஒன்றிற்கு தகுதியுடையவர்களாக இருந்தால் அதற்குரிய பலனைப் பகவான் உறுதியாகத் தருவார். நாம் தருமத்தைக் கடைபிடித்து வந்தால் பகவான் நமக்குத் துணையாக வருவது உறுதி என்பது இப்பாசுரக் கருத்தாகும். 

 

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே! எனக்கு அருள்புரியே
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திருவெள்ளறை நின்றானே.    1372     

 

வேல் போன்று அழகிய விழிகளையும், பெண்மைக்குரிய இயல்புகளையும் கொண்ட பூமிதேவி ஊழிக்காலத்தில் கடலுக்கடியில் அழுந்திக் கிடக்க, அவளை மீட்க வராக அவதாரமெடுத்து உலகத்தை அண்டத்திலிருந்து தனது கூரிய கொம்பினால் பெயர்த்தெடுத்து வந்த பெருமானே! காட்டுப் பகுதியில் வளரும் முல்லைக்கொடி கரும்பின் நுனியளவு சென்று படர்ந்திருப்பது புன்னகை பூப்பது போல் உள்ளது. அம்மலர்களில் உள்ள தேனை கரிய வண்டுகள் மொய்க்கின்றன. இத்தகைய வளமான திருவெள்ளறையில் நின்றருள்பவனே!  இம்மண்ணுலகில் உண்மையான இயக்கங்கள் செய்யாமல் மனம் போன போக்கில் நான் வாழ்ந்து வருகிறேன். எனது மனம் மாற நீ என்மீது கருணை காட்ட வேண்டும்’ என்கிறார் ஆழ்வார்.

கரும்பு  நுனிவரை சென்று படர்ந்து  வெண்மையாகச் சிரிப்பது போல்  மலரும் பெரிய காட்டு  முல்லைப் பூக்கள்  வண்டுகளின் வாய்களிலே  தேனைப் பெருக்கும்  திருவெள்ளறையில்  நின்ற பெருமானே!  பரந்த அழகிய  வேல் போன்ற  கண்களோடு கூடின  நற்குணங்களை உடைய  பூமாதேவி  பிரளயக் கடல்பரப்பில்  மூழ்கிக்கிடந்த  அன்று  ஏனமாக அவதரித்துப் பூமியை  குத்தியெடுத்து வந்தவனே  எனக்கு அருள்புரியவேணும் என்கிறார் ஆழ்வார்.

 

பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி! நின் அடிமையை அருள் எனக்கு
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே.    1373    

 

நெடிய நீள் முடிகொண்ட அமரர்களுக்கு அமிர்தம் வழங்கப் பாற்கடலில் பெரிய ஆமையாக வடிவெடுத்த ஆதிமூலமே!  திருவெள்ளறையில் உள்ள மாளிகையின் சிகரங்கள் சந்திர மண்டலத்தைத் தொடும்படி உயர்ந்து உள்ளன.  மலர்களில் வாசம் செய்யும் பெண் வண்டு தான் கொண்ட ஊடலால் ஆண் வண்டை விட்டு விலக அதனால் வெறுப்புற்ற ஆண் வண்டு திருவெள்ளறை தலத்தில் உள்ள பெண்களின் கூந்தலில் உள்ள மலர்களில் வந்து அமர்ந்து அதில் ஒளிந்து கொள்கின்றது.  இத்தகைய வளமான நகரத்தில் உறையும் பெருமானே! அடியேன் உனக்குப் பணி செய்யத் தயை காட்டியருள வேண்டும் என்கிறார் ஆழ்வார். வையகத்து மக்கள் இத்தகைய உயர் நிலையைப் பெற வேண்டும் என்பதே ஆழ்வாரின் விருப்பமாகும்.

வண்டுகள்‌ ஆணும் பெண்ணுமாய்ப்‌ பூவிலே படுத்‌திருந்தன.  தம்பதிகளுக்குப்‌ பிரணயகலஹம்‌ இயற்கையாகையாலே ஊடல்‌ உண்டாயிற்று. உடனே ஆண் வண்டானது பேடைக்குத்‌ தெரியாத ஓரிடத்தில் தேடி மறையவேணும் என்றெண்ணி ஸ்த்ரீகளினுடைய கூந்தலிலே மறையக்‌ கோலி, திருவெள்‌ளறையில், சந்த்ர மண்டலத்தளவுஞ்‌ சென்றோங்கின் சிகரத்தையுடைய மாடங்களிலே சென்றணைகின்றதாம்‌  என்கிறது இப்பாடல்.

 

ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில் அது வளைத்தவனே! எனக்கு அருள்புரியே
மாறு இல் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே.    1374

 

        ஒப்பற்ற ஒளியையுடையனவாய் மரதகம் போன்ற பச்சிலைகளையுடையனவான தாமரைகளினுடைய பூக்களில் நின்றும் பெருகின மகரந்தத்தை பானம் பண்ணி வண்டுகள் இனிய பண்களைப் பாடா நிற்கப்பெற்ற திருவெள்ளறை, நின்றானே! இராவணனுடைய நீண்ட கிரீடங்களை அணிந்த பத்துத்தலைகளும் ஒன்று தப்பாமல் தனித்தனியே அற்று விழும்படி சார்ங்கத்தை வளைத்து அம்பெய்த பெருமானே! என்விஷயத்தில் கிருபை பண்ணு என்கிறார்.

நீண்ட முடியணிந்த இராவணனுடைய பத்து தலைகளையும் தனித்தனியாக விழும்படி கோதண்டத்தை வளைத்து அம்புகள் எய்தி ஸ்ரீராமா, ஒப்பில்லாத மிக ஒளிபொருந்திய மரகதம் போன்ற பச்சிலையைக் கொண்ட தாமரை மலர்களிலிருந்து பெருகிய தேனை அருந்திய வண்டுகள் இன்னிசை பாடும் திருவெள்ளறையில் நின்றருளும் பெருமானே! நீ எனக்கு அருள வேண்டும்.

        அசுர குணம் படைத்து இராணவனை அழித்து நல்லவர்களைக் காத்தாய்! அதர்மத்தில் அவன் இறங்கியதால் அவன் பெற்ற வரங்கள் அனைத்தும் வலிமை இழந்தன. அதே போல் அசுர சக்திகளிடமிருந்து என்னைக் காத்தருள வேண்டுமாறு ஆழ்வார் வேண்டுகிறார். அசுர சக்திகள் என்று குறிப்பிடுவது நம்மில் கொண்டுள்ள தீய எண்ணங்களாகும். ஆழ்வார் தனக்கு வேண்டுவது போல் மக்களுக்காக வேண்டுகிறார் என்பது இப்பாசுரப் பொருளாகும்.

 

முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி இருள்மிக உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே! எனக்கு அருள்புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே.   1375   

 

முற்காலத்தில் ஏழுலகமும் இருளில் மூழ்கித் தடுமாறிக் கிடக்க, தேவர்கள் உன்னை வணங்கித் துதித்தார்கள். அப்போது அன்னப் பறவையாக மாறி அற்புதமான வேதங்களை உபதேசம் செய்தவனே! மலர்ந்துள்ள தாழைகளும், மாமரங்களும் நிறைந்த தோட்டங்களின் நடுவே கருப்பின வண்டுகளின் கூட்டம் தென்னத் தென்ன என்று பாடிவர, சாதா வண்டுகளும் அதற்கேற்ப இன்னிசைபாடும் திருவெள்ளறையில் நின்றருள்பவனே! எனக்கு நீ அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறார் ஆழ்வார்.

பிரளய காலத்தில் ஏழு உலகங்களும் நிலை தடுமாறி அறியாமை என்ற இருளில் ஆழ்ந்து கிடந்தபோது அன்னப்பறவை வடிவம் எடுத்துப் பகவான் வேதங்களை உபதேசம் செய்தார். அதனால் பிரம்மா தெளிவு பெற்றார். தேவர்கள் அனைவரும் உன்னைப் போற்றித் துதித்தனர். அத்தகையவன் திருவெள்ளறையில் வாசம செய்கின்றான். பிறந்து பிறந்து இறக்கும் இவ்வுலக வாழ்வில் எந்தச் சாரமும் இல்லை. உன் திருவடி நிழலில் வர விரும்புகிறேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.,

        இவ்வுலக வாழ்வில் எந்தச் சாரமும் இல்லை என்று புரிந்து கொண்டேன். பிறப்பதும், இறப்பதுமான இவ்வாழ்வில் விரக்தியடைந்தேன். இத்தகைய வாழ்வு எனக்குத் தேவையில்லை.  உன் திருவடி நிழலில் நான் வாசம் செய்ய எனக்கருள வேண்டுகிறேன் என்று தமக்கு கேட்பது போல் மக்களுக்காகக் கேட்கிறார் ஆழ்வார்.

       

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம! நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத் திருவெள்ளறை நின்றானே.    1376

 

மகாபலியின் யாகசாலைக்கு சென்று மூன்றடி நிலம் யாசித்து அப்போதே உலகம் முழுவதையும் முறையாகக் கைப்பற்றிய பரமாத்மா, ஓங்கிய அசோகமரத்தின் மலர்களின் மேல் வண்டுகள் ஏறித் திரிய, மாமரத்துக் குயில்கள் இதைக் கண்டு கூவ, கொடிகள் நிறைந்த சோலைகளையுடைய திருவெள்ளறையில் நின்றருள்பவனே! உன் அருள் வேண்டிப் பணிகிறேன் என்கிறார் ஆழ்வார்.

ஆகாசாவதாசம் வெளியடையும்படி வளர்ந்த அசோகமரம் செக்கச் செவேலென்று பூத்த பூக்களினால் நிறைந்திருக்கின்றது; அப்புஷ்பங்களை வண்டுகள் பார்த்து ‘இவை மலர்களல்ல, நெருப்பாம்’ என மயங்கி அங்குச் செல்ல அஞ்சிச் சிலசமயங்களில் ஒதுங்கித் திரியும்.  அசோக மலர்களைக் கண்டு ப்ரமித்து அஞ்சி அப்பால் செல்லும் இயல்வினவான வண்டுகள் சில சமயங்களில் அந்த ப்ரமம் நீங்கி ‘இவை மலர்களே’ என்று துணிந்து அவற்றிலே மதுவுண்ணச் செல்வதுமுண்டாகையாலே, அப்படி அவை மதுவுண்ண அசோக மலர்களில் ஏறியிருப்பதைக் கண்டு அருகே மாமரங்களில் உள்ள குயில்கள் ‘அந்தோ! இவ்வண்டுகள் நெருப்பிலே அகப்பட்டனவே!’ என்று பரிதாபந் தோற்ற அநக்ஷராஸமாகக் கூப்பிடுகின்றன போலும்.  இப்படிப்பட்ட சோலைகளினால் சூழப்பெற்றது திருவெள்ளறை தலமாகும்.

        நமக்கென எதுவுமில்லை. நாம் பெற்றது அனைத்தும் பகவானுடையது. பணம் படைத்தவன் பகவானின் அருளினால் கிடைக்கப் பெற்றான்.  கல்வி, பட்டம், புகழ், பதவி அனைத்தும் பகவான் அருளியது. நல்வினைப் பயனால் அவன் நமக்கு அளிக்கிறான். இவைகள் அனைத்தும் கிடைக்கப்பெற்று, அதனால் ஆணவம் கொண்டால், கொடுத்தவற்றை பறிக்கவும் அவனுக்குத் தெரியும் என்பதை இப்பாசுரம் மூலம் அறியலாம். 

 

மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐஇரண்டும்
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே.   1377

       

வெண்மேகங்கள் படிந்து உலாவிவரும் நவரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகையினால் சூழப்பட்ட திருவெள்ளறையில் கோயில் கொண்டிருக்கும் நீலமேனி கொண்ட ஆதியானவனை, அமுதத்திற்கு ஒப்பானவனை, வேல்தரித்த கலியன் இயற்றிய பத்து பாசுரங்களைக் குறையின்றி ஒருமுகத்துடன் ஓதவல்லவர்கள் நித்தியசூரிகளாகப் போற்றப்படுவார்கள் என்பது இப்பாசுரக் கருத்து.

        ஆழ்வார் பாடிய பத்து பாசுரங்களில் பகவானின் பெருமைகளை உணர்த்தியுள்ளார். மறதி என்னும் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களை எழுப்புவது போல் இவை அமைந்துள்ளது. தாங்கள் வலிமையற்றவர்கள் என்றும், தங்களுக்கு ஆபத்து எந்நேரமும் வரலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எதனாலும் எதுவும் நம்மால் செய்ய முடியாது என்று மனிதன் எப்போதும் நினைத்துக்கொண்டு ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறான். ஆத்மாவை அழிக்க முடியாது என்ற எண்ணம் இல்லாததால் இத்தகைய துன்பம் ஏற்படுகிறது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இத்தகைய அவல நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்ற அருள் உள்ளத்தில் ஆழ்வார் பகவானின் பெருமைகளைச் சொல்லி நம்மைத் தெளிவுபடுத்துகிறார்.

 

 துளக்கம் இல் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பு இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.   1851 

 

எதனாலும் அழிக்க முடியாத ஒளியுடையவன் எம்பெருமான். இரணியனை தனது கூரிய நகங்களால் கிழித்து அழித்த அந்தத் தேஜஸ்வியை அளவினால் கூற முடியாது.  அந்த அமிர்தத்தை, தேவர்களின் அருள் விளக்கை, இன்று திருப்பேர் நகரில் வணங்கி நாளைத் திருவெள்ளறையில் சென்று தரிசிப்போம் என்கிறார் ஆழ்வார். எம்பெருமான் நமது உடலில் ஆன்மாவாகத் திகழ்கிறார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆன்மாவை அழிக்க முடியாது. ஆன்மாவில் அனைத்து வலிமைகளும் அடங்கி இருப்பதால் கிரகங்களும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் ஆழ்வார். இத்தகைய சத்திய வார்த்தைகளை உலகுக்குக் கொண்டு வர நாலாயிரப் பாடல்களை ஆழ்வார்கள் நமக்களித்துள்ளார்கள்.

ஒன்றாலும்‌ அழிதவில்லாத ஒளியையுடையவனும்‌ இரணியன் என்னும் அசுரனின் உடலை இளந்தொழித்த மிடுக்குடையவனும், அளவிடமுடியாத போக்யத்தையுடைத்தான அமிருதம் போன்றவனும், நித்ய சூரிகளுக்கு அருள்புரியும் விளக்கு போன்றவனான பெருமானை திருபேர் நகரில் போய் வணங்கிச் சேவித்து திருவெள்ளறையில் சென்று சேவிப்போம் என்கிறார் ஆழ்வார்.


Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...